ஒல்லாந்தர் யாழ்ப்பாண இராச்சியத்தைப் போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றிய பின்னர் தமது தலைமையிடத்தை யாழ்ப்பாண நகரத்திலிருந்து வேறிடத்துக்கு மாற்றுவது தொடர்பில் ஆலோசனைகள் இடம்பெற்றதாகத் தெரிகின்றது. இதனால் முதற் சில ஆண்டுகள் போர்த்துக்கேயருடைய கோட்டையையே ஒல்லாந்தர் பயன்படுத்திவந்தனர். மிக அவசரமான திருந்த வேலைகளையும், பாதுகாப்புக்கு அவசியமான குறைந்தளவு மேம்பாடுகளையுமே செய்யலாம் என்ற உத்தரவும் மேலிடத்தில் இருந்து வழங்கப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் யாழ்ப்பாண நகரத்திலும், அரசாங்கத்தின் முன் முயற்சியோடு எந்த வேலைகளும் இடம்பெற்றிருக்காது என்று கருதலாம். குறிப்பாக நகருக்கான திட்டமிடலோ, அரசாங்கக் கட்டுமானங்களோ இடம்பெற்றிருக்க வாய்ப்புக்கள் இல்லை. தனியார் முயற்சிகளினால், போர்த்துக்கேயர் நகரத்தில் திருத்த வேலைகள் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், கோட்டைக்கு மிகவும் அண்மையில் இருந்த நகரத்தின் கட்டிடங்கள் சில இடிக்கப்பட்டது குறித்த தகவல்கள் உள்ளன.
தலைமையிடத்தை இடம் மாற்றுவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்ட பின்னர், புதிய கோட்டையைக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், கோட்டைக்கு வெளியில் இருந்த யாழ்ப்பாண நகரத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். ஒரு திட்டத்தின் அடிப்படையில் இவ்வேலைகள் முன்னெடுக்கப்பட்டனவா என்பதை அறிந்துகொள்வதற்கு சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. கோட்டைக் கட்டுமானத்துக்கான பல வரைபடங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், நகரத்தை மேம்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட வரைபடங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஒல்லாந்தர் இலங்கையில் பல்வேறு நோக்கங்களுக்காக நிலப் படங்களையும், வரைபடங்களையும் ஏராளமாகத் தயாரித்துள்ளனர். எனினும், யாழ்ப்பாண நகரில் இருந்திருக்கக்கூடிய, கட்டிடங்களையும், பிற அம்சங்களையும், காட்டக்கூடிய வகையில் வரையப்பட்ட விபரமான நிலப்படங்களோ வேறு வரைபடங்கள், படங்கள் என்பனவோ இதுவரை அகப்படவில்லை. குறுக்கும் நெடுக்குமாக ஒழுங்கான முறையில் அமைந்த யாழ்ப்பாண நகரத்தின் தெருக்களின் அமைப்பை மேலோட்டமாகக் காட்டும் வரைபடங்களே கிடைத்துள்ளன.
ஒல்லாந்தர் கால யாழ்ப்பாண நகரம் வடக்கில் இன்றைய சப்பல் வீதியையும், மேற்கில் இன்றைய முன் வீதியையும், தெற்கில் கடல் நீரேரியையும் கொண்டிருந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் கிழக்கு எல்லையாக இன்றைய மூன்றாம் குறுக்குத் தெருவே இருந்ததாக யோன் மாட்டினின், யாழ்ப்பாணம் தொடர்பான குறிப்புக்கள் என்னும் (Notes on Jaffna) நூலில் உள்ள குறிப்பொன்று கூறுகின்றது. இது, ஒல்லாந்தர் காலத்தின் இறுதிப் பகுதியைச் சேர்ந்த குறிப்பு. ஆனால், கிடைக்கக்கூடிய பிற தகவல்கள் நான்காம் குறுக்குத் தெரு வரையாவது யாழ்ப்பாணம் விரிவடைந்திருந்ததைக் காட்டுகின்றன. ஒருவேளை, மூன்றம் குறுக்குத் தெரு வரையே முறையான கல் பதிக்கப்பட்ட வீதிகளோ, சரளைக்கல் வீதிகளோ இருந்திருக்கக்கூடும். அதற்கு அப்பால் நான்காம் குறுக்குத் தெரு மண் வீதியாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. நகரில் இருந்த தெருக்கள் அக்காலத்தில் என்ன பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டன என்று தெரியவில்லை.
போர்த்துக்கேயருடைய யாழ்ப்பாண நகரத்தைப் போல் ஒல்லாந்தருடைய நகரத்தில் மதச் செயற்பாடுகளுக்கோ, மதம் சார்ந்த கட்டிடங்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. போர்த்துக்கேயர் காலத்தில் கோட்டைக்குள் ஒரு தேவாலயமும், நகரத்தில் மூன்று தேவாலயங்களும், துறவி மடங்களும் இருந்தன. ஒல்லாந்தர் நகரத்தில் தேவாலயங்களோ, மதம் சார்ந்த பிற கட்டிடங்களோ இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. புதிய கோட்டை கட்டத் தொடங்கிய காலத்திலேயே பழைய கோட்டைக்குள் இருந்த புதுமை மாதா தேவாலயமும் இடிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய தேவாலயம் முற்றுப்பெறும்வரை கோட்டைக்குள்ளும் முறையான தேவாலயம் இருக்கவில்லை. எனினும், நகருக்கு வெளியே இருந்த போர்த்துக்கேயரின் கத்தோலிக்கத் தேவாலயங்களை ஒல்லாந்தச் சீர்திருத்தக் கிறித்தவ தேவாலயங்களாக மாற்றிப் பயன்படுத்தினர். இவை உள்ளூர் மக்களுக்கான தேவாலயங்களாகவே பயன்பட்டன.
அக்காலத்தில் யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கிலும், கிழக்கிலும் பல குளங்களும், அவற்றைச் சுற்றித் தாழ்வான நிலப்பகுதியும் காணப்பட்டன. தாராக்குளம், மஞ்சட்கரைச்சகுளம், தேவரீர் குளம், பட்டங்கட்டிக் குளம், மூண்டுக் குளம் போன்றவை, நகருக்கு மிக அண்மையில் இருந்த குளங்களுள் முக்கியமானவை. இவற்றுட் பெரும்பாலானவை காலத்துக்குக் காலம் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டன அல்லது பெருமளவு நிரப்பப்பட்டுச் சிறிய குளங்களாகின. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் இக்குளங்களைச் சூழ இருந்த தாழ்வான பகுதிகளில் வயல்கள் உருவாகின. முதலில் இந்த வயல் நிலங்களில் வேளாண்மை செய்தது யார் என்பது குறித்த தகவல்கள் இல்லை. ஆனால், ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் இந்த வயல்களுட் பல செல்வாக்குள்ள உள்ளூர் மக்கள் சிலருக்குச் சொந்தமாக இருந்தன.
ஒல்லாந்தர் ஆட்சித் தொடக்கத்தில், இந்த நகரத்தில் ஒல்லாந்தரைத் தவிர்ந்த உள்ளூர் மக்கள் எவரும் வாழ அனுமதிக்கப்படவில்லை தேவையேற்படும்போது உடனடியாகக் கோட்டைக்குச் செல்வதற்காகச் சில உள்ளூர் உயர் அதிகாரிகளுக்கு இந்த நகரத்தில் வாழச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவர்களுடைய ஆட்சிக்காலம் முழுவதும் இந்தத் தடை இருந்ததா எனத் தெரியவில்லை. எனினும், ஒல்லாந்தர் காலத்திலேயே, நகரத்தை அண்டிய சில பகுதிகளில் உள்ளூர் மக்களில் மேல்தட்டு வகுப்பினரின் குடியிருப்புக்கள் உருவாகியிருந்தன. இந்தக் குடியிருப்புக்கள், முன்னர் உள்ளூர்ப் பெரிய மனிதர்களுக்குச் சொந்தமாக இருந்த வயல் நிலங்களிலேயே உருவாகின என ஊகிக்கலாம். எனினும் அப்பகுதிகளில் இன்று காணப்படும் பல வீதிகள் ஒல்லாந்தர் காலத்துக்குப் பிற்பட்டவை.
ஒல்லாந்தர் நகரத்தின் முக்கிய வீதியாக இருந்தது, இன்று பிரதான வீதி என அழைக்கப்படும் வீதியாகும். இதுவும், மூன்றாம் குறுக்குத் தெருவரை நல்ல வீதியாகவும் அதற்கு அப்பால் மண் வீதியாகவுமே இருந்ததாகத் தெரிகின்றது. நகரத்துக்கு வெளியே இந்த மண் வீதியை அண்டிச் செல்வாக்குள்ள ஒல்லாந்தருக்கும் அதிகாரிகளுக்கும் உரிமையான நிலங்கள் இருந்தன. எக்காலத்தில் இந்த வளர்ச்சி ஏற்பட்டது எனத் தெரியாவிட்டாலும், பிற்கால ஆவணங்கள் சிலவற்றிலிருந்து இதுபற்றி அறிய முடிகின்றது. இந்த நிலங்களில் பெரிய வீடுகளையும் தோட்டங்களையும் அவர்கள் உருவாக்கியிருந்தனர்.
மிக அண்மைக் காலத்தில் அழிவுக்கு உள்ளாகும்வரை ஒல்லாந்தர் கால நகரப் பகுதியின் தோற்றம் பெருமளவுக்கு மாறாமலே இருந்தது.
தொடரும்.