கோட்டைக்குள் ஒல்லாந்தர் கட்டிய கிறித்தவ தேவாலயம் குறித்து ஏற்கெனவே இந்தத் தொடரில் சில தகவல்களைப் பார்த்தோம். இதுபற்றிய சற்று விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம். இந்தத் தேவாலயம், ஒல்லாந்தர் அரசில் தலைமை நிலஅளவையாளராக இருந்த மார்ட்டினஸ் லியூஸ்காம் என்பவரால் வடிவமைத்துக் கட்டப்பட்டதாகத் தெரிகின்றது. இது தற்போது அழிபாடுகளின் ஒரு குவியலாகவே காணப்படுகின்றது. இந்தத் தேவாலயம் உள்நாட்டுப் போர்க் காலத்தில் முற்றாக அழிந்துபோகும்வரை இலங்கையில் அக்காலத்தில் எஞ்சியிருந்த ஒல்லாந்தத் தேவாலயங்களுள் மிகப் பழையது என்ற பெயரைப் பெற்றிருந்தது. கொழும்பில் உள்ள வூல்பன்டோல் தேவாலயம், காலியில் உள்ள ஒல்லாந்தத் தேவாலயம் ஆகியவற்றைவிட ஏறத்தாழ 50 ஆண்டுகள் கூடுதல் பழமையானதாக இது இருந்தது.
1658 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் கோட்டையைத் தமதாக்கிய பின்னர், அங்கிருந்த போர்த்துக்கேயரின் கத்தோலிக்கத் தேவாலயத்தைத் திருத்தித் தமது தேவாலயமாகச் சில ஆண்டுகள் பயன்படுத்தினர். 1690 களின் தொடக்கத்திலேயே புதிய தேவாலயம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டிருந்தது. எனினும், 1693 ஆம் ஆண்டளவிலேயே புதிய தேவாலயத்தின் கட்டட வேலைகள் தொடங்கின. அக்காலத்திலேயே போர்த்துக்கேயரின் பழைய தேவாலயத்தை இடித்துவிட்டதாகத் தெரிகின்றது. அதன் பின்னர், நகரில் வசித்த ஒல்லாந்தருடைய சமயத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகக் கோட்டைக்குள் இருந்த பழைய களஞ்சியக் கட்டிடம் ஒன்று தற்காலிகத் தேவாலயமாகப் பயன்பட்டது. இக்கட்டிடத்துக்குப் படிகளில் ஏறிச் செல்லவேண்டி இருந்ததால், இது வயதானவர்களும், நோய்வாய்ப்பட்டவர்களும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கவில்லை. 1694-1697 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதியாக இருந்த சுவார்டெக்குரூன் தனது குறிப்பொன்றில், புதிய தேவாலயத்தைக் கட்டுவதற்கு முன்னர் பழையதை இடித்திருக்கக்கூடாது எனக் குறிப்பிடுவதைக் காணமுடிகின்றது. பழைய தேவாலயத்தை இடித்து அதன் கற்களைப் புதிய தேவாலயக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தினர் என ஊகிக்கலாம்.
1697 இல் புதிய தேவாலயச் சுவர்கள் 8 அடி உயரத்துக்குக் கட்டி முடிந்துவிட்டதாகச் சுவார்டெக்குரூன் குறிப்பிட்டுள்ளார். மிகுதி வேலைகளை முடிப்பதற்கு வேண்டிய பெருந்தொகையான செங்கற்களையும் கூரை ஓடுகளையும் இருபாலையில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என அவர் ஆலோசனை வழங்கியிருந்தார். யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட பனை மரங்களிலிருந்து கூரைக்குத் தேவையான கைமரங்களையும், வேறு சில தேவைகளுக்கான மரங்கள் மலையாளப் பகுதிகளில் இருந்தும், வன்னியிலிருந்தும் கொண்டுவர முடியும் என அவர் கருதினார். இதன்மூலம் ஓராண்டுக்குள் தேவாலத்தைக் கட்டிமுடித்துவிடலாம் என்பது அவரது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், தேவையான கட்டிடப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிக்கல்களினாற்போலும் தேவாலயக் கட்டிட வேலைகள் பல ஆண்டுகள் தாமதத்துக்குப் பின்னரே முற்றுப்பெற்றன. இக்கட்டிடத்தின் முதன்மை வாயிலுக்கு மேலே 1706 என்ற ஆண்டுப் பொறிப்பு இருந்ததால் இது அந்த ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது எனக் கருதப்படுகின்றது.
இதன் தரையில் யாழ்ப்பாணத்தில் காலமான ஒல்லாந்த அதிகாரிகளுடைய பெரிய நினைவுக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நினைவுக் கற்களுட் சில இக்கட்டிடத்தை விடப் பழமையானவையாகக் காணப்பட்டதாக 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் வடமாகாண அரசாங்க அதிபராகப் பணியாற்றிய ஜே. பி. லூயிஸ் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, 1666, 1672, 1673, 1693 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்த நினைவுக் கற்களும் இவற்றுள் அடங்கும். இவை, முன்னர் இருந்த தேவாலயம் ஒன்றில் இருந்து பெயர்த்து எடுத்து இந்தத் தேவாலயத்தில் பதிக்கப்பட்டது எனக் கருதுவதற்கு இடமுண்டு.
இந்த ஒல்லாந்தத் தேவாலயம், அதிக அலங்காரங்களைக் கொண்டிராத எளிமையான கட்டிடம். நடுவில் ஒரு பரந்த இடவசதியைக் கொண்ட கிரேக்கச் சிலுவை வடிவான தளவடிவம் கொண்டது. இந்த மையப் பகுதி, சுற்றியுள்ள பகுதிகளிலும் உயரமானது. “பிரமிட்” வடிவான ஓட்டுக் கூரையுடன் கூடியது. சுவர்கள் 4-5 அடிவரையான தடிப்புக் கொண்டவை. அச்சுவரில் இருந்த சாளரங்கள் அளவான ஒளியைத் உள்ளே விடத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. சுவர்கள் தடிப்பானவையாகவும், கட்டிடத்தின் உட்பகுதி உயரமானதாகவும் இருந்ததால் உள்ளே குளிர்ச்சியாகவும், காற்றோட்டம் கொண்டதாகவும் இருந்ததாகத் தெரிகின்றது. தரையில் இரண்டு அடிக்கும் குறைவான அளவுகளைக்கொண்ட செவ்வக வடிவான கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. உள்ளே 600 பேர்வரை இருப்பதற்கான வசதிகள் இருந்தன. இதன் “கேபிள் வடிவான முகப்புச் சுவரின் உச்சியில் மணியைத் தொங்கவிடுவதற்கான இடம் இருந்தது. பழைய போர்த்துக்கேயத் தேவாலயத்தில் இருந்த இரண்டு மணிகளே ஒல்லாந்தருடைய தேவாலயத்திலும் பயன்பட்டன.
1733 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு வந்த ஜேர்மனியைச் சேர்ந்த பயணியான “ஜொகான் வூல்ஃப்காங் ஹைட்” என்பவர், இந்தத் தேவாலயத்தில் அக்காலத் தோற்றத்தை வரைந்துள்ளார். பின்னர் 1760 இல் ஒல்லாந்தரான “ஸ்டைஜர்” என்பவரும் இத்தேவாலயத்தை நீர்வர்ணப் படமாக வரைந்துள்ளார். இந்தப் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பிற்காலத்தில் கட்டிடம் அழிவுக்கு உள்ளாகும்வரை பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமலேயே பேணப்பட்டிருந்ததை அறியமுடிகின்றது. யாழ்ப்பாணம் பிரித்தானியரின் கைக்கு வந்த பின்னர், இந்தத் தேவாலயத்தை அரசாங்கம் விலை கொடுத்து வாங்கியது. அதன் பின்னர் காலத்துக்குக் காலம் இத்தேவாலயக் கட்டிடத்தில் பராமரிப்புப் பணிகள் இடம்பெற்றது தொடர்பான குறிப்புக்கள் பொது வேலைகள் திணைக்களத்தின் அறிக்கைகளில் காணப்படுகின்றன.
1980 களின் இறுதியிலும், 1990 களின் தொடக்கப் பகுதியிலும் அரசாங்கப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்ற போரினால், கோட்டையும், அதற்குள் இருந்த எல்லாக் கட்டிடங்களும் பெரும் சேதங்களுக்கு உள்ளாகின. ஒல்லாந்தத் தேவாலயமும் தரைமட்டமாகியது. போர் முடிவுக்கு வந்ததன் பின்னர், கோட்டை புனரமைப்புச் செய்யப்பட்டது. தேவாலயத்தையும் மீளமைப்புச் செய்வதற்கான முயற்சிகளில் தொல்லியல் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
தொடரும்.