1621 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்றைய கோட்டைக்குக் கிழக்கே போர்த்துக்கேயர் உருவாக்கிய யாழ்ப்பாண நகரத்தை ஒல்லாந்தர் திருத்தி மேம்படுத்தினர். இந்த நகரம் பிரதான வீதி, சப்பல் வீதி, வங்கசாலை வீதி, ஒன்று தொடக்கம் நான்கு வரை எண்ணிடப்பட்ட குறுக்குத் தெருக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறிய நகரம் என்பதையும் இத்தொடரின் இன்னொரு கட்டுரையில் பார்த்தோம். பிரதான வீதியின் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர்ந்த ஏனையவை குடியிருப்புப் பகுதிகளாகவே இருந்துள்ளன. தொடக்க காலத்தில் இது முற்று முழுதாக ஒல்லாந்தர் வாழும் பகுதியாகவே இருந்தது. உள்ளூர் மக்கள் இங்கே வாழ்வதற்கு அனுமதி இருக்கவில்லை. இதனால் ஒல்லாந்தக் குடியேறிகள் தங்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுடைய பாணிகளிலேயே அங்கே வீடுகளை அமைத்திருப்பர் என்பதில் ஐயமில்லை.
1658 இலிருந்து 1796 ஆம் ஆண்டுவரை 138 ஆண்டுகள் நகரம் ஒல்லாந்தரின் ஆளுகையின் கீழ் இருந்துள்ளது. இது ஒரு நீண்ட காலம். இந்தக் காலப்பகுதி முழுவதும் இங்கிருந்த வீடுகள் எவ்வித மாற்றங்களுமின்றி இருந்தன என்று எதிர்பார்க்க முடியாது. ஒல்லாந்தக் குடியேறிகள் யாழ்ப்பாணத்தில் முழுமையாக நிலை கொள்ளாத நிலையில் கட்டப்பட்ட தொடக்ககால வீடுகள் எளிமையானவையாகவும், சிறியவையாகவும் இருந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு. பெருமளவுக்குச் சேதமடையாமல் இருந்த போர்த்துக்கேயர் வீடுகளில் பலவும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்திருக்கலாம். காலப்போக்கில், ஒல்லாந்தக் குடியேறிகள் புதிய பொருளாதார முயற்சிகளில் ஈடுபட்டதன் மூலம் வசதிகளைப் பெருக்கிக்கொண்ட பின்னர் வீடுகளைப் புதிதாகவும், பெரிதாகவும், பல்வேறு வசதிகளோடு கூடியவையாகவும் கட்டியிருப்பர் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு பழைய வீடுகளை இடித்துப் புதியவற்றைக் கட்டுவது, புதிய பாணிகளை அறிமுகப் படுத்துவது, புதிய வசதிகளை ஏற்படுத்துவது என நகர வீடுகளில் மாற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற இவ்வாறான மாற்றங்கள் குறித்தோ, அக்காலப் பகுதியின் பல்வேறு கட்டங்களில் இருந்த வீடுகளின் அமைப்புக்கள் குறித்தோ சமகால விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
உண்மையில், மேற்குறிப்பிட்ட நகர எல்லைகளுக்கு வெளியிலும், சுண்டிக்குழி, கொழும்புத்துறை போன்ற இடங்களிலும் அவற்றுக்கு அப்பாலும்கூட, ஒல்லாந்தர் பெரிய காணிகளில் தோட்டங்களை ஏற்படுத்தி அங்கே வீடுகளையும் கட்டிக்கொண்டு வசித்துள்ளனர். ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில் ஹாப்னர் என்னும் முன்னாள் ஒல்லாந்தப் படைவீரர் ஒருவர் நாகபட்டினத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து குடியேறினார். யாழ்ப்பாண நகரத்துக்கு வெளியே தான் வாழ்ந்த காணியில் வீட்டுக்குப் பின்புறத்தில் பனை, தென்னை என்பவை அடங்கிய தோப்பும், முன்புறத்தில் பூந்தோட்டமும் இருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார். இவருடைய வீட்டுக்கு அயலில் இதே போன்றதொரு வீட்டில் அவரது நண்பர் ஒருவர் வசித்தது பற்றியும் அவர் எழுதியுள்ளார். எனினும், இவ்வீடுகளின் அமைப்புக் குறித்த விபரங்கள் எதையும் அவர் தரவில்லை. அத்துடன், ஒல்லாந்தர் நகரத்துக்கு வெளியே இருந்த இவ்வாறான வீடுகள் எதுவும் அண்மைக் காலம் வரை தப்பியிருக்கவில்லை. இவை நகரத்து வீடுகளைக் காட்டிலும் சற்று வேறுபட்ட அமைப்புடன் கூடியவையாக இருந்திருக்கக்கூடும்.
நகரில் இருந்த ஒல்லாந்தர் வீடுகளைப் பற்றி இன்று எமக்குக் கிடைக்கக்கூடிய தகவல்கள் ஒல்லாந்தருக்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை. எனவே இவற்றின் மூலம் கிடைக்கும் விபரங்கள் பெரும்பாலும் ஒல்லாந்தர்காலப் பிற்பகுதிக்கு உரியவையே. பிரித்தானியர் காலத் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்த சில மத குருக்களும், அரசாங்க அதிகாரிகளும் எழுதியவற்றில் இருந்து ஒல்லாந்தர் வீடுகள் குறித்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அவ்வீடுகளின் வெளித் தோற்றம் குறித்த மேலோட்டமான விபரங்களாகவே உள்ளன.
யாழ்ப்பாணம் பிரித்தானியரின் கைக்கு வந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் 1800 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஆளுனர் பிரடெரிக் நோர்த்துடன் கூட வந்த மதகுருவான ஜேம்ஸ் கோர்டினர் யாழ்ப்பாண நகரத்து வீடுகள் தொடர்பில் சில குறிப்புக்களைத் தந்துள்ளார். அக்குறிப்புக்களின்படி, வீடுகள், நேர்த்தியானவையாகவும், சுத்தமாகவும், வெளிப்புறம் வெள்ளை நிறம் பூசப்பட்டும் காணப்பட்டன. அத்துடன், வீடுகள் நிலமட்டத்திலிருந்து சில படிகள் உயர்ந்த மேடை போன்ற அமைப்புக்களின் மேல் கட்டப்பட்டிருந்ததாகவும் கோர்டினர் கூறுகின்றார். வீடுகளின் கூரைகள் ஓடுகளால் வேயப்பட்டிருந்ததையும், வீடுகளின் முன் விறாந்தைகள் இருந்ததையும், அவை பச்சை நிறமான மரத் தூண்களில் அல்லது, செங்கல், முருகைக்கல் போன்றவற்றுடன் சுண்ணாம்புச் சாந்து கலந்து கட்டப்பட்ட தூண்களில் தாங்கப்பட்டிருந்தன என்றும் அவரது குறிப்புக்களில் இருந்து அறிய முடிகின்றது.
1980 களின் நடுப்பகுதி வரை இவ்வாறான வீடுகள் பலவற்றைப் பழைய ஒல்லாந்தர் நகரப் பகுதியில், குறிப்பாகப் பிரதான வீதிப் பகுதியில் காணக் கூடியதாக இருந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாண அருங்காட்சியகமும் பிரதான வீதியில் இது போன்ற ஒரு வீட்டிலேயே அமைந்திருந்தது. 20 ஆம் நூற்றாண்டில் இவ்வீடுகளை ஆய்வு செய்த சிலர் அவற்றை அளந்து வரைந்துள்ளனர். இவ்வரைபடங்களூடாகவும் பல விடயங்கள் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. உள்நாட்டுப் போர்க் காலத்தில் ஒல்லாந்தர் வீட்டுக் கட்டடக்கலைக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாக அமையக்கூடிய இவ்வீடுகளிற் பல முற்றாக அழிந்துவிட்டன. இன்றும், இவ்வாறான சில வீடுகளைப் பெரிதும் சேதமுற்ற, அல்லது பெருமளவு மாற்றங்களுக்கு உட்பட்ட நிலையில் பறங்கித்தெருப் பகுதியில் காண முடியும்.
யாழ்ப்பாண நகரத்து ஒல்லாந்தர் வீடுகள் வீதியை அண்டியே அமைக்கப்பட்டதால் இவற்றின் வளவு அல்லது தோட்டம் வீட்டின் பின்புறமே காணப்பட்டன. முன்புறத்தில் அமைந்திருந்த விறாந்தைகள் அகலமானவையாகவும், வீடுகளின் அகலத்துக்குச் சமமான நீளம் கொண்டவையாகவும் இருந்தன. சில வீடுகளின் வாயிற் கதவுகளும், முன் சுவரில் அமைந்த சாளரங்களும் மிகவும் உயரமானவையாகவும், அகலம் கூடியவையாகவும் காணப்பட்டன. இதனால், ஒன்றன்மீது ஒன்றாக இரண்டு இரட்டைக் கதவுகளைக் கொண்டிருந்த சாளரங்களும் சில வீடுகளில் இருந்தன. உள்ளே, கூடங்களும், அறைகளும் பெரியனவாகவும், உயரமானவையாகவும் நல்ல இடவசதியுடன் காணப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், இவ்வாறான சில வீடுகளில் சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய ஒல்லாந்தர் காலத் தளபாடங்கள் இருந்துள்ளன.
யாழ்ப்பாண நகர வரலாற்றின் ஒரு முக்கிய காலகட்டத்தின் பிரதிபலிப்பாகவும், நமது மரபுரிமைச் சொத்துக்களாகவும் விளங்கிய இவ்வாறான பல நல்ல வீடுகள் அழிந்துவிட்டது வருத்ததுக்கு உரிய ஒரு விடயமாகும்.
தொடரும்.