1658 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் இருந்த ஒல்லாந்தரின் ஆட்சி ஆட்சிப் பிரதேசம், கொழும்பு, யாழ்ப்பாணம், காலி எனும் மூன்று பகுதிகளாக நிர்வாகம் செய்யப்பட்டன. மூன்றுக்கும் பொறுப்பான ஆளுனர் கொழும்பில் இருந்தார். யாழ்ப்பாணத்திலும், காலியிலும் கட்டளை அதிகாரிகளின் (commandeurs) கீழ் நிர்வாகம் நடைபெற்றது. யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரியின் கீழ் யாழ்ப்பாணக் குடாநாடு, தீவுப்பகுதிகள் என்பவற்றுடன், வன்னிப் பகுதியும் அடங்கியிருந்தது. கட்டளை அதிகாரிகள் சராசரியாக 3 முதல் 4 ஆண்டுகள் வரை பதவியில் இருந்ததாகத் தெரிகின்றது. இதனால், யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி நிலவிய 138 ஆண்டுகளில் 30 தொடக்கம் 40 வரையான கட்டளை அதிகாரிகள் யாழ்ப்பாணத்திலிருந்து நிர்வாகம் செய்திருப்பர். ஆனாலும், இவர்களில் மிகச் சிலர் தொடர்பான தகவல்களே நமக்குக் கிடைக்கின்றன. இவர்களுள் அந்தனி பவிலியோன் (1658-1665), லோரன்ஸ் பைல் (1676-1680), புளோரிஸ் புளூம் (1689-1694), ஹென்றிக் சுவார்டெக்குரூன் (1694-1697), ஆர்னோல்ட் மோல் (1723-1725), லிப்ரெக்ட் ஹூர்மன் (????-1748), யேக்கப் டி யொங் (1748-1752), அந்தனி மூயார்ட் (1763-1766) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
கட்டளை அதிகாரிகள் மாற்றலாகிச் செல்லும்போதோ, ஓய்வு பெறும்போதோ தமக்குப் பின் கட்டளை அதிகாரியாகப் பொறுப்பேற்பவருக்கு உதவியாக வழிகாட்டற் குறிப்புக்களை (memoirs) விட்டுச் செல்வது வழக்கம். சிலவேளைகளில், கட்டளை அதிகாரிகள் நீண்ட காலச் சிறப்புப் பணிகளுக்காக அழைக்கப்பட்டு தமது பகுதிகளுக்கு வெளியே செல்லும்போதும் இவ்வாறான குறிப்புக்களை எழுதுவது உண்டு. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை இவ்வாறான மிகச் சில வழிகாட்டற் குறிப்புக்களே எஞ்சியுள்ளன. மேலே குறிப்பிட்டுள்ள கட்டளை அதிகாரிகளுள், அந்தனி பவிலியோன், லோரன்ஸ் பைல், ஹென்றிக் சுவார்டெக்குரூன், லிப்ரெக்ட் ஹூர்மன், அந்தனி மூயார்ட் ஆகியோர் எழுதிய வழிகாட்டற் குறிப்புக்கள் கிடைத்துள்ளன. இலங்கை ஆவணக் காப்பகத்தினர், காலத்துக்குக் காலம் இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.
அந்தனி பவிலியோனே யாழ்ப்பாணத்தின் முதல் கட்டளை அதிகாரி. அதனால், இவர் பதவியேற்றபோது, அக்காலத்தில் இலங்கையின் ஆளுனராகப் பணியாற்றிய மூத்த வான் கோயென்ஸ், யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரியாகப் புதிதாகப் பதவியேற்ற பவ்லியோனுக்கு எழுதிய அறிவுறுத்தற் குறிப்புக்களும், யாழ்ப்பாணத்தின் பல்வேறு நிலைமைகள், ஒல்லாந்தர் கொள்கைகள், நிர்வாகம் என்பன தொடர்பில் பல முக்கியமான தகவல்களைக் கொண்டுள்ளன. இந்த அறிவுறுத்தற் குறிப்புக்களில் யாழ்ப்பாண ஆட்சிப்பகுதி நான்கு முக்கியமான பிரிவுகளையும் (வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி), மக்கள் வாழும் 8 தீவுகளையும், மக்கள் வாழாத ஐந்து தீவுகளையும் கொண்டது எனக் குறிப்பிடும் வான் கோயென்ஸ், முன்னர் யாழ்ப்பாண அரசர்களுக்குத் திறை செலுத்திவந்த வன்னிப் பகுதியும் யாழ்ப்பாணக் கட்டளையகத்தில் அடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட பிரிவுகளின் எல்லைகள் குறித்தும் அவர் விபரமாக விளக்கியுள்ளார்.
இது தவிர யாழ்ப்பாணத்தின் வருமானம், அதிகாரிகள் நியமனம், பாதுகாப்பு நிலவரம், வன்னித் தலைவர்களைக் கையாளுதல், நெசவுத் தொழில் மேம்பாடு போன்ற பல்வேறு விடயங்களும் இவருடைய குறிப்பில் எடுத்தாளப்பட்டுள்ளன. ஒல்லாந்த இந்தியாவின் ஆளுனர் நாயகம் இலங்கை ஆளுனருக்கும் பிற அதிகாரிகளுக்கும் எழுதிய அறிவுறுத்தல்கள் அடங்கிய தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த அறிவுறுத்தல் குறிப்பும் அடங்கியுள்ளது. வான் கோயென்ஸ், யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரி பவ்லியோனுக்கு எழுதிய இரண்டு குறிப்புக்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1908 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
பவ்லியோன் ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் வரை பதவியில் இருந்ததாகத் தெரிகின்றது. கிறித்தவ மதத்தைப் பரப்புவதற்கும், அது தொடர்பான கல்வி முயற்சிகளுக்கும், பிற சமயங்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதிலும் பவிலியோன் தனக்கு உறுதுணையாக இருந்ததாக பல்தேயஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். 1665 ஆம் ஆண்டில் பவ்லியோன் உயர் பதவியொன்றை ஏற்றுக்கொள்வதற்காக இந்தியாவுக்குச் சென்றார். இவர் யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரி பதவியிலிருந்து விலகியபோது எழுதிய வழிகாட்டற் குறிப்பு இந்த வகை ஆவணங்களிற் காலத்தால் முந்தியது. இதனால், யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சியின் தொடக்க கால நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்வதற்கு இது முக்கியமான ஆவணமாக விளங்குகின்றது. இந்த வழிகாட்டல் குறிப்பும் மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் அடங்கிய தொகுதியில் பின்னிணைப்பாக உள்ளது.
லோரன்ஸ் பைல் 1676 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரியாகப் பதவியேற்றார். 1679 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் ஆளுனராகப் பதவி உயர்வு பெற்று கொழும்புக்குச் சென்றார். ஏறத்தாழப் பதின்மூன்று ஆண்டுகள் அவர் அப்பதவியில் இருந்தார். பைல் யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரி பதவியில் இருந்து விலகியபோது, புதிய கட்டளை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படாத நிலையில் யாழ்ப்பாணத்தில் திசாவையாக இருந்தவரிடமும், யாழ்ப்பாண அரசியல் அவையிடமும் தனது பொறுப்புக்களை ஒப்படைத்தார். இவர்களுக்கு யாழ்ப்பாணக் கட்டளையகத்தின் பல்வேறு விடயங்கள் குறித்து ஏற்கெனவே தெரிந்திருந்ததால், இவர் ஒரு சுருக்கமான வழிகாட்டல் குறிப்பையே எழுதினார். எனினும், இவரது சுருக்கமான குறிப்பிலிருந்தும் பல முக்கியமான தகவல்களைப் பெற முடிகின்றது. இந்த ஆவணத்தின் மொழிபெயர்ப்பு, ரைக்கிளோவ் வான் கோயென்ஸ் (இளைய), யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரி லோரன்ஸ் பைலுக்கு எழுதிய அறிவுறுத்தல்களின் பின்னிணைப்பாக 1910 ஆம் ஆண்டில் வெளியானது.
ஹென்றிக் சுவார்டெக்குரூன் நெதர்லாந்தின் ரொட்டர்டாமைச் சேர்ந்தவர். பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்த இவர் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையில் சேர்ந்து பத்தேவியாவுக்குச் சென்றார். அங்கே சிவில் சேவையில் சேர்ந்து பல்வேறு படிநிலைகளிற் பணியாற்றி வேகமாக முன்னேறினார். 1694 ஆம் ஆண்டு இவர் கட்டளை அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று யாழ்ப்பாணத்துக்கு வந்தார். 1697 இல் இந்தியாவுக்கு அழைக்கப்பட்ட இவர் பல்வேறு உயர் பதவிகளை வகித்து 1718 ஆம் ஆண்டில் ஒல்லாந்த இந்தியாவின் ஆளுனர் நாயகம் ஆனார். 1724 ஆம் ஆண்டுவரை இப்பதவியை வகித்த சுவார்டெக்குரூன் ஓய்வுபெற்றுக்கொண்டு தனது இறுதிக் காலத்தைப் பத்தேவியாவில் கழித்தார்.
யாழ்ப்பாணத்துக் கட்டளை அதிகாரிகளின் வழிகாட்டற் குறிப்புக்களில் சுவார்டெக்குரூனின் குறிப்பு மிகவும் பெறுமதி வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இதுபோன்ற பிறவற்றோடு ஒப்பிடும்போது, யாழ்ப்பாணக் கட்டளையகம் தொடர்பில் மிகவும் விரிவானதும், முக்கியமான பல தகவல்களைக் கொண்டதுமான ஆவணமாக இது விளங்குகின்றது. இதற்குப் பிந்திய ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் முழுவதிலும் அதிகாரிகள் இவ்வழிகாட்டற் குறிப்பை உசாத்துணையாகவும், மேற்கோள் காட்டுவதற்கும் பயன்படுத்தியுள்ளனர் என்பது இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1911 ஆம் ஆண்டில் வெளியானது.
தொடரும்.