நல்லூர் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கிய காலத்தில், இன்று முத்திரைச் சந்தை என்று அழைக்கப்படும் இடத்தை அண்மித்த பகுதியிலேயே அரச குடும்பத்தினரின் மாளிகைகளும், அவை சார்ந்த பெருமளவு நிலங்களும் இருந்தன. அரச குடும்பத்தினருக்கு நெருக்கமான அதிகாரிகளின் வாழ்விடங்களும்கூட இப்பகுதியிலேயே இருந்தன. போர்த்துக்கேயர் நல்லூரைக் கைப்பற்றிய பின்னர், இந்நிலங்களில் பெரும்பாலானவை போர்த்துக்கேய அரசாங்கத்துக்குச் சொந்தமாகின. 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் ஒல்லாந்தர் வசமான பின்னர் மேற்படி நிலங்கள் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுகைக்குள் வந்தன.
நல்லூர் ஒல்லாந்தரின் கைக்கு வருவதற்கு ஏறத்தாழ 37 ஆண்டுகளுக்கு முன்பே அது தலைநகரம் என்ற தகுதியை இழந்துவிட்டிருந்தது. எனினும், புதிய தலைநகரமான யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இருந்ததாலும், அப்பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்கெனவே இருந்ததாலும், அரசாங்கத்துக்குச் சொந்தமாகக் குறிப்பிடத்தக்க அளவு நிலம் இப்பகுதியில் இருந்ததாலும், புதிய வகிபாகம் ஒன்றை ஏற்றுக்கொண்டு வளர்ச்சியடையக்கூடிய உள்ளாற்றல் நல்லூருக்கு இருந்தது. எனினும், தொடக்கத்தில் இப்பகுதியில் இருந்த அரசாங்க நிலங்களை, அரசாங்கமே நேரடியாகப் பயன்படுத்துவதற்கான தேவை இருக்கவில்லை. நல்லூரில் முத்திரைச் சந்தையை அண்டியிருந்த கத்தோலிக்கத் தேவாலயமும், அது இருந்த நிலப்பகுதியும் ஒல்லாந்தருடைய புரட்டஸ்தாந்த கிறித்தவ மதத்தின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன. இந்த நிலத்திலேயே தமிழ் அரசர் காலத்தில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் இருந்ததாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இது தவிர, இப்பகுதியில் இருந்த நிலங்களின் பெரும்பகுதி துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு ஒல்லாந்தக் கட்டளை அதிகாரியின் நண்பர்களுக்கும், அரசாங்கத்தில் பதவி வகித்த உள்ளூர் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. இன்றும் இப்பகுதியில் காணப்படும் பல காணிகளின் பெயர்கள், ஒல்லாந்தர் காலத்தில் முதலி, ஆராய்ச்சி போன்ற பதவி வகித்தவர்களின் பெயர்களைத் தழுவி அமைந்திருப்பதைக் காணலாம். ஒல்லாந்தர் காலத்தில் மேற்படி காணிகள் குறித்த பெயர்களைக் கொண்டவர்களின் உடைமைகளாக இருந்ததை இது காட்டுவதாகக் கொள்ளலாம்.
இவை தவிர, நெசவு செய்தல், துணிகளுக்குச் சாயமிடுதல் போன்ற தொழில்களை வளர்த்தெடுப்பதற்குத் தொழிலாளர் குடும்பங்களை இந்தியாவில் இருந்து ஒல்லாந்தர் வரவழைத்தனர். இவர்களை நல்லூரின் சில பகுதிகளிலும் அவர்கள் குடியமர்த்தினர். இதற்காக நல்லூரில் இருந்த அரசாங்க நிலங்களின் ஒரு பகுதியை ஒல்லாந்தர் பயன்படுத்தியிருக்கக்கூடும். இன்று நல்லூர்ப் பகுதியில் காணப்படும் மேற்படி தொழிற் சமூகங்களைச் சேர்ந்தவர்களது குடியிருப்புக்களின் ஒரு பகுதி குடியேற்றவாதக் காலத்துக்கு முந்தியவையாக இருப்பதற்கான சான்றுகள் உள்ளன. எனினும், ஒல்லாந்தர் காலத்தில் புதிதாகக் குடியேற்றப்பட்டவர்களால் இக்குடியேற்றங்கள் விரிவடைந்தன என்பதில் ஐயமில்லை. குறிப்பாக இந்த வளர்ச்சி, நாயன்மார்கட்டு, கள்ளியங்காடு போன்ற பகுதிகளில் இடம்பெற்றதாகத் தெரிகின்றது.
ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலேயே, அவர்களது விசுவாசி ஒருவருக்கு வழங்கப்பட்ட நிலத்துண்டு ஒன்று சரியாகப் பராமரிக்கப்படாமையால் அதைத் திரும்பப் பெற்று அவ்விடத்தில் உயர் அதிகாரிகள் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான திட்டம் ஒன்று இருந்துள்ளது. உண்மையில் இவ்வாறு உயர் அதிகாரிகள் தங்குவதற்கு ஏற்ற மாளிகையுடன் கூடிய “அரசாங்கத் தோட்டம்” ஒன்று நல்லூரில் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. காலத்துக்குக் காலம் கொழும்பிலிருந்து வரும் ஆளுனர்களும் இந்தத் தோட்டத்தில் தங்கிச் சென்றுள்ளனர். இது எக்காலத்தில் கட்டப்பட்டது என்று தெரியவில்லை.
உள்ளூர் இளைஞர்களை மதபோதகர்களாகப் பயிற்றுவிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு 1692 ஆம் ஆண்டில் நல்லூரில் செமினரி ஒன்றை ஒல்லாந்தர் நிறுவினர். இந்த செமினரி சில காலம் சிறப்பாக இயங்கியபோதும், பிற்காலத்தில் இதன் தரம் வீழ்ச்சியடைந்ததால் 1722 ஆண்டு வரையே இச்செமினரி இயங்கியது. பின்னர் இதை மூடிவிட்டனர். இதுவும் முன்னர் யாழ்ப்பாண அரச குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்த நிலத்திலேயே கட்டப்பட்டது.
நமது மரபுரிமைச் சின்னங்களாகக் கருதப்படும், நல்லூரில் உள்ள சங்கிலித்தோப்பு வளைவு, மந்திரிமனை, சங்கிலித்தோப்புப் பகுதியில் உள்ள குளத்துக்கு அருகில் உள்ள கட்டிட அத்திவாரங்கள் என்பவை ஒல்லாந்தர் காலக் கட்டடங்களின் எச்சங்களே. இவை பெரும்பாலும் ஒல்லாந்த அரசில் பதவி வகித்த அதிகாரிகள் அல்லது அவர்களது பிற உயர்குடி வாரிசுகள் வாழ்ந்த வீடுகளின் எஞ்சிய பகுதிகளாக இருக்கக்கூடும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்தக் கட்டட எச்சங்களின் தொல்லியல் அல்லது மரபுரிமை முக்கியத்துவம் உணரப்பட்டதாகத் தெரிகின்றது. அக்காலத்தில், போர்த்துக்கேயர் அப்பகுதியைப் பிடித்துப் பயன்படுத்தத் தொடங்கியதின் பின்னர் ஏறத்தாழ 280 ஆண்டுகள் கழிந்துவிட்டன என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அத்துடன் ஒல்லாந்தர் ஆட்சி முடிவடைந்தும் 100 ஆண்டுகள் கடந்துவிட்டன. எனவே, இந்த 280 ஆண்டுக் காலப்பகுதியில் எந்த ஆண்டில் இவ்விடங்களில் கட்டடங்கள் முதலில் கட்டப்பட்டன, இவை எத்தனை முறை திருத்தப்பட்டன அல்லது முற்றாக இடித்துக் கட்டப்பட்டன. என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பவை போன்ற விபரங்கள் எதுவும் இன்று நமக்குத் தெரியாது.
சங்கிலித் தோப்பு வளைவு, சுற்று மதிலில் அமைக்கப்பட்டிருந்த ஒரு வாயில் அமைப்பாகவே தெரிகின்றது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, அதாவது இற்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன்பே இது ஏறத்தாழ இன்று இருப்பது போன்ற நிலையிலேயே இருந்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வடமாகாணத்தின் அரசாங்க அதிபராகச் சிலகாலம் பணியாற்றியவரான ஜே.பி.லூயிஸ் என்பவர் எழுதிய 1903 ஆம் ஆண்டுக்கான நிர்வாக அறிக்கையில் இதைப் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. நல்லூரில் இருந்து அரசாண்ட இறுதி யாழ்ப்பாண அரசனின் வதிவிடமாக இருந்ததாகச் சொல்லப்படும் சங்கிலித் தோப்பு என்னும் தோட்டத்தின் நுழைவாயிலில், ஒல்லாந்தர் கால வாயில் அமைப்பு ஒன்று நல்ல நிலையில் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அக்காலத்தில் அந்த வாயில் அமைப்பு தமிழ் மன்னர்களின் காலத்துக் கட்டிடப்பகுதி எனக் கருதப்பட்டாலும் உண்மையில் அது ஒல்லாந்தர் காலத்துக்கு உரியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். இவ்வாறு இற்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாயில் அமைப்புச் சங்கிலியின் மாளிகை வாயில் அல்ல என்ற கருத்து இருந்தும், பிற்கால ஆய்வாளர்கள் இதை உறுதிப்படுத்திய பின்னரும், இன்றும் மக்கள் பலர் இது சங்கிலியனின் மாளிகையின் வாயிலென்றே குறிப்பிடுவதைக் காணமுடிகின்றது.
தொடரும்.