இந்தத் தொடரில் இதற்கு முன்னர் வெளியான 15 ஆவது கட்டுரையில் யாழ்ப்பாணத்தை நிர்வாகம் செய்த ஒல்லாந்தக் கட்டளை அதிகாரிகள் சிலரைப் பற்றியும் அவர்கள் விட்டுச் சென்ற வழிகாட்டற் குறிப்புக்களைப் பற்றியும் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மேலும் இருவர் பற்றியும், அவர்களுடைய வழிகாட்டற் குறிப்புக்கள் பற்றியும் பார்க்கலாம்.
லிப்ரெக்ட் ஹூர்மன் 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியை அண்டி யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரியாகப் பதவி வகித்தார். சரியாக எந்த ஆண்டில் இவர் யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரியாகப் பதவி ஏற்றார் என்று தெரியவில்லை. 1748 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரி பதவியில் இருந்து விலகி இந்தியாவின் கோரமண்டல் பகுதியின் ஆளுனராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றார். இவர் 1708 ஆம் ஆண்டில் நெதர்லாந்தின் ஹேக் நகரில் பிறந்தார். இவரது இறப்பும் 1774 ஆம் ஆண்டில் இதே நகரிலேயே நிகழ்ந்தது.
இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றபோது, அவருக்குப் பின்னர் யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரியாகப் பதவியேற்ற யேக்கப் டி யொங் என்பவருக்கு எழுதிய வழிகாட்டற் குறிப்பு இலங்கை ஆவணக் காப்பகத்தில் உள்ளது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 2009 ஆம் ஆண்டில் இலங்கைத் தேசிய சுவடிகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.
இவருடைய குறிப்புக்களில், வன்னித் தலைவர்கள் திறையாகச் செலுத்தவேண்டிய யானைகளின் விபரங்களும், அவர்கள் கையளித்த, நிலுவையில் உள்ள யானைகளின் எண்ணிக்கைகளும் விபரமாகத் தரப்பட்டுள்ளன. அத்துடன், யாழ்ப்பாணக் கட்டளையகத்தில் வணிகம், வரி என்பவற்றின் மூலம் கிடைத்த வருமானங்கள், கரைச்சி, பூனகரி ஆகிய பகுதிகளில் காணிகள் விற்பனை பற்றிய தகவல்கள் என்பன உள்ளன. நெசவு, சாயமிடுதல் ஆகிய தொழில்களின் நிலவரம், அவ்வுற்பத்திப் பொருட்களின் வணிகம் என்பன தொடர்பான விபரங்களும் ஹூர்மனின் வழிகாட்டற் குறிப்பில் காணப்படுகின்றன. அக்காலத்தில் நல்லூர், ஆனைக்கோட்டை, பருத்தித்துறை ஆகிய இடங்களில் துணிகளுக்குச் சாயமிடும் தொழில் நடைபெற்றதாகத் தெரிகின்றது.
அந்தனி மூயார்ட் யாழ்ப்பாணத்தின் இன்னொரு முக்கிய கட்டளை அதிகாரி. இவரின் பாட்டனார் முதன் முதலில் இலங்கைக்கு வந்து காலியில் பணியாற்றினார். இவரது தந்தை நிக்கலஸ் மூயார்ட் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்தார். அந்தனி மூயார்ட் தனது கல்வி முழுவதையும் யாழ்ப்பாணத்திலேயே பெற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. 1712 ஆம் ஆண்டில் சாதாரண போர் வீரனாக ஒல்லாந்த கிழக்கிந்தியக் கம்பனியில் இணைந்த மூயார்ட், படிப்படியாக உயர்ந்து 1762 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரியானார். 1765 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆளுனராக இருந்த பாரன் வான் எக் சடுதியாகக் காலமானபோது, அந்தனி மூயார்ட் மூன்று மாதங்கள் இலங்கையின் தற்காலிக ஆளுனராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணத்தில் கல்வி கற்று இலங்கையை நிர்வாகம் செய்யுமளவுக்கு இவர் உயர்ந்ததை அக்கால யாழ்ப்பாணத்தின் கல்விச் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகக் காட்டுவதுண்டு. மீண்டும் யாழ்ப்பாணம் வந்த மூயார்ட் 1767 ஆம் ஆண்டில் அங்கே காலமானார். அவரது உடல் யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்திலேயே பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று அங்கேயே கட்டளை அதிகாரியாகப் பணியாற்றி அங்கேயே காலமான இவரை யாழ்ப்பாணத்தின் மைந்தன் எனலாம். யாழ்ப்பாணத்துடன் இவ்வாறான நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்த ஒல்லாந்தக் கட்டளை அதிகாரி இவர் மட்டுமே. ஒல்லாந்தர் காலத்துக்குப் பின்னரும் மூயார்ட் பரம்பரையினர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துள்ளனர், இவர்கள் வாழ்ந்த வீடு “மூயார்ட் தோட்டம்” என அழைக்கப்பட்டது. பிரித்தானியர் காலத்தில் ஆசீர்வாத முதலியார் என்பவருக்குக் கைமாறிய இவ்வீட்டைப் பின்னர் கத்தோலிக்கத் திருச்சபையினர் விலைக்கு வாங்கினர். பிரதான வீதியோரம் அமைந்த இந்த இடத்திலேயே இன்று புனித மாட்டினார் குருமடம் உள்ளது.
1766 ஆம் ஆண்டில் அந்தனி மூயார்ட் யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரி பதவியில் இருந்து ஓய்வு பெற்றபோது, புதிதாகப் பதவியேற்ற நொயெல் அந்தனி லெபெக் என்பவருக்கு எழுதிய வழிகாட்டற் குறிப்பு, யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரிகள் எழுதிய குறிப்புக்களுள் முக்கியமானவற்றுள் ஒன்று. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1910 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணக் குடாநாடு, தீவுப்பகுதி, வன்னி ஆகியவற்றை உள்ளடக்கிய யாழ்ப்பாணக் கட்டளையகத்தைச் சேர்ந்த மக்களின் இயல்புகளைப் பற்றி இவர் நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. இவருக்கு முந்திய கட்டளை அதிகாரிகளும் இவ்வாறான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் தமது பதவிக் காலமான மூன்று தொடக்கம் நான்கு ஆண்டுகள் வரை மட்டுமே யாழ்ப்பாண மக்களுடன் புழங்கியவர்கள். ஆனால், தனது வாழ்க்கைக் காலம் முழுவதும் யாழ்ப்பாண மக்களை அறிந்த அந்தனி மூயார்ட்டின் கருத்துக்கள் முக்கியமானவை.
யாழ்ப்பாணத்தவர் பொறாமைக்காரர்களாக இருக்கின்றனர் என்றும், தமது நாட்டினரான மக்களையே துன்புறுத்துகிறார்கள் என்றும், பொய்ச் சாட்சிகள் மூலமாகக் குற்றமற்றவர்களைச் சிறைக்கு அனுப்புகின்றனர் என்றும், இதனால் சிறைகள் குற்றமற்றவர்களால் நிரம்பியிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, யாழ்ப்பாணத்தவர்கள் அமைதியானவர்கள் என்றும் அவர்களை இலகுவாகக் கையாள முடிகின்றது என்றும், மூயார்ட் குறிப்பிட்டுள்ளார். தென்னிலங்கையில் பெரிய கலவரங்கள் ஏற்படுகின்றபோதும், யாழ்ப்பாணக் கட்டளையகத்தில் அமைதி நிலவுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
முக்கியமாக, ஆறு ஆண்டுகளாகக் கோட்டைக் கட்டுமான வேலைகளில் குறை எதுவும் கூறாமல் ஈடுபட்டுள்ளார்கள் எனவும், ஆண்டுக்கு 12 நாட்கள் சம்பளமின்றி அரசாங்கத்துக்கு வேலை செய்யவேண்டி இருக்கும்போது இரண்டு மடங்கு நாட்கள் வேலை செய்கின்றனர் என்றும், அதேவேளை, தமது வரிகளையும் ஒழுங்காகக் கட்டுகின்றனர் எனவும் புகழாரம் சூட்டுகின்றார். இவ்வாறு வேலை செய்யும் மக்களுக்காக இரக்கப்பட்டு அரசாங்கம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு ஒரு சுண்டு (கால் கொத்து) அரிசி, அல்லது மாதத்துக்கு ஒரு பறை அரிசி அல்லது, இரண்டு பறை நெல் கொடுக்கப்பட்டதாம். உண்மையில் மக்கள் இதை விரும்பிச் செய்தார்களா அல்லது ஒல்லாந்த அதிகாரிகள் அவர்களைப் பிழிந்து வேலை வாங்கினார்களா தெரியவில்லை.
வன்னித் தலைவர்கள் செலுத்த வேண்டிய யானைகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களும், அவர்களிற் சிலர் அரசாங்கக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமை பற்றிய தகவல்களும் மூயார்ட்டின் குறிப்பில் உள்ளன. ஒல்லாந்தரின் புரட்டஸ்தாந்த கிறித்தவ சமயத்தை வளர்க்கும் முயற்சி பெருமளவு வெற்றிபெறவில்லை என்றும், மதம் மாறிய பலர் பெயரளவுக்குக் கிறித்தவராகவும், மனதளவில் கிறித்தவர் அல்லாதவராக இருந்ததாகவும் அவரது குறிப்பிலிருந்து அறிய முடிகின்றது. அத்துடன், கத்தோலிக்க சமயம் மறைவாகக் கைக்கொள்ளப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி வழிகாட்டற் குறிப்புக்கள் ஒல்லாந்தர் கால யாழ்ப்பாணத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு உதவுகின்றன.
தொடரும்.