ஒல்லாந்தர் காலமும் கத்தோலிக்கத் தேவாலயங்களும்
Arts
10 நிமிட வாசிப்பு

ஒல்லாந்தர் காலமும் கத்தோலிக்கத் தேவாலயங்களும்

February 11, 2021 | Ezhuna

யாழ் நகரம் அதன் வரலாற்றுக் காலத்தில், அதன் நிர்வாக எல்லைகளுக்கும் அப்பால் பரந்துள்ள பிரதேசங்கள் தொடர்பிலும் பல்வேறு பொருளாதார, அரசியல், நிர்வாக, பண்பாட்டு வகிபாகங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாண நகர வரலாறு, அதன் மரபுரிமை சார் அம்சங்கள், ஐரோப்பியர் ஆட்சியில் யாழ். நகரின் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களின் திரட்டுகள் என்பனவற்றை உரிய ஆதாரங்களோடு ‘யாழ்ப்பாண நகரம் 400’ என்ற இத்தொடர் முன்வைக்கின்றது. 400 ஆண்டுகால யாழ்ப்பாணத்தின் வரலாறு, பண்பாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சார்ந்த கட்டுரைகளை இத்தொடர் கொண்டமைந்துள்ளது.

1619 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கேயர் ஆண்ட 39 ஆண்டுகாலம், முன்னர் வழக்கிலிருந்த பிற மதங்களை ஒடுக்கிக் கத்தோலிக்க மதத்துக்குத் தனியுரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் வசமானதும் இந்த நிலை முற்றாக மாறியது. கத்தோலிக்க மதம் தடைசெய்யப்பட்டது, கத்தோலிக்கக் குருமார்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இராச்சியத்திலிருந்த எல்லாக் கத்தோலிக்கத் தேவாலயங்களையும் தமதாக்கிய ஒல்லாந்தர் அவற்றைத் தமது சீர்திருத்தக் கிறித்தவ மதத் தேவாலயங்களாக மாற்றினர். 138 ஆண்டுகால ஒல்லாந்தர் ஆட்சியில் இறுதி இரண்டு பத்தாண்டுகளைத் தவிர எஞ்சிய காலப்பகுதி முழுவதும் கத்தோலிக்க மதத்தின் மீது கடுமையான ஒடுக்குமுறைகள் நிலவின. எனினும், கணிசமான அளவு கத்தோலிக்க மக்கள் பற்றுறுதியோடு தமது மதத்தைப் பின்பற்றிவந்தனர். அவர்கள் தனியார் வளவுகளிலும், வீடுகளிலும் கூடி மறைவாக வழிபாடுகளில் ஈடுபட்டுவந்துள்ளனர். அக்காலத்தில் கோவாவிலிருந்து வந்த கத்தோலிக்க மதகுருமார்களும் இரகசியமான முறையில் கத்தோலிக்க மக்களிடையே பணியாற்றியதற்கும் சான்றுகள் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயம்

இன்று யாழ்ப்பாண நகரப் பகுதியில் காணப்படும் கத்தோலிக்கத் தேவாலயங்களுட் சில ஒல்லாந்தர் காலத்தில் மதக் கெடுபிடிகள் தளர்வடைவதற்கு முன்பே மக்கள்  இரகசியமாகக் கூடி வழிபடும் இடங்களாக இருந்துள்ளன. பிற மதங்களுக்கு எதிரான சட்டங்கள் நீக்கப்படாதபோதும், 1780 களின் இறுதிப் பகுதியில் ஒல்லாந்தர் ஆட்சியின் மதக் கெடுபிடிகள் தளர்ந்து பல்வேறு மதங்களின் செயற்பாடுகளை வெளிப்படையாகச் செய்வதற்கும், வழிபாட்டிடங்களைக் கட்டுவதற்கும் அனுமதிகள் கிடைத்தன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு யாழ்ப்பாணம் முழுவதும் மறைவாகச் சிறு குடிசைகளாக இருந்த கத்தோலிக்கத் தேவாலயங்கள் இருந்த இடங்களில் புதிய தேவாலயக் கட்டடங்கள் உருவாகின.

இன்றைய யாழ் மரியன்னை பேராலயம் இருக்கும் இடத்திலும் மறைவாகக் கத்தோலிக்க மக்கள் கூடி வழிபட்டு வந்துள்ளனர். இங்கேயிருந்த ஒரு பெரிய புளிய மரத்தின் கீழ் மண்ணாலான சுவர்களையும் ஓலைக் கூரையையும் கொண்ட ஒரு சிறு குடிசையே தேவாலயமாக இருந்துள்ளது. 1789 ஆம் ஆண்டில் அவ்விடத்தில் புதிய தேவாலயக் கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அக்காலத்தில் இப்பகுதியில் இருந்த நிலங்கள் பெரும்பாலும் மூண்டுக் குளத்தை அண்டிய வயற் காணிகளாகவும் சில குடியிருப்புக் காணிகளாகவும் இருந்தன. இவை ஒல்லாந்த அரசின் கீழ்ப் பதவிகளை வகித்த, அல்லது வணிக முயற்சிகளூடாகப் பணக்காரர்களாக இருந்த உள்ளூர்க் கத்தோலிக்கர் பலருக்குச் சொந்தமாக இருந்தன. இவர்கள் கட்டடத்தை அமைப்பதற்குத் தேவையான நிலங்களையும், பணத்தையும் அன்பளிப்பாக வழங்கினர். 1794 ஆம் ஆண்டில் கட்டட வேலைகள் நிறைவுற்றுத் தேவாலயம் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இது அப்போது புனித மரியன்னை தேவாலயம் என அழைக்கப்பட்டது. சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய நூலொன்றின்படி, கோவா கட்டடப் பாணியில் அமைந்திருந்த இத்தேவாலயத்தில், இரண்டு பக்கங்களிலும் உயரம் குறைந்த சுவர்களும் நடுவில் இரண்டு வரிசைகளில் அமைந்த மரத் தூண்களும் கூரையைத் தாங்கி நின்றன. இக்கட்டிடம் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலும், அதன் பின்னரும் பல திருத்தங்களையும் விரிவாக்கங்களையும் கண்டுள்ளது. இப்போது இது ஒரு பேராலயமாக விளங்குகின்றது.

இன்றைய கோவில் வீதி – வைத்தியசாலை வீதிச் சந்திக்கு அண்மையில் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள புனித திருமுழுக்கு யோவான் கத்தோலிக்கத் தேவாலயமும் ஒல்லாந்தர் காலத்திலேயே உருவானது. போர்த்துக்கேயர் காலத்தில், இன்றைய பரி யோவான் கல்லூரிக்கு அருகில் இருந்த கத்தோலிக்கத் தேவாலயத்தை ஒல்லாந்தர் கைப்பற்றிக்கொண்ட பின்னர், கத்தோலிக்கர்கள்  இன்றைய புனித திருமுழுக்கு யோவான் கத்தோலிக்கத் தேவாலயம் இருக்கும் இடத்தில் மக்கள்  மறைவாகக் கூடி வழிபட்டிருக்கக்கூடும். இத்தேவாலயக் காணியின் 1772 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒல்லாந்தர் கால உறுதிப் பத்திரம் ஒன்றில் அவ்விடத்தில் கத்தோலிக்கத் தேவாலயம் ஒன்று கட்டப்பட்டதாகக் குறிப்பு இருப்பதாக சுவாமி ஞானப் பிரகாசர் குறிப்பிட்டுள்ளார். இத்தேவாலயத்தின் இன்றைய கட்டடம் 1888 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. முன்னர் இருந்த தேவாலயக் கட்டடத்தை இடித்துவிட்டே புதிய கட்டடம் கட்டப்பட்டது. எனவே உறுதியில் குறிப்பிடப்பட்ட தேவாலயக் கட்டடம் 1880 களில் இடிக்கப்பட்ட கட்டடமாகவோ அல்லது அதற்கு முன்னர் இருந்த வேறொரு தேவாலயக் கட்டடமாகவோ இருக்கக்கூடும்.

குருநகர் புனித யாகப்பர் தேவாலயம்

குருநகரில் உள்ள புனித யாகப்பர் தேவாலயத்தின் இன்றைய கட்டிடம் 1861 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1976 ஆம் ஆண்டளவில் முடிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. ஆனால் இந்த ஆலயத்தில் காணப்படும் கல்வெட்டொன்றில் யோசெஃப் ரெபெய்ரோ என்னும் கத்தோலிக்கக் குருவானவர் 1783 ஆம் ஆண்டில் அடக்கம் செய்யப்பட்டது குறித்த தகவல் காணப்படுகின்றது. இக்கல்வெட்டு முன்னர் இவ்விடத்தில் இருந்த பழைய தேவாலயம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது சரியானால், இத்தேவாலயமும் ஒல்லாந்தர் காலத்திலேயே தோற்றம் பெற்றது எனலாம்.

குருநகரில் அமைந்துள்ள இன்னொரு கத்தோலிக்கத் தேவாலயம் புதுமைமாதா தேவாலயம் ஆகும். இது எப்போது தோற்றம்பெற்றது என்பது குறித்துத் தெளிவில்லை. இதுவே யாழ்நகரில் இன்று இருக்கும் தேவாலயங்களில் மிகவும் பழமை வாய்ந்தது என அப்பகுதி மக்கள் நம்புவதாக சுவாமி ஞானப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார். யாழ்நகரில் 1614 இல் போர்த்துக்கேயரால் நிரந்தரக் கட்டுமானமாகக் கட்டப்பட்ட முதல் தேவாலயமும் புதுமைமாதாவின் பெயரிலேயே அமைந்திருந்தது. இதைச் சுற்றியே பின்னர் போர்த்துக்கேயர் தமது கோட்டையைக் கட்டினர் அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தின் முதன்மைக் கோயிலாக இருந்த இது, 1658 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் வசமானது. இவ்வாறு தமது கையை விட்டுப்போன புதுமைமாதா கோயிலுக்குப் பதிலாக இன்றைய புதுமைமாதா கோயில் தோற்றம் பெற்றிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இத்தேவாலயத்தைச் சேர்ந்த மக்கள் வண்ணார்பண்ணை கொட்டடிப் பகுதியில் இருந்து வந்திருக்கக்கூடும் என எண்ணுவதற்கான சான்றுகளை சுவாமி ஞானப்பிரகாசர் தந்துள்ளார். எனினும் ஒல்லாந்தர் காலத்திலேயே இம்மக்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்குச் சான்றுகள் உள்ளன.

இன்று யாழ் நகரில் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் உருவாக்கம் 1802 ஆம் ஆண்டில் காலமானதாகக் கருதப்படும் பாதிரியார் லோபோ என்பவருடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றது. இதனால், இத் தேவாலயமும் ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்ததாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் உண்டு.

எனவே, யாழ்ப்பாண நகரத்தில் இன்று காணப்படும் பல முக்கியமான கத்தோலிக்கத் தேவாலயங்கள் ஒல்லாந்தர் காலத்தில் மறைவாக வழிபடுவதற்கேற்ற சிறிய குடிசைத் தேவாலயங்களாகத் தோற்றம்பெற்று, ஒல்லாந்தர் ஆட்சிக்கால இறுதியில் மதக் கெடுபிடிகள் தளர்வடைந்தபோது புதிய கட்டடங்களுடன் உருவாகி வளர்ச்சி பெற்றன எனலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

23322 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)