யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் காலக் கல்வியும், பாடசாலைகளும்
Arts
10 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் காலக் கல்வியும், பாடசாலைகளும்

February 11, 2021 | Ezhuna

யாழ் நகரம் அதன் வரலாற்றுக் காலத்தில், அதன் நிர்வாக எல்லைகளுக்கும் அப்பால் பரந்துள்ள பிரதேசங்கள் தொடர்பிலும் பல்வேறு பொருளாதார, அரசியல், நிர்வாக, பண்பாட்டு வகிபாகங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாண நகர வரலாறு, அதன் மரபுரிமை சார் அம்சங்கள், ஐரோப்பியர் ஆட்சியில் யாழ். நகரின் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களின் திரட்டுகள் என்பனவற்றை உரிய ஆதாரங்களோடு ‘யாழ்ப்பாண நகரம் 400’ என்ற இத்தொடர் முன்வைக்கின்றது. 400 ஆண்டுகால யாழ்ப்பாணத்தின் வரலாறு, பண்பாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சார்ந்த கட்டுரைகளை இத்தொடர் கொண்டமைந்துள்ளது.

ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு கோயிற்பற்றுப் பிரிவுகளில் காணப்பட்ட கிறித்தவ தேவாலயங்களுடன் இணைந்ததாகப் பாடசாலைகள் இருந்தன. வலிகாமப் பிரிவில் தெல்லிப்பழை, மல்லாகம், மயிலிட்டி, அச்சுவேலி, உடுவில், வட்டுக்கோட்டை, நல்லூர், பண்டத்தரிப்பு, சங்கானை, மானிப்பாய், வண்ணார்பண்ணை, சுண்டிக்குழி, கோப்பாய், புத்தூர் ஆகிய 14 இடங்களிலும், தென்மராட்சியில் நாவற்குழி, சாவகச்சேரி, கைதடி, வரணி, எழுதுமட்டுவாள் ஆகிய 5 இடங்களிலும், வடமராட்சியில் பருத்தித்துறை, உடுப்பிட்டி, கட்டைவேலி ஆகிய 3 இடங்களிலும், பச்சிலைப்பள்ளிப் பிரிவில் புலோப்பளை, முகமாலை, முள்ளிப்பற்று, தம்பகாமம் ஆகிய நான்கு இடங்களிலும் இப்பாடசாலைகள் அமைந்திருந்தன. இவற்றைவிட தீவுப் பகுதியில், அல்லைப்பிட்டி, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர், புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய இடங்களிலும் பாடசாலைகள் இருந்தன. ஒவ்வொரு கட்டளையகத்திலும் இப்பாடசாலைகளை மேற்பார்வை செய்ய “ஸ்கூலாசென்” (scholarchen) என்னும் ஒரு குழு இருந்தது.  இக்குழுவில் அரசாங்க அதிகாரிகளும், மதகுருவும் இடம்பெற்றிருந்தனர். ஒல்லாந்தர் ஆட்சிக் காலத் தொடக்கத்தில் பாடசாலை நிர்வாகத்தில் மதகுருவுக்குக் குறிப்பிடத்தக்க பங்கு இருந்தது.

வலிகாமப் பிரிவில் ஒல்லாந்தர் காலப் பாடசாலைகளின் அமைவிடங்கள்

பாடசாலைகளுக்கெனத் தனியான கட்டட வசதிகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. தேவாலயங்களிலேயே கற்பித்தல் இடம்பெற்றிருக்கலாம். இப்பாடசாலைகளின் முக்கிய நோக்கம் உள்நாட்டவர்கள் மத்தியில் கிறித்தவ மதத்தைப் பரப்புவது ஆகும்.

வளர்ந்தவர்கள் மத்தியில் சமயத்தை வலுக்கட்டாயமாகத் திணிப்பதை ஒல்லாந்த அதிகாரிகள் விரும்பவில்லையெனத் தெரிகின்றது. அதனால், சிறுவர்களுக்கு மத போதனை செய்து அவர்களை மதம் மாற்றுவதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. இதற்குப் பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டன. பல்தேயஸ் பாதிரியார் எல்லாச் சிறுவர்களையும், சிறுமிகளையும் கட்டாயமாகப் பாடசாலைக்கு வரச் செய்யவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். ஆனால், உள்ளூர் மக்கள் தமது பெண் பிள்ளைகளை எட்டு வயதுக்கு மேல் படிக்க அனுப்பமாட்டார்கள் என்பதால் அப்போதைய ஒல்லாந்த ஆளுனர், பெண்பிள்ளைகளைக் கட்டாயப்படுத்துவதை விரும்பவில்லை. தெல்லிப்பழைத் தேவாலயத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பல்தேயஸ் பாதிரியார் அங்கே கற்ற மாணவர்கள் 1000 பேரில் 480 மாணவர்கள் ஒல்லாந்தரின் சமயத்தின் முக்கிய அம்சங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் சொல்லக்கூடியவர்களாக இருந்ததாகக் கூறியுள்ளார். இதிலிருந்து அக்காலத்தில் உள்நாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வியிலிருந்து எதிர்பார்க்கப்பட்டது என்ன என்பதை அறியக்கூடியதாக உள்ளது. அதேவேளை, மதம் மாறித் திருமுழுக்குப் பெற்ற மாணவர்கள் மீண்டும் தமது பழைய மதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காகப் போலும், அவர்களைப் பெற்றோரின் அனுமதியுடன் தேவாலயத்திலேயே வைத்திருப்பதற்கு பல்தேயஸ் பாதிரியார் அரசிடம் அனுமதி கோரியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப வகுப்புக்களில் கிறித்தவ மத போதனையே இடம்பெற்றது. இதற்கு உதவியாக எழுத்து, வாசிப்பு என்பனவும் கற்பிக்கப்பட்டன. பாடசாலைக்கு மாணவர்கள் வருவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டாயக் கல்வி இன்றுபோல் வயதை அல்லது வகுப்பை அடிப்படையாகக் கொண்டிராமல், எதிர்பார்க்கப்பட்ட கிறித்தவ சமய அறிவைப் பெறும்வரை நீடித்தது. பாடசாலைக்குச் செல்லத் தவறுவோருக்குத் தண்டம் விதிக்கப்பட்டது. இத் தண்டப் பணத்திலிருந்தே ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டது. பெரும்பாலான கோயிற்பற்றுப் பாடசாலைகளில் ஒரு ஆசிரியரே கற்பித்தார். சுண்டிக்குழி உள்ளிட்ட சில பெரிய கோயிற்பற்றுக்களில் இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் கல்வி தமிழிலேயே கற்பிக்கப்பட்டது. எனினும், ஒல்லாந்தரின் டச்சு மொழியைக் கற்பிப்பதற்கான முயற்சிகளும் ஒல்லாந்தர் ஆட்சியின் தொடக்க காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டதை அறியமுடிகின்றது. உள்நாட்டு மாணவர்களுக்கு டச்சு மொழியைப் பயிற்றுவிப்பதற்காக, ஆசிரியர்களும், புத்தகங்களும் கொழும்பில் இருந்து வரவுள்ளதாக, ஒல்லாந்தர் ஆட்சியில் யாழ்ப்பாணத்தின் முதல் கட்டளை அதிகாரியாகப் பதவி வகித்த அந்தனி பவ்லியோன், 1665 ஆம் ஆண்டில் எழுதிய வழிகாட்டற் குறிப்பில் எழுதியுள்ளார். இந்த எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறியதா என்பது தெரியவில்லை. ஆனால், 1723 ஆம் ஆண்டில் அப்போதைய ஒல்லாந்த ஆளுனர் திறமையான சில உள்ளூர் மாணவர்களுக்கு டச்சு மொழியைப் போதிக்க அனுமதி வழங்கியது குறித்த தகவல்கள் உள்ளன.

இன்றைய யாழ்.நகர எல்லைக்குள் ஒல்லாந்தர் காலப் பாடசாலை நடைபெற்ற சுண்டுக்குழித் தேவாலயம்

அக்காலத்தில், மேற்குறிப்பிட்ட கோயிற்பற்றுப் பாடசாலைகளுள் மூன்று இன்றைய யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருந்தன. ஒன்று சுண்டிக்குழியிலும், இன்னொன்று வண்ணார்பண்ணையிலும், மற்றது நல்லூரிலும் இருந்தன. சுண்டிக்குழிப் பாடசாலை இன்றைய பரி. யோவான் பாடசாலை இருக்கும் பகுதியிலும், வண்ணார்பண்ணைப் பாடசாலை ஓட்டுமடத்திலும், நல்லூர்ப் பாடசாலை முத்திரைச் சந்தைக்கு அண்மையிலும் அமைந்திருந்தன. இவை உள்நாட்டு மாணவர்களுக்கானவை. ஒல்லாந்தர் காலத் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பல்தேயஸ் பாதிரியாரின் குறிப்புக்களின்படி அக்காலத்தில் சுண்டிக்குழியில் 450 மாணவர்களும், வண்ணார்பண்ணையில் 200 மாணவர்களும், நல்லூரில் 590 மாணவர்களும் கற்றதாகத் தெரிகின்றது. ஒல்லாந்தர் காலத்தின் இறுதிப் பகுதியில் மாணவர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கக்கூடும்.

1692 க்கும் 1722 க்கும் இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்நாட்டு மாணவர்களுக்கு மறைக் கல்வியைப் போதிப்பதற்கான செமினரி ஒன்றும் இயங்கியது. இது நல்லூரில் அமைந்திருந்தது. பெரிய நிலப்பரப்பில், வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான தங்குமிடங்கள், போன்ற பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இச்செமினரி இருந்தது. தொடக்கத்தில் சிறப்பாக இயங்கிய இதன் தரம் பிற்காலத்தில் குறைவுற்றதால் மூடப்பட்டதாகத் தெரிகின்றது. இங்கே 200 மாணவர்கள் கல்வி பெறுவதற்கான வசதிகள் இங்கே காணப்பட்டன.

ஒல்லாந்தப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கான பாடசாலைகள் யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்திருக்கக்கூடும். ஆனால், அவை பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரியாகவும், பின்னர் இலங்கையின் தற்காலிக ஆளுனராகவும் பதவி வகித்த அந்தனி மூயார்ட் யாழ்ப்பாணத்திலேயே தனது முழுக் கல்வியையும் பெற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. இவ்வாறான உயர் பதவியை வகிப்பதற்குத் தேவையான கல்வியை ஒல்லாந்த மாணவர்கள் பெற்றுக்கொள்வதற்கான சிறப்பான வசதி யாழ்ப்பாணத்தில் இருந்தது என்ற கருத்து உண்டு. ஆனால், இவ்வாறான பாடசாலைகள் இருந்ததை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களோ, அவற்றின் அமைவிடங்கள் குறித்த தகவல்களோ இதுவரை கிடைக்கவில்லை.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்