Arts
18 நிமிட வாசிப்பு

தமிழினப் படுகொலையின் 15 ஆவது ஆண்டில் இனப் படுகொலையின் அரசியல்

April 22, 2024 | Ezhuna

பலஸ்தீனமும் முள்ளிவாய்க்காலும்

தமிழினப் படுகொலையின் 15 ஆவது ஆண்டில், நாங்கள் யாவரும் சாட்சிகளாய் பார்த்திருக்க பலஸ்தீனப் படுகொலை அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இஸ்ராயேல் – பலஸ்தீனப் போரை வெறும் இஸ்ராயேல் – பலஸ்தீனப் போராக மட்டுமே அவதானிக்க முடியாதென்பதை எல்லோருமே அறிந்திருக்கின்றோம். எனது ஆய்வு நோக்கம் கருதி இப் போரை, மத்திய கிழக்கில் பேரரசுக் கட்டமைப்புக்காக, புவிசார் அரசியல் தளத்தில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற பலப் பரீட்சைக்கான போராகவே நான் பார்க்க விரும்புகின்றேன். இந்தப் பலப் பரீட்சையில் ஏகாதிபத்திய வல்லதிகாரப் பலம் மத்திய கிழக்கில் நிலை நாட்டப்படும். ஏகாதிபத்தியப் பேரரசு வல்லாதிக்கப் போட்டியில், உப ஏகாதிபத்திய வல்லாதிக்கத்தை நிலைநாட்டுதல், தவிர்க்கப்பட முடியாததான அபத்தத்தைத் தோற்றுவிக்கின்றது. தமிழினப் படுகொலையும், தற்போது அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பலஸ்தீனப் படுகொலையும், மக்களின் உயிர்களை பலியெடுக்கும் ஏகாதிபத்தியப் பேரரசுக் கட்டமைப்புக்குத் தயாராகும் ஓர் அரசியல் – இராணுவக் கட்டமைப்பை அம்பலப்படுத்துவது மாத்திரம் அல்லாமல், இவ்வாறான பலப் பரீட்சையில் மக்களின் உயிர்கள் ஒரு பொருட்டே அல்ல என்பதோடு, புவிசார் அரசியல் நலன்களுக்காக வல்லாதிக்கப் பேரரசு எவ் உயரிய விலையையும் கொடுக்கத் தயாராய் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.

தமிழினப் படுகொலையின் அரசியல் வரலாற்றுப் பின்புலத்திலும், தற்போது நடந்தேறிக் கொண்டிருக்கும் பலஸ்தீன இனப் படுகொலையின் அரசியல் வரலாற்றுப் பின்புலத்திலும் ஏகாதிபத்தியப் பேரரசுக் கட்டமைப்பு ஒன்றாகவே இருப்பதால், இரண்டு இனப் படுகொலைகளுக்கும் இடையே, இனங்களின் இருப்பை அழிக்கும் உத்திகள் தொடர்பில் ஒற்றுமைத் தன்னை இருப்பதை அவதானிக்க முடிகின்றது. தமிழினப் படுகொலை, பலஸ்தீனப் படுகொலை ஆகியன தொடர்பான ஒப்பீட்டு ஆய்வுகள் மைய நீரோட்ட ஆய்வுப் பரப்பில் செல்வாக்குச் செலுத்த முடியாவிட்டாலும், ஆய்வுப் பரப்பு வெளியை திறந்து விட்டிருப்பது என்பது மனநிறைவு தருவதாய் உள்ளது.

இவ்விரண்டு இனப் படுகொலைகளின் மூலகாரணியாய் இருப்பது காலனித்துவம். காலனித்துவ அரசியல் கட்டமைப்பு நிலத்தையும், மக்களையும் இனவாத மையப்படுத்திய இயங்கு நெறிக்குள் காலனித்துவ, பின் காலனித்துவ அரசியல் வரலாற்றுச் சூழலை நிர்ப்பந்தித்தது. அதுவே நாளடைவில் வரையறுக்கப்பட்ட நியதியாக்கப்பட்டது. இவ்விரண்டு இனப் படுகொலைகளிலும் பிரித்தானியக் காலனித்துவத்தின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது தொடர்பிலான பேராசியர் சுஜித் சேவியரின் ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. அவர் குறிப்பிடுகின்ற இன-நிற முதலாளித்துவம் (ethno-racial capitalism) என்ற கருத்தியலின் காரணியாக்க வகிபாகம் முக்கியமானது. இனவாதம், முதலாளித்துவம், வன்முறை இவற்றுக்கிடையிலான தொடர்பு புறக்கணிக்கப்பட முடியாதது. அதே நேரத்தில் சர்வதேசச் சட்டம் மறைமுகமான இனவாத ஏற்றத்தாழ்வை, குறிப்பாக வெள்ளைத்தோல் மீயுயர்வை தக்கவைத்துக் கொண்டே இருக்கும். அவர் குறிப்பிடுகின்ற காலனித்துவத்திற்கும் வன்முறை வரலாற்றிற்குமான தொடர்பு இன-நிற முதலாளித்துவ வில்லைகளுக்கூடாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. இந்த ஆய்வு சர்வதேசச் சட்டங்களின் உள்நோக்கத்தையும் அது உருவாக்கும் கட்டமைப்பையும் சிக்கலுக்கு உட்படுத்துகின்றது. இன்னொரு சாரார் பிரித்தானியப் புவிசார் அரசியல் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் ஒற்றையாட்சி அரச கட்டமைப்பை தமிழினப் படுகொலைக்கான காரணியாக்கி அதை கேள்விக்கு உட்படுத்துகின்றனர். மேற்கூறப்பட்டவை தமிழினப் படுகொலையின் அரங்கேற்றத்தில் பல்வேறு காரணிகள், உள்ளக, வெளியகச் சக்திகள் செல்வாக்குச் செலுத்தின என்பதை அம்பலப்படுத்துகின்றன.

அதேபோல் தற்போது அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பலஸ்தீன இனப் படுகொலையில் எவ்வாறு பல்வேறு சக்திகள் ஈடுபட்டுள்ளன என்பதை, ஏகாதிபத்திய வல்லாதிக்கம் கட்டமைத்த சட்டகமே அம்பலப்படுத்துகின்றது என்பது கேலிக்குரியது. இந்த அதிகாரப் போட்டியில் பல்வேறு முகத்திரைகள் கிழிக்கப்படுவது, தமிழினப் படுகொலையின் சூத்திரதாரிகளின் முகத்திரைகளையும் கிழிக்கின்றது என்பது ஐயமுற வெளிப்படுத்தப்படுகின்றது. பின்-காலனித்துவ வரலாற்றுச் சூழலில் உருவாக்கப்பட்ட அரச வடிவக் கட்டமைப்புக்கும், அரங்கேற்றப்பட்ட, அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இனப் படுகொலைகளுக்கும், காலனித்துவத்திற்கும், ஏகாதிபத்திய வல்லரசுக் கட்டமைப்புக்கும், இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

மேற் குறிப்பிட்ட இரண்டு இனப் படுகொலைகளுக்குமான புவிசார் வெளி என்பது தெளிவாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. கடலை அண்மித்த வெளி. முள்ளிவாய்க்கால், காசா இவை இரண்டுமே கடலை அண்மித்த புவிசார் வெளியையே கொண்டுள்ளது. இதனூடாக மக்கள் ஓரங்கட்டப்பட்ட விதம் முக்கியமானது. இரண்டு இனப் படுகொலைகளிலுமே வைத்தியசாலைகள் தாக்குதல்களுக்குள்ளாகின, மனித நேயப் பணிகள் முடக்கப்பட்டன. உணவை ஆயுதமாக்கியதன் மூலம் பட்டினிச் சாவின் விளிம்பு வரைக்கும் செல்ல போர் வலயத்திற்கு உட்பட்டோர் நிர்ப்பந்திக்கபட்டனர். 

மனித உரிமைக் காவலர்கள் என்று கூறிக் கொள்ளும் வல்லாதிக்க நாடுகளின் இனப் படுகொலை உடந்தைத்தன்மை இனப் படுகொலைக் குற்றப் பொறுப்பில், பங்கு கொள்ளுதலாக கணிக்கப்படுகின்றது. இனப் படுகொலை குற்றத்திற்கு உடந்தையான ஆனால் நேரடியாக தங்கள் கைகள் இரத்தம் தோயவில்லை என்று தப்பித்துக் கொள்ளும் மனித உரிமைக் காவல் நாடுகள், தங்களையும் காப்பாற்றிக்கொண்டு, இனப் படுகொலை குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களையும் காப்பாற்றிக் கொள்ளல் என்பது தண்டனை விலக்கீட்டுத் தன்மைக் கலாச்சாரத்திற்கு வலுச் சேர்க்கின்றது.

இந்தத் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரத்தில் நான் ஆய்வுக்கு உட்படுத்திய புதிய அலகான ‘கதாநாயக தண்டனை விலக்கீட்டுத்தன்மை’ குறிப்பிடத்தக்கது (Heroic impunity). குற்றவாளிகளைக் கதாநாயகர்களாக விபரித்து அந்தக் கதாநாயகத் தன்மைக்குள் குற்றங்களுக்கான விலக்கீட்டுரிமை கொடுக்கின்ற செல்நெறியை தற்போதைய இனவாதக் கட்டமைப்பு உருவாக்கியுள்ளது. கதாநாயகத் தன்மைக்கும், இனப் படுகொலைக் குற்றத்திற்குமான முடிச்சு, தண்டனை விலக்கீட்டுரிமைக் கலாசாரத்தை வலுவாக்குகின்றது. இவ் வலுவாக்கல் செயன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களின் பொறுப்புக் கூறலிற்கான கோரிக்கை அர்த்தமற்றதாகின்றது. பொறுப்புக் கூறல் செயன்முறைக் கட்டமைப்பு வலுவிழந்த நிலையில்தான், கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலை தொடர்ந்து இடம்பெறுகின்றது. இது பலஸ்தீனத்தில் ‘வலிந்து குடியிருப்பதினூடு’ (settler colonialism) தொடர்ந்து நடக்கின்றது. வடக்கு – கிழக்கில் சிங்கள – பௌத்த மயமாக்கலூடாகவும், இராணுவ மயப்படுத்தலுக்கூடாகவும் இது தொடந்து அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பலஸ்தீனத்திலும், வடக்கு – கிழக்கிலும், விடுதலைக்கும், நில மீட்புக்குமான தொடர்பு துண்டிக்கப்பட முடியாதது. தமிழின விடுதலையும், பலஸ்தீன மக்களின் விடுதலையும், நில மீட்பும் உதிரியான இயங்குதள வெளியல்ல.

ஒரு தேசத்தின் கூட்டிருப்பு என்பது நிலத்தில் தங்கியுள்ளது. நிலமின்றி தேசத்திற்கான கோரிக்கை செல்லுபடி அற்றதாகின்றது. தேசத்திற்கான கோரிக்கையை நிராகரிப்பதற்கு, நிலக் கூட்டுரிமைக் கோரிக்கையை இல்லாது செய்தல், உத்தி சார்ந்து அவசியமாகின்றது. நிலக் கூட்டுரிமைக் கோரிக்கையை இல்லாது செய்வதற்கான உத்தியாகத்தான் வலிந்து குடியிருப்பது (settler colonialism), வடக்கு – கிழக்கை சிங்கள – பௌத்த மயமாக்குவதோடு இராணுவ மயப்படுத்துவதும் அவசியமாக்கப்படுகின்றது. கூட்டு நில உரிமைக் கோரிக்கையை ‘வாக்களிக்கப்பட்ட நாடு’ என்ற சொல்லாடல்களுக்கூடாகப் பூசி மெழுகுதல் இலகுவானது. ஈழத்தழிழ், பலஸ்தீன இரு தளங்களிலும் ‘வாக்களிக்கப்பட்ட நாட்டை மீட்டெடுத்தல்’ சொல்லாடல்களுக்கூடாக மதச் சாயத்தைப் பூசி பேரரசுக் கட்டமைப்பு நலன்களை முன்னெடுத்தல் இலகுவான உத்தியாகப் பயன்படுத்தப்படுகின்றது; சிறிலங்காவில் புத்தர் வாக்களித்த தேசத்தை மீட்டெடுத்தல், பலஸ்தீனத்தில் யாவே வாக்களித்த தேசத்தை மீட்டெடுத்தல். வாக்களிக்கப்பட்ட தேசத்தை மீட்டெடுத்தல் சொல்லாடல் 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் சிறிலங்காவிலும் பலஸ்தீனத்திலும் காலனித்துவத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட காலனித்துவ உத்தி, காலனித்துவ மேலாண்மையைத் தக்கவைப்பதற்காகச் செயற்படுகின்றது.

நிலம் என்ற கருத்தியல் பூகோள வெளியை மட்டும் குறிப்பிடவில்லை. ஏகாதிபத்தியப் பேரரசுக் கட்டமைப்புக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலமானது புவிசார் அரசியலில் மிக முக்கியமானது. வடக்கு – கிழக்கின், பலஸ்தீனத்தின் கேந்திர முக்கியத்துவம், புவிசார் அரசியலில் மிகக் கணிசமான செல்வாக்கைச் செலுத்துகின்றது. இங்கு நிலம் என்று வெறும் நிலத்தை மட்டும் குறிப்பிடவில்லை; கடல் வெளியையும் சேர்த்தே குறிப்பிடுகின்றேன். பலஸ்தீனம், மத்திய கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும்; தெற்காசியாவில் / ஆசியாவில், வடக்கு – கிழக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கின்றது; திருகோணமலைத் துறைமுகம் உள்ளடங்கலாக.

தமிழினப் படுகொலையிலும், பலஸ்தீனப் படுகொலையிலும் இனப் படுகொலை ஒரு வரலாற்றுச் செயன்முறையாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. சிறிலங்காவில் 1815 கண்டிச் சாசனத்திலிருந்தும்; பலஸ்தீனப் படுகொலை, நக்பா 1948 இல் இருந்தும், இனப் படுகொலை ஆரம்பமாகின்றது. இவ் இரு இனப் படுகொலைகளுக்கான உத்திகள் அரச இயந்திரத்தினூடாக நிறுவனமயப்படுத்தப்பட்டிருப்பதோடு, சாதாரண மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அசாதாரண இயங்குநெறி, மக்களுக்குச் சாதாரணமாகத் தென்படுகின்றது. இது ஒரு பண்பாடாகவே மாறிவிட்டுள்ளது எனக் கூறினால் மிகையாகாது என நினைக்கின்றேன்.

தமிழ்த் தேசிய நம்பிக்கையைச் சிதைத்தல்

ஆயர் இராயப்பு ஜோசப்பின் இனப் படுகொலைக்கான நீதிவேண்டிய கோரிக்கை 2009 இற்குப் பின்னரான அரசியல் வரலாற்றுச் சூழலில் மிக அவசியமானது. தமிழ்த் தேசிய நம்பிக்கை விழுமியங்களை சிதைப்பதற்கான முயற்சிகள், பல தசாப்தங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், 2009 இற்குப் பின்னர் அதை ஒரு உளவியற் போராகவே சிறிலங்கா அரசு மிக வினைத்திறனோடு முன்னெடுத்திருந்தது. மிக அண்மையில் யாழில் ஒரு பாடசாலையில் நடந்த விளையாட்டுப் போட்டியில் காட்சிப்படுத்தப்பட்ட பூ கார்த்திகைப் பூவா? காந்தள் பூவா? என்ற விடயம் அதற்குச் சிறந்த உதாரணமாகும். அது காந்தள் பூ என்றும், காவல்துறை குறிப்பிடும் கார்த்திகைப் பூவை தாம் வைக்கவில்லை என்றும் மாணவர்கள் கூறுவதும், அதை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் விசாரணையும் தமிழ்த் தேசிய நம்பிக்கையைச் சிதைத்தலின் மிக அண்மைய உதாரணமாகும். 

போர் வலயத்திற்குள் அகப்பட்ட மக்களுக்கு வெளியேறுவதற்கான அல்லது தப்பிப்பதற்கான தெரிவைக் கொடுக்காது ஓரங்கட்டுதல் என்பது, அடக்கப்பட்ட மக்களுடைய விடுதலைக்கான போரின் நம்பிக்கையைச் சிதைத்தல் ஆகும். அடக்கப்பட்ட மக்களுக்காக உருவான / உருவாக்கப்பட்ட விடுதலைப் போராளிகளின் இயலாத்தன்மையில் மூலதனமிட்டு, விடுதலை வீரர்களை தங்கள் சொந்த மக்களையே காப்பாற்ற முடியாதவர்களாய், உணவு கொடுக்க முடியாதவர்களாய், மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாய், ஒட்டு மொத்தத்தில் அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாய் காட்டுவதன் மூலம், விடுதலை வேண்டிப் போராடுபவர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிக்கலுக்குட்படுத்துவது என்பது அவ் நம்பிக்கையைக் கட்டுடைப்பதாகும். 

மக்கள் விடுதலைக்காகப் போராடுகின்ற கூட்டு நம்பிக்கையை உடைப்பது, நம்பிக்கைக் கட்டுடைப்பில் மிக மோசமான பாதிப்பை கொண்டுவரக் கூடியதாகும். அடக்குமுறைக்கு உட்பட்ட சமூகம், அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்கு கூட்டு நம்பிக்கை அவசியமாகின்றது. அந்தக் கூட்டு நம்பிக்கையே அவர்களின் போராட்ட இயங்குதளத்தை தக்க வைத்துக் கொள்ளும். கூட்டு நம்பிக்கையில் இருந்து தான், கூட்டுப் பிரதிநிதித்துவப்படுத்தல் உருவாகின்றது. கூட்டு பிரதிநிதித்துவப்படுத்தலில் கூட்டு முகவராண்மை (collective agency) தங்கியிருக்கின்றது. கூட்டு முகவராண்மையை அடக்குமுறைத் தளத்திலிருந்து வெளியகற்றல் பேரரசுக் கட்டமைப்புக்கு இன்றியமையாதது. அடக்குமுறைக்கு எதிராய் போராடும் மக்களிடமிருந்து கூட்டு விடுதலை முகவராண்மையை இல்லாது ஒழித்தல் மூலம் தமிழினத்திற்கான விடுதலை கொடுப்பவர்களாக, தெற்கிலிருந்தும், வேறு நாடுகளிலிருந்தும் வெள்ளை மீட்பர்களை இறக்குமதி செய்தல் நடைபெறுகிறது. இதனூடாக விடுதலை மையப்புள்ளி களத்திலிருந்து அகற்றப்படுகிறது. 

பிரதிநிதித்துவப்படுத்தல்; பின் காலனித்துவ, பெண்ணியற் கற்கைத் திறனாய்வுகளில் மிக முக்கியமான கருத்தியலாகக் கொள்ளப்படுகின்றது. ஒரு சமூகத்தின் வலுவாக்கற் பயணத்தில் அடக்குமுறைக்கு உட்பட்ட சமூகத்தின் முகவராண்மைத் தன்மையை அகற்றுதல் – புலிக்குப் பல்லைப் பிடுங்குவதற்கு ஒப்பானது. முகவராண்மைத் தன்மை தான் பிரதிநிதித்துவப்படுத்தலை விடுதலை மையத்தை நோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கும். இது கட்டுடைக்கப்படும் போது, பிரதிநிதித்துவப்படுத்தலை அடக்குமுறைக்கு உட்பட்ட மக்கள் சார்பாக, அடக்குமுறைக்குட்பட்ட மக்கள் தவிர்த்து ஏனையோர் செய்ய முற்படுதல் நிகழ்கின்றது. இது இயல்பாக உருவாவதல்ல. மையம் உடைக்கப்படுவதன் மூலம், அதிகாரத்தைக் கையில் கொண்டுள்ளோரிடம் பிரதிநித்துவக் கட்டமைப்பு ஒப்படைக்கப்பட்டு, அவ் அதிகாரம் தான் உண்மை என நினைப்பதை பொது வெளியில் கட்டமைத்து, அரசியல் நுகர்வு செய்யப்படுகின்றது. அதிகாரம் கட்டமைக்கும் அரசியல் உண்மையில் மற்றமைகளின் சொல்லாடல்களுக்கான வெளி இல்லாமல் போகின்றது. மற்றமைகளின் விவரணம் என்பது மாற்று விவரணம்; அது அதிகாரம் கட்டமைக்கும் உண்மையைச் சிக்கலுக்குட்படுத்துகின்றது. 

பூக்கோ, உண்மைக் கட்டமைப்பு, அதிகார வரம்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது என குறிப்பிடுகின்றார். மேற்கூறப்பட்ட இரண்டுமே, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது. மற்றமைகளின் கதைகள் எப்போதுமே அதிகாரத்தையும் அதிகாரம் கட்டமைக்கும் உண்மையையும் சவாலுக்கு உட்படுத்தும் போது அதிகாரத்தின் வலுச் சமநிலை கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது. இவ்வாறான ஒரு கொதிநிலை நிச்சயமற்ற தன்மையைக் கட்டமைத்துக் கொண்டே இருப்பதால், அச்சம் உருவாகுகின்றது. அதிகாரம் தனது ஐயுறவிலா உண்மைக்குள் இருந்தே நிச்சயமற்ற தன்மையை அரசியல் நுகர்விற்காக பரப்புகின்றது. ஆனால் மற்றமைகள் கட்டமைக்கும் உண்மை, அதிகாரத்தின் ஐயுறவில்லாத உண்மையைக் கட்டவிழ்க்கின்றது. 

தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கை விழுமியங்கள், அதிகாரம் கட்டமைக்க முயலும் ஐயயுறவில்லா உண்மையின் நிச்சயத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்திக் கொண்டே இருக்கப் போகின்றது. ஏனெனில் அது மற்றமைகள் தங்கள் அடக்குமுறைக்கு உட்பட்ட அனுபவத்தால் கட்டமைத்த உண்மை. இதனால் தான் தமிழினப் படுகொலை என்பது எப்போதுமே அதிகாரம் கட்டமைக்க முயலும் உண்மையைச் சிக்கலுக்குட்படுத்தும். ஆயர் இராஜப்பு ஜோசப்பின் தமிழினப் படுகொலைக் கோரிக்கையின் தீர்க்கதரிசனப் பார்வை, சாட்சியங்களின் விவரணங்களிலிருந்து உண்மையைக் கட்டமைத்தலை மையமாகக் கொண்டது. மற்றமைகளின் உண்மை, முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்ட இனப் படுகொலையிலிருந்து உயிர் பிழைத்த சாட்சியங்களிலிருந்து கட்டமைக்கப்பட்ட உண்மை; பொய்மையைத் தூங்கவிடாது நீதியைத் தட்டி எழுப்பிக் கொண்டே இருக்கப்போவது. 

தமிழினப் படுகொலைக் கோரிக்கை ஊடாகத்தான் தேசக் கோரிக்கையையும், தமிழ்த் தேசிய நம்பிக்கையின் விழுமியங்களையும் மீட்டெடுக்க முடியும் என்பது ஆயர் இராஜப்பு ஜோசப்பின் நம்பிக்கையாக இருந்தது. ஈழத் தமிழர்கள் ஒரு தேசத்திற்குரியவர்கள் என்பதை, தமிழினப் படுகொலைக் கோரிக்கை ஊடான நீதிப் பயணத்தில்தான் நிறுவ முடியும் என நம்பினார். அந்த நம்பிக்கை தமிழ்த் தேசிய நம்பிக்கையிலிருந்து எழுகின்றது.

தமிழினப் படுகொலையின் இயக்கிகள், தமிழ்த் தேசியத்தின் மீதான நம்பிக்கையை இல்லாது ஒழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். அந்த உளவியல் போர் – ஈழத் தமிழினம் எதிர்கொள்வது மட்டுமல்ல – விடுதலைக் கிளர்ச்சியை அடக்குவதற்கான ஓர் ‘counter insurgency’  உத்தியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.  

தமிழினப் படுகொலை ஆய்வு மையத்தின் அவசியம்

தமிழினப் படுகொலையும், பலஸ்தீனப் படுகொலையும், இனப் படுகொலைக் கற்கை திறனாய்வு வெளியில் ஆய்வுப் பரப்பை திறந்துவிட்டுள்ளது. இனப் படுகொலைகளில் பொதுத் தன்மை இருந்தாலும் ஒவ்வொரு இனப் படுகொலையும் தனித்துவமானது. அந்தத் தனித்துவத்தை ஆய்வுகளுக்கு ஊடாக வெளிக் கொணர முடியும் என நம்பிக்கை கொண்டால், தமிழினப் படுகொலை ஆய்வு மையத்தின் அவசியம் வரலாற்றுத் தேவையாகின்றது. 

முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்ட பேரவலம் இனப் படுகொலையா இல்லையா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இனப் படுகொலைச் சாசனத்தின் வரைவுகளை சட்டரீதியாக அணுகுவோர் இந்த விவாதத்தின் கொதி நிலையை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துள் இருக்கின்றனர். காரணம் இனப் படுகொலை என்பது சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டால் தமிழினத்தின் தேசக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாகிவிடும். அதுவே சுய நிர்ணய உரிமைக்கும் வழி வகுத்துவிடும். இனப் படுகொலை உள்நோக்கம் கொண்ட அரச கொள்கையோடு இன்னொரு இனம் – சமூகம் சேர்ந்திருக்க முடியாது. தமிழினப் படுகொலைக்கான தனித்தன்மையை ஆய்வு செய்ய ஓரளவிற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், தற்போது பலஸ்தீனத்திற்கு திரட்டப்படுகின்ற அளவிற்கு முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இனப் படுகொலையின் ஒரு பரிமாணமாக சட்டரீதியாக அணுகுதல் காணப்பட்டாலும், அதற்கு பல்வேறு பரிமாணங்களும் உள்ளன.

மிக அண்மையில் எடுக்கப்பட்ட முயற்சிகளில் தமிழினப் படுகொலைக்கு உடந்தையானவர்களாக ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா உட்பட்ட பல்வேறு நாடுகளின் பட்டியல் இனங் காணப்பட்டது. பொறுப்புக்கூறல் பொறிமுறையில் இவர்களுக்கான தண்டனை என்ன என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதைவிட இனப் படுகொலையின்  சூத்திரதாரியாக அடையாளம் காணப்படும் காலனித்துவத்தில் பங்கேற்றமை தொடர்பாக அவர்களுக்குரிய தண்டனை போன்றன இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. தமிழினப் படுகொலையில் மதத்தின் வகிபாகம் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் தெரிகின்றன. இராணுவமயப்படுத்தப்பட்ட பௌத்தம் பற்றிய அல்லது மதத்திற்கும் வன்முறைக்கும் இடையிலான தொடர்பு பற்றி ஆய்வுகள் வெளியாகி உள்ளன. ஆனால் தமிழினப் படுகொலைக்கும் பௌத்த மதத்திற்குமான தொடர்புகள் பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடங்கவில்லை. 

தற்போதைய இனப் படுகொலை ஆய்வுப் பரப்பில் இனப் படுகொலைச் சாசனத்தின் இருண்ட பக்கங்களும் அம்பலப்படுத்தப்படுகின்றது. குறிப்பாகச் சர்வதேச சட்டம் எவ்வாறு இனவாதத்தை அடிப்படையாக கொண்டதோடு வெள்ளை மேலாண்மையை தக்கவைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது என்பதும் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது. இனப் படுகொலைக்கு பல்வேறு அணுகுமுறைகள் உண்டு. உதாரணமாக சமூகவியல், மானுடவியல், உளவியல்; இன்னும் பல. இவை இன்னும் ஆய்வு செய்யப்படாமலேயே உள்ளன. இவற்றை விட இனப் படுகொலையோடு தொடர்புடைய ஏனைய குற்றங்களும் இனங் காணப்பட்டுள்ளன. அவையும் தமிழ் ஆய்வுப் பரப்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வெளியாகவே உள்ளது. உதாரணத்திற்கு மிக அண்மைக் காலமாகவே பேசு பொருளாகி உள்ள அரசியல் இனப் படுகொலை (Political Genocide), அரசியல் படுகொலை, பண்பாட்டுப் படுகொலை, நினைவுத்திறப் படுகொலை, கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலை என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.

ஒரு சமூகத்தின் இருப்பு என்பது நினைவுத்திறத்தை தக்கவைப்பதில் தங்கியுள்ளது. அதே நேரத்தில் தேவை, நோக்கம் கருதிய நினைவுத்திற மீள் வாசிப்பு தென்னிலங்கையில் அடிக்கடி நிகழ்கின்றது. உதாரணமாக தென்னிலங்கையில் “அபாயகரமான நினைவுத்திறம்” அடிக்கடி மீள் வாசிக்கப்படுகிறது. வரலாற்றில் தமிழ்நாட்டிலிருந்து வந்த படையெடுப்பை மேற்கோள்காட்டி தொடர்ந்தும் ஈழத் தமிழர்களை சிங்கள – பௌத்த மக்களின் எதிரியாகத் தக்கவைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. ஈழத் தமிழினம் அடக்குமுறைக்கு எதிராக வெவ்வேறு வடிவங்களில் போராட்டத்தை முன்னெடுத்தது தொடர்பான நினைவுகள் எல்லாமே திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. தமிழின நினைவுத் திறத்தை ஆய்வு செய்வோரும் கூட பெரும்பாலும் விடுதலை மைய அணுகுமுறையை தவிர்த்த, தாராளவாத மையத்திலிருந்தே அணுக முற்படுகின்றனர். மேற்குலகிலிருந்து படையெடுக்கும் ஆய்வாளர்களுக்கென்று தனி அரசியல் நிகழ்ச்சித்திட்டம் உண்டு என்பது வெள்ளிடைமலை.

ஈழத் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பில் இதுவரையும், எனக்குத் தெரிந்து, எந்த ஆய்வுமே முன்னெடுக்கப்படவில்லை. பொருளாதாரக் குற்றங்கள் தமிழினப் படுகொலை சார்ந்து விவரணம் பெறவில்லை. அதே போல் மரபுரிமை சார் பக்கங்களும் இன்னும் புரட்டப்படாமலேயே உள்ளது. அதைவிட தமிழினப் படுகொலைச் சாட்சியங்களின் நேரடி அனுபவங்கள் எவையுமே தமிழினத்திடம் இல்லை. அவை பெரும்பாலுமே தமிழர் அல்லாத தனியார் அரச சார்பற்ற நிறுவனங்களிடமே உள்ளன. அவையே அதற்கான ஏகபோக உரிமையையும் வைத்துக்கொள்கிறது. 

நில அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், பொருளாதாரச் சுமையால் திருமணம் ஆகாமல் இருப்போர், அதனால் ஏற்படுத்தப்பட்ட தலைமுறையின்மை, நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்புணர்வு, தமிழ்ப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, இராணுவமயமாக்கம், அதன் விளைவுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் போன்றன தமிழினப் படுகொலை தொடர்பிலும், கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலை தொடர்பிலும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இவற்றிற்கான முயற்சி, கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் என நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. போதைவஸ்து பாவனையின் அதிகரிப்புக்கும், வன்முறைக்கும், யுக்திய நடவடிக்கைக்கும், யுக்திய நடவடிக்கையால் சிறையில் தள்ளப்படும் ஏராளமான தமிழ் இளையோருக்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு. இனிதொரு தலைமுறை விடுதலை பற்றிய நம்பிக்கையை கொண்டிருக்கக்கூடாது என்பதற்காக இவை உருவாக்கப்படுகின்றது என்பதன் உள்நோக்கம் கவனிக்கப்பட வேண்டும்.

ஆய்வுகளால் எல்லாவற்றிற்கான தீர்வைத் தர முடியாவிட்டாலும், உண்மை நோக்கிய தேடலை உருவாக்கி, நம்பிக்கையை உருவாக்க முடியும். தமிழ்த் தேசிய விடுதலை மீதான நம்பிக்கையைத் தக்க வைப்பதன் மூலம் தான் விடுதலைப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடியும்.


ஒலிவடிவில் கேட்க

6461 பார்வைகள்

About the Author

எழில் ராஜன் ராஜேந்திரம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஆய்வாளரான அருட்தந்தை எழில் அவர்கள், தன்னுடைய முதுகலைமாணிப் பட்டப்படிப்பை லண்டன் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் நிறைவு செய்துள்ளார். இவர், தமிழின விடுதலை சார்ந்த அநுபவங்களை உள்ளடக்கிய 'உள்மை' என்ற கவிதைத் தொகுப்பை 2006 ஆம் ஆண்டிலும், 2009 இற்குப் பின்னரான தமிழ்த் தேசிய வெளி, தமிழ்த் தேசிய அரசியற் கருத்தியல் சார்ந்த பத்திகளின் தொகுப்பை 'பின்முள்ளிவாய்க்கால்' என்ற பெயரில் 2023 ஆம் ஆண்டிலும் வெளியிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்
  • April 2024 (2)
  • March 2024 (1)
  • November 2023 (5)
  • October 2023 (4)
  • September 2023 (3)
  • July 2023 (3)
  • June 2023 (1)
  • May 2023 (4)
  • April 2023 (2)
  • March 2023 (2)
  • February 2023 (1)
  • January 2023 (1)