Arts
20 நிமிட வாசிப்பு

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் : 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகள் – பகுதி 1

September 5, 2023 | Ezhuna

ஆங்கில மூலம் : பேராசிரியர். சி. அரசரத்தினம்

அறிமுகம்

பேராசிரியர். சி. அரசரத்தினம் அவர்கள் ‘வட இலங்கைத் தமிழர் பொருளாதாரத்தின் அடிப்படைகள்’ எனும் நூலை எழுதினார். இச் சிறுநூல் 1982 ஆம் ஆண்டில் ‘தந்தை செல்வா நினைவு’ இரு நாள் நிகழ்வரங்கில் இவர் நிகழ்த்திய பேருரைகளின் தொகுப்பாகும். முதல் நாள் விரிவுரையில் 17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் வட இலங்கைத் தமிழர் பொருளாதாரத்தின் வளர்ச்சி நிலையை விரிவாக எடுத்துக் கூறினார். இதன் மொழிபெயர்ப்பு எழுநாவில் முன்னர் பிரசுரமாகியது. இம்முறை இரண்டாவது நாள் விரிவுரையாக அமைந்த பிரித்தானியர் ஆட்சிக் காலம் 19 ஆம் 20 ஆம்  நூற்றாண்டுகளில் வட இலங்கைத் தமிழர் பொருளாதாரம் – ஏற்பட்ட வளர்ச்சியைக் கூறும் பகுதியினை தருகிறோம். இரண்டாவது நாள் விரிவுரையின் தொடக்கத்தில் பேராசிரியர் முதலாவது விரிவுரையில் தான் கூறியவற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணத் தீபகற்பகத்தில் பொருளாதாரத்தின் பலம் – பலவீனம் எனும் இரு விடயங்களையும் சுருக்கமாகக் கூறியிருந்தார். இதனை அடிக்குறிப்பாகத் தந்திருக்கிறோம்.

arasarathinm

அதிக வருவாய் ஈட்டித்தந்த யாழ் தீபகற்பம்

18 ஆம் நூற்றாண்டில் இலங்கைத் தீவின் பிற பகுதிகளில் மக்களின் வாழ்க்கை நிலைமை மோசமடைந்தமைக்குச் சான்றுகள் பல உள்ளன. ஆயினும் யாழ்ப்பாணத் தீபகற்பம் ஒப்பீட்டளவில் உறுதியுடையதாய் இருந்தது. ஹோபார்ட் பிரபு (Lond Hobart) தனது குறிப்பில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

” யாழ்ப்பாணப் பட்டினத்தின் வருவாய் பற்றி நுணுக்கமாகப் பரிசீலித்தல் பயனுடையது. டச்சுக் கம்பனியின் உத்தியோகத்தர்கள் இலங்கையின் பிற பகுதிகளை விட இங்கேயே அதிகளவு வருவாயை ஈட்டினர்; செல்வத்தை விரைந்து அவர்கள் திரட்டினர். இது பிரசித்தமான உண்மை. “

டச்சுக்காரரிடமிருந்து நிர்வாகத்தைப் பொறுப்பேற்றுக் கொண்ட ஆங்கிலேய அரசாங்கமும் வருவாயை உச்ச அளவில் யாழ்ப்பாணத்திலிருந்து திரட்டிக் கொள்வதிலேயே குறியாக இருந்தது என்பது வெளிப்படை.

சனத்தொகை வளர்ச்சி

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தின் சனத்தொகை வளர்ச்சியில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. இப்பகுதியின் பொருளாதாரத்தின் இயல்புகளை நன்கு புரிந்துகொள்வதற்கு அதன் சனத்தொகையினை பற்றி நுனித்து ஆராய்தல் பயன் தருவது. 1827 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பட்டணத்தின் சனத்தொகை 123188 எனக் கணக்கிடப்பட்டிருந்தது. இது குறைத்துக் கணிப்பிடப்பட்ட தொகை எனக் கருத வேண்டியுள்ளது. 1827 இற்கு முந்திய கணிப்பீடுகளும் அதற்குப் பிந்திய ஆண்டுகளின் கணிப்பீடுகளும் இம் முடிவை அடைவதற்குச் சான்றுகளாக உள்ளன. 1871 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் பின், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பீடு நடத்தப்பட்ட காரணத்தால் அவ்வாண்டுக்குப் பிந்திய காலத்தின் சனத்தொகை வளர்ச்சிப் போக்கினை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. முதற் தடவையாக நன்கு திட்டமிட்ட முறையில் 1871 இல் நடத்தப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண மாவட்டத்தின் சனத்தொகை 276063 ஆகக் காணப்பட்டது. இவ்வாண்டில் இலங்கையின் மொத்த சனத்தொகை 2400380 ஆகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் சனத்தொகை அடர்த்தி சதுரமைல் ஒன்றிற்கு 200 ஆகவிருந்தது. யாழ்ப்பாணத் தீபகற்பத்துடன் பூநகரி, துணுக்காய் ஆகிய வெளியே உள்ள பகுதிகளையும் சேர்த்து இச்சனத்தொகை அடர்த்தி வீதம் கணிப்பிடப்பட்டதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தீபகற்பகத்திற்கு வெளியே இருந்த பகுதிகளில் சனத்தொகை அடர்த்தி குறைந்ததாக சதுரமைல் ஒன்றிற்குப் 15 பேர் ஆகவிருந்தது. இப்பகுதியைத் தவிர்த்துவிட்டு யாழ்ப்பாணத் தீபகற்பத்தைத் தனித்த பிராந்தியமாகக் கொண்டால் 1871 ஆம் ஆண்டில் சதுரமைல் ஒன்றிற்கு 700 பேர் வாழ்ந்தனர் என்ற உண்மை வெளிப்படும். பயிரிடப்பட்ட நிலத்தின் விகிதமாகக் கூறின் அன்று யாழப்பாணத்தில் ஒரு சதுரமைல் நிலப்பரப்பில் 1616 பேர் சீவித்தனர். இது முழு இலங்கையிலும் ஆகக்கூடிய அடர்த்தி கொண்ட பகுதியாக யாழ்ப்பாணம் விளங்கியது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

1881 ஆம் ஆண்டில் அடுத்த தடவை சனத்தொகை மதிப்பீட்டை நடத்தியபோது 295583 ஆக யாழ்ப்பாணத்தின் சனத்தொகை உயர்ந்து காணப்பட்டது. முன்னரை விட 19520 ஆல் சனத்தொகை அதிகரித்திருந்தது. இது 7.9% அதிகரிப்பு ஆகும். இலங்கையின் மொத்த சனத்தொகை இப்பத்தாண்டு காலத்தில் 15% அதிகரித்தது. யாழ்ப்பாணத்தோடு ஒப்பிடும் பொழுது முழு இலங்கையினதும் சனத்தொகை வளர்ச்சி கூடிய வீதத்தில் இருந்தமைக்குரிய பிரதான காரணம் இக் காலத்தில் இந்தியாவில் இருந்து குடிவரவு ஏற்பட்டமையே ஆகும். ஆயின் யாழ்ப்பாணம் இந்தியர் குடிவரவால் பாதிக்கப்படாத பகுதியாக இருந்தது. அடுத்த பத்தாண்டு காலத்தில் (1881-1891) சனத்தொகை வளர்ச்சி வேகம் முன்னரைவிடக் குறைவாக இருந்தது. 1881 இல் இருந்ததை விட 1891 இல் 13701 ஆல் சனத்தொகை அதிகரித்திருந்தது. முன்னைய 7.9% அதிகரிப்புடன் ஒப்பிட இது குறைந்ததாகவும் 5.1% ஆகவும் இருந்தது. முழு இலங்கையின் சனத்தொகை அதிகரிப்பின் வீதமும் 1881-1891 காலத்தில் முந்திய பத்தாண்டைவிடக் குறைவாக இருந்தது. முன்னர் 15% ஆக இருந்த வீதாசாரம் இக் காலத்தில் 9% ஆக வீழ்ச்சியுற்றது. அடுத்த பத்தாண்டுகளில் (1891-1901) யாழ்ப்பாணத்தின் சனத்தொகை 21567 ஆல் கூடியது. இது 7.7% அதிகரிப்பாகும். இக் காலத்தில் முழு இலங்கையின் சனத்தொகை 18.6% ஆல் அதிகரித்தது. ஒப்பீட்டளவில் உள்ள வேற்றுமைக்குக் காரணம் தென்னிலங்கைக்கு இந்தியாவில் இருந்து பெருந்தொகையில் மக்களின் இடப்பெயர்வு நிகழ்ந்தமையேயாகும். அடுத்த பத்தாண்டுக் காலமான 1901-1911 காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தின் சனத்தொகை 25861 ஆல் கூடியது. இது 8.58% அதிகரிப்பாகும். இக்காலப்பகுதியில் முழு இலங்கையினதும் அதிகரிப்பு 15.2% ஆக இருந்தது.

பத்தாண்டுக்கொருமுறை சனத்தொகை மதிப்பீடு தொடங்கப்பட்டபின் 1901-1911 காலத்தில் ஏற்பட்ட 8.5% அதிகரிப்பு யாழ்ப்பாண சனத்தொகை வளர்ச்சியின் உச்சமாக அமைந்தது. முழு இலங்கையினதும் வளர்ச்சி வீதம் இப்பத்தாண்டுகளில் 15.2% ஆக இருந்தது. மேற்குறிப்பிட்டவாறு வளர்ச்சி வீதம் உயர்ந்து சென்றபின் 1921 இன் சனத்தொகை மதிப்பீட்டின் போது 1.1% ஆக சடுதியாக வீழ்ச்சியுற்றது. 1911-1921 பத்தாண்டு காலத்தில் சனத்தொகை 3829 ஆல் மட்டுமே அதிகரித்தது. முழு இலங்கையினதும் வளர்ச்சி வீதம் இக்காலத்தில் 9.6% ஆக இருந்தது.’ 1931 இல் அடுத்த சனத்தொகை மதிப்பீடு செய்யப்பட்டபோது வளர்ச்சி வீதம் முன்னைய நிலைக்கு உயர்ந்தது. 24884 ஆல் அதிகரித்த சனத் தொகை 7.5% உயர்ச்சியை எட்டியது. முழு இலங்கையின் சனத்தொகை அதிகரிப்பு 18% ஆக இருந்தது. இரண்டாம் உலகயுத்தம் நடைபெற்ற காலமானதால் 1941 இல் சனத்தொகை மதிப்பீடு நடத்தப்படவில்லை. யுத்தத்தின் பின்னர் 1946 இல் மதிப்பீடு நடத்தப்பட்டபோது யாழ்ப்பாண மாவட்டத்தின் சனத்தொகை 67052 ஆல் அதிகரித்திருந்ததைக் காணமுடிந்தது. இது முன்னரை விட 19.5% அதிகரிப்பாக இருந்தது. 15 ஆண்டு காலத்தில் ஆண்டு ஒன்றுக்குச் சராசரி 1.3 வீதத்தினால் யாழ்ப்பாணத்தின் சனத்தொகை அதிகரித்தது. முழு இலங்கையினதும் சனத்தொகை இக்காலத்தில் (1931-1946) 25.4% ஆக அதிகரித்தது. யாழ்ப்பாணம் முழு இலங்கையின் அதிகரிப்பு வீதத்திற்குக் கிட்டியதாக இக் காலத்தில் உயர்ச்சி பெற்றதையும் அவதானிக்கலாம். 1953 ஆம் ஆண்டில் அடுத்த சனத்தொகை மதிப்பீடு நடத்தப்பட்டது. அப்போது சனத்தொகை 76,052 ஆல் உயர்ந்திருந்தது. இது 17.5% அதிகரிப்பாகும். ஆண்டுச் சராசரி வளர்ச்சி வீதம் 2.2% ஆகும். இதுவே யாழ்ப்பாண மாவட்டத்தின் சனத்தொகை வரலாற்றில் அதிஉயர் வளர்ச்சி வீதமாக அமைந்தது.

முழு இலங்கையின் சனத்தொகை வளர்ச்சியையும், யாழ்ப்பாணத்தின் சனத்தொகையையும் ஒப்பிடும்போது யாழ்ப்பாணம் சனத்தொகை வளர்ச்சியில் பின்னடைந்திருந்தமைக்கு பல காரணங்கள் இருந்தன. அவற்றுள் முக்கியமானதான குடிவரவு பற்றியும் அது யாழ்ப்பாணத்திலும் கூடிய வேகத்தில் இலங்கையின் பிறபகுதிகளில் சனத்தொகை வளர்ச்சி பெற்றதையும் முன்னர் குறிப்பிட்டேன். வடபகுதியின் பொருளாதாரம். காலநிலை என்பனவும் அங்கு தோன்றிய சுகாதாரப் பிரச்சினையும் சனத் தொகை வளர்ச்சியை நிர்ணயிப்பதாய் இருந்தமையைக் குறிப்பிடுதல் வேண்டும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து யாழ்ப்பாணத்தை விட்டு பிற இடங்களுக்கும் நாடுகளுக்கும் மக்கள் குடிபெயரவும் தொடங்கினர். 1880 களில் சனத்தொகை வளர்ச்சி வீதம் குறைந்தமைக்குச் சில காரணங்கள் இருந்தன. அடுத்தடுத்து பயிர்ச் செய்கையில் நட்டம் ஏற்பட்டமையும், மழையின்மையும், மக்களை நோய்கள் வாட்டியமையும் சனத்தொகை வீழ்ச்சிக்குக் காரணங்களாயின. 1911-1921 காலத்தில் நிலைமை மேலும் மோசமாகியதை அக்காலத்தில் சனத்தொகையின் சராசரி வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு 0.1% ஆக இருந்ததைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். தொற்றுநோய்கள், பயிரழிவுகள், என்பனவும் உலக யுத்தத்தின் காரணமாக உணவுப் பற்றாக்குறையும் தட்டுப்பாடும் இக்காலத்தில் ஏற்பட்டன. இக்காலத்திலேயே தமிழர்கள் இலங்கையின் தென்பகுதிக்கும் பிரித்தானியர் ஆட்சியின் கீழ் இருந்த மலாயாவிற்கும் தொடுகடல்பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்தனர்.

20 ஆம் நூற்றாண்டில் 1946 வரை இந்நிலை தொடர்ந்தது. அவ்வாண்டில் தான் முதன்முதலாக யாழ்மாவட்டத்தை விட்டு வெளிச்செல்கையை விட, கூடிய உள்வரவு ஏற்பட்டது. உலக யுத்தம் காரணமாக மக்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மீண்டும் வந்தமையே இதற்கான காரணமாகும். 1953 சனத்தொகை மதிப்பீடு யாழ்ப்பாணத்திற்குள் உள்வருவோரை விட அதனைவிட்டு வெளிச் செல்வோர் தொகை மீண்டும் அதிகரிப்பதை எடுத்துக் காட்டுகிறது. 1930க்குப் பின்னர் யாழ்ப்பாணத்தின் சனத்தொகை வளர்ச்சி வீதம் உயர்ந்து சென்றமைக்கு கிராமங்களிலும் சுற்றுச் சூழலிலும் சுகாதார நிலை மேம்பட்டமை ஒரு காரணமாகும். அத்தோடு யாழ்ப்பாணத்திற்கு வெளியே சென்று தொழில்புரிந்தவர்கள் பணத்தை அனுப்பியதால் குடா நாட்டுக்குள் பணப்புழக்கம் அதிகரித்து வாழ்க்கை நிலை மேம்பட்டமையும் இன்னோர் காரணமாகும். 1946 வரையான சனத்தொகைப் பெருக்கத்தினை குடாநாட்டின் பழைய குடியிருப்புப் பகுதிகள் உள்ளீர்த்துக் கொண்டன. வடமராட்சி, வலிகாமம் மேற்கு, வலிகாமம் வடக்கு போன்ற பழைய குடியிருப்புப் பகுதிகளில் சன அடர்த்தி சதுர மைலுக்கு 1000-2000 வரை உயர்ந்தது. யாழ்ப்பாண நகரமும் அதனை அண்டிய பகுதிகளிலும் வளவாய்ப்புக்கள் குறைந்த பகுதிகளில் மக்கள் குடியேறினர். 1946 இல் யாழ்ப்பாண நகரப் பகுதியில் சதுரமைல் ஒன்றிற்கு 4000 ஆகச் சன அடர்த்தி உயர்ந்திருந்தது. வலிகாமம் கிழக்கு 500-1000 வரையான சன அடர்த்தியையும், தென் மராட்சி 400-500 வரையான சன அடர்த்தியையும் கொண்டிருந்தன. பூநகரிப் பகுதியில் சதுரமைலுக்கான அடர்த்தி 50 ஆக இருந்தது. ஆயினும் 1946 ஆம் ஆண்டின் பின்னர் பளை, பச்சிலைப்பள்ளி ஆகிய பகுதிகளின் சனத்தொகை குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்தது. மக்களை மீள்குடியமர்த்துதல், உவர் நிலத்தை மீட்டெடுத்தல், குடியேற்றத் திட்டங்களைச் செயற்படுத்துதல் ஆகியன இப் பகுதிகளில் சனத்தொகை அதிகரிப்புக்கு உதவின. ஆயினும் பொருளாதார மந்தம், பருவப் பெயர்ச்சி மழை பொய்த்துப்போய் பயிர்ச்செய்கை பாழாதல், நோய்கள், தொற்று நோய்கள் பரவுதல், போசாக்கின்மை ஆகியவற்றினால் அதிகளவு பாதிப்புக்குள்ளான பகுதிகளாக இவ்வெல்லை நிலப் பகுதிகள் (பச்சிலைப்பள்ளி, கரைச்சி) விளங்கின. இதனால் இப்பகுதிகளை விட்டு மக்கள் வெளியேறிச் செல்வதும் இக்காலத்தில் இடம்பெற்றது. இதே போன்ற நிலை தீவுப்பகுதிகளிலும் காணப்பட்டது.

பிரித்தானியர் ஆட்சியில் வரி அறிவீடு

பிரித்தானியர் ஆட்சியின் முதற் பத்தாண்டு காலத்தில் டச்சு ஆட்சியின் போது கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளும் பொருளாதார இலக்குகளும் தொடர்ந்தன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்தும், அப்பகுதி மக்களிடமிருந்தும் வரிகளை அறவிட்டு வருவாயை உச்ச அளவில் திரட்டுவதே ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் புதுப்புது வரிகள் விதிக்கப்பட்டு வருவாய் அதிகரிக்கப்பட்டது. முன்னர் இருந்து வந்த வர்த்தகத் தடைகள் சில நீக்கப்பட்டதும், சனத்தொகையின் அதிகரிப்பும் பொருளாதார நடவடிக்கைகளுக்குத் தூண்டுதலாக அமைந்தன. வரி அறவிடுதல் மூலம் கிடைக்கும் வருமானம் பிரித்தானிய ஆட்சியின் தொடக்க ஆண்டுகளில் உயர்ந்து சென்றமை பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சிக்குச் சான்றாகும். 1796/97 ஆம் ஆண்டில் முந்திய ஆண்டை விட ரூ.225000 வரி கூடுதலாக அறவிடப்பட்டது. இது டச்சு ஆட்சியின் போது அறவிட்ட வரியையும் விடக் கூடியதாகவும் இருந்ததைக் காணலாம்.” பிரித்தானியர் இறக்குமதிகள் மீதும் ஏற்றுமதிகள் மீதும் முன்னர் விதிக்கப்பட்ட வரிகள் பலவற்றை நீக்கினர். ஆனால் புகையிலை மீதான வரியை பிரித்தானியர் நீக்கவில்லை. பிறவரிகள் நீக்கப்பட்டதால் வர்த்தம் ஓரளவு விருத்தியுற்றது. ஆயினும் வேறு பல காரணிகளால் வர்த்தக விருத்தி தடைப்பட்டே இருந்தது.

பிரித்தானியர் படிப்படியாகப் பல மாற்றங்களைப் புகுத்தினர். நிர்வாகக் கட்டமைப்பு, வரியறவிடும் முறைகள், பொருளாதாரக் கொள்கைகள் என்பனவற்றில் மாற்றங்கள் புகுத்தப்பட்டன. வரியறவிடுதலை அதிகாரிகள் மூலம் அறவிடும் முறையை சீரமைத்தனர். இவ்வரிச் சீர்திருத்தங்கள் கோல்புறூக் கமரென் சிபாரிசுகளின் படி முழுமை பெற்றன. மக்களிடம் அறவிட்ட வரியில் ஒரு பகுதியைத் தாம் பிடித்துக் கொண்டு அரசுக்குரிய பங்கைச் செலுத்தும் முறை (Tax Farming) ஒழிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு நேரடியாக வரியைச் செலுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது. இதன் பயனாக வரியை அறவிடுவதற்கான நிர்வாக ஒழுங்கு முறை புகுத்தப்பட்டது. அரச உத்தியோகத்தர் பலர் இதற்கென நியமிக்கப்பட்டனர். நிர்வாக இயந்திரம் ஒன்று செயற்படத் தொடங்கியது. செல்வாக்கு மிக்க குடும்பங்களில் இருந்து தோன்றியவர்கள் முன்னர் வரி அறவிடுவோராக இருந்தனர். புதிய முறையின்படி அவர்கள் ஐரோப்பிய சிவில் சேவை உத்தியோகத்தர்களின் கீழ் பணி புரியும் குடியியல் சேவகர்களாகவும் வரியை அறவிடும் உத்தியோகத்தர்களாகவும் மாறினர். முன்னர் வரி அறவிடும் வேலையில் செட்டிகளும், முஸ்லிம்களும் ஈடுபட்டனர். இந்திய மூலத்தை உடைய இப்பிரிவினர் நீக்கப்பட்டு யாழ்ப்பாணத்தின் நில உடைமையாளர்களின் குடும்பத்தவர்களிடம் வரி அறவிடும் அதிகாரம் கையளிக்கப்பட்டது.

விவசாய உற்பத்தி

மரபு வழிப்பட்ட நில உடைமை முறையிலும் பயிர்ச்செய்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. சனத்தொகையில் விரைவான அதிகரிப்பும், அதனால் ஏற்பட்ட நிலப் பற்றாக்குறையும் இம் மாற்றங்களுக்கு முக்கிய தூண்டுதலாக இருந்தன. 19 ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியில் பச்சிலைப்பள்ளி, தென்மராட்சி ஆகிய பகுதிகளில் நிலத்தின் வளம் குறைந்து சென்றதால், அப்பகுதிகளின் விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டது. இப் பகுயின் விவசாயிகள் விளிம்பு நிலை உற்பத்தியாளராக இருந்தனர். மக்கள் இப்பகுதிகளில் செறிவற்ற முறையில் பரவியிருந்தனர். அவர்களைப் போஷிக்கக் கூடிய சக்தியற்றனவாக இப்பகுதிகள் விளங்கின. இதனால் அவர்கள் குடாநாட்டின் பழமையான குடியிருப்புப் பகுதிகளை நோக்கி இடம்பெயரவும் தொடங்கினர். இதனால் பழைய குடியிருப்புப் பகுதிகளின் சனத்தொகை அடர்த்தி உயர்ச்சியடைந்தது. முன்னர் யாழ்ப்பாணத்தில் சில கைத்தொழில்கள் வளர்ச்சியுற்றிருந்தன. அக்கைத்தொழில்களும் நலிவடைந்து போனதால் மக்கள் மீண்டும் நிலத்தில் இருந்து கிடைக்கும் விளைவை நம்பியே சீவிக்கும் நிலை ஏற்பட்டது.

19 ஆம் நூற்றாண்டின் முதலிரு பத்தாண்டுகள் வரை (1820 வரை) நன்நிலையில் இருந்த கைத்தொழில்களில் நெசவுத் தொழில் ஒன்றாகும். நெசவுத் தொழிலைச் செய்து சில ஆயிரம் மக்கள் வரை சீவியம் நடத்தி வந்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலத்தின் மீதான சனத்தொகையின் சுமையும் அழுத்தமும் கூடியது. தனியாளுக்கான நிலத்தின் அளவு சுருங்கிக் கொண்டு சென்றது. நெற்செய்கையைக் கைவிட்டு இலாபம் தரும் பணப் பயிர்களைச் செய்வதற்கான ஊக்கமும் உண்டானது. இவ்வாறு பணப் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் ஆர்வம் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டது. இந்து சமுத்திரப்பகுதியின் வர்த்தகத்துடன் யாழ்ப்பாணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இணைக்கப்பட்டிருந்தது. இக்காரணத்தால் அப்பகுதியில் பணப் பயிர்ச் செய்கை வளர்ச்சியுறல் ஆயிற்று. 19 ஆம் நூற்றாண்டில் பணப் பயிர்களில் புகையிலை முதன்மை பெற்றது. அதன் பயிரிடும் நிலப் பரப்பும் அதிகரித்திருந்தது. மரக்கறிகளுக்கும், பழங்களுக்கும் கேள்வி அதிகரித்தமையால் அவற்றைச் சந்தைக்காக மக்கள் உற்பத்தி செய்தனர். இந்தியாவில் இருந்தும் பர்மாவில் இருந்தும் மலிவு விலையில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதால் நெற் செய்கைக்கான தூண்டுதல் இருக்கவில்லை. பிரித்தானிய ஆட்சியாளர்கள் உணவுப் பொருள் விலையைக் குறைந்த அளவில் வைத்திருப்பதன் மூலம் உழைப்பாளர்களின் கூலி உயர்வடையாதிருப்பதை உறுதி செய்தனர். இது பிரித்தானிய முதலீடுகளும் தொழில் முயற்சிகளும் வளர்ச்சி பெற உதவும் எனவும் கருதினர்.

நெல் உற்பத்தியும் புகையிலை  உற்பத்தியும்

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களில் 1100000 முதல் 1200000 வரையான புசல் அரிசி நுகரப்பட்டது எனப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதனைவிட 275,000 புசல் (28 கொத்து = 1 புசல்) உலர் தானியங்களும் நுகர்வுத் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டன. இவ்விதம் நுகர்வு செய்யப்பட்ட தானிய உணவில் 650000 புசல் அரிசி உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய முடிந்தது. ஆயினும் இத்தொகை உற்பத்தியை அறுவடை உயர்வாக இருந்த ஆண்டுகளில்தான் பெறமுடிந்தது. பெரும்பாலும் அறுவடை பொய்த்துப் போவதே வழமையாகும். 1893 ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி 155000 புசல்களாக வீழ்ச்சியுற்றது. ஆகையால் சராசரி ஆண்டுக்கு 400000 புசல் நெல் உற்பத்தியாயிற்று என்று கொள்வதே பொருத்தமானது. 275000 புசல் உலர் தானியங்களும் நுகரப்பட்டன. ஆகையால் அறுவடை திருப்தியாக இருந்த ஆண்டுகளில் 600000 புசல் அரிசியும் அறுவடை பொய்த்துப் போன ஆண்டுகளில் 900000 புசல் அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டது. வடமாகாணத்தின் அரிசித் தேவையின் 50% முதல் 80% வரை இறக்குமதி மூலமே பூர்த்திசெய்யப் பட்டதென்பதை இது எடுத்துக் காட்டுகிறது. அரிசியின் நுகர்வுக்காக இறக்குமதியை நம்பியிருக்கும் நிலை 20 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. சனத்தொகைப் பெருக்கம் நிலத்தின் மீது சுமையை அதிகரித்தது. நெல்லை விடுத்து வேறு பல பயிர்களையும் பயிரிடும் பல்வேறாக்கமும் அதிகரித்தது. வடமாகாணத்தின் அரிசியின் நுகர்வுத் தேவை 1500000 புசல்களாக அதிகரித்தது. அதேவேளை அரிசியின் உள்ளூர் உற்பத்தி 250000 புசல்களாக வீழ்ச்சியுற்றது. இதன் விளைவாக அரிசியின் இறக்குமதி முன்னைய அளவை விட 50% அதிகரித்தது. 1200000 புசல்களாக இது உயர்ந்தது. உள்ளூரில் அரிசி உற்பத்தி வீழ்ச்சியுற்றதற்கும் பல காரணங்கள் உள்ளன. நெல் உற்பத்திக்காக ஒதுக்கப்படும் நிலத்தின் சராசரி அளவு குறைந்து சென்றது. நெற்செய்கை நிலங்கள் சனத்தொகைப் பெருக்கம் காரணமாகக் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டமை ஒரு காரணமாகும். பிற பயிர்களைச் செய்வதற்கு நெற் செய்கைக் காணிகளை உபயோகித்தலும் அதிகரித்தது. 1880 களிலும் 1990 களிலும் புகையிலைச் செய்கை மிக வேகமாகப் பரவியதைக் காணலாம். நிலத்தின் மீது சனத்தொகையின் பளு அதிகரித்ததால் நிலங்கள் துண்டாடப்படும் போக்கும் ஏற்பட்டது. பயிரிடும் காணியின் அளவு சுருங்கியதால் விவசாயிகளால் தமது தொழிலை வருவாய் தரும் தொழிலாகச் செய்ய முடியவில்லை.

1911-1921 கால இடைவெளியில் நெற்செய்கை காணிகளின் அளவு சுருங்கிச் செல்லும் போக்கை மேற்படி ஆண்டுகளின் சனத்தொகை மதிப்பீட்டுப் புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. 1911 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழர்களில் சனத்தொகையின் 3.75 வீதத்தினர் நெற்காணி உடைமையாளர்களாய் இருந்தனர். இத்தொகை 1921 இல் சனத்தொகையின் 1.02% ஆகக் குறைந்தது. நிலமற்ற நெல் உற்பத்தியாளர்கள் தொகை 1911 இல் 2.1% ஆக இருந்தது. 1921 இல் இத்தொகை 4.57% ஆக அதிகரித்தது. விவசாயக் கூலிகள் 1911 இல் 1.41% ஆக இருந்தனர். இவர்கள் 1921 இல் 0.73% ஆகக் குறைந்து காணப்பட்டனர். விவசாயக் கூலிகளின் எண்ணிக்கையின் வீழ்ச்சியும் நெற்செய்கையின் வீழ்ச்சியின் குறியீடாகும். இக்காலப் பகுதியில் புகையிலைச் செய்கை ஓரளவு அதிகரித்ததையும் புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

1911 இல் 1.17% ஆகவிருந்த புகையிலைச் செய்கையாளர்கள் 1921 இல் சனத்தொகையின் 1.35% ஆக அதிகரித்திருந்தனர். புகையிலைச் செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட விவசாயக்கூலிகள் 1911 இல் 3.46% ஆகும். இது 1921 இல் 4.82% ஆக உயர்ந்தது. கூலியாளர்களில் ‘பொது’ என வகைப்படுத்தப்பட்டோரின் தொகையும் இக்காலத்தில் அதிகரித்தது. 1911 இல் 3.16% ஆக இருந்த இவ்வகையினர் 1921இல் 5.06% ஆக அதிகரித்திருந்தனர். இவையாவும் யாழ்ப்பாணக் குடா நாட்டில் நெற் செய்கையில் இருந்து பிற விவசாய தொழில் நடவடிக்கைகளுக்கு மக்கள் மாறிக் கொண்டிருந்ததையும் அதன் விளைவால் பணப்புழக்கம் அதிகரித்ததையும், மக்களின் நுகர்வுப் பழக்கங்களிலும் போக்கிலும் மாற்றங்கள் ஏற்பட்டதையும் எடுத்துக் காட்டுகின்றன.

அடிக்குறிப்பு

யாழ்ப்பாணத் தீபகற்பகத்தின் பொருளாதார அடிப்படையின் இயல்புகள் 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே உருவாக்கம் பெற்றதென்பது முதலாவது விரிவுரையில் விளக்கிக் கூறப்பட்டது. யாழ்ப்பாணத் தீபகற்பகத்தின் பொருளாதாரத்தின் பலம் – பலவீனம் என்ற இரு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. அதன் பலங்கள் :

  1. சிற்றுடமை விவசாய முறை நன்கு வளர்ச்சியுற்றிருந்தது.
  2. அது பணப் பயிர்களை சந்தைக்காக உற்பத்தி செய்வதாகவும், பன்முகப்பட்டதாகவும் மாறிக் கொண்டிருந்தது.
  3. தொழிற்திறன் உள்ளவர்களும், தொழிற்திறனற்றவர்களுமான உழைப்பாளர் படை உருவாகியது. உழைப்பாளர்களுக்கு கவர்ச்சி தரும் பணக் கூலி முறை வளர்ச்சி அடைந்திருந்தது.
  4. தீபகற்பகத்தின் சில துறைமுகங்களூடாக வர்த்தக நடவடிக்கைகள் வளர்ச்சி பெற்றிருந்தன.
  5. பல்வேறு சமூகக் குழுக்களிலும் இருந்து தோன்றிய முயற்சியாளர் குழுமங்கள் வளர்ச்சி பெற்றிருந்தன. போட்டியும், ஒத்துழைப்பும் உடையனவாய் இம் முயற்சியாளர் குழுமங்கள் செயற்பட்டன.

இப்பொருளாதாரத்தின் பலவீனங்கள் பின்வருவன :

  1. வர்த்தக வாதக் கொள்கையைக் கடைப்பிடித்த காலனிய அரசாங்கம் சுதந்திர வர்த்தகத்தின் மீது கட்டுப்பாடுகளை விதித்தது.
  2. நெல் விவசாயத்துறை வளர்ச்சியின்றி தொய்வுற்ற நிலையில் இருந்தது.
  3. தீபகற்பகத்தின் மக்கள் உணவுத் தேவைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட அரசியில் தங்கியிருந்தனர்.
  4. பணப் பயிர்களின் ஏற்றுமதிச் சந்தையில் தங்கியிருந்தமையும், நிலத்தின் அளவு மட்டுப்படுத்தபபட்டதாய் உள்ள யாழ்ப்பாணத்தில் சனத்தொகை பெருகியதும் பொருளாதாரத்தின் முக்கிய பலவீனமாக இருந்தது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7280 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்
  • May 2024 (1)
  • April 2024 (2)
  • March 2024 (1)
  • November 2023 (5)
  • October 2023 (4)
  • September 2023 (3)
  • July 2023 (3)
  • June 2023 (1)
  • May 2023 (4)
  • April 2023 (2)
  • March 2023 (2)
  • February 2023 (1)
  • January 2023 (1)