Arts
17 நிமிட வாசிப்பு

நன்மையின் நம்பிக்கையுரு கிங்கிலியர்

May 9, 2024 | Ezhuna

பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது.

அறிமுகம்

நாட்டுப்புறவியலின் இயங்கு தளங்களில் ஒன்றாக மந்திரம் காணப்படுகின்றது. இறையியல், சமயவியல் பற்றிய கருத்தாக்கத்திற்கு சமமாகவும் சமாந்தரமாகவும் மந்திரம் முதன்மை பெறுகின்றது. ஆவியுலக நம்பிக்கை, முன்னோர் வழிபாடு போன்றன தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை மந்திரம், மனிதர்களிடம் – அந்நம்பிக்கைகளை உடைய இனக் குழுக்களிடம் செல்வாக்குற்றுள்ளது. ‘இயற்கையை, அதன் அதீத ஆற்றல்களைப் புரிந்து கொள்ள முடியாத ஆதிமனிதர்கள், அதன் மீதான திகைப்பு, பயம் என்பவற்றிலிருந்து விடுபட்டு அதனைக் கட்டுப்படுத்தவும் தனக்குத் தேவையான பயன்களைப் பெற்றுக் கொள்ளவும் உருவாக்கிய ஒன்றே மந்திரம்’ எனப்படுகின்றது. இது ஒலி ‘வழி’ நிகழ்த்தப்படுவது. கற்பனை ஒன்றைத் தோற்றுவிப்பதன் மூலம் உண்மையை – இயற்கையைக் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தின் வழி மந்திரம் உருவாக்கம் பெற்றது. அறிவும் திறனும் அதன் வழி தொழில்நுட்பமும் மேலோங்காத காலத்தில் உருவான ‘கற்பனையான தொழில்நுட்பம் (Thomson, Geroge, 1980:4) என மந்திரம் விளங்கப்படுகிறது. இது சமயத்துக்கும் முன் உருப் பெற்றதாகும்.

ஒரு விருப்ப நிறைவேற்றுக் கற்பனையான மந்திரம், மனிதர் தம் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான வழிபாடுகளையும் வேண்டுதல்களையும் அடிப்படையாகக் கொண்ட சமயத்துக்கு முன்னோடியாகிறது. அதேவேளை மந்திரம், இயற்கை நிகழ்ச்சிகளை உற்று நோக்கியதன் விளைவு என்றும் கூறப்படுகின்றது. மந்திரமானது விருப்பு, சொல், செயல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. விருப்பின் அடிப்படையிலேயே மந்திரம் (சொல்) ஓதப்பட்டு செயல்நிலைப் (சடங்கு) படுத்தப்படுகின்றது. மந்திரங்கள் ஒத்தது ஒத்ததை உருவாக்குவது; ஒரு தடவை தொடர்பு கொண்டது எப்போதும் தொடர்பைக் கொண்டிருக்கும் எனக் (frazer 1976:52) கருதப்படுகின்றது. முதல்வகை மந்திரக் கருத்தியல் ஒத்த மந்திரம், தொத்து மந்திரம் என வகைப்படுத்தப்படுகிறது. திருமண வீட்டில் விதவையை முன்னிறுத்தாமை, ஒட்டி இருக்கும் இரட்டை வாழைப்பழங்களை உண்பவள் இரணைப் பிள்ளைகளைப் பெறுவாள் போன்றன இதற்கு உதாரணங்கள். கன்று ஈன்ற பசு மாட்டின் இளங்கொடியை பால் மரத்தில் (ஆல், கிளுவை, அத்தி..) கட்டுவதனால் பசு அதீதமாகப் பால் சுரக்கும் என்பதை தொத்து மந்திரத்திற்கு எடுத்துக்காட்டாக உரைப்பர்.

இம்மந்திரங்கள், மந்திரங்களின் வழி நிகழ்த்தப்படும் சடங்குகள் என்பவற்றின் நோக்கை அடிப்படையாகக் கொண்டு அவற்றைத் தூய மந்திரம் ( நன்மை பயப்பது), தீய மந்திரம் (தீமை விளைப்பது) என இரண்டாகப் பகுப்பர். தீய மந்திரங்களுக்கு உதாரணமாக பில்லி, சூனியம், வசியம் முதலானவற்றைக் கூறலாம். தூய மந்திரங்களோ மருத்துவம், யுத்தம், துன்ப நீக்கம் முதலியவற்றுக்கு உதவுவன. இச்சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் தெய்வங்களை, நன்மை செய்யும் தெய்வங்கள் அல்லது தீமையிலிருந்து காக்கும் தெய்வங்கள், தீமைக்கான தெய்வங்கள், நன்மைக்கும் தீமைக்குமாகப் பயன்படுத்தப்படும் தெய்வங்கள் என மூன்று வகையினதாக எடுத்தாளலாம். பில்லி, சூனியம், வசியம் போன்றன தீய மந்திரச் சடங்குகளிலிருந்து மக்களைக் காக்கும் தெய்வமாகவே கிங்கிலியர் உருநிலைப்படுத்தப்படுகிறார்.

கிங்கிலியர்

கிங்கிலியர் பற்றிய ஆய்வுகள் தமிழ்ச் சூழலில் பெரிதும் முன்னெடுக்கப்படவில்லை. இத் தெய்வம் பற்றி பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை மட்டுமே நான்கு வரிகளாலான பந்தியில் (1996:56) குறிப்பிட்டுள்ளார். மாந்திரீகத் தொடர்புபட்ட தெய்வமாக இருத்தல் இதற்குக் காரணமாக இருக்கவும் கூடும். கிங்கிலியர் பற்றிய கதையாடல்கள் சில உண்டு. தங்களுக்கு நன்மை செய்யும் மூதாதையாகக் கிங்கிலி கருதப்படுகிறார்.

கருட புராணம் உள்ளிட்டவை, மரணத்துக்கு முன்பும் பின்புமாக உயிர்களை அச்சுறுத்தவும், பாதுகாத்து அன்பினைக் காட்டவும் இறந்த பின் அழைத்துச் செல்லவும் என மூன்று நபர்கள் வருகிறார்கள்; அவர்கள் யமதூதர்கள்; அவர்களே ‘கிங்கிரர்கள்’ என்கின்றன. கிங்கிரர் என்ற சொல்லே கிங்கிலி – கிங்கிலியர் என மருவியிருக்க வேண்டும்.

ஆனால் யமகிங்கிரர்கள் பாவஞ் செய்பவர்களையே அழைத்துச் செல்வர் என்றும் நன்மை புரிந்தவர்களை இறைத்தூதர்கள் – தேவர்களே அழைத்துச் செல்வர் என்ற மாற்றுக் கருத்தும் உண்டு.

‘குங்குலியம்’ துர்மணத்தை நீக்கி நறுமணத்தை தருவது போல தீமைகளை நீக்கி நன்மை பயப்பவர் குங்கிலியர். அச்சொல்லே மருவி கிங்கிலியர் என்பதாயிற்று என்பர்.

ஈழத்தில் கிங்கிலியர் வழிபாட்டிடங்கள்

ஈழத்தில் தமிழர் வாழும் பாகங்களில் கிங்கிலியர் வழிபாடு காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் சங்கானை, திருநெல்வேலி, வசாவிளான், இருபாலை உள்ளிட்ட பிரதேசங்களிலும் கிளிநொச்சியில் முரசுமோட்டையிலும் இவ்வழிபாடு இருப்பதனை கள ஆய்வினூடாக எம்மால் உறுதிப்படுத்த முடிகிறது. பலாலி விமான நிலைய எல்லையில் இருந்த கிங்கிலியரையே தொண்ணூறு இடம்பெயர்வின் பின் வசாவிளானில் வைத்துக் வணங்குவதாக அவர்கள் கூறுகிறார்கள். யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் தனிக் காணிகளிலும், வீட்டு வளவினுள்ளும் சிறு கோயில் அமைத்தோ வெளியில் வைத்தோ வழிபடும் மரபே காணப்படுகின்றது. ஆனால் மட்டக்களப்பில் கிராமியக் கோயில்களில் பரிவாரமாக வைத்து வழிபடும் மரபும் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது. இதற்கு உதாரணமாக எருவில் கண்ணகையம்மன் ஆலயத்தில் கிங்கிலியர் பரிவாரத் தெய்வமாக இருப்பதைக் குறிப்பிட முடியும். திருகோணமலை ஆலங்கேணியில் தனிக்கோயில் உண்டு.

veruvil

பில்லி சூனியமும் கிங்கிலியர் பற்றிய கதைகளும்

மாந்திரிகம் என்பது ஒரு மனிதன் தன் சகமனிதனை தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஆட்டுவிப்பதாகவோ அழிப்பதாகவோதான் கருதப்படுகிறது. பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதெல்லாம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் உத்திகள். காலம்காலமாய் மாந்திரிகம் என்பது அமானுசம் நிறைந்த ஒரு கலையாகவே கருதப்படுகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும், நம்பிக்கை என்கிற பெயரில்; பொருளையும் நிம்மதியையும் அழிக்கிறது. மந்திர சக்தி அல்லது சித்தி பெற்ற ஒருவர் ஒரு சாதாரண மனிதனை உடல் ரீதியிலும் மன ரீதியிலும் செயல் ரீதியிலும் ஈர்த்து கட்டுப்படுத்துவதே பில்லி ஆகும். அதாவது பில்லி மந்திரத்தால் ஒருவனை மனநோயாளியாக ஆக்கிவிட முடியும். நல்ல ஆரோக்கியமுள்ளவரை நோயாளியாக படுக்கையில் தள்ளிவிடவும் முடியும் எனப்படுகிறது.

சூன்யம் என்றால் வெறுமை என்பது பொருள். சூன்ய மந்திரத்தால் எவரை வேண்டுமானாலும் அழித்து விடலாம், கைகால்களை முடக்கி விடலாம், சம்மந்தப்பட்டவருக்குத் தெரியாமலே வயிற்றில் வசிய மூலிகைகளைச் செலுத்திவிடலாம், கருவில் உள்ள குழந்தையைக் கூட கொன்றுவிடலாம் எனப்படுகிறது. மந்திரசக்தியால் மந்திரவாதியின் கட்டுபாட்டுக்குள் இருக்கின்ற சில தீய சக்திகளை எதிரிகளின் மீது ஏவிவிட்டு அவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவதே ஏவல் மந்திரத்தின் முக்கிய பண்பாகும். இந்த மந்திரத்தின் மூலம் ஒருவரை முற்றிலுமாக கைவசப்படுத்தி அவரை ஏவலாளாக ஆக்கிவிடமுடியும்.

தனது சொந்த விருப்பத்தின்படி செயற்பட்டு, இலாபத்தையும் வெற்றிகளையும் அநுபவித்து வரும் ஒருவனை மந்திரங்களால் தடுத்து அவன் மனதை பல வழிகளில் திசை திருப்பிவிட்டு கீழ் நிலைக்குத் தள்ளுவதே செய்வினையின் முக்கிய செயலாகும். மந்திர வழியிலோ மருத்து வழியிலோ ஒரு பொருளை ஆடையில், உடம்பில் தடவி விட்டு அல்லது உண்ணக் கொடுத்து அவர்களை வசியப்படுத்துவதே வைப்பு என்பதன் அர்த்தமாகும். இவ்வாறான விடயங்களை எழுதுவது மூடநம்பிக்கைகளை பரப்புவதாகக கருதப்பட்டாலும் இவற்றோடு ஒட்டி நிகழ்த்தப்பட்ட சடங்குகள், வழிபடப்பட்ட தெய்வங்கள் என்பன நாட்டார் வழிபாட்டில் முதன்மைப் பெறுவதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

sanganai

“ஆட்டின் பித்தெடுப்பேன் அடியடியாய் மண்ணெடுப்பேன்
கொண்டை மயிர் எடுப்பேன் – மச்சி உன்ன
கொண்டு வர என் காலடிக்கு”

“உள்ளான் குருவியின்ர உள்ளிருக்கும் பித்தெடுத்து
சேர்த்தி மருந்தரைத்து மச்சி உன்ன
சேர வைப்பேன் என் காலடிக்கு”

“கரையாக்கன் பூவாயின்றி கை வசமாய் கொண்டு வந்து
வைரவனை முன் நிறுத்தி உன்ன வரவழைத்தன் காலடிக்கு”

“போறாக வன்னியனார் பொத்துவிலப் பார்ப்பமெண்டு – என்ன
மருந்துகளை போட்டு மயக்குறாளோ தேவடியாள்”

(பாலசுந்தரம், இ.,1979:418-420)

எனும் நாட்டார் பாடல்வரிகளின் ஊடாக மட்டக்களப்புப் பிராந்திய மக்களின் மந்திரங்கள், சடங்குகள் தொடர்பான நம்பிக்கைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தீயமந்திரங்களின் வழி தமக்கு விருப்பமில்லாத, பகையான மனிதர்களை அவர்களது குடும்பங்களைத் துன்பப்படுத்தவும், சீரழிக்கவும் செய்யப்படுகின்ற பில்லி, சூனியம், செய்வினை போன்றன பெருந்துயரங்களை, தொடர் மரணங்களைத் தரவல்லன. இவை, குறித்த வீட்டில் இருந்து அல்லது காணியிலிருந்து எடுக்கப்பட்டதன் பின், கிங்கிலியரை சூலத்திலோ கல்லிலோ வாலாயம் பண்ணி காணியின் ஒரு சிறுபகுதியைப் புனிதமாக்கி அங்கு அத்தெய்வத்தை நிலைநிறுத்துவர். பிற்காலத்தில், இயந்திரத்தட்டில் ஆவாகனம் செய்து பூஜையறையில் வைத்து வழிபடும் முறையே முதன்மை பெற்று இன்றுவரை காணப்படுகின்றது. நம்பிக்கை தரும் நம்பிக்கையுருவாகக் கிங்கிலியர் நம்பப்படுகிறார். அவர் தீமையிலிருந்து காப்பவர். இது தொடர்பான கதைகளை களவாய்வின் போது கேட்க முடிந்தது.

கந்தையா பூரணம் என்பவர் வீட்டில், அவர்களுடைய உறவினரால் செய்வினை செய்யப்பட்டது என்றும், அதனால் ஐம்பத்தொரு நாட்களுக்குள் கந்தையாவும் அவருடைய இரு மகள்களும் மரணித்தனர் என்றும், அதன் பின் சாத்திரியார் வருகை தந்து தலைமயிர் உள்ளிட்ட பில்லி – சூனிய – செய்வினைப் பொருட்களை வீட்டு வாயிலிலிருந்து எடுத்தார் என்றும், வாயில்லா ஜீவன் ஒன்றின் இறப்போடு இவை வலுவிழக்கும் என்று கூறி வெள்ளை நிறக் கல் ஒன்றில் கிங்கிலியரை ஆவாகனம் செய்து படலை (gate) அருகே வைத்துவிட்டு விளக்கேற்றி வணங்குமாறு கூறினார் என்றும், அதன் பின்பு வீடு அமைதி கண்டது என்றும் அறிய முடிந்தது.

தன் கணவன் மரணத்துக்கு அருகிருப்பவர்கள் செய்த பில்லி, சூனியமே காரணம் என நம்பிய தங்கம்மா சாத்திரியின் உதவியோடு அதனைத் தேடி எடுத்ததாகவும் பின் கிங்கிலியரை வைத்து வழிபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

பில்லி, சூனியத்தால் வயல் விளைச்சலின்றி பாழடைகிறது என நம்பிய கிளிநொச்சி முரசுமோட்டை வயல்காரர் ஒருவர் தனது வயலின் நடுவே கிங்கிலியரை வைத்து வழிபட்டு வருகின்றார்.

இந்தக் கதைகள் பில்லி, சூனியம், வசியம் முதலான தீமைசார் நடத்தைகள் பற்றிய நம்பிக்கைகள் ஆழ இவர்களிடம் வேரூன்றி இருப்பதைக் காட்டுகிறது. அந்தத் தீமைகளை விலக்கவல்ல தெய்வமாக கிங்கிலியரை இவர்கள் முழுமையாக நம்புவதையும் அவதானிக்க முடிகிறது. மனித இனக்குழுவின் வரலாற்றுத் தொடக்க காலத்தில் இருந்து இன்று வரை, இவ்வாறான நம்பிக்கைகள் மக்களிடம் நிலவிவருகின்றன. இவை அறிவியலுக்கு ஒவ்வாதவை என அறிஞர்கள் வாதிடவும் எள்ளல் செய்யவும் கூடும். ஆயினும் நிதர்சனத்தில் மக்களிடையே இந்நம்பிக்கைகள் இன்றும் நிலவி வருகின்றன என்பதே உண்மை.

soolam

திருகோணமலை – ஆலங்கேணி, கிண்ணியா பகுதியில் கிங்கிலியருக்குக் கோயில் அமைத்த மார்க்கண்டு இராசமாணிக்கம் பன்னீர்செல்வம் அவர்கள், குளக்கோட்டன் கந்தளாய்க் குளத்தை கட்டியபோது அதற்கு காவல் தெய்வமாக கிங்கிலியரை ஸ்தாபித்தான் என்றும் தான் சிறு வயதில் மாடு மேய்க்கச் சென்றபோது அத்தெய்வம் தன்னில் ஏறியதாகவும் பின்பு தான் இந்த கோயிலை அமைத்ததாகவும் கூறுகிறார். அங்கு பில்லி, சூனியம் பற்றிய கருத்தாடல் இல்லை. மக்கள் இடர் களையும் தெய்வமாகவே கிங்கிலியர் கருதப்படுகிறார். பீடத்தில் ஒரு கல் வைத்து வழிபடப்படுகிறது. வடமராட்சியில் துரும்பர் குளத்தருகே கிங்கிலியர் வழிபாடு இருந்ததாகவும் அது துரும்பர் தெய்வம் எனக் கூறப்பட்டதாகவும் ஊரவர்கள் சிலர் அடையாளப்படுத்தினும், கிங்கிலியர் சாதியத்துக்கு அப்பாலான தீய மந்திரச் சடங்குகளால் பாதிக்கப்பட்ட மக்களின் தெய்வமாக இருப்பதையே காணமுடிகின்றது.

கிங்கிலியர் கல்லாலான தெய்வமாகக் காணப்பட்டாலும் சிற்சில இடங்களில் சூலத்திலும் வைத்து வழிபடப்படுகிறார். அவருக்கென ஒரு உருவம் எங்கும் கூறப்படவில்லை. ஆனால் சிற்சில கதைகள் கூறப்படுகின்றன.

தன்னுடைய அம்மம்மாவின் இளமைக் காலத்தில் அவர் தன் ஆச்சியுடன் (அம்மா) அதிகாலையில் தங்களது பனங்காணியில் பழம் பொறுக்கச் செல்வதாகவும் ஒரு நாள் முழு நிலவின் ஒளியினால் நேரம் தெரியாது மிக வேளைக்குச் சென்றதாகவும் அப்போது ஒரு நிழல் ஆச்சிக்குப் பின்சென்ற தனது அம்மம்மாவைக் கிளித்தட்டு மறிப்பது போல மறித்ததாகவும் அதனைக் கண்ட ஆச்சி அவரை ஏசிக் கூப்பிட்டதாகவும் அந்த நிழல் உடனே விலகி வழிவிட்டதாகவும் அதன் பின்பு இருவரும் கோயில் வாசலில் இருந்து விட்டு பின்பு விடியற்பொழுதில் பனம்பழம் பொறுக்கிச் சென்றதாகவும் கூறப்பட்டது (நேர்காணல் : திருமதி.சி. செல்வமனோகரி)

சாமப்பொழுதுகளில் வெள்ளை வேட்டி, நீண்ட சால்வை, தோளில் தொங்க வெண்மையான சுருள் முடியும் தாடியும் கையில் பிரம்பும் கொண்டு காற்சதங்கைச் சத்தம் கேட்க, வீதியால் காவலுக்கு கிங்கிலியர் நடந்து போவாராம் (நேர்காணல்: திருமதி.ச. இராஜேஸ்வரி)

யமதூதர்களான கிங்கிரர்களின் கருமைத் தோற்றத்துக்கு மாறாக வெண்மை இங்கு சுட்டப்படுவது கவனத்திற்குரியது. வெண்மை பொதுவில் தூய்மையின் – நல்லதன் குறியீடாகவே கருதப்படுகின்றது. இங்கு தோற்றப்பொலிவு சொல்லப்பட்டாலும் ‘உருவவியல்’ முன்னிறுத்தப்படவில்லை. அனைத்துத் தகவல் வழங்கிகளினாலும் கிங்கிலியர் அருவமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழிபாட்டு முறை

கிங்கிலியரை வீடுகளில் வைத்து ஆதரிப்பவர்கள் பொதுவில் பொங்கல் பொங்கி மடை பரவுகின்றனர். சில இடங்களில் கோழி, ஆடு பலியிடப்படுவதும் மச்சம் சமைத்து படைக்கப்படுவதாகவும் அறிய முடிகிறது. திருகோணமலை ஆலங்கேணி கிங்கிலியர் கோயிலில் வைகாசி அமாவாசை தோறும் மழை மடை பரவி வழிபடுவதோடு கருத்தக் கடா ஆடு பலியிடப்படுவதையும் அறிய முடிகின்றது. மந்திர சித்திக்காகவும் காரிய சித்திக்காகவும் அட்சரம் போட்டு கிங்கிலியரை அதிலே ஆவாகணம் செய்து அந்த இயந்திரத்தகட்டை வெற்றிலையிலே வைத்து இரு கைகளாலும் ஏந்தி சுடலையில் நின்றும் தமக்கு ஏதுவான இடங்களில் நின்றும் உருச் செபிப்பர் (கணபதிப்பிள்ளை, க., 1996:53). இதன் ஊடாக தமது எண்ணம் சித்திக்கும் என்பது அவரது நம்பிக்கை. இத்தெய்வம் தம்மை துயரங்களில் இருந்து காக்கும் என்ற நம்பிக்கையின் வழி நேர்த்திக்கடன் வைப்பதும் பொங்கல் இடுவதும் நடைபெற்று வருகின்றது.

சமகாலப் பயில்வு

இன்று பில்லி, சூனியம், வசியம் முதலான தீய மந்திரங்கள், சடங்குகள் பற்றிய நம்பிக்கைகள் வலுவிழந்து வருகின்றன. அவற்றை உரையாடுவதும் எழுதுவதும் அநாகரிகமானதாக கருதப்படுகின்றது. அது படிப்பறிவற்ற காட்டுமிராண்டிகளின் நம்பிக்கை என்று கருதப்படுகின்றது. அதற்குச் சமாந்தரமாக துன்புற்றவர்களிடம் இவை பற்றிய நம்பிக்கைகள் தொடர்கதைகளாக காணப்பட்டுவருகின்றன. இணையத்தில் கிங்கிலியர் என தட்டச்சு செய்யும் இடத்து கிங்கிலியர் மந்திரம் – இயந்திரம் பற்றிய குறிப்புகள், மந்திரங்கள், இயந்திரத் தகடுகள், அவற்றின் விலைகள், அசைவப் பலியுடன் படையல் எனும் பெறுபேறுகள் அதிகம் கிடைப்பதே இதற்கு உதாரணம். இவை நவீன சமய ‘வர்த்தக’ முறைகளாக, இந்நம்பிக்கையின் வீழாத் தொடர்ச்சியின் சான்றுகளாகக் காணப்படுகின்றன. ஆனால் கிங்கிலியர் வழிபாடு மிகவும் வலுவிழந்த நிலையிலேயே காணப்படுகின்றது. சாதாரண மக்களுக்கு கிங்கிலியர் பற்றித் தெரியாது இருக்கின்றமையை களவாய்வின் வழி அவதானிக்க முடிந்தது. இதற்கு மூன்று காரணங்களை பிரதானமானவையாகச் சுட்டலாம்.

  1. பில்லி, சூனியம் முதலான நம்பிக்கைகள் வலு இழந்து வருதல்.
  2. கிங்கிலியர், கிங்கிலிய வைரவராக – வைரவராக மேல்நிலை ஆக்கமும் உருமாற்றம் அல்லது உருமறைப்புச் செய்யப்படுகின்றமை.
  3. பொதுவாக கிராம வழிபாடுகள் கைவிடப்பட்டு வருகின்ற தன்மை.

இங்கு கூறப்பட்ட மூன்றாவது விடயம் பொதுவானது எனினும் முதல் இரண்டு விடயங்களும் கிங்கிலிய வழிபாட்டுக்கு மட்டுமே உரியவை.

இன்றைய சமூகத்தில் ஏற்பட்டு வரும் பகுத்தறிவு வாதம், சமய ஈடுபாடற்ற அல்லது சமயத்துக்கு நேரம் ஒதுக்க முடியாத பொருளாதார நோக்குடைய இயந்திர வாழ்வு, பழமையைக் கைவிடுதல், புதுமை நாட்டம், மதமாற்றம் முதலான பல காரணிகள் இதன் பின்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தன்னிலைப்பட்ட தெய்வத்தை சமஸ்கிருதமயமாதல் என்னும் பிராமண மயப்படுத்தும் மேல்நிலை ஆக்கச் செயல்முறை கிங்கிலி எனும் தெய்வத் தொன்மத்தை அழிப்பு நிலை செய்து வைரவராக உயர்நிலைப்படுத்துகின்றது. இதன் வழி கிங்கிலியர் மக்களின் நம்பிக்கைகளில் இருந்து காணாமல் போய்க் கொண்டிருக்கின்றார்.

முடிவுரை

kingiliyar to vairavar

மக்களின் காவல் தெய்வமாக வறுமை, துயர் என்பனவற்றில் இருந்து மட்டுமின்றி பிறரால் தம்மை, தமது குடும்பத்தை அழிவுக்கு உட்படுத்தும் நோக்கோடு செய்யப்பட்ட தீமைகளான பில்லி, சூனியம், வசியம் உள்ளிட்டவற்றைத் தடுத்து அழித்து காப்பாற்றும் நம்பிக்கை உருவானவர் கிங்கிலியர். அரூப தெய்வமாக, பேதமற மக்களால் பொதுநிலையில் வழிபடப்பட்ட தெய்வமே கிங்கிலியர். மக்களின் தெய்வமாய் நன்மையின் படிமமாய் எந்த உருவுமற்று கல்லிலும் சூலத்திலும் தனி வழிபாடுகளின் வழி வழிபடப்பட்ட தொன்மத் தெய்வம் கிங்கிலியர். இது சிறுகோயில், பரிவாரத் தெய்வம் என்ற நிலையில் இரண்டாம் கட்ட வளர்நிலையினைப் பெற்றது. ஆயினும் நம்பிக்கைகள், மந்திரங்கள், சடங்குகள் என்பனவற்றில் ஏற்பட்ட நம்பிக்கையீனம், பகுத்தறிவுச் சிந்தனை வளர்ச்சி இவ்வழிபாட்டில் கீழ்நிலையை ஏற்படுத்தின. ‘கிங்கிலியசுவாமி’ ‘கிங்கிலியத் தகடாக’ உருமாற்றம் பெற்றார். இன்று அவர் பூஜை அறைகளில் இயந்திரத் தகடாகவும் உடலில் அச்சரக்கூடுகளாகி அணிகலன்களாகவும் மாற்றம் பெற்று வர்த்தகப் பண்டமாக்கப்பட்டுள்ளார்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

3393 பார்வைகள்

About the Author

தி. செல்வமனோகரன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் சைவசித்தாந்த துறையின் முதுநிலை விரிவுரையாளராக தி. செல்வமனோகரன் திகழ்கிறார் . இந்திய மெய்யியல் கற்கை புலத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றுள்ளார். இந்துக்கற்கை புலம் சார்ந்து காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும், இலங்கையில் சைவத்தமிழ் பண்பாட்டு வளர்ச்சியில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, நாயன்மார் பாடல்கள், தமிழில் மெய்யியல் எனும் நூல்களை எழுதியுள்ளார். பெறுதற்கரிதான இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளார். 'சொற்களால் அமையுலகு' என்னும் இவரது நூல் கலை, இலக்கியம் சார்ந்த விமர்சன நூலாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (17)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)