Arts
10 நிமிட வாசிப்பு

இலங்கைத் தமிழ்த்தேசியவாதம்

June 15, 2023 | Ezhuna

பேரா. ஏ. ஜே. வில்சனின் நூல் பற்றிய அறிமுகம்

Wilson

“Sri Lankan Tamil Nationalism” என்னும் தலைப்பில் ஏ. ஜே. வில்சன் அவர்கள் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். அந்நூலின் முன்னுரையில் இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சியுற்ற வரலாற்றை எடுத்துக் கூறியுள்ளார். அவரது எடுத்துரைப்பு வெறும் தரவுகளின் தொகுப்பாகவும் விபரிப்பாகவும் அமையாமல்,  கோட்பாட்டு ஆய்வாக விளங்குகின்றது. பல எண்ணக்கருக்களை அறிமுகம் செய்யும் அவர் தமிழ்த் தேசியவாதம் பற்றிய பல தவறான கருத்துக்களை விமர்சனம் செய்யும் வகையில் வரலாற்றை விளக்கிச் செல்கின்றார். இந்தக்கட்டுரை அவரது நூலின் முன்னுரையை அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

தமிழர்கள் தனித்துவமான இனக்குழுமம்

இலங்கைத் தமிழர்கள் தனித்துவமான இனக்குழுமமாக (Ethnic group) நீண்டகாலம் இருந்து வந்தனர் என்ற கருத்தை வில்சன் அவர்கள் முன்னுரையின் தொடக்கத்திலேயே தெளிவாக எடுத்துக் கூறுகிறார். 19ஆம் நூற்றாண்டில் தேசியவாதம் தோற்றம் பெறுவதற்கு முன்னராகவே இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழர் தனித்துவமான இனக்குழுமமாக இருந்து வந்தனர் என்பதை எடுத்துக்கூறுவதன் மூலம் ’தேசியவாதம் திடீரென வானில் இருந்து குதித்த விடயம் அல்ல. அதற்கு இனக்குழுமம் என்ற பௌதிக அடிப்படை இருந்தது’ என்பதை அவர் எடுத்துக் காட்டுகிறார்.                                            

இவ்வாறு எடுத்துக் காட்டுவது “Ethnic Origins of Nationalism” தேசிய வாதத்தின் இனக்குழுமத் தோற்றமூலங்கள் என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அவர் எடுத்துக் காட்டும் சில வரலாற்று உண்மைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியன.

  • 1505இல் இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயரும்,  1660 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கேயரிடமிருந்து கரையோர மாகாணங்களை கைப்பற்றித் தமது ஆட்சியை நிறுவிய ஒல்லாந்தரும், தமிழர் வாழ்பகுதிகளான வடக்கு – கிழக்கு மாகாணங்களை சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இருந்து வேறுபட்ட நிர்வாக அலகாகவும் ஆட்சிப் பகுதியாகவும் நிர்வகித்தனர். 
  • பிரித்தானியர் 1815 இல் இலங்கை முழுவதையும் கைப்பற்றிய பின்னர் 1833 வரை வடக்கு – கிழக்கு மாகாணங்களைத் தனித்த அலகாகவே ஆட்சி செய்து வந்தனர். இவ்வாறாகத் தமிழர் இனக்குழுமம் வாழும் பகுதிகளின் தனித்துவம் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக (16ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை) பேணப்பட்டது.  
  • 1833இல் பிரித்தானியர் கொழும்பை மையமாகக் கொண்ட மத்தியப்படுத்தப்பட்ட (Centralized) நிர்வாகத்தை ஏற்படுத்தினர். ஆயினும் தமிழர் வாழ்பகுதிகளின் தனித்துவமும் தமிழர்களின் தனித்துவ அடையாளமும் இக்காலத்தில் பேணப்பட்டன. 1948 இல் சுதந்திரம் பெறும் காலம் வரை தனித்துவ அடையாளத் தொடர்ச்சி  இருந்தது. 

பிரித்தானியர்கள் ஆட்சியில் தமிழர்கள் 

தமிழர்கள் தாம் ஒரு தனித்த இனக்குழுமத்தினர் என்ற உணர்வுடையவர்களாக இலங்கையில் வாழ்ந்து வந்தனர். அவர்களின் இந்த உணர்வு காலனிய ஆட்சிக் காலத்தில் தேசிய உணர்வாகப் பரிணமித்தது. தமிழர்கள் தமது தனித்துவமான பண்பாட்டையும், தனித்துவமான நாகரிகத்தையும், மொழியையும் உடையவர்கள் என்ற உணர்வுடையவராக வாழ்ந்தனர். அவர்களது வாழ்விடங்கள் அடையாளம் காணக்கூடிய  எல்லைகளையுடைய பிராந்தியங்களாக (Territories) நீண்ட காலம் இருந்து வந்தன. பிரித்தானியர் ஆட்சியில் கைக்கொள்ளப்பட்ட அரசியல் நிர்வாக ஆட்சி முறைகள் தமிழர்களின் இத்தனித்தன்மையை (Separateness) ஏற்றுக் கொள்வதாகவே அமைந்தது.

இனவாரிப் பிரதிநிதித்துவம் (COMMUNAL REPRESENTATION)

பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கை அரசியலில் “இனவாரிப் பிரதிநிதித்துவம்” (Communal Representation) என்ற சொற்றொடர் 1833ஆம் ஆண்டில் அறிமுகமாயிற்று. கோல்புறூக் ஆணைக்குழுவின் சீர்திருத்தங்களின் போது புகுத்தப்பட்ட இந்தச் சொற்றொடர் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னர் “இனவாதம்” (Communalism) என்ற இழிவுப் பொருள் தரும் சொல்லாக மாற்றம் பெற்றது. “கொம்யூனிட்டி” என்ற ஆங்கிலச் சொல் “சமுதாயக் குழு” “சமுதாயம்” என்ற பொருள் உடையது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கையில் பின்வரும் சமுதாயங்கள் (Communities)பிரதான சமுதாயக் குழுக்களாக இருந்து வந்ததைக் கண்டனர்.

  1. கரைநாட்டுச் சிங்களவர்
  2. மலைநாட்டின் கண்டிச் சிங்களவர்
  3. இலங்கைத் தமிழர்
  4. முஸ்லிம்கள் (1889 இல் இந்தக் குழுவை பிரித்தானியர் தனிக் குழுவாக ஏற்றனர்) 
  5. பறங்கியர் – (இந்தச் சமுதாயக்குழு போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகிய இரு இனத்தவர்களும் உள்ளூர்வாசிகளோடு கலப்புற்றதனால் தோன்றிய இனக்குழுவினராவர்)

1833 இல் பிரித்தானியாவின் ஆளுநருக்கு ஆலோசனை கூறும் வகையில் அமைந்த சட்டசபை (Legislative Council) ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தச் சபைக்கு இலங்கையின் பிரதான சமுதாயங்களின் பிரதிநிதிகளை நியமனம் செய்யும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. நியமன உறுப்பினர்களைக் கொண்டதும், அதிகாரமற்றதுமான இந்தச் சட்டசபை சிங்களவர்களுக்கோ தமிழர்களுக்கோ எவ்வித ஆட்சி அதிகாரத்தையும் வழங்கவில்லை. இருப்பினும் இனவாரியாக இந்த நியமனங்களை பிரித்தானியர் செய்தனர். அதன் மூலம் பிரித்தாளும் சூழ்ச்சி (Divide and Rule) என்ற தந்திரம் தொடக்கம் முதல் செயற்பட்டது என்ற வாதம் இன்று வரை பலரால் முன்வைக்கப்படுகிறது. இந்தத் தவறான வாதம் காலப்போக்கில் தமிழர் என்ற “கொம்யூனிட்டி”யின் நலன்களைப் பற்றி பேசுவதே “இனவாதம்” (Communalism) என்று அடையாளப்படுத்தும் நிலையைத் தோற்றுவித்தது. இலங்கை அரசியல் சொல்லாடலில் “பிரித்தாளும் சூழ்ச்சி” “இனவாதம்” ஆகியன விபரீதமான பொருளையும் அர்த்தத்தையும் பெறலாயின.

பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம்

1833 தொடக்கம் இனவாரிப் பிரதிநித்துவமுறை  இருந்து வந்ததை மேலே குறிப்பிட்டோம். சட்டசபைக்கு வெவ்வேறு சமுதாயங்களின் பிரதிநிதிகளை ஆளுநரின் விருப்பப்படி நியமிக்கும் இந்த முறையை நீக்கிவிட்டு, தேர்தல் மூலம் பிரதேசவாரியாக பிரதிநிதிகளைத் தெரிந்து எடுத்தல் வேண்டும் என்ற கோரிக்கை 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முன்வைக்கப்பட்டது. பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் (Territorial Representation) என்னும் இந்தச் சொல்லாடல் 1908 ஆம் ஆண்டு தொடக்கம் சர்ச்சைக்குரிய விடயமாக அமைந்தது. இலங்கையின் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற மூன்று இனக் குழுக்களையும் சேர்ந்த, ஆங்கிலம் கற்ற படித்த வர்க்கத் தலைவர்கள் அரசியல் சீர்திருத்தம் வேண்டும் எனக் கூறியதோடு, இனவாரிப் பிரதிநிதித்துவ முறைக்குப் பதில் தேர்தல்மூலம் பிரதேசவாரியாக சட்டசபைக்கும் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரினர்.

சமநிலைப் பிரதிநிதித்துவம்

சமநிலைப் பிரதிநிதித்துவம் (Balanced Representation) என்ற கருத்தை 1931க்கு பிற்பட்ட காலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் முன்வைத்தனர். இவ்விரு சிறுபான்மை இனங்களினதும் தலைவர்கள் முன்னர் சிங்கள இனத்தின் தலைவர்களோடு ஒன்றுசேர்ந்து பிரதேசவாரிக் பிரதிநிதித்துவத்தைக் கோரினர் என்பதை மேலே குறிப்பிட்டோம். ஆயினும் 1931இல் சர்வசன வாக்குரிமை நடைமுறைக்கு வந்த பின்னர் பிரதேசவாரி முறையின் பாதகமான விளைவுகளை தமிழர்களும் முஸ்லிம்களும் உணர்ந்து கொண்டனர். இப்பாதகமான நிலைமையைச் சரி செய்து பிரதிநிதித்துவ முறையில் சமநிலைப்படுத்தல் தேவை எனக் கருதப்பட்டது. இதன் பயனாக இச்சிறுபான்மை இனங்களின் தலைவர்கள் சமநிலைப் பிரதிநிதித்துவம் என்ற கருத்தை முன்நிறுத்தினர். இதுவே   “50 க்கு 50” (Fifty – Fifty) என பொதுச் சொல்லாடலில் வழங்கப்படுவதாயிற்று. சட்டசபையின் 50 வீத ஆசனங்கள் இலங்கையின் அனைத்து சிறுபான்மையினருக்குமாக ஒதுக்கப்படவேண்டும் என்பதே இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையான உட்கருத்தாகும். சமநிலைப் பிரதிநிதித்துவம் என்ற கருத்தாக்கம் சிங்களப் பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்திற்கு எதிரான காப்பீடாக அமையும் என ஜீ. ஜீ. பொன்னம்பலம் கருதினார். “சமநிலைப் பிரதிநிதித்துவம்” என்ற கருத்தாக்கம், இலங்கை பல்லின இனக்குழுமங்கள் கொண்ட ஒருமைத்துவமுடைய தீவு (A Single Multi-Ethnic Island Entity) என்ற நோக்கில் அமைந்தது என்றும், சேர். பொன்னம்பலம் இராமநாதன், சேர். பொன்னம்பலம் அருணாசலம் போன்ற தலைவர்களும் இவ்வழியிலேயே இலங்கை பல்லினங்களின் ஒன்றுபட்ட அரசியல் சமூகமாக உருவாவதை இலக்காகக் கொண்டிருந்தனர் எனவும், ஜீ. ஜீ. பொன்னம்பலமும் அவர்களின் வழித் தடத்தலிலேயே பயணித்தார் என்றும் ஏ. ஜே. வில்சன் கருத்துரைக்கிறார்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்

 தமிழர் தேசியஉணர்வுக்கு அரசியல் இயக்கம் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு என்ற வடிவத்தை 1944 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்ற அமைப்பின் ஊடாக ஜீ. ஜீ. பொன்னம்பலம் உருவாக்கினார். அந்த அமைப்பை உருவாக்கும் காலம் வரை ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஜீ. ஜீ. பொன்னம்பலம் டொனமூர் சட்டசபையில் தனித்து நின்று தமிழர் நலன்களுக்காக குரல் கொடுத்தும், வாதாடியும் வந்தார். தமிழர் நலனுக்காக மட்டுமன்றி ஏனைய சிறுபான்மையினர் நலனுக்காகவும் அவர் குரல் கொடுத்தார்.

சமநிலைப் பிரதிநிதித்துவக் கோரிக்கை நிராகரிக்கப்படல்

சட்டவாக்க அதிகாரத்திலும், நிர்வாக அதிகாரத்திலும் சிறுபான்மையினருக்கு கூடிய பங்கேற்பை வழங்கக்கூடிய சமநிலைப் பிரதிநிதித்துவக் கோரிக்கையை சிங்கள அரசியல் தலைமை ஏற்றுக்கொள்ள மறுத்தது. சிங்களத் தலைமையைத் திருப்திப்படுத்தத் தவறினால்  ஏற்படக்கூடிய பகைமை உணர்வு தமது வர்த்தக நலன்களையும், இராஜதந்திர நலன்களையும் பாதிக்கும் என்பதை உணர்ந்திருந்த பிரித்தானிய அரசாங்கம், தமிழர் தரப்பின் நியாயமான அபிலாசைகளைக் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. டொனமூர் அரசியல் அமைப்பு செயற்பாடுடையதாய் இருந்த காலகட்டத்தில் (1931 – 1947) அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் செயற்பாடுகளும், தமிழ்த் தலைவர்களின் நடவடிக்கைகளும் “இனவாதம்” என நாமம் சூட்டப்பட்டன. உண்மையில் சிங்கள அரசியல் தலைவர்களே இனவாதத்தைப் பேசி, சிறுபான்மையினர் உரிமைகளை மதிக்காமல் நடந்து கொண்டனர். ஆனால் தமிழ்த்தரப்பினரை மட்டும் இனவாதிகள் எனக் கூறி, இழிவாகப் பேசும் போக்கு இந்தக் காலத்தில் உச்சம் பெற்றது. ஒருவர் தாம் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் நலன்கள் பற்றி பேசுதல் இனவாதம் எனக் கூறப்பட்ட சூழ்நிலையில் டொனமூர் குழுவினரும், சோல்பரி ஆணைக்குழுவினரும், இலங்கையின் இனமுரண்பாடுகளின் தீர்வை நோக்கிய அரசுக் கட்டமைப்பை  வடிவமைக்கும் பணியில் தவறிழைத்தனர்.

இணக்க அரசியல்

சமநிலைப் பிரதிநிதித்துவம் மூலம் தமிழர் நலன்களுக்கான பாதுகாப்பைத் தேடுவதற்கான கடும் முயற்சியில் ஜீ. ஜீ. பொன்னம்பலம் 1947 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் வரை ஈடுபட்டார். பொதுத் தேர்தல் முடிந்த பின்னர், சிங்களப் பெரும்பான்மை அரசு ஒன்று அமைக்கப்பட்டது. ஜீ. ஜீ. பொன்னம்பலம்  அவ்வரசில் அமைச்சு பதவியை ஏற்றுக் கொண்டார். ’50க்கு 50’ என்ற சமநிலைப் பிரதிநிதித்துவக் கோரிக்கைக்கு தமிழ்த் தலைவர்கள் சிலர் மட்டுமல்லாமல், பிற சிறுபான்மை இனத் தலைவர்களும் ஆதரவு தராமல் அவரைக் கைவிட்டிருந்தனர். இதனால் ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஏமாற்றம் அடைந்த நிலையில், டி. எஸ். சேனாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு தனது ஆதரவை வழங்கினார். முற்போக்கு எண்ணம் கொண்ட சிங்களவருடன்  “ஒத்துணர்வு மிக்க கூட்டுறவு” (Responsive Cooperation) எனத் தமது இணக்க அரசியலுக்கு அவர் விளக்கம் கொடுத்தார். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் தன்னிச்சையான முடிவால் இரு கூறாகப் பிளவுபட்டது. 1949 ஆம் ஆண்டில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையிலான குழுவினர் “சமஷ்டிக் கட்சி” (Federal Party) என்னும் பெயரில் தனிக் கட்சி ஒன்றை நிறுவினர்.

சமஷ்டிக் கட்சியின் நாடாளுமன்றவாத அரசியல்

சமஷ்டிக் கட்சியின் ஆங்கிலப் பெயரான Federal Party என்பதைத் தமிழில் இலங்கைத் தமிழரசுக் கட்சி (Party for a Ceylon Tamil Government) என்னும் பொருள்தரும் பெயரால் அழைத்தனர். இதன் சுருக்கப் பெயர் “ITAK ஆகும். 1976 இல் தமிழரசுக் கட்சி ஏனைய தமிழ் அரசியல் குழுக்களுடன் இணைந்து,  தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) என்ற புதிய பெயரில் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டது. 1949 முதல் 1976 வரையான 27 ஆண்டு காலத்தில் சமஷ்டிக் கட்சி என்னும் தமிழ் அரசுக் கட்சி சாத்வீக வழிகளில் தொடர்ச்சியாகப் பல போராட்டங்களை நடத்தியது. இணக்கமான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைக் காண்பதற்கும் இக்கட்சி முயற்சிகளை மேற்கொண்டது. 1957, 1961, 1965 ஆகிய ஆண்டுகளில் அந்தக் கட்சியால் சிங்கள ஆட்சியாளர்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வொப்பந்தங்கள் நிறைவேற்றப்படாமல் போயின. இந்த நீண்ட வரலாற்றை இவ்விடத்தில் விரிவாகக் குறிப்பிடுதல் இயலாது. பாராளுமன்றத்தை அரசியல் பேரம்பேசலுக்கான ஒரு பயனுள்ள வழியாகப் பயன்படுத்தும் கொள்கையைக் இக்கட்சி பின்பற்றியது. இதனால் இக்காலத்தை பாராளுமன்றவாதம் (Parliamentarism) செயற்பட்ட காலகட்டமெனக் குறிப்பிடலாம். 

சுதந்திரத்தின் பின்னரான காலத்தில் சிங்கள அரசியல் 

சிங்கள இனத்தவர்கள் தாம் இலங்கையில்  ஒரு பெரும்பான்மை இனமாக இருந்தபோதும், சிறுபான்மை “மனச் சிக்கல்” (Minority Complex) காரணமாக தமிழர் பற்றிய அச்ச உணர்வுடன் வாழ்ந்து வருவதாகக் கூறத் தலைப்பட்டனர். கடந்த காலத்தில் தென்னிந்தியப் படையெடுப்புகளால் சிங்கள அரசுகளுக்கு அழிவுகள் வந்தன என்றும், இதனால் தமக்கு தமிழர் பற்றிய அச்ச உணர்வு உள்ளது எனவும் அந்த “நினைவின் சுமை” (Burden of Memory) தம்மை அழுத்துவதாகவும் சிங்களவர் கூறினர். ஏறக்குறைய 50 மில்லியன் தமிழர்கள் வாழும் தமிழ்நாடு இந்தியாவின் தென்பக்கத்தில் இருப்பதும், கடந்த கால வரலாறு எழுப்பும் அச்ச உணர்வும் தம்மை சிறுபான்மையினர் என்ற நிலைக்குத் தாழ்த்தி விட்டதாக அச்சம் தெரிவித்தனர். சில அரசியல்வாதிகளாலும் வரலாற்று எழுத்தாளர்களாலும் இத்தகைய வாதம் முன்வைக்கப்பட்டது. நசுக்கப்படும் தமிழ்ச் சிறுபான்மை இனத்தை பெரும்பான்மை இனமாகப் பிரித்துக் காட்டும் நிலை ஏற்பட்டது. இதன்படி இலங்கையில் இரு பெரும்பான்மை இனங்கள் இருப்பதான போலியான வாதம் முன்வைக்கப்பட்டது. இலங்கை அரசியலின் பெரும்பான்மை வாதம் இரு பெரும்பான்மைகள் எனும் போலிவாதத்தால் கட்டமைக்கப்பட்டுளதைக் காணலாம். 

இரு தேசியவாதங்கள்

இலங்கையில் இருபதாம் நூற்றாண்டில் இரு தேசியவாதங்கள் வளர்ச்சி பெற்றன. சிங்களப் பெரும்பான்மை தேசியவாதம் தமிழினத்தின் மீதான தனது ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் பல போலி நியாயங்களை முன்வைத்து வந்துள்ளது. இப் போலி நியாயங்கள் பின்வருவன:

  1. சிறுபான்மைச் சிக்கலுடைய பெரும்பான்மையினம்
  2. வரலாற்றின் “நினைவுச் சுமை”யும் அதனால் எழும் அச்சமும்.
  3. பிரித்தியானியாவின் பிரித்தாளும் கொள்கையும் (DIVIDE AND RULE), அது தமிழர்களுக்கு சார்பாக நடந்து கொண்டமையும்.
  4.  பெரும்பான்மை இனத்தை அச்சுறுத்தும் தமிழ்ச் சிறுபான்மையினர்.

மேற்குறிப்பிட்ட போலி விவாதங்கள் சிங்கள அரசியல் தலைமையின் இணக்கமற்ற போக்கிற்கு காரணமாயின. இதன் விளைவால் ஒடுக்கப்படும் தமிழினத்தின் பாதுகாப்புத் தேசியவாதம் இலங்கையில் உருவானது. இதனால் இன்று இரு தேசியவாதங்கள் உருவாகியுள்ளன.

  1. ஒடுக்கும் சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம். 
  2. ஒடுக்கப்படும் தமிழ் இனத்தின் பாதுகாப்புத் தேசியவாதம். 

1976 இல் தமிழர் விடுதலை முன்னணியால்  பிரிவினைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சிங்களத் தலைமை நியாயமான தீர்வுக்கு இணங்கியிருந்தால் இக்கோரிக்கை எழுந்திருக்கமாட்டாது. தமிழர்கள் சமஷ்டி ஆட்சிமுறைத் தீர்வுடன் திருப்தி அடைந்திருப்பார்கள். 

பிற்குறிப்பு:

  1. இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் – 19ம் 20ம் நூற்றாண்டுகளில் அதன் தோற்றமும் வளர்ச்சியும் Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the 19th and 20th Centuries

காலஞ்சென்ற ஏ.ஜே. வில்சன் அவர்கள் இலங்கையின் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிதன் பின்னர் கனடாவில் நியூ பிறண்ஸ்விக் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையின் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அப்பல்கலைக் கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் தகைசால் பேராசிரியர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். இவரது ‘’Sri Lankan Tamil Nationalism’ என்ற நூல் 2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவரது ஏனைய முக்கிய சில நூல்கள் வருமாறு :

  • Electoral Politics in an Emergent State: The Ceylon General Election of May 1970. – A. J. Wilson, A.Jeyaratnam (Cambridge, 1975)
  • Politics in Sri Lanka, 1947 – 1979.  (London, 1979)
  • The Gaullist System in Asia: The Sri Lanka Constitution of 1978. (London, 1980)
  • The Break-up of Sri Lanka: The Sinhalese – Tamil Conflict. (London, 1988)
  • S. J. V. Chelvanayagam and the Crisis of Sri Lanka Tamil Nationalism, 1947 – 1977: A Political Biography. (London,1994)

ஏ.ஜே. வில்சன் அவர்களின் இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் (2006) என்ற நூலினை கனடாவின் வன்கூவர் UBC Press (University of British Columbia Press) வெளியிட்டது. (UBC என்ற சுருக்கப் பெயர் பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக் கழகத்தைக் குறிக்கும்) 203 பக்கங்களைக் கொண்ட இந்நூல் பத்து அத்தியாயங்களைக் கொண்டது. நூலின் உள்ளடக்கத்தை தமிழ் வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு உதவும் முகமாக பத்து அத்தியாயங்களினதும் தலைப்புகளை கிழே தந்துள்ளோம்.

  1. அறிமுகம்
  2. இலங்கைத் தமிழர்களின் சமூகக் கட்டமைப்பும் இன வரவியலும்
  3. தமிழ்த் தேசியவாதம் – தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு
  4. 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் 1930 வரையிலுமான காலத்தில் இலங்கை தமிழர் அரசியல்
  5. ஜீ.ஜீ.பொன்னம்பலம் – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் தமிழ்த் தேசிய உணர்வின் வளர்ச்சியும்
  6. சமஷ்டிக் கட்சியும் தமிழ்த் தேசிய வாதமும் : சமஷ்டிக் கட்சி தொடக்கம் – தமிழர் ஐக்கிய முன்னணி (TUF) – தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) வரை.
  7. தமிழ் இளைஞர்களின் இராணுவ மயமாக்கம்
  8. இந்தியாவின் தலையீடும் அதற்குப் பின்னரும்
  9. தமிழீழத் தேசியவாதம் : உள்ளிருந்து ஒரு பார்வை – ஏ.ஜே.வி. சந்திரகாந்தன்
  10. முடிவுரை

2. நூலின் 9வது அத்தியாயம் பேராசிரியர் ஏ.ஜே.வி. சந்திரகாந்தன் அவர்களால் எழுதி வழங்கப்பட்டது. போர்க் காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கிறீஸ்தவ நாகரிகத் துறையின் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் உள்ளிருந்து நிலைமைகளை அவதானித்த ஒருவரின் பார்வையினை வழங்கியுள்ளார்.

அறிமுகம் நூலின் உள்ளடக்கத்தை சுருக்கமாக எடுத்துரைக்கின்றது. முடிவுரை நூல் ஆசிரியரின் கருத்துகளையும் முடிவுகளையும் தொகுத்துக் கூறுகிறது. அறிமுகத்தை பிரதான ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட இக்கட்டுரையில் கூறப்பட்ட விடயங்களை விரிவாக எடுத்துரைப்பனவாக அத்தியாங்கள் 4, 5, 6 விளங்குகின்றன. மூல நூலில் உள்ள இம்மூன்று அத்தியாங்களும் இலங்கைத் தமிழ்த் தேசியவாதத்தின் தோற்றதையும் வளர்ச்சியையும் விபரிக்கின்றன. இத்தேசியவாதம் ஆயுதம் ஏந்திய போராட்டமாக வடிவம் பெற்ற காலகட்ட நிகழ்வுகளை விளக்கும் 7, 8, 9 ஆகிய அடுத்து வரும் அத்தியாயங்கள் அமைந்துள்ளன.

இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் தோற்றம், வளர்ச்சி பற்றிய தேடலில் ஆர்வமுடையோர் இந்நூலினைப் படிக்க வேண்டுமென சிபார்சு செய்கிறோம்.


ஒலிவடிவில் கேட்க

11700 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்
  • May 2024 (1)
  • April 2024 (2)
  • March 2024 (1)
  • November 2023 (5)
  • October 2023 (4)
  • September 2023 (3)
  • July 2023 (3)
  • June 2023 (1)
  • May 2023 (4)
  • April 2023 (2)
  • March 2023 (2)
  • February 2023 (1)
  • January 2023 (1)