Arts
10 நிமிட வாசிப்பு

இது இன்னொரு போராட்டத்தின் கதை : பறைமேள இசை பல்கலைக்கழகத்துள் மெல்ல மெல்ல நுழைந்த கதை

April 21, 2023 | Ezhuna

பறை பற்றி பலரும் பேசும் காலம் இது. இதற்கு ஒரு வரலாற்றுப்பின்னணியும் சமூகப் பின்னணியும் உண்டு. தமிழகத்துள் 1950 களில் ஊடுருவிய பெரியார், அம்பேத்கார், மார்க்சிச சிந்தனைகளும் தொடர்ந்து வந்த அயோத்திதாசர், இரட்டைமலை ஶ்ரீநிவாசன் சிந்தனைகளும் பின்னாளில் எழுந்த தமிழ்த் தேசியச் சிந்தனைகளும், தலித்திய சிந்தனைகளும் பறை இசைப்போர் சமூகத்துக்கு ஒரு விசை வேகம் தந்தன. அத்தோடு இச்சிந்தனைகளினால் பறையைத் தம் வாழ்வாதாரமாகக் கொண்ட பறை இசைக்கும் சமூகத்தையும் தாண்டி பறை இசை பற்றி தமிழ் மக்கள் பலரும் சிந்திக்கலாயினர்,பேசலாயினர்.

பறை தமிழரின் பண்டைய இசை எனவும், எமது முப்பாட்டன் இசைத்த இசை எனவும் மேடையில் பலர் உணர்ச்சிகரமாக முழக்கமிடவும் ஆரம்பித்தனர். சினிமாவில் பறை இசையைச் சிலர் கொணர்ந்தனர். இது பறையை இன்னும் பரவலாக்கியது. கடந்த காலங்களில் தமிழகத்தில் பெண்களும் பறை இசைத்து ஆடத் தொடங்கினர்.

சக்தி கலைக்குழு, ரங்கராஜன் குழு என்பன அறியப்பட்ட குழுக்களாயின. அண்மைக்காலமாக மணிமாறனின் புத்தர் பறை இசைக்கலைக் குழு தமிழகத்திலும் ஈழத்திலும் பறை இசையைப் பயிற்றுவித்து வருகிறது. தமிழகத் தலைவர்களான திருமாவளவனும், சீமானும் பறை பற்றிக் கூட்டங்களில் அது தமிழர் அடையாளம் எனப்பேசி வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் இலக்கிய மாநாடுகளில் பறை இசை,  ஆரம்ப இசையாக இடம் பெறவும் செய்கிறது. பறை இசைக்கலைஞர்களை அனைவரும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தனர்.

விளிம்பு நிலை மக்கள் சம்பந்தமான கற்கை நெறிகள் பல்கலைக் கழகங்களுக்குள் அறிமுகம் செய்யப்பட்டன. அதனடியாக உருவான சிந்தனையாளர்கள் ஆய்வாளர்கள் பறையை ஒரு புலமைத்துவப் பின்னணியில் நோக்கினர். பறையை பற்றிப் பலரும் பேசும் சூழ் நிலை உருவானது.

தமிழகத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த வரலாற்று நிகழ்வுகள் 1960 களிலிருந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னர் இலங்கைத் தமிழர் மத்தியில் உருவாகி வளர்ந்து பறையைப் பல்கலைக்கழகம் வரை கொண்டுவரும் செயல்களும் நடைபெற்றுள்ளன என்பதனைப் பலர் அறியார். ஈழத்தில் நடைபெற்ற அந்நிகழ்வுகளைப் பதிய முயற்சிக்கும் ஓர் அறிமுகக் கட்டுரையே இதுவாகும்.

ஈழத்தில் பறைமேளம்

ஈழத்தில் பறைமேளம் அதை இசைக்கும் சாதி குழுமத்துள் மாத்திரமே வழக்கில் இருந்தது. அச்சமூகத்தின் ஆண்களின் வருமானம், வாழ்வாதாரமே இதுதான். ஈழத்தின் தமிழ்ச்சமூகம் சாதிகளாகப் பிரிந்து கிடந்தது, கிடக்கிறது.

ஒவ்வோர் சாதிக்கும் அல்லது குறிச்சிக்கும் செத்த வீடு, சாமத்தியவீடு, திருமணவீடுகளில் விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்யவும் பொதுவான ஊர்ச் செய்திகளைப் பறை அறைந்து பிரசித்திப்படுத்தவுமான பணிகள் இச்சமூகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கோவில் கடமைகள் சிலவும் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவற்றிற்கும் ஊதியங்கள் வழங்கப்பட்டன. பெரிய மனிதர்களின் வரவேற்புக்கு பறை வாசிக்கவும் இவர்கள் அழைக்கப்பட்டனர். கோவில்களுக்குள் நுழைய இவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. கோவில் வெளியிலேயே நின்று கொண்டு அவர்கள் பறை இசைத்தனர். கூத்துக்களில், நாடகங்களில் அவர்கள் தாழ் நிலையிலுள்ள பாத்திரங்களாகச் சித்திரிக்கப்பட்டனர்.

மட்டக்களப்புக் கூத்துக்கள் சிலவற்றில் கூத்துப் பிரதியில் இல்லாத உரையாடல் ஒன்று பறை அறைவிப்போனுக்கும் அண்ணவியாருக்குமிடையில் நடைபெறும். இது நகை உணர்வு தோற்றுவிக்கும்  ஒரு நிகழ்வு. பறை அறிவோனின் அறியாமையும் அவனது வெகுளித்தனமுமே இந்நகையுணர்வின் அடித்தளமாகும். கள்ளைக் குடித்துவிட்டு வெறியில் வருபவர்களாக, கல்வி அறிவில்லாதவர்களாக, உலக அனுபவம் இல்லாதவர்களாகவே அவர்கள் அவற்றில் சித்தரிக்கவும் பட்டனர்.

மட்டக்களப்பின் சிறு தெய்வக்கோவில்களிலும், பறை வாசிக்கப்படும் ஏனைய சில இடங்களிலும் இவ்வழக்கம் உண்டு. கோவில்களில் வாசிக்கப்படும் பறை இசை வேறு, செத்த வீடுகளில் வாசிக்கப்படும் பறை இசை வேறு. முன்னையது மங்கலப் பறை எனவும், பின்னையது அமங்கலப் பறை  எனவும் அழைக்கப்பட்டது.

எனினும் பெரும்பாலும் பறை இசை மரணவீட்டுடன் இணைத்தே பார்க்கப்பட்டது. அதை இசைத்த சமூகம் ஒருவகையில் ஒதுக்கி வைக்கப்பட்டது. சாதிப் படிமுறையில் மிக கீழான இடத்தில் அவர்கள் வைக்கப்பட்டார்கள். மற்றவரில் தங்கிவாழ்பவர்களாக அவர்கள் இருந்ததனால் அவர்கள் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாத நிலையில் இருந்தனர். எனினும் அவர்கள் மத்தியில் செழுமையான பண்பாடொன்று இருந்தது. மந்திரங்களில் அவர்கள் வல்லவர்களாக இருந்தார்கள். பறை இசைப்பதில், குழலூதுவதில் ஆடலில், பாடலில் அவர்கள் வல்லவர்களாக இருந்தார்கள். வைத்தியர்களாக, சோதிடர்களாக, பெயர் பெற்ற உளவியல் மருத்துவர்களாக கூட அவர்களிற் சிலர் இருந்துள்ளனர். கோழாவில் பறை இசைச் சமூகத்தின் மந்திரவாதிகளின் மந்திரம் மட்டக்களப்பில் பெரும்மந்திரமாகக் கணிக்கப்பட்டது. தீர்க்க முடியாத சில நோய்களைத் தீர்ப்பவர்களாக அவர்கள் இருந்தமையை நான் அன்று கேள்விப்பட்டுள்ளேன்.

மட்டக்களப்பில் ஆடப்படும் மகிடிக் கூத்துக்களில் புன்னைக்குளத்தில் ஆடப்பட்ட இச்சமுக்கத்தின் மகிடிக்கூத்து மிக விசேடமானதாய் இருந்தது. அதனை நான் 1978 இல் பார்த்துள்ளேன். தமிழ்க் குறவஞ்சி நாடகம் பண்டு எப்படி ஆடியிருப்பார்கள், அதற்கான மேடை எப்படி இருந்திருக்கும் என்பதை எனக்கு உணர்த்திய மேடை ஆற்றுகை அது. மகிடிக்கூத்துக்கள் பலவகையின. எழுத்துப்பிரதி இல்லாதவை.

அவற்றுள் ஒரு வகை மகிடிக்கூத்துக்கென ஏடு இவர்களிடம் மாத்திரமேயுண்டு, மகிடி ஆடும் அரங்கு இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்படும். ஒரு பாகத்தில் ஆட்ட நிகழ்வு ஏட்டில் உள்ளபடி நடைபெறும். மறு வெளியில் ஏட்டில் இல்லாத உரையாடலில் அமைந்த நிகழ்வு நடைபெறும். நவீன கல்வியும், நவீன சிந்தனைகளும் அவர்களின் வாழ்வியலிலும் சிந்தனைகளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தின. விழிப்புணர்வடைந்த அச்சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உயர் சாதியினர் எனக்கருதப்பட்டவர்களுக்கு பறை தட்டிச்சேவகம் செய்வதை விரும்பவில்லை.

விழிப்புணர்வு கொண்ட சமூகம்

1.-பரசுராமன்-2

சமூக எற்றத்தாழ்வுகளையும் புறக்கணிப்பினையும் கண்ட இளம் தலைமுறை பறைகொண்டு சேவகம் புரிந்த பலரை அச்சேவகம் செய்யவேண்டாமெனத் தடுத்தனர். பறை எனும் வாத்தியம் கொண்டு தமது சமூகத்தை மற்றவர் இனம் காண்பதை வெறுத்த சில இளைஞர்கள் பறைகளினை உடைத்தனர், நெருப்பிலுமிட்டனர். தம் சாதியத்தார் பிறருக்குப் பறைதட்டச் செல்லக்கூடாது என தடுத்தனர். முதிய தலைமுறைக்கும் இளம் தலைமுறைக்குமிடையே முரண்பாடுகள் உண்டாயின. பழமையில் வாழவே பழம் தலைமுறை விரும்பியது. தமக்குரித்தான் இந்த இசையையும், இசைக்கருவியையும் விட்டுவிட அவர்கள் விரும்பவில்லை. பறையை அவர்கள் தமது சமூகத்தின் அடையாளமாகக் கொண்டனர். இந்தப்பின்னணியை புரிந்து கொள்வது நல்லது.

கழுதாவளை வையமூப்பன் ஆனைக்குட்டியும் பறை இசைக்கலைஞர்களும்

வையமூப்பன்

இந்நிலையில்தான் 1960 களில் கழுதாவளையைச் சேர்ந்த வையமூப்பன் ஆனைக்குட்டி எனும் பறை இசைக்கும் சமூகக்குழுவின் தலைவரின் கீழ் இயங்கிய பறைஇசைக்குழு இனம் காணப்பட்டது.

அவர்களை இனம் கண்டவர், கழுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்தவரான காலம் சென்ற இரா. பத்மநாதன். பத்மாநாதன் கழுதாவளையைச் சேர்ந்தவர், முற்போக்காளர், அன்றைய தமிழரசுக்கட்சியின் தீவிர ஆதரவாளர், செயற்பாட்டாளர். பெரியார், அண்ணாதுரை ஆகியோர்களின் பகுத்தறிவுக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். அக்காலகட்டத்தில் சிங்கள இனம் தனக்கான தேசிய அடையாளங்களைக் கட்டமைக்க ஆரம்பித்திருந்தது. கண்டிப் பெரஹராவில் வாசிக்கப்பட்ட பறை பொது வைபவங்களிலும் வாசிக்கப்படலாயிற்று. அந்தப் பறையை வாசித்த இசைக்கலைஞர்களின் ஆடை அணிகளை மேலும் அழகுபடுத்தினர்.  சிங்கள ஓவியர்களும் சிற்பிகளும், அந்தப்பறை இலங்கையின் தேசிய வாத்தியமுமாகியது. விழாக்களிலும், வைபவங்களிலும் அது இடம் பெறலாயிற்று.

பறை சிங்களத் தேசிய வாத்தியமாக மாறிய பின்னர்தான் நமது தமிழ்த்தலைவர்களும் அறிஞர்களும் இலங்கைத் தமிழர் மத்தியில் வழக்கிலிருந்த பறை மேளம் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தனர். கோவில் சடங்குக்குள் முடங்கிக் கிடந்த பறையை பொது வெளியிலும் ஒலிக்கச் செய்தனர். அப்பறை இசைகலைஞர்களுக்கு ஊக்கமும், உதவியும் கொடுத்து பறை இசையைத் தமிழரின் பண்டைய தோல் வாத்திய இசை மரபின் தொடர்ச்சியாகக் கட்டமைத்தனர். இதற்கான பலத்த எதிர்ப்புகளும் அன்று இருந்தன.

பேராதனைப்பல்கலைக்கழகத்தில் ஒலித்த பறை மேள இசை

பேராதனைப் பல்கலைக்கழகதில் இப்படிச் சிந்தித்த பல்கலைக்கழக முன்னோடிகளுள் முக்கியமானவர் பேரா. கணபதிப்பிள்ளை. அதனைச் செயற்படுத்தியவர் அவரது மாணவனான பேராசிரியர் வித்தியானந்தன். 1960 களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த சிங்கள மாணவர்களுக்கு, இலங்கைவாழ் தமிழர்களிடமும் தமது பறைபோல ஒரு வாத்தியம் இருக்கிறது என அறிய வைக்க எண்ணினார் வித்தியானந்தன்.  பத்மநாதனின் உதவியை வித்தியானந்தன் நாடினார்.

1960 இல் நடைபெற்ற பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் விழாவில் பல்கலைக்கழகத் திறந்த வெளி அரங்கில் கழுதாவளைப் பறை இசைக்குழுவினரின் பறை இசையும் ஆட்டமும்  தமிழ் மரபிசை என்ற பெயரில் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அது சிங்கள மக்களுக்கு மாத்திரமல்ல தமிழ் மாணவர்களுக்கும் தமிழர் இசையின் முக்கியமான இசை பறை இசை என உரத்துச் சொன்ன நிகழ்ச்சியாகும்.

ஈழத்துத் தமிழிசை இசைத்தட்டில் பறை இசை

Eastern-University-students

1980 களில் ஈழத்துத் தமிழ் இசை என்ற தலைப்பில் ஒரு இசைத்தட்டு வெளியிட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முடிவுசெய்கிறது. இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் அன்று ஒலிபரப்புக் கூட்டுத்தாபன இசைப்பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்த நவராஜகுலம் முத்துக் குமாரசாமி. இதற்கான ஆலோசனைகளை அவர் பெற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வருகிறார். இவருக்கு பேரா. வித்தியானந்தனும், பேரா. சிவத்தம்பியும் உதவுகிறார்கள்.

அப்போது தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் சண்முகதாஸையும், நுண்கலைத் துறை விரிவுரையாளராக இருந்த என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். கர்நாடக இசையை மாத்திரமன்றி ஈழத்துத் தமிழர்களின் நாட்டார் இசை, சடங்கிசை, கூத்திசை என்பனவற்றுடன் பறை இசையையும் இவ்விசைத்தட்டில் இடம் பெறவைக்க வேண்டும் எனத் தீர்மானிக்கிறார்கள்.

ஒரு நாள் பிற்பகலில் கோம்பையன் மணல் மைதானத்திற்கு பறை இசைக்கலைஞர்களை வரவழைத்து அவ்விசையை பேரா. வித்தியானந்தன் தலைமையில் அதனை ஒலிப்பதிவு செய்தமை பசுமையாக ஞாபகம் இருக்கிறது. நான் பேராசிரியர் வித்தியானந்தனிடம் “ஏன் சேர் இப்பறை இசையை அவர்களின் இருப்பிடம் சென்று ஒலிப்பதிவு செய்திருக்கலாமே?” என்று கேட்டேன்.

பேராசிரியர் வித்தியானந்தன் சாதிப்பாகுபாடு காட்டாத மிகப் பெரும் மனிதர். அவர் கூறிய பதில் இதுதான் “நாம் மரண வீட்டில் ஒலிக்கும் பறை இசையைத்தான் அறிமுகம் செய்கிறோம். இங்கு பதிவு செய்தால் இந்த மயானச் சூழலுக்குள் அவர்கள் வந்து அந்த உணர்வைப் பறை இசையில் கொணர்வார்கள், நம்பகமாகவும் இருக்கும்.” அப்போது எனக்கு இது புரியவில்லையாயினும், அவர் இவ்விசையின் நம்பகம், உண்மைத்தன்மை என்பனவற்றில் எவ்வளவு அவதானமாக இருந்தார் என்பது இப்போது புரிகிறது. பேராசிரியர் வித்தியானந்தனுக்கும் பேரா. சிவத்தம்பிக்கும் பறை, தமிழரின் புராதன இசை என்ற கருத்திருந்தது. பறை இசையால் அவர்கள் ஈர்க்கப்பட்டனர். கரவெட்டியில் நடக்கும் விழாக்களிலும், மரண வீடுகளிலும் எவ்வாறு பறை இசைகலைஞர்கள் பறை வாசிப்பார்கள் என்பதை சுவைத்துச் சுவைத்துக்கூறுவார் பேராசிரியர் சிவத்தம்பி. எனினும் அவர்கள் காலச்சூழல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துள் பறையைப் புக விடவில்லை.

அவர்களால் அதனைப் பிரதான நீரோட்டத்துள் கொணர முடியவில்லை. யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் தவில், நாதஸ்வரமே ஊர்வலத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. 1980 களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நான் பேராசிரியர் கைலாசபதியின் மேற்பார்வையில் எனது கலாநிதிப்பட்ட ஆய்வை மேற்கொள்கிறேன். மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்  என்பது ஆய்வின் தலைப்பு. கூத்துக்களை மாத்திரம் ஆராயப் புகுந்த என்னை கூத்துக்கள் அல்லாத ஆற்றுகைகளையும், ஆற்றுகைத் தன்மை பொருந்திய சடங்குகளையும் ஆய்வுக்குள் எடுக்குமாறு வழிப்படுத்தினார் கைலாசபதி.

அவர் இறந்துவிட ஆய்வின் மேற்பார்வையாளராக பேரா. சிவத்தம்பி நியமிக்கப்பட்டார். அவர் இந்த கருத்துருவை மேலும் அகட்டினார். இது நான் பறை இசைக்கலைஞர்களைத் தேடிச் செல்ல ஒரு வழியைத் திறந்து விட்டது. அப்போதுதான் மட்டக்களப்பில் வாழ்ந்த அச்சமூகம் பற்றியும் அதன் தன்மைபற்றியும், பறை இசைபற்றியும் அதன் நுட்பங்கள் பற்றியும் அறியும் வாய்ப்புக் கிடைத்தது.

பி. எச். டி. ஆய்வுப் பொருளின் ஒரு பகுதியாகப் பறை இசை

வெல்லவூர்க் கோபால் என்றழைக்கப்படும் வெல்லாவெளியைச் சேர்ந்த கோபாலசிங்கம் என்னை அழைத்துக்கொண்டு கழுதாவளை சென்றார். அங்குதான் எனக்கு  பறை இசைக்கலைஞர்களின் தொடர்பு கிடைக்கிறது. வெல்லவூர்க்கோபால் முற்போக்கு எண்ணம் கொண்ட தீவிரமான இளைஞராக அன்று இருந்தார். மட்டக்களப்பின் மாபெரும் பறை இசைக்கலைஞரும் சொர்ணாளிக் கலைஞருமான வையமூப்பன் ஆனைக்குட்டியை நான் கழுதாவளையில் முதன் முதலில் 1979 ஆம் ஆண்டு சந்தித்தேன். சொர்ணாளி என அழைக்கப்படும் சிறிய ஊது குழலை அவர் லாவகமாக இசைத்துக்காட்டினார். அவரே அந்த ஊரில் வாழும் பறை இசைக்கும் சமூகத்தின் தலைவராகவும் அவர் கருதப்பட்டார்.

அப்போதுதான் இளைஞர்களாக ஆனைக்குட்டி அவர்களின் இசைக்குழுவில் இருந்த பரசுராமன், உம்முணி போன்றோருக்கும் அறிமுகமானேன். எனது பி. எச். டி பட்ட ஆய்வில் இரண்டாம் அத்தியாயத்தில் பறை இசைக்கலைஞர் சமூகமும் அதன் அமைப்பும், பறை இசைக்கப்படும் முறை, அதற்கான தாளங்கள், ஆடல்முறைகள் பறையின் வகைகள் என்பன தரப்பட்டுள்ளன. அவர்கள் பாவிக்கும், பெரும் பறை,   சிறு பறை, தம்பட்டம்,  சொர்ணாளி முதலான பறை இசைக்கருவிகள் பற்றிப் படத்தோடு அதில் விபரித்துள்ளேன். ஏற்கனவே  மட்டக்களப்புத் தமிழகம் எனும் ஓர் அரிய நூலை பண்டிதர் வீ. சீ. கந்தையா எழுதியிருந்தார். அதில் மட்டக்களப்பின் கலை வளம் பற்றிப்பேசும் அவர் மட்டக்களப்புத் தமிழர் கலைகளின் ஓர் அம்சமான பறை இசைக் கலை பற்றி தனது நூலில் யாதும் குறிப்பிட்டிருக்கவில்லை. அத்தோடு அக்கலைஞர்கள் மிகச் சிறப்பாக நடத்தும் மகிடிக்கூத்து பற்றியும் குறிப்பிடவில்லை. ஒரு வேளை அவர் இவற்றை அறியாதிருந்திருக்கலாம். அல்லது அறிந்தும் இதைப்பற்றி  பெரிய அபிப்பிராயம் இல்லாமல் இருந்திருக்கலாம். முதன் முதலாக இலங்கைப் பல்கலைக்கழக ஆய்வுக்குள் தமிழர் மத்தியிலுள்ள பறை இசை பேசப்பட்டது ‘மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்’ எனும் எனது அந்த ஆய்வேட்டில்தான் என நினைக்கிறேன். தேற்றாத் தீவில் வாழ்ந்த தேனூரான் போன்ற கவிஞர்களும் அக்காலகட்டத்தில் கழுதாவளையில் வாழ்ந்த இரா. பத்மநாதன் போன்ற முற்போக்காளர்களும் பறை இசை பற்றி, பறைமேளக் கூத்து பற்றி பத்திரிகைகளில் சிற் சில கட்டுரைகள் எழுதினர்.

யாழ்ப்பாண வீதி நாடகத்தில் பறை இசை

1980 களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்றுகொண்டிருந்த தமிழ் மாணவர்கள் இனவிடுதலை, சமூக விடுதலைக் கருக்கள் கொண்ட வீதி நாடகங்கள் போட ஆரம்பித்தபோது அவர்கள் தமது கரங்களில் பறையைத் தூக்கினர்.  முக்கியமாக  விடுதலைக் காளி என்றொரு வீதி நாடகம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. முகத்தை துணியால் மறைத்துக்கொண்டே அவர்கள் வந்தனர். ஆட்களை மட்டிட முடியவில்லை. பறை அறைந்து நாடக விளம்பரம் செய்தனர். பறை அறைந்து சனத்தைக்கூட்டினர். பறையை நாடகத்தில் பயன்படுத்தினர். இதனைத் தொடர்ந்து வீதி நாடகங்களுக்குப் பறையைப் பயன்படுத்தும் போக்கு ஒன்று யாழ்ப்பாணத்தில் உருவானது.

மண்சுமந்த மேனியர் நாடகம் 1980 களின் நடுப்பகுதியில் வெற்றிகரமாக மேடையேறியது. யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் இது மேடையேறியது. அதிலே பறை இசை வாத்தியத்தைப் பயன்படுத்தினர். குழந்தை சண்முகலிங்கம், சிதம்பரநாதன், இசை அமைப்பாளர் கண்ணன் இதில் முக்கியமானவர்கள்.  பின்னால் தனது உயிர்த்த மனிதர் கூத்து எனும் நாடகத்திலும் பல்கலைகழகத்தில் சிதம்பரநாதன் பறையைப்பயன்படுத்தினார். இவற்றைத் தொடர்ந்து பறை தமிழரின் பாரம்பரிய இசை என்ற உரையாடல்களும் நடைபெறலாயின.

எனினும் பறை பிரதான நீரோட்டத்துள் யாழ்ப்பாணத்தில் அன்று புக முடியவில்லை. இத்தனைக்கும் பறை அங்கு ஆகமம் சாராக் கோவில்களில் இசைக்கப்பட்டது. நல்லூர்க் கந்தசாமி கோவிலுக்குள் முரசம் எனும் பறை ஒலி ஒலிக்கப்படுகிறது. எனினும் பறை இசையைப் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகம் தமிழர் இசையாக ஏற்கவில்லை. பறை இசை மரண வீட்டோடும், ஒரு சாகியத்தோடுமே சேர்த்துப்பார்க்கப்பட்டது.  இந்நிலையில் தமிழ் இன்னிய அணியினை உருவாக்கும் முயற்சிகளில் சில பாடசாலைகள் இறங்கின. அவையும் பறையைத் தமது இன்னிய அணி வாத்தியங்களுடன் இணைத்துக் கொள்ளவில்லை. பல்கலைக்கழகத்தாலேயே முடியவில்லை. பாடசாலைகள் எம்மாத்திரம்? இப்பின்னணியில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பணி மிக முக்கியமானதாக அமைகின்றது.

 கிழக்குப்பல்கலைக்கழகமும் பறை இசையும்

Eastern-University-students-2

கிழக்குப்பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறை உலக நாடக தின விழாவை நடத்த ஆரம்பித்தது. அது 1996 இல் என நினைக்கிறேன்.1998 இல் இதனை திங்கள் தொடக்கம் வெள்ளி வரையிலான பெரு விழாவாகப் வடிவமைத்தோம், இதில் மிக முக்கிய பங்கு பாலசுகுமாருக்கு இருந்தது. அந்நாடக தின விழாவின் தொடக்கத்தைப் பறை ஓசையுடன் ஆரம்பிப்பது என முடிவு செய்தோம். பாலசுகுமாரே இந்த ஆலோசனையை வழங்கியதுடன் எனக்கு வலக்கரமாகவும் செயற்பட்டார். என்னை நன்கு புரிந்துகொண்ட மாணவரும் நண்பருமான சிவரத்தினம் அப்போது விரிவுரையாளராக இருந்தார், அவர் கழுதாவளையைச் சேர்ந்தவர். அவர் பறைமீதும், பறை வாசிக்கும் சமூகம் மீதும் விருப்பமும் அனுதாபமும் கொண்டவர்.

அச்சமூகம் சம உரிமை பெற வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட முற்போக்கான இளைஞர், அவருக்கு ஊரில் நல்ல செல்வாக்கு இருந்தது. அவரே கழுதாவளை பறையை நாடக விழாவுக்கு ஒழுங்கு செய்து தந்தார். முதல் நாடக விழாவில் பெரியவர் வையமூப்பன் ஆனைக்குட்டியையும் அவரது சக கலைஞர்களும் சீடர்களுமான உம்முணி, பரசுராமன்  ஆகியோரையும் அழைத்துவர பல்கலைக்கழகம் வாகனம் அனுப்பியது. வாகனத்தில் வந்த பறை இசைக் கலைஞர்கள் பல்கலைக்கழகத்தில் இறங்கினர். மிக நீண்ட நாடகங்களின் பின் – ஏறத்தாழ 20 ஆண்டுகளின் பின் – பெரியவர் ஆனைக்குட்டியைச் சந்திக்கிறேன். அவர் சற்றுத் தளர்ந்து போய் இருந்தார், என்றாலும் அந்தக் கிண்டலும்,கணீரென்ற வெண்கலக்குரலும் மாறவேயில்லை.  என்னை இனம் கண்டுகொண்டு ஆனந்தமாக உரையாடினார். அன்று அவரே சொர்ணாளி வாசித்தார், பரசுராமன் பிரதான பறையை இசைத்தார்.

அன்றைய பல்கலைக்கழக உலக நாடக தின விழா அவர்களின் பறை ஒலி,சொர்ணாளி இசையுடன் ஆரம்பமானது. பல்கலைக்கழகத்துள் அதுவும் ஒரு விழா ஆரம்பத்தில் பறை ஒலியும் சொர்ணாளி இசையும் ஒலித்தமை பலரை ஆச்சரியத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. எனினும் யாரும் வெளிப்படையாக எதிர்க்கவில்லை. சிலர் முகத்தைச் சுளித்துக்கொண்டனர்.

Eastern-University-students-6

அன்று பறைமேளம் இசைத்த அந்தக்கலைஞர்கள் வினோதமான  ஒரு நிகழ்வையும் அன்று நிகழ்த்தினர். அவர்களுள் ஒருவரின் கண்கள் கறுப்புத் துணியினால் கட்டப்படும், ஓர் இடத்தில் ஒரு பொருளை மறைத்து வைப்பர். அப்பொருள் இருக்கும் இடம்  கறுப்புத் துணியினால் கண்கள் கட்டப்பட்டவருக்கு தெரியாது. ஆனால் ஊதப்படும் சொர்ணாளி எனும் குழல் ஓசை அவரை வழி நடத்தும், இசைமூலம் வழிநடத்தப்படும் அவர் அதன் வழி நடந்து சென்று அப்பொருளைக் கண்டுபிடித்து எமக்குக் காட்டுவார். கண்கள் கட்டப்பட்டபடியே இருக்கும் பறைமேளக்கலைஞர்களின் இந்த ஆற்றுகை அன்று மாணவர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியதுடன் அக்கலைஞர்கள் மீது ஓர் மதிப்பையும் ஏற்படுத்திவிட்டது. திறன் கண்டு மயங்காதோர் யாருளர்? இதன்பின் வருடம் தோறும் பறை ஓசையுடன் நுண்கலைத்துறை நடத்தும் உலக நாடக தின விழா ஆரம்பிப்பது வழமையாகிவிட்டது. அப்போதுதான் நாம் நாடக விழாவுக்கு வரும் கலைஞர்கள் விருந்தினர்களை அழைத்து வர ஓர் இன்னிய அணியை ஆரம்பிப்பது என முடிவு செய்தோம்.

ஏற்கனவே என் மனதை உறுத்திக்கொண்டிருந்த சிங்கள மக்களின் கண்டிப் பெரஹரா அணி போன்ற ஓர் அணியை உருவாக்கும் காலமும் கனிந்தது. பறை  மத்தளம், உடுக்கு,  சவணிக்கை,  எக்காளம், தாளம், றபான் முதலான வாத்தியங்களைக் கொண்டதாக இவ்வின்னிய அணியை வடிவமைத்தோம்.

பத்து மத்தளம், நான்கு பறைகள், பத்து உடுக்கு, ஆறு றபாணம் என்பன இதில் பயன்படுத்தப்பட்டன. இதன் முக்கியத்துவத்தை அறிந்து இதற்கான உதவிகள் வழங்கிய பல்கலைக்கழக அதிகாரிகள் மூவர் இங்கு நினைவுகூரப்பட வேண்டியவர்கள். ஒருவர் அன்று பல்கலைக்கழக பதில் உபவேந்தராகக் கடமை புரிந்த யுவி தங்கராஜா. இவர் ஒரு  சமூகவியல் மானிடவியல்காரர். அதனால் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்.

மற்றவர் நிதியாளராக இருந்த பிறேமசந்திரா, அவர் மிருதங்கம் பயின்றவர். முற்போக்காளர். அவரும் இதன் அவசியத்தை உணர்ந்தார். அடுத்தவர் பதிவாளராக இருந்த ஹரீஸ் அவர்கள். சிலாபத்தைச் சேர்ந்த கிறிஸ்தவரான இவரும் உள்ளூர்க்கலைமீது பற்றுக்கொண்டவர். இவர்கள் எமக்கு 50,000 ரூபாய் அன்று தந்து இதனை ஆரம்பிக்குமாறு கூறினர். இன்னிய அணியின் பிரதான வாத்தியங்களுள் ஒன்றாக பறையும் இடம் பெறலாயிற்று. அடுத்து இந்தப்பறையை அடிப்பது யார் என்ற பிரச்சினை எழுந்தது. இதுவரையும் பறையை அதனை வாசிக்கும் சமூகத்தினரே பொது வெளியில் அடித்தனர். இப்போது பல்கலை மாணவர்கள் அடிக்க வேண்டியதாயிற்று.

கிழக்குப்பல்கலைக்கழக மாணவர்கள் பறை பயின்றமை

மாணவர்கள் பறைமேளம் வாசிக்கும் பயிற்சியினை அவர்களுக்கு வழங்க நாம் ஆனைக்குட்டி குழவினரை அழைத்திருந்தோம். பயிற்சிதர அவர்களும் பல்கலைக்கழகம் வந்தனர். ஆனால் அவர்களிடம்   பறை இசை பழகுவதிலும்   பறையினைத் தூக்குவதிலும், முக்கியமாக அதனைத் தூக்கிகொண்டு ஊர்வலத்தில் வருவதிலும் மாணவர்கள் பலர் தயக்கம் காட்டினர். இத்தயக்கத்தைப்  போக்க நாம் இரண்டு வழிகளைக் கையாண்டோம். முதலாவதாக கருத்தியல் ரீதியாக அவர்களுக்கு பாரம்பரியக் கருவியான பறை பற்றிப் போதித்தமை. இவ்வகையில் பறை பற்றியும், அது எவ்வாறு பண்டைக்காலத்தில் தமிழர் மத்தியில் ஒரு பிரதானமான வாத்தியமாக ஊர்வலங்களில் பாவிக்கப்பட்டது என்பதை வரலாற்று ரீதியாக விளக்கி வகுப்புகள் எடுத்தோம்.

Eastern-University-students-5

இரண்டாவதாக நடைமுறையில் நாமே அவ்வாத்தியங்களை மேடையில் இசைத்துக் காட்டினோம். 1999 இல் நடைபெற்ற இன்னிய அணியில் ஜெயசங்கர் நட்டுவமேளம் அடித்துக்கொண்டு மாணவர்களுடன் அணியில் வந்தார். 2002 இல் மேடை கண்ட கிழக்கிசையில் நான் மேடையில் மாணவர்களுடன் இணைந்து உடுக்கு வாசித்தேன், விமல்ராஜ் பறை வாசித்தார்,  மோஹனதாசன் பறை வாசித்தார்,  பாலசுகுமார் பறை வாசித்தார்.

விரிவுரையாளர்கள் முன்னுதாரணங்களாகத் திகழ மாணவர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்   கழுதாவளையைச் சேர்ந்த பார்த்திபன் என் ஞாபகத்திற்கு வருகிறான். பாரம்பரிய மரபுகளை அழுத்தமாகப் பேணும் கிராமமான களுவாஞ்சிக்குடி மாணவன் இவன், களுவாஞ்சிக்குடி கழுதாவளைக்கு அயற் கிராமம். அதில் இருந்து வந்த அவன், பறையுடன் இணைந்த தப்பட்டையை முழக்கிக்கொண்டு இன்னிய அணியின் முன்னால் அவர்களை வழி நடத்தி வந்தான். பெண் பிள்ளைகளான சுகன்யா, உமா, சுபத்திரா ஆகியோரும் துணிந்து பறைதூக்கி இன்னிய அணியில் வர ஆரம்பித்தனர். பெண்கள் பறை இசை ஒலித்தபடி இன்னிய அணியில் வருவதைக் கண்டு கிழக்குப் பல்கலைக்கழகச் சமூகம் மூக்குமீது விரலை வைத்தது. இது என்ன புதினம்? பெண்கள் பறை அடிப்பதா? துணிவோடு பெண்கள் ஆண்களுக்குச் சமமாகப் பறையுடன் பவனியில் வந்தனர்.

மேளப்பேச்சு

Eastern-University-students

வையமூப்பன் தளர்ந்து போயிருந்தார், அவர் சீடரான பரசுராமரை பல்கலைக்கழகம் வரவழைத்தோம். அவர் மாணவர்களுக்குப் பறை இசைப் பயிற்சி அளித்தார். அவரிடம் பலரும் பறை பழகினர்.   தாளக்கட்டுகளை அடிக்கும் முறையினை, ஆடல் அசைவுகளைக் கற்றுக்கொண்டனர். மோகனதாசனும் பார்த்திபனும், சந்திரகுமாரும், தயாபரனும் மிகக்கெதியாக அவரிடம் பறை இசை நுட்பங்களைக் கற்றுக்கொண்டனர். 2005 இல் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை சார்பில் நான் ஒரு நிகழ்ச்சி தயாரித்தேன். அதன் பெயர் மேளப்பேச்சு மேடையில் பறையையும் மத்தளத்தையும் பேச வைத்தேன். மத்தளம் ஒலிக்கும் கூத்துத்தாளக்கட்டுகளை பறையும் தன் ஓசையில் அப்படியே ஒலிக்கும். அதன்பின் இரு வாத்தியங்களும் தத்தம் இசைகளால் பேசிக்கொள்ளும் இந்நிகழ்வில் பார்த்திபன் பறையைத் தூக்கினார்.மோஹனதாசன் மத்தளத்தைத் தூக்கினார். பறையும், மத்தளமும் அழகாகப் பேசிக்கொண்டன. அதன் பின்னால் 2006 இல் தயாரித்த  லயம்  எனும் ஒரு நிகழ்ச்சியில்  மிருதங்கம், மத்தளம், பறை, உடுக்கு ஆகிய தோல் வாத்தியங்களைப் பேச வைத்தோம்.

அந்நிகழ்விலே அன்று மாணவர்களாக இருந்த இன்றைய நுண்கலைத்தலைவர் சந்திரகுமார், விவேகானந்தராஜா, மோகனதாசன், தயாபரன் ஆகியோரும் இன்னும் பலரும் பறை இசைத்தனர்.  மத்தளத்தின் கூத்துத் தாளக்கட்டுகளைப் பேசிய பறை வாத்தியம் இப்போது மிருதங்கத்தில் ஒலித்த பரத ஜதிக்கட்டுகளையும் பேச ஆரம்பித்தது. இதில் மிருதங்க வித்துவான் காலம் சென்ற ஶ்ரீதரன் மிருதங்கத்தில் ஜதிக்கட்டுகளை வாசித்தார். மோகனதாசன் மத்தளத்தில் அதற்குப் பதில் தந்தார்.

பறை பழகிய மாணவர்களான சந்திரகுமார் (இன்றைய கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர்), தயாபரன் (இன்று அசிரியர்), தயூப் (இன்றைய ஆசிரியர்), பறையில் அந்த ஜதிகளை வாசித்தனர்.  பறையானது மத்தளம், மிருதங்க ஆகியவற்றுடன் சரிக்குச் சரியாகச் சமமாக நின்றது. பறை உலக நாடக தின விழாவின் ஆரம்பத்தில் ஒலிக்கிறது, பறை இன்னிய அணியில் இசைத்தபடி வருகிறது, பறை மத்தளம் கூறும் கூத்து ஜதிக்கட்டை அழகாக வாசிக்கிறது, பறை மிருதங்கம் கூறு பரத ஜதியைக் கூறுகிறது.

பறை ஏனைய தோல் வாத்தியங்களுடன் சரிசமமாக நிற்கிறது. ஆம்,  பறையை அனைத்து தோல் வாத்தியங்களுடன் சமமாக வைத்தோம். அதற்கான சகல தகுதிகளும் அதற்கிருந்தது. பறை பற்றிய தயக்க மயக்கங்கள் மாணவர்கள் மத்தியில் மெல்ல மெல்ல விலக ஆரம்பிக்கின்றன. இந்த நேரம் தான் நான் இராவணேசன் தயாரித்துக்கொண்டிருந்தேன். யுத்தக்காட்சிகளுக்கு பறையை  ஒரு முக்கிய இசை வாத்தியமாகப் பயன்படுத்தும் எண்ணம் உருவானது. பயன்படுத்தினேன், நாடகம் இன்னும் வேகம் கண்டது.

பல்கலைக்கழக மாணவர்கள்  இசைத்த  பறை  இசை

Eastern-University-students-3

2003 உலக நாடக தின விழாவை எமது நுண்கலைத்துறை மாணவர்களே பறைமேளம் வாசித்துத் தொடக்கி வைக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. அதில் ஆரம்ப உரையைப் பாலசுகுமார் நிகழ்த்த பார்த்திபன் அந்த நிகழ்ச்சியை அறிமுகம் செய்து ஆரம்பித்து வைத்து பிரதான பறை இசைக்கலைஞனாக மேடையில் நின்று பறை இசைத்தார்.  அதில் கௌரீசன், சந்திரகுமார், மோகனதாசன், தயாபரன் போன்றோர் பறை ஒலி எழுப்பி உலக நாடக தின விழாவை ஆரம்பித்து வைத்தனர். சந்திரகுமார், தயாபரன், மோகனதாசன் ஆகிய விரிவுரையாளர்கள் வாசித்த பறை நிகழ்வை பாரம்பரிய பறை வாசிக்கும் சமூகம் வாசித்த பறை நிகழ்வு எனப் பத்திரிகைகள் படத்துடன் வெளியிட்டிருந்தமை இவ்வ்விடத்தில் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு சமூகம் வாசித்த பறை இசை வாத்தியம் பல்கலைக்கழக மாணவ சமூகம் வாசிக்கும் விதமாக வளர்ந்த கதை இது. பறை இசையோடு பவனிவந்த இன்னிய அணியின் அழகில் மயங்கி அதனை தனது பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின் உத்தியோகபூர்வ அணியாக பல்கலைக்கழக மூதவையும் (senate) பேரவையும் (Council) ஏற்றுக்கொண்டபோது அது அறிஞர் அங்கீகாரமும், உலக அங்கீகாரமும் பெற்றது எனக்கொள்ளலாம்.

அண்மையில் தமிழ் நாட்டில் இருந்து இங்கு பறை இசைக்கலைஞர் மணிமாறன் தனது குழுவினருடன் இங்கு வந்திருந்தார். அவரைக்கொண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்குப் தமிழ் நாட்டுப்பறை இசைப்பயிற்சி தரப்பட்டது. தமிழ் நாட்டுப்பறை இசைக்கலைஞர்களும், மட்டக்களப்புப் பறை இசைகலைஞர்களும் மேடையில் ஒன்றாகத் தோன்றிப் பறை இசைமுழக்கிய காட்சி அனைவரின் மனதையும் கவர்ந்தது.  நிறுவக மிருதங்க இசைக்கலைஞரான சர்மாவும்  ஒரு பெரும்பறையைத் தூக்கி அவர்களுடன் அந்நிகழ்வில் கலந்துகொண்டார். பல்கலைக்கழகத்துள் பறை புகுந்ததாயினும் இன்னும் அது பாட விதானத்துள் புகவில்லை, அதனை முறையாகப் பயிலும் ஒரு பாடத்திட்டம் இன்னும் தயாரிக்கப்படவில்லை. தயாரிக்கப்படும் என்று நம்புவோமாக. பறை, தமிழரின் பாரம்பரிய இசை என முழங்கி முன்வருவோரும் பறைதானே எனக்கூறி இதில் ஒன்றுமில்லை என அனுங்கி ஒதுங்குவோருமென  இரு வகைப்பட்ட அல்லது இரு நிலைப்பட்ட மாணவர்களை இன்றும் கிழக்குப்பல்கலைக்கழக வளாகத்துள்ளும், விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்துள்ளும் காண்கிறோம்.

பல்கலைக்கழகத்துள் பறை  இசை  நிலைக்குமா? இல்லையா? என்பதனை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

முற்றும்.


ஒலிவடிவில் கேட்க

12363 பார்வைகள்

About the Author

சின்னையா மௌனகுரு

சின்னையா மௌனகுரு அவர்கள் இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த பேராசிரியர், அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குநர்,  நடிகர், கூத்துக் கலைஞர் என்று பல தளங்களில் இன்றும் இயங்கிவருபவர்.ஈழத்து அரங்கத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிலரில்    மௌனகுரு குறிப்பிடத்தக்கவர்.   ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய  புகழ்பெற்ற கூத்து நாடகங்கள் மௌனகுருவுக்கு தனியான அடையாளத்தை வழங்கின. இவர், 20ம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் - 1984, சடங்கில் இருந்து  நாடகம் வரை - 1985, மௌனகுருவின்   மூன்று நாடகங்கள் - 1985, தப்பி வந்த தாடி ஆடு - 1987, பழையதும் புதியதும் நாடகம் அரங்கியல் - 1992, சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும் - 1992, சங்காரம் - ஆற்றுகையும் தாக்கமும் ( நாடகம்)  - 1993, ஈழத்து தமிழ் நாடக அரங்கு - 1993, கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் - நீலாவணன் - 1994, கலை இலக்கிய கட்டுரைகள் - 1997, சக்தி பிறக்குது - நாடகம் - 1997, பேராசிரியர் எதிர்வீர சரத்சந்திராவும் ஈழத்து நாடக மரபும்  - 1997, ஈழத்து நாடக அரங்கு - 2ம் திருத்திய பதிப்பு - 2004, தமிழ்க் கூத்துக்கலை – வடமோடி ஆட்டப்பயிற்சிக்கான கைந்நூல் - 2010, கூத்த யாத்திரை -  2021, கூத்தே உன் பன்மை அழகு -  2021 போன்ற பலநூல்களை எழுதியுள்ளார்.
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்
  • May 2024 (1)
  • April 2024 (2)
  • March 2024 (1)
  • November 2023 (5)
  • October 2023 (4)
  • September 2023 (3)
  • July 2023 (3)
  • June 2023 (1)
  • May 2023 (4)
  • April 2023 (2)
  • March 2023 (2)
  • February 2023 (1)
  • January 2023 (1)