Arts
33 நிமிட வாசிப்பு

தேசிய இனப் பிரச்சினையும் இலங்கையின் இடதுசாரி இயக்கமும் – பகுதி 3

October 20, 2023 | Ezhuna

ஆங்கில மூலம் : குமாரி ஜயவர்த்தன

இனவாதமும் ஐக்கிய முன்னணி தந்திரோபாயமும்

1950 களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மக்களின் கவனத்தை ஈர்க்கும் இரு விடயங்களில் அக்கட்சி பிரச்சாரத்தை மேற்கொண்டது.

  • சமயம், மொழி என்பன சார்ந்த பண்பாட்டுப் பிரச்சினைகள்
  • கைத்தொழில் வர்த்தக முயற்சிகளைத் தேசியமயமாக்கல், ஏகாதிபத்திய இராணுவத் தளங்களை மீட்டு எடுத்தல் ஆகிய கிளர்ச்சிவாதக் கோரிக்கைகளை முன்னெடுத்தல்.

மேற்குறித்த இரு பிரச்சினைகளை அக்கட்சி முன்னெடுத்தபோது இடதுசாரிகளிடையே ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் தேர்தல் உடன்பாட்டை ஏன் வைத்துக் கொள்ளக் கூடாது? ஏன் அரசியல் களத்தில் அவர்களோடு கூட்டுச் சேர்ந்து நடக்கக் கூடாது என்பன போன்ற வினாக்கள் இடதுசாரிக் கட்சியினரிடம் தோன்றியது. 1935 ஆம் ஆண்டு முதல் லங்கா சமசமாஜக்கட்சி கிளர்ச்சிவாதக் கருத்துக்களைக் கூறிவந்தது. இக்கிளர்ச்சிவாத எதிர்ப்பு இயக்கத்தின் உச்சக்கட்டமாக 1953 ‘ஹர்த்தஸ்’ என்னும் கதவடைப்பு நிகழ்வு அமைந்தது. ஆயினும் லங்கா சமசமாஜக் கட்சியினால் உருவாக்கி வளர்க்கப்பட்ட கிளர்ச்சிவாதத்தையும் முற்போக்கு நடவடிக்கைகளையும் 1950 களின் நடுப்பகுதியில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி இலகுவாகவும் விரைவாகவும் லங்கா சமசமாஜக் கட்சியிடம் இருந்து அபகரித்துத் தனதாக்கிக் கொண்டது. குட்டி முதலாளித்துவத்தின் மேலாண்மைக்கு உட்பட்டதான அக்கட்சி, கிளர்ச்சிவாதத்துடன் இனவாதக் கருத்தியலையும் கலப்புச் செய்தது. இக்கலவையான கருத்தியல் 1950 களின் சூழலில் மக்களின் கவனத்தைத் திருப்புவதில் வெற்றி கண்டது.

1955 இல் பிலிப் குணவர்த்தனவின் ‘VLSSP’ கட்சி ‘சிங்களம் மட்டும்’ என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டு 1956 இல் ‘மஹாஜன எக்சத் பெரமுன’ (MEP) என்ற கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. 1956 தேர்தலின்போது லங்கா சமசமாஜக்கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து என்ற கொள்கையையே பின்பற்றியபோதும், மஹாஜன எக்சத் பெரமுனவுடன் போட்டித் தவிர்ப்பு உடன்பாட்டைக் கடைப்பிடித்தன. போட்டித் தவிர்ப்பு உடன்பாட்டைச் செய்து கொண்ட கட்சி தேர்தல் முடிந்து 24 மணி நேரத்தில் ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்துவதாகப் பிரகடனம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இருமொழிகளுக்கும் சம அந்தஸ்து (Parity of Status) என்ற கொள்கையைத் கைவிட்ட அடுத்த கட்சியாக இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி விளங்கியது. 1956 இல் தேர்தலின் போது இவ்விடயம் தொடர்பாக உட்கட்சிக் கருத்துபேதம் இருந்தது. அத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று ஆசனங்களை வென்றது. அவற்றுள் ஒரு ஆசனம் தமிழரான (பொன். கந்தையா) ஒருவரால் வென்றெடுக்கப்பட்டது. தேர்தலின் பிந்திய அரசாங்கத்தின் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி வாக்களித்தது. ஆயினும் பஸ்போக்குவரத்து துறையைத் தேசியமயமாக்குதல், துறைமுகம், பெற்றோலியம் ஆகியவற்றை தேசியமயமாக்குதல், சோஷலிச நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துதல், இலங்கையில் பிரித்தானியர் கையில் விடப்பட்டிருந்த இராணுவத் தளங்களைப் பொறுப்பேற்றல் போன்ற உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளில் கம்யூனிஸ்ட்கட்சி ‘மஹாஜன எக்சத் பெரமுன’ அரசுக்கு ஆதரவு வழங்கியது. ‘தேசிய முதலாளித்துவத்தின்’ முற்போக்குக் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்ற கொள்கையை 1950 களில் ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு ‘மஹாஜன எக்சத் பெரமுன’வுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் இருக்கவில்லை.

1960 ஆம் ஆண்டளவில் மொழிக்கொள்கை தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை மாற்றம் அடைந்து, அவ்வாண்டில் நடைபெற்ற கட்சியின் 6 ஆவது மாநாட்டில் மொழி பற்றிய கட்சியின் முன்னைய கொள்கை ‘பண்பாட்டு போராட்டம்’ தொடர்பான குறுங்குழுவாதம் எனக் கண்டிக்கப்பட்டது. இது சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிகளுக்கும் ‘சம அந்தஸ்து’ என்ற கொள்கை யதார்த்த நிலைமையை மார்க்சிய லெனினிச அடிப்படையில் புரிந்து கொள்ளத் தவறியதால் ஏற்பட்டது என்று கண்டிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் 1960 தேர்தல் பிரகடனத்தில் ‘சிங்களம் மட்டுமே அரச மொழியாக இருக்கும்’ என்றும் தமிழர் வாழும் பகுதிகளிலும் கல்வி, நிர்வாகம் ஆகியனவற்றிற்கான மொழியாக மட்டும் தமிழும் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

லங்கா சமசமாஜக்கட்சியும் இக்காலத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை நோக்கி நகரத் தொடங்கியது. 1960 தேர்தல் பிரகடனத்தில் அக்கட்சி இருமொழிகளுக்கும் சம அந்தஸ்து என்ற கொள்கையைத் தெரிவித்திருந்தது. ஆயினும் அக்கட்சி சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கையைச் செய்து கொண்டது. சிறிலங்கா சுதந்திரக்கட்சி ‘சிங்களம் மட்டும்’ கொள்கையை அப்போது வலியுறுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1963 இல் கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, பிலிப் குணவர்த்தனவின் VLSSP என்ற மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து ஐக்கிய இடதுசாரி முன்னணி (U.L.F) என்ற கூட்டு முன்னணியை ஏற்படுத்தின. இவ்வாறு இக்கட்சிகள் ஒன்றிணைந்தமையினால் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சிங்கள தேசியவாத உணர்வை இவையும் உள்வாங்கிக் கொண்டன எனலாம். 1930 களில் இடதுசாரிகளிற்கிடையே பிரிவினைகள் தோன்றின. அதன்பின் முதற்தடவையாக 1963 இல் இக்கட்சிகள் ஐக்கிய இடதுசாரி முன்னணியாக ஒன்றிணைந்தன. இவ்வாறு ஒன்றிணைந்தமை மக்களிடையே பெரும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருந்தன. அவ்வாண்டு இக்கட்சிகள் நடத்திய கூட்டு மே தினக் கூட்டத்தில் இக்கட்சிகளின் தலைவர்களான பிலிப்குணவர்த்தன, என்.எம்.பெரரா, எஸ்.ஏ. விக்கிரமசிங்க ஆகிய மூவரும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றினர். இடதுசாரிக் கட்சிகளின் ஐக்கியம் முன்னர் இக்கட்சிகள் மொழிக்கொள்கை தொடர்பாக எடுத்த மார்க்சிய விரோத நிலைப்பாட்டைத் திருத்திக் கொள்வதற்கு உதவுவதற்குப் பதிலாக அதற்கு எதிர்மறையான விளைவையே தந்தது. இக்கூட்டணி அமைக்கப்பட்ட பின்னர் லங்கா சமசமாஜக் கட்சி இருமொழிகளுக்கும் சம அந்தஸ்து என்ற தனது கொள்கையில் இருந்து பின்வாங்கியது. 1963 இல் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் கொள்கைத்திட்டம் ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை ஏற்றுக்கொண்டது. தமிழ்ப் பெரும்பான்மையுடைய பகுதிகளில் ‘நியாயமான அளவு தமிழ் உபயோகம்’ என்ற கருத்தை முன்னணியின் திட்டம் குறிப்பிட்டிருந்தது. (Kearney 1967:126-27)

1963 இன் மே தினத்தில் வெளிப்பட்ட இடதுசாரி ஐக்கிய முன்னணியின் (U.L.F) ஒற்றுமை விரைவிலேயே மறைந்தது. 1961 இல் லங்கா சமசமாஜக் கட்சி சிறீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொண்டது. பின்னர் 1965 இல் லங்கா சமசமாஜக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் ‘சிங்களம் மட்டும் சட்டத்தை’ ஏற்றுக்கொண்டது. இவ்வாறு லங்கா சமசமாஜக் கட்சி தனது கொள்கைத் திட்டத்தை மாற்றிக் கொண்டதால், அக்கட்சியில் பிளவு தோன்றியது. லங்கா சமசமாஜக்கட்சி – புரட்சிப்பிரிவு (LSSP – R) என்ற பெயரில் ஒரு குழுவினர் பிரிந்து தனித்து இயங்கினர். இக் கட்சி (புரட்சிப்பிரிவு) சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிகளுக்கும் சம அந்தஸ்து என்ற கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றியது. லங்கா சமசமாஜக் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பின்னடைவான காலமாக 1965-70 அமைந்தது. இந்த இருண்ட காலத்தில் இக்கட்சிகள் மிகக்கேவலமான இனவாதத்தில் இறங்கின. ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழர்களின் கட்சியான சமஷ்டிக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க இக்காலத்தில், இவ்விரு இடதுசாரிக் கட்சிகளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டு முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பு என்ற போர்வையில் கத்தோலிக்கர், தமிழர், இந்தியர்கள், பறங்கியர்கள், முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மை இனத்தவர்களின் மீது தமது காழ்ப்புணர்ச்சியை வெளியிட்டனர். சிங்கள பௌத்தர்களான முதலாளிகள் தவிர்ந்த பிற எல்லோர் மீதும் முதலாளித்துவ எதிர்ப்புக் கூச்சல் எழுப்பப்பட்டது.

இடதுசாரிக் கட்சிகளின் ‘அத்த’, ‘ஜனதின’, ‘ஜனசத்திய’, ‘ஜயமதய’ என்ற ஊடகங்கள் வெளிப்படையாகவே இனவாதத்தைக் கக்கின. இப்பத்திரிகைகளின் இனவாதம் சில தசாப்தங்களுக்கு முன்னர் அநகாரிக தர்மபால தன் பேச்சிலும் எழுத்திலும் கக்கிய இனவாதத்தை ஒத்ததாக இருந்தது. “தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு கொடுத்து அதனை வெற்றியடையச் செய்தவர்கள் யார்?” என்ற கேள்வியை 1966 மார்ச் 29 ஆம் திகதிய ‘ஜனசத்திய’வின் ஆசிரியர் தலையங்கம் எழுப்பியது. அக்கேள்விக்கு அத்தலையங்கத்தில் அளிக்கப்பட்ட விடை பின்வருமாறு அமைந்தது.

“உள்ளூர் முதலாளிகளும் அந்நிய முதலாளிகளும் கூட்டுச்சேர்ந்து இந்த அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். தொண்டமான் தலைமையிலான இந்தியர்களும், பொன்னம்பலம் தலைமையிலான தமிழர்களும், கத்தோலிக்கத் திருச்சபையும் முஸ்லிம்களும் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வர்த்தகக் கொள்கையை எதிர்த்தார்கள்; அந்நிய கலாசாரத்தை ஏற்றுக்கொண்டவர்களாய் எமது சுதேசிய கலாசாரத்தை எதிர்த்தவர்களான குழுவினரும், முதலாளித்துவப் பத்திரிகைகளும், ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கினர்.” [வணசிங்க 1964: பக்.16),

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் குட்டி முதலாளித்துவத்தைக் கவரும் இனவாதம், கிளர்ச்சிவாதம் என்ற போர்வையில் வெளிப்பட்டது. பின்னர் ஏறக்குறைய 40 ஆண்டுகள் கழித்து, இனவாதக் கலவையுடன் கிளர்ச்சிவாதம், 1920 களின் கிளர்ச்சிவாதத்தின் உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் கொண்டதாக மீண்டும் வெளிப்பட்டது. காலச்சக்கரத்தின் சுழற்சியில் இனவாதம் இடதுசாரிகள் ஊடாக வெளிப்பட்ட கோலம் விநோதமானது. இடதுசாரிகள் குட்டி முதலாளித்துவ வகுப்பைக் கவரும் கிளர்ச்சிவாத, இனவாதக் கலவையை முன்வைத்தனர்.

இடதுசாரிகளின் புதிய கொள்கை உட்கட்சிப் பிரச்சினைகளைக் தோற்றுவித்தது. கட்சியின் உறுப்பினர்களில் கிளர்ச்சிவாதிகளாகவும் தமிழர்களாகவும் இருந்தோரில் பலர் இனவாதத்தைக் கட்சி தழுவியதைப்பற்றிக் கடுமையாக விமர்சித்தனர். லங்கா சமசமாஜக் கட்சியின் புரட்சிப்பிரிவு இடதுசாரிகளின் இனவாதத்தைக் கண்டித்தது. சிட்னி வணசிங்கவினைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘யங் சோஷலிஸ்ட்’ (Young Socialist) சஞ்சிகையில் 1955, 1966ஆம் ஆண்டுகளில் வெளிவந்த கட்டுரைகளில் அக்காலகட்டத்தின் பிரச்சினைகள் பற்றி எழுதப்பட்டுள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள்,

  • 1964 இன் சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கை
  • 1966 இல் ஐக்கிய தேசியக்கட்சி அரசினால் முன்வைக்கப்பட்ட தமிழ்மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்

என்ற இரண்டு விடயங்கள் தொடர்பாகக் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கையின்படி இந்திய தோட்டத் தொழிலாளர்களை இந்தியாவிற்குத் திருப்பியனுப்புதல், நீண்டகாலப் பிரச்சினை ஒன்றுக்கான தீர்வாக அமையுமெனக் கருதிய கம்யூனிஸ்ட் கட்சி இதனை ஆதரித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் தோட்டத்தொழிலாளர் சம்மேளனம் (The United Plantation Workers Union) இவ் உடன்படிக்கையை எதிர்த்தது. ஆயினும் கட்சியின் யாழ்ப்பாணத்துத் தலைவர்கள் உடன்படிக்கையை ஆதரித்தனர். தமிழர் பிரதேசங்களில் நிர்வாகத் தேவைகளுக்காக தமிழ்மொழியை உபயோகித்தல், அரசாங்கம் தமிழர்களோடு தொடர்புகளை மேற்கொள்ளும்போது தமிழைத் தொடர்பு மொழியாக உபயோகித்தல் ஆகிய இருவிடயங்களைச் சட்டபூர்வமானதாக ஆக்கும் வகையில் 1966 ஆம் ஆண்டில் தமிழ்மொழி – விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற சட்டத்தை முன்மொழிந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியும் லங்கா சமசமாஜக் கட்சியும் இச்சட்டத்தை எதிர்த்தன. இச்சட்டத்தை எதிர்த்து 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இவ்விரு இடதுசாரிக் கட்சிகளும் கலந்து கொண்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் இனவாத வெறிக்கூச்சல்கள் முழங்கின; வன்முறை நிகழ்வுகள் இடம்பெற்றன. பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு புத்தபிக்கு கொல்லப்பட்டார். இதனையடுத்து அரசினால் அவசரகாலச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு, எதிர்கட்சியினருக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இனவாத உணர்வுகள் கிளர்ந்து எழுந்தன. 1966 மே தினத்தின் போது ஊர்வலத்தில் பங்குபற்றிய கம்யூனிஸ்ட் கட்சியினதும், லங்கா சமசமாஜக் கட்சியினதும் தொழிலாளர்கள் இனவாதக் கூச்சலிட்டனர்.

மேலே குறிப்பிட்ட நிகழ்வுகள் யாவும் 1968 ஆம் ஆண்டில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றிடையே ஐக்கிய முன்னணி (United Front) என்ற கூட்டணியை உருவாக்க வழிகோலின. இம்முன்னணி ஒரு பொதுவேலைத்திட்டத்தை முன்வைத்தது. அவ்வேலைத்திட்டம் எதிர்காலத்தில் தாம் அமைக்கப்போகும் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படவுள்ள செயல்திட்டங்களைப் பற்றிய உறுதியுரையாக அமைந்தது. 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஐக்கிய முன்னணி பெருவெற்றியை ஈட்டியது. இவ்வெற்றியின் பயனாக இடதுசாரிக் கட்சிகள் தமது பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டன. லங்கா சமசமாஜக் கட்சிக்குப் பாராளுமன்றத்தில் 19 ஆசனங்களும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 ஆசனங்களும் கிடைத்தன. லங்கா சமசமாஜக் கட்சிக்கு நிதி, பெருந்தோட்டத்துறை, போக்குவரத்து ஆகிய மூன்று அமைச்சுப் பதவிகளும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு வீடமைப்பு அமைச்சு என்ற ஒரு பதவியும் வழங்கப்பட்டன. ஐக்கிய முன்னணி அரசில் லங்கா சமசமாஜக்கட்சி 1975 வரையும், கம்யூனிஸ்ட் கட்சி 1976 வரையும் இணைந்திருந்தன. இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்திருந்த 3-6 ஆண்டுகாலம் இனப்பிரச்சினை தொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் இழைத்த தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு உதவக்கூடிய காலமாக இருக்கவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தில் இடதுசாரிகள் இணைந்திருந்த காரணத்தினால் இனப்பிரச்சினை தொடர்பாகப் பல விட்டுக் கொடுப்புகளை இடதுசாரிகள் செய்தனர். 1972 ஆம் ஆண்டின் குடியரசு அரசியல் யாப்பை கொல்வின் ஆர்.டி.சில்வா வரைந்தார். அவ் அரசியல் யாப்பு ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை அரசியல் யாப்பின் அங்கமாக மாற்றியது. பிரிவு 7 இல் இலங்கையின் உத்தியோக மொழி சிங்களம் ஆக இருக்கும் (The Official Language of Sri Lanka shall be Sri Lanka) என்று குறிப்பிடப்பட்டது. அத்தோடு பௌத்த சமயத்திற்கு விசேட அந்தஸ்தினையும் அரசியல் யாப்பு வழங்கியது. பௌத்தத்திற்கு அரசியல் யாப்பு முதன்மையிடத்தை வழங்கியமை ‘சமயச்சார்பின்மை’ என்ற கொள்கைக்கு எதிரான பேரடியாக விளங்கியது. 1972 இன் அரசியல் யாப்பு பௌத்த சமயத்திற்கும், சிங்கள மொழிக்கும் விசேட சலுகையை வழங்கியமை முன்னைய அரசியல் யாப்பின் பிரிவு 29 இற்கு முரணானது. அப்பிரிவின் படி எந்தவொரு சமூகத்திற்கும் பிறசமூகங்களிற்கு வழங்கப்படாத சிறப்புச் சலுகைகளை வழங்குவதோ அல்லது பாதிப்புகளை ஏற்படுத்துவதோ தடைசெய்யப்பட்டிருந்தது. அரசியல் யாப்பின் படியான இன்னொரு வெளிப்படையான பாரபட்சமான ஏற்பாடு ஒன்றையும் குறிப்பிடலாம். அரசியல் யாப்பின்படியான சில அடிப்படை உரிமைகள் ஆட்களுக்கு (அல்லது நபர்களுக்கு) வழங்குவதற்குப் பதிலாக ‘பிரஜைகளுக்கு உரியது’ எனக்கூறப்பட்டது. (Certain Fundamental All rights only to ‘Citizens’ and not to ‘Persons) இதன் மூலம் பிரஜைகள் அல்லாதவர்களான பெருந்தோட்டத் தொழிலாளர்களிற்கு சில அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. இப்பெருந்தோட்டத் தொழிலாளர்களே இலங்கையில் மிகவும் பாதுகாப்பற்ற ஒரு சமூகம் என்பதும் அவர்களுக்கு தேவையாக இருந்த பாதுகாப்பு மறுக்கப்பட்டமை அப்பட்டமான பாரபட்சமாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக ஐக்கிய முன்னணி மேற்கொண்ட நடவடிக்கைகளும் திருப்தியற்றனவாகவே இருந்தன. 1972 ஆம் ஆண்டில் உள்ளூர் முதலாளிகளின் பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன. பின்னர் 1975 இல் அந்நிய தோட்டக் கம்பனிகளின் உடைமைகள் தேசியமயமாக்கப்பட்டன. இவ்வாறு தேசியமயமாக்கப்பட்டபோது தோட்டத்தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாயினர், 1972 இல் அமைக்கப்பட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொழிலாளர்களுக்கு பல்வகையான பாதிப்புக்களை உண்டாக்கின. அத்தோடு 1974 இல் திடீர் எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்ட பொருட்களின் விலை உயர்வு தோட்டங்களில் பஞ்சத்திற்கு ஒப்பான நிலையை ஏற்படுத்தியது.

மக்கள் விடுதலை முன்னணியும் குட்டி முதலாளித்துவக் கருத்தியலும் 

மக்கள் விடுதலை முன்னணி (J.V.P – ஜனதா விமுக்தி பெரமுன) ஒரு மக்கள் வாதக் கட்சியாகும் (Populist Party). இக்கட்சியில் கீழ்மத்தியதர வர்க்கத்தினரான சிங்கள இளைஞர்களே பெரும்பான்மையினராக இருந்தனர். இவர்கள் விவசாயக் குடியான் சமூகத்தில் இருந்து தோன்றியவர்கள். 1971 ஏப்பிரல் மாதம் இக்கட்சி அரச அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் கிளர்ச்சியை நடத்தியது. இக்கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது. மக்கள் விடுதலை முன்னணியை இடதுசாரி இயக்கத்தில் குட்டி முதலாளித்துவக் கருத்தியல் பெற்றிருந்த செல்வாக்கிற்கு மிகச்சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

மக்கள் விடுதலை முன்னணியில் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகள் கிளர்ச்சிவாதம் (Radicalism) என்ற பண்பை உடையவை. மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேசக் கொள்கை மாவோயிசம், கியுபா நாட்டுப் புரட்சி அனுபவம் என்பனவற்றில் இருந்து பெறப்பட்டவை. உள்நாட்டில் முதலாளித்துவ ஒழிப்பு நடவடிக்கைகளை மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்தது. ஆயினும் இவ்வியக்கத்தின் கொள்கைகளிலும் நடைமுறைகளிலும் தேசியவாத, இனவாதக் கருத்துக்கள் செறிந்திருந்தன. ‘இந்திய விஸ்தரிப்புவாதம்’, ‘தமிழரின் ஆதிக்கம்’ ஆகிய இரண்டினதும் ஆபத்துகள் பற்றி மக்கள் விடுதலை இயக்கத்தின் கருத்தியல் எடுத்துக் கூறியது. சேகுவேரா, பிடல் கஸ்ரோ ஆகிய இருவரின் கோஷங்களில் தேசப்பற்று, புரட்சி ஆகிய இரண்டும் உள்ளடங்கியிருந்தன. இவ்விரு புரட்சியாளர்களின் கோஷங்கள் இலங்கையின் மக்கள் விடுதலை இயக்க இளைஞர்களுக்கு கவர்ச்சியானவையாக இருந்தன. உதாரணமாக “தாய்நாடு அல்லது உயிர்துறப்பு” (Motherland or Death) என்ற கியுபாவின் புரட்சியாளர்களது கோஷம் “சிங்களவர்களின் தாய்நாடு” பற்றிய உணர்வை இவ்விளைஞர்களிடம் கிளர்ந்தெழச் செய்ததில் வியப்பில்லை.

“பழைய இடதுசாரிகள்” (ல.ச.ச.கவும், க.கவும்) சர்வதேசிய கொள்கை நிலைப்பாட்டில் ஆரம்பித்து, தேர்தல் அரசியலில் பங்கேற்றதன் காரணமாகத் தமது சர்வதேசியத்தை கைவிட்டனர். அவர்கள் தமது கடந்தகாலக் கொள்கைகள் பற்றிய மீள்பரிசீலனையில் இருந்தனர். மக்கள் விடுதலை முன்னணி 1960 களின் நடுப்பகுதியில் நேரடியாகவே சிங்கள தேசியவாதத்தைத் தழுவிக்கொண்டது. அக்காலகட்டத்தில் சிங்கள தேசியவாதம் இலங்கையில் மேலாண்மையைப் பெற்றிருந்தது. இடதுசாரிக்கட்சிகளும் இனவாதத்தை அப்போது தழுவிக் கொண்டிருந்தன. அத்தோடு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களினதும், உறுப்பினர்களினதும் வர்க்கப்பின்புலம் காரணமாக, தொடக்கத்தில் இருந்தே சிங்களப் பெரும்பான்மையினருடைய நலன்களைப் பேணுவதற்கான இனவாதக் கருத்தியலை அவ்வியக்கம் தழுவிக்கொண்டது.

மக்கள் விடுதலை இயக்கம் பாராளுமன்றப் பாதையூடான சோஷலிசம் என்ற கொள்கையின் தோல்வியின் பின்புலத்தில் தோற்றம் பெற்றது. பழைய இடதுசாரிகளின் பாராளுமன்றப் பாதையின் ஊடாக அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுதல் புரட்சியைக் கொண்டுவருதல் என்ற கொள்கை ஒரு மாயை என்பது வெளிப்பட்டபோது கம்யூனிஸ்ட் கட்சியின் பீகிங் பிரிவில் இருந்த இளைஞர்கள் மக்கள் விடுதலை முன்னணியைத் தோற்றுவித்தனர் (Keerawella 1980). மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் யாவரும் கிராமப்புறக் குட்டி முதலாளி வர்க்கத்தினராகவே இருந்தனர் என்பது கவனிப்புக்குரிய முக்கியமான விடயமாகும்.

1956 இல் பண்டாரநாயக்கவின் மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) வெற்றி பெறுவதற்குக் காரணமாக குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கு அமைந்தது. இப்பிரிவினர் 1940 களில் விரிவாக்கம் பெற்ற பாடசாலை முறைமையூடாகக் கிட்டிய கல்வி வாய்ப்புக்களை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டனர். 1940 களிலேயே சிங்கள மொழியூடாக (முதனிலை இரண்டாம் நிலைக்) கல்வியைத் தொடரும் வாய்ப்பும் கிடைத்தது. 1940 களில் கல்வி கற்ற கிராமத்துக் குட்டி முதலாளித்துவ வகுப்பு 1950 களின் ‘சிங்களம் மட்டும்’ இயக்கத்தின் ஆதரவுத் தளமாக விளங்கியது. ஆனால் 1950 களில் சிங்களம் மூலமாக கல்வி கற்ற வகுப்பினர் 1960 களில் ஏற்பட்ட வேலையின்மைப் பிரச்சினை காரணமாக விரக்தியடைந்த நிலையில் இருந்தனர். இவ்விரக்தியுற்ற இளைஞர்களே, மரபுவழி இடதுசாரிகள் மீதும் விரக்தியுற்றவர்களாய் மக்கள் விடுதலை முன்னணியைத் தோற்றுவித்தனர்.

மக்கள் விடுதலை முன்னணி சோஷலிச மாற்றத்தை இலட்சியமாகக் கொண்டிருந்தது. அத்தோடு அவ்வியக்கம் முழுமையாக தேசியவாதத்தைத் தழுவியும் இருந்தது. குட்டி முதலாளித்துவ சிந்தனைப் போக்கின் பல்வேறு அம்சங்களையும் உள்வாங்கியதாக இத்தேசியவாதக் கருத்தியல் அமைந்தது. கிராமப் புறத்தின் குட்டி முதலாளித்துவ வகுப்பு பொருளாதார நிலையில் உறுதியுடையதாய் இருக்கவில்லை. இவ்வகுப்பின் கருத்தியலின் தோற்றமூலம் பற்றி விளக்கிக் கூறியுள்ள கீரவல்ல அவர்களின் கூற்று வருமாறு.

“ குட்டி முதலாளித்துவ வகுப்பு மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளின் முக்கியமான வெளிப்பாடுகளில் ஒன்று அதன் கிளர்ச்சிவாதம் ஆகும். குட்டி முதலாளித்துவ வகுப்பு சோஷலிசம் என்ற இலக்கில் செயற்பட்டது. பொருளாதார நெருக்கடி அதனை அந்த இலக்கில் செல்ல வைத்தது. ஆயினும் அவர்களின் சோஷலிசத்தில் தேசியவாதம் ஆழமாக ஊடுருவிக் கலந்திருந்தது. மக்கள் விடுதலை முன்னணிக் கிளர்ச்சிவாதிகள் மரபுவழி குடும்பப் பின்னணியில் இருந்து தோன்றியவர்கள். குட்டி முதலாளித்துவப் பழைய தலைமுறையின் இனவாதத்தையும் இவ்விளைஞர்கள் பெற்றிருந்தனர். இனவாதம் இவ்விளைஞர்களிடம் நாட்டுப்பற்று என்ற போர்வையில் வெளிப்பட்டது.” (கீரவல்ல 1985:23)

மக்கள் விடுதலை முன்னணியின் இனவாதக் கருத்தியலிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக அவர்கள் கொண்டிருந்த மனப்பாங்கினைக் குறிப்பிடலாம்.

கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் சுரண்டப்பட்டுவரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை, நாட்டின் தொழிலாளி வகுப்பின் ஓர் அங்கமாகக் கொள்வதையே மக்கள் விடுதலை முன்னணி நிராகரித்தது. அத்தொழிலாளர்களை அவ்வியக்கம் இந்தியர்களாக, அந்நியர்களாக நோக்கியது. இலங்கையின் மீது இந்தியாவின் மேலாதிக்கத்தைச் செலுத்துவதற்கான சதித்திட்டத்தின் ஒருகூறாக அத்தொழிலாளி வர்க்கம் நோக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணி இளைஞர்களின் மூளைச் சலவைக்காக வழங்கிய பயிற்சியின் ஒரு முக்கிய விடயப்பொருளாக இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றிய விரிவுரை அமைந்தது.

இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கருவிகளாக இந்திய வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், தமிழர்களான கடத்தல்காரர்கள் என்போருடன் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களையும் மக்கள் விடுதலை முன்னணி சேர்த்துக் கொண்டது. அத்தோடு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் திரைப்படங்கள், புத்தகங்கள். சஞ்சிகைகள் என்பனவும் இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கான கருவிகளாக நோக்கப்பட்டன.

இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் சிங்கள விவசாயிகளைவிட, உயர் வருமானத்தை பெறுபவர்களாகவும், உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உடையவர்களாயும் இருக்கின்றனர் என வாதிட்ட மக்கள் விடுதலை முன்னணி அத்தொழிலாளர்கள் இலங்கையின் மீது பற்றுடையவர்களாக இருக்கவில்லை. அவர்கள் இந்தியா மீதே பற்றுடையவர்களாக இறுக்கின்றனர் எனவும் கூறியது. இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றிய விரிவுரையில் இவ்விடயம் வெளிப்படையாகக் கூறப்பட்டது.

“அவர்கள் (தோட்டத் தொழிலாளர்கள்) இந்நாட்டை இந்தியாவிற்கு கொடுத்து விடுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்திடம் அல்லது எம்.ஜி.ஆர் இடம் இந்நாட்டை ஒப்படைத்து அவர்களை இலங்கையின் ஆட்சியாளர்களாக்குவார்கள்.” (ஜே.வி.பியின் 5 விரிவுரைகளில் இருந்து)

இந்தியத் தோட்டத் தொழிலாளர் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி காட்டிய மனப்பாங்கு அவ்வியக்கத்தில் குட்டி முதலாளித்துவ கருத்தியல் எந்தளவுக்கு வேரூன்றி இருந்தது என்பதை எடுத்துக் காட்டுகிறது. அண்மைய ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியினதும், அதன் தலைவர் ரோஹண விஜயவீர அவர்களதும் பேச்சுக்களிலும் இக்கருத்தியல் நன்கு வெளிப்படுகிறது. இப்பேச்சுக்களில் சிங்கள இனவாதம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு என்பன ஒருங்கே கலந்திருப்பதைக் காணலாம். குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கு மேலோங்கியிருக்கும் எல்லா இயக்கங்களிலும் கிளர்ச்சிவாதம், இனவாதம் என்ற இரண்டும் ஒன்றிணைந்து வெளிப்படுவது பொது இயல்பாகும்.

1977 இற்குப் பிந்திய காலம்

1977 ஆண்டுத் தேர்தலில் இடதுசாரிகள் படுதோல்வியடைந்தனர். இதன் பின்னர் அவர்கள் மத்தியில் சுயவிமர்சனம் இடம்பெற்றது. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி தனது கொள்கைகளை மறுமதிப்பீடு செய்ததோடு, தேசிய இனப்பிரச்சினை தொடர்பான கொள்கையையும் மறுபரிசீலனை செய்தது. 1977 நவம்பரில் கம்யூனிஸ்ட் கட்சி முன்னைய பத்து ஆண்டு காலக் கொள்கைகள் பற்றிய கடுமையான விமர்சனத்தை வெளியிட்டது. இந்த விமர்சனம் 1978 மார்ச் மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் 1 ஆவது காங்கிரஸில் விவாதிக்கப்பட்டது. அப்போது ‘இடதுசாரித் தவறுகள்’ பற்றி விரிவான பகுப்பாய்வு இடம்பெற்றது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐக்கிய முன்னணி அமைத்ததில் தவறு இல்லை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டபோதும், தம் கட்சி சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் 1956 முதல் ஏற்பட்டுவந்த மாற்றங்களை மதிப்பீடு செய்யத் தவறிவிட்டது எனவும் கூறப்பட்டது. 1950 களில் தேசிய முதலாளித்துவ சக்திகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வலுவானதாக இருந்தது. ஆனால் 1960 களில் இவ்வுணர்வு குறைந்தது, 1970 களில் இது மேலும் குறைவடைந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு மழுங்கடிக்கப்பட்ட ஒரு கட்சியுடன் 1970 களில் கூட்டுமுன்னணி வைத்துக்கொண்டு அரசில் இணைந்தமை தவறு என்று விமர்சிக்கப்பட்டது. (The Tasks of our party in the New Political Situation. 1977:19.) ‘1977 இன் புதிய அரசியல் சூழ்நிலையில் எமது வேலைத்திட்டங்கள்’ என்ற அறிக்கையில் ஐக்கிய முன்னணி அரசாங்க காலத்தில் கட்சி பின்பற்றிய ‘வலதுசாரி விலகல்கள்’ பற்றியும் குறிப்பாக சிறுபான்மை இனத்தவர்கள் பற்றிய கொள்கை விலகல்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டது. 1966 ஜனவரி 5 ஆம் திகதி நிகழ்வுகள் ஐக்கிய தேசியக்கட்சி -சமஷ்டிக் கட்சி அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற எமது ஆதங்கத்தால் உந்தப்பட்டவை. ஆனால் நாம் அன்று அனுமதிக்க முடியாத எல்லை வரை சென்றுவிட்டோம். அன்றைய எமது போராட்டம் இனப்பகைமையை மேலும் மோசமாக்குவதாகவே அமைந்தது.” என்றும் அவ் அறிக்கையில் கூறப்பட்டது.

” இவ்விடயம் (சிறுபான்மையினர் பிரச்சினை) தொடர்பாக கட்சி விட்ட தவறுகளையும், கட்சியின் குறையையும் பற்றி சுயவிமர்சன நோக்கில் நாம் ஏற்றுக்கொண்டு அவற்றை வெளியே தெரியப்படுத்த வேண்டும். அதன் மூலம் சிறுபான்மை இனத்தவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தலாம். சிறுபான்மை இனத்தவர்கள் மீதான பாரபட்சமான நடவடிக்கைகள், அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதிர்நோக்கிய கஷ்டங்கள் என்பனவற்றுக்கு எதிராக நாம் குரல் கொடுக்கத் தவறினோம். எம்மிடம் முரண்பாடற்ற நேரான கொள்கை இருக்கவில்லை. நாம் பொலிசும், இராணுவமும் வடபகுதியில் நடத்திய அத்துமீறல், செயல்களை தட்டிக் கேட்கத் தவறினோம்.” (மேலது பக்:36)

அந்த அறிக்கை சிங்கள சமூகமும் தமிழ்ச் சமூகமும் ‘அரசியல் எதிர்த்துருவங்களை நோக்கிச்’ சென்று விட்டதையும், ‘எதிர்காலத்தில் ஏற்படப்போகும் போராட்டங்கள் மீது இது பெரும் முக்கியத்துவத்தைப் பெறப்போகிறது’ என்றும் குறிப்பிட்டது. 1977 இன் அறிக்கையில் தமிழர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டதோடு கட்சி பிரிவினைவாதத்தை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டது. அக்கூற்று வருமாறு:

” இலங்கைத் தமிழர்களைப் பொருத்தவரை எமது கட்சி அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறது. இவ்வுரிமை இலங்கையின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதிக்காத வகையிலும், சிங்களவர் தமிழர் ஆகிய இரு பகுதியினரதும் உழைக்கும் மக்களினதும் ஐக்கியத்தைப் பாதிக்காத வகையிலும் பிரயோகிக்கப் படவேண்டும். ஆகையால் நாம் நாட்டைத் துண்டாக்கி தனியான சிறு அரசுகளை உருவாக்குவதை எதிர்க்கிறோம்.” (மேலது)

கம்யூனிஸ்ட் கட்சி வர்க்க ஐக்கியத்தையும், இனக்குழுமங்களிடையே பொதுவான வர்க்க அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கூறியது. சிறுபான்மை இனத்தவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு என்பனவற்றில் பாரபட்சம் காட்டப்படக் கூடாது என்றும் அக்கட்சி கூறியது. ‘இனவாத’ வெறுப்பையும், சமயம், சாதி என்பனவற்றின் அடிப்படையிலான வெறுப்பையும் தூண்டும் செயல்களை தண்டனைக் குற்றமாக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் கட்சி முன்வைத்தது. அறிக்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக கட்சி பின்பற்றிய கொள்கைகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

“ஆய்வுக்குரிய இக்காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள். அவர்களது வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியுற்றது. உணவுப் பற்றாக்குறை தோட்டப் பகுதிகளில் ஏற்பட்டது. வேலையின்மையும் குறைவேலையுடமையும் தீவிரமடைந்தன. பட்டினிச் சாவுகளும் நிகழ்ந்தன. ஆயினும் கட்சி இவ்விடயங்கள் பற்றிக் கவனம் செலுத்தவில்வை. அரசாங்கத்தில் கட்சியினர் வகித்த பதவிகளைப் பயன்படுத்தி தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தக் கூடிய எதனையும் கட்சி செய்யவில்லை. இத்தொழிலாளர்கள் தமது வாழ்நிலையை முன்னேற்றுவதற்காக முன்னெடுத்த போராட்டங்களிற்கும் கட்சி ஆதரவு கொடுக்கவில்லை. தோட்டப் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றமை, தோட்ட வீடமைப்பு ஆகியவற்றில் அரசின் நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் முன்னேற்றம் போதியதாக இருக்கவில்லை. காணிச் சீர்திருத்தக் கொள்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தவறான நடவடிக்கைகளின் பயனாக ஏற்பட்ட மகாமோசமான சீர்குலைவுகளைப் பற்றி நாம் கண்டும் காணாமல் இருந்து கொண்டோம்.” (மேலது)

அக்காலத்தில் தோட்டத் தொழிலாளர்களை அரசியல் ரீதியில் அணிதிரட்டவோ தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கோ முயற்சிக்கவில்லை என்பதைக் கட்சியே ஒப்புக்கொண்டிருப்பதைக் காணலாம்.

” இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் முக்கியமான வகிபாகத்தை கருத்திற்கொள்ளத் தவறியதோடு அவர்கள் மத்தியில் அரசியல் வேலை, தொழிற்சங்க வேலை என்ற இரண்டையும் அலட்சியம் செய்தமை, இக்காலகட்டத்தில் தேசிய சிறுபான்மையினர் தொடர்பாக வலதுசாரி அரசியல் சந்தர்ப்பவாதம் மேலோங்கியிருந்தது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.”

1978 இல் கம்யூனிஸ்ட் கட்சி, ‘வலதுசாரி விலகல்’, ‘வலதுசாரி சந்தர்ப்பவாதம்’, குட்டி முதலாளித்துவ கருத்தியல் ஆகியன தமது கட்சிக்குள் புகுந்து விட்டதாக சுயவிமர்சனம் செய்து கொண்டனர். ஆனால், லங்கா சமசமாஜக் கட்சி இவ்விதமான சுயவிமர்சனம் எதிலும் ஈடுபட்டதாகவோ ஐக்கிய முன்னணி அரசு காலத்து நடவடிக்கைகள் தொடர்பாக சுயவிசாரணை மேற்கொண்டதாகவோ தெரியவில்லை. லங்கா சமசமாஜக் கட்சியின் அண்மைக் கால வெளியீடுகள் (கொல்வின் ஆர்.டி.சில்வா 1984, 1985) சிலவற்றில் ஐக்கிய முன்னணி அரசாங்க காலத்தில் தமது கட்சியின் வகிபாகம் பற்றிப் புகழ்ந்துரைக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. கட்சி இனவாதத்தை தழுவிக் கொண்டமை குறித்து விமர்சனம் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.

1977 இல் வாசுதேவ நாணயக்கார, விக்கிரமபாகு கருணாரத்தின ஆகிய இருவரின் தலைமையிலான நவ சமசமாஜக்கட்சி (NSSP) என்ற குழு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது. அக்குழுவினர் மேற்படி பெயரில் புதிய கட்சியை அவ்வாண்டு நிறுவினர். இக்கட்சி ஐக்கிய முன்னணியின் தந்திரோபாயம், தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக சமசமாஜக் கட்சியின் கொள்கை என்ற இரண்டைப் பற்றியும் விமர்சனத்தை முன்வைத்தனர். லங்கா சமசமாஜக் கட்சி 1950 களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஒரு முதலாளித்துவக் கட்சி எனச் சரியாகவே மதிப்பிட்டது. ஆனால் 1960 களில் அதனை ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை முன் எடுக்கக் கூடிய கிளர்ச்சிவாதப் பண்புடைய குட்டி முதலாளித்துவக் கட்சி’ எனத் தவறாக மதிப்பிட்டது. இவ்வாறு நவ சமசமாஜக் கட்சி விமர்சித்தது. 1966 ஜனவரி 8 ஆம் திகதி இனவாதக் கோஷங்களின் அடிப்படையில் ஒருநாள் பொதுவேலை நிறுத்தத்தை ஒழுங்கு செய்யும் அளவிற்கு லங்கா சமசமாஜக் கட்சி கீழிறங்கியது என்றும் குற்றம் சாட்டியது. இந்த வேலை நிறுத்தம் தோல்வியில் முடிந்தது. சிறுபான்மையினர் மத்தியில் இருந்த மிகச் சுருங்கிய ஆதரவுத் தளத்தையும் இது இல்லாமல் செய்ததோடு இடதுசாரித் தலைவர்களின் அரசியல் நம்பகத்தன்மை இந்தப் பொது வேலை நிறுத்தத்தால் முற்றாக அழிவுற்றது.

முடிவுரை

மார்க்சியம் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை (The Rights of Self Determination of Nations) ஏற்றுக் கொண்டிருந்தது. ஆயினும் இவ்வுரிமை ‘வரலாற்று ரீதியாக உருவாகிய தேசியங்களுக்கு’ (Historically Evolved Nations) மட்டுமே உரியதென்ற மட்டுப் பாட்டையும் கூறியது. தேசியங்களின் உருவாக்கம் சமூக நிலைமாற்றத்தின் (Social Transformation) ஊடாக ஏற்படும் செயல்முறை என்ற கருத்தும் இதில் உள்ளடங்கி உள்ளது. இலங்கையின் ‘இடதுசாரிகள்’, இந்நாட்டின் ஸ்தூலமான வரலாற்றுப் பின்புலத்தில் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டை பரிசீலிக்க தவறிவிட்டனர் என்பது வருத்தத் தக்கதோர் விடயமாகும். இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள் மத்தியில் இவ்விடயம் குறித்து தீவிரமான பரிசீலனை ஒருபோதும் இடம் பெறவில்லை. சில புத்தகவாத (Dogmatic) மனப்பாங்குகள் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டனவேயன்றிக் கோட்பாட்டு ரீதியிலான விவாதங்கள் முன்னெடுக்கப்படவில்லை. கட்சித் தலைவர்களால் அருவமான கருத்துரைகள் முன்வைக்கப்பட்டன. ஸ்தூலமான வரலாற்று நிலைமைகளின் பின்னணியில் அரசியல் செயற்பாட்டுக்கான அடிப்படைகளை இவர்கள் தெளிவுபடுத்தவில்லை. இக்காரணத்தினால் கோட்பாட்டு வெற்றிடம் ஒன்று ஏற்பட்டது. இந்த வெற்றிடத்தைச் சிங்களக் குட்டி முதலாளித்துவ வகுப்பின் குறுகிய உலகநோக்கு இட்டு நிரப்பியது.

சிங்களக் குட்டி முதலாளித்துவ சிந்தனை மேலாண்மை பெற்றிருந்தமைக்கு இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களின் வர்க்கப் பின்புலம் காரணமாக இருந்தது. கட்சிகளின் அனைத்து மட்டங்களிலும் கிளர்ச்சிவாதக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் தலைமைத்துவத்தைப் பெற்றிருந்தனர். மேலும் இடதுசாரிக் கட்சிகள் தேர்தல் முறைமையூடாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைக் குறியாகக் கொண்டிருந்ததனால் இனப்பிரச்சினை தொடர்பாக சிங்கள வெகுஜனங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முறையிலேயே இவர்களின் கருத்துக்கள் அமைந்திருந்தன. இதன் விளைவாக சிங்களவர் அல்லாத தொழிலாளர் வர்க்கத்தை இடதுசாரிக் கட்சிகள் முற்றாகக் கைவிட்டன என்று கூறமுடியாவிடினும், அப்பகுதியினரின் நலன்கள் பற்றி அக்கறையற்றனவாகவே நடந்து கொண்டன.

இடதுசாரிக் கட்சிகளிடையே சிறுபான்மைத் தேசிய இனங்கள் பற்றிய பிரச்சினை தொடர்பான நோக்குமுறையில் முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. லங்கா சமசமாஜக் கட்சி, 1970 -77 காலத்தில் பின்பற்றிய கொள்கைகள் பற்றி சுயவிமர்சனம் செய்வதை அவசியமற்றது என்றே கருதியது. அவ்வாறே 1960 களில் அக்கட்சி பின்பற்றிய இனவாத வழித் தவறல்களையும் அது விமர்சனம் செய்வதற்குத் தயாராக இருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி, தனது கடந்தகால நடவடிக்கைகளை சுயவிமர்சனம் செய்து கொள்ளும் மரபைக் கொண்டிருந்தது. 1977 இற்கு பிந்திய காலத்தில் அக்கட்சி ‘கடந்தகாலத் தவறுகளை’ வெளிப்படையாக ஒப்புக் கொண்டதோடு தன்னைச் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தியது. சிறுபான்மையினர் பற்றியும் முன்னையகால இனவாத நடவடிக்கைகளையும் அக்கட்சி சுயவிமர்சனம் செய்தது.

லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற, நவசமசமாஜக் கட்சியும் (NSSP) பாலாதம்புவின் புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற நா. சண்முகதாசனின் கட்சியும் (பீகிங்சார்பு கம்யூனிஸ்ட் கட்சி 1963), ஐக்கிய முன்னணித் தந்திரோபாயத்தையும், இனவாதக் கொள்கைகளையும் விமர்சித்து வந்தன.

இடதுசாரிகளின் இன்றைய கொள்கையின் படி இனப்பிரச்சினை எவ்வாறு நோக்கப்படுகிறது என்ற கேள்வி இக்கட்டுரையின் ஆய்வு எல்லைக்கு அப்பாற்பட்டது. ஆயினும் இடதுசாரி இயக்கம் சுயவிமர்சனம் என்ற செயல்முறை ஊடாக இனக்குழுமப் பிரச்சினை குறித்து கூடியளவு விழிப்புணர்வு உடையதாக இருக்கிறது என்பதைக் கூறலாம். பெரும்பாலான இடதுசாரிக் கட்சிகளும் குழுக்களும் ஒரு பெரும்பான்மை இனத்தின் பாரபட்சமான நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுபான்மை இனத்தின் பிரச்சினை என இனக்குழுமப் பிரச்சினையை வரையறுத்துக் கொள்கின்றன. சிறுகுழுக்களான ரொட்ஸ்கியவாதிகளின் பிரிவுகள் சில தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்பதோடு, தீவிரவாதக் குழுக்களின் பிரிவினைக்கான போராட்டத்தை ஆதரிக்கவும் முன்வந்துள்ளன.

மையநீரோட்ட இடதுசாரிக் கட்சிகள் கொள்கையளவில் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு, அவ்வுரிமை இலங்கையின் உழைக்கும் மக்களினது நலன்களுக்கு முரண்பாடு இல்லாத வகையில் பிரயோகிக்கப்படலாம் என்றும், ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் பிராந்திய சுயாட்சியை வழங்குவதாக இத்தீர்வு இருக்கவேண்டும் என்றும் கூறுகின்றன. லங்கா சமசமாஜக் கட்சியின் அறிக்கை ஒன்றில் இவ்விடயம் பற்றிப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“அரசியல் சுதந்திரமுடைய இலங்கை பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதானால், இலங்கை முழுவதையும் உள்ளடக்கிய ஒரு அரசு இருத்தல் வேண்டும். இந்த அடிப்படையில் நோக்கும் போது சோஷலிச புரட்சி இயக்கத்திற்கும் இலங்கையில் முழுமக்களுக்கும் இலங்கை ஒருமித்த நாடாக இருத்தல் வேண்டும் என்பதில் நேரடியான அக்கறை உள்ளது. இலங்கை மக்கள் சோஷலிசத்திற்கான போராட்டத்தையும் ஐக்கியப்பட்ட இலங்கையை உருவாக்குவதற்கான போராட்டத்தையும் ஒன்றிணைந்ததாக நோக்குதல் வேண்டும். இந்நோக்குக்குப் பொருத்தமான வகையிலேயே சோஷலிசப் புரட்சி இயக்கத்தின் வேலைத்திட்டமும் அமைதல் வேண்டும்.”

1986 ஆம் ஆண்டு எல்லா இடதுசாரிக் கட்சிகளும் தமிழ் மக்களுக்குப் பூரணமான பிராந்திய சுயாட்சி வேண்டும் என்றும் எல்லாச் சிறுபான்மையினருக்கும் மத்தியில் அதிகாரத்தில் போதியளவு பங்கேற்பு இருக்க வேண்டும் என்றும் ஒன்றுபட்டுக் குரல் எழுப்பினர். இவ்வகையில் 1960 களிலும் 1970 களிலும் இடதுசாரி இயக்கத்தில் புகுந்த இனவாதப் போக்கில் இருந்து விலகிச் சரியான பாதை நோக்கி இடதுசாரிகள் திரும்பியுள்ளதைக் காணலாம். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் எடுத்துக் காட்டப்பட்ட லெனின் கூற்றில் குறிப்பிட்டுள்ள ‘தேசியவாத நஞ்சு’ 1960 கள், 1970  கள் என்ற இருபதாண்டு காலப்பகுதியில் இலங்கையின் அரசியல் சூழலை நஞ்சாக்கிவிட்டது. இப்பின்னடைவில் இருந்து மீட்சி பெறுவதற்கு உரிய தொடக்கமாக இன்றைய வளர்ச்சிகளைக் கொள்ளலாம்.

சாள்ஸ் அபயசேகர மற்றும் நியூட்டன் குணசிங்க பதிப்பித்து 1987 ஆம் ஆண்டில் கொழும்பு சமூக விஞ்ஞானிகள் சங்கத்தால் வெளியிடப்பட்ட ‘Facets of Ethnicity’ என்ற நூலில் குமாரி ஜயவர்த்தன அவர்களின் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.


ஒலிவடிவில் கேட்க

7579 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்
  • May 2024 (1)
  • April 2024 (2)
  • March 2024 (1)
  • November 2023 (5)
  • October 2023 (4)
  • September 2023 (3)
  • July 2023 (3)
  • June 2023 (1)
  • May 2023 (4)
  • April 2023 (2)
  • March 2023 (2)
  • February 2023 (1)
  • January 2023 (1)