Arts
10 நிமிட வாசிப்பு

பண்டைத் தமிழர்களின் நகர அமைப்பும் சாதியின் பாதிப்பும் – பகுதி 2

May 19, 2023 | Ezhuna

பண்டைய நூல்களும் கட்டடக்கலையும்

வேதகாலத்திலேயே இந்துக்களின் கட்டடக்கலைத்துறை வளர்ச்சியுற்றிருந்தது.  கட்டடக்கலை பற்றிய அறிவியற்துறை வாஸ்து வித்யா (Vastu-Vidaya) என அழைக்கப்பட்டது. இதனை விளக்கும் நூல்கள் வாஸ்து சாஸ்திர நூல்கள் (Vastu Shastras) என அழைக்கப்பட்டன. மச்யபுராண (Matsya Purana), விஷ்ணு தர்மோத்தர புராண (Vishnudharmottara Purana) போன்ற புராண நூல்களும், ஹயாசேர்சா பஞ்சார்த்திர ஆகம (Hayasirsha pancharatra Agama), வைகாநாச ஆகம் (Vaikhanasa Agama) போன்ற ஆகம நூல்களும் ஆலய அமைப்பு முறைபற்றிய விதிகளைக் கூறும். மத்திய காலகட்டத்தில் மேலும் சில நூல்கள் இத்துறையில் தோன்றின. மானசர (Manasara), சிற்பப்பிரகாச (Shilpa Prakash) போன்றன குறிப்பிடத்தக்கன. தமிழிலும் சிந்தாமணி, சிற்பரத்தினம் போன்ற நூல்கள் தோன்றின. இவற்றுக்கிடையில் சிற்சில வேறுபாடுகள் காணப்பட்டாலும் பொதுவாக ஒரே கருத்தையே கொண்டிருந்தன.

பிரபல நாவலாசிரியரான நா.பார்த்தசாரதி தமிழில் ‘பழந்தமிழர் கட்டடக்கலையும் நகர அமைப்பும்’ என்னுமொரு ஆய்வு நூலினை எழுதியிருக்கின்றார். மேற்படி நூலினைத் தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பகத்தார் நா.பா.வின் மறைவுக்குப் பின்னர் வெளியிட்டுள்ளார்கள். தமிழ் இலக்கிய நூல்களில் கூறப்படும் தகவல்களிலிருந்து இன்றைய ஸ்தபதிகளின் கட்டுரைகள் வரையிலான ஆய்வுகளின் அடிப்படையில் மேற்படி நூலினை எழுதியுள்ள நா. பா. உண்மையிலேயே பாராட்டுக்குரியவராகின்றார். மேற்படி நூலில் பிரதான சில்ப சாஸ்திர நூல்களாக பரங்கிப்பேட்டை எஸ்.ஏ.குமாரசாமி ஆச்சாரியார் பதிப்பித்த ‘சில்பரத்னாகரம்’ ‘விசுவகன்மீயம், விசுவம், விசுவசாரம், பிரபோதம்… செளரம் வரையிலான 32 நூல்களையும், இதுவரை பதிப்பிக்கப்படாத மனுசாரம் நூல் கூறும் ஈசாநம், விசுவகன்மீயம், விருத்தம்…. தேசிகம் முதலான 28 நூல்களையும் பிரதான சில்பசாஸ்திர நூல்களாக நா.பா. குறிப்பிடுவார். மேலுமவர் கணபதி ஸ்தபதியின் இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டு மலரில் வெளிவந்த கட்டுரையின் அடிப்படையில் 52 சிற்பநூல்கள் தென்னிந்தியப் பிரிவில் காணப்பட்டதாகவும் , அவற்றில் தற்போது தமிழகச் சிற்பிகளால் கற்கவும், நடைமுறையில் பாவிக்கப்படுவதும் முழுமையாக எஞ்சியுள்ள மயமதம், விசுவகன்மீயம், மானசரம், மனுசாரம், இந்திரமதம், வாஸ்துவித்யா, தாஸ்யபம், சித்ர காஸ்யபம், நாராயணீயம் ஆகிய 9 நூல்களே என்றும் கூறுவார். மேலும் மேற்படி கண்பதி ஸ்தபதியின் கட்டுரையின் அடிப்படையில் நடைமுறையிலுள்ள ‘சிற்ப உபநிஷங்கள்’ ஸ்ரீகுமாரரின் சில்பரத்தினம், சில்பரத்னாகரம், மனுஷ்யாலய சந்திரிகா, சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, பிராமீயம், சரஸ்வதீயம் ஆகிய கோயில் ஆகமங்களுடன் தொடர்புடைய ‘சிற்ப உபநிஷங்களே என்பார்.’

பொதுவாக வட இந்தியக் கட்டடக்கலை நூல்களின் மூல ஆசிரியராகத் தேவலோகச் சிற்பியான விசுவகர்மாவைக் குறிப்பிடுவர். தென்னிந்திய நூல்களின் மூல ஆசிரியராக மயனைக் குறிப்பிடுவர். இக்கட்டடக்கலை நூல்கள் கூறும் கோட்பாடுகளிலிருந்து சமயம் எவ்வளவுதூரம் கட்டட, நகர அமைப்பு முறைகளைப் பாதித்துள்ளனதென்பதை அறிய முடிகின்றது.

மத்தியகாலம் வரையில் இத்துறை பற்றிய தகவல்கள் யாவும் வாய்வழி மூலமாகவே தந்தையிடமிருந்து புத்திரருக்கு என்ற முறையில் பேணப்பட்டு வந்துள்ளன. மத்திய காலகட்டத்திலேயே முதன்முறையாக இத்துறை பற்றிய தகவல்கள் யாவும் பனையோலைச் சுவடிகளில் எழுத்து மூலமாகப் பதிக்கப்பட்டு வந்தன. 1920 ஆம் ஆண்டில் Stella Kramrisch என்பவர் இச்சுவடிகள் பலவற்றை ஆராய்ந்திருக்கின்றார். இச்சுவடிகள் தரும் முக்கியமான தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போம். முக்கியமாக நகர அமைப்பு பற்றிக் கூறப்படும் தகவல்களை நோக்குவோம்.

பிரபஞ்சமும் இந்துக்களின் கட்டடக்கலையும்

இந்துக்களின் உபநிடதங்கள் கூறும் தத்துவங்களில் ‘பிரம்மம்’ பற்றி விபரிக்கப்பட்டுள்ளது. உருவமற்ற, ஆதி அந்தமற்று, எங்கும் பரந்து, நீக்கமற நிறைந்திருப்பதே பிரம்மம். இந்த உருவமற்ற பிரம்மத்தின் உருவ வடிவங்கள்தான் சிவன், விஷ்ணு, பிரம்மன் போன்ற தெய்வங்கள். இவ்விதமான உருவற்ற மூல வடிவத்திலிருந்து உருவானவன்தான் ‘வாஸ்துபுருஷன்’ அல்லது ‘வாஸ்துதேவன்’ என்பவன்.

1ஆம்-சிவ-ஆலயம்-தென்னிந்திய-கட்டட-நிர்மாணபாணி-2

இவனை மையமாக வைத்தே இந்துக்களின் கட்டடக்கலைத்துறை வளர்ச்சியுற்று வந்திருக்கின்றது. இவ்வித உருவ வடிவான வாஸ்து புருஷனை வாஸ்து புருஷ் மண்டல(ம்) என மேற்படி கட்டடக்கலை நூல்கள் வர்ணிக்கின்றன. இப்பிரபஞ்சத்தை இயக்கும் விதிகளின் உருவ வடிவமே இந்த வாஸ்துபுருஷனாகும். ஆரம்பத்தில் எவ்விதம் உருவற்ற பிரம்மத்திலிருந்து உருவ வாஸ்து புருஷன் படைக்கப்பட்டானோ அவ்விதமே கட்டடக்கலைஞர்களும் உருவற்ற புறச்சூழலை (Environment) உருவவடிவமான கட்டடங்களாக வடிவமைக்கும்போது அந்தக்கட்டடங்கள் மேற்படி வாஸ்துதேவனைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே அமைப்பார்கள். பிரபஞ்சத்துக்கும் மனிதர்களுக்குமிடையிலுள்ள தொடர்பினைக் கட்டடங்கள் அமைப்பதிலும் பேணியவர்கள் இந்துக்களே என்பது இதிலிருந்து புலனாகின்றது.

வட்டமும், சதுரமும், வாஸ்துபுருஷ மண்டலமும்

பௌத்தர்களின்-கட்டடங்கள்-2

இந்துக்களின் கட்டடங்களையும், பெளத்தர்களின் கட்டடங்களையும் நோக்குபவர்கள் ஒன்றினை இலகுவாக அறிந்து கொள்வார்கள். பெளத்த கட்டடங்கள், தாதுகோபுரங்கள் போன்றவை வட்டவடிவில் அமைக்கப்பட்டன. இந்துக்களின் கட்டடங்களோ சதுர அல்லது செவ்வக வடிவங்களில் அமைக்கப்பட்டன. அநுராதபுர நகர, கட்டட அமைப்புத் துறையினை வட்ட வடிவம் எவ்வளவு தூரம் பாதித்துள்ளதென்பதை ரோலன் டி சில்வா என்ற சிங்களப் பேராசிரியர் ஆராய்ந்து தெளிவுபடுத்தியுள்ளார். சந்தையை மையமாக வைத்து உருவான பண்டைய அநுராதபுர நகரைச் சுற்றி வட்ட ஒழுக்கில் வட்ட வடிவமான தாது கோபுரங்கள், இரு வேறு ஒழுக்குகளில் அமைக்கப்பட்டிருந்ததை அவரது ஆய்வுகள் புலப்படுத்தும். வட்ட வடிவம் இயக்கத்தை உணர்த்தும். தோற்றமும், அழிவும், இரவும், பகலும் இவ்விதமாக ஒருவித வட்ட ஒழுக்கில் நகரும் காலத்தை மேற்படி வட்டவடிவம் உணர்த்தும். மேலும் இவ்வட்ட வடிவம் நாம் வாழும் பூமிக்குரிய வடிவ இயல்பையும் குறிக்கும். பொருள் முதல்வாதக் கோட்பாட்டினை அதிகம் நம்பும் பெளத்தர்கள் வட்டவடிவத்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமானதொன்றல்ல.

மாறாக சதுரவடிவம் ஓர் இறுதியான, தெளிவான வடிவம். வட்டத்தைப்போல் இது இயக்கத்தைப் புலப்படுத்துவதில்லை. இந்துக்கள் இந்தப்பிரஞ்சத்தை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு போன்ற திசைகளால் உருவான சதுர வடிவான வெளியாகவும், அவ்வெளியில் நேரத்தின் பாதிப்பை இராசிகளாலும் உருவகித்தார்கள். நவீன பெளதிகம் கூறுவதைப் போல இந்துக்களும் இப்பிரஞ்சத்தை ஒருவித வெளி-நேர (Space- Time) அமைப்பாகத்தான் விளங்கி வைத்திருந்தார்களென்பது இதிலிருந்து புலனாகின்றது. இவ்விதம் இந்தப்பிரஞ்சத்தைச் சதுர வடிவாக உருவகித்த இந்துக்கள் இவ்விதிகளுக்கமைய உருவாக்கப்பட்ட கட்டடங்கள், நகரங்கள் என்பவற்றையும் சதுர வடிவாகவே (அல்லது செவ்வக) அமைத்தார்களென்பது ஆச்சரியமானதொன்றல்லதான்.

இவ்விதம் சதுரவடிவில் அமைக்கப்பட்ட ‘வாஸ்து’ புருஷமண்டலத்திற்கேற்ப நகரங்கள் அல்லது கட்டடங்கள் அமைக்கப்பட்டன. வாஸ்து புருஷனை இச்சதுர வடிவில் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் தெய்வங்கள் ஒவ்வொருவரும் சிறுசிறு சதுரங்களாக உருவாக்கப்பட்டார்கள். மேற்படி சதுரவடிவான வாஸ்து புருஷ மண்டலம் மேலும் பல சிறுசிறு சதுரங்களாகப் பிரிக்கப்பட்டன. இத்தகைய சிறுசதுரங்கள் ‘படா’க்கள் (Padas) என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு சிறு சதுரத்தையும் ஒவ்வொரு தெய்வம் ஆக்கிரமித்திருக்கும். வாஸ்து புருஷமண்டலத்தின் மையப்பகுதியில் பலசிறு சதூரங்களை உள்ளடக்கிய பெரிய சதுரமொன்று காணப்படும். இச்சதுரத்தை பிரம்மனிற்கு உருவகப்படுத்தினார்கள்.

மண்டுக மண்டலம்

  1. பிரம்மாவுக்குரியது – 4 சதுரங்கள்.
  2. அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த கடவுள்களுக்குரியது – 2 சதுரங்கள்.
  3. ஏனைய கடவுள்களுக்குரியது – 1 சதுரம்.

பிரம்மனைச் சுற்றி ஏனைய முக்கியமான தெய்வங்களைக்கொண்ட சதுரங்களும், அவற்றிற்கு வெளிப்புறமாக ஏனைய முக்கியம் குறைந்த தெய்வங்களைக் கொண்ட சதுரங்களுமாக மேற்படி வாஸ்து புருஷ மண்டலம் பிரிக்கப்பட்டிருக்கும். வாஸ்து புருஷ மண்டலத்தை 32 வகைகளில் சதுர வடிவில் உருவாக்கலாம். ஒரு சதுர வடிவான வாஸ்து புருஷமண்டலத்திலிருந்து 4, 9, 16, 25, 36, 49, 64, 81, … என்று 1024 சிறு சதுரங்களைக் கொண்ட முப்பத்திரண்டு வகைகளில் வாஸ்துபுருஷ மண்டலத்தை உருவாக்கலாமென்பதைப் பண்டைய இந்தியக் கட்டடக்கலை நூல்கள் கூறுகின்றன. இத்தகைய வாஸ்துபுருஷ மண்டலங்களில் 64 சிறு சதுரங்களை உள்ளடக்கிய மண்டுக மண்டலம் (Manduka mandala), 81 சிறு சதுரங்களை உள்ளடக்கிய பரமசாயிக்க மண்டலம் (Parama sayika mandala) என்பவை முக்கியமானவை.

பரமசாயிக்க மண்டலம்

மண்டுக மண்டலத்தைப் பொறுத்தவரையில் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்காகச் செல்லும் இரு அச்சுக்களாலும் முழுச் சதுர வடிவமும் பிரிக்கப்பட்டிருக்கும். பரமசாயிக்க மண்டலத்தைப் பொறுத்தவரையில் முழுச் சதுர வடிவமும் சமச்சீரற்றுப் பிரிக்கப்பட்டிருக்கும். இவ்விதமாக இந்துக்களின் கட்டடக்கலைக் கோட்பாடுகளின்படி அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்டடமும் (ஆலயமோ அல்லது இல்லமோ) நகரமும் உண்மையிலேயே இந்துக்களின் படைப்புத் தத்துவக் கோட்பாடுகளைப் புலப்படுத்தும் சின்னங்களாகத்தான் உருவாக்கப்படுகின்றனவென்பதை அறியமுடிகின்றது. இது சமயத்தின் பாதிப்பு எவ்வளவு தூரத்துக்கு நகர, கட்டடக்கலைத்துறைகளில் உள்ளதென்பதை வெளிப்படுத்துகின்றது. வட இந்தியக் கட்டடக்கலை நூல்கள் கூறும் வாஸ்து புருஷ மண்டலத்திற்கும், தென்னிந்திய நூல்கள் கூறும் விளக்கத்துக்குமிடையில் சிறு சிறு வேறுபாடுகள் நிலவியபோதும் பொதுவில் பெரிய அளவில் மாற்றமில்லையென்றே கொள்ளலாம். தென்னிந்திய ஆலய நகரங்களான மதுரை, ஸ்ரீரங்கம் போன்றவற்றில் இந்தமாற்றத்தை வெளிப்படையாகவே அவதானிக்க முடிகின்றது

இந்துக்களின் நகர அமைப்பும் அதில் சாதியின் பாதிப்பும், வகைகளும்

இந்துக்களின் நகர அமைப்புக் கலையைப் பல காரணிகள் நிர்ணயித்தன. அதிலுள்ள மண்ணின் அமைப்பு, அந்த மண்ணில் நிலவி வந்த சாதிக் கட்டுப்பாடுகள் போன்ற சமுதாய அமைப்புமுறை, சாத்திரங்கள் எல்லாமே இந்துக்களின் நகர அமைப்புக் கலையில் முக்கியமான பாத்திரத்தை வகித்தன. மண்ணின் அமைப்பு முறைக்கேற்ப நிலத்தை மூன்று வகைகளாகப் பிரித்தார்கள். ‘யங்கள’: நீர், நதி, வளமற்ற வறண்ட நிலத்தை இது குறித்தது. ‘அநோபா’: நீர் வளம் மிகுந்த, குளிர்ந்த சுவாத்தியம் மிக்க, வளம் மலிந்த மண்ணைக் கொண்ட நிலத்தை இது குறித்தது. ‘சாதனா’: ‘யங்கலவு’க்கும், ‘அநோபா’வுக்கும் இடைப்பட்ட சாதாரண வகையான நிலத்தை இவ்விதம் அழைத்தனர். மண்ணின் நிறம், மணம், அது எழுப்பும் ஒலி, அதன் சுவை, இவையெல்லாம் எவ்விதம் இந்துக்களின் நகர அமைப்புக் கலையில் பங்காற்றின என்பது பற்றி, மேற்கு நாட்டவரான Andras Volwahsan என்பவர் Living Architecure: Indian என்ற நூலில் பின்வருமாறு கூறுவார்.

பண்டைய-இந்திய-நகரம்

“மண்ணின் நிறம், மணம், ஒலி, சுவை, அது தரும் உணர்வு இவையெல்லாம் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டன. மண்ணின் நிறம் அம் மண்ணில் குடியமர்த்தப் பொருத்தமான சாதி மக்களை இனங்காட்டியது. வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கறுப்பு ஆகியவை முக்கியமானவை. வெள்ளை நிற மண் பிராமணர்களுக்கும், சிவப்புநிற மண் சத்திரியர்களுக்கும், மஞ்சள் நிற மண் வைசியர்களுக்கும், கறுப்பு   மண் சூத்திரர்களுக்கும் உரியனவாகக் கொள்ளப்பட்டன. மண்ணின் சுவைக்கும் சாதியமைப்புக்குமிடையிலும் தொடர்பிருந்தது. இனிமையான மண் பிராமணர்களுக்கும், காரமண் வைசியர்களுக்கும், கசப்பான மண் சூத்திரர்களுக்கும், உவர்ப்புமிக்க மண் சத்திரியர்களுக்கும் உரியனவாகக் கொள்ளப்பட்டன. தட்டும்பொழுது நரிகள் ஊளையிடுவதைப் போலவோ, நாய்கள் குரைப்பதைப் போலவோ அல்லது கழுதைகள் கத்துவதைப் போலவோ ஒலியெழுப்பும் மண்ணினைத் தவிர்க்க வேண்டும்”- [Living Architecture; பக்கம் 44].

நில அமைப்பின் சாய்வும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வடக்கை அல்லது வட-கிழக்கை நோக்கிச் செல்லும் சாய்வைக் கொண்ட மண்ணின் மீதே நகரம் அமைக்கப்பட வேண்டும். தெற்கு நோக்கிய சாய்வு மரணத்தையும், தென்மேற்கு நோக்கிய சாய்வு துன்பத்தையும், மேற்கு நோக்கிய நாய்வு வறுமையையும், பயிர் அழிவையும், வடமேற்கு நோக்கிய சாய்வு போரையும் கொண்டுவருமென இந்துக்கள் நம்பினார்கள். பள்ளமான தாழ்ந்த பிரதேசத்தில் நகரங்கள் அமைக்கப்படுவதானது ஆபத்தினைக் கொண்டு வரும்.

இவ்விதமாக நகர் அமைப்பதற்குரிய நிலம் தெரிவு செய்யப்பட்டதும் 32 வகைகளில் காணப்படும் வாஸ்துபுருஷ மண்டலத்தில் பொருத்தமான வகை சோதிடத்தில் நிபுணத்துவம் பெற்ற குருக்களினால் தெரிவு செய்யப்படும். நகரம் சதுரவடிவில் (இயலாத பட்சத்தில் செவ்வக வடிவில்) அமைக்கப்படும். சிலவகையான கட்டடக்கலைச் சுவடிகள் தரும் தகவல்களின்படி பூரனமான சதுர வடிவான நகரங்கள் பிராமணர்களுக்கு மட்டுமே உரியதென்றும், ஏனைய சாதியினரைப் பொறுத்தவரையில் செவ்வக வடிவான நகரங்களிலேயே வாழ வேண்டுமெனவும் அறியமுடியவதாக மேற்படி நூலில் நூலாசிரியர் எடுத்துக் காட்டுவார். இவ்விதமாகப் பொருத்தமான வாஸ்து புருஷ மண்டல அமைப்பு தெரிவு செய்யப்பட்டு அமைக்கப்படும் நகர அமைப்பு பின்வருமாறு காணப்படும்.

  1. நகரைச் சுற்றி மதில் அமைக்கப்படும்.
  2. வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் செல்லும் வீதிகளால் பிரிக்கப்பட்ட பல சிறு சிறு சதுரங்களை உள்ளடக்கிய பெரிய சதுரமாக நகர் காணப்படும்.
  3. நகரமானது வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்காகச் செல்லும் அகன்ற இரு இராஜ வீதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும்.
  4. இவ்விதம் அமைக்கப்படும் இராஜபாட்டையானது நகரின் தன்மைக்கேற்ப அளவில் வேறுபடும். உதாரணமாக மாநகர்களைப் பொறுத்தவரையில் இந்த இராஜபாட்டை 12 மீற்றர்கள் அகலமுடையதாகவும், சாதாரண நகரங்களைப் பொறுத்தவரையில் 10 மீற்றர்கள் அகலமுடையதாகவும், வெறும் சந்தையை மட்டுமே கொண்டதாகவிருக்கும் நகரமாயின் 8 மீற்றர்கள் அளவுடையதாகவுமிருக்கும்.
  5. நகரினைச் சுற்றிவர மதிலின் உட்புறமாகவும் பாதையொன்று அமைக்கப்படும். இராஜபாட்டையின் அகலத்தையொத்ததாக இப்பாதையிருக்கும்.

இதுதவிர நகரின் எந்த வகையான திசையில் எந்த வகையான மக்கள் வாழலாம் என்பது பற்றியும் பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை சம்பந்தமான நூல்கள் கூறுகின்றன. இவையெல்லாமே வாஸ்துபுருஷ மண்டல விதிகளினடிப்படையில் பல்வேறு தொழில்களையும், சாதிகளையும் உள்ளடக்கிய நகரங்கள் அமைக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றன. மிக எளிமையான நகர அமைப்புத் திட்டப்படி பிராமணர்கள் நகரின் வடக்குப் பகுதியில் வாழ்ந்து, தொழில் செய்து வரவேண்டும். இதுபோல் சத்திரியர்கள் கிழக்கிலும், தென்கிழக்கிலும், வைசியர்கள் தெற்கிலும், சூத்திரர்கள் மேற்கிலும் வசிக்க வேண்டும். இது முடியாதவிடத்து, குறைந்தது குடியிருப்புகள் சாதி அடிப்படையில் பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டடிருக்க வேண்டும். மேற்படி உபபிரிவுகள் சம்பந்தமான இன்னுமொரு விதியின்படி பிராமணர்கள், சோதிடர்கள், காவல்துறை தலைமையகம், அரச அதிகாரிகள் போன்றோர் வாழுமிடங்கள் வடக்கிலும், வடமேற்கிலும், பொற்கொல்லர்கள் போன்ற தொழிலாளர்கள் வாழும் பகுதிகள் தென்கிழக்கிலும், சிறையதிகாரிகள், போர்வீரர்கள், இடையர்கள், மீனவர்கள் போன்றோர் வாழுமிடங்கள் தென் மேற்கிலும், சந்தை வடகிழக்கிலும், அரண்மனைகள் போன்றவை கிழக்கிலும் அமைந்திருக்க வேண்டும். இவையெல்லாம் இந்துக்களின் நகர அமைப்புத் துறையில் சாதி வகித்த பங்கினைத் துலாம்பரமாக வெளிக்காட்டுகின்றன.

பண்டைய இந்திய நகர வகைகள்

இவ்விதமாக வாஸ்துபுருஷ விதிகளுக்கேற்ப கிராமங்கள், நகரங்கள் மற்றும் கோநகரங்கள் அமைக்கப்பட்டன. தண்டகம், சர்வதோபாத்ரா, நந்தியாவர்த்தம், பத்மம், சுவாஸ்திகம் பிரஸ்தரம், காமுகாண்ட, சதிர்முகா, பிரகீர்ணம், பராகம், ஸ்ரீபிரதிஷ்டம் …………. என்று பல்வேறு வகைகளில் இவை விளங்கின. இவற்றில் சில சிறிய நகரங்கள், கிராமங்களுக்குப் பொருத்தமாகவிருந்தன. உதாரணமாக தண்டகம் வகையினைக் கூறலாம். நீளக்கோல் (தண்டம்) போன்று நீண்ட வீதிகளை வடக்காகவும், கிழக்காகவும் நடுவில் நான்கு சந்துக்களைக் கொண்டு விளங்கிய இத்தகைய சிறிய நகரங்கள் அல்லது கிராமங்கள் இரு பிரதான வாயில்களைக் கொண்டு விளங்கின. நந்தியாவர்த்த போன்ற வகை நகரங்கள் ஆலயத்தை மையமாகக் கொண்டு விளங்கின. வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு என, மையத்தில் சந்திக்கும் இரு பிரதான வீதிகளுடன், மதில்களும் கொண்டு விளங்கிய வகைகளில் முக்கியமானது சுவாஸ்திகா வகை. இதுவே எல்லாவகைகளிலும் பிரபல்யமானது. ஊரின் கிழக்கு , மெற்குப் பகுதிகளில் வடக்கு நோக்கிய வீதிகளின் எண்ணிக்கை மூன்று, நான்கு, ஐந்து ,ஆறு அல்லது ஏழாகவிருப்பின் அவ்விதமாக அமைக்கபப்டும் நகரங்கள் அல்லது கிராமங்கள் பிரஸ்தரம் என அழைக்கப்பட்டன. பிரகீர்ண அமைப்பில் கிழக்கு நோக்கி நான்கு வழிகளும், வடக்கு நோக்கி எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று அல்லது பன்னிரண்டு வழிகளில் வீதிகள் காணப்பட்டன. பராகத்தில் வடக்கு நோக்கிப் பதினெட்டிலிருந்து இருபத்திரண்டு வழிகளும், கிழக்கு மேற்காக ஆறு வழிகளும் அமைந்திருந்தன. நந்தியாவர்த்தப் பூவினையொத்துச் சிறுசிறு வீதிகளையும், சந்துக்களையும் ஊரின் உட்புறமாகக் கொண்டிருந்த நந்தியாவர்த்த வகை ஊர்களில் கிழக்கு-மேற்காக ஐந்து வழிகளும், வடக்கு நோக்கிப் பதின்மூன்றிலிருந்து பதினேழு வழிகளும், அத்துடன் நான்கு திசைகளிலும் பிரதான வழிகள் காணப்பட்டன. தாமரைப் பூவினையொத்த பத்மம் வகையிலான அமைப்பினில் கிழக்கு-மேற்காக ஏழு வழிகளும், தெற்கு-வடக்காக மூன்றிலிருந்து ஏழுவரையிலான வழிகளும் காணப்பட்டன. பண்டைய மதுரை மாநகர் தாமரை வடிவமைந்திருந்ததைப் பரிபாடல் விளக்கும். பண்டைய நகரங்களிலொன்றான கலைகளில் சிறந்து விளங்கிய காஞ்சி நகர் தண்டியலங்காரத்தில் தோகை விரித்தாடும் மயிலுக்கு ஒப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் நா.பார்த்தசாரதி தனது ‘பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும்’ என்னும் ஆய்வு நூலில் மயூரம் என்றொரு பிரிவும் நகர அமைப்பு வடிவங்களில் இருந்திருக்கலாம் என்பார்.

இவை தவிர வேறுவகையான சில வகைகளும் காணப்படுகின்றன. இத்தகைய வகையான நகரங்கள் குறிப்பிட்டதொரு சாதிக்கு மட்டுமேயுரியதாக விளங்கின. உதாரணமாகக் கேட்டாவைக் குறிப்பிடலாம். இந்தவகை நகரத்தில் சூத்திரர்கள் மட்டுமே வாழ அனுமதிக்கப்பட்டனர். இந்த்துக்களின் சாதிவழிச் சமுதாயத்தில் தாழ்ந்த படியில் இருந்த காரணத்தினால் சூத்திரர்கள் பூரணத்துவமற்ற மனிதர்களாகக் கருதப்பட்டனர். இதனால் இவர்கள் மட்டுமே வாழ உருவாக்கப்பட்ட நகரங்களும் பூரணத்துவமற்றவையாகவே அமைக்கப்பட்டன. எந்தவித முக்கியமான மையப்பகுதியையும் கொண்டிராத வகையில், முக்கியதுவம் குறைந்த நிலையில் இத்தகைய நகரங்களின் அமைப்பு காணப்பட்டது. சமுதாயத்தில் முக்கியத்துவமற்ற படியில் வாழ்ந்த சூத்திரர்களின் நிலையை மேற்படி நகரங்களின் நகர அமைப்பு வெளிப்படுத்துகின்றது.

அதே சமயம் இந்துக்கள் பெரும்பாலும் சதுர அல்லது செவ்வக வடிவங்களிலேயே கட்டடங்கள், நகரங்களை அமைத்தாலும் வட்டவடிவிலும் சில சமயங்களில் அமைக்கத்தான் செய்தார்களென்பதை Andreas Volwahsen தனது Living Architecture: Indian நூலில் சுட்டிக்காட்டுவார். அதற்காக மண்டுக மண்டல அடிப்படையில் அமைந்த வட்ட வடிவ நகர் அமைப்பு வடிவங்களைச் சுட்டிக் காட்டுவார். இருந்தாலும் பொதுவாக பெரும்பாலும் பண்டைய இந்துக்கள் பாவித்த வடிவங்கள் சதுரங்கள் அல்லது செவ்வகங்களாகவேயிருந்தன.

இந்துக்களின் நகர அமைப்புக் கலையில் சமயம், சாதி போன்றவற்றின் பங்களிப்பை அல்லது பாதிப்பைப் பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை மற்றும் நகரமைப்புக்கலை பற்றிய நூல்கள் வழங்கும் தகவல்கள், மற்றும் காணப்படும் பழமையின் சின்னங்கள், காணிப்பெயர்கள் ஆகியன தற்போதும் வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்விதமாக நகர அமைப்புக்கலையினை சமயம், சமுதாயத்தில் நிலவிய சாதி அமைப்பு, காலநிலை, நில அமைப்பு, பாதுகாப்பு எனப் பல்வேறு காரணிகள் பாதித்தன. சங்ககாலத்தில் தமிழர் ஊரமைப்பானது எவ்விதம் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய நில அமைப்புகளால் வேறுபட்டு விளங்கின என்பதைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடியும். மேலும் ஆரம்பத்தில் நகரங்கள் அமைக்கப்படமுன்னர் ஆரியக் குழுக்களினால் அமைக்கப்பட்ட கிராமங்களின் அமைப்பு முறை பற்றியும் அறிய முடிகிறது. பெரியதொரு கிளைவிட்டுப் பரந்ததொரு மரத்தினை மையமாக வைத்துக் கிராமங்கள் அமைக்கப்பட்டன. அம்மரங்களின் கீழமர்ந்து அக்கிராமத்து முதியவர்கள் ஊர்ப்பிரச்சினைகளுக்கு ஆலோசனைகள், தீர்ப்புக் கூறினார்கள். மேலும் இப்பிரபஞ்சமும், இங்கு காணப்படும் அனைத்தும் எதனை மையமாக வைத்துச் சுழல்கின்றனவோ அந்த ஒழுக்கினையே அம்மரங்கள் பிரதிநிதிப்படுத்துவதாகவும் அன்றைய இந்துக்கள் கருதினார்கள் என்பதையும் மேற்படி நூல்கள் விளக்குவதை அறிய முடிகிறது.

ஸ்தபதி வை.கணபதி இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக் கையேட்டில் ஊரமைப்புக்கலை’ பற்றியொரு விரிவான கட்டுரை எழுதியுள்ளார். அதில் மயமதத்தினொரு பிரிவான சிற்பநூல் நகரமைப்புப் பற்றியும் விவரிப்பதாக அவர் கருதுவதை நா.பார்த்தசாரதியின் ‘பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும்’ சுட்டிக் காட்டும். இவ்விதமாக ‘மயமத’ அடிப்படையிலமைந்த ஊரமைப்பானது அதன் சுற்றளவின் அடிப்படையில் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது. 20,000 தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம் (ஒரு தண்டமென்பது நான்கு முழங்களை அல்லது பதினொரு அடிகளைக் குறித்தது)., 40,000 தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம், 60,000 தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம், 80,000 தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம், 1,00,000 தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம் எனக் கிராமங்கள் பல்வேறு அளவுகளில் அமைக்கப்பட்டன. இவ்விதமான கிராமங்களின் இருபதினொரு பாகத்தில் மட்டுமே வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்டன. எஞ்சியவற்றில் விளைநிலங்கள், நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள், விருட்சங்களுக்கு, தோப்புக்களுக்கென ஒதுக்கப்பட்டன. இவ்விதமாக நகர அமைப்பானது கிராமம், கேடம், கர்வடம், துர்க்கம், நகரம் ,கோநகரெனப் பரிணாம வளர்ச்சியுற்று வந்ததை மேற்படிக் கட்டடக்கலை/நகரமைப்பு நூல்கள் குறிக்கின்றன.

உசாத்துணை

  1. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
  2. பழங்காலத் தமிழர் வாணிகம் – மயிலை. சீனி. வேங்கடசாமி.
  3. பழந்தமிழர் கட்டடக்கலையும் நகர அமைப்பும் – நா. பார்த்தசாரதி.
  4. நல்லூர் இராஜதானி நகர அமைப்பு. – வ.ந.கிரிதரன்
  5. பத்துப்பாட்டு: பட்டினப்பாலை – கடியலூர் உருத்திரங்கண்ணனார், மதுரைக்காஞ்சி வ் மாங்குடி மருதனார், முல்லைப்பாட்டு – நப்பூதனார்
  6. மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்
  7. திருவாசகம் – மணிவாசகர்
  8. பரிபாடல்
  9. 9.Living Architecture: Indian – Andreas Volwahsen
  10. தமிழ் மனையடி சாத்திரம்.

ஒலிவடிவில் கேட்க

10387 பார்வைகள்

About the Author

நவரத்தினம் கிரிதரன்

தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் வ.ந.கிரிதரன் இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். வவுனியா மகாவித்தியாலயம், யாழ் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலைப் பட்டதாரி. ''டொராண்டோ' சென்டனியல் கல்லூரியில் இலத்திரனியற் பொறியியல் துறையில் பட்டம், தகவற் தொழில் நுட்பம் நுட்பத்துறையில் பல்வேறு கல்வித் தகைமைகளைப் பெற்றவர். இலங்கையிலிருந்த காலத்தில் தன் எழுத்துலக வாழ்வினை ஆரம்பித்த புகலிடத்தில் தொடர்ந்து எழுதி வருகின்றார். பதிவுகள் என்னும் இணைய இதழினை 2000 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியராகவிருந்து நடாத்தி வருகின்றார். இவரது படைப்புகள் இலங்கை, தமிழகம் மற்றும் புகலிடத்தமிழர்கள் வெளியிட்ட சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. தமிழக ஆய்வரங்குகளில் இவரது புகலிடப்புனைகதைகளைப் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை இவரது எட்டு நூல்கள் வெளியாகியுள்ளன. மண்ணின் குரல் (நாவல், கவிதை, கட்டுரைத் தொகுப்பு), எழுக அதி மானுடா! (கவிதைத்தொகுப்பு), அமெரிக்கா (நாவல், சிறுகதைகளின் தொகுப்பு), நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு) மண்ணின் குரல் (நாவல்களின் தொகுப்பு), குடிவரவாளன் (நாவல்), அமெரிக்கா (நாவல், திருத்திய இரண்டாவது பதிப்பு) மற்றும் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் (சிறுகதைத்தொகுப்பு) ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்
  • April 2024 (2)
  • March 2024 (1)
  • November 2023 (5)
  • October 2023 (4)
  • September 2023 (3)
  • July 2023 (3)
  • June 2023 (1)
  • May 2023 (4)
  • April 2023 (2)
  • March 2023 (2)
  • February 2023 (1)
  • January 2023 (1)