Arts
28 நிமிட வாசிப்பு

மகாவலி அபிவிருத்தித் திட்டம்: பேசாத பக்கங்கள்

April 28, 2024 | Ezhuna

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இன்று அனைவருமே அனுபவிக்கின்ற நிலையில் பசுமை நோக்கிய நகர்வு குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் பரந்துபட்டளவில் மக்களைச் சென்றடைந்துள்ளது. பசுமையின் பெயரால் வளச்சுரண்டல்கள், உரிமை மறுப்புகள், மோசடியான வர்த்தகம், போலியான திட்டங்கள் என அனைத்தும் அரங்கேறுகின்றன. குறிப்பாக மூன்றாமுலக நாடுகள் இதற்குப் பலியாகின்றன. இலங்கையும் இதற்கு விலக்கல்ல. இலங்கை உயிரினங்களின் செறிவு அடிப்படையில் ஆசியப் பிராந்தியத்தில் முக்கியமான நாடாக கருதப்படுகிறது. ஆனால் இலங்கையின் உயிர்ப்பல்வகைமை மிகப்பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் காலநிலை மாற்றத்தின் கொடும் விளைவுகளையும் இலங்கை சந்தித்துள்ளது. இவை குறிப்பாக விவசாயத் துறையை சீரழித்துள்ளது. உயரும் கடல்மட்டம் இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் உண்டு. இத்தகைய பின்புலத்தில் இலங்கைச் சூழலில் பசுமை எனும் பெயரால் நடைபெறுகின்ற விடயங்களைத் தத்துவார்த்த ரீதியிலும் வரலாற்று நோக்கிலும் சமகால நிகழ்வுகளுடனும் நோக்க இத்தொடர் விழைகிறது. பசுமையின் பெயரால் நடந்தேறுபவை ஏற்படுத்தும் சமூகப் பொருளாதார மாற்றங்களையும் அதன் அரசியல் சிக்கல்களையும் சேர்த்தே ‘பசுமை எனும் பேரபாயம்‘ எனும் இத்தொடர் கவனம் செலுத்துகிறது.

தொடக்கக் குறிப்புகள்

இலங்கையின் வரலாற்றில் மிகப்பாரிய அபிவிருத்தித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது மகாவலி அபிவிருத்தித் திட்டடமாகும். இன்றுவரை இலங்கையின் முதன்மையான பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமாக இது விளங்குகிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் முதன்மையான இடம் இத்திட்டத்திற்கு உண்டு. ஆனால் இலங்கையின் வரலாற்றாளர்களின் பார்வையில் இது ஒரு அபிவிருத்தித் திட்டம் மட்டுமே. அதேவேளை அபிவிருத்தி தொடர்பான ஆய்வாளர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பார்வையில் இதுவொரு வெற்றிகரமான அபிவிருத்தித் திட்டமாகும். கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரையில் நாட்டின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட ஒரு செயற்றிட்டமாக இது கொண்டாடப்பட வேண்டியது. இத்திட்டம் கருக்கொண்டு 65 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இன்றும் ஒரு பரந்த பன்முனைப் பார்வையில் இத்திட்டம் பார்க்கப்பட்டவில்லை. இலங்கையின் தேசியவாதக் கதையாடலில் இத்திட்டத்திற்கு முக்கிய இடமுண்டு. குறிப்பாக பராக்கிரமபாகுவிற்குப் பிறகு விவசாயத்திற்கு நீர்வளத்தை சாத்தியமாக்கிய திட்டம் என்ற கருத்துருவாக்கம் முக்கியமானது. 

இன்று திரும்பிப் பார்க்கின்ற போது, இத்திட்டம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் பன்முகப்பட்டவை. ஆனால் அவையனைத்தும் ‘இலங்கையின் வெற்றிகரமான அபிவிருத்தித் திட்டம்’ என்ற போலிப் பெருமிதத்துள் அமிழ்ந்து போயின. இன்றும் இத்திட்டத்தையும் அதன் செயற்பாடுகளையும் விமர்சிப்பது குற்றமாகவும், தேசவிரோச் செயலாகவும் பார்க்கப்படுகிறது. சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் தனக்கான இடத்தை வரலாற்றின் வழி நிறுவி வந்துள்ளது. அவ்வழியிலேயே பராக்கிரமபாகுவிற்குப் பிறகு விவசாயிகளுக்கு வாழ்வளித்தது என்ற பெருமையை மகாவலி அபிவிருத்தித் திட்டம் உடையது என்ற படிமம் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது. இது இத்திட்டத்தின் விளைவுகளை விமர்சனபூர்வமாகப் பார்ப்பதைத் தவிர்த்து வந்துள்ளது. மேற்கத்தேய ஆய்வாளர்களுக்கு வெளியே இத்திட்டத்தை திறந்த பார்வையோடு அணுகியோர் மிகச் சிலரே. 

இத்திட்டம் ஏற்படுத்திய சேதங்கள் மிகப்பல. அதில் நான்கை பிரதானமாக இக்கட்டுரை சுருக்கமாகக் கவனத்தில் கொள்ள விழைகிறது.

  1. இன்று நாட்டின் பல பகுதிகளில் இடம்பெறுகின்ற மண்சரிவுகளுக்கும் மண்ணரிப்புகளுக்கும் ஒரு தொடக்கப்புள்ளி.
  2. குடிநீர் மாசாதலுக்கான முக்கிய காரணி.
  3. மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான முரண்பாட்டை உருவாக்கிய காடழிப்பை சாத்தியமாக்கியமை.
  4. இன்று விவசாயிகள் எதிர்நோக்கும் நாட்பட்ட சிறுநீரக நோயின் உருவாக்கத்தின் மூலப்புள்ளி. 

இவற்றை பார்ப்பதற்கு முன்னர், மகாவலித் திட்டத்தின் தோற்றுவாயைப் பார்க்க வேண்டும். ஏனெனில் முதற்கோணல் முற்றும் கோணல் என்பது போலவே இத்திட்டத்தின் செயற்பாடுகள் அமைந்தன. குறிப்பாக, முதலாம் உலக அபிவிருத்தி மாதிரிகளை இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில் பயன்படுத்துவதன் பாதகத்திற்கு இத்திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இன்று சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதும் இதைப் போன்றதுதான். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பாதிப்புகள் பல தசாப்தங்கள் கடந்தும் இலங்கையர்களை வதைப்பது போலவே, சர்வதேச நாணய நிதியம் முன்மொழியும் தீர்வுகளும் எம்மை வதைக்கும். 

மகாவலியின் கதை

335 கிலோ மீற்றர் நீளமான மகாவலி ஆற்றை மையப்படுத்திய அபிவிருத்தித் திட்டமொன்றைத் தொடங்கும் நோக்கம் 1958 இல் முளைவிட்டது. 1961 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள மகாவலி ஆற்றுப் படுகையை ஆய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிதியிலிருந்து உதவி கேட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று ஒரு பெரிய அளவிலான நீர்நிலைத் திட்டத்திற்கான சாத்தியக் கூறுகளைத் தீர்மானிக்க ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் திட்டம் (UNDP) மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ஆகியன இணைந்து முதன்முதலில் 1963 இல் ஒரு ஆய்வை மேற்கொண்டன. இவ்விரு அமைப்புகளும் தனது பணியை 3 ஆண்டுகளில் முடித்து விரிவான அறிக்கைகளைச் சமர்ப்பித்தன. குறிப்பாக அக்குழு வழங்கிய பிரதான திட்டம் (Master Plan) முக்கியமானது. 

mahavali project

இலங்கை அரசாங்கம் பின்னர் உலக வங்கியிடம் நிதியுதவியைக் (அபிவிருத்தி உதவி) கோரியது. இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக உலக வங்கி சர்வதேச அபிவிருத்தி நிபுணர்களின் குழுவொன்றை அனுப்பியது. அக்குழு ஏற்கனவே வரையப்பட்ட பிரதான திட்டத்தை மேம்படுத்துவதை மேற்கொண்டது. உலக வங்கியால் அனுப்பப்பட்ட இரண்டாவது குழு 1968 இல் இலங்கை வந்தது. இக்குழு நெதர்லாந்தை தளமாகக் கொண்ட (NEDECO என அழைக்கப்படும்) ஒரு சுயாதீன ஆலோசனை நிறுவனத்தைப் பயன்படுத்தி திட்டத்திற்கான உறுதியான செயலாக்க உத்தியை உருவாக்க பரிந்துரைத்தது. அதன்படி NEDECO ஆலோசகர்கள் தங்கள் அறிக்கைகளை 1975 இல் அரசாங்கத்திடம் சமர்ப்பித்தனர். அதனைத் தொடர்ந்து மகாவலி அபிலிருத்தித் திட்டத்திற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கின. 

1977 இல் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் இத்திட்டத்தில் பாரிய திருப்பு முனையாகும். ஆட்சிக்கு வந்த வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியானது இத்திட்டத்தை விரைவுபடுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டமாக மாற்றியது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் செயற்பாடுகள் மாற்றமடைந்து கொண்டிருக்கும் அரசியல் பின்னணியில் வடிவமைக்கப்பட்டமையை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். மேற்குலக சார்பான வலதுசாரி ஆட்சிக்கு நிதியளிக்க சர்வதேச நன்கொடையாளர்கள் தயாராக இருந்தனர். குறிப்பாக முக்கிய திட்டங்களுக்கு நிதியளிப்பதன் மூலம் திட்ட அமுலாக்க காலக்கெடுவை விரைவுபடுத்த முயன்றனர். உலக வங்கி இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான பெரும்பான்மையான நிதியை வழங்கியது மட்டுமல்லாமல், இத்திட்டத்திற்கான மேம்பாட்டு உதவி ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டது. 

மகாவலி அபிவிருத்தித் திட்டமானது, இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய பல்நோக்கு தேசிய அபிவிருத்தித் திட்டமாகும். இது திட்டமிடப்பட்ட காலப்பகுதியில், உலகில் எங்கும் காணப்படாத நீர் தொடர்பான மிகப்பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. இந்தத் திட்டமானது மகாவலி ஆற்றின் குறுக்கே 12 நீர்த்தேக்கங்களை நிர்மாணித்தது (மகாவலியின் வடிகால் படுகை நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கை உள்ளடக்கியது). அதன் நீரை வெவ்வேறு வழிகளில் திருப்பிவிடுவதை நோக்காகக் கொண்டது. திசை திருப்பப்பட்ட நீர் இரண்டு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது: (1) நாட்டில் புதிய பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் செய்ய, (2) விசையாழிகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களின் கட்டுமானத்தின் மூலம் நீர் மின்சாரத்தை உருவாக்க.

mahavali project

12 முக்கிய நீர்த்தேக்கங்களின் கட்டுமானத்தில் 8 நீர்ப்பாசனத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது; 4 நீர் மின் உற்பத்திக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது 3 முக்கிய கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டது, ஒவ்வொரு கட்டத்திலும் 3 துணைத் திட்டங்கள் இருந்தன. மகாவலி ஆற்றின் நீரைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 400,000 ஹெக்டேர் (1,000 சதுர கி.மீ.) நீர்ப்பாசனத்தை உருவாக்குவதை மகாவலி அபிவிருத்தியின் பிரதான திட்டம் முன்மொழிந்தது. இத்திட்டமான மகாவலி ஆற்றில் ஓடுகின்ற வழித்தடத்தில் இரண்டு வகையான இடங்களைத் தெரிவு செய்தது. முதலாவது, நீர்ப்பாசனக் கூறுக்கான நீர் உட்கட்டமைப்பை உடைய நீர்ப்பாசனம் கிடைக்கின்ற நிலப்பரப்பு. இரண்டாவது, முன்பு நீர்ப்பாசனம் செய்யப்படாத வறண்ட நிலங்களின் பரப்பளவு. நீர்ப்பாசன நிலப்பரப்புகளின் புதிய விரிவாக்கம் சிஸ்டம்ஸ் எனப்படும் 13 துணைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அகரவரிசைப்படி சிஸ்டம் A முதல் சிஸ்டம் M வரை பெயரிடப்பட்டது. இந்த 13 நீர்ப்பாசன அமைப்புகளில் ஒவ்வொன்றும் பிளாக்ஸ் எனப்படும் பல சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒட்டுமொத்த வடிவமைப்பில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் அளவில் வேறுபடுவதால், ஒரு அமைப்பிற்கு தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கவில்லை. இத்திட்டத்தில் உள்ள சில பெரிய அமைப்புகள் 10 தொகுதிகளைக் கொண்டிருந்தன. அதே சமயம் சிறிய அமைப்புகள் ஒவ்வொன்றும் 2-5 தொகுதிகள் வரைக் கொண்டிருந்தன. எவ்வாறாயினும், நீர்ப்பாசன அமைப்புகளின் தொகுதிகள் சிறிய அலகுகள் அல்ல. ஒவ்வொரு தொகுதிக்கும் இன்னும் சிறிய அளவிலான பல அலகுகள் இருந்தன. இந்த அலகுகள் நீர்ப்பாசன அமைப்பின் உண்மையான கட்டுமானத் தொகுதிகளாக இருந்தன. மகாவலி ஆற்றில் இருந்து திருப்பிவிடப்பட்ட நீருக்கான இறுதி நிறுத்தமாக விவசாய நிலம் இருந்தது.

இத்திட்டத்தின் வழியாக நிறுவப்பட்ட நீர்மின் துறை, நீர்ப்பாசனத் துறையை விட மிகக் குறைவான சிக்கல்களை உள்ளடக்கியதாக இருந்தது. மகாவலி ஆற்றில் இருந்து நீரைத் திருப்பிவிடும் 12 முக்கிய நீர்த்தேக்கங்களில் 4ஐ மையமாகக் கொண்டு இந்த நீர்மின் வளாகம் அமைந்துள்ளது. நீரின் ஓட்டத்தைத் திசை திருப்பிய பிறகு, இந்த நீர்த்தேக்கங்கள் அதை மிக அதிக அழுத்தத்தில் நிலத்தடி சுரங்கப்பாதை வழியாக அனுப்புகின்றன. நீரோடைகளால் உருவாக்கப்படும் அழுத்தம், விசையாழிகளின் பயன்பாடு மூலம் நீர்மின்சாரத்தை உருவாக்க பயன்படுத்தப்படும். சுமார் 500 மெகாவாட்களை (வருடாந்தம்) தொடர்ந்து உற்பத்தி செய்யும் அதே வேளையில், மகாவலியின் நீர்மின்சார வளாகத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இலங்கையின் தேசியத் தேவைகளில் 5 சதவீதத்ததையே பூர்த்தி செய்கிறது. இதன் பொருள், திட்டத்தின் நீர்மின் கூறு அதன் நீர்ப்பாசனக் கூறுகளுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பு மற்றும் மக்களை விவரிப்பது எளிதான காரியம் அல்ல, ஏனெனில் அதன் செல்வாக்கு நாடு முழுவதும் பரவியுள்ளது. 

மேற்கிலிருந்து தெற்குக்கு : பிரதியிடலின் பலாபலன்கள்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகளாவிய ரீதியில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. முதலாவது பல கொலனித்துவ நாடுகள் விடுதலை அடைந்தன. இரண்டாவது மேற்குலகில் வெற்றியளித்த மாதிரிகள் – குறிப்பாக அபிவிருத்தி – மூன்றாமுலக நாடுகளுக்கு (உலகின் தெற்கிற்கு) கடத்தப்பட்டு பிரதி பண்ணப்பட்டது. மகாவலித் திட்டமும் அதற்கு விலக்கல்ல. இத்திட்டமானது இதுவரை வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டிய முன்னணி பாரிய நீர்த் திட்டங்களில் ஒன்றாகவும், உலகின் மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றாகவும் உள்ளது. எனவே இரண்டு கதையாடல்களின் வழி இதை அணுக முடியும். ஒன்று, ஒரு நீரியல் சார் கதையாடலின் வழி, மற்றையது, அபிவிருத்திக் கதையாடலின் வழி. 

நீரியல் பார்வையில், மகாவலி அபிவிருத்தித் திட்டமானது மேற்குலகிலிருந்து தெற்கிற்கு நீர்-தொழில்நுட்ப பரிமாற்றத்தின் (விவசாய விரிவாக்கத்தை நோக்கிய) ஒரு சுவையான நிகழ்வாகும். ஏனெனில் இது அக்காலத்தின் வரலாற்று வரைபடத்தோடு பொருந்தி வருகிறது. 1930 கள் மற்றும் 1940 களில் தொடங்கி, சீனா, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பிரேசில், தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கான அணைகள் கட்டப்பட்டு, உலகம் முழுவதும் பெரிய அணைகளின் கட்டுமானம் பெருகியது. மேலும், பெரிய அணைத் திட்டங்களுக்கு நாடுகடந்த நட்பும் அதற்கான ஆதரவாளர்களின் கூட்டு என்பனவும் தோற்றம் பெற்றன. இதனால் இந்தச் செயல்முறையின் ஆரம்ப ஆண்டுகளில் அதிகளவில் நாடுகள் இணைந்து செயலாற்றத் தொடங்கின். உலகளவில் அணை கட்டுவது பற்றிய அறிவை மாற்றுவதற்கு வசதியாக 1929 ஆம் ஆண்டில் பெரிய அணைகளுக்கான சர்வதேச ஆணையம் (International Commission on Large Dams) என்ற உலகளாவிய தொழில்முறைச் சங்கம் நிறுவப்பட்டது. இதனால் ‘பெரிய-அணை’கள் சகாப்தத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இது மகாவலி அபிவிருத்தித் திட்டத்தைப் பல வழிகளில் பாதித்தது.

பெரிய அணைகள் பற்றிய அதீத அக்கறையானது பெரிய அணைக் காலகட்டம் (Big Dam Era) என்று அழைக்கப்பட்ட ஒரு காலப்பகுதிக்கு எடுத்துச் சென்றது. பெரிய அணைகள் மூலம் தண்ணீரைக் கட்டுப்படுத்தும் பாரிய நீர்த் திட்டங்கள் மக்கள் கற்பனையைப் பிடிக்கத் தொடங்கின. 1960 களில் அணைக் கட்டுமானம் தீவிரமடைந்தது. மூன்றாமுலக நாடுகளில் அது நிதி மூலதனத்தோடும் ஜனநாயக மறுப்போடும் பின்னிப் பிணைந்ததாக இருந்தது. இந்நாடுகளில் மேற்குலக நடைமுறைகள் எதுவித விமர்சன நோக்குமின்றிப் பிரதிசெய்யப்பட்டன. 

அபிவிருத்தி கதையாடலின் வழி நோக்குவதாயின், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அபிவிருத்திச் சிந்தனையின் கண்ணோட்டத்தில், மகாவலி அபிவிருத்தித் திட்டம்  என்பது வளர்ந்து வரும் சர்வதேச அபிவிருத்தித் தொழிலின் அரசியலுக்கு ஊக்கமளிக்கும் உலகின் முதல் பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டம், அதன் வடிவமைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலானது ​​இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் மூலக்கல்லாகும். ஏனெனில் இலங்கை அபிவிருத்தியை எவ்வாறு கண்டது என்பதற்கு இந்த அபிவிருத்தித் திட்டமே சான்று. இதன் ஆரம்பகாலத்தில்   இலங்கையின் மொத்தத் தேசிய மூலதன அபிவிருத்தி நிதியில் 30 வீதம் ஒதுக்கப்பட்டது. அதேபோல இந்த அபிவிருத்தித் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திய இன்னொரு அம்சம், அரசாங்கமானது திட்டத்தை நிர்வகிப்பதற்கு தேசிய அமைச்சு ஒன்றை உருவாக்கியமையாகும். அது பின்னர் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு என அழைக்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தித் திட்டமானது மேற்சொன்ன இரண்டு கதையாடல்களாலும் இடைவெட்டப்பட்ட செல்வாக்குக்கு உட்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது. பாரிய நீர்த்திட்டங்களின் எழுச்சியானது அபிவிருத்தித் துறையின் எழுச்சியுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. அமெரிக்காவின் டென்னசி பள்ளத்தாக்கு ஆணையத் திட்டம் (Tennessee Valley Authority Project), முதலாவது பாரிய நீர்த் திட்டமாகக்  கருதப்படுகிறது. இதனைப் பின்பற்றியே சர்வதேச அபிவிருத்தி உதவிகளின் பெயரால் உலகெங்கும் பல்வேறு நீர்த் திட்டங்கள் உருவாகின. இதனால் இது ‘வளர்ச்சித் திட்டங்களின் முன்னோடி’ என்று அழைக்கப்பட்டது. இது நீர் மேலாண்மையின் தத்துவங்கள் எந்த அளவிற்கு அபிவிருத்தி குறித்த பார்வைகளால் வழிநடத்தப்படுகின்றன என்பதை நிரூபிக்கிறது. பாரிய நீர்த்திட்டங்கள், அபிவிருத்தியின் நவீனமயமாக்கல் கோட்பாடுகளால் செல்வாக்குக்குள்ளாகின்றன என்பதை இதனூடே அடையாளம் காணலாம். ஏனெனில் இந்த நீர்த்திட்டங்கள் இரண்டு கோட்பாட்டு நோக்கங்களைக் கொண்டுள்ளன. முதலாவது, சமூகங்கள் நவீனத்திற்கு முந்தைய நிலையில் இருந்து நவீனத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பாக இத்திட்டங்கள் நோக்கப்படுகின்றன. இரண்டாவது, அம்மக்களின் நிலை என்பது பொருளாதார வளர்ச்சியின் புள்ளிவிவரங்களின்படி மதிப்பிடப்படுகிறது. இவையிரண்டும் நவீனத்துவ, தாரண்மைவாத பொருளாதர அடிப்படைகளைக் கொண்ட அபிவிருத்திக் கோட்பாடுகளால் வடிவமைக்கப்பட்டவை. 

1950 களின் பிற்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வருடாந்த வளர்ச்சி விகிதங்கள் ஆகியவை நாடுகளை மதிப்பிடும் அளவுகோல்களாகின. இவை ‘அபிவிருத்தி’யை தீர்மானிக்கும் முக்கிய அளவீடுகளாக மாறின. அபிவிருத்தி தொடர்பான இந்த மேலாதிக்க உணர்வுகள் உலகளாவிய தெற்கு நாடுகளில் பாரிய நீர்த் திட்டங்களின் விரைவான வளர்ச்சியைச் சாத்தியமாக்கின. இதற்கு பல காரணங்கள் இருந்தன. 

முதலாவதாக, அபிவிருத்தியின் நவீனமயமாக்கல் கோட்பாடுகள் அமெரிக்கா போன்ற நாடுகளை வளர்ச்சி ஏணியின் உச்சியில் நிலைநிறுத்தியது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு ஒரு குறிகாட்டியாக அமெரிக்காவின் வளர்ச்சி காட்டப்பட்டது. இதன்மூலம் உலகளாவிய தெற்கு நாடுகள் (இலங்கை உட்பட) பெரும்பாலும் அமெரிக்கத்  திட்டங்களில் இருந்து நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் நிர்வாக மாதிரிகளை இறக்குமதி செய்வதன் மூலம் அமெரிக்க பாணியிலான ‘அபிவிருத்தியை’ அடைய முடியும் என நம்பின. 

இரண்டாவதாக, ‘ட்ரூமன் கோட்பாடு’ எனப்படும் அமெரிக்க அயலுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்கா தனது நீர்த் தொழில்நுட்பங்கள் மற்றும் நிர்வாக மாதிரிகளை உலகளாவிய தெற்குக்கு தீவிரமாக ஏற்றுமதி செய்தது. கெடுபிடிப்போரின் போது சோவியத் புவிசார் அரசியல் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்தும் அரசியல் நோக்கத்தையும் ட்ரூமன் கோட்பாடு கொண்டிருந்ததால், அமெரிக்கா தனது வளர்ச்சிக் கொள்கைகளை இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிசேரா நாடுகளுக்கு விநியோகிப்பதில் சிறப்பு அக்கறை எடுத்தது. 

மூன்றாவதாக, பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களின் விளைவுகளை மதிப்பிடுவதில் அபிவிருத்திப் புள்ளிவிபரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நீர், நிலம் மற்றும் மனித உழைப்பு அனைத்தும் ‘அளவிடக்கூடிய விவசாய உள்ளீடுகளாக’ மொழிபெயர்க்கப்பட்டு அவற்றின் பொருளாதார உற்பத்தித்திறனை மதிப்பீடு செய்கின்றன. திட்டமிடுபவர்கள் விவசாய உற்பத்தியை திட்டத்தில் உள்ளீடு செய்யப்படும் தண்ணீரின் அளவோடு தொடர்புபடுத்துகிறார்கள்.  தண்ணீரை அவர்கள் எண்ணெய் போன்ற ஒரு ‘பண்டமாகப்’ பார்க்கத் தொடங்குகிறார்கள். அதாவது விவசாயத்தை தீவிரப்படுத்துவதற்கான ஒரு துணைப்பொருளாக தண்ணீரைக் கருதினர். இவ்வாறு, பாரிய நீர்த்திட்டங்கள் அபிவிருத்தி குறித்து ‘கட்டமைக்கப்பட்ட வியாக்கியானத்தால்’ ஒழுங்குபடுத்தபட்டவையாக இருந்தது.  இது அபிவிருத்தியை ஒரு நாட்டின் அளவிடக்கூடிய பொருளாதார வளர்ச்சியுடன் சமன்படுத்துகிறது. பாரிய நீர்த்திட்டங்களில் நீர், அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை இணைக்கும் இந்த வழியானது மூன்றாமுலக நாடுகளை மிக மோசமாகப் பாதித்துள்ளன என்பதை பல அபிவிருத்தி ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன. இந்த வகைக்குள்ளேயே மகாவலி அபிவிருத்தித் திட்டத்தையும் நோக்க வேண்டும். ஆனால் இலங்கையில் அதுகுறித்த கதையாடல்கள் நிகழவில்லை. 

மூன்றாமுலக நாடுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு தொழில்நுட்ப தீர்வுகளாகத் தோன்றினாலும் அவை உண்மையில் வளங்களை யாருக்கு எதற்காக ஒதுக்குவது என்ற அரசியல் முடிவுகளாலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்பதை ஜேம்ஸ் பெர்குசன் விரிவான எடுத்துக் காட்டியுள்ளார். அபிவிருத்தியின் பெயரால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் அனைத்திலும் மறைக்கப்பட்ட ஒரு அரசியல் அம்சம் உள்ளார்ந்ததாக இருந்துள்ளது.  

இங்கு இன்னொரு முக்கிய கேள்வியொன்று எழுகிறது : நவீனத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்களால் வடிவமைக்கப்படும் பாரிய நீர்த் திட்டங்களால் என்ன வகையான விளைவுகள் ஏற்படக்கூடும்? நவீனத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்களால் ஈர்க்கப்பட்ட பாரிய நீர்த்திட்டங்கள் ‘இயற்கையையும்’ ‘சமூகத்தையும்’ வெவ்வேறானதாகப் பிரித்து, இயற்கையை காட்டுமிராண்டித்தனமாகவும் மனிதகுலத்திற்கு எதிரானதாகவும் சித்தரிப்பதன் மூலம் சமூகத்தின் எதிரியாக இயற்கையைக் கட்டமைத்தன. இதன்மூலம் இயற்கைக்குச் செய்யப்படும் அநீதிகளை நீதியாக்கின. இதன் மூலம் காடழிப்பு, விலங்குகள் அழிப்பு, இயற்கை நிலையில் ஏற்படுத்தப்படும் கட்டாயமான மாற்றங்கள் அனைத்தும் நியாயப்படுத்தப்பட்டன. அதேவேளை இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் இடங்களில் உள்ள மக்களிடம் இருக்கின்ற நிர்வாகத்தின் பன்முகத்தன்மை மற்றும் அறிவு வடிவங்களை முழுவதுமாக அழிக்க முனைகின்றன.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்திலும் இதுவே நடந்தது. இத்திட்டத்தின் பிரதான திட்ட வடிவமைப்பானது குறைந்தது நான்கு தனித்தனி நிறுவனங்களின் (UNDP, FAO, NEDECO மற்றும் உலக வங்கி) ஒருங்கிணைந்த தயாரிப்பாகக் காணப்பட்டது. ஆனால் இதன் இறுதி வடிவமைப்பானது அமெரிக்காவின் டென்னசி பள்ளத்தாக்கு திட்டத்தின் வடிவமைப்பின் மிக நெருக்கமான பிரதியாகவும் அதனது தழுவலாகவும் இருந்தது. இது ஏன் நடந்தது என்பதை நோக்குவது முக்கியமானது. 

பிரதி பண்ணலின் பாதகங்கள்

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பிரதான திட்டமானது, டென்னசி பள்ளத்தாக்கு ஆணையத்தின் திட்டத்தை ஒத்திருந்ததில் வியப்பில்லை. இரண்டு அமைப்புகளும் அதன் மூலத்திலிருந்து (ஆற்றுப் படுகை) இறுதிப் புள்ளிக்கு (விவசாய வயல்களுக்கு) தண்ணீரைக் கொண்டு செல்ல நேர் – கோட்டுப் புவியீர்ப்பு அடிப்படையிலான வலைப்பின்னல் வடிவமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. இரண்டு திட்டங்களிலும், பெரிய பல்நோக்கு அணைகள் மற்றும் நீர்த்தேக்க வளாகங்களில் நீர் உருவாகிறது. மேலும் இது ஒரு பெரிய நீர்ப்பாசன இடத்தில் படிப்படியாக விநியோகிக்கப்படுகிறது. (பார்க்க படம்-1)

mahavali project

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் வடிவமைப்புகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதில் இலங்கையின் நீர்ப்பாசன அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்திய உள்ளுர் நிபுணர்கள் டென்னசி பள்ளத்தாக்கு திட்டத்தின் செல்வாக்குக்கு உள்ளாகியிருந்தனர். ஏனெனில் கல்ஓயா திட்டத்திற்கு வருகை தந்த சர்வதேச பொறியியல் நிபுணர்கள் டென்னசி பள்ளத்தாக்கு திட்டம் பற்றிய சிந்தனைகளை இலங்கை நிபுணர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இலங்கை வந்த நிபுணர்களின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை நீர்ப்பாசனப் பொறியியலாளர்களுக்கு நீர் முகாமைத்துவம் தொடர்பில் பயிற்சியளித்தனர்.

டென்னசி திட்டமானது, நீரை ஒரு வளமாகவும் பண்டமாகவும் பார்த்தது. அதன் நீரியல் சுழற்சியானது நீர் பற்றிய கருத்தை மிகவும் சுருக்கமான பொருளில் விளக்குகிறது. இதனால் நீர் என்பது இருக்கின்ற அல்லது பயணிக்கின்ற பாதையின் புவியியல், சூழலியல், சமூகவியல் தன்மைகளைப் புறக்கணிக்கிறது. இது புவி-சமூகச் சூழல்களில் இயல்பாகவே அடித்தளமாக இருக்கும் நீர் தொடர்பான அறிவுக்கு முற்றிலும் மாறுபட்டது. இது சமதரையான ஒரு பிரதேசத்தில் நீர்ப்பாசனத்தை மேற்கொள்ளல் என்ற எடுகோளை மையமாகக் கொண்டது. இது நிலவியல் சிக்கல் தன்மைகளை மறுக்கிறது. இதனால் இது தொடர்பான பொறியியல் திட்டமிடலும், கொள்கை வகுப்பும் இலகுவானதாக அமைவதோடு அனைத்து நிலப்பகுதிகளுக்கு ஒரே தீர்வை முன்வைக்கிறது. இதையே மகாவலித் திட்டத்தின் போது இலங்கைக் கொள்கை வகுப்பாளர்கள் பற்றிக் கொண்டார்கள். 

டென்னசி திட்டத்தின் மாதிரியைப் பின்பற்றி மகாவலித் திட்டத்தில் நிலவியல் மாற்றங்களை கொள்கை வகுப்பாளர்கள் முன்மொழிந்தார்கள். டென்னசி நீர்ப்பாசன முறையானது எளிய, சமமான சூத்திரங்களின் வழி நடாத்தப்பட்டது. அதையே இலங்கையிலும் பின்பற்ற முயன்றார்கள். இதன்படி டென்னசி திட்டத்தில், சில எல்லை நிலைகளின் அடிப்படையிலான பல எளிய சூத்திரங்கள் (வயற் பயிர்கள் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியின் போது உட்கொள்ளும் நீரின் அளவைக் கணக்கிடுவது போன்றவை) கொள்கைத் திட்டமிடலுக்கு பயிர் செய்யக்கூடிய ஹெக்டேர் எண்ணிக்கையைக் கணக்கிட அனுமதிக்கும். இதற்குத் தேவையான குறிப்பிட்ட அளவு தண்ணீர், உரம், விளைச்சல் என்பன குறித்த ஒரு எதிர்வு கூறலைப் பெறவியலும். இது அமெரிக்காவின் நிலைமைகளுக்குப் பொருத்தமானது. ஆனால் இது இலங்கைக்குப் பொருத்தமானதல்ல. டென்னசி திட்டமானது நீரை அதன் மூலத்திலிருந்து இறுதிப் புள்ளிக்குக் கொண்டு செல்வதற்கு straight – lined gravity – based network வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த முறையானது நீரின் உள்ளீடு மற்றும் வெளியீட்டைக் கணக்கிடுவதை ஒப்பீட்டளவில் எளிதாக்குகிறது. ஆனால் இலங்கை போன்ற  மிகவும் சிக்கலான நீர் மேலாண்மை அமைப்புகளில் இவ்வாறான கணிப்பீடுகள் சாத்தியமில்லை. 

இலங்கை பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான சிக்கலான நீர் அமைப்பைக் கொண்டிருக்கிறது. இது தொட்டிகளின் வலையமைப்பை (கேஸ்கேட்ஸ் என அழைக்கப்படும்) உள்ளடக்கியது. அங்கு தண்ணீர் முதலில் சிறிய தொட்டிகளில் நிரம்பிப் பின்னர் படிப்படியாக பெரிய தொட்டிகளை நிரப்புகிறது. இவ்வகையான நீர்ச் சேகரிப்பு அமைப்பில் நீர் பயன்பாட்டிற்கான டென்னசியின் சூத்திரங்களைப் பயன்படுத்துவது  எளிதல்ல. ஆனால் டென்னசியின் சூத்திரங்களின் அடிப்படையிலேயே மகாவலி அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது துன்பியல். 

விரைவாக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தியை காமினி திசாநாயக்க தலைமையில் அரசாங்கம் முன்னெடுத்த போது உலக வங்கியின் தாளத்திற்கு ஆடுவதே நோக்காக இருந்தது. ஏனெனில் நீண்டகால நோக்கில் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டத்தை 5 ஆண்டுகளில் முடிக்க அரசாங்கம் முடிவு செய்தது. அரசாங்கம் முட்டாள்தனமான நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்குமான சர்வரோக நிவாரணியாக துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தைக் கருதியது. இதைப் பாராளுமன்றில் அரசாங்க உறுப்பினர்கள் ஆற்றிய உரைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். 

இலங்கை அரசாங்கம் குறிப்பாக நாட்டிற்கான நீர்ப்பாசனத்தை மையமாகக் கொண்ட திட்டத்தைக் கோரவில்லை. மாறாக, ஒட்டுமொத்த அபிவிருத்தியை விரைவுபடுத்துவதற்கான வழியைத் தேடியது. எனவே, உலக வங்கியும் ஏனைய சர்வதேச நிறுவனங்களும் (தேசிய அரசாங்கத்திற்கு மாறாக) இலங்கையர்கள் எதிர்கொள்ளும் வேலையின்மை, உணவு மற்றும் எரிசக்தி போன்ற நெருக்கடிகளுக்கு மொத்த அபிவிருத்தித் தீர்வாக நீர்ப்பாசனத்தை மையமாகக் கொண்ட நீர்த் திட்டத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். 1960 களில் புதிதாக உருவாகி வரும் ‘அபிவிருத்தித் தொழிற்றுறை” அமெரிக்காவை மையமாகக் கொண்ட நீர்-தொழில்நுட்ப வல்லுனர்களின் வலையமைப்புகளால் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டது என்பதை இது நிரூபிக்கிறது, அந்த வகையில் இலங்கைக்கான அபிவிருத்தியானது டென்னசியின் உருவத்தில் நாட்டின் நீர்ப்பரப்பை மறுவடிவமைப்பதன் மூலம் மட்டுமே அடையக்கூடியதாகக் கருதப்பட்டது. 

மகாவலி அபிவிருத்தியைத் திட்டமிடுபவர்கள் டென்னசி முறைக்கு ஏற்றபடி செயற்படுவதற்காக ஏற்கனவே இருந்த நீரியல் – சமூக நிலப்பரப்பை மறுவடிவமைக்க முடிவெடுத்தனர். அதிக எண்ணிக்கையிலான உள்ளூர் தொட்டிகள் இடிக்கப்பட்டன. இது இலங்கையின் பாரம்பரிய நீரேந்து நிலைகளைச் சிதைத்தது. தொட்டிகளுக்கு மேலதிகமாக, இலங்கையின் உலர் வலயத்தை வகைப்படுத்தும் பல சுற்றுச் சூழல் மற்றும் நிலப்பரப்பு அம்சங்களும் மறுவடிவமைப்பு செயல்முறையின் மூலம் அழிக்கப்பட்டன. ஏனென்றால், டென்னசியில் பயன்படுத்தப்படும் நேர்கோட்டு மேற்பரப்பு நீர்ப்பாசனம் டென்னசியில் நன்றாக வேலை செய்திருந்தது (டென்னிசி பள்ளத்தாக்கின் நிலப்பரப்பு ஒப்பீட்டளவில் சமமாகவும் ஒரே மாதிரியாகவும் இருந்தது). ஆனால் இலங்கையின் மேற்பரப்பின் சீரற்ற தன்மை மற்றும் அதிக அளவிலான வரையறைகள் ஆகியவற்றால் அது இலங்கையில் வேலை செய்யவில்லை. மேலும் நிலப்பரப்பை முன்கூட்டியே ஒருமைப்படுத்துவதற்கான முயற்சி (மேற்பரப்பு மட்டத்தில் கூட முழுமையாக உணரப்படாத ஒரு முயற்சி. நிலத்தடி நீரின் இயக்கத்தை முற்றிலுமாகப் புறக்கணித்தது) மகாவலித் திட்டத்தில் உள்ள பல்வேறு நீர்ப்பாசன சமூகங்கள் வெவ்வேறு அளவு தண்ணீரைப் பெறுவதற்கு வழிவகுத்தது. இது அவர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. 

தண்ணீரை நிர்வகிப்பதற்கான மகாவலித் திட்டத்தின் அணுகுமுறையானது நுகர்வு, வழங்கல், தேவை மற்றும் லாபம் ஆகிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. மகாவலி செயல்திட்டத்தின் நீர் இருப்பு பற்றிய பகுதிக்கான ஆரம்ப வாக்கியம் பின்வருமாறு அமைகிறது : “நுகர்வு மற்றும் நுகர்வு அல்லாத பயன்பாடுகள் மற்றும் நீர் வழங்கல் ஆகிய இரண்டிற்கும், மகாவலி ஆற்றுப் படுகையிலிருந்தும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நீர்ப்பாசனப் பகுதிகளுக்குள்ளும் நீர் தேவைக்கு இடையேயான சமநிலையை பேணுவதே இதன் அணுகுமுறையாகும்.” டென்னசி முறை இலாபத்தை மையமாகக் கொண்டதனடிப்படையில் மகாவலியும் அதே அணுகுமுறையைப் பின்பற்றியது. ஆனால் அரசாங்கம் மகாவலியை அனைத்துவிதமான அபிவிருத்திச் சவால்களுக்குமான தீர்வாகக் கண்டது முரண்நகை. 

இறந்தகாலம் தந்த எதிர்காலம்

மகாவலித் திட்டத்தின் விளைவால் இன்றும் இலங்கையர்கள் பல்வேறுபட்ட சிக்கல்களையும் சவால்களையும் எதிர்நோக்கி வருகிறார்கள். அவற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம். பல நீர்த்தேக்கங்களில் முன்கூட்டிய வண்டல் மண் படிகிறது. செங்குத்தான சரிவுகளில் சேனைப் பயிர்ச்செய்கைக்காக காடுகளை அழிப்பதும், அப்பகுதியில் நிலவும் உயர் நீர்நிலையும் சேர்ந்து மண்ணரிப்புகளையும் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன. காடுகளை அழிப்பதால், மேல்நிலை மற்றும் கீழ்நிலைப் பகுதிகளில் வனவிலங்குகளின் வாழ்விடங்களில் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளன. அழிந்துவரும் மற்றும் உள்ளூர் இனங்கள் உட்பட ஏராளமான விலங்குகள் மற்றும் தாவரங்கள் இல்லாது போயுள்ளன. அதிக அளவு வேளாண் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால், விவசாயத்திற்குத் திரும்பும் நீர் நீர்த்தேக்கங்களில் ஊட்டஞ்செறிதல் (eutrophication) ஏற்படுகிறது. இது தொட்டிகள் மற்றும் பிற நீர்நிலைகளின் பயனுள்ள செயல்பாட்டைக் கெடுக்கின்றன. 

மகாவலித் திட்டத்தின் காரணமாக கீழ் நிலையில் உள்ள பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் உப்புத்தன்மை அதிகரித்தது. விவசாய நடைமுறைகளில் அதிக வேளாண் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் இயற்கை நீர் வழிகள் மாசுபடுகின்றன. உயிரிழப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வன விலங்குகளுடன் மோதல்கள் அதிகரித்துள்ளன. 

விரைவுபடுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் தாக்கங்கள் வனவிலங்குகள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை விளைவித்தது. இந்தத் திட்டம் தேசிய பூங்கா, சரணாலயங்கள் மற்றும் காடுகளின் வழித்தடங்கள் உள்ளிட்ட பல வனக் காப்பகங்களைக் கண்டறிந்து அறிவித்தாலும், இடம்பெயர்ந்த அல்லது அழிக்கப்பட்ட விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் ஆகியவை முடிவில்லாத அழிவின் நிகழ்ச்சி நிரலாகவே உள்ளன. மனிதத் தலையீட்டால் தற்போதுள்ள வன உயிரினங்களுக்கு இது ஏற்படுத்திய அச்சுறுத்தல்களே இதற்கு முக்கிய காரணமாகும். 

1979 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி கொத்மலை நீர்த்தேக்கத்தினால் சுமார் 590 ஹெக்டேர் நெற்பயிர்களும், 1560 ஹெக்டேர் மலையகப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக சுமார் 20 மில்லியன் இலங்கை ரூபா பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதியின் உயிரியல் வளங்கள் அல்லது பல்லுயிர்ப் பெருக்கம் ஆகியவற்றினது அழிவின் செலவு மதிப்பீடு செய்யப்படவில்லை. மேலும், விக்டோரியா திட்டத்தால் 1250 ஹெக்டேர் நெல் நிலங்களும், பழங்கள் மற்றும் கொக்கோ மற்றும் பிற கலப்புப் பயிர்கள் நிறைந்த சுமார் 850 ஹெக்டேர் நிலங்களும் அழிக்கப்பட்டன. மேல் மகாவலி நீர்த்தேக்கங்கள் காரணமாக விக்டோரியாவைச் சேர்ந்த சுமார் 8,000 குடும்பங்களும், கொத்மலைப் பகுதியைச் சேர்ந்த சுமார் 3,200 குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளன. புதிய வாழிடங்களில் இவர்கள் சவால்களை எதிர்கொள்கிறார்கள். 

மண் பாதுகாப்பு நடவடிக்கையின்றி பல்வேறு விவசாய நடவடிக்கைகளாலும், சாய்வான நிலங்களில் வனச் சீரழிவுகளாலும் சிறிய கிராம நீர்த்தேக்கங்களில் வண்டல் மண் படிக்கின்றன. செங்குத்தான சரிவுகளில் செங்குத்தான பயிரிடுதல், விவசாயத்திற்காக காடுகளை அழித்தல் மற்றும் மத்திய மலைநாட்டில் உள்ள குடியிருப்புகள் ஆகியவை மழை நீரில் மண்ணை வெளிப்படுத்துவதால் தீவிர மண் அரிப்பு ஏற்படுகிறது. அரிக்கப்பட்ட மண், புயல் நீரால் இயற்கை நீர்வழிகளுக்குக் கொண்டு வரப்படுகிறது. இவை அனைத்தும் நீர்த்தேக்கங்களில் வண்டல் மண் படிவதற்கு வழிவகுத்தது.

மகாவலி அபிவிருத்தித் திட்டம் பல வழிகளில் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. புதிய சாலை அமைப்பது மற்றும் திட்டத்திற்கு தேவையான இயந்திரங்களை கொண்டு செல்வது மண் சிதைவை ஏற்படுத்தியது. இந்தச் சாலை அமைப்புகள் இயற்கையான காடுகள் வழியாகவும் சில சமயங்களில் செங்குத்தான தரம் வாய்ந்த நிலங்களிலும் அமைக்கப்பட்டன. பொதுவாக, அதிக வருடாந்த மழை பொழியும் மலையகத்தில், 300 மீ முதல் 1000 மீ உயரத்தில் மண் அரிப்பு வெளிப்படும். இது தவிர, நீர்த்தேக்கப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயக் குடும்பங்கள், உயரமான புதிய குடியிருப்புகளில் உள்ள சாய்வான நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். 

மலையகத்தில் மண் அரிப்புக் காரணமாக நீர்த்தேக்கங்களில் வண்டல் மண் படிந்துள்ளது. 1952 முதல் 1982 வரையான காலப்பகுதியில் மேல் மகாவலியிலிருந்து பேராதனை அளவீட்டு நிலையத்தின் ஊடாக 15 மில்லியன் தொன் வண்டல் மண் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகளவு வண்டல் மண் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் தேங்கியுள்ளதுடன், 1988 ஆம் ஆண்டில் – அது நிர்மாணிக்கப்பட்டு 12 ஆண்டுகளில் –  நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவில் 44% வண்டல் மண்ணால் நிரப்பப்பட்டது. 

தற்போது ரன்தெனிகல மற்றும் ரன்டெம்பே நீர்த்தேக்கங்களிலும் வண்டல் மண் நிரப்பப்பட்டு வருகின்றன. எனவே, அப்பகுதியில் உள்ள இயற்கை நீரூற்றுகளைப் பாதுகாக்க நீர்நிலை மேலாண்மை அவசியம். ஆயிரக்கணக்கான ஆண்டுகால நீர்ச் சேமிப்பு நடைமுறைகளால், பழங்கால கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கிராம அளவிலான நீர்த்தேக்கங்களைத் தாங்களாகவே சுத்தம் செய்யும் சமூக அமைப்பைக் கொண்டிருந்தனர். இப்போது அது எதுவுமே இல்லை.

மகாவலித் திட்டத்தின் விளைவால் காட்டு யானைகள் விவசாயிகளுடன் மோதுகின்றன. காட்டு யானையைத் தவிர்ப்பதற்கான பாரம்பரிய அறிவு புதிதாகக் குடியேறியவர்களுக்கு இல்லை. தவிர்க்க முடியாத மோதலில் மனிதர்களும் யானைகளும் உயிர் இழக்கின்றன. நிலம் இல்லாத காரணத்தால், சில இரண்டாம் தலைமுறைக் குடும்பங்களும் தங்கள் விவசாய நடவடிக்கைகளுக்காக அல்லது குடியிருப்புகளைக் கட்டுவதற்காக காட்டிற்கு இடம்பெயர்ந்தனர். நிலங்களை சேனைப் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துதல் மற்றும் பல்வேறு நோக்கங்களுக்காக காடுகளை அகற்றுதல் ஆகியவை யானைகளின் இயற்கை வாழ்விடங்களை இழக்க வழிவகுக்கிறது. யானைகள் இயற்கையாக வாழும் இடங்களுக்காக மனிதனுடன் சண்டையிடுகின்றன. வனச் சீரழிவு காரணமாக காட்டில் உள்ள இயற்கை நீர்நிலைகள் வறண்ட காலங்களில் வறண்டு விடுகின்றன. எனவே, யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி புதிய கிராமங்களுக்கு வருகின்றன. இன்று யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதல் முக்கியமான ‘இயற்கை எதிர் மனிதன்’ சவாலாகும். மகாவலித் திட்டம் இயற்கைக்கு எதிரானவனாக மனிதனை மாற்றியுள்ளது.  

நீர் தேங்குவது விவசாய உற்பத்தியில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. நீர் மற்றும் உப்பு அளவுகள் அதிகரிப்பதால், ஈரமான மற்றும் வறண்ட பருவகாலப் பயிர்கள் இழக்கப்படுகின்றன. சில பகுதிகள் அண்டை வயல்களில் இருந்து நீர்ப்பாசனம் மூலம் வெளியேற்றப்படும் உப்புகளை உறிஞ்சத் தொடங்குகின்றன. பல விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை (முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ) கைவிட்டுள்ளார்கள். 

1990 களின் நடுப்பகுதியில் இருந்து, இலங்கையின் பல மாகாணங்களில் இருந்து பன்முகத் தோற்றம் கொண்ட நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. வறண்ட வலயத்திலுள்ள விவசாயப் பகுதிகளை இந்நோய் அதிகமாகப் பாதிக்கிறது. பெரும்பாலான பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆழமற்ற கிணறுகள், குழாய்க் கிணறுகள் அல்லது நீரோடைகளில் இருந்து நீரைப் பயன்படுத்துகின்றன. அவை நாட்டின் மிக நீளமான நதியான மகாவலி ஆற்றில் இருந்து நீரைப் பெறுகின்றன. மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக உலர் வலயத்தில் உள்ள பல நீர்த்தேக்கங்கள் பாசன நீரை வழங்குகின்றன. கடந்த மூன்று தசாப்தங்களாக, மலையகத்தில் பொஸ்பேட் உரங்களின் அதிகப்படியான பயன்பாட்டினால் வரும் பொஸ்பேட் உட்பட பல்வேறு கலவைகளால் மகாவலி நதி நீர் மாசுபட்டுள்ளது. மகாவலி ஆற்றின் குடிநீர் பல்வேறு மாசுக்களால் மாசுபட்டுள்ளது. இது ‘CKDmfo’ எனப்படுத் சிறுநீரக நோயின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றது என்று கருதப்படுகிறது. 

மகாவலி ஆற்றில் உள்ள அதிகப்படியான பொஸ்பேட்டுகள், நீர்த்தேக்கங்களில் உள்ள பாசிகள் ஆகியன சயனோ பாக்டீரியல் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். அசுத்தமான நீர், நீர்வாழ் உயிரினங்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. ‘CKDmfo’ நாட்டில் உள்ள ஏராளமான மக்களின் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையைப் பாதிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பரிதவிக்கும் நிலையில் உள்ளனர். மகாவலித் திட்டத்தின் கீழ் விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு எதிர்பார்த்த பலன் கிடைக்காத நிலையில் விளைச்சலை அதிகரிக்க அரசாங்கம் இரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் அறிமுகப்படுத்தியது. அதன் தீய விளைவுகளை நாம் இப்போது காண்கிறோம். 

மகாவலித் திட்டம் பற்றிப் பேசுகிற போது, அதிகம் கவனம் பெறாத இன்னொரு அம்சம், இத்திட்டத்தின் பகுதியாக உருவான புதிய நகரங்களும் அதன் திட்டமிலும். இவை குறித்த விரிவான ஆய்வுகள் குறைவு. இந்தப் பகுதிகளில் குடியேறிய மக்கள் இன்றும் எதிர்நோக்கும் சவால்களும் இன்றும் நாட்டின் மிகவும் வளர்ச்சி குன்றிய பகுதிகளாக இந்தப் பகுதிகள் இருப்பதும் ஒரு வலிய செய்தியைச் சொல்கின்றன. மகாவலி அபிவிருத்தித் திட்டம் பலநோக்கு அபிவிருத்தித் திட்டமாகவே முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அது விரைவாக்கப்பட்ட திட்டமாக மாறிய பின்னணியில் விவசாயம், மின்சார உற்பத்தி என்ற இரண்டு நோக்கங்களைத் தவிர்ந்த அனைத்தும் மறக்கப்பட்டன. அதற்கான சிறந்த உதாரணமாக மகாவலித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நகரங்களும் அதற்கான நகரமாக்கல் பொறிமுறைகளும் காணப்படுகின்றன. 

நிறைவுக் குறிப்புகள்

ஒரு அபிவிருத்தித் திட்டம் ஒரு தேசத்தின் தலைவிதியையே மாற்றவல்லது என்பதற்கு நல்லதொரு உதாரணம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டமாகும். குறிப்பாக நீண்டகாலத் திட்டமிடலுடன் தொடங்கிய இத்திட்டமானது அரசியற் காரணங்களுக்காக விரைவுபடுத்தப்பட்ட திட்டமாகி இயற்கைக்கும் மக்களுக்கு ஏற்படுத்திய கேடு நிரந்தரமானது. இத்திட்டம் இனத்துவ முரண்பாடுகளைக் கூர்மையாக்கியது. கொலனியாக்கத்தின் பகுதியாகச் செயற்பட்டது. அளவுகடந்த ஊழலுக்கு வழிசெய்தது மற்றும் நிரந்த நோயாளிகளை உருவாக்கியுள்ளது. 

victoria dam

இது இயற்கைக்கும் சமூகத்துக்கும் இடையே ஓர் மெய்ம்மையியல் பிளவை உருவாக்கும் அணுகுமுறையின் பகுதியாகும். இயற்கையோடு இயைந்த வாழ்வு தவிர்க்கவியலாதது என்பதை இத்திட்டம் தெளிவாக உணர்த்துகிறது. மேலும் வழக்கமான அபிவிருத்திக் கதையாடலின் வழிப்பட்ட வழக்கமான நீர் மேலாண்மை மற்றும் அபிவிருத்தி  அணுகுமுறைகளுக்கு எதிரான முக்கிய சமகால உதாரணமாகத் திகழ்கிறது. ‘அபிவிருத்தி’ பற்றிய இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளின் சூழலுக்கேற்ற சிந்தனைகளும் செயன்முறைகளும் தேவையாகின்றன. இன்றைய நிலையில் ஒன்றை அனைத்தும் பொருத்த முடியாது. அவ்வாறான தீர்வுகள் (one size fits all) பொருத்தமற்றவை மட்டுமல்ல கேடானவையும் கூட. 

அடிக்குறிப்புகள்

1. இந்தப் பெரிய அணைக் காலகட்டத்தை விளக்கமாகப் பார்க்க: Khagram, S. (2004) Dams and Development: Transnational Struggles for Water and Power. New York: Cornell University Press. பிரேசில், இந்தோனேசியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் அனுபவங்களின் வழி எவ்வாறு அபிவிருத்தியின் பெயரால் பாரிய நீர்நிலைத் திட்டங்கள் மக்களைப் பாதித்தன என இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. நீர் அணுகலை மேம்படுத்தும் நோக்கில் (பாசனம், துப்புரவு அல்லது குடிநீர்த் தேவைக்காக) பாரிய நீர்த் திட்டங்களில் கட்டமைப்பு ஏற்றத் தாழ்வுகளை மறைக்கும் வழக்குகள் ஏராளமாக உள்ளன என்பதை காகிராம் விளக்குகிறார். இந்தோனேசியாவில், பூர்வீகக் குடியேற்றவாசிகளின் மேலாதிக்கத்தை நிலைநாட்ட நீர் தொடர்பான சுகாதாரம் பற்றிய சொற்பொழிவுகள் பயன்படுத்தப்பட்டன. ஆஸ்திரேலியாவில், பொதுச் சுகாதார நடைமுறைகள் மற்றும் மக்கள்தொகை நிர்வாகத்தின் அப்பட்டமான இனவெறிக் கொள்கைகள் ‘வெள்ளை’ நடத்தை மற்றும் அடையாளங்களை வரையறுக்கவும் வகைப்படுத்தவும் உதவியது. இந்த உதாரணங்கள் காலனித்துவச் சூழல்களுக்கு மட்டுமானவையல்ல. இதற்கு ஒரு வர்க்கப் பரிமாணமும் இருந்தது. 

2.  இது தொடர்பில் மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் குறிப்பாக நீரைத் தனியார் மயமாக்குவதன் நோக்கங்கள் குறித்து அறிய: Shiva, V (2002). Water Wars: Privatization, Pollution, and Profit. Pluto Press Solomon, S. (2010). Water: The epic struggle for wealth, power, and civilization. New York: Harper. Bakker, K. (2010). Privatizing water: governance, failure, and the world’s urban water crisis. New York: Cornell University Press.

3.  பார்க்க: Ferguson, J. (1990). The anti-politics machine: Development, depoliticization, and bureaucratic power in Lesotho. Cambridge University Press. இப்புத்தகம் ‘நவீனமயமாக்கல்’ பற்றிய கதையாடல் உள்ளடக்கியிருக்கின்ற மிகவும் பொதுவான, மிகவும் குழப்பமான செய்திகளை மூன்றாம் உலகத்தின் நிகழ்வுகளின் வழி எடுத்தாளுகிறது. இப்பின்னணியில் பொருளாதார ‘அபிவிருத்தி’ பற்றிய குறிப்பிடத்தக்க பன்முகப் பார்வையை வழங்குகிறது. உலக வங்கி, உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் கிராமவாசிகள் எவ்வாறு அபிவிருத்தியின் பெயரால் வெவ்வேறுபட்ட உடன்படாத தவறான புரிதல்களோடு பணிபுரிகிறார்கள் என்பதை பெர்குசன் எடுத்துக்காட்டுகிறார். இதன்வழி இவர் எழுப்பும் மூன்று கேள்விகள் முக்கியமானவை. அபிவிருத்தி என்ன செய்கிறது, அதை யார் செய்கிறார்கள், அது யாருக்கு உண்மையில் பயனளிக்கிறது. வளர்ச்சித் திட்டங்களின் தோல்வியின் அளவை மதிப்பீடு செய்வதிலிருந்தே இவ்வினாக்களுக்கான விடையைக் காண முடியும் என்பது பெர்குசனின் வாதமாகும். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

3991 பார்வைகள்

About the Author

மீநிலங்கோ தெய்வேந்திரன்

ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ள ஞாலசீர்த்தி மீநிலங்கோ தெய்வேந்திரன் அங்கு சர்வதேச அபிவிருத்தி ஆய்வுகள் முதுகலைத் திட்டத்தை வழிநடத்துகிறார். பூகோளத் தெற்கில் புதுப்பிக்கத்தகு சக்தி மாற்றங்களின் சமத்துவமும் நீதியும் சார் அம்சங்கள் பற்றிய அவரது ஆய்வு, புவிசார் அரசியலின் இயக்கவியல் மீதும்; துப்புரவான சக்தி மாற்றங்களை எய்தலில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கைச் சவால்கள் மீதும்; குறிப்பான கவனஞ் செலுத்துகிறது. இவர் கற்பித்தல், திட்ட முகாமை, பொதுக் கொள்கை, சர்வதேச அபிவிருத்தி ஆகியவற்றில் இருபது வருடப் பணி அனுபவம் உடையவர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் மானுடப் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)