Arts
18 நிமிட வாசிப்பு

தனிநபர் உரிமைகளும் அரசு அதிகாரமும் : பிறேஸ்கேர்டில் விவகாரத்தை முன்வைத்து ஓர் மீளாய்வு – பகுதி 2

April 24, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளை கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்று கொண்டு வருதலும் உள்ளீர்த்து தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன

பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கை தொடர்பாகவும், பொதுவாக அதன் காலனிய நாடுகள் தொடர்பாகவும் கடைப்பிடித்த கொள்கையில் இரு முரண்பட்ட போக்குகள் இருந்தன என றெஜி சிறிவர்த்தன குறிப்பிடுகிறார். 

brace

பிறேஸ்கேர்டில் விவகாரத்தைப் பற்றிச் சரியான மதிப்பீட்டைச் செய்வதற்கு நாம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் இரு முகங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இருபதாம் நூற்றாண்டில் (காலனிகளின் ஆட்சியில்) பிரித்தானியாவின் இந்த இரு முகங்களும் வெளிப்பட்டுத் தெரிந்தன. ஒரு முகம் தாராண்மைவாதம் (LIBERALISM); மற்றது ஒடுக்கு முறை (REPRESSION) என்ற முகம். முதலாவது பிரித்தானியாவிற்குள் உருவாக்கப்பட்ட சட்டங்கள், நிறுவனங்கள், நடைமுறைகள் என்பனவற்றை காலனிகளுக்குப் பகுதியளவில் மாற்றுவதாக அமைவது. இரண்டாவது காலனிகளில் அந்நிய நாடான பிரித்தானியாவின் இறைமையை (அதிகாரத்தை) நிலை நிறுத்துவதும் பாதுகாப்பதும் என்பதோடு, சுரண்டல் அமைப்புக்களையும் உறவுகளையும் பேணிப் பாதுகாப்பதும் ஆகும். தாராண்மைவாதம் முதன்மை பெறுகிறாதா அல்லது ஒடுக்கு முறை முதன்மை பெறுகிறதா என்பது காலம், இடம், சந்தர்ப்ப சூழ்நிலை என்பனவற்றைப் பொறுத்து வேறுபடும் (பிரித்தானியாவின் கொள்கைகளையும் நடைமுறைகளையும் மதிப்பீடு செய்யும் போது). ஒரு முகத்தில் மட்டும் கவனத்தைக் குவித்து, மற்ற முகத்தை காணத் தவறுவது யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ள உதவாது. அது வரலாற்றைத் திரித்துக் காட்டுவதாகவே அமையும். 

றெஜி சிறிவர்த்தன இலங்கையில் டொனமூர் அரசியல் திட்டம் செயற்பட்ட காலத்தில் பிரித்தானியா, தாராண்மைவாத ஜனநாயகத்தை மாதிரிக் காலனியான இலங்கையில், சட்டம், நிறுவனங்கள் (INSTITUTIONS), நடைமுறைகள் என்பன மூலம் முழுமையாக இல்லாவிடினும் பகுதியளவிலேனும் மாற்றி நடைமுறைப்படுத்தும் செயல்முறையில் ஈடுபட்டிருந்ததைக் குறிப்பிடுகிறார். இக் காலப்பகுதியில் இடம்பெற்ற ஒரு விவகாரமான ‘பிறேஸ்கேர்டில் நாடுகடத்தல்’ என்ற வரலாற்று நிகழ்வையே இக் கட்டுரையில் அலசுகிறார். அப்போது பிரித்தானியாவின் தாராண்மைவாதம் முகம் முன்னிறுத்தப்பட்டிருந்தது என்பதைக் கட்டுரையில் விபரிக்கிறார். அவரது கட்டுரையைப் படிக்கும் வாசகர் மனதில் எழக்கூடிய நியாயமான கேள்வி, றெஜி குறிப்பிடும் ஒடுக்குமுறை முகம் எங்கே, அதைக் கண்டு கொள்ள முடியவில்லையே? என்பதாகும். றெஜி சிறிவர்த்தனவின் இக் கட்டுரையில் ஒடுக்குமுறை முகம் பற்றிய விரிவான தகவல்களோ விளக்கங்களோ இல்லை என்றே கூறலாம். கீழே தரப்பட்டுள்ள மேற்கோளில் காணப்படும் ஒரேயொரு வாக்கியத்தைக் கொண்டு மட்டும் இவ்விடயம் பற்றி நாம் ஊகிக்க வேண்டியுள்ளது. அவ் வசனம் வருமாறு:

“THE SECOND AROSE FROM THE CONTINUING NEED TO MAINTAIN THE SOVEREIGNTY OF A FOREIGN POWER AND THE EXPLOITATIVE STRUCTURES AND RELATIONS OF COLONIALISM”

பிரித்தானியா இலங்கை மீதான தனது ஆதிக்கத்தை தளர விடாது பேணுவதற்கு எத்தகைய பாதுகாப்புகளை மேற்கொண்டது என்பதும், காலனிய ஆட்சியின் கீழ் இடம்பெற்ற பொருளாதாரச் சுரண்டலுக்கு ஆதாரமான சுரண்டல் அமைப்புக்களையும் உறவுகளையும் எவ்வாறு பேணியது என்பதும் இக் கட்டுரையில் விரித்துரைக்கப்படவில்லை என்றே கருதலாம்.

றோடா மில்லர் டி சில்வா விவகாரம் 

அமெரிக்கா பிரஜையான றோடா மில்லர் டி சில்வா என்ற பெண்மணி இலங்கையரான யோ டி சில்வா என்பவரைத் திருமணம் செய்திருந்தார். றோடா மில்லரும் அவரது கணவரும் போலந்து நாட்டில் வாழ்ந்தார்கள். அங்கே கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்களாய் இவர்கள் இருந்தனர். போலந்து நாட்டில் அரசுக்கு எதிராகச் செயற்பட்டார்கள் என்றும், ரொட்ஸ்கிசவாதிகள் எனவும் சந்தேகிக்கப்பட்ட சூழ்நிலையில் இருவரும் போலந்தை விட்டுக் குடிபெயர்ந்து இலங்கையில் வாழலாம் என்ற விருப்பத்தோடு இலங்கைக்கு வந்தனர். பொலிஸ், றோடா மில்லருக்குப் பிரஜா உரிமை வழங்கக்கூடாது என்று சிபார்சு செய்தது. அப்போது பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்க பொலிசாரின் கோரிக்கையை ஏற்கவில்லை. சிறிது காலத்தின் பின்னர் சேர். யோன் கொத்தலாவல பிரதமர் ஆனார். பொலிசார் தமது கோரிக்கையை மீண்டும் முன்வைத்தனர். ‘சிவப்பு ஆபத்து’ எனப்படும் கம்யூனிச ஆபத்துப் பற்றி மிகுந்த கவனம் செலுத்திய கொத்தலாவல அக்கோரிக்கையை அங்கீகரித்தார். றோடா மில்லர் அமெரிக்கா நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றில் ஏற்றி நாடு கடத்தப்பட்டார். அப்போது அவர் சார்பாக நீதிமன்றில் வழக்குத் தொடுக்க யாரும் முன் வரவில்லை. அவர் வழக்குத் தொடுத்திருந்தாலும் அன்றைய சூழலில் அவர் வழக்கில் வெற்றி பெறும் வாய்ப்பும் இருந்திருக்காது. றோடா மில்லர் விரும்பத்தகாத அந்நியர் (UNDESIRABLE ALIEN) என்பதே முடிவு. அதைத் தட்டிக் கேட்க யாரும் துணியவில்லை. றோடா மில்லர் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. அக்காலத்தில் அமெரிக்கா, கம்யூனிஸ்டுகளை நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதில்லை. பிரித்தானியாவின் சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் தொண்டு நிறுவனம் றோடா மில்லருக்குப் பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தது. றோடா மில்லர் அவரது கணவரில் இருந்து பிரிக்கப்பட்டிருந்தார். கணவர் இலங்கையிலும், றோடா டி மில்லர் பிரித்தானியாவிலுமாகப் பிரிந்து வாழ நேரிட்டது. பின்னர் அவரது கணவரும் பிரித்தானியாவிற்குச் சென்று அவருடன் இணைந்து கொண்டார். 1956 இல் ஆட்சிமாற்றம் இலங்கையில் ஏற்பட்ட போதுதான் றோடா மில்லரும் அவரது கணவரும் இலங்கைக்கு வந்து இங்கு வாழத் தொடங்கினர். றோடா மில்லர் ஒரு சிறந்த ஊடகவியலாளர் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையில் அவர் சுவாரசியமான பத்தியொன்றை தொடர்ந்து எழுதி வந்தார்.

பிறேஸ் கேர்டில், லங்கா சமசமாஜக் கட்சியுடன் தொடர்புடையவராய் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். அவ்வகையில் அவர் ‘சட்ட விரோத’ நடவடிக்கையில் ஈடுபட்டார் எனப்பட்டது. றோடா மில்லர் ஒரு குற்றமும் செய்யாதவர். அவர் மனதளவில் ஒரு கருத்தை வைத்திருந்தார். அவரிடம் ஒரு அரசியல் கருத்து (POLITICAL OPINION) இருந்ததே அவர் செய்த குற்றம். அவர் லங்கா சமசமாஜக் கட்சியுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை. எவ்வித அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அரசியல் கூட்டங்களில் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. அவர் அமெரிக்கப் பிரஜையாகவே இலங்கைக்கு வந்தார். இலங்கைப் பிரஜை அல்லாத அவரை நாடு கடத்தியது சட்டப்படி சரியானதே. அதற்கு எதிராக சட்ட நிவாரணம் கோரும் உரிமை அவருக்கு இருக்கவில்லை. இங்கே கவனிக்க வேண்டிய விடயம் றோடா மில்லருக்கு இழைக்கப்பட்ட செயல் ‘அறமற்றது, நியாயப்படுத்த முடியாதது’(IMMORAL AND INDEFENSIBLE) என்பதேயாகும். 

றோடா மில்லர் டி சில்வா ஒரு தனி நபர்; இவரைப் போன்றே பிறேஸ் கேர்டிலும் தனி நபரேயாவர். ஆனால் 1964 ஆம் ஆண்டில் நாலு இலட்சம் இந்தியத் தமிழர்களும் அவர்களில் தங்கியிருப்போரும் சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கையின்படி நாட்டை விட்டு வெளியேற்றபட்டார்கள். அப்போது நாலு இலட்சம் மக்கள் றோடா மில்லர் என்ற ஒருவரைப் போல் சட்டத்தின் துணையற்ற அபலைகளாக ஆயினர். இலங்கை அரசு 1948 இலும் 1949 இலும் அம் மக்களின் பிரஜா உரிமையை அவர்களிடமிருந்து பறித்துவிட்டு ‘இந்தியத் தமிழர்கள்’ என்ற பெயரில் இங்கே வைத்திருந்து விட்டு, 1964 இல் வெளியேற்றியது. 1947 தேர்தலில் தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இருந்தது. அவர்கள் தமது பிரதிநிதிகளை அவ்வேளை பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தனர். இலங்கை இந்தியக் காங்கிரஸ் பிரதிநிதிகள், பாராளுமன்றத்தில் இடதுசாரிகளுக்குச் சார்பாக வாக்களித்தனர். ‘தேசிய வாதம்’ எனும் போர்வையில் டி.எஸ். சேனநாயக்க அரசாங்கம் அத்தொழிலாளர்கள் மீது வஞ்சம் தீர்த்து அவர்களை நாடற்றவர்களாக்கி (STATELESS) வாக்குரிமையையும் பறித்தது. 1964 இல் பிரதமராக இருந்தவர் அம்மக்களின் கருத்துக்களைக் கேட்டறியவோ, மதிப்பளிக்கவோ விரும்பாமல் தனது பேரம் பேசலை நடத்தி அவர்களை வெளியேற்றினார். இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட அந்த செயல்முறைக்கு ‘சொந்த நாட்டிற்கு அனுப்புதல் (REPATRIATION)’ என்ற பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த மக்களில் பெரும்பகுதியினர் இலங்கையிலேயே பிறந்தவர்கள்; இந்நாட்டிற்காக உழைத்தவர்கள். அவர்களிற்கு சொந்தம் என்று சொல்ல வேறு எந்த நாடும் இருக்கவில்லை.

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் கட்டயாப்படுத்தி நாட்டை விட்டு மக்களை வெளியேற்றிய போது, நபர் ஒருவருக்கான பிரஜா உரிமை மறுக்கப்பட்டதன் அடிப்படை யாது? ஒரு நபரிற்கு பிரஜா உரிமையை வழங்கலாமா, இல்லையா என்ற வினாவிற்கான சான்றாதாரங்களை குறித்த நபரிடமிருந்தல்லவா கேட்டுப் பெற்று ஆராய்ந்து தீர்மானித்திருக்க வேண்டும்? ஆனால் தான்தோன்றித்தனமாக இரு பிரதமர்கள் ஒரு பெரும் மக்கள் சமூகத்தினை இலங்கையை விட்டுத் துரத்துவதை முடிவு செய்தனர். றோடா மில்லரும் அவரது கணவரும் தற்காலிகமாகப் பிரித்து வைக்கப்பட்டனர். இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு குடும்பங்களைப் பிரித்தமை நிரந்தரமானது; மாற்றி எழுத முடியாதது. 

kolvin

தோட்டத் தொழிலாளர்களை நாடு கடத்திய விடயத்தில் லங்கா சமசமாஜக் கட்சி நடந்து கொண்ட விதம் அதன் பிற்கால நடவடிக்கைகளோடு ஒப்பிடும் போது முரண்பாடானது. பிறேஸ் கேர்டிலின் நாடு கடத்தலுக்கு எதிராகப் போராடிய அக்கட்சி அதைப் பயன்படுத்தி தோட்டத் தொழிலாளர் மத்தியில் தனது ஆதரவைப் பெருக்கிக் கொண்டது. மலையகத்தின் தோட்டத் தொழிலாளர்களின் பலம் மிக்க தொழிற்சங்கம் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைமையில் கட்டியெழுப்பப்பட்டது. 1939 – 40 காலத்தில் அக்கட்சியின் தொழிற்சங்கப் போராட்டங்களின் உச்சமாக முல்லோயா தோட்டத்தில் கோவிந்தன் என்ற தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. பிறேஸ் கேர்டில் வழக்கைப் போன்று கோவிந்தன் கொலைச் சம்பவம் பற்றிய விசாரணையில் கொல்வின் ஆர்.டி. சில்வா தனது சட்டவாதத் திறமையால் புகழ்பெற்றார். இலங்கையின் தொழிலாளர் வர்க்கப் புரட்சியில் தோட்டத் தொழிலாளர்கள் தாம் பிரதான பாத்திரத்தை ஏற்கப் போகிறார்கள் என்று லங்கா சமசமாஜக் கட்சி கூறியது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறப்பட்டது போல் ‘அவர்களுக்கு இழப்பதற்கு அடிமைச் சங்கிலியை விட வேறெதுவும் இல்லை’ என்ற வரையறைக்கு மிகவும் பொருத்தமானவர்களாகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்களே விளங்குகின்றனர் என லங்கா சமசமாஜக் கட்சி அக்காலத்தில் கூறி வந்தது. பிற்கால மார்க்சியவாதிகள் சிலர் தோட்டத் தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளென்றும் அரைகுறைப் பண்ணை அடிமைகளின் பண்புகளையுடையவர்களான அவர்களை சந்தையில் தம் உழைப்பை சுதந்திரமாக விற்கும் தொழிலாளிக்கு (FREE LABOUR) ஒப்பிட முடியாது என்றும் வாதிட்டனர். ஆனால் 1940 களில் லங்கா சமசமாஜக் கட்சி இத்தகைய கருத்தைக் கொண்டிருக்கவில்லை. 1942 இல் இந்தியாவின் போல் செவிக் – லெனினிஸ்ட் கட்சி என்ற பெயரில் தொடங்கப்பட்ட கட்சியில் இந்தியாவில் தலைமறைவாக இயங்கிய சமசமாஜிஸ்டுகள் இணைந்து கொண்டனர். அப்போது அத் தலைவர்கள் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் புரட்சியில் இந்தியாவினதும் இலங்கையினதும் தொழிலாளி வர்க்கம் இணைந்தே போராடி வெற்றி பெறும் என்று கூறினர். இரு நாடுகளின் தொழிலாளர்களிற்கிடையே பிரிவுபடுத்தும் பிரிகோடு இருப்பதாக அத் தலைவர்கள் கருதவில்லை. 1948 – 49 காலத்தில் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்கு எதிரான போராட்டத்தை சமசமாஜக்கட்சி துணிச்சலோடும் நேர்மையோடும் முன்னெடுத்தது. 1950 களில் லங்கா சமசமாஜக் கட்சி தோட்டத் தொழிலாளர்கள் மீதான அக்கறையைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டது. பாராளுமன்ற அரசியலில் கூடிய அக்கறை செலுத்திய அக்கட்சிக்கு வாக்குப்பலம் இல்லாத தோட்டத் தொழிலாளர்களின் ஆதரவு தேவைப்படவில்லை. அத்தொழிலாளர் மீதான அக்கறையும் குறைந்தது. 1956 இற்குப் பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையைப் பற்றிய பேச்சே லங்கா சமசமாஜக் கட்சிக்கு சங்கடத்தையும் அசௌகரியத்தையும் உண்டாக்கும் விடயமாயிற்று. முல்லோயா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான போது கோவிந்தன் என்ற தமிழ்த் தொழிலாளியைச் சுட்டுக் கொன்ற சுரவீர என்ற சிங்களப் பொலிஸ் சார்ஜன்ட் கொலைக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர்கள் வாதாடினார்கள். அதே தலைவர்கள் 1964 – 65 காலத்திலும் 1970 – 77 காலத்திலும் சிறிமாவோ பண்டார நாயக்கவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்து கொண்டு சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் பங்கேற்றார்கள்.

றோடா மில்லர் டி சில்வாவிற்கும் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களிற்கும் இடையே இருந்த ஒற்றுமையையும் வேறுபாட்டையும் இவ்விடத்தில் தெளிவுபடுத்த வேண்டும். றோடா மில்லருக்கு பிரஜாவுரிமை இருக்கவில்லை. அந்த உரிமை இல்லாத நிலையிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னர் பிரஜா உரிமை இருந்தது; பின்னர் பறிக்கப்பட்டது. அவர்கள் வெளியேற்றப்பட்ட போது பிரஜா உரிமை அற்றவர்களாக இருந்தனர். ஆகையால் சட்ட ரீதியாக றோடா மில்லர் வெளியேற்றமும், தோட்டத் தொழிலாளர் வெளியேற்றமும் நியாயப்படுத்தப்படக்கூடியவை தாம்.

1999 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்களான வெஸ்லி முத்தையா, சிட்னி வண சிங்க என்ற இருவர் பிறேஸ் கேர்டில் விவகாரம் குறித்து ஒரு நூலை வெளியிட்டனர். லங்கா சமசமாஜக் கட்சியின் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான பிறேர்ஸ் கேர்டில் விவகாரம் குறித்து கொண்டாடும் / நினைவுகூறும் முகமாக இந்நூல் வெளியிடப்பட்டது. பிறேஸ் கேர்டில் எந்த மக்களின் அவல நிலை கண்டு பொங்கினாரோ அந்த மக்களை கைவிட்டு விட்டு, கட்சியைச் சேர்ந்தவர்கள் மறக்கப்பட்டு போன விடயமாக இருந்த பிறேர்ஸ் கேர்டில் விவகாரம் தொடர்பாக புத்தகம் வெளியிடுவதும், கொண்டாடுவதும் நகை முரணானது என றெஜி சிறிவர்த்தன குறிப்பிடுகிறார். அவர் கூற்றாக வரும் பகுதியொன்றின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. 

Bres Kedil With Kolvin

“பிறேஸ் கேர்டில் இலங்கையில் ஒரு ஆண்டும் மூன்று வாரங்களும் மட்டுமே தங்கியிருந்த போதுதான் ஆளுநர் நாடு கடத்தும் கட்டளையைப் பிறப்பித்தார். அப்போது லங்கா சமசமாஜக் கட்சி பிறேஸ் கேர்டிலுக்காக ஒரு பெரும் போராட்டத்தை ஆரம்பித்தது. பிறேஸ் கேர்டில் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலையின் பின்னர் ஆறு மாதங்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருந்தார். ஆனால் நாடு கடத்தப்பட்ட தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் அவர்கள் வாழ்ந்து வந்த ‘லைன்’ காம்பரா (அறைகள்) என்ற வாழ்விடம் தவிர வேறு எந்த இடத்தையும் வாழ்க்கையில் கண்டிருக்க மாட்டார்கள். இவ்வாறு நாடு கடத்தப்பட்ட தமிழர்களை நான் ‘இந்தியத் தமிழர்கள்’ என்றோ ‘சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் (REPATRIATES)’ என்றோ அழைப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். தமது தோட்ட வீடுகளில் இருந்தும் வேலைத்தலத்தில் இருந்தும் அகற்றப்பட்டு அவர்களைக் கண்காணா இடங்களுக்கு அனுப்பி வைத்த கொடுமையை எம்மில் பெரும்பாலானவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டதோடு, மறந்தும் விட்டோம். வலது சாரியாகவோ அல்லது இடது சாரியாகவோ அல்லது நடுப்போக்குடையவராகவோ ஒருவர் இருந்து விட்டுப் போகலாம். இலங்கையர் என்ற முறையில் எமது சமூக மனச்சாட்சியில் (SOCIAL CONSCIENCE) அழிக்க முடியாத கறையாக தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் நாடு கடத்தல் அமைந்துள்ளது.” 

மனித உரிமை மீறல்களைச் செய்தோருக்கு அரவணைப்பும் ஆதரவும்

பிறேஸ் கேர்டில் வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட போது நாடு கடத்தல் கட்டளை, சட்டப்படி வலிதுடையதா (LEGALITY OF THE DEPORTATION ORDER) என்பது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. பிறேஸ் கேர்டில் விடுவிக்கப்பட்டதும், இன்னொரு பிரச்சினை எழுந்தது. சட்ட முறையற்ற வகையில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பிறேஸ் கேர்டில் நட்ட ஈடு கோரும் உரிமை உடையவரா என்பதே இப் பிரச்சினையாகும். ஆளுநரும் பொலிசாரும் நட்ட ஈடு செலுத்த வேண்டி வரலாம் என்பதை அறிந்து கொண்ட பிரித்தானிய மந்திரி சபை, அவ்வாறான நிலை எற்பட்டால் இலங்கை அரசாங்கம், தனது வருவாயில் இருந்து அத்தகைய நட்ட ஈட்டைச் செலுத்தலாம் என்ற முடிவை அறிவித்தது. மந்திரி சபையின் இம் முடிவுக்கு காலனிகளுக்கான அலுவலகத்தின் (COLONIAL OFFICE) சட்ட ஆலோசகரின் அறிக்கை அடிப்படையாக அமைந்தது. இது பற்றி இக்கட்டுரையின் முற்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். சட்ட ஆலோசகர் பிறேர்ஸ் கேர்டிலை முற்றிலும் விரும்பத்தகாத ஒரு நபர் (THOROUGHLY UNPLEASANT PERSON) என்று குறிப்பிட்டிருந்தார். ஏன் இப்படி அவர் குறிப்பிட்டார்? நாகரிகமான பழக்க வழக்கங்கள் தெரியாதவர் என்றா குறிப்பிட்டார்? இல்லை, பிறேஸ்கேர்டில் ஒரு கம்யூனிஸ்ட் என்பதையே அவ்விதம் குறிப்பிட்டார். சட்ட ஆலோசகரின் அரசியல் முற்சாய்வு (POLITICAL PREJUDICE) வெளிப்படையானது. ஆயினும் உயர் அரசியல் யாப்புத் தத்துவங்களில் (HIGH CONSTITUTIONAL PRINCIPLES) ஒன்றான சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற கொள்கையில் இருந்து வழுவி, பிறேஸ் கேர்டிலுக்கு அநீதி இழைக்கக் கூடாது என்ற உணர்வுடையவராக சட்ட ஆலோசகர் நடந்து கொண்டார் என்பதைக் காண்கிறோம். பிறேஸ் கேர்டிலுக்கு நட்ட ஈடு உரிமை உள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார். 

காலனிய ஆட்சியின் போது பிறேஸ் கேர்டில் விவகாரம் தொடர்பாக ஆட்சியாளர்கள் நடந்து கொண்ட முறையை ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் சிலவற்றோடு நாம் ஒப்பீடு செய்து பார்க்கலாம். ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சிக் காலத்தில், பொலிசாரின் அத்துமீறிய செயல்களால் நபர்களின் மனித உரிமைகள் பாதிக்கப்பட்ட இரு சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்கள் நட்ட ஈடு கோரி வழக்குத் தொடுத்தனர். இவற்றுள் ஒன்று விவியன் குணவர்த்தன வழக்கு. மற்றது ‘பாவடி ஹண்ட’ வழக்கு (PAVADI HANDA CASE). இவ்விரு வழக்குகளிலும் நீதிமன்றம் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனத் தீர்ப்பளித்ததோடு, மனுதாரர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது. இவ்விரு வழக்குகளிலும் குற்றமிழைத்த பொலிசார் செலுத்த வேண்டிய நட்ட ஈட்டுத் தொகையை அரசாங்கம் செலுத்தியது. பிரித்தானிய மந்திரி சபையும் பிறேஸ் கேர்டிலுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டி வந்தால் அரசாங்க நிதியிலிருந்து நட்ட ஈட்டை வழங்கலாம் என்ற முடிவைச் செய்தது. நட்ட ஈட்டை வழங்கியதோடு நின்றுவிடாமல் ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசு மேற்படி இரு வழக்குகளிலும் குற்றம் இழைத்தவர்களாகக் காணப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிக் கௌரவித்தது. சட்டவிரோத நடத்தைக்கு வெகுமதி வழங்கி அரசாங்கம் ஊக்குவிப்பு அளித்தது. சேர் எட்வார்ட் ஸ்ரப்ஸிற்கு காலனிய அரசாங்கம் பதவி உயர்வு வழங்கவில்லை. இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அவருக்கு அவமரியாதையைத் தேடித் தந்தது. 

இலங்கையில் ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சியின் போது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் வீடுகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிபதிகளை வசைபாடிக் கூச்சலிட்டனர். அவர்களின் வீடுகளிற்கு கல்லெறிந்து சேதம் விளைவித்தனர். இக் காடையர்கள் மீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்களின் அநாகரிக நடத்தையைப் பாராட்டி ஊக்கங் கொடுக்கும் வகையில் ஜே.ஆர்.ஜயவர்த்தன நடந்து கொண்டார். ‘ஒவ்வொருவருக்கும் விமர்சனம் செய்யும் உரிமை உள்ளது’ என்று கூறினார். ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை வகித்தவர் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் ஆர்ப்பாட்டத்திற்குரிய பொறுப்பை தாமே ஏற்பதாக கூறினார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

1937 இல் பிரித்தானிய மந்திரி சபையும் அதன் சட்ட ஆலோசகரும் தனிநபர் உரிமைகளை மதிக்கும் வகையிலான முடிவுகளை மேற்கொண்டதை எடுத்துக் காட்டும் றெஜி சிறிவர்த்தன சுதந்திர இலங்கையின் தலைவர்களை விட பிரித்தானிய அரசுத் தலைவர்கள் ஒப்பீட்டளவில் மேலான தாராண்மை ஜனநாயகவாதிகளாக (LIBERAL DEMOCRATS) காணப்பட்டனர் எனக் குறிப்பிட்டுள்ளார். 

லங்கா சமசாஜக்கட்சி பிறேஸ் கேர்டில் விவகாரத்தை முன்வைத்துச் செய்த பிரச்சாரம் இலங்கை மக்களிடையே ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வளர்க்க உதவியது. ஆனால் லங்கா சமசமாஜக் கட்சியின் போராட்டமும் சட்ட சபையின் எதிர்ப்புத் தீர்மானமும் பிறேஸ் கேர்டில் விடுதலையைச் சாத்தியமாக்கியன என்று கூறுவது தவறு. பிரதம நீதியரசரும், பிறேஸ் கேர்டில் வழக்கை விசாரித்த மற்ற இரு நீதிபதிகளும் சட்டத்தை நியாயமான முறையிலும் விளக்கிக் கூறினார். நீதித்துறையின் சுதந்திரம் என்ற தாராண்மைத் தத்துவத்தை (LIBERAL PRINCIPLE) உயர்வாக மதித்தார்கள். அந் நீதிபதிகளின் முடிவே பிறேஸ் கேர்டில் விடுதலையைச் சாத்தியமாக்கிய பிரதான காரணி என்று கூறலாம். 

நீதித்துறையின் சுதந்திரம்

தாராண்மைவாத ஜனநாயக அரசமைப்பு முறையில் நீதித்துறையின் சுதந்திரம் (INDEPENDENCE OF THE JUDICIARY) போற்றிப் பேணப்பட வேண்டிய உயர்வான தத்துவமாகும். உயர் நீதிமன்றம் ஆளுநருக்கு எதிரான தீர்ப்பை வழங்கியதன் மூலம் தனது சுதந்திரத்தை உறுதியாக வெளிப்படுத்தியது. ஆளுநருக்குப் பணிந்து போகும் முறையில் உயர்நீதிமன்றம் செயற்படவில்லை.

றெஜி சிறிவர்த்தன அவர்கள் கட்டுரையின் இறுதியில் நீதித்துறையின் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உதாரணம் ஒன்றைத் தருகிறார். 

பிறேஸ் கேர்டிலை நாடு கடத்தும் கட்டளையை இலங்கையின் ஆளுநர் பிறப்பித்த ஆண்டான 1937 இற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் லியோன் ரொட்ஸ்கி சோவியத் ரஷ்யாவின் நாட்டெல்லைக்குள் இருந்து வெளியேற்றப்பட்டார். 1927 ஆம் ஆண்டு சோவியத் நாட்டின் ஆளும் குழுவோடு முரண்பட்ட ரொட்ஸ்கி சோவியத் ரஷ்யாவின் கஸகஸ்தான் பகுதிக்குத் துரத்தப்பட்டார். அவர் அங்கு அல்மா அட்ட (ALMA ATA) நகரில் தங்கியிருந்தார். 1939 இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ, லியோன் ரொட்ஸ்கியை சோவியத் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற முடிவைச் செய்தது. சோவியத் அரசின் அரசியல் பொலிஸ் (POLITICAL POLICE) அந்தக் கட்டளையை உடனே நிறைவேற்றியது. ரொட்ஸ்கி அல்மா அட்டாவில் இருந்து ரெயில் வண்டி மூலம் ஒடெஸ்ஸா (ODESSA) துறைமுக நகருக்கு அனுப்பப்பட்டார். அங்கே காத்திருந்த கப்பலில் அவர் ஏற்றப்பட்டு சோவியத் எல்லைக்கு வெளியே அனுப்பப்பட்டார். இந்தச் சம்பவத்தை உதாரணம் காட்டும் றெஜி சிறிவர்த்தன, ரொட்ஸ்கியின் நாடு கடத்தல் கட்டளை வெறுமனே ஒரு நிருவாக நடவடிக்கை (ADMINISTRATIVE ACTION) என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். 

“இத் தீர்மானமும் நாடு கடத்தலும் வெறும் நிருவாக நடவடிக்கைகளேயாகும். ரஷ்யாவின் புரட்சிக்குப் பிந்திய அரசில் இந்த விடயத்தில் தலையீடு செய்வதற்கான நீதித்துறை நிறுவனம் இருக்கவில்லை. கோட்பாட்டிலும் நடைமுறையிலும் அங்கு நிருவாகத் துறையின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் செயல்முறை இருக்கவில்லை. சுதந்திரமான நீதித்துறை, அரசின் நிருவாகத் துறையினால் செய்யப்படும் முடிவுகளையும் நடவடிக்கைகளையும் நீதி மீளாய்விற்கு (JUDICIAL REVIEW) உட்படுத்தல் ஆகிய தத்துவங்கள் சோவியத் அரசு முறையில் ஏற்கப்பட்டிருக்கவில்லை (எளிமைப்படுத்திய மொழிபெயர்ப்பு)”

மேற்குறித்தவாறு சோவியத் ரஷ்யாவின் அரசு முறையின் குறைகளை விளக்கும் றெஜி சிறிவர்த்தன, பிறேஸ் கேர்டில் விவகாரத்தில் காணப்படும் நகைமுரணை எடுத்துக் காட்டுகிறார். ஸ்டாலினிசத்தின் ஆதரவாளரான பிறேஸ் கேர்டில் காலனிய இலங்கையின் நீதித்துறையிடம் முறையீடு செய்து விடுதலை பெற்றார். அவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், லியோன் ரொட்ஸ்கி நாடு கடத்தப்பட்ட போது, ஸ்டாலின் செயலை எந்தவிதமான மனச் சஞ்சலமும் இல்லாமல் ஆதரித்திருப்பார் அல்லவா? இக் கேள்வியை முன்வைப்பதன் மூலம் பிரித்தானியக் காலனியான இலங்கையையும் சோவியத் யூனியனையும் முரண்நிலைப்படுத்திக் காட்டுகிறார். தனிநபர் உரிமைகள் ‘பூஷ்வா உரிமைகள்’ (BOURGEOIS RIGHT) எனப் புறந்தள்ளக் கூடியனவல்ல என உணர்த்துகிறார். சோவியத் ரஷ்யாவில் ஸ்டாலினதும் கம்யூனிஸ்ட் கட்சியினதும் சர்வாதிகாரப் போக்கைக் கட்டுப்படுத்தக் கூடிய சுதந்திர நீதித்துறை இருக்கவில்லை.

வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் குறிப்பிட்டதொரு சமூக வர்க்கத்தின் தேவைகள், நலன்களைப் பேணுவதற்கும் வளர்ப்பதற்கும் தோன்றிய கருத்துக்கள் காலப் போக்கில் மானிடத்தின் மரபுரிமையாகப் (HUMAN HERITAGE) போற்றப்பட்டு வேறுபட்ட வரலாற்று சூழ்நிலைகளில் பயனுடையனவாக மாறுவதைக் காணலாம். இவ்விதமே தனிநபர் உரிமைகளின் சமூக வேர்கள் (SOCIAL ROOTS) முதலாளித்துவத்துடன் தொடர்புடையனவாய் இருந்த போதும், அவை மானிடத்தின் மரபுரிமையாகி விட்டது என்ற வாதத்தினை றெஜி சிறிவர்த்தன முன்வைக்கிறார். 

Reji srivardana

SELECTED WRITINGS OF REGI SIRIWARDENA POLITICS AND SOCIETY VOLUME II என்ற கட்டுரைத் தொகுதியில் (பக்கம் 307-329) “THE BRACE GIRDLE AFFAIR IN RETROSPECT: CONTRADICTIONS OF IMPERIALISM, OF THE POST COLONIAL STATE AND OF THE LEFT” என்ற தலைப்புடைய ஆங்கிலக் கட்டுரையின் தழுவலாக்கமாக இக்கட்டுரை அமைந்துள்ளது. ஆங்கில நூலைத் தொகுத்துப் பதிப்பித்தவர் A.J. CANAGARATNA ஆவார்.

வெளியீடு : INTERNATIONAL INSTITUTE FOR ETHNIC STUDIES COLOMBO (2006)

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

3016 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)