Arts
26 நிமிட வாசிப்பு

சிலப்பதிகாரமும் ஆசீவகமும் – பகுதி 1

April 23, 2024 | Ezhuna

ஈழநாடானது தமிழகத்திலிருந்து கடலால் பிரிக்கப்பட்ட நாடாக அமைகின்ற போதும், பண்டைக்காலந்தொட்டே தமிழர்களின் மரபுத் தொடர்ச்சியான பண்பாட்டுக் கூறுபாடுகளை உடைய மண்டலமாக காணப்பட்டு வருகிறது. தொல்காப்பியம் சுட்டும் பல இலக்கண விதிகள் இன்று தமிழகத்தில் வழக்கில் இல்லாத போதும் ஈழத்தில் அவை வழங்கப்பட்டு வருகின்றன. பண்பாட்டு வாழ்வியல்களின் அடிப்படையிலும் பண்டைத் தமிழரின் மரபுகள் பலவற்றை ஈழத்தில் காணவியலும். இந்நிலையின் தொடர்ச்சியாகவே பண்டைத் தமிழரின் சமயப் பண்பாட்டு மரபுகளையும் கருதலாம். அந்த வகையில், வடக்கே பருத்தித்துறைமுதல் தெற்கே தேவேந்திரமுனைவரை உள்ள தமிழ் மக்களிடமும், சிங்கள மக்களிடமும் காணப்படும் வழிபாட்டு முறைகளில் பண்டைத் தமிழ் நூல்களில் காணப்படும் வழிபாட்டு மரபுகளை ஆய்வுப் பரப்பாகக் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும், இலக்கணங்களிலும் காணப்படும் வழிபாட்டு மரபுகளில் இலங்கையில் இன்றளவும் வழங்கி வருகின்ற மரபுத் தொடர்ச்சியினை ஆராய்வதே ‘இலங்கையில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபுகள்‘ எனும் இத் தொடரின் நோக்கமாகும். இத் தொடர், இலங்கையில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபுகள் இன்றளவும் தொடர்கின்றன என்னும் கருதுகோளினை அடையும். 

தமிழ்க் காப்பிய அமைப்பில் சிலப்பதிகாரம் இன்றளவும் தோன்றிய காப்பியங்கள் யாவற்றிலும் வேறுபட்டு நிற்கின்ற தன்மையினை உடையதாகின்றது. அவ்வேறுபட்ட தன்மையே இன்று அதனது சிறப்புத் தன்மையாகப் போற்றப்படுகின்றது. அச்சிறப்புத் தன்மைக்கான ஏந்துதல்கள் எவ்வகையில் இளங்கோவடிகளுக்குக் கிடைத்திருக்கும் என்பனவான எண்ணங்கள் தோன்றுதல் இயல்பேயாம். அவ் வகையில் சிலப்பதிகாரத்தின் சிறப்பியல்புகளுக்கான காரணங்கள் இளங்கோவடிகள் காப்பியமியற்றிய காலச் சூழலில் இருந்தே கிடைத்தனவாகக் கொள்ளுதலே பொருத்தமாகவிருக்கும். அவர் காலச் சூழலில் நிலவிய சமயங்களின் தாக்கம் பல வகையிலும் சிலப்பதிகாரத்தில் தங்கியிருக்கும். ஆதலால் சிலப்பதிகாரத்தின் தனித்தன்மைகளைக் காணுவோம். ஏனெனில் காரியங்களுக்கான காரணம் களியத்துள்ளேயே காணப்படுவதாகும்.

illanko

முப்பது பகுதிகளையுடைய சிலப்பதிகாரத்தின் முதற்பகுதியாக அமைவது, மங்கல வாழ்த்துக் காதையின் தொடக்கமாக அமைவதாலும், கலியாணப்பாட்டு என அரும்பத உரையாசிரியர் குறிப்பிடுவதாலும், காதை நிகழ்வு இல்லாமையாலும், அது மங்கள வாழ்த்துப் படலாயிற்று எனலாம். மங்கல வாழ்த்து மரபில் பிற காப்பியங்கள் யாவற்றிலும் அவ்வக் கடவுளரின் வாழ்த்துப் பாடலும் வழிபாட்டுப் பாடலும் அமைய, சிலப்பதிகாரத்தில் மாத்திரம் பின்வருவதான பாடல் அமைகின்றது:

“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும், என்றும்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்றும்,
மாமழை போற்றுதும் மாமழை போற்றதும் என்றும்,
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்”

இப்பாடல் இயற்கையை வாழ்த்துவதாக அமையினும், உற்று நோக்கில் பல மெய்மைகளை உணரலாம். இப்பாடலிற் குறிப்பிடப்பட்ட திங்கள், ஞாயிறு, மாமழை, பூம்புகார், சோழ அரசு என்பன யாவுமே ஒரு முறைமையில் இயங்குவன. அம்முறை, பிறழின் அவ்வியக்கம் என்பது நிகழாது; ஆதலால் முறை பிறழாமல் ஊழின் வழிப்பட்டதாகிய நியதியில் இயங்கக்கூடிய இப்பொருட்களை வாழ்த்துதலின் வழி இக் காப்பியப் புலவனின் மெய்யியல் யாதென விளங்குவதாகின்றது. இதில் காட்டப்படும் நிகழ்வுகளில், ஒரு நிகழ்வின் தொடர்ச்சியாக மற்றொரு நிகழ்வு நிகழ்வதாகக் காட்டப்படிருப்பது, ஊழானது சங்கிலித் தொடர் போலத் தொடர்ந்து இயங்கும் நிலைப்பாட்டினைக் கூறும் வகைமையானதாக உள்ளது. சான்றாக ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ என்ற அடியின் தொடர்புடையதாக சோழ மன்னனின் ‘திகிரி மேருவை வலந்திரிதல்’ இணைத்துக் கூறப்படுகின்றது. இவ்வகை உவமையானது இயங்கும் பொருட்களின் செயலை நிகழ்வுகளின் செயலோடு ஒப்பித்துக் கூறும் தன்மையினை உணர்த்துவதாக அமைகின்றது. இது, ஊழின் தன்மை இயங்கு பொருட்களிலிருந்து நிகழ்வுகளுக்குத் தொடர்புப் பரிமாற்றம் பெறுதலினை விளக்குவதாக உள்ளமையினைக் காணலாம். திங்கள், மாமழை இவற்றிற்கான இயங்கியல் தொடர்பு இக்காப்பியம் முழுவதிலும் பரவுதலைக் காணலாம்.

அத்துடன் இப்பாடலின் இறுதியடிகளான “பொதியிலாயினு மிமயமாயினும், பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய, பொதுவறு சிறப்பிற் புகாரே யாயினு, நடுகின்றி நிலையிய வென்பதல்லதை, யொடுக்கங் கூறா ருயர்ந்தோ ருண்மையின், முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே” என்பன பொருட்களின் நிலைப்புத் தன்மையை உணர்த்துவனவாக அமைகின்றன. பொருட்கள் நிலைப்புத் தன்மையுடையன என உணர்த்துவோர் ஆசீவகரேயாம். ஆதலால் இந்நிலைப்புத் தன்மையை உணர்ந்த, முடிந்த கேள்வி முழுதுணர்ந்தோர் என்போரும் ஆசீவக அறிவுத்துறையைச் சார்ந்தோரேயாதல் வேண்டும் என்பதனையும் அறியலாம். இவ்வடிகளுக்கு உரைகூறும் அடியார்க்குநல்லார் “முனைவனூலின் முடிந்த கேள்வியான் எனைத்துப் பொருளையு முணர்ந்த பெரியோர், பொதியில் இமயம் புகாரென்றும், இம்மூன்றும் ஒரு தன்மைய வாதலான், ஆதியிற்றோன்றிச் சலிப்பின்றி நிலைபெற்றனவென்று கூறினல்லது அவற்றிற்கு அந்த முண்டென்று கூறார்; அவற்றில் உயர்ந்தோருண்டாகலானென்க” எனக் கூறுதலின் வழியும், அழிவற்ற நிலைப்புத் தன்மையினையுடைய ஆசீவகக் கொள்கையினை இவ்வடிகள் விளக்குதலினை உணரலாம். வைசேடிகம் போன்ற மெய்யியல் கோட்பாடுகள் பொருட்களின் நிலைப்பேற்றினை வலியுறுத்திய வழியும் பெரும் சமயநிலையில் வழிபாட்டு மரபில் அதனைக்கொண்டு சென்றது ஆசீவகமே எனலாம்.

துன்பம் நிறைந்தது இவ்வுலகம். துன்பத்தில் இன்பத்தினைத் தேடுதலே உலகிலுள்ளோர் கடமை எனக் கூறும் ஆசீவகம் இதனை:

“இன்னாது அம்ம இவ்வுலகம்!
இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே!”

எனக் கூறுகிறது. கண்ணகி, கோவலன் ஆகியோரது வதுவை மங்கல நாளிலும் அவர்களை வாழ்த்துவோர் துன்பத்தில் இன்பம் காணும் வகையிலும், பிரிவினில் சேர்க்கை காணும் வகையிலுமே வாழ்கவென வாழ்த்தினர். இதனை:

“காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமற்
றீதறு கென வேத்திச் சின்மலர் கொடுதூவி
மங்கல நல்லமளி யேற்றினார்” (சிலம்பு. மங்கலவாழ்த்து. 61-6)

என்னும் அடிகள் உணர்த்துகின்றன. ‘காதலினால் கோவலனும் கண்ணகியும் பற்றியகை தளராமலும் தீயன அறுகவென்றும், இவள் தன் காதலனைக் கண்ணிலும் நெஞ்சிலும் பிரியாமற் புணர்வாளாக. இவள் காதலனும் இவளை அகத்திட்டகை புல்லினும் போதினும் நெகிழாமற் புணர்வோனாக’ என வழிபடு தெய்வத்தை மலர்தூவி வணங்கி வாழ்த்தியதாகக் கூறப்படுவதும் ‘கண்ணினும் நெஞ்சினும் பிரிதல், கவவுக்கை ஞெகிழல்’ என்பனவான துன்பத்திற்குரிய சொற்களால் வாழ்த்திய முறையும், துன்பத்துள் இன்பம் என்ற ஆசீவகச் சமயக் கருத்தின் விளைவேயாம். மற்ற காப்பியங்களில் இவை போன்ற எதிர்மறைக் கருத்துக்களைக் காண்பதும் அரிதேயாம்.

ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு இயல்பு உண்டு. அவ்வியல்பின் அடிப்படையிலேதான் அப்பொருட்களின் செயற்பாடுகள் அமையும். ஊழின் தன்மையாலும் சூழலினாலும் பொருட்களின் தன்மை மறுபடாது. சுரை விதையினை நட்டுவிட்டுப் புடலங்காயினை எதிர்பார்த்தலியலாது. ஆதலால் பொருட்களின் இயல்பு என்பது மாற்றமடையாததேயாம். சிலப்பதிகாரக் காப்பியத்தின் காதை தேர்வில், அசீவர்களின் சுபாவக் கோட்பாடு என்னும் இயல்புக் கோட்பாடு எவ்வகையில் இளங்கோவடிகளாற் கையாளப்பட்டது என்பதினை இனிக் காணலாம்.

கோவலனின் இயல்பு

மனையறம்படுத்த காதையில் கண்ணகியுடன் மணவாழ்வினைத் தொடங்கிய கோவலன் அவளைக் கண்டு மகிழ்ந்து:

“மாசறு பொன்னே, வலம்புரி முத்தே,
காசறு விரையே, கரும்பே, தேனே
அரும்பெறற் பாவாய், ஆருயிர் மருந்தே,
பெருங்குடி வாணிகன் பெருமடமகளே,
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழிருங் கூந்தல் தையால்! நின்னை”

என கண்ணகியின் நலங்களைப் பலவாறு பாராட்டி, அவளைப் புகழ்ந்தே இல்லறம் நடத்திச் சென்றான். கோவலன் சில ஆண்டுகள் கழிந்த பின் இதே கண்ணகியை மறக்கக் கூடிய சூழல் எவ்வகையில் ஏற்படலாயிற்று? வலிந்து ஏற்படுத்திக் கொண்டதும், கொண்டனவும் அல்ல. மாதவியின் அரங்கேற்றமும் தலைக்கோல் வழங்கும் நிகழ்வும் இயல்பு வழி நடந்த நிகழ்வு. இவற்றில் கோவலனுடைய நிலைப்பாடுகள் ஏதுமில்லை. மாதவியின் மாலையினைக் கோவலன் வாங்க வேண்டும் எனக் கூறவுமில்லை. ஆனால் எச்செயலையும் சட்டெனச் செய்ய வேண்டும் என்னும் இயல்பினையுடைய கோவலன் அம் மாலையினை வாங்கினான்.

“மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னோடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுத லறியா விருப்பின னாயினன்
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்தென்” (அரங்கேற்று காதை.170-175)

கண்ணகியைப் புகழ்ந்த கோவலன் யாதொரு குற்றமும் அற்ற நிலையிலேயே அவளைப் பிரிந்து மாதவியை அடைந்து தனது மனையினை மறந்தான். இதில் ஊழின் பங்களிப்பே பெரிதாக நின்றது. அதற்குக் கோவலனின் இயல்பு (சுபாவம்) பெருந்துணை செய்தது. கோவலனின் இயல்பாவது எதனையும் ஆயாது சட்டென முடிவு செய்தலாம் இதனைக் கோவலனின் வரலாறெங்கும் காணலாம். அகத்திணைப் பாடல்களில் தலைவன் – தலைவி பிரிவுகளில் ஒன்றான பரத்தமைப் பிரிவிற்கு இவ்வியல்பே துணையாதலைப் பின்னர் நோக்குவோம். எவ்வகையில் கோவலனின் இயல்பானது ஊழின் வழித்துணை நின்று கண்ணகியைப் பிரிப்பதாயிற்றோ, அதே இயல்பு மீண்டும் மீண்டும் கோவலனை வழிநடத்திய பாங்கினைக் காணலாம்.

kovalan madhavi

மாதவியுடன் ஆண்டுபல வாழ்ந்து வந்தபோதும் கோவலனது மனமாற்றம் திடுமென எழுவதாயிற்று. கானற்பாட்டில் கோவலன் குறிப்பு வைத்துப் பாடிய பாடல்களை, அவன் மனநிலைப் போக்கில் உணராமல் மாதவி தானும் குறிப்புடன் பாட, கோவலன் மாதவியைத் தழுவிய கையினைவிட்டு எழுந்தான். இதனை:

“கானல் வரி யான் பாட, தான் ஒன்றின்மேல் மனம் வைத்து,
மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்’ என
யாழ்-இசைமேல் வைத்து, தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்,
உவவு உற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக் கை ஞெகிழ்ந்தனனாய்,
‘பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின், எழுதும்’ என்று உடன் எழாது,
ஏவலாளர் உடன் சூழ்தர, கோவலன்-தான் போன பின்னர்”
(கானல்வரி.52:277-282)

என்ற அடிகளால் அறியலாம். யாழிசையின் மேல் வந்த ஊழ் மாதவியைப் பிழை பட எண்ண வைத்தது. ஆராயாமல் முடிவெடிக்கும் கோவலனின் இயல்பு இங்கும் ஊழிற்குத் துணையாக நின்றது. ஆதலால் மாதவியை அணைத்த கையை நெகிழ எழுந்தான். மாதவியுடன் இருக்க வேண்டிய காலம் முடிந்துவிட்டதால் ஊழின் வழி அவன் பிரிய வேண்டியதாயிற்று. இதற்கு அவனது இயல்பு துணை நின்றது எனலாம். கண்ணகியின் மனைவந்த விடத்தும் விரைவான முடிவெடுக்கும் குணத்தோடு ஆராயாது உடனே மதுரைக்குச் செல்ல வேண்டுமென்றான். இதுவும் அவளது ஊழிற்குத் துணையாயிற்று.

“நீடிய காவலன் போலும், கடைத்தலையான் வந்து-நம்
கோவலன்!’ என்றாள் ஓர் குற்றிளையாள். கோவலனும்
பாடு அமை சேக்கையுள் புக்கு, தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம் கண்டு, ‘யாவும்
சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி,
குலம் தரு வான் பொருள்-குன்றம் தொலைந்த;
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு’ என்ன”

என்பதன் வழி, திடுமென எழச் செய்து கண்ணகியை மதுரைக்குச் உடன் அழைத்துச் செல்லும் அவனது திடீர் முடிவெடுக்கும் இயல்பே அவனது ஊழினுக்குத் துணையாயிற்றெனலாம். இவ்வாறான கோவலனின் இயல்பு என்பது உணர்வு வயப்பட்டதாகவே இளங்கோவடிகளால் காட்டப்பட்டுள்ளது. எதனையும் ஆராய்ந்து முடிவெடிக்கும் இயல்பற்றவனாகவே கோவலன் விளங்கியமையை அவனது சிறப்பினைக் கூறும் பாடல்களாலும் அறியலாம்.

“விஞ்சையின் பெயர்த்து, விழுமம் தீர்த்த,
எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக’ என:
அணி மேகலையார் ஆயிரம் கணிகையர்,
“மணிமேகலை” என வாழ்த்திய ஞான்று;
மங்கல மடந்தை மாதவி-தன்னொடு
செம் பொன் மாரி செங் கையின் பொழிய;”

என மாதவிக்கும் தனக்கும் மகளாகப் பிறந்த மணிமேகலையின் பிறந்தநாள் விழாவிலே பொன்னினை மழையாகப் பெய்த நிகழ்வும்,

“மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்
பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
கடக்களி றடக்கிய கருணை மறவ”

என வயது முதிர்ந்த தன்னிடம் தானம் கேட்க வந்த பார்ப்பானனை யானை தாக்கவர யானையினைத் தாக்கிய வீர நிகழ்வும்,

“பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த
மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியாக் கரிபொய்த் தறைந்துணும் பூதத்துக்
கறைகெழு பாசத்துக் கையகப் படலும்
பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு
கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி
என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென
நன்னெடும் பூதம் நல்கா தாகி
நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை
ஒழிகநின் கருத்தென உயிர்முன் புடைப்ப
அழிதரு முள்ளத் தவளொடும் போந்தவன்
சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப்
பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்” (சிலம்பு அடைக்கலக்காதை.76-79)

என பத்தினி ஒருத்தியைப் பழித்தமையாற் சினம் கொண்ட சதுக்க பூதம் அவனை விழுங்க எத்தனித்த போது அவனது பெற்றோர்க்கு அவன் ஒரு மகன் ஆனபடியால் அவனைவிட்டுத் தன்னைக் கொல்லுமாறு கேட்ட நிகழ்வும் எனபனவான மேற்கண்டதான யாவற்றின் வழியும் கோவலன் ஆழ்ந்து சிந்தித்து ஒரு முடிவினை எடுப்பவனல்ல என்றும், அவன் திடீர் என உணர்வு வயப்பட்ட நிலையிலேயே முடிவு எடுக்கும் இயல்பினன் என்பதனையும் அறியலாம். அவனது இவ்வியல்பே அவனது ஊழினை வழிநடத்துதலுக்குப் பெருந்துணையாயிற்று என்பதினை மேற்கண்ட நிகழ்வுகளின் வழி அறியலாம். அத்துடன் அவனைச் சார்ந்தோரது இயல்பும் அவனை ஊழின் வழியிலிருந்து பாதுகாக்கவில்லை என்பதனையும் அறிய வேண்டியதாகின்றது.

ஊழின் வழி செல்வதில் கண்ணகியின் இயல்பு

கோவலன் கொலைக் களப்படுதற்கு முன்புவரை கண்ணகி பேசிய இடங்களாக இளங்கோவடிகள் குறிப்பிடும் இடங்கள் மிகமிகக் குறைவே. மங்கல வாழ்த்திலிருந்து அடைக்கலக் காதை வரை உள்ள பதினைந்து பகுதிகளிற் கண்ணகி பேசியதாக உள்ள இடங்களில், கோவலனது இயல்பு ஊழ்வழிச் செல்லும் வகைமையில் படைக்கப்பட்டது போலவே கண்ணகியினது இயல்பும் கோவலனது ஊழிற்குத் துணை செய்வதாகவே படைக்கப்பட்டுள்ளமையினைக் காணலாம். தமிழ் இலக்கியங்களில் சிந்தாமணியில் இடம் பெறும் கனவு, கம்பராமாயணத்தில் இடம் பெறும் கனவு என்பனவான கனவுகளைக் காட்டிலும் சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் கனவுகள் மிகத் தெளிவானவை. ஆயினும் அக்கனவினைத் தாண்டி, அக்கனவின் நிகழ்வுகளைப் பொய்க்கும் வல்லமை, கனவினைக் கண்ட மூவருக்கும் வாய்க்கவில்லை என்பது உற்று நோக்கத்தக்கது. அவ்வகையிலேயே கண்ணகி கண்ட கனவும் அமைகின்றது. மங்கல வாழ்த்து முதலாக, கொலைக் களப்படுவது ஈறாகவுள்ள கோவலனுடன் கண்ணகி வாழ்ந்த பதினாறு காதைகளிலும் கண்ணகி தன் இயல்பு வெளிப்படப் பேசிய இடங்கள் மிகக் குறைவே. அவ்வகையில் கண்ணகி முதன் முதல் பேசிய இடமாக இக் கனாத்திறம் உரைத்த காதை விளங்குகின்றது. நடக்கக்கூடிய நிகழ்வுகள் முன்கூட்டியே நிகழ்வில் உள்ளோரின் கனவு வழியே வெளிப்படுவதும், ஊழின் வலிமையின் முன்னால் ஏதும் செய்தலியலாது போகும் என்பதும், அதற்கு அவர்களது இயல்பும் துணை நிற்கும் என்பதும் இப் பகுதி வழியே அறியக் கிடைக்கின்றது. குளங்களில் மூழ்கித் தெய்வ வழிபாட்டினை முடித்து வரும் தேவந்தி, அருகு – சிறுபூளை முதலானவற்றைத் தூவி கணவனோடு வாழ்கவெனக் கண்ணகியை வாழ்த்தினாள். அப்பொழுது கண்ணகி கணவனைப் பெறுவேன் ஆயினும் தான் கண்ட கனவின் காட்சிகளான பெருநகர் செல்லல், கோவலன் தீங்குறுதல், தான் வழக்குரைத்தல், மதுரை எரிதல் என்பனவான பலவற்றையும்:

“கடுக்கும்என் நெஞ்சம் கனவினால் என்கை
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தன்மேல்
கோவலற்கு உற்றதுஓர் தீங்குஎன்று அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோ” (சிலப்பதிகாரம்.9:45-50)

எனத் தேவந்தியிடம் கூறுகிறாள். தேவந்தியோ, முன்னை ஊழ்வினையால் வரும் தீங்கினையே இக்கனவு உரைத்தது; ஆதலால் காவிரியின் கழிமுகத்திற்கு அருகே சோமகுண்டம், சூரியகுண்டம் என இரண்டு பொய்கைகளுள்ளன; அவற்றின் நீர்த்துறைகளிலே மூழ்கி காமவேலின் கோயிலை வழிபட்டோர் இப்பிறவியிலும் கணவனோடு இன்புற்றிருந்து மறுமையிலும் போக பூமியிற் சென்று கணவனோடே பிறந்து இன்புறுவர்; நாமும் ஒருநாள் முழுகி வருவம் எனக் கூற, ‘அங்ஙனம் செய்தல் தங்கட்கு வழமையல்ல ஆதலால் பீடன்று’ என மறுத்து விடுகின்றாள். அப்பொழுது அங்கு வந்த கோவலன் பள்ளியறைக்குள் செல்கின்றான். அவனைத் தொடர்ந்து சென்ற கண்ணகியின் உருவக் குழைவையும் உள்ள மெலிமையையும் கண்டு வருந்திய கோவலன், எல்லாம் தனது கொள்கையினாலேயே நிகழ்ந்தன எனக் கூறி, பெரும் செல்வத்தை இழந்த நாணத்தால் இங்கு எவ்வகையில் வாழ்வேன் என வருந்த, மாதவிக்கு வழங்க அரும் பொருள் இல்லை என அவன் வருந்துவதாக நினைத்த கண்ணகி:

“நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச்
சிலம்புள கொண்மெனச் சேயிழை கேளிச்”

எனத் தன்னிடம் சிலம்புகள் இரண்டு இருப்பதாகக் கூறுகிறாள். அதற்குக் கோவலன், சிலம்பை முதலாகக் கொண்டு மதுரை மாநகர் சென்று, அதனை விற்று வாணிகம் செய்து பெருஞ் செல்வமடைவேன்; இப்பொழுதே எழுக எனக் கூற, கண்ணகியும் உடனே எழுந்தாள்; வினையினது ஏவலால் எழுந்தகன்று ஊழினது வழிச் செல்லத் தலைப்பட்டாள். இதனைக் கீழ்வரும் அடிகள் வழி உணரலாம்:

“காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க-மூதை
வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குற்
கனைசுடர் கால்சீயா முன்”

கண்ணகி கண்ட கனவு, மாதவி ‘கோவலன் நாளை வருவான்’ என்று சொன்ன சொல்லையும் பொய்யாக்கி ஊழின் வழி இழுக்கத் தலைப்பட்டது. கண்ணகி தான் கண்ட கனவினைக் கணவனுக்குக் கூறாமலேயே அவனுடன் செல்லத் தலைப்பட்டாள். கனவின் பலனை அறிந்து அதனைத் தடுக்கும் எண்ணம் கண்ணகிக்கு எழவில்லை. ஆதலால் ஊழின்வழி மதுரை செல்ல எழுத்தாள். கண்ணகியின் இயல்பால் ஒரு நிகழ்வினை எதிர் மறித்துத் தடுத்தல் இயலாது என்பதானபடியால், கனவின் நிகழ்வினை கூறித் தடுப்பதற்கு முயலாமல், கோவலன் ‘எழும்’ எனக் கூறிய உடனேயே எழுந்தாள். ஆதலால் ஊழின் ஆற்றலுக்கு அவளின் இயல்பும் உடன்படுவதாயிற்று. புகாரிலிருந்து மதுரை வரும் வரையான பல நிகழ்வுகளிலும் கண்ணகி தெளிவான மன நிலையிலேயே இருந்துள்ளாள். திருவரங்கத்தினை அடைகின்றபோது:

“மதுரை மூதூர் யாதென வினவ
ஆறைங் காதநம் மகனாட் டும்பர்
நாறைங் கூந்தல் நணித்தென நக்குத்
தேமொழி தன்னொடுஞ் சிறையகத் திருந்த”

என மகிழ்வுடனேயே கோவலனுடன் உரையாடி வந்துள்ளாள். கவுந்தி, சோலையில் வப்பப் பரத்தையருக்கு சாபமிட்ட போதும், அதற்கு மனம் வருந்தி அவர்களைப் பொறுத்தருள கவுந்தியிடம் வேண்டுகின்றாள். பாலை வழியில் எயினர்கள், சாலினிக்குக் கொற்றவை வேடமிட்டு வழிபட்டபோது:

“இவளோ கொங்கச் செல்வி குடமலையாட்டி
தென் தமிழ்ப்பாவை செய்தவக் கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய
திருமா மணிஎனத் தெய்வமுற்று உரைப்ப
போதுறவு மொழிந்தாள் மூதறிவாட்டி என்று
அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி”

என மிகுந்த நாணமுடையவளாகவே காணப்பட்டாள். ஆயினும் எவ்விடத்திலும் தாம் கண்ட கனவு குறித்து விளக்கி, அதிலிருந்து விடுபடும் முயற்சியற்ற நிலையினையே கண்ணகிக்கான இயல்பாக இளங்கோவடிகள் கொண்டு செல்வதினைக் காணலாம்.

கொலைக்களக் காதைக்குப் பிறகு, மிகுதியாகப் பேசும் இயல்புடையோளாகக் கண்ணகி காணப்படுகின்றாள். கனவின் வழியே ஊழின் தன்மையானது அவளை இழுத்துச் செல்வதாயிற்று.

“தோழிநீ ஈதொன்று கேட்டியென் கோமகற்கு
ஊழ்வினை வந்தக் கடை”
“மாதராய் ஈதொன்றும் கேளுன் கணவற்குத்
தீதுற வந்த வினை; காதின்”

என்பனவாக மதுராபதித் தெய்வம் கூறுவதும் ஊழின் படியே அதற்குத் துணையாக கண்ணகி சென்றமையினைக் காட்டுகிறது. இவ் ஊழின் தன்மையினையே பின்னர் வரந்தரு காதையில் கண்ணகியின் கூற்றில் வைத்து இளங்கோவடிகள் கூறுவதை:

“தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில்
நல்விருந்து ஆயினான் நான்அவன் தன் மகள்
வெல்வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்”

என்ற அடிகளின் வழி அறியலாம். இதன்வழி கோவலனைப் போலவே கண்ணகியும் இளங்கோவடிகளால் ஆசீவகச் சமயம் சுட்டும் இயல்புக் கோட்பாட்டின் வழி ஊழினை அரண் செய்து சென்றமையினைக் காணலாம்.

தற்செயலியம்

சிலப்பதிகாரத்தில் ஆசீவக சமயத்தின் தற்செயல் என்னும் சூழலியம் எவ்வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதினை நோக்கலாம். ஊழே சிலப்பதிகாரத்தில் முதன்மை வகித்தாலும், அதற்குத் துணை நிற்பனவாக அமைபவை இயல்பும் தற்செயலுமாகும். அவ்வகையில் சிலப்பதிகாரத்தில் காணப்படும் சில தற்செயல் நிகழ்வுகள் குறித்துக் காண்போம்.

வாழ்வின் போக்குகளை மாற்றக் கூடியவர்களை எவ்வகை முன்னெடுப்புமின்றி தற்செயலாய் சந்தித்தலைச் தற்செயல் வாதம், சூழலியம் என ஆசீவக சமயக் கோட்பாடுகள் குறிப்பிடும். அவ்வகையில் கோவலன் – மாதவி சந்திப்பென்பது தற்செயலான நிகழ்வாகவே கருதத்தக்கதாகும்.

“மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கென
மானமர் நோக்கியோர் கூணிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகிற்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னோடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுத லறியா விருப்பின னாயினன்
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்தென்” (அறங்கேற்றுக் காதை.166-175)

என்றமையால் மாதவியின் மாலையைக் கோவலன் வாங்க வேண்டுமென யாரும் வலியுறுத்தவில்லை; கூனியிடம் கொடுக்கப்பட்ட அம்மாலை வீதியிலேயே விலை பகர்வது போல் விலை பகரப்பட்டது. தன்னுடைய, எதனையும் செய்யத்துடிக்கும் இயல்பின் வழி, கோவலன் ஆர்வ மிகுதியால் அம் மாலையை வேண்டினான். மாலையை வேண்டியதன் வழி மாதவியைச் சந்திக்கலாயிற்று. இது தற்செயல் நிகழ்வாகும். மாதவியைச் சந்தித்த கோவலன் சட்டென முடிவெடுக்கும் தன் இயல்பால் தனது மனையாளையும் மனையையும் மறந்தான். இது அவனது இயல்பாயிற்று. இங்கு தற்செயலுக்கு இயல்பு துணையாயிற்றெனலாம்.

கோவலன் மதுரை மாநகர வீதியில் சிலம்பினை விற்பதற்குச் சென்ற வேளையில் தற்செயலாகவே அரச பொற்கொல்லனைக் கண்டு தனது சிலம்பின் திறன் குறித்தும் அதனை விற்பது குறித்தும் பேசினான். அவன் முன்னரே திட்டமிட்டுப் பொற்கொல்லனிடம் சிலம்பை விற்றல் தொடர்பாக வரவில்லை; பொற்கொல்லனையும் அவனுக்குரிய இடத்தினிற் சென்று சந்திக்கவில்லை; மதுரையின் வீதியிலேயே சந்திக்கின்றான். இதனை:

“மாதர் வீதி மறுகிடை நடந்து,
பீடிகைத் தெருவில் பெயர்வோன்-ஆங்கண்,
கண்ணுள் வினைஞர், கைவினை முற்றிய
நுண்வினைக் கொல்லர், நூற்றுவர் பின் வர,
மெய்ப்பை புக்கு, விலங்கு நடைச் செலவின்
கைக் கோல் கொல்லனைக் கண்டனனாகி,
‘தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன் வினைக் கொல்லன் இவன்’ எனப் பொருந்தி,
‘காவலன் தேவிக்கு ஆவதோர் காற்கு அணி
நீ விலையிடுதற்கு ஆதியோ?’ என”

என்பனவற்றால் அறியலாம். அத்துடன் இந்தத் தற்செயலுக்கு, எதனிலும் ஆர்வம் காட்டும் கோவலனது இயல்பும் உறுதுணையாயிற்று. நூறுகொல்லர்கள் பின் தொடரவரும் அவனது தகைமையும், அவனே தமது சிலம்பினுக்கு ஏற்ற பொருள்தரக்கூடிய தகையோன் என்ற சூழ்நிலை சார்ந்த எண்ணமும், சிந்திக்காது முடிவெடுக்கும் அவனது இயல்பும் அச்செயலுக்குத் துணை நின்றமையினை மேற்கண்ட அடிகளிற் காணலாம். பொற்கொல்லன் கோவலனைக் கள்வனெனக் குற்றம் சுமத்த, பாண்டிய மன்னனிடம் சென்றவேளை, அங்கு நிலவிய சூழலும் கோவலனின் ஊழுக்குத் துணையாயிற்றெனலாம்.

“கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்,
பாடல் பகுதியும், பண்ணின் பயங்களும்,
காவலன் உள்ளம் கவர்ந்தன’ என்று, தன்
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து,
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு,
குலமுதல் தேவி கூடாது ஏக” (கொலைக்களக் காதை.131-136)

பாண்டிய மன்னன் ஆடல் மகளிரின் தோற்றத்தினையும் ஆடலின் தன்மையினையும் பண்ணின் இனிமையினையும் உள்ளம் செலுத்தி ஈடுபட்டமையினைக் கண்டு, மகளிருக்கேயுரியதான ஊடலுள்ளம் பாண்டி மாதேவிக்குத் தோன்றி, தலை நோவு என அவள் எழுந்து சென்றமையால், அவள் ஊடல் தணிக்க வகையற்று மன்னவனும் பின் சென்றான். அவ்வேளையிலேயே பொற்கொல்லன் பாண்டியனின் காலில், பாண்டி மாதேவியின் கோயில்முன் வந்து விழுந்தான். இதனை:

“மந்திரச் சுற்றம் நீங்கி, மன்னவன்
சிந்து அரி நெடுங் கண் சிலதியர்-தம்மொடு
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி,
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின்-
விழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்திக்” (கொலைகளக் காதை.137-141)

என்ற பாடலால் அறியலாம். பாண்டிய மன்னன் மனக் குழப்பத்தில் பாண்டி மாதேவியின் ஊடலைத் தவிர்க்க தனக்குப் பற்று ஏதும் இல்லாத நிலையில் இருந்தமை, அவன் அவளது மாளிகை வாயிலைக் கடக்கும் முன்பு பொற்கொல்லன் அவன் காலில் விழுந்தமை போன்ற நிகழ்வுகள் யாவும் திட்டமிட்டு நிகழ்ந்தனவல்ல; யாவும் தற்செயலாக நிகழ்ந்தனவே. இவற்றில் அந்நிகழ்வுகளில் உள்ளோரின் இயல்பும் தற்செயலும் ஒருங்கு சேர்ந்து ஊழினுக்கு வழியமைத்துக் கொடுத்தமையைக் காணக்கூடியதாக உள்ளமையினை அறியலாம்.

ஆசீவக மும்மைக் கொள்கையும் சிலப்பதிகாரமும்

கண்ணகி, கோவலன் ஆகியோரது வாழ்வு ஆசீவகத்தின் இயல்பு, தற்செயல், ஊழ் என்னும் மும்மைக் கொள்கைகளின் வழி, எவ்வகையிற் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதனை மேற்கண்டவாறு கண்டோம். இனி, இவ் ஆசீவகக் கோட்பாடுகள், இக் காப்பியமெங்கும் விரவிக் காணப்படக்கூடிய தன்மையினை நோக்குவோம்.

kanaki

கண்ணகியின் இயல்பு கோவலனின் ஊழினுக் கெதிராகச் செல்லாமல் இயைந்தே சென்றமையினை, கோவலன் தன்னைப் பிரிந்து சென்றபோதும் அவனை அடைதற்கு எவ்வித முயற்சியும் செய்யாமல், சில வழிமுறை கூறிய தேவந்தியின் செயல்களையும் ‘பீடன்று’ கூறி மறுத்தமையின் வழி அறியலாம். கனவின் வழி எதிர்கால நிகழ்வுகளை அறிந்தபோதும் அதனைத் தடுப்பதற்கான முயற்சியினை மேற்கொள்ளவில்லை என்பதினையும் முன்னர் கண்டோம். ஆனால் மாதவியிடம் கோவலனின் ஊழினுக்கு எதிராக வினையாற்றும் தன்மையினைக் காணக் கூடியதாக உள்ளது. கோவலன் தன்னை விட்டுப் பிரிதலை மாதவி ஏற்கவில்லை. கோவலனது இயல்பு, ஊழினுக்குத் துணையாகி மாதவியிடமிருந்து அவனைப் பிரித்தது.

“யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந் துருத்ததாகலின்
உவவுற்றதிங்கள் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்”
(கானல்வரி, 52:278-279)

என்பதனால் இதனை அறியலாம். ஆனால் மாதவி, கோவலன் பிரிந்து செல்வதினைத் தடுக்க முயற்சித்தமையினை, அவள் எழுதிய இரண்டு கடிதங்களும் உறுதிப்படுத்தும். முதலாவது கடிதம், முற்றிய வெள்ளை நிறத் தாழம்பூவின் மடலினை விரித்து எழுதப்பட்டது. ஏனெனில் படிக்கின்ற காலத்து விரித்துப் படிப்பதற்கும் மற்றைய நேரங்களில் சுருட்டியமைவதற்கும், ஓரிரு நாட்களின் பயன்பாட்டிற்கும் ஏற்புடையதாதலால் இதனைப் பயன்படுத்தினாள். இதனை:

“முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு
விரைமலர் வாளியின் வியனிலம் ஆண்ட
ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்
ஒருமுக மன்றி உலகுதொழு திறைஞ்சுந்
திருமுகம் போக்குஞ் செவ்விய ளாகி
அலத்தகக் கொழுஞ்சேறு ஆளை இ அயலது
பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு” (வேனிற்காதை.49-55)

என்ற அடிகளால் அறியலாம். மாதவி எழுதிய திருமுகத்திற்குக் கட்டுப்பட்டதல்ல ஊழ்; அது அவ்வவ் காலங்களில் நிகழச் செய்ய வேண்டியவற்றினை நிகழச்செய்யக் கூடியது. ஆதலாலேயே ‘ஆகும் காலத்து ஆம்’ என்ற ஆசீவகக் கொள்கை தெளிவுறுத்தப்பட்டது. மாதவியின் மேலுற்ற வெறுப்பு மாறாமையால் திருமுகத்தைப் படிக்காமலேயே வசந்தமாலை துயருறத் திருப்பி அனுப்பினான். மாதவியுடன் இருந்த காலம் முடிந்தது; அதன்மேல் ஊழின்வழி அங்கு நிற்றலியலாது; சுகமுறுதலும் குறிப்பிட்ட காலத்தில் அதிலிருந்து விடுபடுதலும் ஆசீவகச் சமயக் கொள்கை; அதனையே இது குறிக்கின்றது.

“பொழுதீங்குக் கழித்ததாகலின் எழுதும்என் றுடனெழாது” (கானல்வரி.52:6)

என்ற கானல் வரியின் அடிகள் இதனைச் சுட்டுகிறது. ஆன போதிலும், மாதவி தனது முயற்சியைக் கைவிடும் இயல்பினள் இல்லை. காலையில் பார்ப்போம் என்ற முயற்சியை உடையோளாகவே விளங்கினாள். இதனை:

“மாலை வாரா ராயினும் மாணிழை
காலைகாண் குவமெனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தானென்” (வேனிற்காதை.114-117)

என்ற அடிகளின் வழியறியலாம். ஆயினும் மாதவியின் முயற்சி கோவலனின் ஊழின் முன், பெரு வெள்ளத்தைத் தடுக்கவியலாத மற்சிறை ஆகியமையினை கானாத்திறம் உரைத்த காதையின், இறுதி வெண்பா காட்டும். இதனை:

“காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க-மூதை
வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குற்
கனைசுடர் கால்சீயா முன்”

என்ற வெண்பாவின் வழியறியலாம். மாலையிற் காணாவிடினும் காலையிற் காண்போம் என மாதவி சொன்ன சொல்லைப் பொய்த்ததாக்கியது, கண்ணகி கண்ட கனவு. ஊழின்முன் மாதவியின் முயற்சி எடுபடவில்லை. ஆதலாலேயே அன்றைய இரவின் கங்குல் பொழுதாகிய வெள்ளி முளைக்கும் வேளைக்கு முன்னதாகவே கோவலனும் கண்ணகியும் புகார் நகரைவிட்டுப் போந்தனர். ஊழின் வலிமையை மாதவியின் விடாமுயற்சியும் தடுக்கவில்லை. ஆயினும் மாதவியின் இயல்பு ஊழினுக்கு எதிராகச் செயல்பட்டமையினை, அவளது முயற்சிகள் மீண்டும் தொடர்ந்ததின் வழியறியலாம். கோவலனும் கண்ணகியும் இரவோடு இரவாகப் புகார் நகரைவிட்டுப் போய்விட்டமை, புகார் நகரிலே கோவலனின் பெற்றோருக்கும் மற்றோருக்கும் பெருந்துயரினைக் கொடுத்தது. வருந்திய மாதவி கௌசிகமணி என்னும் பார்ப்பானிடம் வேண்டி, அவனிடம் ஒரு திருமுடங்கலையும் எழுதி மண் முத்திரையிட்டுக் கொடுத்தனுப்பினாள். அவ்வோலையினை மதுரைப் புறச் சேரியிலே கௌசிகமணி கோவலனிடம் சேர்ப்பித்தான். அவ்வோலையில் எழுதிய வரிகளும் மறைமுகமாக ஊழினையே சாடுதலினை உணரலாம்.

“போதவிழ் புரிகுழற் பூங்கொடி நங்கை
மாதவி யோலை மலர்க்கையின் நீட்ட”

என்றவாறு மாதவியின் ஓலையினைக் கண்டு அவள் தீதற்றவள்; எல்லாம் தனது ஊழின் வினை என்பதனை உணர்ந்தோனாக மாறினன் கோவலன். இவற்றில் மாதவியின் முயற்சியின் காலம் கடந்துவிட்டது; கோவலன் கண்ணகியோடு மதுரை நகர் எட்டிவிட்டான்; ஊழ்வினை அவனை இழுத்து வந்துவிட்டது; பொருளீட்டும் நோக்கத்தினைத் தாண்டி எதனையும் செய்யவியலாத சூழலில் அவனைத் தள்ளிவிட்டது. அந் நிலையிலேயே அவனுக்கு உண்மை புலப்பட்டது. ஊழ் எனும் உருட்டப்பட்ட நூல் கண்டின் வழி அவன் மதுரையை அடைந்து விட்டான். இனி, அந் நூற்கண்டினைச் சுற்றுதல் இயலாது. அந் நூற்கண்டினை மதுரை நோக்கி உருளாமல் தடுப்பதற்கு மாதவி செய்த முயற்சிகள் யாவும் பயனற்றதாகவே முடிந்தமையினைக் காணலாம். ஆதலால் ஊழின் முன் எம் முயற்சியும் வெல்லாது எனும் ஆசீவகக் கருத்தியலின் வெற்றி இங்கு மாதவியின் வாயிலாக நிறுவப்பட்டுள்ளமையினைக் காணலாம். ஆனால் சமணக் காப்பியங்களில் ஊழினை முறியடித்து காப்பியத் தலைவன் தன்னைச் சார்ந்தோரின் முயற்சியால் வெல்வதினைக் காணலாம். ஆயினும் சிலப்பதிகார அமைப்பு ஊழின் வெற்றியை எம் முயற்சியாலும் வெல்ல முடியாது என்னும் தன்மையினை நோக்கியதாகவே உள்ளமையினை மாதவியின் முயற்சிகளின் தோல்வியின் வழி அறியலாம். ஆசீவகச் சமயத்தார் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் இன்பம் – துன்பம், பயனடைதல் – பயனற்று இழத்தல், வாழ்வு – தாழ்வு, சிறப்பு – சிறவாமை என்பனவான எதிர்மறைகள் யாவும் நிகழும் என்னும் கொள்கையில் மிகவும் உறுதியோடிருந்தனர். இவையும் ஊழின் வழி அமைவனவேயாம். இத் தன்மையினைச் சிலப்பதிகாரக் காப்பியமெங்கும் காணலாம். இவ்வூழின் வழிப்பட்ட துன்பத்திலிருந்து விடுபட நினைத்த கோவலன் அது குறித்து முயற்சித்தும் அதற்கு அறிவோர் உதவாமையால் ‘நீர்வழிச் செல்லும் துரும்பு’ போல் ஊழ் வழிச் சென்றமையினை இனிக் காண்போம். மாடல மறையேனிடம் கோவலன் தான் கண்ட கனவினைக் கூறி, விரைவில் துன்பம் வரும்போலும் எனக் கூறுகின்றான். ஆனால் அதற்கான கழுவாய் எதனையும் மாடல மறையோன் கூறினானில்லை. இது எவ்வகையிலும் கோவலனது ஊழிலிருந்து வெளிவருதல் இயலாது என்பதினையே மெய்ப்பிக்கும் வண்ணம் உள்ளதனைக் காணலாம். ஆனால் கோவலனின் பண்டைய மறவாழ்வையும், அறவாழ்வையும், கொடைவாழ்வையும் பலவாறு புகழ்ந்து பாடுகின்றான். ஆனால் அவன் உற்ற இடர் களைய முன்வருவாரில்லை. அவனது கனவின் தன்மையினையும் எடுத்துக்கூறி ‘ஆற்றுப் படுத்துவாருமில்லை’ என்பது ஊழ் தன்வழியே செல்லும் என்பதனைக் காட்டுவதாக அமைகின்றது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

2951 பார்வைகள்

About the Author

ஜெகநாதன் அரங்கராஜ்

முனைவர் ஜெ. அரங்கராஜ் யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்தவர். இவர் பழந்தமிழ் இலக்கியத் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம் முதலான துறைகளில் தமது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சிங்கப்பூர்த் தமிழ்ப் பாடநூற்கள் குறித்தும் பண்டைத் தமிழர்களின் அயலகத் தொடர்புகள் குறித்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ‘செம்மொழித் தமிழ் இலக்கண, இலக்கிய மேற்கோள் அடைவு’ என்னும் இவரது நூல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் ஈழம், தமிழகம் என இரண்டு தலங்களிலும் ஆய்வு மேற்கொண்டுள்ள ஆய்வாளராக இவர் திகழ்கின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)