Arts
24 நிமிட வாசிப்பு

பொன்னம்பலம் குமாரசாமி குடும்பம்

March 13, 2024 | Ezhuna
சேர்.பொன். அருணாசலம் (1853-1924) தமிழர்களின் அரசியலில் முக்கியமான வகிபாகத்தைப் பெற்றிருந்த ஒருவராவார். இவரைப் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் வாழ்க்கை வரலாறு, அரசியல் விமர்சனம் என்ற வகையிலான நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. குறித்த நூல்களையும் கட்டுரைகளையும் ஒருசேரத் தொகுத்து நோக்குவதும் விமர்சன முறையிலான மதிப்பீட்டையும் புரிதலையும் தமிழ் வாசகர்கள் மனதில் உருவாக்குவதும் இத் தொடரின் நோக்கமாகும். ஆய்விற்குரிய ஒரு விடயப்பொருள் குறித்த பன்முகப் பார்வையினை வழங்கும் ‘A Reader’ என்ற வகை நூல்கள் இன்றைய காலத்தின் தேவையாகும். சேர்.பொன். அருணாசலம் அவர்களின் நூற்றாண்டை நினைவுகூர்தலின் பொருட்டும், நூல் ஒன்றை வெளியிடும் ‘எழுநா’வின் திட்டத்தின் ஆரம்பப் பணியாகவும் இக் கட்டுரைத் தொடர் ‘சேர்.பொன். அருணாசலம் : வாழ்வும் பணிகளும் - ஒரு பன்முகப் பார்வை’ என்ற தலைப்பில் அமைகிறது.

ஆங்கிலம் மூலம் : குமாரி ஜெயவர்த்தன

(சேர்.பொன். அருணாசலத்தின் குடும்பப் பின்னணியையும், அவரது மாமன் சேர். முத்துக்குமார சுவாமி, அவரது தமையன் சேர்.பொன். இராமநாதன் என்போர் பற்றியும், இலங்கையின் சிவில் சேவை உத்தியோகத்தராகவும் பின்னர் தமிழர்களின் அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய சேர்.பொன் அருணாசலம் பற்றியும் விமர்சன நோக்கில் எழுதப்பட்ட இக்கட்டுரையை இத்தொடரின் முதலாவது கட்டுரையாக தருகின்றோம். குமாரி ஜெயவர்த்தன அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல் ‘அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை – இலங்கையின் காலனித்துவ முதலாளித்துவ வகுப்பின் தோற்றம்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இந் நூலின் பதினோராவது அத்தியாயத்தில் பக்கம் 190 – 206 வரையான பக்கங்களில் ‘பொன்னம்பலம் குமாரசாமி குடும்பம்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்த பகுதி இங்கே தரப்பட்டுள்ளது. சேர்.பொன். அருணாசலம் அவர்களின் வாழ்க்கையும் பணிகளும் பற்றிய புரிதலின் தொடக்கப் புள்ளியாக பொன்னம்பலம் குமாரசுவாமி குடும்பம் கட்டுரை அமைகின்றது.)

book

19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டிலும் அரச உத்தியோகங்களாலும் வர்த்தகம், தனியார் துறை முயற்சிகள் ஆகியவற்றாலும் செல்வாக்குடையவனவாய் விளங்கிய தமிழ் குடும்பங்களில் பொன்னம்பலம் குமாரசாமி குடும்பம் ஒன்றாகும். இக்குடும்பம் பெரும் செல்வம் படைத்த வர்த்தகருடைய குடும்பங்களுடன் உறவுமுறை பிணைப்பு உடையதாக விளங்கியதோடு அரசியல் அதிகாரத்தை உடையதாகவும் விளங்கியது. தேசிய மட்டத்திலும் சர்வதேச நிலையிலும் சிறந்தோங்கிய முத்துக்குமாரசுவாமி, அவரது மகன் ஆனந்த குமாரசுவாமி, பொன்னம்பலம் இராமநாதன், பொன்னம்பலம் அருணாசலம் ஆகிய புகழ்மிக்க தனிநபர்கள் இக்குடும்பத்தில் தோன்றினர். தமிழர்களுக்குச் சட்ட சபையில் ஒதுக்கப்பட்ட இடத்தின் ஏகபோக உரிமையை இக்குடும்பத்தின் உறுப்பினர்கள் அனுபவித்தார்கள். இவர்களுக்கு பல பட்டங்களும் வழங்கப்பட்டன. இவ்வாறு சில குடும்பங்கள் ஏன் உயர்ச்சி பெற்றன, வெற்றிப் பாதையில் சென்றன என்பதைப் புரிந்து கொள்வதற்கு அவற்றின் அரசியல் சமூக முன்னேற்றத்தின் மூலத்தை அறிதல் வேண்டும். இரண்டு, மூன்று தலைமுறையினரின் வரலாற்றுக்கு அப்பால் புனைவுகளும், மிகைப்படுத்தல்களும் நிறைந்த தெளிவற்ற வரலாறாக இக்குடும்பத்தின் பூர்வீகம் அமைகின்றது. முக்கியமான நபர்களின் பெற்றோர், பாட்டன் ஆகியவர்களின் சரிதங்களில் இருந்து இக்குடும்பத்தின் வரலாறு பற்றிய சில தடயங்களைக் கண்டு கொள்ள முடியும்.

பருத்தித்துறையைச் சேர்ந்த ஆறுமுகம்பிள்ளையின் மகன் வாரித்தம்பி டச்சு ஆட்சியின் பிற்பகுதியில் கொழும்புக்கு வந்து குடியேறினார். இது அவரின் புத்திசாலித்தனமான முடிவு. கொழும்பு செட்டித் தெருவில் தங்கியிருந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட வாரித்தம்பி தனது இளைய சகோதரர் குமாரசுவாமியை (1783 – 1836) கொழும்புக்கு வரும்படி சொல்லியனுப்பினார். கொழும்பு வந்த குமாரசுவாமிக்கு கவர்னர் நோர்த் 1799 இல் தொடக்கி வைத்த கொழும்பு அக்கடமியில் ஆங்கிலக் கல்வி போதிக்கப்பட்டது. இங்கு படித்தவர்கள் அரசாங்கத்தில் மொழிபெயர்ப்பாளர்களாக வேலை செய்தனர். 1805-1808 காலத்தில் கொழும்புத் துறைமுக நீதவான் மன்றின் மொழிபெயர்ப்பாளராகக் குமாரசுவாமி கடமையாற்றினார். 1810 இல் அவர் ஆளுநரின் பிரதம மொழிபெயர்ப்பாளரானார். அவருக்கு முதலியார் பட்டத்தை வழங்கி அரசாங்கம் கௌரவித்தது. 26 வயதுடைய இந்த யாழ்ப்பாணத்துத் தமிழர் அரசின் மிக உயர்ந்த பதவியொன்றைப் பெற்றார். 1815 இல் பிரித்தானியர் கண்டியைக் கைப்பற்றியபோது, பிரிட்டிஷ் படைகளுடன் சென்ற குமாரசுவாமி கண்டியின் அரசன் அரச பதவியில் இருந்து நீக்கப்பட்டு புகலிடம் பெறுதல் வரையான மாறுதல் காலத்தில் இடை நின்று உதவினார். கண்டி அரசனின் பூர்வீகம் தென்னிந்தியா ஆதலால், குமாரசுவாமியின் தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்புச் சேவை மிகவும் அவசியமானதாக இருந்தது. குமாரசுவாமி பிரித்தானிய அரசருக்கு செய்த சேவைக்காக 1819 இல் ஆளுநர் பிரவுண்றிக்கினால் தங்கப் பதக்கம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார் (வைத்திலிங்கம் 1971: 36-43). குமாரசாமி குடும்பத்தின் உயர்ச்சி அவர்கள் எடுத்த இரு முடிவுகளினால் சாத்தியமாயிற்று. முதலாவது காலனித்துவ இலங்கையில் மையமான கொழும்பிற்கு இடம்பெயர்வது என்ற முடிவு. இரண்டாவது ஆங்கிலத்தில் அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவு. இவற்றின் பயனாய் குமாரசுவாமி குடும்பம் சமூக ஏணிப்படியில் உயரவும், பொருளாதார முன்னேற்றம் அடையவும் முடிந்தது. அரசியல் நன்மைகளையும் இக்குடும்பம் பெற்றுக்கொண்டது.

கொழும்புக்கு வந்து சேர்ந்த குமாரசுவாமியும், பிற யாழ்ப்பாணத்துத் தமிழர்களும் செட்டித் தெருவுக்கு அண்மையில் செட்டிகள் குடியிருப்பில் தங்கினர். தென்னிந்தியாவின் திருநெல்வேலியைச் சேர்ந்த செட்டிகள், தனவைசியர் சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் போர்த்துக்கேயர் ஆட்சியின் போது இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர். உள்ளூரில் விவாகம் செய்து கொண்ட செட்டிகள் சிலர் கிறிஸ்தவர்களாயினர். டச்சு ஆட்சியின் போது செட்டிகளில் இரு பிரிவினர் இருந்தனர். கிறிஸ்தவர் ஒரு பிரிவினர். இன்னொரு பிரிவினர் இந்துக்கள். செட்டிகளிற்கு குழுத்தலைவர்கள் இருந்தனர். 1833 அளவில் கூட கொழும்புத் தமிழர்களில் செட்டிகளே அநேகராயிருந்தனர் (அசரப்பா 1933). பலர் இந்தியா சென்று உயர்கல்வி கற்றனர். 19 ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் உயர்தொழில்களில் சிறந்து விளங்கிய செட்டிகள் பலர் கொழும்பில் இருந்தனர்.

கொழும்புக்குப் புதிதாக வந்து சேர்ந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் செட்டிகளோடு கொண்ட தொடர்பால் நன்மை பெற்றனர். செட்டிகள் வியாபாரத்தில் அறிவும், மதிநுட்பமும் மிக்கவர்கள். அவர்கள் கல்வியில் முன்னேறியவர்களாயும் நாகரிக மேம்பாடுடைய வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களாயும் இருந்தனர். செட்டிகளிற்கும் கொழும்புக்கு வந்து சேர்ந்த யாழ்ப்பாணத்தவர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன. கலப்புத் திருமணங்களும் இடம்பெற்றன. அத்தோடு போட்டியும், பூசலும் கூட வளரலாயிற்று. யாழ்ப்பாணத் தமிழர் கொழும்பில் தம் நிலையைப் பலப்படுத்திக் கொண்ட பின்னர் 1830 இல் முதன் முதலாக ஒரு போட்டி ஏற்பட்டது. கொழும்புச் செட்டிகளின் தலைவர் ஒருவரைத் தேர்ந்து கொள்ள வேண்டும். இதற்கான போட்டியில் கொழும்பு நகரின் செல்வந்தரான சாராயக் குத்தகைக்காரர் தியாகப்பா என்ற செட்டியை எதிர்த்து குமாரசுவாமி போட்டியிட்டார். அப்போட்டியில் குமாரசுவாமி வெற்றி பெற்றார். ஆளுநர், வெற்றிபெற்ற குமாரசுவாமியை தலைமைப் பதவியில் அமர்த்தியதோடு ‘தங்கத்தால் செய்யப்பட்ட பூண் போட்ட மலாக்கா பிரம்புக் கைத்தடியை அப்பதவியின் அடையாளச் சின்னமாக’ பரிசளித்துக் கௌரவித்தார். கைத்தடியின் பூணில் ஆங்கில நாட்டு ஆயுதங்கள் சித்திர வேலைப்பாடாக பதிக்கப்பட்டிருந்தன (வைத்திலிங்கம் 1971: 45). கௌரவம் மிக்க பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கு முன்னர் நியமனம் பெறுவோரின் சமூகப் பின்னணியை – வேர்களைக் கண்டறியும் தேவையும் இருந்தது. கொழும்புச் செட்டிகள் குமாரசுவாமியின் நியமனத்தை எதிர்த்தனர். அவர் வேளாளர் சாதியைச் சேர்ந்தவர் அல்லவென்றும், அநாமதேயமான ஒருவர் தம்மை ஒரு முக்கியஸ்தராக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். குமாரசுவாமி வேளாளரே என்பது நிரூபிக்கப்பட்டு அவருடைய நியமனம் உறுதிப்படுத்தப்பட்டது. குமாரசுவாமி 1835 ஆம் ஆண்டில் சட்டசபையின் முதலாவது உத்தியோகப் பற்றற்ற தமிழ் உறுப்பினராக நியமனம் பெற்றார். அவர் சிறிது காலத்தின் பின் மரணம் எய்தினார். குமாரசுவாமி குடும்பத்தின் முற்போக்கு மனப்பாங்கு, ஆரம்பம் முதலே வெளிப்படலாயிற்று. 1816 ஆம் ஆண்டில் ஆங்கில இளவரசருக்கு செய்த மனுவில் குமாரசுவாமி இலங்கையில் அடிமைமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இலங்கை முழுவதிலுமாக அக்காலத்தில் 28,000 அடிமைகள் இருந்தனர். இவர்களுள் யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களில் இருந்தோர் 22,000 ஆகும். குமாரசுவாமி அக்காலத்தில் பிரதம நீதியரசராகவிருந்த அலெக்சாண்டர் யோன்ஸ்ரனின் செல்வாக்குக்கு உட்பட்டவராய் இருந்தார். அலெக்சான்டர் யோன்ஸ்ரன் சுதந்திரம், சமத்துவம் என்பவற்றைப் போற்றிய ஒருவராக இருந்தார். குமாரசுவாமி மிக விரைவிலேயே கொழும்புச் சமூகத்தில் மதிப்புக்குரிய தமிழர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். பொது வைபவங்களிலும், திருமணங்களிலும் அவர் பங்கு பற்றிச் சிறப்புச் செய்வார். ‘குமாரசுவாமி முதலியார் அலங்காரமாக உடையணிந்து வருவார். அவரை நிலபாவாடை விரித்து, குடை பிடித்து வரவேற்பர். அவரை இரட்டைக் கம்பளம் விரித்த இருக்கையில் உட்கார வைப்பர்’ என்று திருமண வைபவங்களில் அவருக்கு நிகழும் வரவேற்பு உபசாரம் பற்றிக் கூறப்படுகிறது (மேலது: 46). பிரபல வர்த்தகராக இருந்த இ. நன்னித்தம்பியின் சகோதரியும், வைரவநாத முதலியாரின் புத்திரியுமான விசாலாட்சி என்பவரை குமாரசுவாமி விவாகம் செய்தார். இவ்விவாக பந்தம் அவரது அந்தஸ்தைப் பலப்படுத்த உதவியது.

arunachalam ponampalam

அருணாசலம் பொன்னம்பலம் (1814-87) அடுத்த நிலையில் முக்கியம் பெற்ற ஒருவராவர். பொன்னம்பலம் சிறுவனாக இருந்த போது தந்தையை இழந்தார். அவரது தாயார் அரிய புத்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மானிப்பாயில் இருந்து கொழும்பு வந்த பொன்னம்பலம், குமாரசுவாமியின் கொழும்பு வீட்டில் தங்கிப் படித்தார். 1844 ஆம் ஆண்டு பொன்னம்பலம், குமாரசுவாமியின் மகள் செல்லாச்சியைத் திருமணம் செய்தார். பொன்னம்பலம் முதலில் வியாபாரத்தில் ஈடுபட்டார். அது வெற்றியளிக்காமல் போகவே, வியாபாரத்தைக் கைவிட்டு விட்டுச் சுங்கப் பகுதியில் ஆண்டுக்கு 45 பவுண் சம்பளத்தில் வேலை பெற்றார். அரச சேவையில் அவர் முன்னேற்றம் பெற முடிந்தது. 1845 இல் கொழும்புக் கச்சேரியில் எழுதுவினைஞராகப் பணியேற்றார். பின்னர் 1847 இல் கொழும்பின் பிரதி மரண விசாரணையாளர் பதவியில் நியமிக்கப்பட்டார். பிரித்தானிய உத்தியோகத்தர்களுக்குத் தனிப்பட்ட முறையில் கடன் கொடுக்கும் வங்கியாளராகவும் பொன்னம்பலம் செயற்பட்டார். மேற்கு மாகாணத்தின் அரசாங்க அதிபராக இருந்த பிலிப்வூட்கவுஸ் போன்ற அக்காலத்தின் முக்கியமான ஆங்கிலேயர்களின் நண்பராக இருந்தார் (மேலது 51-2). பொன்னம்பலத்தின் பிரித்தானிய உயரதிகாரிகளில் சிலர் 1848 இல் நடைபெற்ற கலகத்தின் போது செய்யப்பட்ட எல்லை மீறிய செயல்களால் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டனர். ரொறிங்டன், சேர் எமர்சன் ரெனன்ற், வூட்கவுஸ் ஆகியோரும் இவர்களில் அடங்குவர். பாராளுமன்ற ஆணைக்குழுவின் முன்பாக நடந்த விசாரணையில் சமூகமளிப்பதற்காக ரெனன்ற் இலங்கையை விட்டு நீங்கு முன், பொன்னம்பலம் ரெனன்ற் அவர்களுக்கும் அவரது குடும்பத்துக்கும் தனது வீட்டில் விருந்து வைத்தார். பழமை மரபுகளில் பிடிப்புள்ள பொன்னம்பலம் விருந்தில் ஒரு சேர இருந்து உணவு உட்கொள்வதை தவிர்த்தார்.

ponampalam kumarasamy

பொன்னம்பலம் இருவேறு பண்பாட்டு உலகத்தில் வாழும் ஒரு மனிதராக இருந்தார். மரபு வழிப்பட்ட இந்து பக்தர், சமய ஆசார சீலர் என்பது ஒன்று. கிடைக்கும் வியாபார வாய்ப்புகளையும், அரசாங்கப் பதவிகளையும் பெற்றுவிட வேண்டும் என்ற ஆவல் உடைய மனிதர் என்பது இன்னொன்று. தமிழர்களைக் கொழும்பில் ஆதரித்து உதவும் புரவலர்கள் என்ற தகுதியைப் பொன்னம்பலம் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கு ஆங்கில வங்கிகளிலும், பிற வர்த்தக நிலையங்களிலும் பொறுப்புமிக்க பதவிகளை பெற்றுக் கொடுக்க பொன்னம்பலம் குடும்பம் உதவியது. பொன்னம்பலம் – செல்லாச்சி தம்பதியினருக்கு மூன்று புதல்வர்கள் பிறந்தனர். அவர்கள் தேசிய அளவில் புகழ் பெற்றவர்களாயினர். மூத்தவர் பொ. குமாரசுவாமி (1849-1905); இவர் சட்டசபை அங்கத்தவராக இருந்தார். அடுத்தவர் பொ. இராமநாதன் (1851-1930); இவர் நியாயவாதியாகவும், அரசியல்வாதியாகவும் விளங்கினார். அடுத்தவர் பொ. அருணாசலம் (1853-1924); தலை சிறந்த சிவில் சேவை அதிகாரியாகவும் அரசியல் சமூக இயக்கங்களில் முன்னணி வகித்த தலைவருமாக இவர் விளங்கினார்.

முதலியார் குமாரசுவாமியும், அவரது மருமகனான பொன்னம்பலமும் காலனித்துவ சமூகத்தில் அரச பதவிகளில் உயர்ந்ததோடு, உயர்பதவிகளில் உள்ளோருடன் நெருங்கிய தொடர்புகளையும் வளர்த்துக் கொண்டனர். இதனை விட பணக்கார வர்த்தகர்களுடன் அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட உறவுகளும் அவர்களுக்கு சமூகத்தில் உயர்ச்சியைப் பெற உதவின. 19 ஆம் நூற்றாண்டின் செல்வந்தர்களான தமிழ் வர்த்தகர்களுள் நன்னித்தம்பி, நமசிவாயம், தம்பையா என்போர் மிக முக்கிய புள்ளிகள். இவர்கள் மூவரும் திருமண உறவுகள் மூலம் ஒருவரோடு ஒருவர் பிணைப்புடையவர்கள். முதலியார் நமசிவாயம் நன்னித்தம்பியின் சகோதரியை விவாகம் செய்தார். நமசிவாயம் கொழும்புத் தமிழர்களின் முக்கிய தலைவர்களில் ஒருவர். தமிழ் இயக்கங்களில் முக்கிய பங்கேற்றவர் (றைட் 1907: 504). ‘வில்சன் றிச் அன்ட் கோ’ என்னும் கம்பனியில் புரோக்கராக நமசிவாயம் கடமையாற்றினார். சிந்திரியாமுல்ல என்ற தோட்டத்தை (400 ஏக்கர்) நாத்தாண்டியவிலும், கட்டுக்கந்த தோட்டத்தை (750 ஏக்கர்) நீர்கொழும்பிலும், புலுஹாக தோட்டத்தை (350 ஏக்கர்) ஹப்பிட்டிக் கோறவிலும் வைத்திருந்த நமசிவாயம் 1500 ஏக்கர் விஸ்தீரணமுடைய தென்னந் தோட்டங்களின் உடைமையாளராவார் (பெர்குசன் டிரைக்டரி 1880:707-9). இவ்வாறு செல்வந்தராக நமசிவாயம் விளங்கியபடியால் தனது புத்திரிகளுக்கு பெரும் தகுதிகளை அடையப்போகிற கணவர்மாரை தேர்ந்து கொள்ள முடிந்தது. பொன்னம்பல முதலியாரின் மக்களான குமாரசுவாமியும் அருணாசலமும் நமசிவாயத்தின் இரு புத்திரிகளை மணம் முடித்தனர். முதலியார் சண்முகம் தம்பையா நன்னித்தம்பியின் மைத்துனராவர். அவர் கொழும்பு செட்டித் தெருவில் வசித்து வந்தார். அக்காலத்தில் கொழும்பில் வர்த்தகம் செய்தவர்களில் தம்பையா பிரபலமானவர். அவர் ‘லேடி லோங்டன்’ (அக்காலத்தில் கவர்னராக இருந்த லோங்டனின் மனைவியின் பெயர்) என்ற பெயரில் சரக்குக் கப்பல் ஒன்றை வைத்திருந்தார். இக்கப்பல் தென்னிந்தியாவுடனான வர்த்தகத்திற்கு உபயோகிக்கப்பட்டது. உள்ளூர் விவகாரங்களிலும் முனைப்பாக ஈடுபட்ட தம்பையா முனிசிப்பல் கவுன்சிலின் உறுப்பினராகவும் இருந்தார். தம்பையா தோட்டங்களில் முதலீடு செய்திருந்தார். நீர்கொழும்பு டிக்கந்த தோட்டம் (700) ஏக்கர்) அவருக்குச் சொந்தமானது (பெர்குசன் டிரைக் டரி 1880). த. சண்முகம் (1867-1932) இவரது மகன்களில் ஒருவர். நமசிவாயத்தின் மகள் கமலாட்சியை சண்முகம் விவாகம் செய்தார். இன்னொரு மகனான த. முத்துக்குமாரசுவாமி (1873-1927) பொ. இராமநாதனின் மூத்தமகளை விவாகம் செய்தார். இன்னொரு மகன் த. முருகேசர் (1868 -1904) பொ. அருணாசலத்தின் மகளை விவாகம் செய்தார். இவ்வகையில் எல்லோரும் நெருங்கிய உறவினர்களாயினர்.

தமிழ் வர்த்தகர்கள் யாவருள்ளும் மிகவும் முக்கியமான ஒருவர் இ. நன்னித்தம்பி. ‘அக்காலத்தில் மிகப் பெரிய பணக்காரர். செல்வாக்குள்ளவர், கப்பல் சொந்தக்காரர், ஏற்றுமதி வர்த்தகத்தில் குறிப்பாக கோப்பி ஏற்றுமதியில் முன்னணியில் திகழ்ந்தவர்’ என்று வைத்திலிங்கம், நன்னித்தம்பி பற்றிப் புகழ்ந்துரைக்கிறார். நன்னித்தம்பி ‘சண்ட் அன்ட் கோ’ என்ற கம்பனியின் புரோக்கராக இருந்தவர் என்றும், பெரும் செல்வத்தை உடைமை கொண்டிருந்த செல்வாக்குடைய மனிதர் என்றும் வைத்திலிங்கம் கூறுகிறார் (மேலது:105). கோப்பித் தோட்டங்களையும் தென்னந் தோட்டங்களையும் உடைமையாக வைத்திருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் சிலரில் நன்னித்தம்பியும் ஒருவர். இவருக்குப் பெரிய தோட்டங்கள் சொந்தமாக இருந்தன. நன்னித்தம்பியுடன் ஒப்பிடும்பொழுது குமாரசுவாமி பொன்னம்பலம் பணக்காரர் அல்லர். அவரது குடும்பத்தினர் பணவலிமையை விட உத்தியோகச் சிறப்பால் சமூகத்தில் மேல்நிலைக்குச் சென்றவர்கள். நன்னித்தம்பி பணத்தால் வலிமை பெற்றவர். இவர் குமாரசுவாமி பொன்னம்பலம் குடும்பத்தோடு விவாக உறவால் ஐக்கியமானதன் மூலம் பணம், உத்தியோகம் இரண்டும் இணைந்தன. நாம் முன்னர் குறிப்பிட்டது போல் நன்னித்தம்பியின் சகோதரி விசாலாட்சி முதலியார் குமாரசுவாமியை விவாகம் செய்தார். விசாலாட்சியின் மகள் செல்லாச்சி, முதலியார் பொன்னம்பலத்தை விவாகம் செய்தார். செல்லாச்சியின் மகன் இராமநாதன் நன்னித் தம்பியின் மகளை விவாகம் புரிந்தார்.

ஒன்றுக்குள் இன்னொன்று விவாகத்தால் பிணைப்புறுவதான இந்த அகமணக்குழு, யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான குடும்பங்களில் ஒன்றாக முன்னணிக்கு வந்தது. பணம், இராசமரியாதைகள், பட்டங்கள், மிகக் கவனமாகத் தேர்ந்துகொண்ட விவாக பந்தங்கள், விவாகத்தின்போது பெற்றுக் கொண்ட பெருந்தொகைச் சீதனம் என்பன இக்குடும்பத்தை உயர்நிலைக்கு இட்டுச் சென்றன. பொன்னம்பலம் – குமாரசுவாமி குடும்பம் காலனித்துவ சமூகத்தின் போது எழுச்சி பெறுவதற்கு மரபையும், நவீனத்துவத்தையும் நல்ல முறையில் கலவை செய்தனர். இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாவரிலும் முத்துக்குமாரசுவாமி (1833-79) குடும்பத்தின் உயர்ச்சிக்குச் செய்த பங்களிப்பு விதந்து குறிப்பிடப்பட வேண்டியது. முத்துக் குமாரசுவாமி, குமாரசுவாமி முதலியாரின் முதல் மனைவியின் பிள்ளை. முத்துக்குமாரசுவாமியின் சகோதரி பொன்னம்பல முதலியாரை விவாகம் செய்தார்.

முத்துக்குமாரசுவாமி கொழும்பு அக்கடமியில் (றோயல் கல்லூரி) 1842 – 1851 காலத்தில் கல்வி கற்றார். பின்னர் டாக்டர் மக் ஐவர் என்ற பெயருடைய கிரேக்க, லத்தீன் (செவ்வியல்) இலக்கிய புலமையாளரிடம் மாணவராகப் பாடம் கேட்டார். 1851 இல் ஆளுநருக்கு இவரது மைத்துனர் (பொன்னம்பல முதலியார்) விருந்தளித்து கெளரவித்த போது முத்துக்குமாரசுவாமி ஆளுநர் முன் ஆங்கிலத்தில் உரையாற்றினார். இவரின் பேச்சை கேட்டதால் கவரப்பட்ட ஆளுநர் இவரை கொழும்புக் கச்சேரியில் எழுது வினைஞராக நியமனம் செய்தார். பின்னர் முத்துக்குமாரசுவாமி பொலிஸ் நீதவான் பதவிக்கு நியமனம் பெற்றார் (மேலது:109-10). 1862-1865 காலத்தில் முத்துக் குமாரசுவாமி இங்கிலாந்தில் சட்டம் பயின்றார். அத்தோடு அக்காலத்தில் சுற்றுப் பிரயாணம் செய்து பல இடங்களையும் பார்த்தார். அக்காலத்தில் பிரித்தானியாவில் கிறிஸ்தவர் அல்லது யூதர் அல்லாதவர்களை சட்டத் தொழில் செய்வதற்கு அனுமதிப்பதில்லை. அங்கு சட்டத்தொழில் செய்வதற்குப் பெரும் கஷ்டப்பட்டு வாதாடி அவர் இறுதியில் வெற்றி பெற்றார். அவ்வகையில் சட்டத்தொழில் செய்ய அனுமதிக்கப்பட்ட முதலாவது இந்து முத்துக்குமாரசுவாமி ஆவார். விரைவில் முத்துக்குமார சுவாமி லண்டனின் உயர் வகுப்பினர் மத்தியில் பிரபலமானார். வெயின்மன் (1947: 16) குறிப்பிட்டது போல் அவர் ‘கீழைத்தேசத்து இளவரசன்’ (Oriental Prince) என அழைக்கப்பட்டார்.

‘அவர் (முத்துக்குமாரசுவாமி) முதலாவது இந்து பரிஸ்டர் ஆவார். இத்தொழிலில் புகுந்த பின் அவர் லண்டனின் கீழைத்தேய இளவரசனாகப் பிரகாசித்தார். லண்டனில் இளவரசர்கள் அதிகம் பேர் இருக்கவில்லை. அந்தக் குழுவைப் பிரநிதித்துவப்படுத்திய ஒரே ஒரு நபர் இவர் தான். கிழக்குக்கே உரிய ஆடம்பரத்துடனும், பகட்டுடனும் அவர் நடந்து கொண்டார். மொங்டொன் மில்னஸ் என்பவர் அவருடன் கைகோர்த்துக் கொண்டு அவரை லண்டனின் ஆடம்பர இல்லங்களிற்கும் அரங்குகளுக்கும் கூட்டிச் செல்வார். “முத்துக்குமார சுவாமியின் மேம்பட்ட நாகரிகப் பழக்கவழக்கங்கள், எடுப்பான அழகிய தோற்றம், அற்புதமான ஆங்கிலம் என்பன அவருக்கு சென்றவிட மெல்லாம் சிறப்பைத் தந்தன.” இவ்வாறு வெயின்மன் (1947:16) குறிப்பிட்டுள்ளார்.

muthukumarasamy

ஆங்கில மொழிப்புலமையும், அம்மொழியில் கணீரென்ற குரலில் பேசக்கூடிய நாவன்மையும் அக்காலத்தில் போற்றி மதிக்கப்பட்ட குணப் பண்புகள். இப்பண்புகளில் சிறந்து விளங்கிய முத்துக்குமாரசுவாமி வெற்றிப் பாதையில் வீறுநடை போட்டார். முத்துக்குமாரசுவாமியை வரவேற்று விருந்தளித்து மதிப்பளித்தோர்களில் மூன்றாம் நெப்போலியன், கிளாட்ஸ்ரன், பார்மஸ்டன், டிஸ்ரேலி, யோவற் ஆகியோரும் றிச்சார்ட் மொங்டன் மின்னஸ் என்ற பாராளுமன்ற உறுப்பினரும் அடங்குவர். றிச்சார்ட் மொங்டன் மின்னஸ் நகைச்சுவையாகப் பேசும் ஆற்றல் மிக்கவர். லண்டனின் இலக்கியக் கழகங்களிலும், உயர்நிலை சமூக வட்டங்களிலும் ஊடாடும் பிரபலஸ்தராக அவர் விளங்கினார். சேர். சாள்ஸ் மக்கார்த்தி அப்போது இலங்கையில் ஆளுநராக இருந்தார். மொங்டன் மின்னஸ்லிற்கு ‘முத்துக்குமார சுவாமியைச் சந்தியுங்கள்’ என்று மக்கார்த்தி கடிதம் அனுப்பி வைத்தார் (துரைராஜசிங்கம் 1973:11). மெக்லாலே, ஆங்கிலம் கற்ற நவமனிதர்களான ‘இங்கிலிஷ்கார இந்தியர்கள்’ பற்றி ஆரூடம் கூறினார். முத்துக்குமாரசுவாமி அத்தகைய ஒருவராக மிளிர்ந்தார். அவர் அடைந்த பிரபலத்திற்கு ஆங்கிலக் கலாசாரத்தில் ஊறித் திளைத்த அவரது உயர்சிறப்பு காரணமாயிற்று. ‘த இலஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ்’ சஞ்சிகை 25 ஏப்பிரல் 1863 இதழில் முத்துக்குமாரசுவாமியின் படத்தைப் பிரசுரித்தது. தலைப் பாகையும், நீண்ட மேலங்கியும் அணிந்து எடுப்பான தோற்றத்துடன் காட்சி தரும் படம் இது. ‘த டைம்ஸ்’ பத்திரிகை முத்துக்குமாரசுவாமியின் சட்டத்துறை நியாயவாதி தொழிலின் பிரவேசம் பற்றி எழுதும் போது, “இந்துப் பிரபுத்துவ உயர்குலம் அண்மைக் காலத்தில் அடைந்து வரும் முன்னேற்றத்தின் அடையாளம் இது” என்றும் “இந்தியர்கள் இன்னும் சோம்பிக் கிடப்பதற்கு தயாரில்லை. மதிப்புக்குரிய உயர் பதவிகளுக்கும், கௌரவங்களுக்கும் தகுதியுடையவர்களாகத் தம்மை ஆக்கிக் கொள்ள முன்வந்துள்ளார்கள். எமது அரசாங்கமும் நாம் உருவாக்கிய நிறுவனங்களும் கொண்டு வந்த நன்மைகளைப் போற்றுகிறார்கள்” என்றும் குறிப்பிட்டது. சுதேசிகளால் பரீட்சைகளில் சித்தியடையவும், கல்வியில் சமதையாகப் போட்டியிடவும், வெற்றி பெறவும் முடியும் என்பது மட்டுமன்றி ஆங்கில சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படும் சமூக அந்தஸ்தையும் பெற முடியும் என்பதை முத்துக்குமாரசுவாமி நிரூபிக்க முனைந்தார். ‘அத்தீனியன் கிளப்’ என்பது லண்டன் நகரில் மேட்டிமையோர் கூடும் இடம். இதன் உறுப்புரிமையைப் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் என்ற பெருமை முத்துக்குமார சுவாமிக்குரியது. “அழகாக உடையணிந்து, நாகரிகமான பாணியும் நடையும் உடையவராய் சுத்தமான உச்சரிப்போடு கூடிய அருமையான ஆங்கிலம் பேசும் முத்துக்குமாரசுவாமி மீது லண்டன் நகரின் நவ நாகரிகர்களான சிங்க வேட்டைகாரர்களுக்கு அலாதியான பிரியம்” என்று 1860 இல் எழுதப்பட்ட குறிப்பொன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொங்கடன் மில்னஸ்ஸுற்கு ‘Serlby’ என்றொரு கிராமப்புற வீடு இருந்தது. முத்துக்குமாரசுவாமி அங்கு போயிருக்கிறார். அந்தப் பயணம் அவருக்கு நன்றாகப் பிடித்தமானதாயிருந்தது. அவர் வேட்டை நாய்களோடு வேட்டையாடக் கிளம்பினார். நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சோடிகளாக ஆண்களும், பெண்களும் ஆடும் ‘குவார்ட்ரில்’ (Quadrille) எனப்படும் நடனத்தினை ஆடி மகிழ்ந்தார்.

1877 ஆம் ஆண்டு முத்துக்குமாரசுவாமி எலிசபெத் பீபி என்ற ஆங்கிலப் பெண்மணியை விவாகம் செய்தார். அவர் எந்தளவுக்கு ஆங்கிலேயர் வாழ்க்கையில் மூழ்கிப் போனார் என்பதை இது எடுத்துக் காட்டும். முத்துக்குமாரசுவாமி – எலிசபெத் பீபி தம்பதியினரின் மகன் ஆனந்த குமாரசுவாமி பின்னாளில் பிரபல கலை வரலாற்றாசிரியராகவும், அறிஞராகவும் புகழ் பெற்றார். ஆனந்த குமாரசுவாமி 1906 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு ஒன்றில் தன் தந்தையின் மேற்கத்தைய நாகரிக நாட்டத்திற்கான காரணம் யாது எனக் குறிப்பிட்டார்.

“முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் முன்னணியில் திகழ்ந்த தமிழராக என் தந்தை இருந்தார். அவர் அளவுக்கு மீறிய முறையில் மேற்கத்தைய மயமாதலுக்கு உட்பட்டிருந்தார். அக்காலத்தில் மாற்றமுற்ற சூழலுக்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. அத்தோடு மேற்கு நாட்டவர்கள் ஈட்டிய சாதனைகளை எம்மாலும் அடைய முடியும் என்பதை நிரூபிக்கும் தேவையும் இருந்தது (துரைராஜசிங்கம் 1973: முகப்பு பக்கம்).”

‘மேற்கு நாட்டவர்கள் ஈட்டிய சாதனைகளை’ ஈட்டி அவர்களுக்குச் சமதையானவர்கள் ஆகவோ அல்லது அவர்களையும் விட மேம்பட்டவர்களாகவோ ஆக வேண்டும் என்று எண்ணிய முத்துக்குமாரசுவாமி ஒருவகை முரட்டுத் துணிச்சலையும், படாடோபத்தையும் வெளிப்படுத்தி நின்றார். ஈ.எவ்.சி. லுடோவைக் அவரைப் பற்றி எழுதும்போது “சுவாரஸ்யமான ஒருவர், படாடோபம்மிக்க ஆளுமை கொண்டவர்’ என்று குறிப்பிட்டார் (மேலது: அறிமுக உரை). பிரித்தானியாவின் பிரதமராக இருந்த பெஞ்சமின் டிஸ்ரேய்லியும் படாடோபம் மிக்க ஒரு மனிதர். அவர் முத்துக்குமாரசுவாமியின் நாகரிக நடையை நயந்து பாராட்டினார். அவருக்கு பிரபுப் பட்டம் வழங்குவதற்குச் சிபாரிசு செய்தார். 1874 ஆம் ஆண்டு இச் சிபாரிசை வழங்கியபோது டிஸ்ரேய்லி இலங்கையில் உள்ள நிர்வாகத்தினரை இது பற்றிக் கலந்தாலோசிக்கவில்லை. டிஸ்ரேய்லி முடிவுறாத நிலையில் ஒரு நாவலை விட்டுச் சென்றார். இது அவர் இறந்த பின் பிரசுரிக்கப்பட்டது. இந்நாவலில் வரும் ‘குசிநார’ என்ற பாத்திரம் முத்துக் குமாரசுவாமி தான் என்று ராதிகா குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார். கிழக்கத்தைய தத்துவம் பற்றிப் போதிக்கும் குசிநார எப்போதும் பௌதிகவதிதமான அர்த்தமில்லாத விடயங்களை அலட்டிக் கொண்டிருப்பதாக சித்திரிக்கப்பட்டுள்ளது. டிஸ்ரேய்லியின் மனதில் முத்துக்குமாரசுவாமி பற்றி ஆழப்பதிந்திருந்த எதிர்மறை அபிப்பிராயம் இந்நாவலில் குசிநார பாத்திர வர்ணிப்பில் வெளிப்படுவதாகவும் ராதிகா குறிப்பிடுகிறார் (1991:28). இதனைவிட ‘கோமாளி இந்தியன்’ பாத்திரம் நகைப்புக்குரிய ஒரு விடயமாக ஆங்கில இலக்கியத்திலும், ஜனரஞ்சக எழுத்துக்களிலும் குறிப்பிடப்படுவதுண்டு என்பதை இவ்விடத்தில் குறிப்பிடலாம்.

முத்துக்குமாரசுவாமி இலங்கைச் சட்டசபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தனது 44 ஆவது வயதில் 1879 ஆம் ஆண்டு காலமானார். தனது சகோதரியின் (சிற்றன்னையின் மகள்) பிள்ளைகளான இராமநாதன், அருணாசலம் ஆகிய இருவரையும் முழுமையாக தன் செல்வாக்கின் கீழ் உருவாக்கும் பேற்றை பெறாமலேயே அவர் காலமானார். இராமநாதன் கொழும்பு அக்கடமியில் முதலில் கல்வி கற்றார். பின்னர் இராமநாதனும் (1857 -1930) அவரது தமையனும் சென்னை பிரசிடன்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டனர். அப்போது அவருக்கு 13 வயது ஆகியிருந்தது. அக்கல்லூரியில் மேற்கத்தைய செவ்வியல் கல்வி போதிக்கப்பட்டது. இந்தியப் பண்பாடு, விளையாட்டு என்பனவும் பிரசிடன்சிக் கல்லூரியின் படிப்பில் முக்கியம் பெற்றன. ‘இந்தியாவினதும், மேற்கினதும் உயர்வான பண்பாட்டு மரபுகள் எவையோ அவை யாவற்றினதும் ஒன்றிணைந்த’ வகையில் அக்கல்வி அமைந்தது (வைத்திலிங்கம் 1971:84-85). இராமநாதனுக்கும் அவரது காலத்துச் சிங்களப் பிரமுகர்களிற்கும் உள்ள வித்தியாசத்தையும், இராமநாதனின் குண இயல்பின் சாதகமான அம்சத்தையும் இங்கு சுட்டிக் காட்டல் முடியும். அக்காலத்தின் சிங்களப் பிரமுகர்கள் முழுமையான மேற்கத்தைய கலாசாரத்தில் ஊறியவர்களாய், மரபுவழிக் கலாசாரத்தை முற்றாக இழந்தவர்களாயினர். இராமநாதன் மரபுவழிக் கலாசாரத்திலும் ஊறியவராய் இருந்தார். சென்னையில் படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே இராமநாதனின் தந்தை அவரைக் கொழும்புக்குத் திருப்பி அழைத்தார். கொழும்பில் தொழில் புரிந்த ரிச்சார்ட் மோர்கன் என்னும் நியாயவாதியின் கீழ் பயிலுநராக இராமநாதன் வேலை செய்யத் தொடங்கினார். இதற்கு அவரின் மாமனின் (முத்துக்குமாரசுவாமி) செல்வாக்கு காரணமாயிருந்தது. ரிச்சார்ட் மோர்கன் பின்னர் சட்ட அதிபதிநாயகமாகப் (அட்டர்ணி ஜெனரல்) பதவி வகித்தார். அக்காலத்தின் மோர்கன் தலைசிறந்த முற்போக்குவாதியாக (லிபரல்) விளங்கியவர். 1873 ஆம் ஆண்டு இராமநாதன் நியாயவாதியாக (சட்டத்தரணி) பதிவு செய்து தொழில் புரிய ஆரம்பித்தார். அவர் இத்தொழிலில் மிகுந்த திறமை பெற்ற ஒருவராக விளங்கியதோடு 1886 வரை நியாயவாதியாகத் தொழில் புரிந்தார் (: 90-104).

23 வயதாக இருக்கும்போது இராமநாதன் ‘பண்பட்ட கனவான்’ ஆகவும் முற்போக்கு மனப்பான்மை கொண்டவராகவும் விளங்கினார். அரசாங்க உத்தியோகத்தர்களுடன் உறவை வளர்த்துக் கொண்டதால் ஆரம்ப முதலே உயர்நிலை எய்திய ஒரு குடும்பத்தில் அவர் பிறந்தார். மரபுச் சமூகத்தினதும், ஆங்கில அரசினதும் பட்டங்கள், பதவிகள் இக்குடும்பத்திற்குக் கிடைத்தன. வெளிநாட்டுக் கல்வியாலும் இக்குடும்பம் தன் சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொண்டது. இராமநாதனுக்கு ஒரே ஒரு குறைதான் இருந்தது. அவரது குடும்பம் பொருளாதார ரீதியில் ஸ்திரமானதாக இருக்கவில்லை. தந்தையார் பொன்னம்பலம் வியாபாரத்தில் நட்டமடைந்து பணமுடைவால் கஷ்டப்பட்டார். இராமநாதனின் விவாகம் மூலம் இந்தக் கஷ்டத்தில் இருந்து குடும்பம் மீள முடிந்தது. நன்னித்தம்பியின் இரண்டாவது மகள் செல்லாச்சியம்மாளை 1874 ஆம் ஆண்டு இராமநாதன் விவாகம் செய்தார். இராமநாதனின் மாமனார் முத்துக்குமாரசுவாமி வகித்த சட்டசபை உறுப்பினர் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார். 1879 – 1892 வரை அவர் சட்டசபை உறுப்பினராக இருந்தார். காலனித்துவ ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். பல விடயங்களைச் சுட்டிக்காட்டினார். பௌத்தர்களின் சார்பாகப் பேசினார். 1893 இல் அவர் சொலிசிற்றர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 1905 இல் இப்பதவியில் இருந்து இளைப்பாறினார். 1911 இல் மீண்டும் அரசியலில் (சட்டசபை உறுப்பினர்) புகுந்த இவர் 1930 ஆம் ஆண்டு இறக்கும் வரை அரசியலில் ஈடுபட்டார்.

ramanathan

இளைஞரான இராமநாதன் முற்போக்காளராக இருந்தார். ஆனால் அவரின் வயது ஏறஏற அவர் பழமைவாதியாக மாறினார். 20 ஆம் நூற்றாண்டின் ஜனநாயகப் போக்குகளுடன் இவர் இணங்கிப் போகாமல் விலகி நின்றார். இவரது இளைய சகோதரர் பொ. அருணாசலமும் இளமையில் முற்போக்காளராகவே இருந்தார். ஆனால் வயதில் முதியவர் ஆகும் போது தீவிரவாதியாக மாறினார். அருணாசலம் 1853 இல் பிறந்தார். கொழும்பு அக்கடமியில் கல்வி கற்றார். 1886 இல் மிகச் சிறந்த மாணவனிற்கான ரேணர் பரிசு இவருக்குக் கிடைத்தது. 1870 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் கல்லூரிக்கு புலமைபரிசில் பெற்றுக் கல்வி கற்கச் சென்றார். அங்கு செவ்வியலையும், கணிதத்தையும் பாடங்களாகக் கற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இவருக்குப் படிப்பித்த ஆசிரியர்கள், இவருடன் கற்ற மாணவர்கள் ஆகியோரைக் கொண்ட நண்பர்கள் பெரு வட்டம் ஒன்றில் உலவும் பேறு இவருக்கு கிடைத்தது.

“எனது கணித ஆசிரியர் சேர் யோன் சீலி, மௌல்டன் பிரபு, பேராசிரியர் Fawcett, ஹர்கோட் போன்ற பெரியோர்களின் செல்வாக்கும் ஆளுகையும் என் மீது ஏற்படும் பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. இவர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். கேம்பிரிட்ஜை அலங்கரித்த இளைஞர் குழாம் ஒன்று இருந்தது. பல்போர், லைட்டிரொன், டெனிசன் என்ற குடும்பங்களைச் சேர்ந்தோர், சட்ட அறிஞர் மெயிற்லன்ட், இசையமைப்பாளர் ஸ்ரான் போர்ட், கவிஞர் எட்டவார்ட் காப்பென்டர், இலங்கையின் பிரதம நீதியரசர்களாய் இருந்த இருவர்… இன்னும் பலர் என் நண்பர்களாக இருந்தனர். அவர்கள் எனக்கு ஆதர்சமாக விளங்கினர்.” (வைத்திலிங்கம் 1977:485)

arunachalam

அருணாசலம் தனது கேம்பிரிட்ஜ் வாழ்க்கை பற்றிய நினைவுகளைப் பற்றி மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார். அருணாசலம் சுதந்திர வேட்கை மிகுந்த உள்ளம் படைத்தவர். ஒரு தடவை கேம்பிரிஜ்ஜில் யோக் ஆண்டகை (Archbishop of York) சமய உரையாற்றும் போது இந்தியச் சமயங்கள் பற்றி அவமதிக்கும் வார்த்தைகளைக் கூறிவிட்டார். மாணவராக இருந்த அருணாசலம் ‘ஸ்பெக்டேட்டர்’ 1874 சஞ்சிகையில் இவ்வுரைக்கு ஆட்சேபம் தெரிவித்துக் கடிதம் எழுதினார். 1875 இல் சட்டப் பரீட்சையில் தேறியதோடு, அவ்வாண்டு நடந்த சிவில் சேவைப் பரீட்சையிலும் சித்தியெய்தித் தெரிவானார். சிவில் சேவை நுழைவுப் பரீட்சையில் சித்தியெய்திய முதலாவது இலங்கையர் என்ற பெருமையையும் பெற்றார். 1875 இல் இலங்கைக்குத் திரும்பிய அவர் சிவில் சேவை உத்தியோகத்தராக 1913 வரை பணியாற்றி இளைப்பாறினார். இலங்கையின் பல பாகங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றினார். பொலிஸ் நீதவான், மாவட்ட நீதிபதி ஆகிய பதவிகளை வகித்தார். அப்பதவிகளை வகித்தவேளை பிரசித்தி பெற்ற தீர்ப்புக்களை வழங்கினார். பதிவாளர் நாயகம் பதவியில் பின்னர் பணியாற்றிய போது பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பல சட்டங்கள் இயற்றப்படுவதற்கு காரணமாக இருந்தார். அவரிடம் திறமை இருந்தது எனினும் இதனை மதித்து அவருக்கு சிவில் சேவையில் உயர் பதவிகளை வழங்க அரசாங்கம் முன்வரவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட ‘சேர்’ பட்டமும் காலந்தாழ்த்தி, அவர் ஓய்வு பெற்றிருந்த காலத்தில் வழங்கப்பட்டது. 1901 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பு வேலை இவரது மேற்பார்வையில் நடத்தப்பட்டது. அந்த அறிக்கையையும் இவரே எழுதினார். ‘இலங்கையின் சிவில் சட்டத் தொகுப்பு’ என்ற நூலை தொகுக்கும் பெரும்பணியை ஆரம்பித்தார். இத்தொகுப்பு இலங்கையில் செல்லுபடியாகும் ரோமன் டச்சுச் சட்டம் என்ற பெரும் பரப்புடைய விடயம் பற்றிய தேடல் முயற்சியாகும். இது முன்னோடியான பெரும்பணி (ரட்ணம் 1953:7). அருணாசலம் சட்ட நிர்வாக சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் சட்டசபையில் உறுப்பினராக பங்குபற்றினார். 1912 இல் சம்பளத் திட்டம் பற்றிய அரசாங்கக் கொள்கைக்கு எதிராக வாக்களித்தார். பதவி வழி உறுப்பினர்கள் செய்யத் துணியாத கருமம் ஒன்றைச் செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அரசாங்க சேவையில் இருந்த காலத்தில் அரசியல் நடவடிக்கைகள் எதிலும் பங்குபற்ற முடியாத கட்டுப்பாடு இருந்தது. எனினும் அருணாசலம் பிரித்தானியாவின் லிபரல்களான வில்லியம் டிக்பி போன்றோரைச் சந்தித்துப் பேசினார். இலங்கைக்குக்குச் சுயாட்சி வழங்குதல் உட்பட்ட பல விடயங்கள் குறித்து கடிதத் தொடர்புகளையும் மேற்கொண்டார். சோஷலிஸ்டுகளோடும் தொடர்பு கொண்டார் (அவரது நண்பர் எட்வார்ட் காப் பெண்டர் ஒரு சோஷலிஸ்ட்).

இலங்கையில் வழிகாட்டக் கூடிய நல்ல அரசியல் தலைவர்கள் இல்லையே என்று அருணாசலம் கவலை கொண்டார். அரசியல் சீர்திருத்தத்தின் தேவை குறித்து பெயர் குறிப்பிடாமல் பத்திரிகைகளில் எழுதினார் (மேலது: 9-10). தமது 60 ஆவது வயதில் அரசாங்க சேவையில இருந்து ஓய்வு பெற்றபின் பல சீர்திருத்த இயங்கங்களை முன்னின்று நடத்தினார். 1913 முதல் அவர் மரணம் எய்திய 1924 ஆம் ஆண்டு வரையுள்ள காலம் வரை கிளர்ச்சி நடவடிக்கையாளராகவும் தீவிரவாதியாகவும் அவர் காணப்பட்டார். அவர் மூன்று விடயங்களில் ஆர்வத்துடன் செயற்பட்டார். முதலாவது சமூகச் சீர்திருத்தம். பேபியன் சீர்திருத்தங்களிலும் (Fabian Reforms) சமூக சேவைத் திட்டங்களிலும் அவருக்கு அனுபவமும் அறிவும் இருந்தது. தரும நிறுவனங்கள், முனிசிப்பல் சபைகள் என்பன பிரித்தானியாவில் செய்து வரும் பணிகள் பற்றி அவர் தெரிந்து வைத்திருந்தார். 1915 ஆம் ஆண்டில் ‘இலங்கைச் சமூக சேவை முன்னணி’ என்ற அமைப்பை நிறுவினார். அந்த அமைப்பு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிலை, நகரங்களின் சேரிகளின் நிலை, பொதுக்கல்வி ஆகிய விடயங்கள் குறித்து அக்கறை கொண்டு உழைத்தது. ‘இலங்கைத் தொழிலாளர் முன்னணி’ என்ற அமைப்பை 1915 இலும் ‘இலங்கைத் தொழிலாளர் சம்மேளனம்’ என்ற அமைப்பை 1920 இலும் அவர் நிறுவினார். கொழும்பு நகரத்தின் தொழிலாளர் வாழ்க்கை நிலை பற்றியும், அவர்களின் கூலி பற்றியும் இந்த அமைப்புகள் அக்கறை கொண்டிருந்தன (ஜயவர்த்தன 1972). அரசியல் துறையில் அவர் செய்த பங்களிப்புகள் வரலாற்றில் அழியாத இடம் பெறுவன. இலங்கைக்குச் சுயாட்சி வேண்டும் என்று அவர் கோரினார். முக்கிய சட்டச் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் எனப் பாடுபட்டார். ‘எமது அரசியல் தேவைகள்’ என்ற தலைப்பில் 1917 ஆம் ஆண்டு இலங்கைத் தேசியக் கழகத்தில் பிரதான உரையொன்றை நிகழ்த்தினார். 1919 இல் இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்ட போது அதன் முதலாவது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். காலனிய ஆட்சியாளர்களின் கொள்கைகளை விமர்சிப்பதிலும் கண்டிப்பதிலும் தமிழ் பூஷ்வா வர்க்கத் தலைவர்கள் பின்னிற்கவில்லை.

அவர்கள் பெரும்பாலும் லிபரல், முற்போக்கு நிலைப்பாட்டை எடுத்தனர். தமிழர்களின் சட்டசபைப் பிரதிநிதிகள் தமது கண்டனங்களை ஒளிவுமறைவு இன்றி வெளிப்படுத்தினர். நில உடைமையாளர்களான முதலியார்கள், வர்த்தகர்கள், குத்தகை முதலாளிகள் ஆகியோரின் பிரதிநிதிகளாகவிருந்த சிங்கள பூஷ்வாக்களின் தலைவர்கள் தமிழ்த் தலைவர்களுக்கு மாறாக பழைமைவாதக் கொள்கைகளை ஆதரித்தனர். தமிழ் பூஷ்வாக்களில் பெரிய நில உடைமையாளர்கள் குறைவு. அவர்கள் சிங்கள பூஷ்வாக்களை விட செல்வத்திலும் பணபலத்திலும் குறைந்த தரத்தில் இருந்தனர். இருந்த போதும் உள்நாட்டிலும் வெளியிலும் அவர்களின் சமூக அந்தஸ்தும் செல்வாக்கும் உயர்வாக இருந்தது. சட்டசபையில் உறுப்பினர்களாய் இருந்தமையால் உள்ளூரில் அவர்கள் செல்வாக்கு உயர்ந்தது. அவர்கள் பிரித்தானியாவின் உயர் சமூகத்துடனும், அந்நாட்டின் லிபரல் அரசியல்வாதிகளுடனும் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். பிரபுப் பட்டம் பெற்ற முதலாவது இலங்கையர் சேர். முத்துக்குமாரசுவாமி ஆவர். இலங்கைச் சட்ட சபைக்கு நியமிக்கப்பட்ட (1862 இல்) முதலாவது லிபரல் முற்போக்காளரும் அவரேயாவர். சிங்களவரும் புதுப் பணக்காரருமான ஒருவர் 1912 ஆம் ஆண்டில் பிரபுப் பட்டம் பெற்றார். பிரபுப் பட்டம் பெற்ற இரண்டாமவர் 50 ஆண்டுகளின் பின்னரே தோன்ற முடிந்தது.

தமிழ் பூஷ்வாத் தலைவர்கள் அரசியலில் லிபரல் முற்போக்காளர்களாய் இருந்தனர். சிங்கள பூஷ்வாக்கள் அரசியலில் பழமைவாதிகளாக இருந்தனர். இது மிக முக்கியமான வேறுபாடு. இதற்குக் காரணம் இருந்தது. சிங்கள முதலாளிகள் நில உடைமையைக் குறியாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருந்தோட்டங்களில் முதலீடு செய்தனர். ஆகவே, காலனித்துவ ஆட்சியாளர்கள் வழங்கக்கூடிய பாதுகாப்பில்தான் அவர்களது பொருளாதார நலன்கள் தங்கியிருந்தன. இவர்கள் இருசாராரையும் வேறுபடுத்திய முக்கிய அம்சம் பொருளாதார நலன்களாகும். தமிழ் பூஷ்வாக்களில் நகரம்சார் உயர் தொழில்களில் ஈடுபட்டவர்களும், புரோக்கர்களும் லிபரல்களாகவும் முற்போக்காளர்களாகவும் இருந்தனர். 1862 முதல் 1897 வரையான காலத்தில் தமிழர்களின் சட்டசபைப் பிரதிநிதிகளாக இருந்தோர் நியாயவாதிகளாக இருந்தனர். நியாயவாதித் தொழில் சுதந்திரமான மனப்போக்கை உருவாக்கக்கூடியது. அவர்களின் செல்வமும் சொத்துக்களும் பணக்கார வர்த்தக குடும்பங்களில் விவாகம் செய்ததனால் தேடியனவாக இருந்தன என்பது உண்மையே. ஆனாலும் பொருளாதார நலன்களுக்காக அடிபணிந்து போகும் ஒரு கட்டாயம் தமிழ்த் தலைவர்களுக்கு இருக்கவில்லை.

குமாரசுவாமி – பொன்னம்பலம் குடும்பத்தினர் கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களாய் இருந்தனர் என்பதைக் குறிப்பிடுதல் மிகவும் பொருத்தமுடையது. கிறிஸ்தவ எதிர்ப்பில் அவர்கள் தீவிரம் காட்டினர். இக்குடும்பத்தின் உறுப்பினர்கள் இந்து மதத்தின் நன்மைக்கான விடயங்களுக்கு ஆதரவு கொடுத்தனர். இந்துப் பண்பாட்டையும், அறிவு, கல்வி விருத்தி என்பனவற்றையும் ஊக்குவித்தனர். அரசாங்கத்தின் சமயக் கொள்கைகளைக் கண்டித்தனர். கிறிஸ்தவர் அல்லாதவர்களின் நலன்களிற்காக வாதாடினர். கல்வித்துறையில் மிஷனரிகளின் ஆதிக்கத்தைத் தீவிரமாக எதிர்த்தனர். சட்டசபையில் கரை நாட்டுச் சிங்களவர்களின் பிரதிநிதிகளாக இருந்தோர் கிறிஸ்தவர்களாய் இருந்தமையினால் பௌத்தர்களின் பிரச்சினைகள் சட்டசபையில் கிளப்பப்பட்டபோது அவை பற்றி தமிழ் இந்துக்களான பிரதிநிதிகளே பௌத்தர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேச வேண்டி ஏற்பட்டது. இக்குடும்பத்தினர் வர்த்தக மூலதனத்துடன் பிணைப்பை கொண்டிருந்தனர். அதன் மூலம் கல்வியில் அவர்களால் உயர முடிந்தது. கல்வி உயர்ச்சி சமூக அந்தஸ்தையும், அரசியல் செல்வாக்கையும் அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தது. இவர்களின் சமூக பொருளாதார பின்புலத்தை நோக்கும் பொழுது ‘தேசிய முதலாளித்துவம்’ என்ற வகைப்பாடு இவர்களுக்குப் பொருந்தாது. வர்த்தகமும் நிலச் சொத்துக்களின் உடைமையுமே இவர்களின் பொருளாதாரப் பின்புலம். இவர்களால் கைத்தொழில் முயற்சிகளை ஆரம்பித்து அத்துறையில் முன்னேற முடியவில்லை. படித்த ஆய்வறிவாளர்களாய் விளங்கினர் எனினும், இந்தத் தமிழ் லிபரல் முற்போக்குவாதிகள் தீவிர தேசியவாதிகளாகப் பரிணமிக்கவில்லை. அந்நியர் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுக்கவோ, அடிப்படையான சமூக மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக பாடுபடவோ இவர்கள் முன்வரவில்லை. மதச்சார்பின்மை என்பதையும் இவர்கள் ஒரு கொள்கையாகக் கொண்டிருக்கவில்லை. சாதி பேதம் நீங்கிய சமத்துவம், பெண்களுக்குச் சமத்துவம் என்பன அவர்களின் கொள்கைகளாக இருக்கவில்லை. அரசியலில் ஏற்பட்ட தேக்கநிலையை விமர்சித்தல், கண்டித்தல், பிரித்தானியரின் ஆளுகைக்கு உட்பட்டதான நிலையில் அரசியல் சீர்திருத்தங்களைக் கோருதல், சமூக மட்டத்தில் மரபு வழிப்பட்ட வழமைகள், மரபுகளைப் பேணுதல் என்பன இவர்களது கொள்கைகளாக இருந்தன.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

8216 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.