Arts
24 நிமிட வாசிப்பு

மலையக மக்களின் போராட்ட வரலாறு – பகுதி 2

March 13, 2024 | Ezhuna
மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அதற்கேற்ப, விம்பம் அமைப்பு எழுநாவின் அனுசரணையுடன் கட்டுரைப் போட்டியொன்றை நடத்தியது. இப் போட்டியில் வெற்றி பெற்ற வெவ்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் 'மலையகம் 200' எனும் தலைப்பில் தொடராக எழுநாவில் வெளியாகின்றன.

இனவாதமும் தொழிலாளர் போராட்டங்களும் 

மலையக மக்களை பேரினவாத அடிப்படையில் நோக்குதலும் அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலும் ஆரம்ப காலத்திலிருந்தே இனவாத தலைவர்களாலும் அரசாங்கங்களினாலும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமையைக் காணலாம். 1948 இல் மலையக மக்களது குடியுரிமையைப் பறித்ததும் இனவாதத்தின் அடிப்படையிலே ஆகும். இதை விட 1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் நாடு முழுவதும் இடம்பெற்ற இனக்கலவரங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதை விட இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது. பாதுகாப்பற்ற சூழல் தொடர்ந்து நிலவி வருகின்றது.

up country

மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்த டி.எஸ். சேனநாயக்க அரசாங்கம் 1945 ஆம் ஆண்டுக் காலப்பகுதில் முன்னெடுத்த ‘தொழிலாளர்களை தோட்டங்களிலிருந்து விரட்டியடித்தல்’ என்ற நடவடிக்கைகளுக்கு சிறந்த உதாரணங்களாக நேஸ்மியர் மற்றும் உருளவள்ளி தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட இனவாதக் குடியேற்ற நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம். தான் உருவாக்கிய தோட்டங்களில் தொடர்ந்து வாழ்வதற்கு மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டியவர்களாக  இருந்துள்ளனர். 1942 ஆம் ஆண்டில் கந்தப்பளை பகுதியில் இடம் பெற்ற காணிப் பறிமுதல், தொழிலாளர்களை தோட்டங்களில் இருந்து வெளியேற்றியமை போன்ற நடவடிக்கைளும் இனவாத அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டன.

களனிவெளி பகுதியிலுள்ள நேஸ்மியர் தோட்டம் புளத்கோபிட்டிய நகரத்திற்கு அண்மையில் காணப்படுகின்றது. இந்தத் தோட்டம் 820 ஏக்கர் பரப்பினைக் கொண்டதாகவும்  தேயிலை மற்றும் இறப்பர் பயிரிடப்படும் பிரதேசமாகவும் காணப்பட்டது. 1900 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இந்தக் காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. 1942 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி  515 பேர் இங்கு வாழ்ந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

1945 ஆம் ஆண்டு இவர்களை உடனடியாக தோட்டத்தை விட்டு வெளியேறும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொழிலாளர்கள் வாழ்ந்த இடங்களைச் சுற்றி முள்ளுக்கம்பி வேலியும் அமைக்கப்பட்டது. எனினும் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் வழிகாட்டலில் மூன்று வாரங்களுக்கு மேலான வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. களனிவெளி, கேகாலை, அவிசாவளை, யட்டியாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் இவ்வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு நல்கினர். அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா, ஹட்டன், நுவரெலியா பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஆதரவுப் போராட்டத்தை முன்னெடுத்தனர். நாற்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் தோட்டத்திலிருந்து வெளியேற்ற முற்படும் விரோதச் செயலுக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் தொழிலாளர்கள் முன்னெடுத்தனர். அவர்களுக்கு எதிராக 110 வழக்குகள் தொடுக்கப்பட்டன. 14 வழக்குகள் பெண் தொழிலாளர்களுக்கு எதிரானதாக இருந்தன. தொழிலாளியான எஸ். செல்வநாயகத்திற்கு இரண்டு மாதக் கடூழியச் சிறைத் தண்டனையும் ஏனையோருக்கு இரண்டு முதல் மூன்ற வார கடூழியச் சிறையும் வழங்கப்பட்டன. மலையக மக்களின் போராட்ட வரலாற்றில் முதன் முதலாகச் சிறை சென்ற தொழிலாளி எஸ். செல்வநாயகம் என பத்திரிகைகள் எழுதின. தொடர்ச்சியான போராட்டம் காரணமாகவும் பிரிவுக் கவுன்சிலுக்கு மேன் முறையீடு செய்யப்பட்டதன் அடிப்படையிலும் இப் போராட்டம் வெற்றி கொள்ளப்பட்டது. தொழிலாளர்களின் உறுதியும் ஒற்றுமையுமே இப் போராட்டம் வெல்வதற்குக் காரணமாகியது. 

1946 ஆம் ஆண்டு புளத்கோபிட்டிய நகரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் உருளவள்ளி தோட்டத்தில் இன்னுமொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை – இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தோட்டத்தில் வாழ்ந்து வந்த தொழிலாளர்கள் தமது தேவைக்காக மரக்கறித் தோட்டத்தை அமைத்து நீண்ட காலமாகப் பயிர் செய்து வந்த நிலையில், அந்தப் பகுதியில் இனவாதக் குடியேற்றத்தை மேற்கொள்ளும் பொருட்டு தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. தொழிலாளர்கள், வெளியேற மறுத்ததன் காரணமாக கைது செய்யப்பட்டனர். இதன் விளைவாக பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உருளவள்ளி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக எட்டியாந்தோட்டை மற்றும் கேகாலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் பேருக்கு மேற்பட்டவர்கள் சுமார் இருபது நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி நான்கு அம்சக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க பிரதமராகி தனிச்சிங்கள மசோதவைக் கொண்டு வந்ததோடு வாகனங்களில் ஸ்ரீ எனும் எழுத்தை பயன்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தார். தமிழ் தலைவர்கள் இதனை எதிர்த்தனர். இதன் காரணமாக நாட்டில் இனவாதத் தாக்குதல்கள் தொடங்கின. ஏறத்தாழ நூற்றி ஐம்பது பேர் கொல்லப்பட்டனர். மலையகத்திலும் தாக்குதல்கள் இடம்பெற்றன. பொகவந்தலாவை நகரில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக பிரான்சிஸ் மற்றும் ஐயாவு ஆகியோர் மரணித்தனர். 

1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் முழுமையான ஆதரவுடன்  புஸ்ஸெல்லாவ டெல்டா பகுதியில் தாக்குதல்கள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல இடங்களில் இத்தகைய வன்முறைகள் இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்டன. 

1977 ஆம் ஆண்டு மே மாதம், பத்தனை டெவன் தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டம் நில உரிமைக்காகவும், தோட்டங்களைப் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்ட பெரும் போராட்டமாகும். இப்பகுதியில் காணப்பட்ட ஏழாயிரம் ஏக்கர் தேயிலைக் காணியை இனவாத அடிப்படையில் பிரித்துக் கொடுக்க எடுக்கப்பட்ட முயற்சி போராட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப் போராட்டத்தில் இருபத்து இரண்டு வயது நிரம்பிய இளம் போராளி சிவனு இலட்சுமணன் தியாகி ஆனார். இனவாத நிலப்பறிப்பு முயற்சி ஒன்றிணைந்த போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அதே இடத்தில் இன்று தனியார் குடியேற்றங்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நபர்கள் தங்குவதற்கான உல்லாச விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளமையைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.  1997 ஆம் ஆண்டு இரத்தினபுரி வேவல்வத்த தோட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல், லயன்களுக்கு தீ வைத்தமை, 2007 ஆம் ஆண்டு இரத்தினபுரி பம்பேகம தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு விரட்டப்பட்டமை, 2000 ஆம் ஆண்டு பிந்துனுவெவ படுகொலைகளுக்கு எதிராக தலவாக்கலை நகரில் இடம்பெற்ற கூட்டத்தின் போது காராளன், மணிவண்ணன் உள்ளிட்ட நான்கு தொழிலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையும் இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே ஆகும். இவை சில உதாரணங்கள் மட்டுமே ஆகும். பேரினவாத அரசாங்கம் அதற்கு ஆதரவான பொலிஸ் மற்றும் இராணுவ அமைப்புகள் திட்டமிட்ட வகையில் இத்தகைய மக்கள் விரோதச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக  ஈடுபட்ட போதிலும் தொழிலாளர்களின் மன உறுதியும் போராட்ட குணாம்சமும் அனைத்ததையும் எதிர்கொண்டன என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும்.

கூலி அல்லது சம்பள உயர்விற்கான போராட்டங்கள்

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தமக்கான உரிமைகள், சலுகைகள், அனைத்தையுமே போராட்டங்கள் மூலமே பெற்றுக் கொண்டனர் என்பதே வரலாற்று உண்மையாகும். அவற்றுள் முக்கியமானது சம்பள உயர்விற்கான போராட்டமாகும். பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், அவர்கள் 1000 ரூபாவை அடிப்படை நாளாந்தச் சம்பளமாகப் பெற முடியாதவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு முதல் இடம்பெறுகின்ற சம்பள உயர்வுப் போராட்டங்கள் சிறந்த விளைவுகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. மக்கள் விரோதத் தொழிற்சங்கங்களே இதற்குப் பிரதான காரணமாக அமைகின்றன. இதனை விளங்கிக்கொண்டு மாற்று வழிகளைத் தேடுவதும் மக்கள் சார்பான தொழிற்சங்கச் செயற்பாடுகள் மற்றும்  அரசியலை முன்னெடுப்பதுமே சரியான வழியாகும். 

முல்லோயா போராட்டம்   

முல்லோயா தோட்டம் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தோட்டம் மலையக மக்களின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக முன்னெடுத்த வேலை நிறுத்தமும் கோவிந்தன் எனும் தொழிலாளி தியாகி ஆகியமையுமாகும். முல்லோயா வேலைநிறுத்தப் போராட்டம் மலையகத் தொழிற்சங்க வரலாற்றின் முக்கிய சாதனையாக அமைகின்றது. மலையகத்தில் தொழிற்சங்கங்கள் வேரூன்றி வளர்வதற்கும் தொழிலாளர்கள் பலம் பெறுவதற்கும் இப்போராட்டம் அடிப்படையாக அமைந்தது.

mulloya

அக்காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கூலி ஆண்களுக்கு ஐம்பத்து நான்கு சதமாகவும், பெண்களுக்கு நாற்பத்து மூன்று சதமாகவும், பிள்ளைகளுக்கு முற்பத்து இரண்டு சதமாகவும் காணப்பட்டது. அது வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்குப் போதுமானதாக அமையவில்லை. இதனை முன்வைத்து முல்லோயா பகுதியிலிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமக்கான கூலியை பதினாறு சதத்தால் உயர்த்துமாறு கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த தோட்டத்தில் வாத்தியராக இருந்த திரு. ஜெகநாதன் என்பவர் தொழிலாளர்களுடன் இணைந்து செயற்பட்டமையை அறிய முடிகின்றது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் தொழிலாளர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவதிலும் இவரது பங்கு அதிகமாவே இருந்திருப்பதைக் காணமுடியும். இவ் ஆசிரியர் அக்காலத்தில் உத்வேகத்துடன் இயங்கிய  லங்கா சம சமாஜக் கட்சியின் உறுதியான செயற்பாட்டாளராக இருந்துள்ளமையே இதற்கான பிரதான காரணமாகும்.

முல்லோயா தோட்டத்தின் சொந்தக்காரனாகவிருந்த வெள்ளைக்காரன் டபிள்யூ.ஈ. ஸ்பார்லிங் குறித்த ஆசிரியர் மீது கடுமையான கோபம் கொண்டதோடு அவர் தங்கியிருந்த லயன் அறையிலிருந்தும் தோட்டத்திலிருந்தும் வெளிறுமாறு கட்டளையிட்டான். தொழிலாளர்கள் இதற்கும் எதிர்ப்புக் காட்டினர். வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக தோட்ட நிருவாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதென தொழிற்சங்கத் தலைவர்கள் தீர்மானித்ததன் அடிப்படையில் முக்கிய தொழிற்சங்கத் தலைவராகவிருந்த திருவாளர் பி.எம். வேலுசாமி முல்லோயா தோட்டத்துக்குச் சென்றார். நிருவாகம் பேச்சு வார்த்தைக்கு இணக்கம் தெரிவிக்காததோடு தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வழங்கவும் மறுத்தது. தொழிலாளர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. மேலும் தொழிலாளர்கள் ஒன்று கூடுவது, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றனவற்றை வெள்ளைக்கார துரையும் அவனுக்குக் கீழிருந்த நிருவாகமும் அங்கீகரிக்கவில்லை. தொழிலாளர்களோ தமது கோரிக்கையில் உறுதியாகவிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

போராட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தது தொழிற்சங்கமே என்பதை அறிந்துகொண்ட வெள்ளைக்கார துரையும் அவனுக்குக் கீழிருந்த நிருவாகமும் அவர்களுக்கு எதிராகச் செயற்பட்டமை, வேலை நிறுத்தம் செய்யக்கூறி தொழிலாளர்களைத் தூண்டியமை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து கண்டி பொலிசார் மூலமாகத் தொழிற்சங்கத் தலைவர் திரு.பி.எம். வேலுச்சாமியைக் கைது செய்தனர். மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாமென தோட்டத் தொழிலாளர்களை எச்சரித்தனர். இவ்விரு சம்பவங்களும் தொழிலாளர்களின் உணர்வை மேலிடச் செய்தது.  

லங்கா சமசமாஜக் கட்சி, தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருந்து, தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தத்தை ஊக்குவித்தது. இதன் காரணமாக அக்காலத்தில் அரச சபை உறுப்பினராகவிருந்த அபே குணசேகர என்பவர் சமசமாஜக் கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும் தொழிலாளிகளின் போராட்டத்தக்கு எதிரான கருத்துகளையும் முன்வைத்தார். இவர் வேலை நிறுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் தொழிலாளர்களை அடக்கவும் பொலிசாருக்கு ஆதரவாகச் செயற்பட்டமையை அறிய முடிகின்றது.

நாளுக்கு நாள் வேலை நிறுத்தம் உத்வேகமடைந்தது. நிலமைகள் மோசமடைவதைக் கண்ட தோட்ட நிருவாகம் தொழிலாளர்களை அடக்க நினைத்தது. பல்வேறு அடாவடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தொழிலாளர்களைப் பிரிப்பதற்கு தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தொழிலாளர்களின் உறுதி, வேலை நிறுத்தச் செயற்பாடுகள் ஒரு புறமாகவும், மறுபுறம் நிருவாகத்தின் கெடுபிடிகள் காரணமாகவும் முல்லோயா தோட்டத்தில்  அமைதியின்மை தோன்றியிருந்தது.

அக்கால அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொழிலாளர்களுக்கு எதிராக இருந்தமை, வெள்ளைக்கார துரைமார்களின் அடக்கியாளும் மனநிலை, தொழிலாளர் விரோதப் போக்கு, பொலிசாரின் நடவடிக்கைகள் போன்றன நிலமைகளை மேலும் மோசமாக்கின. தொழிலாளர்களைப் பிரிப்பதற்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தை அடக்கவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. தொழிலாளர்கள் உறுதியுடன் இருந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். தோல்வி கண்ட தோட்ட நிருவாகமும் பொலிசாரும் அமைதியை ஏற்படுத்துதல், பிரச்சினையைக் கட்டுப்படுத்தல் என்ற போர்வையில் தொழிலாளர்கள் மீதான வன்முறையை ஏவி விட்டனர். தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர்.

தொழிற்சாலையிலிருந்து கையில் பெரிய கம்பு ஒன்றுடன் வந்துகொண்டிருந்த முல்லோயா தோட்டத் தொழிலாளி கோவிந்தன் மீது டி.ஜி. சுரவீர என்ற பொலிஸ்காரன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டான். இதனால் படுகாயமடைந்த அந்தத் தொழிலாளி மரணமடைந்தான். அவனது செங்குருதி, அவன் உருவாக்கிய தோட்ட மண்ணில் கரைந்தது. கோவிந்தன் வீரத் தியாகி ஆகினான். 

கண்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ரொபினின் பணிப்புரைக்கு அமையவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனக் கூறப்பட்டது. எனினும் தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட கொலையாகவே இதனை அடையாளப்படுத்த முடியும்.

இந்தப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் பொருட்டு பொலிசும் தோட்ட நிருவாகமும் பயன்படுத்திய இன்னொரு உபாயம் இன ரீதியான பிரிவை தொழிலாளர்களிடையே ஏற்படுத்த முனைந்தமையாகும். இதற்கென பபுன் என்ற பெயருடைய பொலிஸ் உத்தியோகத்தர் பயன்படுத்தப்பட்டமையையும் பதிவுகள் மூலம் அறிய முடிகின்றது. எவ்வாறாயினும் இன அடிப்படையில் தொழிலாளர்களைப் பிரிப்பதற்கு எடுத்த முயற்சி இறுதியில் தோல்வியடைந்தது.

தியாகி முல்லோயா கோவிந்தன் சுட்டுக் கொல்லப்பட்டதை நேரில் கண்ட பெரியசாமி என்ற தொழிலாளி பாதையில் வேகமாக ஓடியபோது அவர் மீது பொலிஸ் வாகனமொன்றை மோதச்செய்து படுகாயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவமும் பதிவாகி உள்ளது. கோவிந்தனை படுகொலை செய்ததைக் கண்ட சாட்சியாக இருந்த தொழிலாளியின் உயிரைப் பறிக்கச் செய்யப்பட்ட சதியாகவே இதனைக் காண முடியும்.

இச்சம்பவம் இடம்பெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் பதினாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொழிலாளர்கள் தங்கியிருந்த லயன் அறைகளுக்குச் சென்று வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறும் அவ்வாறு செய்யத் தவறின் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள் எனக் கூறி மிரட்டியுள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்து முடிந்த பின்னர் ஜனவரி பன்னிரெண்டாம் திகதி முல்லோயா தோட்டத்தின் நடுப்பிரிவுக்குச் சென்ற பொலிசார் வேலைக்குத் திரும்புமாறு கூறி எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழிலாளர்களின் உறுதியும் தொழிற்சங்கத்தின் வழிகாட்டலும் இத்தகைய எச்சரிக்கைளுக்கு அடி பணியாத நிலையைத் தோற்றுவித்திருந்தது.

தொழிலாளர்களின் உறுதிப்பாட்டை பலவீனப்படுத்தும் பொருட்டும் கொலைக் குற்றத்தைத் திசைமாற்றும் பொருட்டும் இன்னொரு உத்தி கையாளப்பட்டமையை அறிய முடிகின்றது. அதாவது தொழிலாளர்கள் தோட்டத்தின் நிருவாகத்துக்குச் சொந்தமான பகுதியில் அனுமதியின்றி மரக்கறித் தோட்டச் செய்கையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பதின்மூன்று தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். மனிதாபிமானமற்ற வகையில் அவர்களை ஒரு வாகனத்தில் அடைத்து கண்டி நோக்கிக் கொண்டு சென்றமை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தெழிலாளர்கள் நீதி மன்றத்தின் முன்னிலையில் கொண்டு செல்லப்படாமல் நீதிபதியின் தீர்ப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றில் பல்வேறு பாடங்களையும் அனுபவங்களையும் தந்த முல்லோயா போராட்டம் பிற்காலத்தில் தொழிலாளர்கள் அடக்குறைக்கு எதிராகப் போராடும் உத்வேகத்தையும் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உரிமைக்காகப் போராடிய தியாகிகளின் வரலாற்றின் முதலாவது பதிவாகவும் கோவிந்தனின் அர்ப்பணிப்பு அமைகின்றது.

முல்லோயா போராட்டத்தைத் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைள் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உதாரணங்களாக சில:

அ. ஏப்ரல் மாதம்

  1. றம்பொடை தோட்டத்தில் சுமார் எழுநூறு தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தோட்டத்துரையின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர்.
  2. வெலிஓயா தோட்டத்தில் தோட்ட நிருவாகியின் தொழிலாளர் விரோத போக்கிற்கு எதிரான போராட்டம்.

ஆ. மே மாதம் 

  1. நேஸ்பி தோட்டத்தில் இடம்பெற்றப் போராட்டம் – இது தொழிலாளர்களுக்கிடையே மோதல்களைத் தோற்றுவித்திருந்தது.
  2. நீட்வுட் தோட்டப் போராட்டம் – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தில் இரண்டு பொலிசாரும் தாக்கப்பட்டனர்.
  3. ரதல்லை தோட்டப் போராட்டம் – தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து பிரச்சினைகளைக் கொடுத்து வந்த பெரிய கங்காணிக்கு எதிரான போராட்டம்.
  4. வேவஸ்ஸ போராட்டம் – பாரியளவில் மேற்கொள்ளப்பட்ட இப்போராட்டம் தோட்டத் துரையை வெளியேற்றுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டது. ஊவா பகுதியெங்கும் பரவிய இப்போராட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  5. சென் அன்றூஸ் தோட்ட போராட்டம் – தோட்டத்துரையின் அடக்குமுறையை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டது.

முல்லோயா போராட்டத்தின் விளைவாக தொழிலாளர்களுக்குச் சாதகமான உடன்படிக்கை ஒன்றும் துரைமார் சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தொழிலாளர் சபையினை (Workers Council) ஏற்படுத்துவது எனவும் மேலும் தோட்டங்களுக்குள் பொலிசார் பிரவேசிக்கும் போது ஆயுதங்களைக் கொண்டு செல்லக் கூடாது என்றும் தோட்டப் பிரச்சினைகள் தொழிலாளர் சபையுடன் பேசி தீர்க்கப்பட வேண்டும் எனவும் உடன்பாடு காணப்பட்டது. தொழிலாளர் போராட்டத்தின் மூலமாக வென்றெடுத்த கோரிக்கை இதுவாகும்.

பஞ்சப்படி போராட்டம்

1965 – 1970 காலப்பகுதியில் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி பதவியில் இருந்தது. அந்த அரசாங்கத்தின் பொருத்தமற்ற பொருளாதார நடவடிக்கையினால் தேசிய வருமானம் வீழ்ச்சியடைந்த காரணத்தினால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் காணப்பட்டது. பெருந்தோட்ட நடவடிக்கைள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் எவ்விதமான அக்கறையும் மேற்கொள்ளப்படவில்லை. முதலாளித்துவ நாடுகளுடனான தொடர்பும் தாராள பொருளாதார முறையும் இறக்குமதிகளைச் சார்ந்து நிற்கும் பொருளாதாரக் கொள்கையும் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாதகமாகவே அமைந்தன. பல்வேறு போராட்டங்களின் விளைவாக அரசாங்க ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்பட்டது. ஆனால் வழமை போல பெருந்தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.  

வாழ்க்கைச் சுமைக்கேற்ப 17 ரூபாய் 50 சதம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்களால் தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டமே பஞ்சப்படி போராட்டமாகும். நாளொன்றுக்கு 67 சதம் சம்பள அதிகரிப்பைக் கோரி பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது. இதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்கவில்லை. போராட்டம் தொடர்ந்தது. பிரதமராகவிருந்த டட்லி சேனநாயக்க இந்தப் போராட்டம் தொடர்பாக எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சம்பள நிருணய சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு கூறி ஒதுங்கிக் கொண்டார்.

1966 ஆம் ஆண்டு நாற்பத்தைந்து நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டம் மலையகம் முழுதும் வியாபித்து இருந்தது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தப் போராட்டத்திற்கான தலைமையை ஏற்றிருந்தது. இந்தக் கோரிக்கை தொடர்பாக இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மயிலிட்டியா தோட்டத்தில் மூன்று மாத காலம் வேலை நிறுத்தம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 10 சதம் சம்பள உயர்விற்கு ஒத்துக் கொண்டது. போராட்டம் தோல்வியில் முடிந்தது. மக்கள் விரோதத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு இதுவும் சிறந்த உதாரணம் ஆகும். இத்தகைய நடவடிக்கை தொழிற்சங்கம் மீதான பற்றுதலையும் வலுவிழக்கச் செய்தது. 

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. கடந்த ஆறு வருடங்களாக இது தொடர்பில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபா என்பதைக் கூறி வந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இல்லை. தனியார் கம்பனிகள் அரசாங்கத்துக்கு மேலான அதிகாரத்தைக் கொண்டிருப்பது போல தோன்றுகின்றது. இன்றைய விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்றன தொழிலாளர்களை மேலும் அழுத்துகின்றன. உரிய சம்பளத்தை வென்றெடுப்பதற்காக தொடர்ந்து போராட வேண்டியது அவசியமாகின்றது.

இன அடையாளம் மற்றும் காணி, வீட்டு உரிமைக்கான போராட்டங்கள்

தொழிற்சங்கம் அமைத்தல், வேதன அதிகரிப்பு, தோட்டங்களைப் பாதுகாத்தல் போன்றனவற்றின் அடிப்படையில் மலையகத் தொழிலாளர் முன்னெடுத்த போராட்டங்களின் அடுத்த கட்டமாக தேசிய இன அடையாளத்தை வென்றெடுப்பதற்கான போராட்டங்கள் மேலெழுந்துள்ளன. இந்திய வம்சாவளி என்ற அந்நிய நாட்டின் அடையாளத்தை நீக்குவதோடு இந்நாட்டை உருவாக்கிய மக்களை ‘மலையகத் தமிழர்’ என அடையாளப்படுத்த வேண்டும் என்ற கருத்து முன்னிலை பெற்று வருகின்றது. இதற்கான பிரகடனமும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இந்நாட்டில் வாழ்கின்ற நான்கு தேசிய இனங்களில் ஒன்றாகக் கருதப்பட வேணடும் என்ற கோரிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

மேலும் மலையக மக்களுக்கான காணி, வீட்டுரிமை பற்றிய போராட்டங்களும் இன்னொரு கட்டத்துக்கு வளர்ச்சியடைந்துள்ளன. வீடுகளை அமைப்பதற்கான பத்து பேர்ச்சஸ் காணியும், விவசாயம் மற்றும் தோட்டச் செய்கைக்கான இருபது பேர்ச்சஸ் காணியும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு போராட்டங்கள் 1980 ஆண்டு முதல் மக்கள் சார்ந்த செயற்பாட்டாளர்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய கோரிக்கைகளை வென்றறெடுக்க, கடுமையானதும் தொடர்ச்சியானதுமான  போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது. 

என்ன செய்ய வேண்டும்? 

இயற்கையோடும் வறுமையோடும் போராடிய மலையக மக்கள் முதலாளிகளின் அடக்குமுறைகளுக்கும் இனவாத நடவடிக்கைகளுக்கும் எதிராக போராடியதன் விளைவாகவே பல்வேறு உரிமைகளைப் பெற முடிந்தது. ஐக்கியம், ஒருமைப்பாடு, தன்னலங்கருதாத செயற்பாடுகள், தலைமைத்துவம், துணிவு போன்ற காரணிகளே வெற்றிகளைப் பரிசாகத் தந்தன. தொழிற்சங்கத் தெரிவு, வேறுபாடுகளை மறந்தமை, ஒருவருக்காருவர் ஒத்தாசை நல்கியமை போன்றன அதற்கு வலுவூட்டின. மக்கள் சார்பான தொழிற்சங்கம், அவற்றின் செயற்பாடுகள், மக்கள் தலைவர்களின் துணிவு மிக்க முடிவுகள் போன்றனவும் பங்களித்தன. 

protest by people

ஆனால் இன்றைய சூழலில் இவை யாவும் நிர்மூலமாக்கப்பட்டு சிதைவடைந்த நிலைக்குச் சென்றுள்ளதைக் காணமுடியும். ஐக்கியம் சிதறடிக்கப்பட்டுள்ளது. போராட்டப் பலம் பலவீனமாக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க நடவடிக்கைகளும் அரசியல் செயற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து நம்பிக்கையற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளன. தோட்டங்களை தனியார் கையேற்ற பின்னர் எவ்வித அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படாமல் அவை காடுகள் மற்றும் புதர் நிலங்களாக மாற்றப்படுகின்றன. தனியார் தோட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் வெளியேற வேண்டுமென்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புசல்லாவை பகுதியிலுள்ள றம்பொடை தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுகின்றனர். 

women protest

முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் சீரற்ற கல்வி முறையால் சுயநல எண்ணம் மேலோங்கியுள்ளது. தொழிலாளர் உதிரிகளாக மாற்றப்பட்டுள்ளனர். கடுமையான உழைப்பாலும் போராட்டத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட மலையகம் திட்மிடப்பட்ட வகையில் சிதைக்கப்படுகின்றது. எனவே இதனை மாற்றியமைக்க சகலரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியமாகும். இந்த நோக்கத்துக்காக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

  1. தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்குதல். தொழிலாளர் கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல். உழைக்கும் மக்கள் சார்பான தொழிற்சங்கத்தின் முக்கியத்துவத்தை அறியச் செய்தல்.
  2. அரசியல் அடிப்படையில் ஆளுமையுள்ள சமூகமாக தலை நிமிர்வதற்குரிய, மக்கள் நலன்சார்ந்த கட்சியைக் கட்டியெழுப்புதல். சலுகை அரசியலை மட்டுமன்றி உரிமை சார்ந்த விடயங்களை வென்றடுப்பதற்கான வேலைத் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்தல்.
  3. பேரினவாத முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக செயற்படும் ஏனைய அரசியல் கட்சிகள், ஜனநாய அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுதல்.
  4. சுய உற்பத்தி, நுகர்வு, பண்டப்பரிமாற்றம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளைப் பலப்படுத்துதல்.
  5. மலையக மக்களின் வரலாறு மற்றும் கலை, பண்பாட்டு அம்சங்களைப் பாதுகாக்கும், மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கும்  கலாசாரத்தைக் கட்டியெழுப்புதல்.
  6. மலையகத்தின் இயற்கைச் சூழலை, வளங்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பை மக்களின் ஒத்துழைப்புடன் கட்டியெழுப்புதல்.
  7. போதையற்ற இளைஞர்கள் என்ற இலக்கை அடைவதற்கு விளையாட்டு மற்றும் பயனுள்ள பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  8. பெண் தலைமைத்துவத்தை உருவாக்குதல்.
  9. மாணவர் இயக்கங்கள், சிறுவர் அமைப்புகளைப் பலப்படுத்துதல்.
  10. புதிய பண்பாட்டுப் பயணத்தினை சகல மாவட்டங்களுக்கும் விஸ்தரித்தல்.

முடிவுரை

மலையக மக்களின் வரலாறு என்பது போராட்டங்களால் வடிவமைக்கப்பட்டதாகும். தற்போதைய நிலையில் மலையக மக்கள் அனுபவித்து வரும் உரிமைகள் மற்றும்  சலுகைகள் இத்தகைய போராட்டங்களால் வெற்றி கொள்ளப்பட்டவையாகும். சாதாரண வேலை நிறுத்தம் தொடக்கம் பல நாட்கள் நீடித்த பரந்துபட்ட வேலை நிறுத்தம் வரை இத்தகைய போராட்டங்களின் தன்மைகள் படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளன. போராட்டங்களின் உச்சமாக உயிர்த் தியாகங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே மலையக மக்களின் வரலாறு செங்குருதியால் புடம் போடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட முடியும். இத்தகைய வீரம் மிகுந்த போராட்டங்களின் திரட்சியாகவே மலையகத்தை அடையாளப்படுத்த வேண்டும். பிற்போக்கு தொழிற்சங்கம் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் இத்தகைய தனித்துவ வரலாறு மேலும் வளர்ச்சி பெறாத தேக்க நிலையைத் தோற்றுவித்துள்ளது. மேலும் மாறி மாறி பதவிக்கு வந்த, பேரினவாதம் மற்றும் மதவெறி கொண்ட அரசாங்கங்களின் நடவடிக்கைகளும் போராட்டத்தின் வளர்ச்சியைத் தடை செய்துள்ளன. மேலும் திறந்த பொருளாதாரக் கொள்கை, தனியார்மயம், பொருத்தமற்ற கல்வி போன்றன காரணமாகவும் போராட்டக் கலாசாரம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுப்பவர்கள் இது குறித்து மிகச் சரியான தீர்மானத்தை மேற்கொண்டு போராட்ட வாழ்க்கைப் பண்பாட்டையும் வரலாறையும் மீளவும் வளர்த்தெடுக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமானதாக உள்ளது. மலையக மக்களின் போராட்டங்களில் இன்னொரு வளர்ச்சிப்படியாக இன அடையாளத்திற்கான போராட்டங்களும் காணி, வீட்டுரிமைக்கான போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. மலையகம் 200 அதனை சாத்தியமாக்குவதற்கு கடந்த கால வெற்றிகளை படிப்பினைகளாகக் கொள்வது சிறந்த விளைவுகளைத் தரும்.

உதவிய நூல்கள்

  1. இராஜேந்திரன் சிவ. 2019. தடை மலைகளை உடைத்தல், செம்பதாகை சஞ்சிகை, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, கொழும்பு.
  2. கந்தையா மு.சி. சிதைக்கபட்ட மலையகத் தமிழர்கள், 2015 விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர்.
  3. சாரல் நாடன் (1988). தேசபக்தன் கோ. நடேசையர் : ஒரு வரலாற்று ஆய்வு, மலையக வெளியீட்டகம் கண்டி.
  4. புதிய நீதி (2021). மலையகத் தமிழ் மக்களும் மாற்று அரசியல் மார்க்கமும், புதிய நீதி வெளியீட்டகம், கொழும்பு. 
  5. ரோகிணி மாத்தளை (1993). உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள், இளவழகன் பதிப்பகம், சென்னை. 
  6. லோரன்ஸ். அ (2006). மலையக சமகால அரசியல் தீர்வு, மலையகம் வெளியீட்டகம், தலவாக்கலை.
  7. Nadesan N. (1993). A history of Up country Tamil People in Sri Lanka, Nandalala Publication, Hatton.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6019 பார்வைகள்

About the Author

எஸ். ராஜேந்திரன்

‘மலையம் 200’ நிகழ்வுகளை முன்னிட்டு, விம்பம் அமைப்பினரால் எழுநாவின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் எஸ். ராஜேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட ‘மலையக மக்களின் போராட்ட வரலாறு’ எனும் இக் கட்டுரை மூன்றாம் பரிசைப் பெற்றது. இக் கட்டுரை எழுநாவில் இரண்டு பகுதிகளாக வெளியாகின்றது.