Arts
18 நிமிட வாசிப்பு

மலையகத் தமிழர் எனும் தேசிய இன அடையாளப் பயணம்

April 9, 2024 | Ezhuna
மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அதற்கேற்ப, விம்பம் அமைப்பு எழுநாவின் அனுசரணையுடன் கட்டுரைப் போட்டியொன்றை நடத்தியது. இப் போட்டியில் வெற்றி பெற்ற வெவ்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் 'மலையகம் 200' எனும் தலைப்பில் தொடராக எழுநாவில் வெளியாகின்றன.

திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, முசிறி, துறையூர், நாமக்கல், மதுரை, அறந்தாங்கி போன்ற தமிழக மாவட்டங்களில் காணப்பட்ட பொருளாதார-சமூக ஏற்றத்தாழ்வுகள், நில உரிமையாளர்களின் ஆதிக்கம், சாதிய ஒடுக்கு முறைகள், வறுமை போன்றவை வாட்டி வதைத்த காலப் பகுதியில், ஏறக்குறைய 200 வருடங்களுக்கு முன்னர், அவற்றிலிருந்து விடுபட வழி தேடி இலங்கை, மலையகம் நோக்கிப் பயணித்தவர்கள் இன்று வரை வலியோடு வாழ்வுக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கடந்து வந்த பாதையும் இன்றைய வாழ்க்கைப் பயணமும் வலி மிகுந்தது. வானம் பார்த்த வறண்ட மண்ணிலிருந்து வாழ்வு தேடி இராமேஸ்வரம் மண்டபம் சென்றடைந்தவர்களுக்கு உடற் பரிசோதனைக்கு பின்னர் ‘கூலி’ என நெஞ்சில் சேங் கொட்டை (Marking-nut) கொண்டு சூடு போட்டு அடையாளமிடப்பட்டது. தமிழ் நாட்டில் இருந்து கடல் வழியாகவும் கால்நடையாகவும் மலைநாட்டை நோக்கிய அவர்களின் நெடுவழிப்பாதை கரடு முரடானது. கடற் பயணத்தின் போது படகுகள் கவிழ்ந்து ஏராளமானோர் சமுத்திரத்தில் மூழ்கிய சம்பவங்களும் வரலாற்றில் உண்டு. பலரையும் ஏற்றி வந்த ‘ஆதிலட்சுமி’ படகும் இவ்வாறே கடலில் கவிழ்ந்து.

அடர்ந்த காடுகள் மத்தியில் பாதுகாப்பற்ற நெடும் பயணத்தில் நோய்வாய்ப் பட்டும், வனவிலங்குகளுக்கு இரையாகியும் எண்ணற்றோர் மடிந்தனர். வாகன வசதி இல்லாத நிலையில் ஒற்றையடிப் பாதைகளை உருவாக்கிக் கொண்டு தலைமன்னாரில் இருந்து தொடங்கிய அவர்களின் இடைவிடாத நடைபயணம் துயரத்தின் தொடக்கமாகும். 140 மைல் தொலைவில் உள்ள மாத்தளை வரையிலான காட்டுவழிப் பாதையில் போதிய உணவோ மருந்தோ தண்ணீரோ கிடைக்காமல் பாதி வழியில் கைவிடப்பட்டு இறந்தோர் ஏராளம். வெயில், மழை, குளிர் போன்ற இயற்கையின் சீற்றங்களும் அவர்களைத் தாக்கியது. கொடிய வனவிலங்குகளின் தாக்குதல்களுக்கு உள்ளானது மட்டுமல்லாமல் அட்டைக் கடி, நுளம்புக்கடி, தேள்கடி, பாம்புக் கடி என பல்வேறு அச்சுறுத்தல்களையும்  எதிர்கொண்டு நடந்தனர். கொலரா, மலேரியா, அம்மை என பலதரப்பட்ட கொடிய நோய்களுக்கான மருத்துவ உதவி எதுவும் இல்லாததால் வழியில் பலரும் மடிந்தனர்.

‘பாதி வழியில் ஏ ராசாவே
பரலோகம் போயிட்டியே’

என்ற வலி மிகுந்த ஒப்பாரிப் பாடல்கள் வழியெங்கும் வலி கலந்து ஒலித்தன. இவ்வாறு வழி நெடுக வலியோடு வந்தவர்களில் 25 முதல் 40 வீதத்தினர் இறந்திருப்பர் எனக் கூறப்படுகிறது .

tea workers

இவர்களைக் கண்காணித்து அழைத்து வந்த ஆங்கிலேயத் துரைமார்களின் முகவர் ‘கங்காணி’ என அழைக்கப்பட்டனர். கங்காணி என அழைக்கப்பட்டவர்களின் சர்வாதிகார அடக்கு முறையால் பலர் பாதிப்புக்கு உள்ளாகினர். முதல் ஒரு நூற்றாண்டு காலம் கங்காணிமார்களின் அடக்குமுறை பெருந்தோட்டமெங்கும் தலைவிரித்தாடியது. தொழிலாளர்கள் அடிமைக் கூலிகளாக நடத்தப்பட்டனர். மனிதர்களாக மதிக்கப்படவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் இன்றி கங்காணிமார்களின் சுரண்டலுக்கு ஆளானார்கள். ஆண்கள் உடல் ரீதியான பாதிப்புக்கும் பெண்கள் பாலியல் சீண்டலுக்கும் உள்ளானார்கள். அவர்கள் எதிர்பார்த்து கடல் கடந்து வந்த உலகம் மிகவும் கொடுமையானதாக காணப்பட்டது. முன் அனுபவம் இல்லாமல் காலை முதல் மாலை வரை இடைவேளை இல்லாது பெருந்தோட்டத்தில் வேலை செய்வது என்பது அவர்களின் முதுகெலும்பை முறிப்பதாக இருந்தது. வேலை செய்ய மறுத்தால் அல்லது முரண்டு பிடித்தால் கடும் தண்டனை நிச்சயமாகியது. சில வேளைகளில் சவுக்கடிகளும் வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது. எலிப்பொறியில் சிக்கிவிட்டதாக உணர்ந்தனர். வந்து விட்டோம்; வேறு வழியில்லை; வலியை பொறுத்துக் கொண்டு வாழ்வோம் என்ற விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டனர் .

கங்காணிமார்களுக்கு நிகராக துரைமார்களின் அடக்கு முறையும் அவர்களை அதிக துன்பத்துக்கு உள்ளாக்கியது. இவர்களின் அடக்கு முறையை லண்டனில் வசிக்கும் மலையக  எழுத்தாளர் திரு. நித்தியானந்தன் அவர்கள் ‘துரைத்தன அடக்கு முறையும் கூலித் தமிழும்’ என்ற கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கூலிகளாக வந்த இவர்கள் கொடூரச் சுரண்டலுக்கு இரையானதைக் காண முடிகிறது. இத்துரைமார்களில் பெரும்பாலானவர்கள் எந்தவித மனிதாபிமானமும் இல்லாதவர்களாகவே இருந்துள்ளனர். தொழிலாளர்களை மனிதப் பிறவிகளாக எண்ணாமல் இழிவாக நடத்தும் போக்கு துரைமார்களிடம் அதிக அளவில் இருந்ததை அவர்களின் நடவடிக்கைகள் மூலம் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எந்தவிதமான சிரமங்கள் வந்த போதும் தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டு ஓடிவிட முடியாத வகையில் சட்ட திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன. மீறுபவர்கள் காவல்துறை உதவியுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போதைய மலைநாட்டு தொழிலாளர்கள்,

‘பாலு மரம் வெட்டலான்னு
பழைய கப்பல் ஏறி வந்தேன்
நாப்பத்தைஞ்சி காசைப் போட்டு
நட்டெலும்பை முறிக்கிறானே’

என்றும்,

‘பஞ்சம் பொழைப்பதற்கு
பாற்கடலை தாண்டி வந்தோம்
பஞ்சம் பொழைச்சு நம்ம
பட்டணம் போய் சேரலையே’

‘ஒரு பழம் தப்பிச்சுன்னு
ஒதச்சாண்டி சின்னத்துரை’

என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் தங்களின் வேதனை நிறைந்த வாழ்க்கையை வெளிப்படுத்தியதைக் காணலாம். பாலும் தேனும் ஓடும் என நம்பி வெளிச்சத்தை தேடி வாழ வந்தவர்களுக்கு இருட்டு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

up country women

தோட்டத் தொழிலாளியின் மூச்சு, வாழ்வு, இருப்பு அனைத்தும் அவன் வாழ்ந்த தோட்டத்துக்குள்ளேயே முடங்கிப்போனது. தன் வியர்வையையும் உதிரத்தையும் தேயிலைச் செடிகளுக்கு உரமாக்கி அடிமையாக வாழ்ந்த அவனுக்கு கிடைத்த உறைவிடமோ எந்த அடிப்படை வசதியும் இல்லாத லயன் (LINE) வீடுகளாகும். மேற்கு இந்திய தீவுகளின் அடிமைகளைப் போன்றே இவர்களும் நடத்தப்பட்டனர். குடும்ப உறுப்பினர்கள் ஆடு, மாடுகளைப் போல ஒரே அறையில் அடைக்கப்பட்டார்கள். நாளெல்லாம் இடைவேளை இன்றி உழைத்துக் களைத்து வரும் தொழிலாளிக்கு இளைப்பாற உரிய  உறைவிட வசதி செய்து கொடுக்கப்படவில்லை. கால் நீட்டிப்  படுக்க முடியாத அன்றைய அவல நிலை இன்றும் மலையகத்து லயன் வாழ்க்கையில் தொடர்கிறது. குடி நீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி அன்று அறவே இருக்கவில்லை. சுகாதார வசதி இன்றி கடுமையான நோய்களுக்கு ஆளாகி இளம் வயதிலேயே பலர் இறந்தனர். இன்றும் மலையகத்தில் தேசிய சராசரியை விட இறப்பு விகிதம் அதிகமாகவும் பிறப்பு விகிதம் குறைவாகவும் இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. எனவேதான் “தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் நடத்தப்படும் விதம் வெட்கக் கேடாக இருக்கிறது” என நூற்றாண்டுக்கு முன்பே டொரிங்டன் என்ற ஆங்கில தேசாதிபதி குறிப்பிட்டார்.

குடும்ப வறுமையில் இருந்து விடுபட குடும்பத் தலைவிகளும் தோட்டத்தில் கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். கசங்கிய சேலை, இரவிக்கை, இடுப்பில் படங்கு சாக்கு, முதுகில் கொழுந்துக் கூடை என்பது அவர்களின் நூற்றாண்டகால அடையாளமாகிப் போனது. கடும் குளிரில் இரத்தம் உறிஞ்சும் அட்டைக் கடியின் வலியை தாங்கிக் கொண்டு, தேயிலைக் கொழுந்து பறிக்கும் மலையகத் தோட்டப் பெண் தொழிலாளர்கள் விடியலுக்காக காத்திருக்கிறார்கள். 200 வருடங்கள் கடந்தும் அவர்களின் வலிமிகுந்த வாழ்க்கையில் வெளிச்சம் தெரியவில்லை. வேலைக்கு நடுவில் சிறுநீர் கழிக்க எந்தவித வசதி வாய்ப்பும் இல்லாத காரணத்தினால், தாகம் எடுத்தாலும் தண்ணீர் குடிக்க முடியாத கொடுமை தோட்டப் பெண்களின் வாழ்க்கையில் அன்று முதல் இன்று வரை நிலவுகிறது.

பெருந்தோட்ட மலையக மக்கள் மனிதர்களாக மதிக்கப்படவில்லை. அவர்களும் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்பதை இனவாதம் பேசிய மக்கள் மட்டுமல்ல படித்த அரசியல்வாதிகளும் கூட ஏற்க முன்வரவில்லை. அதன் காரணமாக 1930 களில் மலையக மக்களுக்கும் சர்வசன வாக்குரிமை வழங்க டொனமூர் அரசியல் குழு முன்வந்த போது வலதுசாரி அரசியல்வாதிகள் அதனை எதிர்த்தனர். அதனால் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையே வழங்கப்பட்டது. இலங்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இம் மலையக மக்கள் ஆற்றிய பங்களிப்பை கவனத்தில் கொள்ளாத இலங்கையின் இனவாத, சந்தர்ப்பவாத வலதுசாரி அரசியல்வாதிகள் கடந்த 200 வருடங்களாக மலையக மக்களின் அரசியல் உரிமைகளுக்கு தடையாகவே இருந்து வந்துள்ளனர். அரசியல் உரிமை பெறுவதன் ஊடாகவே இவர்கள் தங்களின் ஏனைய உரிமைகள், தேவைகளை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். இவர்களின் வலி மிகுந்த வாழ்க்கைப் பயணத்தை பெரும்பான்மை சிங்கள மக்களும் அரசியல் தலைவர்களும் உணர வேண்டும்.

இலங்கையின் பெருந்தோட்ட வளர்ச்சியில் மட்டுமல்லாமல் இலங்கையின் அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் இவர்களின் பங்களிப்பு மிக அதிகம். இவர்கள் பெற்றுத் தந்த தேசிய வருமானம் மற்றும் அந்நியச் செலாவணி வாயிலாக இலங்கையின் அனைத்து மக்களும் கடந்த காலங்களில் பெரும் பயனை அடைந்திருக்கிறார்கள். அதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இலங்கை நாட்டின் வளர்ச்சிக்காக வரலாறு முழுவதும் இவர்கள் அனுபவித்த வேதனைகளை, வலிகளை வெறும் வார்த்தைகளில் கூறிவிட முடியாது. ஆனால் அதற்கு சன்மானமாக இலங்கையின் இனவாத அரசியல்வாதிகள் அவர்களின் குடியுரிமையை, வாக்குரிமையைப் பறித்தமை இலங்கை வரலாற்றில் கறை படிந்த பக்கங்களாகும்.

குடியுரிமைப் பறிப்பு 

1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதும் இலங்கை அரசியலானது தீவிர இனவாத அரசியலாக வடிவம் பெறத் தொடங்கியது. வாக்கு வங்கி அரசியலில் இனவாதம் முக்கிய புள்ளியாக மாறத் தொடங்கியது. மலையகத் தொழிற் சங்கங்களும் இடதுசாரி அமைப்புக்களும் முடங்கிப் போயின. முடிவில் 1948, 1949 ஆகிய ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள் மூலம் 10 இலட்சம் மலையக மக்கள் அதுவரை அனுபவித்த குடியுரிமை மற்றும் வாக்குரிமையை இழந்து நாடற்றவர்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இது தொழிலாளர் வர்க்கத்திற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரும் துரோகச் செயலாகும். வெயில், மழை, குளிர் என எதுவும் பாராது விசுவாசத்தோடு உழைத்த மலையக மக்கள் இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். வேதனைக்கும் வலிக்கும் உள்ளாகினர். இதன் விளைவாக அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. அரசு வேலைகள் மறுக்கப்பட்டன. உயர்கல்வி  தடுக்கப்பட்டது. நில உரிமை, வீட்டுரிமை என்பன பிரச்சினைக்குள்ளாகின.

பேரினவாத வலதுசாரி அரசியல்வாதிகள் குடியுரிமையை பறித்தெடுத்ததோடு நின்றுவிடவில்லை. குடியுரிமை பறிப்பின் தொடர்ச்சியாக அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்ற குரல் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளிடம் ஆக்ரோஷமாக மேல் எழுந்து நின்றது. இம் மக்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவது என்பது தேர்தல் மேடைகளில் பிரதான பேசு பொருளாகியது. ஆங்காங்கே இடதுசாரிகள் மேற்கொண்ட சிறிய அளவிலான எதிர்ப்பு, தொழிற்சங்கங்களின் போராட்டம் போன்றவை எந்தப் பயனையும் தரவில்லை. முடிவில் பேரினவாத அரசியலே வெற்றியும் பெற்றது. அதன் விளைவாக 1964 ஆம் ஆண்டில் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தமும் 1974 இல் சிறிமா-இந்திரா காந்தி ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டு, ஆறு இலட்சம் பேர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் 375,000 பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இலங்கையிலேயே நிரந்தரமாக வாழ விரும்பியவர்களை வலுக்கட்டாயமாக, விருப்பத்திற்கு மாறாக நாடுகடத்தும் இச் செயலானது மனிதகுல வரலாற்றில் மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட மற்றுமொரு துரோகமாகும். நூற்றாண்டுகளாக பல தலைமுறைகளாக ஆல மரமாக வளர்ந்து நின்றவர்கள் வேருடன் பிடுங்கப்பட்டு இந்திய மண்ணில் எறியப்பட்டமை அவர்களின் வாழ்வில் மிகவும் கொடூரமான விளைவை ஏற்படுத்தியது.

lipton tea

இந்த உடன்படிக்கைகள் மூலம் குடும்பங்கள் சிதறுண்டன. ஒன்றாக வாழ்ந்த குடும்ப உறுப்பினர்கள் பிரிக்கப்பட்டார்கள். அரசுகளுக்கோ சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கோ இம் மக்களின் வலி தெரியவில்லை. தொப்புள் கொடி உறவுகள் என்ற உரிமையுடன் தாயகம் திரும்பியவர்கள் இன்னமும் எதிர் பார்த்த வாழ்க்கை அமையாமல் மறுவாழ்வு தேடி அலைந்து கொண்டு இருக்கிறார்கள். 200 வருடங்களுக்கு முன் வலியோடு வாழ்வு தேடி இலங்கைக்கு வந்தார்கள். இரு நாடுகளின் ஒப்பந்தங்களால் அதே வலியோடு மறுவாழ்வு தேடி தாயகம் திரும்பினார்கள். தாயகம் திரும்பியோருக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் திருப்திகரமாக இல்லாத நிலையில், அவர்களும் அவர்களின் சந்ததியினரும் இந்திய மண்ணில் வாழ்ந்து வருவதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன .

இன வன்முறை

இலங்கை-இந்திய உடன்படிக்கையின் பின்னர் இலங்கையே எங்கள் தாயகம் என எண்ணி வாழ்க்கையை தொடங்கிய எஞ்சிய 5.5 % மலையக மக்களின் வாழ்க்கையிலாவது வசந்தம் வீசியதா என்றால் அதுவும் நடக்கவில்லை. அதன் பின்னரான வாழ்க்கைப் பயணமும் வலியும் வேதனையும் நிறைந்ததாகவே காணப்பட்டது. இலங்கையின் அரசியல் நகர்வானது பெரும்பான்மை x சிறுபான்மை என்ற இனவாதத்தை மையமாகக் கொண்டு இருப்பதால் பாதிக்கப்படும் சிறுபான்மையினர் வரிசையில், மலையக மக்களும் அடங்குகின்றனர். குறிப்பாக 1956, 1958, 1977, 1981, 1983 ஆண்டுகளில் நடைபெற்ற இனக் கலவரங்கள், 1972 ஆம் ஆண்டு நிலச் சீர்திருத்தம் என்பன மலையக மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கின.

1956 இல் ஆரம்பமான இனக்கலவரமானது பல்வேறு காலகட்டங்களாக தொடர்ந்து வந்த நிலையில், 1983 இல் வரலாறு காணாத மிகப் பெரும் இனக் கலவரமாக மாறியது. பிரிவினைவாதத்தை எந்தக் கட்டத்திலும் முன் வைக்காத மலையக மக்கள் இக் கலவரத்தில் மிகப் பெரும் அழிவை சந்தித்தனர். 3000 பேர் கொல்லப்பட்டனர். 25,000 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள், வணிக நிறுவனங்கள் சேதத்திற்கு உள்ளாகின. எதிர்த்து தாக்கும் வலிமையை மலையகத் தொழிலாளர்கள் பெற்றிருக்கவில்லை. அதனால் சில தோட்டங்களில் தொழிலாளர்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள காடுகளில் பதுங்கினர். இன்னும் சிலர் பாதுகாப்புத் தேடி அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். இக் கலவரமானது மலையக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது என்றே கூற வேண்டும். அவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியானது. இனவாதத்தை ஆதரிக்காத அவர்கள் இன வெறியர்களால் கொல்லப்பட்டார்கள். வன்கொடுமைக்கு ஆளானார்கள். உடமைகளை இழந்தார்கள். சிறுபான்மை என்ற ஒரே காரணத்தினால் இவர்கள் ஒவ்வொரு கலவரத்தின் போதும் தாக்குதலுக்கு உள்ளாகியமை மிகவும் கொடுமையான செயலாகும். இவர்கள் இலங்கை  நாட்டின் உண்மையான பிரஜைகள். அவர்களின் உயிருக்கும் உடமைக்கும் அரசு  உத்தரவாதம் தர வேண்டும். 

வடக்கு, கிழக்கு நோக்கி நகர்ந்த மலையக மக்கள்

மலையக பகுதிகளில் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் தங்களின் எதிர்கால நலன் கருதி கலவரங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள உள் நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்து வாழ வழி தேடினர். குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பகுதிகளுக்கு ஓடினார்கள். 1974 ஆம் ஆண்டுப் பகுதியில் இவர்கள் காடுகளை வெட்டி உருவாக்கிய நிலப் பகுதிகள், சிறு காணிகளாக பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு பிரித்து அளிக்கப்பட்ட போது, வேலை இழந்த தொழிலாளர்களும் வடக்கு நோக்கி நகர்ந்தனர். பாதுகாப்புக் கருதி அப் பகுதிகளில் நிரந்தரமாகக் குடியேறவும் விரும்பினர்.

கடின உழைப்பால் அங்கேயும் காடுகளை அழித்து அவற்றை களனிகளாக மாற்றினார்கள். இவர்களின் இப்புதிய வாழ்க்கை சுகமானதாக, சுலபமானதாக அமைந்துவிடவில்லை. அங்கும் வலியோடு தான் வாழ்க்கையை தொடங்க வேண்டி இருந்தது. பெருமளவில் நன் செய் நிலங்கள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. நீர்ப்பாசன வசதி குறைந்த அல்லது வசதி இல்லாத வானம் பார்த்த நிலங்களில் பயிர் செய்ய வேண்டி இருந்தது. ஒரு சிலர் காணி உரிமையாளர்களாக மாறி உள்ளனர் என்ற போதும் அவர்களுக்கான சட்டபூர்வமான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

விவசாய நிலம் இல்லாத பெருந் தொகையினர் பெரு நில உடமையாளர்களின் காணிகளில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களால் காடழித்து உருவாக்கப்பட்ட விவசாயப் பண்ணைகள் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியுள்ளது. வடக்கே வந்து குடியேறுங்கள் என இரு கரம் நீட்டி அழைப்பு விடுத்தனர் தமிழ் அரசியல்வாதிகள். ஆனால் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை பெற்றுக் கொடுப்பதில் சில பொதுநல அமைப்புகள் காட்டிய அக்கறையை இந்த அரசியல்வாதிகள் காட்டத் தவறிவிட்டனர் என்றே கூற வேண்டும்.

வடக்கு நோக்கி நகர்ந்தவர்கள் அங்கு தாங்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற நம்பிக்கையுடனேயே இடம் பெயர்ந்தனர். அங்கு பாதுகாப்பாக வாழ்ந்து விடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் கிராமங்களின் எல்லையோரப் பகுதிகளில் பெருமளவில் குடியமர்த்தப்பட்டனர். உள்நாட்டு யுத்தங்களின் போது இராணுவத் தாக்குதல்களால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது. 

வடக்கில் குடியேறிய மலையக மக்களின் பேச்சு, மொழி, நடை – உடை – பாவனை, கலை – கலாச்சாரம் என்பன இலங்கை தமிழர்களில் இருந்து மாறுபட்டு இருப்பதால் அங்கு இவர்கள் சமத்துவமாக நடத்தப்படவில்லை. இவர்கள் அங்கு குழப்பமான அடையாளத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றில் இலங்கைத் தமிழர்கள் என குறிப்பிட்டுக் கொள்ள விரும்பும் இவர்கள் நடைமுறை வாழ்க்கையில் மலையகத் தமிழர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

உள் நாட்டு யுத்தம் தந்த வலி மிகுந்த வாழ்விலிருந்து விடுபட சிலர் தமிழகம் நோக்கி படகுகளில் உயிரை பணயம் வைத்து அகதிகளாகப் போனார்கள். ஆனால் அங்கேயும் அவர்களுக்கு விடியல் கிடைக்கவில்லை. 30,000 மேற்பட்ட மலையக மக்கள் அகதிகளாக தமிழக அகதி முகாம்களில் இன்றும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். குடியுரிமை இல்லாது கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டில் இந்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திலும் இவர்கள் உள்வாங்கப்படவில்லை. மாறாக சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர். வலி மிகுந்த இவர்களின் உரிமையற்ற வாழ்க்கையை பற்றி இலங்கை – இந்திய அரசுகளோ உலக சமூகமோ கவலைப்படுவதாக தெரியவில்லை.

மலையக மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தொடர் தாக்குதல்களைச் சந்தித்து கொண்டே வந்திருக்கிறார்கள். 1972 ஆம் ஆண்டு பெருந் தோட்டங்களை தேசிய உடமையாக்கிய பின்னர் அவற்றின் பெரும் பகுதி சிங்களப் பெரும்பான்மை சமூகத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டதால் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கை நாட்டிற்காக பெருந் தோட்டங்களில் உதிரம் கொட்டி வியர்வை சிந்தி உழைத்தவர்களுக்கு நிலம் பகிர்ந்து அளிக்கப்படவில்லை. அதன் விளைவாக அவர்கள் வேலை இழந்தனர். பலர் இதனால் வாழ்விழந்து வீதிக்கு வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர். வேலை இழந்த வீடு இழந்த பலரும் பல திசைகளிலும் சிதறுண்டு போனார்கள். சிலர் உள் நாட்டில் கூலித் தொழிலாளர்களாக பல்வேறு மாவட்டங்களுக்கு சிதறுண்டு சென்றார்கள். சிலர் நகரங்களை நோக்கி நகர சிலர் வடக்கு, கிழக்கு நோக்கி நகர்ந்தனர். 85 % வீதமானோர் காணி உரிமை இல்லாமலும் வீட்டுரிமை இல்லாமலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 

பெருந் தோட்டங்களில் வேலை பார்த்து வேலை இழந்தவர்கள் சிறு தோட்டங்களில் வேலைக்குச் சேர்ந்தனர். ஆனால் அங்கே சிலநாள் மட்டுமே வேலை இருந்தது என்பதுடன் வேலைக்கான உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. உரிய ஊதியமும் தரப்படவில்லை. இதன் தாக்கம் கொரோனா நோய் தொற்றுக் காலத்திலும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போதும் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. பொருளாதார நெருக்கடியின் போது மலையக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் இருந்து சென்ற உணவுப் பொருட்கள் கூட இவர்களைச் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது. இந்திய சமூகம் உட்பட யாரும் இவர்களின் நெருக்கடி மிகுந்த வாழ்க்கையை கண்டு கொள்ளவில்லை. பலவீனமானவர்களை பாதுகாக்க உலக சமூகம் முன்வர வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மேடை போட்டு பேசுபவர்களும் வீதிக்கு இறங்கி வந்து உதவிக் கரம் நீட்டவில்லை.

இரு நூற்றாண்டுக்கு மேலாக பெருந் தோட்டங்களில் அடைபட்டு கிடக்கும் மலையக மக்களின் அடிப்படை உரிமைகள், தேவைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கமோ அரசியல் தலைவர்களோ தொழிற் சங்க தலைவர்களோ பெரிய அளவில் முனைப்புக் காட்டவில்லை என்றே கூற வேண்டும். ஊதிய உயர்வு, ஆயிரம் ரூபாய் சம்பளம் போன்றவை வெறும் பேச்சிலும் எழுத்திலும் மட்டுமே இருக்கிறது. வேலை இழப்பு, வருமானம் குறைவு காரணமாக போதிய ஊட்டச்சத்து இன்றி நோய்களின் தாக்கம் மலையக மக்களிடம் அதிகரித்து வருகிறது. பாரபட்சமாகவும் கவனிப்பாரற்றும் அரசின் மருத்துவ சேவைகள் இருப்பதால் ஏராளமான சுகாதார சீர்கேடுகள் மலையகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் முதுமைக்கு முன்னதாகவே இறப்போர் அதிகரித்து வருகின்றனர்.

இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் தோட்டப்பாடசாலை முறைமையின் தரம் உயர்த்தப்படாமை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளின் படிப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 1931 ஆம் ஆண்டு இலவசக் கல்வியை இலங்கையில் அமுல்படுத்த முன்வந்த போது தோட்டப் பகுதிகளுக்கு அது தேவை இல்லை என இலங்கை அரசியல்வாதிகள் வாதிட்டதை மலையக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இன்று உயர் கல்வி பெற வேண்டுமாயின் பெருந் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் நெடுந்தொலைவு நகரங்களை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். போதிய வருமானம் இல்லாத பெற்றோர்களால் அனைத்து பிள்ளைகளையும் பணம் செலவழித்து வாகனங்களில் அனுப்பி படிக்க வைக்க முடியாத சூழ்நிலை மலையகத்தில் தோன்றி இருக்கிறது. இதனால் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் உயர் கல்வி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையகத்தில், கல்வியில் இடை நிறுத்தல் என்பது தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கிறது. தகுதி வாய்ந்த  ஆசிரியர்கள், பயிற்றுவிக்கப்பட்ட அறிவியல், கணித ஆசிரியர்கள் போதிய அளவு மலையகத்தில் இல்லாதிருப்பது பெரும் குறையாகக் காணப்படுகிறது. மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. தங்களின் உழைப்பு உணவுக்கே போதாத நிலையில் குழந்தைகளை எவ்வாறு படிக்க வைப்பது என்ற ஏக்கமும் வலியும் ஒவ்வொரு மலையக தொழிலாளியிடம் இருந்து வருகிறது .

மலையக மக்களுக்கான காணி, வீடு

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த தோட்டத் தொழிலாளர்கள் பல சந்ததிகளாக மலைநாட்டில் வாழ்ந்து வந்த போதும் அவர்களுக்கென ஒரு சிறு காணித்துண்டோ, வீடோ சொந்தம் என்று சொல்லிக் கொள்வதற்கு இல்லை. விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே குறைந்தளவு காணிகளை பெற்றவர்களாக இருக்கின்றனர். மிக அண்மைக் காலங்களில் இவர்களுக்கான வீடமைப்பு திட்டம் இலங்கை அரசால் கொண்டு வரப்பட்டது. இந்திய அரசின் உதவியுடனும் ஒரு சில வீடமைப்புத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வீடுகள் தேவைப்படும் தொழிலாளர்களின் தொகையுடன் ஒப்பிடும் போது  வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவான ஒன்றாகும். இதுவரை இருந்த வலி மிகுந்த லயன் வாழ்க்கை என்பது ஒரு சாபக்கேடு. தனித் தனியாக உரிமை உள்ள வீடுகள் என்பது அவர்களின் நீண்ட நாள் கனவு. எந்தவித பாரபட்சமும் பாராது வீடமைப்பு திட்டத்தை துரிதப்படுத்தி அனைத்து தொழிலாளர்களுக்கும், உரிமை உள்ள வீடுகளை வழங்க வேண்டியது சமூக அக்கறை கொண்ட சனநாயக அரசின் முக்கிய கடமையாகும்.

200 வருட காலம் தோட்டங்களில் வாழ்ந்து வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி பகிர்ந்தளிப்பில் இனத்துவத்தை அளவு கோலாக்குவது கண்டிக்கத்தக்கதாகும். இலங்கை நாட்டின் பொருளாதார கட்டமைப்புக்கு முதுகெலும்பாக இருந்தவர்களுக்கு பாரபட்சம் காட்டாது, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முன்வர வேண்டுமேயன்றி அவர்களை மேலும் மேலும் நசுக்கக் கூடாது. பெருந்தோட்டங்களே எங்களின் வாழ்வாதாரம் என அத் தோட்டங்களிலேயே 200 வருடங்களாக வாழ்ந்து கொண்டிப்பவர்கள் இன்று பகிர்ந்தளிக்கப்படும் நிலத்தின் மீது உரிமை கொள்ள பூரணத் தகுதி உடையவர்கள். அவர்கள் பாடுபட்டு உருவாக்கிய நிலத்தில் அவர்களுக்கான உரிமை வழங்கப்படவில்லை. ஒரு தேசத்தில் ஒட்டு மொத்தமாக ஒரு சமூகப் பிரிவினர் மட்டும் பின்தள்ளப்படுவது நியாயமாகாது. காணி பகிர்ந்தளிப்பில் தோட்டத் தொழிலாளர்களையும் இணைத்து அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியது இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் கடமையாகும்.

மலையக தேசிய இன அடையாளம் 

1964 இற்கு முன் இலங்கையின் இரண்டாவது பெரிய சமூகமாக இருந்து இன்று மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது சமூகமாக மாறியிருக்கின்ற மலையக மக்கள், 200 வருடங்கள் கடந்த நிலையில், ஒன்றுபட்ட இலங்கையில் தாங்கள் ஒரு தேசிய இனமாக கருதப்பட வேண்டும் என எண்ணுகின்றனர். அரசியல், பொருளாதாரம், சனநாயகம், சமத்துவம் போன்ற மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தேசிய இன அங்கீகாரமும், அடையாளமும் மிகவும் அவசியமாகும். தோட்ட தொழிலாளர்கள், கூலிகள், இந்தியத் தமிழர், இந்திய வம்சாவளியினர், வடக்கத்தையான், தோட்டக்காட்டான் என பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்பட்ட சமூகம் இன்று ‘மலையகத் தமிழர்’ என்ற கௌரவமான பெயருடன் தலை நிமிர்ந்து நடக்க விரும்புகிறது. இது புதிய சகாப்தத்தின் தொடக்கப் புள்ளியாகும். மலையகம் என்பது இச் சமூகத்தின் வரலாற்றுக் குறியீடாகவும் தேசிய இன அடையாளத்தின் முகமாகவும் விளங்குகிறது.

மலையகத்தை மையமாகக் கொண்டு இலங்கை தேசமெங்கும் கிளை பரப்பி கால் பதித்து வாழ்ந்து வரும் அனைவரும் மலையக மக்களே. திரு. லெனின் மதிவாணன் கூறுவதைப் போன்று மலையகத் தேசியத்தை வெறும் புவியியல் எல்லைக்குள் சுருக்கி விட முடியாது. மலையகத்திலும் மலையகத்திற்கு வெளியிலும் வாழ்கின்ற மலையகத் தமிழர்களை நான்காவது தேசிய இனமாக ‘மலையகத் தமிழர்’ என அழைப்பதும் அங்கீகரிப்பதும் நியாயமான கோரிக்கையாகும். மலையகமே இவர்களின் இன்றைய தாயகம். இன்றைய 99% மலையக மக்கள் இந்திய தேசத்தை கண்களால் கண்டிராதவர்கள். இந்தியா இவர்களின் இன்றைய தாயகம் அல்ல. இன்றைய சந்ததியினருக்கு இலங்கையே அவர்கள் பிறந்து வளர்ந்த மண். இலங்கையின் பெருந்தோட்ட செய்கை உட்பட அனைத்து உட் கட்டமைப்பு வசதிகள் ஏற்படவும் மேம்படவும் காரணமானவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள். இலங்கை நாட்டின் சகல அபிவிருத்திக்கும் உழைத்த இம் மக்கள் கேட்பது ‘மலையக தமிழர்’ என்ற தேசிய இன அடையாளமே. பச்சை நிற ஆடை அணிந்த பசுமையான மலையக மலைத் தொடர்கள் மிகவும் அழகானவை. ஆனால் அங்கே வாழும் மக்களின் வாழ்க்கை அழகானதாக பசுமையானதாக மாற்றியமைக்கப்படவில்லை. அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. இலங்கையின் ஏனைய மூன்று சமூகங்களை விட மலையக மக்கள் அனைத்து துறைகளிலும் பின்தங்கியவர்களாக, வஞ்சிக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.  

மலையக மக்கள் தங்களின் வாழ் நாள் முழுவதும் உழைக்கும் வர்க்கமாக மட்டுமே வாழ்ந்து வந்துள்ளனர். எந்த ஒரு வசதி வாழ்க்கையையும் இவர்கள் பெற்றதில்லை. கடந்த 200 வருட வாழ்க்கைப் பயணத்தில் இவர்கள் முதலாளி வர்க்கத்தினரால் அடிமைகளாக உரிமை இல்லாதவர்களாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் கடந்த  200 வருட வரலாற்றில் பெற்றதை விட இழந்தவைகளே அதிகம். இப்போது இவர்கள் இவ் வலிகளில் இருந்து விடுபட வேண்டும் என விரும்புகிறார்கள். அதன் ஒரு அங்கமாக தாங்கள் மலையகத் தேசிய இனம் என்பதை நிலை நிறுத்தத் தொடங்கி விட்டார்கள். முஸ்லிம் மக்களும் இலங்கைத் தமிழரும் ஒரு தேசிய இனமாகக் கருதப்படும் போது நாங்களும் ஒரு தேசிய இனமாக ஏன் கருதப்படக் கூடாது என்ற முழக்கம் மலையகம் எங்கும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

மலையகத் தமிழர் என்ற தேசிய இன அங்கீகாரம் என்பது தனி நாட்டிற்கான கோரிக்கை அல்ல என்பதை அரசும் ஏனைய சமூகங்களும் குறிப்பாக பெரும்பான்மைச் சிங்கள சமூகமும், ஆட்சியாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் போராட்டமானது வாழ்வாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்கானதேயன்றி, நாட்டை துண்டாடுவதற்கானதல்ல. தங்களை உலக அரங்கிலும் இலங்கையின் அரசியல் செயற்பாட்டிலும் நிலைநிறுத்திக் கொள்ள தங்களுக்கான அடையாளத்தை ஆழமாகப் பதிய விரும்புகிறார்கள். இது இவர்களின் திடீர் கோரிக்கை அல்ல. 1967 ஆம் ஆண்டுக்கு முன்பே மலையகம் என்ற முத்திரை அழுத்தமாக பதியப்பட்டு  அதனை ஒட்டி அனைத்துச் செயற்பாடுகளும் நடந்து வந்துள்ளன. இன்று மலையகத்தில் படித்தவர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், தொழில் அதிபர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என ஏராளமான அறிவார்ந்தவர்கள் எழத் தொடங்கியிருக்கிறார்கள். இலங்கை சமூகத்தில் இவர்களின் அடையாளம் தற்போது தனித்துவமாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது .

இந் நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறி 200 வருடங்கள் கடந்து பல தலைமுறைகள் ஆன பிறகும் அவர்களை ‘இந்தியத் தமிழர்’ என அடையாளப்படுத்த சிலர் முற்படுகின்றனர். அது ஒரு பகுதியினரின் சுயநலம் சார்ந்தது. அதில் சமூக நலன் இல்லை. அவ்வாறு இந்தியத் தமிழர் என அடையாளப்படுத்துவது ஏனைய சமூக மக்களிடம் இருந்தும் இலங்கைத் தேசியத்திலிருந்தும் அந்நியப்படுத்திக் கொள்வதாக அமைந்து விடும். இந்திய வம்சாவளி என்ற இன அடையாளமானது வரலாற்றைக் குறித்துக் காட்டுமேயன்றி அவர்களின் தேசிய இன அடையாளத்தை குறிப்பதாக அமையாது. மலையகத் தேசிய இனம் என்ற ஆரோக்கியமான பயணத்தில் இந்தியத் தமிழர் என்ற அடையாளத்தை தவிர்த்து முன்நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் மலையக மக்கள் இருக்கிறார்கள்.

மலையக மக்களின் 200 வருட வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், அநீதிகள் ஏராளம். காணி உரிமை, கல்வி உரிமை, வீட்டு உரிமை, உழைப்புக்கேற்ற ஊதியம் என அனைத்தும் மறுக்கப்பட்ட வலியோடு வாழும் அவர்களிடம் தற்போது அவற்றை அடைந்தே தீருவது என்ற உத்வேகம் எழத் தொடங்கி இருக்கிறது. மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பு, குடியுரிமை இழப்பு, பலவந்தமாக நாடுகடத்திய 1964 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய உடன்படிக்கை, 1971 ஆம் ஆண்டு  உள்நாட்டு கிளர்ச்சி, 1972 இல் தோட்டங்கள் தேசிய மயம், உணவுப் பஞ்சம், 1977 – 1981 – 1983 ஆகிய ஆண்டுக் காலப் பகுதிகளில் ஏற்பட்ட இன வன்முறை போன்ற பல்வேறு நிகழ்வுகள் மலையக மக்களின் தேசிய இன உணர்வை அதிக அளவில் எழுச்சி பெறச் செய்துள்ளன. தலை நிமிர்ந்து நிற்கும் உரிமையும் தகுதியும் இந்த இனத்திற்கு நிச்சயம் உண்டு. முல்லோயா கோவிந்தன் தொடங்கி பல போராளிகளை உரிமைக்காக பலி கொடுத்த வரலாற்றை உடைய மலையக மக்கள் வலி நீங்கி வாழப் போராடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். உரிமைகள் உள்ள வாழ்விற்காக காத்திருக்கிறார்கள். கதவுகள் திறக்கப்பட வேண்டும். விடியல் விரைந்து வர வேண்டும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5629 பார்வைகள்

About the Author

எஸ். இஸட். ஜெயசிங்

‘மலையம் 200’ நிகழ்வுகளை முன்னிட்டு, விம்பம் அமைப்பினரால் எழுநாவின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் இஸட். ஜெயசிங் அவர்களால் எழுதப்பட்ட ‘மலையகத் தமிழர் எனும் தேசிய இன அடையாளப் பயணம்’ எனும் இக் கட்டுரை ஆறுதல் பரிசைப் பெற்றது.