Arts
16 நிமிட வாசிப்பு

இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் : ஒரு காலக்கணக்கெடுப்பு – பகுதி 2

January 26, 2024 | Ezhuna
மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அதற்கேற்ப, விம்பம் அமைப்பு எழுநாவின் அனுசரணையுடன் கட்டுரைப் போட்டியொன்றை நடத்தியது. இப் போட்டியில் வெற்றி பெற்ற வெவ்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் 'மலையகம் 200' எனும் தலைப்பில் தொடராக எழுநாவில் வெளியாகின்றன.

கோ.ந. மீனாட்சியம்மாள் : மலையக இலக்கியத்தின் முதல் பெண் குரல் 

meenadchi ammaal

நடேசய்யருடன் இணைந்து மலையகத் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்த பெண் ஆளுமையாக கோ.ந. மீனாட்சியம்மாளைக் குறிப்பிடுகின்றனர். ‘ஈழத்தின் முதல் பெண் கவிஞர், பத்திரிகையாளர், அரசியல் செயற்பாட்டாளர் என்றெல்லாம் முதன்மைப்படுத்துகிறார் செ. யோகராசா (2007:43). முன்னோடி அரசியல் தொழிற்சங்க செயற்பாட்டாளரென குறிப்பிடுவதோடு பாரதியை மலையகத்தில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடி என்று எழுதுகிறார் லெனின் மதிவானம் (2012:34). நடேசய்யருக்கு சமாந்தரமாகவும் அவருக்குப் பின்னரும் மலையக மக்களின் பிரச்சினைகளை பிரக்ஞைபூர்வமாக விளங்கிக்கொண்டு அம்மக்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தியதோடு அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர். ‘இந்தியர்களது இலங்கை வாழ்க்கை நிலைமை’ என்ற அவரது கவிதை நூல் அக்காலத்தில் இடம்பெற்ற அரசியல் பிரச்சினைகளை ஒரு சிறுபான்மை இனத்தவராக இருந்து அவதானிக்கும் தொனியில் எழுதப்பட்டது. அவரது கவிதைகளில் சிங்கள இனவாத எதிர்ப்பும், இந்திய தொழிலாளர்கள் இலங்கை தேசிய அடையாளத்துக்குரியவர்கள் என்று வலியுறுத்துவதையும் காணலாம். மீனாட்சியம்மாளின் கவிதைகள் பல்வேறு வகையில் முக்கியத்துவமுடையவை. பெரும்பாலும் தொழிலாளர் பற்றி தீவிரமாக எழுதும் போக்கு அவரது எழுத்துக்களிலிருந்தே ஆரம்பமாகிறது. ‘இந்திய தொழிலாளர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை (1940)’ என்ற நூலில் தொழிலாளர்களின் ஆபத்தை எதிர்த்து குரல்கொடுத்துப் பாடியதுடன் தொழிலாளர்களை தமது உரிமைக்காக தீவிரமாக போராடும்படியும் எழுதுகிறார். “லங்கா மாதா நம்மதாய் தான் இந்த நாட்டினில் எல்லோரும்  அவளுக்குச் சேய்தான்” என்று பாடுவதிலிருந்து இந்திய வம்சாவளி தொழிலாளர்களை இலங்கைத் தேசியத்திற்குரிய குடிகளாக கருதும்போக்கு மீனாட்சியம்மாளிலிருந்து தொடங்குவதை அறியமுடிகிறது (கோ.ந. மீனாட்சியம்மாள்,1940). 

பாரதியின் கவிதை வடிவங்களையும் தொழிலாளர்களது கும்மி வடிவங்களையும் அவர் அதிகமாக பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மலையக சமூகத்தில் இக்காலகட்டத்தில் நடேசய்யர் மற்றும் மீனாட்சியம்மாள் ஆகியோரது தொழிலாளர் சார்ந்த பார்வைகளோடு இதே காலப்பகுதியில் இயங்கிய எச். நெல்லையா மற்றும் ஆ. போல் ஆகியோரது எழுத்துக்களையும் நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக அக்காலத்தில் புனைவுத்துறையில் (நாவல்கள்) இவர்களது எழுத்து, ஆரம்பத்தைக் கொண்டிருந்த போதிலும் அவர்களால் எழுதப்பட்ட நாவல்கள் எவற்றிலும் அக்காலத்தின் எரியும் பிரச்சினைகள் எவையும் தலைகாட்டவில்லை என்பது மனங்கொள்ளத்தக்கது.

தொழிற்சங்க உருவாக்க காலத்தில் தோற்றம் பெற்ற எழுத்து முயற்சிகளில் கோ. நடேசய்யர், கோ.ந. மீனாட்சியம்மாள், ஆ. போல், எச். நெல்லையா ஆகியோரது எழுத்துக்கள் மட்டுமல்லாது அக்கால பத்திரிகை எழுத்துக்கள் பற்றியான முழுமையான மீள்வாசிப்பு அவசியம். இரண்டாவதாக, இப்படைப்புகள் சார்ந்திருக்கும் கருத்துநிலைகள் பற்றிய ஆராய்ச்சியும் மலையக சமூகத்தின் வரலாற்று எழுதுநிலையில் இன்றியமையாதவையாகும்.

தொழிற்சங்கப் போராட்டக் காலம்

ஏ.ஈ. குணசிங்கா, கோ. நடேசய்யர் வழியாக உருவாக்கம் பெற்ற தொழிற்சங்கங்கள் மலையகத் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை செய்துவந்த நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை முன்னிலைப்படுத்திய பல இடதுசாரித் தொழிற் சங்கங்களும் இயங்கத்தொடங்கின. குறிப்பாக, லங்கா சமசமாஜக் கட்சி மலையகத்தில் இக்காலத்தில் தொழிற்சங்க பணியினை ஆரம்பித்திருந்தது. 1937ம் ஆண்டில் ஹேவாஹெட்டயில் நடந்த போராட்டத்தில் லங்கா சமசமாஜக் கட்சி பெரும் பாத்திரத்தை ஏற்றிருந்தது. 1940ம் ஆண்டு புசல்லாவை ஸ்டெலன்பேர்க் தோட்டத்தில் நடந்த போராட்டம் தொழிற்சங்க பின்னணி கொண்டதாகவே அமைந்தது. இக்காலப்பகுதி மலையகத்தில் தொழிலாளர்களிடையே தொழிற்சங்க ஈடுபாடு மிகவும் கொதிநிலையில் இருந்த காலமாகும். தொழிலாளர்கள் தமது விடுதலையையும் சுதந்திரத்தையும் தொழிற்சங்க ரீதியாக அடைந்துகொள்ளலாம் என்ற உணர்வுடன் செயற்படத் தொடங்கிய காலத்தில்தான் இலங்கை இந்திய காங்கிரஸ் (1939) தொழிலாளர் நலன் சாராத சிந்தனைகொண்ட ஒரு குழுவினரால் உருவாக்கப்படுகிறது. 1940கள் தொடக்கம் 1950 வரையான காலப்பகுதியில் மலையகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றதையும் அதனால் பல தொழிலாளர்கள் உயிர்த்தியாகம் செய்திருந்தமையையும் அறியமுடிகிறது. 1940ம் ஆண்டு முல்லோயா போராட்டத்தில் கோவிந்தன் உயிர்ப்பலியானார். 1941ம் ஆண்டு ஸ்டெலன்பேர்க் தோட்டம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடந்த கெடுபிடிகளுக்கெதிராக போப் துரையை கொலை செய்த வழக்கில் வேலாயுதம், வீராசாமி ஆகிய இரு தொழிலாளர்கள் தூக்கிடப்பட்டு உயிர்ப் பலியாகின்றனர். இப்போராட்டங்களை முன்னிலைப்படுத்திய எழுத்துக்கள் எதுவும் வெளிவரவில்லை. தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தை தழுவி சாரல்நாடன் அவர்கள் எழுதிய ‘வானம் சிவந்த நாட்கள்’ என்ற நாவல் வெளிவந்தது. தொழிற்சங்கப் போராட்டங்களை மையப்படுத்தி வெளிவந்த முதல் நாவலாக இந்நாவல் விளங்குகிறது.

Saaralnaadan

இலக்கிய எழுச்சிக் காலம் 

நாற்பதுகளுக்கு பின்னர் எழுந்த தொழிற்சங்க அரசியல் போராட்டங்கள் நாற்பதுகளின் இறுதியில் பல்வேறு அதிர்வலைகளைத் தோற்றுவித்தது. இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்தின. 

  1. நடேசய்யரால் தோற்றுவிக்கப்பட்ட தொழிற்சங்கச் சிந்தனை இடதுசாரிகள் மலையகத்தில் வேரூன்றல்.
  2. பிரேஸ் கேடில் (L.S.S.P) போன்ற பிரித்தானிய இடதுசாரி சிந்தனை கொண்ட சமூகச் செயற்பாட்டாளர்களின் தலையீடு.
brace

1935ம் ஆண்டு இலங்கை வந்த பிரித்தானியரான மார்க் என்டனி பிரேஸ்கேடில் இடதுசாரி சிந்தனைகொண்டவராக இருந்ததோடு லங்கா சமசமாஜக் கட்சியுடன் இணைந்து தொழிலாளர்களுக்கு சார்பாகக் குரல் கொடுத்தவராகச் செயல்பட்டார். இவரது தீவிரமான போக்கை ‘பிரேஸ் கேடில் சம்பவம்’ என்றே பலர் குறிக்கின்றனர். மாறாக அவர் துரைமார்களின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் நடேசய்யர், மீனாட்சியம்மாளுடன் இணைந்து தோட்டத் தொழிலாளர் மத்தியில் உரையாற்றினார். தொடர்ந்து மலையகத்தின் பல்வேறு இடங்களில் மாநாடுகள் இடம்பெற்றன. 1945, 1946, 1947, 1948, 1949 ஆகிய ஆண்டுகளிலும் அதன் பின்னரும் இடம்பெற்ற மாநாடுகள் தொழிலாளர் நலன் சார்ந்தவையாகவே அமைந்தன. இம்மாநாடுகளில் அவர் பங்கேற்று உரையாற்றினார். பிரேஸ் கேடில் தோட்டத் துரையாக வந்த பிரித்தானியராக இருப்பினும் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர் அனுபவிக்கும் துயரங்களைக் கண்டு அவர்களது விடுதலைக்காக குரல் கொடுத்தார் என்பதே முக்கியமானது. இவ்வாறான தொழிற்சங்க உணர்வுகலந்த போக்கு தொழிலாளர்களின் போராட்டத்தை மேலும் ஊக்குவித்தது. 1947ம் ஆண்டு 1,25,000 தொழிலாளர்கள் கலந்துகொண்ட, 27 நாட்கள் நடைபெற்ற ஹர்த்தால் (Plantation Association Review) தொழிலாளர்கள் வீறுபெற்றெழுந்த வரலாற்றுக்குச் சான்றாகும். இவ்வாறான போராட்டங்கள் அவர்களை இலங்கைத் தேசியத்துக்குரியவர்களாக சிந்திக்க வைக்கத் தூண்டின.

மலையகத் தொழிலாளர்களது இவ்வாறான தேசிய உணர்வுசார்ந்த சிந்தனைகள் இக்காலப்பகுதியில் (1948ல்) இந்திய எதிர்ப்புவாதம் மேலோங்குவதற்கான தூண்டலைத் தொடக்கி வைத்தது. இதன் விளைவாக குடியுரிமைச் சட்டம் (1948), இந்திய பாகிஸ்தானிய குடியிருப்பாளர் சட்டம் (1949), இலங்கை பாராளுமன்ற திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து 1956ம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டமும் மலையகத் தமிழர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருந்தது.

மலையக இலக்கிய எழுச்சியில் சி.வி. வேலுப்பிள்ளை 

மலையக மக்களது தொழிற்சங்க அரசியல் பணிகளை தோற்றுவித்ததில் நடேசய்யருக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்ததோ அதேபோலவும் அவருக்கு அடுத்த கட்டத்திலும் அப்பணிகளை மேற்கொண்டதில் சி.வி. வேலுப்பிள்ளை மிக முக்கியமானவர். நடேசய்யர் சட்டசபை உறுப்பினராக கடமையாற்றிக்கொண்டிருந்த காலத்திலேயே சி.வி. வேலுப்பிள்ளையும் தொழிற்சங்க அரசியல் பணிகளைத் தொடங்கியிருந்தார். ஆரம்பத்தில் இலங்கை இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும் அவர் இருந்தார். எனினும் இலங்கை இந்திய காங்கிரஸின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்ட கொள்கையுடையவராய் இருந்தார். இலங்கையிலே பிறந்து (1914) மலையக மக்களைப் பற்றி நேரடியாக அறிந்திருந்தமையால் இம்மக்களுக்காகக் குரல் கொடுத்தார். சி.வி யின் முதலாவது நாடாளுமன்ற உரை இவ்வாறு அமைந்ததாக சாரல் நாடன் எடுத்துக்காட்டுகிறார். 

cv veluppillai

“இடதுசாரி குழுவினரைச் சார்ந்தவன் நான். இப்படிச் சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை. இந்த நாட்டின் மறுமலர்ச்சிக் குழுவினராக அவர்களே இருக்கின்றார்கள். நான் இந்த நாட்டில்தான் பிறந்தேன். என் கண்கள் ஒளியைத் தரிசித்தது இந்த பூமியில்தான். இறுதியாக நான் கண்களை மூடுவதும் இந்த நிலமாகத்தானிருக்கும்.” 

சி.வி. தொழிற்சங்க இயக்கத்தின் மீதும், தொழிலாளர்களின் விடுதலைக்குரிய மார்க்கங்களை தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் வலுப்படுத்த முடியுமென்றும் நம்பிக்கை கொண்டிருந்தார். இதனையே அவரது இலக்கியங்களிலும் பிரதிபலித்தார். சி.வி யின் எழுத்துக்கள் “ஒரு தொழிற்சங்கவாதியின் இலக்கிய குரலாகவே ஒலித்தது.” சி.வி யின் ஆரம்பகால எழுத்துக்களை விட (விஸ்மாஜினி, 1934) பிற்கால எழுத்துக்களே இம்மக்களின் வாழ்வியலை மிக நெருக்கமாகவும் தீவிரமாகவும் பேசின. (நாடற்றவர் கதை, 1987)சி.வி. யின் எழுத்துக்களில் கவிதை, நடைச்சித்திரம், நாவல்கள், கட்டுரைகள், குறிப்புகள் என்பவை முழுமையாக ஆராயப்படாத நிலையில் சி.வி யின் எழுத்துக்கள் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. “சி.வி வாழ்ந்த காலத்தில், எழுச்சி பெற்ற போராட்டங்களை அவை முதன்மைப்படுத்தவில்லை. அவலங்களையும், சோர்வு வாதத்தையுமே அவை வெளிப்படுத்தின. மலையக சமூக இருப்புக்கான உணர்வுநிலையை பிரதிபலிக்கவில்லை” என்று லெனின் மதிவானம் (இர. சிவலிங்கம் குறிப்பிட்டதாகவும்) தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சி.வி யின் எழுத்துக்களை முழுமையாக வாசிக்கப்படாமலிருக்கின்ற சூழ்நிலையில் அவரது படைப்புகளை ஆராய்ந்து, மலையகத் தமிழரின் வரலாற்று காலவோட்டத்தில் சி.வி யின் பாத்திரத்தை சரியாக முன்வைக்க வேண்டுமென்பதே எனது கருத்து. எவ்வாறிருந்தாலும் மலையக இலக்கிய எழுச்சியில் ஒரு மடைமாற்றம் சி.வி யின் எழுத்துக்களிலிருந்தே தொடங்குகிறது.

மக்கள் இலக்கியமாக வீதிப்பாடல்கள் 

மலையக சமூக உருவாக்கத்தில் 50கள் மிகவும் எழுச்சி மிக்க காலமாகவே பலராலும் கணிக்கப்படுகின்றது. தொழிற்சங்க போராட்டங்கள் உக்கிரமடைந்த இக்காலப்பகுதியிலேயே தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கெதிராக பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இதே காலப்பகுதியில் தொழிற்சங்க ரீதியாக மக்கள் அணித்திரளும் செயற்பாடுகளும் பல்வேறு சமூக இயக்கங்களும் தோன்றுகின்றன. இக்காலப்பகுதியில் பல சஞ்சிகைகளும் தோன்றுகின்றன.

மலையக மக்களது இலக்கிய உருவாக்கத்தில் தனிமனிதர்களது எழுத்துக்கள் மக்களை கவனப்படுத்தியதைவிட வீதிப் பாடல்கள் போன்ற கூட்டு இலக்கியங்கள் மக்களையும் அவர்களது பிரச்சினைகளையும் மிக நெருக்கமாக வெளிக்கொண்டுவந்தன. முக்கியமாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள், தோட்டத்துரை மற்றும் அதிகாரிகளைத் தாக்கி கொலை செய்தமையை ஆதரித்து, அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்டித்து, தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பல வீதிப்பாடல்கள் உருவாக்கப்பட்டன. இப்பாடல்களை பாடிக்கொண்டே பிரச்சாரம் செய்தமையும், சிறிய பிரசுரங்களாக அதனை அச்சிட்டு வெளியிட்டமையும் மலையகத்தின் பிரதான நகரங்களில் மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அதனை விநியோகம் செய்தமையும் மலையக மக்கள் இலக்கிய வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இலக்கியச் செயற்பாடாகவே மதிப்பிட முடியும். இவ்வாறானதொரு இலக்கியப் போக்கை மலையக இலக்கிய உருவாக்கத்தில் தனித்துவமான அம்சமாகவும் கொள்ள முடியும்.

அட்டன் வெலிஓயா படுகொலை (1957), திக்குவலை புதுக்காடு மேல்கணக்கு (1955), நாவலப்பிட்டி லெட்சுமி தோட்டம் படுகொலை (1959, உடப்புசல்லாவ பங்களவத்தை படுகொலை (1957), நுவரெலியா மாசா பணியகணக்கு படுகொலை (1966) ஆகிய படுகொலைகளைப் பற்றி ‘படுகொலைச்சிந்து’ என்ற தலைப்பில் பல பாடல்களை பாடியுள்ளனர். இப்பாடல்கள் தொழிலாளர்கள், கணக்குப் பிள்ளைகளை படுகொலை செய்தமைப் பற்றியும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் கொலை செய்யப்பட்டவர்கள் பற்றியும் பாடப்பட்டவையாக அமைந்துள்ளன. இவர்களில் கே.கே.எஸ். ஜில், கோவிந்தசாமி தேவர், கா.சி. ரெங்கநாதன், பெரியக்காள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

“புதுக்காட்டு மேக்கணக்கில் போட்டபோடுங்க
கணக்கன் பாட்டை கேளுங்க
கையுமே துண்டு ரெண்டுங்க
அடடா வெட்டு ஒன்னுங்க – சேர்ந்த
கணக்கன் பாடு திண்டாட்டமே தாங்க
நன்றாய் கேட்டு பாருங்க”

சமூக, அரசியல், கலை, இலக்கிய இயக்கங்களின் உருவாக்கமும் அவற்றின் செயற்பாடுகளும் 

ஐம்பதுகளின் பின்னர் மலையகத்தில் இயக்க ரீதியான சிந்தனைகள் வளர்ச்சியடைந்தன. தொழிற்சங்க ரீதியாக வளர்ச்சியடைந்த அமைப்பாக்க சிந்தனைகள் ஐம்பதுகளில் பல்வேறு கிளைகளாக வளர்ச்சி பெற்றன. சமூக சீர்த்திருத்த இயக்கங்கள், வாலிபர் இயக்கங்கள் (சங்கங்கள்) இலக்கிய அமைப்புகள், மன்றங்கள் என்று பல்வேறு அமைப்புகள் உருவாகிச் செயற்பட்டன. இவை மக்கள் நலன் சார்ந்த ஈடுபாட்டை கொண்டனவாகவே இயங்கின. ‘இந்திய வம்சாவளி தமிழர்’ என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் ‘மலைநாடு’ என்ற சொற்பிரயோகத்தை பாவிக்கத் தொடங்கியதும் இக் காலப் பகுதியிலேயாகும். குறிப்பாக மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம், மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் போன்ற அமைப்புகளுடன் நின்றுவிடாது மலைமுரசு, மலைமுழக்கம், மலைநாடு முதலிய பத்திரிகைகளும் தோற்றம் பெற்று தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கத் தொடங்கின. சி.வி. வேலுப்பிள்ளை எழுதிக்கொண்டிருந்த காலப்பகுதியிலேயே என்.எஸ்.எம். ராமையா, கோகிலம் சுப்பையா, தெளிவத்தை ஜோசப் போன்ற புனைக் கதையாசிரியர்களும் எழுதத் தொடங்கினர். தமது எழுத்துகளில் இவர்கள் மலையகச் சமூகத்தைப் பகுதியளவில் சித்தரித்தார்கள். சி.வி, மலையகச் சமூகம் பற்றிய முழுப் பிரக்ஞையை தனது எழுத்தில் பிரதிபலித்தார். இதுவே அவர்களிலிருந்து சி.வி வேறுபடுமிடம்.

மலையகத்தில் தி.மு.க வின் உதயமும் எழுத்து முயற்சிகளும் 

மலையகத்தில் ஐம்பதுகளில் எழுச்சிபெற்ற இயக்கங்களில் தி.மு.க வின் வகிபங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாவலர் ஏ. இளஞ்செழியன் மற்றும் அவரைச் சார்ந்த குழுவினர்களால் தோற்றுவிக்கப்பட்ட தி.மு.க, தொழிலாளர்களின் விடுதலை சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. மாறாக தொழிலாளர்களிடையே நிலவிய பண்பாட்டு பின்னடைவுகளை களைவதற்கான சமூகச் சீர்திருத்தங்களையே முன்வைத்தார்கள். தோட்டங்கள் தோறும் தி.மு.கவினர் பல மன்றங்களை அமைத்தார்கள், நாடகங்களை மேடையேற்றினார்கள், சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள். இந்த கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட சக்தி பால அய்யா முதல் பல கவிஞர்கள் வரை தி.மு.கவின் கொள்கைகளையே பிரதானமாகத் தமது படைப்புகளில் முன்வைத்தனர். மலையகத் தொழிலாளர்களுடைய பிரதான பிரச்சினைகளை அவர்கள் தமது கவிதைகளில் வெளிக்கொண்டுவரவில்லை.

மலையகத் தேசியம் : உருவாக்கமும் சிதைவுகளும் இலக்கியச் சான்றுகளும் 

நாற்பதுகளில் முளைவிடத் தொடங்கிய தேசிய உணர்வுகள் அறுபதுகளில் மிகவும் கனதியுடன் வீறுகொள்ளத் தொடங்கின. இக்காலத்தில் மலையகத்தில் கல்வி கற்ற முதலாவது மத்தியதர வர்க்கத்தினர் உருவாகத் தொடங்குகின்றனர். தோட்டப்புறப் பாடசாலைகளை அரசாங்கமயப்படுத்துகின்ற நிகழ்வுகளும் இக்காலத்தில் இடம்பெறுகின்றன (ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகவிருந்த அஸிஸால் பதுளை பாரதி ராமசாமியினால் நடாத்தப்பட்டு வந்த பாடசாலை முதலாவதாக அரசமயப்படுத்தப்பட்டது). அதுவரையில் மலையகத் தொழிற்சங்க பணிகளில் ஈடுபட்டுவந்தவர்களாலேயே பேசப்பட்டு வந்த மலையக இலக்கியம் தோட்டங்களில் உத்தியோகம் செய்தவர்களால் பேசப்பட ஆரம்பித்தது(தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம். ராமையா). இர. சிவலிங்கம், எஸ். திருச்செந்தூரன் போன்ற கல்வியியல் சார்ந்த செயற்பாட்டாளர்கள் உருவாகியதோடு அவர்களால் குறிப்பிட்ட சில மாணவர் பரம்பரையினரும் தோற்றுவிக்கப்பட்டனர். ஏற்கனவே இருந்துவந்த இடதுசாரிச் சிந்தனை கொண்ட பலரும் மலையகத்தில் செயற்படத் தொடங்கியதுடன் மலையகத்தில் இடம்பெற்ற தொழிலாளர் போராட்டங்களிலும் அவர்கள் பின்னணியில் இருந்து செயற்பட்டனர். மொழியுரிமைக்காகப் போராடிய ஐயாவு, பிரான்ஸிஸ் ஆகியோரது உயிரிழப்பும் டயகமப் போராட்டம், கீனாக்கலை போராட்டம் முதலிய மக்கள் சார்ந்த போராட்டங்கள் இக்காலப்பகுதியில் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. காலனித்துவ சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் சிங்களவர்களிடையே பௌத்த மேலாதிக்கச் சிந்தனை வளர்ச்சியடையத் தொடங்கியது. சிறுபான்மை இனங்கள் தேசிய இனமாக வளர்வதை விரும்பாத மனோநிலையால் அவ்வினங்கள் மீதான ஒடுக்குமுறையும் பரவலாக இடம்பெற்றன. இக்காலப்பகுதியில் ஒன்பது இலட்சத்துக்குமேல் மலையகத் தமிழர்கள் இலங்கையில் இருந்ததை அறியமுடிகிறது. இவ் எண்ணிக்கையின்படி இரண்டாவது சிறுபான்மை இனமாக இருந்த மலையகத் தமிழர்களை நாடுகடத்தும் முயற்சிகள் இக்காலப்பகுதியிலேயே இடம்பெறத் தொடங்கின. இதன்படி 1965 ஆம் ஆண்டு ‘சிறிமா-சாஸ்திரி  ஒப்பந்தம்’ நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நாட்டில் பெரியளவான சனத்தொகையுடன், தேவையான நிலவுரிமையுடனும், மொழியுரிமையுடன் ஒரு தேசிய இனத்துக்குரிய அடையாளங்களுடன் இருந்த மலையகத் தமிழர்கள் சிதைக்கப்படுகின்றனர். ஏறத்தாழ ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு பெருந்தொகையான எண்ணிக்கையைக் கொண்ட மலையகத் தமிழர்கள் சிதைக்கப்பட்டமையால் மிகத்தீவிரமாக வளர்ந்துவந்த மலையகத் தேசிய எழுச்சி சார்ந்த சிந்தனைகளும் சிதைக்கப்பட்டன.

மலையகத் தமிழர்கள் : புலம்பெயர்வும் புலம்பெயர்வு இலக்கியமும் 

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் இடம்பெற்றதும் மலையகத்தை வாழ்விடமாக கொண்டவர்களும், மலையகத்தில் பிறந்து வளர்ந்தவர்களும், இங்கு வந்து சேர்ந்தவர்களும் வெவ்வேறு வகையில் சிதைந்தனர். குறிப்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் கூட தனித்தனியாகப் பிரியவேண்டிய நிலை உருவானது. இந்த பிரிவு மற்றும் பிரஜாவுரிமை பறிப்பானது நாடற்றவர்களாகி, மண்ணையும் இழந்து புலம்பெயர்கின்ற நிலையை உருவாக்கியது. மலையக மண்ணிலிருந்து மீண்டும் பலர் இந்தியாவுக்கே (தாயகம்) புலம்பெயர்ந்தார்கள். தமிழகம் மட்டுமல்லாது கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் இவர்களை புலம்பெயர நிர்ப்பந்தித்தது. இந்த புலம்பெயர்வானது இந்தியாவை தாயகமாக கொள்ளாத இலங்கையில் பிறந்தவர்களையும் இடம்பெயர வைத்தமை ஒரு துயர சம்பவமாக அமைந்தது. இவ்வாறு சிதைக்கப் பட்டவர்கள் உள்ளூரில் பல இடங்களில் தலைமறைவாக வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற முதலாவது புலம்பெயர்வாக கொள்ளப்படும் இப்புலம்பெயர்வு எமக்கு புலம்பெயர்வு இலக்கியமென்ற புதிய இலக்கிய வகையை உருவாக்கியது. குறிப்பாக மலையகத்திலிருந்து புலம்பெயர்ந்த இர. சிவலிங்கம், அரு. சிவானந்தன், சி. பன்னீர்செல்வம், மு.சி. கந்தையா போன்ற எழுத்தாளர்களை மலையகத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களாக கொள்வதுடன் இவர்களால் எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளை ‘மலையக புலம்பெயர்வு இலக்கியமாகவே’ கொள்ள முடியும். அறுபதுகளில் எழுதத்தொடங்கிய அரு. சிவானந்தன் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் பின் பிரியவரும்போது ‟சென்று வருகிறேன் என் ஜென்ம பூமியே” என்று எழுதுகின்றார்.

“நான் பிறந்த நாட்டினிலே
நான் இருக்க விதியில்லை
என் ஜென்ம பூமியிலே
எனக்கு உரிமையில்லை
என்றக்கால்
வேதனைகள் முட்டாதோ?”

என்று எழுதும்போது மலையகம் அவரது தேசம் என்ற மனவுணர்வு தோன்றுகிறது. இதேபோல சி. பன்னீர்செல்வம் அவர்கள் ‘எந்தன் தேசம் எது?’ (ஒரு சாலையின் சரிதம்) என்ற கவிதையிலும் தேசியம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறார். இவ்வாறு இலங்கையின் மிக முக்கியமான சிறுபான்மைத் தேசியமாக இக்காலப்பகுதியில் எழுச்சி பெற்ற மலையகத் தமிழர்கள் எவ்வாறு சிதைக்கப்படுகிறார்கள் என்பதை ‘சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்’ (2015) என்ற நூலில் மு.சி. கந்தையா புள்ளிவிபரங்களுடன் ஆராய்ந்துள்ளார். அறுபதுகளில் அரசியல் எழுச்சியும் இலக்கிய எழுச்சியும் இணைந்தே பயணிக்கின்றன. மலையகத் தொழிற்சங்க போராட்டமும் மக்கள் போராட்டமும் வீறு கொண்டு சென்றமைக்கு முற்பட்டகால தொழிற்சங்க அரசியல் செல்நெறிகள் காரணமாயமைந்தன. குறிப்பாக இடதுசாரி இயக்கங்கள் மலையக மக்களுடன் இணைந்து செயற்பட்டமைக்கும் ஆப்பிரகாம் சிங்கோ போன்ற சிங்கள இளைஞர்கள் மலையக மக்களது தொழிலாளர் போராட்டங்களில் இணைந்தமைக்கும் இது சான்றாகிறது. இக்காலப்பகுதியில் மலையகத் தமிழர்களது வாழ்வியல் பிரச்சினைகளை அழகியலுடன் எழுதுகின்ற போக்கு உருவாக் தொடங்குகிறது. சி.வி. வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம். ராமையா, கோகிலம் சுப்பையா ஆகியோரது பின்னணியில் தெளிவத்தை ஜோசப், மு. சிவலிங்கம் ஆகியோரது சிறுகதைகள் மற்றும் நாவல்களும் வெளிவரத் தொடங்குகின்றன. சி.வி யின் In Ceylon Tea Garden, வாழ்வற்ற வாழ்வு (1960), என்.எஸ்.எம்.ராமையாவின் ஒரு கூடை கொழுந்து தொகுப்புச் சிறுகதைகள், மு.சி. யின் பேப்பர் பிரஜைகள் போன்ற படைப்புகள் மலையக வாழ்வியலின் அவலங்களை மட்டுமல்லாது தனித்துவமான அடையாளங்களையும் சித்திரித்துக் காட்ட முனைந்தன.

Sithaikkappadda Thamizharkal

அறுபதுகளில் மலையக எழுத்துத்துறையில் ஏற்பட்ட புதிய மாற்றங்களில் ஒன்று இலங்கையில் தோன்றிய தேசியப் பத்திரிகைகளான தினகரன் மற்றும் வீரகேசரி ஆகியவற்றில் இக்கால எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கியமையாகும். சி.வி. வேலுப்பிள்ளை, தெளிவத்தை ஜோசப் ஆகியோரது நாவல்கள் இப் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தவைகளேயாகும். இப்பத்திரிகை எழுத்துக்கள் மலையக சமூகம் குறித்து வெளியில் உள்ள சமூகத்தவர்கள் அறிந்து கொள்ளவும் அவர்களைப் பற்றி எழுதவும் சிந்திக்கத் தூண்டின.

மலையகத் தமிழர்கள் பற்றி மலையகத்துக்கு வெளியில் வசிக்கின்ற இலங்கையர்கள் எழுதத் தொடங்கியதும் அறுபதுகளுக்கு பின்னரே. அறுபதுகளில் ஏற்பட்ட சிதைவுகளும், இடம்பெயர்வுகளும், தேசிய பத்திரிகைகளின் தோற்றமும் இவ்வாறான பின்னணியை உருவாக்கின. அறுபதுகளின் பின்னர் எழுதப்பட்ட இலக்கியங்களில் இரண்டுவிதமான போக்குகள் காணப்பட்டன. முதலாவது தொழிலாளர்களது பிரச்சினைகளையும் அவர்களது போராட்டங்களையும் நேரடியாக இலக்கியங்களில் வெளிப்படுத்துவது (வீதிப்பாடல்கள்). இரண்டாவது தொழிலாளர் பிரச்சினைகளை நேரடியாக அல்லாது அதிலிருந்து வேறுபட்ட கோணத்தில் அழகியலுடன் எழுதுகின்ற போக்கு (தெளிவத்தை ஜோசப்).

தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டமை – மலையகத்தை  சாராத எழுத்தாளர்களது படைப்புகள் 

1972ம் ஆண்டு அரசியலமைப்பு கொள்கைகளுக்கேற்ப பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேயிலைத் தோட்டங்கள் இறப்பர் தோட்டங்கள் எல்லாவற்றையும் அரசு பொறுப்பேற்றது. இதன் விளைவாக சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலமாக மலையகத் தமிழர்களே வாழ்ந்து வந்த பெருந்தோட்ட நிலப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்க ஆரம்பிக்கப்பட்டன. பிரதான நகரங்களை அண்மித்த நிலப்பகுதிகளில் காணிச் சுவீகரிப்பும், நிலங்களை கைப்பற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக சிவனு, லெட்சுமணன் போன்ற தியாகிகள் போராடி உயிர் துறந்தனர். மலையக இலக்கிய போக்குகளில் முக்கியமான சில மாற்றங்கள் இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்றன. குறிப்பாக இலங்கையின் வேறு பிரதேசங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தொழில் நிமித்தம் மலையகப் பிரதேசங்களுக்கு வந்ததோடு மலையகத் தமிழர்களது பிரச்சினைகளை தமது எழுத்துக்களில் வெளிக்கொண்டுவரும் முயற்சிகளை மேற்கொண்டனர். குறிப்பாக பெனடிக் பாலன் (சொந்தக்காரன் 1968), டாக்டர் நந்தி (மலைக்கொழுந்து 1964), டாக்டர் தி. ஞானசேகரன் (குருதிமலை 1979), புலோலியூர் சதாசிவம் (மூட்டத்தினுள்ளே 1983), தொ. சிக்கன் ராஜீ (தாயகம் 1969) ஆகியோரைச் சொல்லலாம். 

இவ்வெழுத்தாளர்களது படைப்புகள் அக்காலத்தில் மலையக சமூகத்தில் முனைப்பாயிருந்த பல்வேறு பிரச்சினைகளைப் பேசின. முக்கியமாக தொழிலாளர்களது பிரச்சினைகளை வர்க்க அடிப்படையில் நோக்குதல் (பெனடிக் பாலன்) தொழிலாளர்களிடையே தொழிற்சங்க உணர்வுகளைத் தூண்டுதல் (தி.ஞானசேகரன்), இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களது பிரச்சினைகளை வெளிக்கொணர்தல் (சிக்கன் ராஜீ), தோட்டங்களில் தொழிலாளர்களது பின்தங்கியுள்ள வாழ்க்கை நிலைமையை பேசுதல் (புலோலியூர் சதாசிவம்) போன்றவை இக்காலத்தில் இவர்களால் பேசப்பட்டன. மலையக இலக்கியத்துறையில் மலையகத்தை வாழ்விடமாகக் கொள்ளாத எழுத்தாளர்களது பங்களிப்பு இக்காலத்தில் பெரிதும் வரவேற்கத்தக்கதாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

இரண்டாவது அம்சமாக, இலக்கிய வடிவ வளர்ச்சியை அவதானிக்கும்போது பெரிதளவிலான நாவல்கள் இக்காலப்பகுதியிலேயே தோன்றுகின்றன. மலையக இலக்கிய வளர்ச்சியில் உள்ளடக்க அடிப்படையிலும், வடிவ அடிப்படையிலும் மலையகத்தை வாழ்விடமாகக் கொள்ளாத இவ்வெழுத்தாளர்களது பங்களிப்பு பெரிதும் மதிக்கத்தக்கது. இதே காலப்பகுதியில் தெளிவத்தை ஜோசப்பின் ஞாயிறு வந்தது(1966), மனம் வெளுக்க பாலாயி, காலங்கள் சாவதில்லை (1974) போன்ற நாவல்கள் வெளிவந்தன. இவை அக்காலப்பகுதியில் பெருந்தோட்டங்களில் கடமையாற்றிய தோட்ட உத்தியோகத்தகர்களது சுரண்டல் மற்றும் அவர்களது நெளிவு சுழிவுகளைப் பற்றிப் பேசின.

Thezhivathai Joseph

மலையகப் பகுதிகளில் இடம்பெற்ற நிலச்சுவிகரிப்பு மற்றும் அதற்கெதிராக நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் எவையும் பெரிதளவில் வெளிப்படுத்தவில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் விமர்சகர்களிடம் உண்டு. குறிப்பாக 1950, 1960, 1970 களில் இடம்பெற்ற தொழிலாளர்களது போராட்டங்கள் (உருளவள்ளிப் போராட்டம், கீனாக்கலை போராட்டம், டெவன் போராட்டம்) மலையகத் தமிழர்களது நிலவுரிமையுடன் தொடர்புடையவையென்றும் இதைப்பற்றிய இலக்கியப் பதிவுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஓ.ஏ. ராமையா குறிப்பிடுகின்றார் (2018:199). சி.வி. வேலுப்பிள்ளையின் படைப்புகள் குறித்த லெனின் மதிவானத்தின் விமர்சனமும் இவ்வாறே அமைந்தது. தொழிலாளர்களது இவ்வாறான போராட்டங்கள் பற்றிய பதிவுகளை ‘தீப்பொறி’ முதலிய சிறு பிரசுரங்களே முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்திருந்தன. இக்காலப் படைப்பிலக்கியவாதிகளின் பார்வைகளில் இவ்விடயம் பதிவாகவில்லையென்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றே.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4888 பார்வைகள்

About the Author

சுப்ரமணியம் தவச்செல்வன்

‘மலையம் 200’ நிகழ்வுகளை முன்னிட்டு, விம்பம் அமைப்பினரால் எழுநாவின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சுப்ரமணியம் தவச்செல்வம் அவர்களால் எழுதப்பட்ட ‘இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் : ஒரு காலக்கணக்கெடுப்பு’ எனும் இக் கட்டுரை முதற் பரிசைப் பெற்றது. இக் கட்டுரை எழுநாவில் மூன்று பகுதிகளாக வெளியாகின்றது.