Arts
25 நிமிட வாசிப்பு

ஈழமும் தமிழகமும் : பௌத்த சமயத் தொடர்புகள் – பகுதி 1

November 21, 2023 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

பௌத்தசமயத்தின் செல்வாக்கினைப் பொறுத்தவரையில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலே சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. இலங்கையில் கிமு. மூன்றாம் நூற்றாண்டில் மோரிய அரசனாகிய அசோகனின் காலத்திலே பௌத்தம் பரவத் தொடங்கியது. அதனைப் பற்றியவொரு வரலாறு இலங்கையில் உற்பத்தியான தீபவம்சம், மகாவம்சம் முதலான நூல்களிற் சொல்லப்படுகின்றது.

Patna

மோரியரின் தலைநகரான பாடலிபுரத்திலே மொக்கலிபுத்த தீஸரின் தலைமையிற் கூடிய மூன்றாம் பௌத்த மாநாட்டிலே பௌத்த  சமயத்தைப் பரதகண்டத்திலும் அதற்கப்பாலுள்ள தேசங்களிலும் பரப்புவதற்கெனக் குழுக்களை அனுப்புவதற்குத் தீர்மானித்தார்கள். அதன்படி மகிந்த தேரரின் தலைமையிலான குழு இலங்கைக்குச் சென்றது. அங்குள்ள அரசனாகிய தேவநம்பிய திஸனின் ஆதரவோடு அரண்மனையின் அருகிலுள்ள வனத்தில் மகாவிகாரை அமைக்கப்பட்டது. அது மகாசங்கத்தின் தலைமைத் தானமாகப் பல நூற்றாண்டுகளாகவே நிலைபெற்றது. பாடலிபுரத்திலிருந்து சென்ற தேரி சங்கமித்தை, நாகநாடு வழியாகச் சென்று அநுராதபுரத்திற் பிக்குணி சங்கத்தை உருவாக்கினார். அவர் தன்னோடு போதிமரக் கிளையினையும் கொண்டு சென்றார். அநுராதபுரத்தில் நிலைநாட்டிய அந்தக்கிளை விருத்திபெற்று பெரு விருட்சமாகிவிட்டது. அதுவே மகாபோதி என்னும் புனிதத் தலத்தில் நிலைபெறுவது என்பது பௌத்தர்களின் பற்றுறுதியான நம்பிக்கையாகும்.

sangamitha drawing

தமிழகத்தைப் பொறுத்தவரையில் இவ்வாறான கதைகள் இல்லை. பாடலிபுரத்திலிருந்து, மொக்கலிபுத்தர் தலைமையிலான தேரர்கள் தமிழகத்திலே தர்மோபதேசஞ் செய்வதற்கென எவரையும் அனுப்பியதாகப் பாளி நூல்களிற் குறிப்பில்லை. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் வகைகளில் அடங்கிய மிகவும் புராதனமான தமிழ் நூல்களிற் பௌத்தம் பற்றிய குறிப்பெதனையும் காணமுடியவில்லை. கிபி. நான்காம் நூற்றாண்டு முதலாகவே பௌத்த சின்னங்களின் அடையாளங்கள் தெரிகின்றன. எனவே, அதற்கு முற்பட்ட காலத்துத் தமிழகம் தொடர்பாகப் பௌத்தம் பற்றி எதனையும் பேசவியலாது.

இலங்கையில் கிமு. 250 – கிபி. 400 ஆகிய காலத்திலே பௌத்தம் அதிகமாக எல்லாப் பகுதிகளிலும் பரவிவிட்டது. அதற்கு ஏறக்குறைய 1500 வரையான கல்வெட்டுகள் காணப்படுகின்றமை சான்றாகும். ஆனால் கிபி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திலே பௌத்த சமயம் தொடர்பான விபரங்கள் எழுதிய சாசனம் எதுவும் தமிழகத்திற் கிடைக்கவில்லை. சமண சமயம் கிமு. மூன்றாம் நூற்றாண்டு முதலாகத் தமிழகத்திலே பரவத் தொடங்கியது. அங்கு கிடைத்துள்ள தமிழ்ப் பிராமி வடிவங்களில் எழுதிய கல்வெட்டுகள் பெரும்பாலும் சமணம் தொடர்பானவை. தமிழர் சமுதாயத்தில் ஒரு சிறுபான்மையினரின் ஆதரவினை மட்டுமே சமணம் பெற்றுக்கொண்டது.

கிபி. நான்காம் நூற்றாண்டு முதலாகப் பௌத்த சமயம் சில நகர்ப்புறங்களிலுள்ள மக்களிடையே பரவத் தொடங்கியது. காவிரிப்பூம் பட்டினம், காஞ்சி, வஞ்சி முதலான பெரு நகரங்களிற் பௌத்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டிந்தன. அதனைப் புத்தகோஷர், புத்ததத்தர் என்போர் எழுதிய குறிப்புகளினாலும் மணிமேகலை, மகாவம்சம், மத்தவிலாச பிரஹஸனம் என்னும் நூல்கள் வாயிலாகவும் அறியமுடிகின்றது. ஏழாம் நூற்றாண்டிலே காஞ்சிபுரத்திலுள்ள பௌத்த சமய நிலையங்களைப் பற்றிய விபரங்களை சீன யாத்திரிகரான சுவன் சாங் (Tsuan Tsang) எழுதிய குறிப்புகளினாலும் உணரமுடிகின்றது.

அசோகனுடைய காலத்தின் பின்பு இலங்கையிலுள்ள பௌத்த நிறுவனங்கள் வடஇந்தியாவில் அமைந்துள்ளவற்றோடு எதுவிதமான தொடர்புகளையும் கொண்டிருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. அவை தென்னிந்தியாவிலுள்ள பௌத்த நிலையங்களோடு தொடர்புகளைப் பேணிக் கொண்டன. அவை பரஸ்பரமான உறவுகளாகிவிட்டன. தமிழகத்திலே இலங்கை, ஆந்திர தேசம் என்பவற்றின் மூலமாகவே பௌத்தம் பரவியது. தொடர்புகளும் பிராகிருதம், பாளி மொழி என்பவற்றின் மூலமாக ஏற்பட்டன. காவிரிப்பூம் பட்டினம் முதலான இடங்களிலுள்ள விகாரங்களிலே பாளி மொழியிலுள்ள பௌத்த இலக்கியங்களைப் படித்தார்கள். அவை பெரும்பாலும் அநுராதபுரத்திலுள்ள மகாவிகாரையிலிருந்து கிடைத்தன. ‘மகாவிகாரை அட்டகதா, அந்த அட்டகதா’ என்னும் இருவகையான திரிபிடகத்தின் பகுதிகளுக்குரிய உரைநூல்களைத் தமிழகத்துப் பௌத்தப் பள்ளிகளிற் பயன்படுத்தினார்கள்.

பரஸ்பரத் தொடர்புகளினால் இரு நாடுகளுக்கும் இடையிலே சங்கத்தாரிடையிற் போக்குவரத்துகள் ஏற்பட்டன. இலங்கையில் நாகநாட்டிலுள்ள மணிபல்லவம் என்னும் தீவிலுள்ள அதிசயமான குணங்கள் பொருந்திய பௌத்த பீடமும் இரத்தின தீவகத்தின் நடுவிலுள்ள சமனொளி பாதமும் பிரசித்தமான வழிபாட்டுத் தலங்களாகிவிட்டன. அங்கு வழிபாடு செய்வதற்குச் சென்றவர்களைப் பற்றிய கதை மணிமேகலையிற் சொல்லப்படுகின்றது.

மகாவம்சமும் புத்தபீடிகை பற்றிய கதையினைச் சொல்கின்றது. நாகநாட்டின் தீவொன்றிலே வழிபாட்டிற்குரிய, அற்புதமான மணியாசனமொன்று அமைந்திருந்தது. அது தமக்குரியதென்று உரிமை கோரிய மாமனும் மருமகனுமாகிய மகோதரன், சூளோதரன் என்னும் நாகமன்னர் இருவர் அதனை கையகப்படுத்திக் கொள்வதற்குப் போராயத்தங்களை மேற்கொண்டனர். அத்தகைய போரினால் நாகர் அழிந்துவிடுவர் என்ற எண்ணத்தால் அவர்களைக் காப்பாற்றுவதற்கு, புத்தர் பிரான் வான்வழியாக வந்து, அந்த மணியாசனம் தனக்குரியதென்று சொல்லிய வண்ணமாக தம்மோபதேசம் செய்தார் என்பது மகாவம்சக் கதை. அவரின் உபதேசத்தைக் கேட்டதும் நாகர் ஆயுதங்களைக் கைவிட்டுத் திரிசரணத்திலே சரணடைந்தனரென்றும் சொல்லப்படுகின்றது.  இந்தக்கதை வழிபாட்டிற்குரிய சிறப்பினை மணியாசனம் பெற்றுவிட்டமையினை விளக்கும் வண்ணமாக உருவாக்கிய கதை. மகாவம்சத்தின் கதை மணிமேகலையில் மேல்வருமாறு விரிவாக்கம் பெற்றுள்ளது :

“விரிந்திலங்கு அவிரொளி சிறந்த, கதிர் பரப்பி,
உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித்
திசைதொறும் ஒன்பான் முழநிலம் அகன்று
விதிமாண் ஆடியின் வட்டம் குயின்று,
மதுசாகர சதுர மீமிசை விளங்கி,
‘அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே,
நறுமலர் அல்லது பிற மரம் சொரியாது;
பறவையும் முதிர்சிறை பாங்குசென்று அதிராது;
தேவர்கோன் இட்ட மாமணிப் பீடிகை
பிறப்பு விளங்கு அவிரொளி அறத்தகை யாசனம்,
கீழ்நில மருங்கின் நாகநாடாளும்
இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி
எமதீதென்றே எடுக்கல் ஆற்றோர்,
தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார்,
செங்கண் சிவந்து நெஞ்சு புகை உயிர்த்துத்
தம்பெரும் சேனையோடு வெஞ்சமர் புரிநாள்,
‘இருஞ்செரு ஒழிமின்; எமதீது என்றே’
பெருந்தவ முனிவன் இருந்தறம் உரைக்கும்
பெருமறு சிறப்பிற் புனரயோர் ஏத்தம்
தருமபீடிகை தோன்றியது ஆங்கென்.”

வழிபடுவோருக்குப் பழம்பிறவிகளை உணர்த்தும் தர்மாசனம். தேவர்கோன் இந்திரனால் அமைக்கப்பட்டது என்ற விபரங்களை மணிமேகலை குறிப்பிடுகின்றது. அதனைக் காவல் புரிவதற்கு தீவதிலகை என்னும் தேவதையினை இந்திரன் நியமித்தான். அதன் மூலமே மணிமேகலை தர்மாசனத்தின் அதிசயங்களையும் தனது முற்காலப் பிறப்பினையும் அறிந்து கொண்டாள் என்பது கதை.

தர்மாசனத்தின் இயல்பினைத் தீவதிலகை மணிமேகலைக்கு மேல்வருமாறு விளக்கினாள் :

“வேகவெந்திறல நாக நாட்டரசர்
சினமாசு ஒழிய, மனமாசு ஒழித்தாங்கு;
அறச்செவி திறந்து, மறச்செவி அமைத்துப்
பிறவிப்பிணி மருத்துவன் இருந்தறம் உரைக்கும்
திருந்தொளி யாசனம் சென்று கைதொழுது;
அன்றைப் பகலே உன்பிறப்பு உணர்ந்தீங்கு
இன்றுயான் உரைத்த உரைதெளிவாய்…”

புத்தர்பிரானின் தாமரை போன்ற பாதச்சுவடுகளின் வடிவமாகிய தர்மாசனத்தை வணங்கிய பின் மணிமேகலா தெய்வத்திடமிருந்து வேற்றுருவு எய்தவும் அந்தரம் திரியவும் மணிமேகலை வரம் பெற்றாள்.

பௌத்தர்களின் வழிபாட்டிற்குரிய தலமான சமனொளி பாதம் பற்றிய இரண்டு குறிப்புகள் மணிமேகலையில் உள்ளன. அவற்றுள் முதலாவது தீவதிலகையின் கதையோடு சொல்லப்படுவது:

“ஆயிழை தன்பிறப்பு அறிந்தமை அறிந்த
தீவதிலகை செவ்வனம் உரைக்கும்;
ஈங்கிதன் அயலகத்து இரத்தினத் தீவத்து,
ஓங்குயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியங் கிழவோன் அடியிணையாகிய,
பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்குளது ஆதலின்,
தொழுது வலங்கொண்டு வந்தேன் ஈங்கும்
பழுதில் காட்சியிந் நன்மணிப் பீடிகை
தேவர்கோன் ஏவலிற் காவல் பூண்டேன்
தீவதிலகை என் பெயர் – இது கேள் ”.

மணிமேகலையில் வேறோரிடத்திலே சமந்த கூடத்தில் வழிபாடு செய்த சாரணர் பற்றிச் சொல்லப்படுகின்றது.

முன்னொரு காலத்தில் இமயமலையில் வில் இலச்சினையைப் பொறித்த சேர வேந்தன் குடக்கோச் சேரலாதன் தன் அரண்மனைப் பெண்களோடு ஒரு சோலையில் தங்கியிருந்தான். வான்வழியே மேகங்கள் ஊடாகச் செல்லும் ஆற்றலுடைய சாரணர் இலங்கா தீவத்துச் சமனொளிபாத மலையினை வலஞ்சென்று வழிபாடு செய்தபின் அரசன் இருந்தவிடத்திற்கு சென்றனர். ஒரு வழிபாட்டுத் தலம் என்ற வகையிற் சமனொளிபாதம் பற்றிய மிகப்புராதனமான குறிப்பு மணிமேகலையில் உள்ளமை குறிப்பிடற்குரிய ஒன்றாகும்.

பௌத்த சமயத்திற் பத்தினி வழிபாடு

காவல் தெய்வங்கள் நால்வரை வழிபடும் மரபு இலங்கையில் 14 ஆம் நூற்றாண்டு முதல் வழமையாகிவிட்டது. உபுல்வன், சமன், விபீஷணன் கந்தகுமாரன் ஆகிய நால்வரையும் அவ்வாறான தேவர்களாகக் கொண்டனர் என்பதை லங்காதிலகத்து கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகின்றது. அங்குள்ள கட்டுமானத்தில், மூலவராகப் புத்தர் பெருமானையும் அதன் வெளிப்புறச் சுவர்களை முன்றில்களான கோட்டங்களாக அமைத்து அவற்றிலே காவல் புரியும் தேவர்களில் மூவரின் பிரதிமைகளைத் தாபனம் பண்ணியுள்ளனர். குமாரக் கடவுளின் கோட்டத்தை ஆலயத்தின் முன்புறச் சுவரின் ஓரமாக அமைத்துள்ளனர்.

 kannaki amman

கண்டி இராசதானியாகிய காலத்தில் காவற்றெய்வங்களில் மூவரை மாற்றிவிட்டனர். குமாரக் கடவுள், பத்தினி, விஷ்ணு, அவலோஹித நாதர் ஆகியோரே அக்காலத்துக்குரிய தேவர்கள். கண்டியில் பெரஹரா என்னும் பெருவிழாவில் தேவர் நால்வரின் படிமங்களையும் வீதிவலமாகக் கொண்டு செல்வது வழமையாகிவிட்டது.

இலங்கையிற் பத்தினி வழிபாடு நெடுங்கால வரலாறு கொண்டது என்பதை சிலப்பதிகாரத்து உரைபெறு கட்டுரை மூலம் அறியமுடிகின்றது. அதில் மேல்வருமாறு சொல்லப்படுகின்றது:

“அது கேட்டு, கடல்சூழ் இலங்கைக்
கயவாகு என்பான் நங்கைக்கு நாள்பலி
பீடிகைக் கோட்டம் முந்துறுத்து
ஆங்கு ஓர் பாடி விழாக்கோன் பன்முறை
எடுப்ப மழை வீற்றிருந்து,
வளம்பல பெருகி, பிழையா
விளையுள் நாடாயிற்று.”

உரைபெறு கட்டுரை ஒரு பிற்காலச் சேர்க்கை போலத் தெரிகின்றது. ஆயினும் பத்தினி வழிபாடு இலங்கையில் வழமையாகி நெடுங்காலம் நிலைபெற்றமைக்கு அது அடையாளமாகின்றது. சிலப்பதிகாரம், மணிமேகலை பௌத்த சமயப் பிரசார நூலாக அமைந்திருப்பதைப் போன்று ஒரு வகையில் பத்தினி வழிபாட்டுக்குரிய காவியமாக அமைந்துள்ளது.

“உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்துவந்து, ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்.”

என்னும் அடிகளால் இது உணரப்படும். 

பத்தினி வழிபாடு பௌத்தசமய வழிபாட்டில் ஓரம்சமாகிவிட்டது என்பதை மணிமேகலையில் வரும் மேல்வரும் அடிகள் மூலம் உணர முடிகின்றது:

“அணியிழை அந்தரம் ஆறா எழுந்து,
தணியா அக் காதல் தாய் கண்ணகியையும்
கொடைகெழு தாதை கோவலன் தன்னையும்,
கடவுள் எழுதிய படிமம் காணிய
வேட்கை துரப்பக், கோட்டம் புகுந்து,
வணங்கி நின்று குணம்பல ஏத்தி,
‘அற்புக்கடன் நில்லாது, நற்றவம் படராது,
கற்புக்கடன் பூண்டு, நுங்கடன் முடித்தது’
அருளல் வேண்டும் என்று, அழுதுமுன்னிற்ப
ஒருபெரும் பத்தினிக் கடவுளாங்கு உரைப்போல்.”

வஞ்சி மாநகரிலுள்ள பௌத்தப் பள்ளியில் கோவலன், கண்ணகி ஆகியோரைப் படிமக் கோலத்தில் மணிமேகலை கண்டனள் என்பது கதை. மேலும் ஒரு பெரும் பத்தினிக் கடவுள் என்று கண்ணகி குறிக்கப்படுவதால் மணிமேகலை எழுதப்பட்ட காலத்திலே பத்தினி வழிபாடு தமிழகத்திலே பௌத்த சமயத்துடன் கலந்துவிட்டது என்று கொள்ளமுடிகின்றது.

தென்னிந்தியப் பௌத்த சமயம் ஏற்படுத்திய செல்வாக்கின் மூலமாகவே இலங்கையிற் பத்தினி வழிபாடு பரவியதென்று கருதமுடிகின்றது. ஆனால் அது எப்பொழுது பரவத்தொடங்கியது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆறாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்திலே (1412-1467) கோட்டை நகரிலுள்ள முத்தளக் கட்டுமானமாகிய பத்தினிக் கோட்டம் பற்றிச் சமகால நூலாகிய கோகில ஸந்தேஸய குறிப்பிடுகின்றது. கஜபாகு மன்னன் காலத்துப் புராதன கோயிலின் கட்டுமானத்தைப் போல அது அமைந்திருந்ததென்றும் அதன் சிகரம் பொன்மயமானது என்றும் அதிலே சொல்லப்படுகின்றது.

சீதாவக்கவிலுள்ள பத்தினி கோயிலுக்கு வழங்கிய நன்கொடைகளை மதகொட தேவாலே ஸன்னஸ குறிப்பிடுகின்றது. அது மாயாதுன்ன அரசன் காலத்திலே அவனாற் புனரமைக்கப்பெற்றது. மாயாதுன்னவின் மகனாகிய முதலாம் ராஜசிங்கன் அரசபதவி பெற்றபொழுது மதகொடவிலுள்ள பத்தினி தேவாலயத்துக்கு நன்கொடைகளை வழங்கினான்.

மகாயானமும் அநுராதபுரத்திலே சங்கபேதமும்

பரத கண்டத்திலே காலப்போக்கிற் பௌத்த சமயம் பல பிரிவுகளாகப் பிரிந்துவிட்டது. விநய விதிகள் பற்றிச் சங்கத்தாரிடையில் ஏற்பட்ட பிரிவுகளும் பிறசமயக் கோட்பாடுகளின் செல்வாக்கும் பிரிவினை ஏற்படுவதற்கு ஏதுவான காரணங்களாகும். அசோகனுடைய காலத்திற்குப் பின்பு 18 பிரிவுகள் தோன்றிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது. புத்தர் பிரானின் போதனைகளை எதுவித மாற்றமுமின்றிப் பின்பற்றியவர்களை ஸ்தவிரவாதிகள் (தேரவாதிகள்) என்று சொல்வது வழமையாகிவிட்டது.

mahavikaraya

இலங்கையில் கிமு. மூன்றாம் நூற்றாண்டில் மஹிந்த தேரர் உருவாக்கிய மகாவிகாரை தேரவாதத்தின் நிலைக்களனாக நிலைபெற்றது. ஆதியான பௌத்த பாரம்பரியங்களும் இலக்கிய மரபுகளும் மகாவிகாரையினாற் பேணப்பட்டன. வழமைக்கு மாறான சிந்தனைகள் சங்கத்தாரிடையிலே தோன்றிய சமயங்களில் மகாசேனனின் ஆட்சிக்காலம் (கிபி 274-302) வரை அவற்றை அரசனுடைய ஆதரவோடு கட்டுப்படுத்திக் கொள்ளமுடிந்து தென்னிந்தியத் தொடர்புகள் மூலமாக மகாவிகாரையினரிடையிலே சங்கபேதம் ஏற்பட்டது. வட்டகாமனி அபையனின் காலத்திலே அநுராதபுரத்திலுள்ள சங்கத்தார் இரு வேறு பிரிவுகளாகப் பிரிந்துகொண்டனர்.

வட்டகாமனி அபையன் (கிமு.89-77) அபையகிரி விகாரத்தை அமைத்து, வழமைக்கு மாறாக அதனை திஸ்ஸதேரருக்கு வழங்கினான். அரசன் படையெடுப்பொன்றின் காரணமாகப் பதவியிழந்திருந்த காலத்திலே திஸ்ஸதேரர் ஆதரவு புரிந்தமையால் அதற்கான நன்றிக்கடனாக அவரிடம் விகாரையினை வழங்கினான். மகாவிகாரையின் சங்க நாயக்கர் அதனை விரும்பவில்லை. கட்டுமானங்களைச் சங்கத்தாருக்குப் பொதுமையில் வழங்குவதே பௌத்த சமய மரபாகும். நன்கொடைகளைப் பதிவு செய்யும் ஆவணங்களில் நாற்றிசையிலுமுள்ள சங்கத்தாருக்கு (சதுதிஸஸகஸ) அவை வழங்கப்படுகின்றன என்றே சொல்லப்படும்.

அரசனுடைய ஏற்பாட்டை விரும்பாத மகாவிகாரையினர் திஸதேரர் குடியானவர்களின் வீடுகளுக்குப் போய்வருகிறார் எனக் குற்றம் சுமத்தி, அவரை மகாவிகாரையிலிருந்தும் வெளியேற்றினார்கள். திஸ தேரரின் சீடரான பகலுமஸ்ஸ திஸ்ஸ என்னும் தேரர் மகாவிகாரையினரின் செயற்பாட்டை ஒப்புக்கொள்ளாது 500 பிக்குகளுடன், மகாவிகாரையிலிருந்தும் வெளியேறி அபயகிரி விகாரையில் இணைந்து கொண்டார். இதன் காரணமாகச் சங்கபேதம் ஏற்பட்டது. மகாவிகாரை அபையகிரி விகாரை ஆகியன வெவ்வேறான பிரிவுகளாகின.

தென்னிந்தியாவிலே பல்லவாராமத்திலிருந்து வஜ்ஜிபுத்தக நிகாயம் என்ற பிரிவினைச் சேர்ந்த தர்மருசி என்பவரின் சீடர்கள் அபையகிரி விகாரையினை அடைந்தனர். அவர்களுடைய போதனைகள் அங்குள்ளவர்களிற் பலரைக் கவர்ந்தன.

abayakiri

அவர்கள் புத்கல என்னும், ஆன்மாவின் நிழல் உண்டென்று கருதினார்கள். அது பௌத்த சம்பிரதாயத்தின் அடிப்படைக் கோட்பாடான அனாத்தவாதத்தை நிராகரிக்கும் பாங்கிலானது.  தர்மமருசி நிகாயம் மகாயானச் சார்புடையது. வாடிக திஸ (கிமு.32-7) என்னும் அரசனின் காலத்தில் விநயபிடகத்திலே காணப்படும் விதியொன்றினைப் பற்றிய மாறுபட்ட கருத்துகளினால் மகாவிகாரையினர், அபையகிரி விகாரையினர் என்போருக்கிடையிலே தகராறு ஏற்பட்டடது.  அதனைப் பற்றி விசாரணை செய்வதற்கு திக காராயண(ர்) என்ற புலமையாளரான பிராமணரை அரசன் நியமித்தான். அவர் மகாவிகாரையினர் சார்பாகத் தீர்ப்பு வழங்கினார்.

வொஹாரிக திஸ்ஸ (கிபி.214-269) என்னும் மன்னனின் காலத்தில் மீண்டும் தகராறு தோன்றியது.  வைதுல்ய பிடகம் என்னும் மகாயானச் சார்புடைய நூலே புத்தர் போதனைகளின் சாரமானது என்பது தர்மருசி நிகாயத்தவரின் நிலைப்பாடாகியது. அதனால் சங்கத்தாரிடையே பெருந் தகராறு ஏற்பட்டது. மகாவிகாரையினரின் முறைபாட்டினால் அதனைப் பற்றி விசாரணை செய்யுமாறு அரசன் கபில என்ற அமைச்சனை நியமித்தான். வைதுல்ய பிடகத்தைப் பற்றி மிகவும் கண்டனமான தீர்ப்பினை அமைச்சன் வழங்கியதால் அரசனது ஆணைப்படி வைதுல்ய பிடகத்தின் பிரதிகள் எரிக்கப்பட்டன. அதன் கோட்பாடுகளைப் பின்பற்றிய சங்கத்தருக்குக் கடுந்தண்டனைகள் வழங்கப்பட்டன.

பௌத்த சமய விவகாரங்கள் சங்கத்தாருக்கு அப்பாலாகிவிட்டன. வாதப் பிரதிவாதங்களினாலே தீர்க்கப்படவேண்டிய விடயங்கள் அரசியல் மயமாக்கப்பட்டன. அதனால் ஒருதலைப் பட்சமான தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இது புராதன காலப் பௌத்த சமய வரலாற்றில் இலங்கை அரசியலுக்குரிய தனி அடையாளங்களாகிவிட்டன.

கோட்டாபய (கிபி 253-266) என்னும் பெயருடைய அரசனின் காலத்திலே மகாயானப் பிரிவினருக்கு எதிரான பக்கச்சார்பான செயற்பாடுகள் உன்னத நிலையினை அடைந்தன. அபையகிரி விகாரத்திலுள்ள சங்கத்தாரிற் சிலர் வைதுல்ய பிடகக் கோட்பாடுகளை மீண்டும் போதனை செய்யத் தொடங்கிவிட்டனர். அரசன் அதற்கெதிரான கொடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டான். வைதுல்யவதத்தினைத் தடைசெய்து, அதில் ஈடுபாடு கொண்ட 60 பிக்குகளைப் பிடித்து அவர்களைத் தீயினாற் சுட்டு, இலச்சினையிட்டுச் சங்கத்திலிருந்தும் வெளியேற்றி, நாடுகடத்தினான். இவ்வாறு வெளியேற்றப்பட்ட தேரர்கள் தமிழ் நாட்டிலே புகலிடம் பெற்றனர்.  அவர்களுக்கு நேர்ந்த கொடுமை மகாவிகாரையின் மோலோங்கிய செல்வாக்கு மருவிப் போவதற்கு ஏதுவாகியது. அதற்கு காவிரிப்பட்டினத்திலிருந்து பழிவாங்கும் நோக்குடன் வந்த சங்கமித்திரர் என்ற துறவியே காரணமானவரென்று மகாவம்சம் பக்கச் சார்பாக குறிப்பிடும்.

நாடுகடத்தப்பட்ட பிக்குகள் சிலர் காவிரிப்பூம் பட்டினத்து விகாரையொன்றிலே வாழ்ந்தனர். அங்கிருந்த சங்கமித்தர் அவர்களுக்கு நேர்ந்தவற்றை விசாரணைகளின் மூலம் அறிந்துகொண்டார். இளைஞரான சங்கமித்திரர் பௌத்தாகம நூல்களிற் தேர்ச்சி பெற்றவர்; மகாயானத்தில் மிகுந்த ஆர்வங்கொண்டவர்; வாதப்பிரதி வாதங்களில் உன்னதமான திறமைகொண்டவர்; போதனா சக்தியில் வல்லவர். அவர் மகாயானத்தை நிலைநாட்டுவதற்கென்று அநுராதபுரம் சென்றார். அவரது திறமையைக் கண்டு அதிசயமுற்ற கோட்டாபயன் சங்கமித்த தேரரைத் தனது புதல்வர்களின் போதனாசிரியராக நியமித்தான். அரசகுமாரர்களில் மூத்தவனாகிய ஜெட்ட திஸ்ஸன் மகாயான சிந்தனைகளை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் சங்மித்தரின் மகாயானம் சார்பான போதனைகள் இளைய குமாரனாகிய மகாசேனனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. கோட்டாபயன் இறந்தபின் அவனது மூத்த மகன் அரசபதவி பெற்றான். சங்கமித்திரர் சோழநாட்டுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்.

ஜெட்ட திஸ்ஸன் (266-276) இறந்த பின்பு சங்கமித்தர் இலங்கைக்கு மீண்டும் சென்றார். அவர் மீது அபிமானங்கொண்டிருந்த மகாசேனனின் ஆட்சியில் மகாவிகாரையினர் பெருமளவிலான பின்னடைவுகளை எதிர்கொள்ள நேர்ந்தது. அரசன் மகாவிகாரைக்கு எதிரான பல நடவடிக்கைகளை மேற்கொண்டான். மகாவிகாரையினர் விநயவிதிகளை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என்றும் அவர்களுக்குத் தானதருமங்கள் வழங்குவது தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்கள் என்றும் பிரகடனஞ் செய்தான். அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மலையதேசம், உறுகுணை ஆகியவற்றுக்கு இடம்பெயர்ந்து சென்றனர். மகாவிகாரையின் கட்டிடங்கள் ஒன்பது வருடங்களாகக் கைவிடப்பட்ட நிலையிற் காணப்பட்டன.

கைவிடப்பட்ட நிலையில் உள்ளன என்ற காரணத்தினால் மகாவிகாரையின் கட்டிடங்கள் பல இடிக்கப்பட்டன. அதேசமயம் அபையகிரிவிகாரை, தக்கிண விகாரை என்பவற்றின் கட்டுமானங்கள் பலவாகிப் பெருகின. அந்நாட்களிலே பௌத்தசமய உலகின் அதிசயமான ஜேதவனாராம சேதியம் மகாசேனனால் உருவாக்கப்பட்டது. சென்ற நூற்றாண்டின் முடிவில் அது அமைந்துள்ள தலத்தில் ப்ரக்ஞா-பாராமித என்ற மகாயான நூலில் அமைந்துள்ள ஒரு சிறிய பகுதி எழுதிய செப்பேட்டினைக் கண்டெடுத்தனர்.

மகாவிகாரைக்கு எதிரான கடுமையான நடவடிக்கையினால் அநுராதபுரத்திலே கலகம் ஏற்பட்ட பொழுதிலும் அதனால் அரசன் தனது கொள்கையினை பெரிதளவில் மாற்றிக் கொள்ளவில்லை. அந்தக் கலகங்களும் தலைநகருக்கு வெளியே பரவியதாகத் தெரியவில்லை. அக்காலத்தில் இலங்கையிலுள்ள பௌத்தரான பொதுமக்கள் தேரவாதம், மகாயானம் என்ற வேறுபாடுகளைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

இலங்கை மன்னர்களில் வேறெவரும் செய்யாதவொன்றை மகாசேனனாற் செய்துகொள்ள முடிந்தது. மகாவிகாரையின் பிரதான பிரிவுகளான பஞ்சாவாஸ் ஆயதனங்களின் ஏட்டுச்சுவடி நிலையங்களில் மகாயான நூல்களை கட்டாயப்படுத்தி வைப்பித்தான்.

இலங்கைப் பௌத்த சமய வரலாற்றில் மகாசேனனின் காலம் ஒரு நிலைமாறு காலமாகும். அதுவரை அரசரிடமிருந்து பெற்ற ஏகபோகமான ஆதரவை மகாவிகாரை நிரந்தரமாக இழந்துவிட்டது. அது மீட்சிபெற்ற பொழுதிலும் மகாயானச் சார்புடைய அபையகிரி விகாரை, தக்கிண விகாரை என்பவற்றின் செல்வாக்கு மேலோங்கியது. மகாசேனனுக்குப் பிற்பட்ட காலத்து மன்னர்கள் வேறுபாடின்றி எல்லாப் பிரிவினருக்கும் ஆதரவு புரிந்தனர். இலங்கையில் மகாயானம் எழுச்சி பெறுவதற்குத் தென்னிந்திய பௌத்த நிலையங்களோடு ஏற்பட்ட தொடர்புகள் ஏதுவாக இருந்தமை கவனித்தற்குரியது. ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கைக்குச் சென்று, சிலகாலம் அநுராதபுரத்திலே தங்கியிருந்த சீன பௌத்த யாத்திரிகரான ஃபா-ஸியான், அபையகிரி விகாரையினைச் சேர்ந்த பள்ளிகளில் 5000 துறவிகள் வாழ்ந்தனர் என்றும் மகாவிகாரையோடு இணைந்தவற்றில் 3000 துறவிகள் வாழ்ந்தனரென்றும் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்தியத் தொடர்புகளின் காரணமாக மகாயானச் செல்வாக்கு இலங்கையில் ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளிலும் ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவரான வஜ்ரபோதி என்னும் துறவி இலங்கைக்கு இரு தடவைகள் சென்றார். முதல்முறை சீனாவுக்குப் போகும் வழியில் இலங்கைக்குச் சென்று சிலகாலம் அபையகிரி விகாரையிலே தங்கியிருந்து மகாயானக் கோட்பாடுகளைப் பற்றிப் பிரசாரஞ் செய்தார். சமனொளிபாதம் முதலான புனித தலங்களைத் தரிசித்த வஜ்ரபோதி உறுகுணையில் ஆட்சிபுரிந்த அரசனொருவனுக்கு மகாயானம் பற்றிய போதனைகளை வழங்கினார் என்று சொல்லப்படுகின்றது. அவரது சீடரான அமோகவஜ்ர என்பரை ஆறாம் அக்கபோதியின் ஆட்சிக் காலத்தில், கிபி. 736 இல், சீனாவுக்குத் தூதுவராக அனுப்பிவைத்தனர்.

பல்லவ-கிரந்த வரிவடிவங்களிலே சமஸ்கிருத மொழியில் எழுதிய மகாயானச் சார்புடைய சின்னங்களும் கல்வெட்டுகளும் மிகுந்தலை, திரியாய், குச்சவேலி ஆகிய இடங்களிற் கிடைத்துள்ளன. இவை தமிழகத்திலிருந்தும் பரவிய மகாயான சிந்தனைகளின் அடையாளங்களாகும்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

6422 பார்வைகள்

About the Author

சிவசுப்பிரமணியம் பத்மநாதன்

யாழ். பல்கலைக்கழக வேந்தரும் தகைசார் பேராசிரியருமான சி. பத்மநாதன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். இலங்கை வரலாறு, தென்னிந்திய வரலாறு, இலங்கையில் இந்து சமயம், இந்தியப் பண்பாடு தொடர்பில் 35 இற்கும் மேற்பட்ட நூல்களையும் 120 ஆங்கிலக் கட்டுரைகள் அடங்கலாக 200 இற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர், தனது வரலாற்று ஆய்வுகளுக்காக இலங்கையிலும் சர்வதேசத்திலும் பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். 2005 ஆம் ஆண்டு இலண்டன் Cambridge Bibliographical Association பேரா. பத்மநாதன் அவர்களுக்கு “International Bibliography Intellectual“ விருதை வழங்கிக் கௌரவித்தது. தமிழியல் பற்றிய ஆய்வுக்காக பேராசிரியர் செல்வநாயகம் விருதைப் பெற்றுக் கொண்ட முதலாவது தமிழரும் இவரே; 2008 ஆம் ஆண்டு இவ்விருதைப் பெற்றுக்கொண்டார். இதற்கு முன்னர் இவ்விருதைப்பெற்ற இருவரும் ஆங்கிலேயர்கள். 2013 ஆம் ஆண்டில் ஆசிய மரபுரிமைக்கான சர்வதேச சங்கத்தினால் நீலகண்ட சாஸ்திரி விருதைப் பெற்றுக் கொண்ட பேராசிரியர், தற்போதும் இலங்கைத் தமிழர்களின் வரலாறு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.