Arts
13 நிமிட வாசிப்பு

ஈழமும் தமிழகமும் : பௌத்த சமயத் தொடர்புகள் – பகுதி 2

November 28, 2023 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

தமிழகத்துப் பௌத்தப் பள்ளிகளும் உரையாசிரியர்களும்

பாளி மொழியில் அமைந்த பௌத்த இலக்கியங்களுக்கு உரை எழுதியவர்களில் புத்ததத்தர், புத்தகோஷர் என்போர் மேதாவிலாசமானவர்கள். அவர்களில் மூத்தவரான புத்ததத்தர் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த விகாரங்களில் வாழ்ந்தவர். அவர் இளமைக் காலத்திலே மகாவிகாரையிலே தங்கியிருந்து துறவியாக ஞானஸ்தானம் பெற்றவர். வடஇந்தியாவிலே பிறந்த புத்தகோஷர் காஞ்சிபுரம், காவிப்பூம் பட்டினம், அநுராதபுரம் ஆகியவற்றிலுள்ள விகாரங்களிலே தங்கியிருந்து திரிபிடகத்தின் ஏடுகளை ஆய்வு செய்தவர். அவர்கள் இருவரும் எழுதிய நூல்கள் தேரவாதம் நிலைபெறும் நாடுகளிற் பெருஞ் செல்வாக்குப் பெற்றவை.

புத்ததத்தரின் பணிகள் தமிழகத்திலே தேரவாதம் பற்றிய அறிவு வளர்ச்சி பெறுவதற்கு ஏதுவாயிருந்தன. அபிதம்மாவதார, மதுரத்த விலாசினி, விநயவிநிச்சய, உத்தரவிநிச்சய என்பன அவரின் பெயரால் வழங்கும் நூல்களாகும். இந்த நூல்களை தமிழகத்திலும் இலங்கையிலுமுள்ள விகாரங்களில் வாழ்ந்த துறவிகள் பயின்றனர். உத்தர விநிச்சய அநுராதபுரத்திலே மகாவிகாரையில் வாழ்ந்த காலத்தில் எழுதினாரென்று கொள்ளப்படுகிறது. விநய-விநிச்சய என்ற நூலை அவர் காவிரிப்பட்டனத்திலிருந்து எழுதினாரென்றும் அதன் முடிவிலே சொல்லப்படுகின்றது (உரகபுரேன புத்ததத்தேன ரசிதோயம் உரகபுரத்திலுள்ள புத்ததத்த என்ற நான் இதனை எழுதினேன்). அபிதம்மாவதார என்ற நூலின் முடிவிலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

buddhakosar

அவர் அபிதம்மாவதார என்னும் நூலின் பாயிரத்தில், அச்சுத விக்கிராத அரசனின் காலத்தில், சோழநாட்டில் பூதமங்கலம் என்னும் கிராமத்தில் வேணுதாஸனால் அமைக்கப்பட்ட விகாரத்தில் வாழும் காலத்தில் அதனைத் தான் எழுதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மதுரத்த விலாஸினி, ஜினாங்கார என்ற நூல்களையும் புத்ததத்தர் எழுதினார் என்ற ஐதிகம் இலங்கையில் நிலவிவந்துள்ளது.

அசோகனது காலத்துக்குப் பின் பாளி இலக்கியத்தின் வளர்ச்சியிற் புத்தகோஷரின் பணிகள் முதன்மையானவை; அவை அளவில் மிக விசாலமானவை; ஆதியான பௌத்தாகம நூல்கள் அனைத்திற்கும் விளக்கமானவை. மகாபோதிக்கு அண்மையிலுள்ள ஊரொன்றிலே வாழ்ந்த பிராமண குலத்திற் பிறந்தவரான புத்தகோஷர் மூன்று வேதங்களிலும் சமயஞானத்திலும் கல்வியிலும் மேதாவிலாசமானவராக விளங்கினார். வாதப் பிரதிவாதங்களில் வல்லவரான அவர் நாவலந்தீவிலே தேசாந்தரஞ் சென்று சமயவாதங்கள் புரிந்தவர். அவர் ஞானோதயம் என்னும் அரிய நூலினையும் தம்மசங்கீனி பற்றிய அட்டசாலினி என்னும் நூலினையும் எழுதினார். இவை அனைத்தும் மகாவம்சத்திலே பதிவாகியுள்ள விடயங்களாகும்.

சுமங்கள விலாஸினி, விசுத்திமக்க ஸமந்தபாஸாதிகா, பாபஞ்ச-சூதனி ஸாரத்தப்பகாஸினி, மனோரத பூரணி முதலானவை அவர் எழுதிய விரிவான உரைநூல்கள். அநுராதபுரத்து மகாவிகாரையிலுள்ள உரை நூல்களை ஆதாரமாகக் கொண்டு புத்தகோஷர் தனது நூல்களை தேரவாத அளவைநூற் கோட்பாடுகளுக்கு அமைவாகத் தெளிவான நூல்களை எழுதினார்.

தீக-நிகாயத்திற்கான உரைநூலை முதலாவது பௌத்த மாநாட்டிற் கூடிய 500 துறவிகள் ஓதினார்களென்று சுமங்கள விலாஸினியிலே புத்தகோஷர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய முதலாவது நூல் விசுத்திமக்க என்பதாகும். அது பௌத்தசமயக் கோபாடுகள் பற்றிய அறிவுக்களஞ்சியம் போன்றது. அதிலே திரிபிடகங்களின் சில தெரிந்த பகுதிகளும் அவற்றைப் பற்றிய உரைகளும் அதில் அடங்கியுள்ளன. பாளி இலக்கியத்தில் அதற்கு நிகரான நூல் வேறெதுவும் இல்லை.

விநய பற்றிய நூல்களின் பெருந் திரட்டானது ஸமந்தபாஸாதிகா. அதில் விநய விதிகள் பற்றிய கோட்பாடுகள் மிக நுட்பமான முறையில் விளக்கப்படுகின்றன. தேவநம்பிய தீசனின் காலம் முடியும் வரையான பௌத்தசமய வரலாறு அதன் பிரதானமான பகுதிகளில் ஒன்றாகும். அந்த வரலாறு தீபவம்சம், மகாவம்சம் என்பவற்றிலே காணப்படுவதற்கு நிகரானது. அதில் புராதன கால இந்தியாவில் நிலவிய சமுதாய, அரசியல், பொருளாதார, சமய நிலைகள், சிந்தனைகள் என்பன பற்றிய விரிவான வரலாற்று விபரங்களும் பதிவாகியுள்ளன.

தீக நிகாய, மஜ்ஜிம நிகாய, அங்குத்தர நிகாய என்பவற்றுக்கான உரை நூல்களையும் புத்தகோஷர் எழுதினார். அவை முறையே சுமங்கள-விலாஸினி, ஸாரத்தப்பகாஸினி மநோரத-பூரணி என்னும் பெயர்களால் வழங்குவனவாகும். காஞ்சிபுரத்திலுலே தனது நண்பரான ஜோதிபாலரோடு கூடியிருந்த காலத்தில் மநோரத-பூரணி என்னும் நூலைப் புத்தகோஷர் எழுதினார். மயூரபட்டினத்திலே புத்தமித்திர தேரரோடு வாழ்ந்த காலத்திலே பாபஞ்சசூதனி என்னும் உரைநூலை எழுதியதாக புத்தகோஷர் குறிப்பிட்டுள்ளார். ஏழாம் நூற்றாண்டிலே புத்தகோஷரின் விஸுத்திமக்க என்ற நூலுக்கு விருத்தியுரையாகப் பரமத்த-மஞ்ஜுஸ என்னும் நூலை காஞ்சிபுரத்திலே பிறந்தவரான தர்மபாலர் எழுதினார்.

பௌத்தசமய உறவுகள்

சோழப் பேரரசின் காலத்திலே சோழநாட்டில் பௌத்த நிறுவனங்கள் மீளுருவாக்கம் பெற்றன. நாகபட்டினத்துச் சூடாமணிவர்ம விகாரமான ராஜராஜப் பெரும்பள்ளி சர்வதேசப் பரிமாணங் கொண்ட நிலையமாகிவிட்டது. தமிழகத்திலே அமைந்திருந்த பௌத்தப் பள்ளிகள் அதனோடு நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தன. அதனை ஆதாரமாகக் கொண்டு பௌத்த சமயம் தொடர்பான படிமக்கலை வளர்ச்சி பெற்றது. கற்சிற்பங்களும் உலோகவார்ப்பான பெருந்தொகையான படிமங்களும் உருவாக்கப்பட்டன.

புத்தமித்திரர் எழுதிய வீரசோழியம் என்னும் நூல் வீரராசேந்திரன் பெயரால் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. அதற்கு உரை எழுதிய பெருந்தேவனார் மறைந்துபோன பௌத்த சமயம் பற்றிய நூல்கள் சிலவற்றின் பாடல்களை மேற்கோளாகப் பயன்படுத்தியுள்ளார். அவற்றிலே சில சுந்தரசோழன் முதலான சோழ மன்னர்களைப் பற்றியவை.

வீரசோழியம் இலங்கையிலுள்ள பௌத்த, நிறுவனங்களில் அறிமுகமாகி விட்டமைக்குச் ஸிதத்-ஸங்கராவ என்னும் சிங்கள இலக்கண நூல் உதாரணமாகும். குண்டலகேசி, பிம்பிசாரக் கதை என்பனவும் சோழர்காலத்துப் பௌத்த நூல்களாகும்.

தேரவாதச் சார்புடைய பௌத்தப் பள்ளிகள் இருந்தமைக்கு சமகாலப் பாளி நூல்கள் ஆதாரமாகின்றன. அவற்றின் மூலமாக இலங்கையிலும் சோழநாட்டிலுமுள்ள சங்கத்தர் பரஸ்பரமான தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தமை வெளிப்படையாகின்றது. பௌத்தாகம நூல்களிலும் பாளி இலக்கியத்திலும் பாண்டித்தியம் பெற்ற சோழநாட்டுப் பௌத்த துறவிகள் சிலரைப் பற்றிய குறிப்புகள் இலங்கையில் எழுதப்பட்ட நூல்கள் சிலவற்றிலே காணப்படுகின்றன.

சோழர் காலத்தில் வாழ்ந்த, பாளி மொழி இலக்கியங்களிற் புலமை பெற்றிருந்த தேரர்களின் காலத்தால் முற்பட்டவர் அநுருத்ததேரர். அவர் காஞ்சிபுரத்துக் காவேரி நகரிற் பிறந்தவர். ஆயினும் அவர் தாம்பரட்டவிலுள்ள தஞ்சையில் நெடுங்காலம் வாழ்ந்தவர். பரமத்த-விநிச்சய, நாமரூப-பரிச்சேத என்பன பாளி மொழியில் அவர் எழுதிய நூல்களாகும்.

தமிழகத்தில் வாழ்ந்த கஸப்பதேரர் பற்றிச் சாசனவம்சம் குறிப்பிடுகின்றது. அவர் சோழநாட்டில் வாழ்ந்த தேரர்களிற் பிரபலமானவரென்று விநயஸார்த்த தீபனி என்னும் நூலில் வாசீஸ்ஸர தேவர் குறிப்பிடுகின்றார். விநயவிதிகள் பற்றி இறுக்கமான போக்குடைய கஸப்ப தேரர் விநயாட்டகதா என்னும் நூலின் ஆசிரியர் என்பது ஐதிகம்.

மது அருந்துதல் பற்றி இலங்கைப் பிக்குகளுக்கும் சோழநாட்டுப் பிக்குகளுக்கும் இடையிலே தகராறு ஏற்பட்டது. புத்தப்பிய மகாதேரர் அவர்களின் பிரச்சினைக்குத் தீர்ப்பு வழங்கினார். தெரிந்தோ தெரியாமலோ வெறியூட்டும் மதுவினை அருந்துவது குற்றமான செயலாகும் என்பது அவருடைய தீர்ப்பாகும்.

சோழ நாட்டிலே பெருங் செல்வாக்கு பெற்றிருந்த ஆநந்த மகாதேரரைப் பற்றிய சாசனக் குறிப்புண்டு. சர்வ சித்துக்களை பெற்றிருந்த ஆநந்த மகாதேரர் தாம்ரட்டத்திலே சங்கசுத்தி செய்தமை பற்றி கிபி. 1137 இல் பொலன்னறுவையில் நிறுவப்பட்ட கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. தமிழகத்திலே பௌத்த சங்கத்தாரிடையே முதன்மையானவராகவும் வாலாதித்தம் சூடாமணிவர்ம விகாரம் போன்ற விகாரங்களின் நாயகராகவும் விளங்கிய ஆநந்த மகாதேவரைப் பற்றி ரூபசித்தி என்ற நூலிற் குறிப்பிட்டுள்ளனர்.

ரூபசித்தி ஆசிரியரும் மாணவருமாகிய இரு தேரர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. அவர்களில் ஆசிரியரான வனரதன ஆநந்த மகாதேரர் தம்பபண்ணியான இலங்கையைச் சேர்ந்தவர். அவரது சீடரான புத்தப்பிய திபாங்கரர் தமிழ்நாட்டிற் பிரசித்தி பெற்றவர்; வாலாதிச்ச விகாரம் சூடமணிகாராமம் என்னும் விகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்.

சூடாமணிவர்ம விகாரமான ராஜராஜப் பெரும்பள்ளியினையே ரூபசித்தி என்ற நூலிற் குறிப்பிட்டுள்ளனர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் அந்த விகாரம் தேரவாதப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்தமைக்கு ரூபசித்தியிற் பதிவாகியுள்ள குறிப்பு ஆதாரமாகின்றது.

தமிழகத்துப் பள்ளிகளிற் புகலிடம் பெற்ற ஈழத்துப் பௌத்த துறவிகள்

பதின்மூன்றாம் நூற்றாண்டிலே காலிங்க மாகனின் ஆட்சிக் காலத்திலே பௌத்த சமய நிறுவனங்களுக்குப் பேரிடர் ஏற்பட்டது. பௌத்த சமயத்துக்கு விரோதமான கொள்கைகளை மாகன் கடைப்பிடித்ததால் பௌத்த நிறுவனங்களுக்கு ஒரு நெருக்கடியான நிலை ஏற்பட்டது.  அவனது ஆட்சியில் பௌத்தப் பள்ளிகள் பல படை நிலைகளாகிவிட்டன என்றும் அவற்றுக்கு மானியமாகவுள்ள நிலங்களை மாகன் தனது படையினருக்கு வழங்கினான் என்றும் சில நூல்களிற் கூறப்படுகின்றது.

அநுராதபுரம், பொலன்னறுவை என்னும் பெருநகரங்களிலுள்ள சங்கத்தார் பீடங்கள் நிலைகுலைந்தன. சங்கத்தவர்கள் பலர் மலயதேசம், தென்பகுதியான உறுகுணை என்பவற்றை நோக்கிச் சென்றுவிட்டனர். தேரர்களிற் பலர் சோழ, பாண்டிய நாடுகளிற் புகலிடம் பெற்றனர். அவர்களில் ஒருவரான பதந்த ஆநந்த மகாதேரர் பாண்டிநாட்டுக்குச் சென்று, அங்குள்ள வன்னிய சாமந்தனாகிய சோழகங்கன் அமைத்த குணாகரப் பெரும் பள்ளியிலே தங்கியிருந்தார். மூன்று விகாரங்களைச் சோழகங்கன் அமைத்திருந்தான். அவரோடு கூடிச் சென்ற வேறு சில தேரர்களும் ஆநந்த தேரரோடு அங்கு வாழ்ந்தனர். ரம்மியமான சூழலில் அமைந்திருந்த குணாகரப்பள்ளியில் வாழ்ந்த காலத்தில் உபாஸகஜனாலங்கார என்ற பாளி நூலை ஆநந்ததேர மகாதேரர் எழுதினார்.

இரண்டாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்திலே (1236-2371), முன்பு சீர்குலைந்துபோன சங்கத்தை மறுசீரமைப்பதற்காக சோழநாட்டிலிருந்தும் பாண்டித்தியம் பெற்ற பிக்குகள் பலரை இலங்கைக்கு வரவழைத்தான். அதனைப் பற்றிச் சூளவம்சம் மேல்வருமாறு குறிப்பிடுகின்றது :

சோழநாட்டிலுள்ளவர்களான மூன்று பிடகங்களிலும் பயிற்சி பெற்றுப் பிரபலமாகிய சோழ நாட்டு பிக்குமார்களுக்குப் பல சன்மானங்களை அனுப்பி, விநய விதிகளைத் தவறாது பேணிவரும் பிக்குமார் பலரை தாம்ரபணி தேசத்துக்கு அரசன் வரவழைத்தான். அவர்கள் மூலமாக இரண்டு நிகாயங்களைச் சேர்ந்தவர்களிடையிலும் நல்லுறவுகளை ஏற்படுத்தினான்.

சோழநாட்டுப் பௌத்த தேரர்களின் ஆதரவை 14 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் ஆட்சிபுரிந்த அரசரிற் சிலராற் பெற்றுக்கொள்ள முடிந்தது. குருணாகலை இராசதானியாகக் கொண்டு ஆட்சிபுரிந்த நான்காம் பராக்கிரமபாகு (கிபி.1302-1326) விநய பிடகம் பற்றிய தெளிந்த அறிவுடைய சோழநாட்டு அறிஞரான தர்மகீர்த்தி தேரரை வரவழைத்து அவரை ராஜகுருவாக நியமித்தான். அவர் சர்வசமய ஆகமங்களில் அறிவுபெற்ற பன்மொழிப் புலவராக விளங்கினார்.

உசாத்துணை

  1. மகாவசம்சம் II-V, XII-XIII
  2. மேலது
  3. மேலது
  4. Peter Selalk, “In Search of Buddhism in Pre-Pallava Tamilakam”, Buddhism Among Tamils in Pre-Colonial Tamilakam and Ilam, Uppsala, 2002, p.253.
  5. Iravatham Mahadevan, Early Tamil Epigrapy: From The Earlest Times to the Sixth Centuary CE. Revised and Enlarged Edition, Vol.I Central Institute of Classical Tamil, Chennai 2004.
  6. S.Pathmanathan, “Buddhism in Sri Lanka and South India Interactions Among Monastic Centres”,  Facets of Sri Lankan History and Culture, Kumaran Book House, 2015, p.290.
  7. Ibid, Pp.116-118.
  8. K.A.Nelakanta Sastri, Foreign Notices of South India, Madras, 1938, Pp.68-73.
  9. மகாவசம்சம் I: 44-51
  10. மணிமேகலை, 7:44-63
  11. மணிமேகலை, 10:67-69
  12. மணிமேகலை, 10:80-82
  13. மணிமேகலை, 11:19-29
  14. மணிமேகலை, 28:103-113
  15. S.Pathmanathan, “Hinduism and Buddhism in Sri Lanka:  Some Points of contact between two Religious Traditions (Circa AD 1300-1600)”, Kalyani Journal Volumes 5 and 6, University of Kelaniya, 1986-1987.
  16. மேலது
  17. சிலப்பதிகாரம், புலியூர்க் கேசிகன் தெளிவுரை, பாரி நிலையம், சென்னை, 2000, ப.21
  18. மேலது, ப.17
  19. மணிமேகலை, 26:1-10
  20. மேலது
  21. S.Pathmanathan, “Hinduism and Buddhism in Sri Lanka…”  
  22. மேலது
  23. மகாவம்சம,; 83:79-81
  24. மகாவம்சம,; 83:95
  25. மகாவம்சம,; 33:96
  26. நிகாய சங்கிரஹய, ஆங்கில மொழிபெயர்ப்பு று.கு. குணவர்த்தன, கொழும்பு, 1908, ப.12
  27. மேலது
  28. மேலது
  29. நிகாய சங்கிரஹய, ப.12
  30. மகாவம்சம், 36:41; 111-112
  31. மகாவம்சம், 36:113-116
  32. மகாவம்சம,; 36:117
  33. Amaradasa Liyanagamage, “Conflict in State-Sangha Relations in the Early History of Sri Lanka”, Reflections On A Heritage…p.173
  34. மேலது, பக்.173-174
  35. மேலது, ப.185
  36. மேலது, ப.197
  37. Foreign Notices of South India, ed. K.A.Nelakanta Sastri, p. 69
  38. University of Madras, 1939, Pp.68-73
  39. UCHC Vol.I, Pt.I, 1960, p.383
  40. மேலது, ப.383
  41. மேலது
  42. GP Malalasekera, The Pali Literature of Ceylon, Kandy, 1994, p.106
  43. மேலது
  44. மேலது
  45. G.P.Malalasekera, The Pali Literature of Ceylon, 1994, p.80.
  46. மேலது, ப.90
  47. மேலது, ப.80
  48. மேலது, ப.93.
  49. மேலது, ப.95.
  50. மேலது, பக்.91-92
  51. மேலது,
  52. Amaradasa Liyanagamage, “A Forgotten Aspect of the Relations between the Sinhalese and the Tamils”, Reflections on a Heritage… 2000, Pp.662-666.
  53. A.Liyanagamage, A Forgotten Aspect of the Relations Between the Sinhalese and the Tamils The Upāsa Janālankāra: A Re-examination of its date and authorship and its significance in the History of South India and Ceylon Reflections on a Heritage…, 2000, p.310; Cūlavamsa (Cv) 30:22.
  54. மேலது, பக்.305-306
  55. மேலது, ப.128; சூளவம்சம், 84:9-10
  56. சூளவம்சம், 90:98-99


ஒலிவடிவில் கேட்க

5681 பார்வைகள்

About the Author

சிவசுப்பிரமணியம் பத்மநாதன்

யாழ். பல்கலைக்கழக வேந்தரும் தகைசார் பேராசிரியருமான சி. பத்மநாதன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். இலங்கை வரலாறு, தென்னிந்திய வரலாறு, இலங்கையில் இந்து சமயம், இந்தியப் பண்பாடு தொடர்பில் 35 இற்கும் மேற்பட்ட நூல்களையும் 120 ஆங்கிலக் கட்டுரைகள் அடங்கலாக 200 இற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர், தனது வரலாற்று ஆய்வுகளுக்காக இலங்கையிலும் சர்வதேசத்திலும் பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். 2005 ஆம் ஆண்டு இலண்டன் Cambridge Bibliographical Association பேரா. பத்மநாதன் அவர்களுக்கு “International Bibliography Intellectual“ விருதை வழங்கிக் கௌரவித்தது. தமிழியல் பற்றிய ஆய்வுக்காக பேராசிரியர் செல்வநாயகம் விருதைப் பெற்றுக் கொண்ட முதலாவது தமிழரும் இவரே; 2008 ஆம் ஆண்டு இவ்விருதைப் பெற்றுக்கொண்டார். இதற்கு முன்னர் இவ்விருதைப்பெற்ற இருவரும் ஆங்கிலேயர்கள். 2013 ஆம் ஆண்டில் ஆசிய மரபுரிமைக்கான சர்வதேச சங்கத்தினால் நீலகண்ட சாஸ்திரி விருதைப் பெற்றுக் கொண்ட பேராசிரியர், தற்போதும் இலங்கைத் தமிழர்களின் வரலாறு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.