Arts
16 நிமிட வாசிப்பு

புராதனகால யாழ்ப்பாணத்தில் பௌத்தமும் தமிழும் – பகுதி 2

December 8, 2023 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

யாழ்ப்பாணக் குடாநாட்டினை நாகதீப என்று மகாவம்சம் முதலான பாளி நூல்கள் குறிப்பிடுகின்றன. அதனை நாகநாடு என்று மணிமேகலையிற் குறிப்பிட்டுள்ளனர். நாகர் செறிந்து வாழ்ந்தமையின் காரணமாக அப்பெயர் உருவாகியுள்ளது. மட்டக்களப்பு பூர்வசரித்திரம் நாகதீவு என்னும் பெயரால் யாழ்ப்பாணத்தைக் குறிப்பிடுகின்றது.

நாகதீபத்தில் ஆதிக்கம் பெற்றிருந்த நாக அரசர்களைப் பற்றிய கதை மகாவம்சத்திற் சொல்லப்படுகின்றது. நாகதீவின் அருகிலே கடலில் அமைந்துள்ள தீவொன்றில் காணப்பட்டதும் அதிசயங்களின் நிலைக்களம் ஆகியதுமான பௌத்த பீடமொன்றினைக் கைவசப்படுத்தும் நோக்கத்துடன் மகோதரன், சூளோதரன் என்னும் மாமனும் மருமகனுமாகிய நாகமன்னர் போர் புரிவதற்கு பெரும் படைகளை அணி சேர்த்தனர் என்பது மகாவம்சக் கதை.

போரினாற் பெருங்கேடு நிகழும் என்பதை உணர்ந்த புத்தர் பிரான், அதனைத் தடுக்கும் வண்ணமாக வான்வழியாக வந்து, அந்தப் பீடம் தனக்குரியதென்று சொல்லி அதில் இருந்துகொண்டு நாக மன்னருக்கு உபதேசம் செய்தார் என்று சொல்லப்படுகின்றது. அவரது போதனையினைக் கேட்டதும் நாகர் அமைதியாகி ஆயுதங்களைக் கைவிட்டனர் என்றும் சொல்லப்படுகின்றது. தீவொன்றில் பிரசித்திபெற்ற பௌத்த சமய வழிபாட்டுத் தலமொன்று மகாவம்சம் எழுதப்பெற்ற காலத்தில் நிலைபெற்றிருந்தமைக்கு இந்தக் கதை ஓர் அடையாளமாகும். அத்தலம் அடங்கியுள்ள தீவினை மணிபல்லவம் என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது.

அதிசயங்கள் நிகழும் புத்தர் பீடம் பற்றிய மகாவம்சக் கதையினை மணிமேகலையில் விசாலமான கோலத்தில் விளக்கி மேல்வருமாறு பதிவு செய்துள்ளனர்:

விரிந்திலங்கு அவிரொளி சிறந்து, கதிர் பரப்பி,
உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித்
திசைதொறும் ஒன்பான் முழநிலம் அகன்று,
விதிமாண் ஆடியின் வட்டம் குயின்று,
பதுமசதுர மீமிசை விளங்கி,
‘அறவோற்கு அமைந்த ஆசனம்’ என்றே,
நறுமலர் அல்லது பிறமரம் சொரியாது,
பறவையும் முதிர்சிறை பாங்குசென்று அதிராது,
தேவர்கோன் இட்ட மாமணிப் பீடிகை,
பிறப்பு விளங்கு அவிரொளி அறத்தகை யாசனம்,
கீழ்நில மருங்கின் நாகநாடாளும்
இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி
எமதீ தென்றே எடுக்கல் ஆற்றோர்
தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்து
தம்பெரும் சேனையொடு, வெஞ்சமர் புரிநாள்,
‘இருஞ்செரு ஒழிமின் எமதீது’ என்றே
பெருந்தவ முனிவன் இருந்தறம் உரைக்கும்,
பொருவறு சிறப்பிற் புரையோர் ஏத்தும்’
தரும பீடிகை தோன்றியது ஆங்கென்.

அதிசய குணங்களையுடைய தர்மாசனம் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து “ஆறைந்து யோசனை தென்திசை மருங்கில் திரையுடுத்த மணிபல்லவத்திடை” உண்டென்பது மணிமேகலையில் வரும் குறிப்பாகும்.

மணிபல்லவம் என்பது கடல் சூழ்ந்த ஒரு தீவு; அது புகாரின் தென்திசையில் முப்பது யோசனை தூரத்தில் இருந்தது. அதனை சென்ற நூற்றாண்டில் நயினாதீவு என்று அடையாளங் கண்டுள்ளனர்.  ஆயினும் அங்கு புராதனமான பௌத்த சமய சின்னங்கள் எவையும் கிடைக்கவில்லை. எனவே, மணிபல்லவத்தினை நயினாதீவு என அடையாளங் கண்டுள்ளமை எத்துணைப் பொருத்தமானது என்பது ஆய்விற்குரியதாகும். மணிபல்லவம் காவிரிப்பூம் பட்டினத்துக்கும் நாகநாட்டிற்கும் இடைப்பட்ட கடல்வழிப் பாதையின் நடுவண் அமைந்த தீவு என்று சொல்லப்படுகின்றது.

delft Location

மணிபல்லவத்தில் அமைந்த தர்மாசனம் கடலோரமாகவும் நாவாய்களின் தரிப்பிடமொன்றின் அண்மையிலும் இருந்தது என்பதும் கம்பளச் செட்டியின் கதைமூலம் உணரப்படும். அத்தீவிலே தரித்துநின்று செல்லும் நாவாய்கள் கடற் பாறைகளில் மோதி உடைவதைப் பற்றியும் அக்கதை மூலம் அறியமுடிகின்றது.  மணிபல்லவம் பற்றி மணிமேகலையிற் சொல்லப்படும் விபரங்கள் நயினா தீவுக்கன்றி நெடுந்தீவிற்கே பொருத்தமானவை. நெடுந்தீவிலே கடலோரமாகவுள்ள வெடியரசன் கோட்டையில் ஆதிவரலாற்றுக் காலத்துப் பௌத்தப் பள்ளிகளின் அடையாளங்கள் உள்ளமை கவனித்தற்குரியது. அந்தப் பள்ளிகளும் காலத்தால் மணிமேகலைக்கு முற்பட்டவை. அவை நாக அரசர்களின் திருப்பணிகளாகும். அங்கு சேதியங்கள் சிலவற்றின் அடித்தளங்கள் சீர்குலையாத நிலையிற் காணப்படுகின்றன. அங்குள்ள, தமிழ்ப் பிராமி வடிவங்களில் எழுதிய கல்வெட்டுகள் அவற்றுக்கும் நாகருக்கும் இடையிலான தொடர்புகளின் அடையாளங்களாகும்.

Vediyarasan Fort

தொல்லியல் ஆய்வுகளில் உலகப் பிரசித்தி பெற்றவரான றொபின் கொனிங்காம் (Robin Coningham) வெளியிட்ட புகைப்படமொன்றில் வேள்ணாகன் என்னும் தொடர் வெடியரசன் கோட்டையிலுள்ள சேதியமொன்றின் தளத்திலே தெளிவாகத் தெரிகின்றது. அங்குள்ள சேதியமொன்றின் அருகிலே காணப்பட்ட பரந்த கற்பீடமொன்றிற் பிற்காலத்தில் எழுதிய தமிழ்க் கல்வெட்டுகள் தெரிகின்றன. அவற்றைத் தொல்பொருள் திணைக்களத்தினர் ஏறக்குறைய 20 வருடங்களுக்கு முன் படியெடுத்துள்ளனர். எம்மால் அந்தப் படிகளை ஆராய்ந்துகொள்ள முடிந்தது. அவற்றிலே காணப்படும் தமிழ் கல்வெட்டுகள் வரலாற்று ஆவணங்கள் என்ற வகையில் எதுவிதமான சிறப்பும் இல்லாதவை. ஆயினும், தமிழ்க் கல்வெட்டுகளை மிகவும் பிற்காலத்திலே தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளின் மேல் வெட்டியுள்ளனர். முன்பு இங்கு குறிப்பிட்டவாறு, கட்டுமானங்களில் வழமையாக நாகர் பதிவுசெய்யும் இரு தமிழ் வசனங்களையும் வெடியரசன் கோட்டையிலுள்ள சேதியத்தின் முன்பாகவுள்ள விசாலமான பாறைக் கல்லில் வெட்டியுள்ளனர். அந்தக் கல்லில் நாகபந்த வடிவங்கள் பலவும் செதுக்கப்பட்டுள்ளன. அதனால் அங்குள்ள சேதியங்கள் தமிழ்மொழி பேசிய நாகரால் உருவாக்கப்பட்டவை என்பது தெளிவாகத் தெரிகின்றது. வெடியரசன் கோட்டையிற் பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்களான உலோகப் பொருட்கள், மட்கலவோடுகள் என்பன கிடைத்துள்ளமையும் கவனித்தற்குரியது.

கந்தரோடையிற் பௌத்த சமய சின்னங்கள்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இதுவரை, கிபி. ஏழாம் நூற்றாண்டு வரையான காலத்துக்குரிய தொல்பொருட் சின்னங்கள் 18 இடங்களில் அடையாளங் காணப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்பது இடங்களில் பௌத்தசமய சின்னங்கள் கிடைத்துள்ளன. அவை கந்தரோடை, வல்லிபுரம், மாசியப்பிட்டி, சுண்ணாகம், நிலாவரை (நவக்கீரி), திருவடிநிலை, காரைநகர் (வேரப்பிட்டி), வேலணை (திசைமழுவை), நெடுந்தீவு என்பனவாகும்.

யாழ்ப்பாணத்திலே புராதன காலத்தில் நிலவிய பௌத்த சமயம் மூன்று விதமான சிறப்புகளை உடையது என்பது அறிஞர் சிலரின் கருத்தாகும். அவை மகாயானம் சார்ந்தவை, வாணிபத்தை ஆதாரமாகக் கொண்டவை, பெருங்கற் பண்பாட்டுத் தொடர்புடையவை என்பனவே அவ்வாறு அவர்கள் அடையாளங் கண்டுள்ள சிறப்பம்சங்களாகும். இவற்றில் முதலிரண்டும் மேலும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்பட வேண்டியவை. ஆயினும் அவை பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புடையவை என்பது உறுதியான ஒன்றாகும். அந்தத்தொடர்பு ஈமக் கல்லறைகளின் கட்டுமான முறை, கட்டுமானங்களிலும் சிற்பங்களிலும் பாவனைப் பொருட்களிலும் எழுதப்பட்டுள்ள மொழி என்பன அந்த அம்சங்களாகும்.

கந்தரோடையில், ஒரு சிறிய இடத்தில், அதிக இடைவெளிகளின்றிச் செறிந்து காணப்படும் தூபிவடிவங்கள் விசித்தரமானவை. அவ்வாறான கட்டுமானங்களை இலங்கையில் வேறெங்கும் காணமுடியவில்லை. ஆயினும், ஆந்திர தேசத்திலே பௌத்த சமய தலங்களான அமராவதி நாகார்ஜூன கொண்ட, குண்டுபள்ளி போன்றவற்றில் இவற்றைப் போன்ற கட்டுமானங்கள் அமைந்துள்ளன. அவற்றை ஈமத்தலங்களிலுள்ள கட்டுமானங்களாக அறிஞர் சிலர் அடையாளங் கண்டுள்ளனர். பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களிடையிலே பௌத்த சமயம் பரவிய பொழுது பௌத்தசமய சிந்தனைகளுக்கு ஏற்றவாறு ஈமத்தலத்துக்குரிய கட்டுமான முறையினை மாற்றியமைத்தமையின் அடையாளங்களாகவே அமராவதி முதலான இடங்களிற் செறிந்து காணப்படும் அளவிற் சிறிய கட்டுமானங்களைக் கொள்ளமுடிகின்றது.

Amaravathi Stupa

தொல்குழிப்படுத்தல், தாழியிற் கவித்தல், தாழ்வையின் அடைத்தல் என்னும் மூவகையான ஈம அடக்க முறைகளைப் பற்றி மணிமேகலையிற் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈமப் பள்ளிப்படை (Dolmen) ஈமக்கல்லறை, ஈமக்கல்லறையினை மூடிய கற்குவை, கல்வட்டம் என்பன பெருங்கற் காலப் பண்பாட்டு ஈமக் கட்டுமானங்களின் தரைமேலான தோற்றங்களாகும். அந்தப் பண்பாட்டுக்குரிய மக்கள் பௌத்தராகிவிட்டதும் அண்டவடிவமான சேதியம் அவர்களின் ஈமக்கட்டுமானங்களின் தரைதோற்ற வடிவமாகிவிட்டது.

தாதுக்களைப் பேழைகறிற் புதைக்கும் இடங்களிலே தாதுகோபங்களைப் புதைக்கவேண்டும் என்பது பௌத்தசமய நூல்கள் சொல்லும் நியதியாகும். தாதுக்கள் சரீர தாது, பரிபோகிகதாது என இருவகைப்படும்.

கந்தரோடையில் அமைந்திருக்கும் சேதியம் போன்ற சிறிய மிதமான அளவுடைய கட்டுமானங்களிடையே அவற்றை வலம் வந்து வழிபடுவதற்கான சுற்றுப் பாதைகளுக்குப் போதிய அளவான இடைவெளிகள் காணப்படவில்லை. எனவே, அவை வழிபாட்டிற்குரிய கட்டுமானங்களாக அமைக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது. அவை காலஞ்சென்ற பௌத்த துறவிகளின் ஈமப்பள்ளிப் படைகளாக அமைந்தவை என்று கொள்ளுவதற்கான காரணமுண்டு. அவற்றுட் சிலவற்றை அகழ்வு செய்தபொழுது ஈமத்தாழ்வைகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

Kantharodai Stupas

கந்தரோடையில் ஈமத்தலத்திலே இறந்துபோன பௌத்த துறவிகளின் சடலங்களைத் தாழ்வைகளிற் புதைத்து அவற்றின் மேலே பள்ளிப்படையாகத் தூபி போன்ற கட்டுமானத்தை உருவாக்கி உள்ளனர் போலத் தெரிகின்றது. வல்லிபுரம் பொன்னேட்டின் வரிவடிவங்களும் குடாநாட்டிலுள்ள பௌத்த படிமங்களும் அங்கு ஆந்திரதேசத்துப் பண்பாட்டு மரபுகளின் செல்வாக்கு கணிசமான அளவில் ஏற்பட்டமைக்கான அடையாளங்களாகும். 

கந்தரோடையிற் காணப்பட்ட விகாரையினைப் பற்றி கிபி. பதினான்காம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற நம்பொத்த என்ற நூல் குறிப்பிடுகின்றது. கிபி. முதன் மூன்று நூற்றாண்டுகளில் அங்கு பௌத்தப்பள்ளி இருந்தமைக்கான ஆதாரங்கள் அகழ்வாய்வுகளின் மூலம் கிடைத்துள்ளன. கூரையோடுகள், செங்கட்டிகள், தூண்தாங்கு கற்கள் முதலானவற்றோடு சேதியங்களின் பகுதிகளான ஹர்மிகா, சத்திராவலி என்பனவும் அங்கு கிடைத்துள்ளன. புத்தர் படிமம், புத்தர் பாதம் போன்ற வழிபாட்டுச் சின்னங்களையும் அங்கு கண்டெடுத்தனர்.

ஓரிடத்திலே கூரையோடுகள் பெருந் தொகையானவை குவிந்து காணப்பட்டன. அவை பெருங்கட்டிடமொன்றின் கூரை இடிந்தமையால் அவ்வாறு தென்பட்டனதென்று கருதப்படுகின்றது. அவை வடிவமைப்பிலே தட்டையானவை. கட்டடமொன்றின் இடிபாடுகளிலே எண்ணிக்கையிற் பலவான தூண்தாங்கு கற்கள் கிடந்தன. தூண்தாங்கு கற்கள் நாகரின் கட்டுமானங்களுக்குச் சிறப்பாக உரியவை. அவை நாகர் பரவியிருந்த இடங்கள் எல்லாவற்றிலும் கிடைத்துள்ளன. வடமாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் எல்லா மாவட்டங்களிலும் கிடைத்துள்ளன. புத்தளம் கற்பிட்டி ஆகியவற்றிலும் சில இடங்களில் அவற்றை இன்னும் காணமுடிகின்றது. அவற்றில் வேறுபாடின்றித் தமிழ்ப் பிராமி வடிவங்களில் இரு சிறுவசனங்கள் எழுதப்பட்டிருக்கும். அந்த வசனங்கள் இலங்கையிலுள்ள பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களின் ஈமத்தலங்களிலுள்ள ஈமக் கல்லறைகளிற் காணப்படும் வசனங்களாகும். கந்தரோடையிற் காணப்படும் தூண்தாங்கு கற்களிலும் அதே வசனங்கள் தெரிகின்றன. கந்தரோடையிலுள்ள பௌத்த விகாரங்களை நாகர் இனத்தவர்கள் அமைத்தனர் என்பதற்கு இக்கற்களும் ஒருவகையான சான்றுகளாகும்.

நாகர் கந்தரோடையிற் கட்டுமானங்களை அமைப்பதற்குச் சுண்ணாம்புக்கல், பவளப்பாறை, வைரக்கல் என்பவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். சேதியங்கள் போன்ற அமைப்புகளின் அடித்தளங்கள் ஒரே அளவில் அறுத்துச் செதுக்கப்பட்ட பவளப் பாறைக்கற்கள், சுண்ணாம்புக் கற்கள் என்பவற்றால் உருவானவை. அண்டப் பகுதியின் உட்புறத்தை நாட்டிலே கிடைக்கின்ற வைரக்கல், சரளைக்கல் என்பவற்றினால் நிரப்பினார்கள். அவற்றின் வெளிப்புறத்தை செதுக்கிய சுண்ணாம்புக்கல், பவளப் பாறைக்கல் என்பவற்றினால் உருவாக்கினார்கள். யாழ்ப்பாணத்திலே கருங்கற்கள் கிடைக்காதமையாற் கட்டுமானங்களுக்கு அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. பௌத்தப் பள்ளிகளை அமைப்பதற்கு செங்கட்டிகளே கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டன. கொட்டியாவத்தை, மாசியப்பிட்டி என்பவற்றிலும் பௌத்த கட்டுமானங்களின் அழிபாடுகளிடையில் அவை கூடுதலாகக் காணப்பட்டன.

வாசற்கடவு போன்ற கல்லொன்றும் கந்தரோடையில் அடையாளங் காணப்பட்டது. நாகரின் கட்டுமான முறையில் வாசற்கடவு என்பதும் ஒரு சிறப்பான அம்சமாகும். அவர்கள் அமைத்த புராதனமான வழிபாட்டுத் தலங்களில் அரைவட்ட வடிவிலான கல்லொன்று அமைந்திருக்கும். எழுத்துமுறை வழக்கத்தில் வந்தமையின் பின்பு அதிலே கடவுட்பெயரை அல்லது கட்டுமானத்தின் பெயரை எழுதுவது வழமை. திருகோணமலை மாவட்டத்திலுள்ள அகஸ்திய ஸ்தாபனம், மட்டக்களப்பு மாவட்டத்திலே படுவான்கரையிலுள்ள பாலாமடு என்னுமூரில் அமைந்துள்ள நாகவழிபாட்டு நிலையம் என்பன இதற்கான சிறந்த உதாரணங்களாகும். நாகர் நாகவழிபாடு, சைவசமய வழிபாடு, பௌத்த சமய வழிபாடு என்பவற்றுக்குரிய நிலையங்களை உருவாக்கிய பொழுது, வேறுபாடின்றி, அவற்றின் நுழைவாசலிற் கடந்து செல்வதற்கென்று ஓர் அரைவட்டக் கல்லினை வைப்பது வழமை.

பிற்காலத்தில் அமைக்கப்பட்ட பௌத்த சமய கட்டுமானங்கள் நாகரின் கலைப்பாணியினை அடிப்படையாகக் கொண்டவை. எனவே வாஹல்கட என்னும் அரைவட்டக் கல் பௌத்த கட்டிடங்களிலும் ஓரம்சமாகிவிட்டது. வாஹல்கட என்பது வாசல் கடவு என்னும் தமிழ் மொழித் தொடரின் சிங்கள மயமாக்கம் பெற்ற வடிவமாகும். இடைக்காலத்திலே பௌத்த சமயக் கோயில்களில் வாசற்படியாக வைக்கப்படும் வாஹல்கட என்பதை குதிரை, சிங்கம், யானை, காளை ஆகிய விலங்குகளின் அணிவரிசைகள் பொருந்திய அலங்கார வேலைப்பாடுகள் அமைந்த பண்பாட்டுச் சின்னமாக உருவாக்கினார்கள். இதனைப் பற்றி மேலிடங்களில் உள்ளவர்களின் அறியாமை இந்நாட்களில் அரைவட்டக்கல் காணப்படும் சைவசமயக் கோயில்களுக்குப் பேரிடராகிவிட்டது.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

6565 பார்வைகள்

About the Author

சிவசுப்பிரமணியம் பத்மநாதன்

யாழ். பல்கலைக்கழக வேந்தரும் தகைசார் பேராசிரியருமான சி. பத்மநாதன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். இலங்கை வரலாறு, தென்னிந்திய வரலாறு, இலங்கையில் இந்து சமயம், இந்தியப் பண்பாடு தொடர்பில் 35 இற்கும் மேற்பட்ட நூல்களையும் 120 ஆங்கிலக் கட்டுரைகள் அடங்கலாக 200 இற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர், தனது வரலாற்று ஆய்வுகளுக்காக இலங்கையிலும் சர்வதேசத்திலும் பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். 2005 ஆம் ஆண்டு இலண்டன் Cambridge Bibliographical Association பேரா. பத்மநாதன் அவர்களுக்கு “International Bibliography Intellectual“ விருதை வழங்கிக் கௌரவித்தது. தமிழியல் பற்றிய ஆய்வுக்காக பேராசிரியர் செல்வநாயகம் விருதைப் பெற்றுக் கொண்ட முதலாவது தமிழரும் இவரே; 2008 ஆம் ஆண்டு இவ்விருதைப் பெற்றுக்கொண்டார். இதற்கு முன்னர் இவ்விருதைப்பெற்ற இருவரும் ஆங்கிலேயர்கள். 2013 ஆம் ஆண்டில் ஆசிய மரபுரிமைக்கான சர்வதேச சங்கத்தினால் நீலகண்ட சாஸ்திரி விருதைப் பெற்றுக் கொண்ட பேராசிரியர், தற்போதும் இலங்கைத் தமிழர்களின் வரலாறு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.