Arts
17 நிமிட வாசிப்பு

புராதனகால யாழ்ப்பாணத்தில் பௌத்தமும் தமிழும் – பகுதி 3

December 15, 2023 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

பௌத்த சிற்பங்கள்

இலங்கையில் உன்னதமான வேலைப்பாடுகளான பௌத்த சிற்பங்கள் பெருந்தொகையிலே காணப்படுகின்றன. ஆதியில் தர்மச்சக்கரம், புத்தர்பாதம், போதிமரம் என்பனவே வழிபாட்டுச் சின்னங்களாக விளங்கின. ஆயினும் கிரேக்கரின் செல்வாக்கினால் உருவ வழிபாடு இந்திய சமயங்களிடையில் வழமையாகிவிட்டது. இலங்கையில் இரண்டாம் நூற்றாண்டளவில் புத்தர் படிமங்களை வழிபடுவது வழமையாகிவிட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள புத்தர் படிமங்கள் கிபி. 300-500 வரையான காலப்பகுதிக்குரியனவாகத் தெரிகின்றன. கந்தரோடை, சுண்ணாகம், வல்லிபுரம், நவக்கீரி ஆகியவிடங்களிற் புத்தர் படிமங்கள் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துப் பௌத்த சமயந் தொடர்பான கலைப்பாணியில் ஆந்திரதேசத்து அமராவதி போன்றவற்றின் கலைமரபுகளின் செல்வாக்கு மிகுந்தளவிலே காணப்படுகின்றது. அமராவதியிற் போல யாழ்ப்பாணத்திலும் சிற்ப வடிவங்களுக்குரிய தலை, கைகள், கால்கள் முதலானவற்றை வெவ்வேறாகச் செதுக்கி உடலின் நடுப்பாகத்தோடு பொருத்தும் முறை வழங்கியது.

சுண்ணாகத்திலே 1917 இல் போல் ஈ பீரிஸ் கண்டெடுத்த சிற்பம் இவ்வாறாக அமைக்கப்பட்டது. நின்ற கோலமான இப்படிமம் 12 அடி உயரமானது. அதன் மார்பகம் 20 அங்குலம் அகலமானது. அதிலே தலைமயிர் நத்தை ஓடு போலச் சுருண்ட கோலமானது; காதுகள் மிக நீளமானவை; மூக்கு நீண்ட கோலமானது; உயிரோட்டமான வடிவமைப்பு அதன் சிறப்பான அடையாளமாகும்; புன்சிரிப்புடன் விளங்கும் கோலத்து முகபாவம் அமைந்துள்ளமை மற்றுமொரு சிறப்பாகும். அதனை அநுராதபுர அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.

statue

நின்றகோலமான முழுமையான புத்தர் படிமமொன்று வல்லிபுரத்திற் கிடைத்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வல்லிபுரத்தில் ஆழ்வார் கோயிலைப் புனரமைப்பதற்கு நிலத்தை வெட்டிய பொழுது, கோயிலின் அத்திபாரம் அமைப்பதற்குள்ள இடத்திலிருந்து 50 யார் தூரத்தில் நிலத்தை வெட்டியபொழுது இப்படிமத்தைக் கண்டனர். அந்தப் படிமம் 1902 ஆம் வருடம் வரை கோயிலின் வாகனசாலையில் வைக்கப்பட்டிருந்தது. தாய்லாந்து மன்னர் அதில் ஈடுபாடு கொண்டதாலே தேசாதிபதி ஹென்றி வ்ளேக் (Henry Blake) அதனை 1906 ஆம் ஆண்டில் அரசரிடம் அனுப்பிவைத்தார். இப்பொழுது அது வாங்கொக் நகரிலுள்ள விகாரமொன்றில் வைக்கப்பட்டுள்ளது. வல்லிபுரம் பொன்னேட்டிலே குறிப்பிடப்படும் விகாரையில் இது ஆதியில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

வல்லிபுரம் பொன்னேடு

வல்லிபுரத்திலே விஷ்ணுகோயில் வளாகத்தில் 1936 ஆம் ஆண்டில் நிலத்தை வெட்டிய பொழுது வாசகம் எழுதிய பொன்னேடொன்றைக் கண்டெடுத்தனர். அது பிராகிருத மொழியில் வாசகம் எழுதிய பொன்னேடு. யாழ்ப்பாணத்திலுள்ள கிபி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்துக்குரிய கல்வெட்டுகள், பெயர் எழுதிய உலோகப் பொருட்கள், மட்கலன்கள் என்பவற்றை எவரும் அறிந்திருக்காத நிலையிலே, அதன் கண்டுபிடிப்பு வியப்பிற்குரியதாகிவிட்டது. பொன்னேட்டின் வாசகத்தைப் படித்து அதன் வாசகத்தையும் ஆங்கில மொழிபெயர்ப்பினையும் விளக்கக் குறிப்புகளோடு பரணவிதான வெளியிட்டார்.  அவருடைய வாசகத்தில் மூன்றிடங்களிலே பிழைகள் காணப்படுகின்றன. நாகதீவில் ஆட்சிபுரிந்த பிரதானியின் பெயரை இஸிகிரய என்று பிழையாகப் படித்துள்ளார். ஆனாற் சாசனத்திற் காணப்படுவது ஸிவிரய என்பதாகும். அது ஸிவிராயன் என்ற தமிழ்ப் பெயரின் பிராகிருத வடிவமாகும். ஸிவிரய என்பது ஸிவி, ரய(ராய) என்னும் சொற்களால் இணைந்த கூட்டுமொழித் தொடர். ஸிவி என்பது பௌத்த ஜாதகக் கதைகளிலும் இந்திய இதிகாச, புராணங்களிலும் போற்றப்படும் அரசனாகிய சிவிச்சக்கரவர்த்தியின் பெயர். ஸிவி ஜாதகம் என்பது அவனைப் பற்றிய கதைகளிலொன்றாகும். ஸிவிரய என்பதற்கு முன்னுள்ள இ(·│∙) என்ற எழுத்தைப் இப்பெயரின் முதலெழுத்தாகவன்றி, அதனைச் சுட்டெழுத்தென்று கொள்வதே பொருத்தமானது.

gold plate

பொன்னேட்டிலே காணப்படும் ணகதிவ என்ற பெயரைப் பரணவிதான நகதிவ என்று அடையாளம் கண்டார். ஆனால் இச்சொற்கள் இரண்டுக்கும் இடையில் ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு. ணகதிவ என்பது ணாகதீவு என்ற தமிழ்ப் பெயரின் பிராகிருத மயமாக்கம் பெற்ற வடிவம்.  பிராகிருத மொழியில் எழுதிய வாசகமொன்றில் அம்மொழியில் வழங்கிய பெயரொன்றை தமிழ்மயமாக்கிய வடிவத்தில் எழுதவேண்டிய தேவை ஏற்படாது. எனவே பொன்னேட்டிலுள்ள பெயரின் வடிவத்தை ணகதிவ என்னும் தமிழ்ப் பிராமி வடிவத்தை பிராகிருத மயப்படுத்தினார்கள் என்பதே பொருத்தமான விளக்கமாகும். எனவே பொன்னேட்டின் மூலம் நாட்டின் பெயரும் அதில் ஆட்சிபுரிந்த குறுநில மன்னனின் பெயரும் முறையே ணா(நா)கதீவு, ஸி(சி)விராயன் என்னும் தமிழ் மொழிப் பெயர்கள் என்பது தெளிவாகின்றது. இது மொழியியல் அடிப்படையில் வேறோரிடத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

கந்தரோடையிலுள்ள பௌத்த கட்டுமானங்களிலும் பௌத்தப் பள்ளியிலே பயன்படுத்திய பாவனைப் பொருள்களிலும் தமிழ் மொழியிற் பெயர்கள் எழுதப்பட்டுள்ளமை வரலாற்றுச் சிறப்புடைய அம்சமாகும். கந்தரோடையில் 1966 இல் நடைபெற்ற அகழ்வுகளிற் கிடைத்த பலவகையான பண்பாட்டுச் சின்னங்கள் யாழ்ப்பாணா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. புத்தர் படிமம், புத்தர்பாதம், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சிற்றுருவமான தாதுப்பேழைகள், கட்டுமானங்களின் துண்டமான தூண்கள், பாவனைப் பொருள்களான மட்கலங்களின் ஓடுகள், நீரேந்து கலன்கள், குவளைகள், அம்மி, குழவி, ஆட்டுக்கல் முதலான உணவு தயாரிக்கும் பொருள்கள் என்பன அவற்றுள் அடங்கும்.

அவ்வாறான பொருள்கள் எல்லாவற்றிலும் வேறுபாடின்றித் தமிழ் மொழியிற் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. அவை தமிழ்ப் பிராமி வடிவங்களிலும் எழுதப்பட்டுள்ளன. நாகர் வழமையாகப் பயன்படுத்திய பொருட்களில் மணிணாகன், மணிணாகன் பள்ளி என்ற பெயர்களும் மூன்று தலைமுறை வேளிர்களின் பெயர்களைக் குறிக்கும் இரு வசனங்களும் காணப்படுகின்றன. புத்தர் படிமம், புத்தர்பாதம், நீர்த்தொட்டி, நீரேந்து கலன்கள் ஆகிய காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில் அந்த வசனங்கள் அமைந்துள்ளமை கவனித்தற்குரியதாகும். அவை எல்லாவற்றிலும் ணாகன என்னும் பெயர் காணப்படும்.

தூபிகளின் மேல் நுனிப்பாகமாக அமைந்த சத்திராவலி என்பவற்றிலும் காணிக்கையாக வழங்கப்பெற்ற தாதுப்பேழைகளிலும் மணிணாகன் என்ற பெயரைக் காணலாம். பாதுகாப்பாகப் பூட்டிவைக்கப்பட்டுள்ள கலவோடுகள் சிலவற்றிலும் செங்கட்டிகளிலும் மணிணாகன்பள்ளி என்ற பெயர் காணப்படுகின்றது. அவற்றுட் சிலவற்றிலே நாக வடிவம் தெரிகின்றது. இவற்றைப் பற்றி முதுநிலை ஆய்வாளர் எவரும் சென்ற நூற்றாண்டில் அறிந்திருக்கவில்லை என்பது பேராசிரியர் வேலுப்பிள்ளை எழுதிய குறிப்பொன்றினால் உணரப்படும். யாழ்ப்பாணத் தொல்பொருள் கழகத்தினரும் அறிந்துகொள்ளாதமை ஓர் அதிசயமாகும். புறநடையாகவுள்ள ததஹபத என்று அரைகுறையாக அடையாளப்படுத்தக் கூடிய பிராகிருதச் சொல்லைப் பற்றியே பெரிதுபடுத்தி எழுதினார்கள். அதில் இறுதியாகவுள்ள பத என்பதே பிராகிருதம் என்று அடையாளப்படுத்தக் கூடியது, அது பாத்ர என்ற சமஸ்கிருதச் சொல்லின் பிராகிருத வடிவமாகும். அதற்கு முன்னொட்டாக அமைந்த சொல்லின் எழுத்துக்கள் தெளிவற்றவை. அவற்றை ததஹ என்று படித்தால் தத்தனுடைய பாத்திரம் என்றுதான் பொருள்கொள்ள நேரிடும். அவ்வாறாகில் ததஹ பத என்பது பிராகிரதம் என்ற விளக்கம் பொருத்தமற்றதாகிவிடும்.

கந்தரோடையிலே காணப்படும் தூபி போன்ற கட்டுமானங்கள் சிலவற்றின் அடித்தளங்களில் தமிழ்ப் பிராமி வடிவங்களில் எழுதிய சிறிய வசனங்களின் அடையாளங்கள் தெரிகின்றன. அந்த வசனங்களும் பெருங்கற்காலப் பண்பாட்டு ஈமக் கல்லறைகளில் உள்ளனவாகும்.  இதுவரை கவனித்தவற்றிலிருந்து கந்தரோடையிற் புராதன காலத்தில் நிலைபெற்ற பௌத்த நிறுவனங்கள் தமிழ்மொழி பேசும் நாகர் சமுதாயத்தின் சமய நிலையங்கள் என்பது உறுதியாகின்றது.  யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி, வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு தேசம் என்பவற்றிலும் அதே நிலைதான் காணப்பட்டது.

வவுனியா அருங்காட்சியகம், ஸேருவில் அருங்காட்சியகம் என்பவற்றிலே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் இந்தக் கருத்திற்கு ஆதாரமாகின்றன. வவுனியா அருங்காட்சியகத்தில் தமிழ் தவிர்ந்த வேறெந்த மொழியிலும் பெயர் எழுதிய பண்பாட்டுச் சின்னங்களைக் காணமுடியவில்லை. ஸேருவில அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் பொழுது ஏற்படும் அனுபவங்கள் அதிசயமானவை. அங்கு நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலுமுள்ள புத்தர் படிமங்கள் பல காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றுட் பல அளவிற் பெரியவை; சிற்பங்கள் என்ற வகையில் உன்னதமான வேலைப்பாடானவை. அவற்றில் மார்பகம், உதரம், நெற்றி ஆகியவற்றில் மணிணாகன் என்ற பெயர் தெளிவாகத் தெரிகின்றது. அது தமிழ்ப் பிராமி வடிவங்களில் எழுதப்பட்டுள்ளது. அவை தமிழ் மொழி பேசிய நாகரின் உன்னதமான வேலைப்பாடுகளாகும். கிபி. 2018 ஆம் ஆண்டளவில் அகழாய்வுகளின் மூலம் ஈரிடங்களிலே ஸேருவெலவிற் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களின் ஈமத்தலங்கள் இரண்டினை அடையாளங் கண்டுள்ளனர்.

முடிவுரை

இலங்கையில் கிமு. பத்தாம் நூற்றாண்டு முதலாகப் பரவிய பெருங்கற்காலப் பண்பாடு நாகரோடு தொடர்புடையது. அந்தப் பண்பாட்டினை நாகர் பரப்பினார்கள் என்பதையும் அவர்கள் தமிழ் மொழி பேசியவர்கள் என்பதையும் அப்பண்பாட்டு மக்களின் ஈமத் தலங்கள் சிலவற்றிலுள்ள ஈமக் கல்லறைகளின் கல்வெட்டுகளினால் அறிய முடிகின்றது.

எழுத்தின் பயன்பாடு அறிமுகமாகியதும் நாகர் ஈமக் கல்லறைகளிலே சொற்களையும் இரு வசனங்களையும் ஒரு கிரியாபூர்வமான முறையிலே பதிவுசெய்தனர். அவை நாகரைப் பற்றியவை தமிழ் மொழியில் எழுதப்பட்டவை தமிழ்ப் பிராமி வடிவங்களில் எழுதப்பட்டவை. கல்லறைகளில் மட்டுமன்றி ஈமத் தாழிகளிலும் அவற்றைப் பதிவு செய்தனர். பதவிகம்பொலவிற் காணப்படும் பிரமாண்டமான பள்ளிப்படை (Dolmen), இவ்வன்கட்டுவவிலுள்ள கல்லறைகள், அங்குள்ள ஈமத்தாழிகள், அவற்றிலே படையல்களை வைப்பதற்குப் பயன்படுத்திய பல்வேறு வகையான மட்கலன்கள் ஆகியன இந்த வழமைக்குரிய முன்னு தாரணங்களாகும். குடித்தொகையில் நாகர் மேலோங்கியிருந்த பகுதிகள் எல்லாவற்றிலும் இந்த முறை பொதுவழமையாகிவிட்டது.

மகாவம்சம் முதலான பாளி நூல்கள் யாழ்ப்பாணக் குடாநாடு, அதற்கண்மையிலுள்ள தீவுகள் ஆகியவற்றை நாகதீப என்ற பெயராற் குறிப்பிடுகின்றன. அதனை மணிமேகலை நாகநாடு எனக் குறிப்பிடுகின்றது. ஆனால் அது ணாகதீவு என்னும் பெயரால் அங்கு வாழ்ந்தவர்களிடையே வழங்கியது என்பதை வல்லிபுரம் பொன்னேட்டின் மூலம் அறியமுடிகின்றது.

நாகரிக வளர்ச்சிக்கு ஏதுவான உற்பத்தி முறையினையும் தமிழ் மொழியினையும் இலங்கையில் அறிமுகம் செய்த நாகர் மூலமாகவே நாக வழிபாடும் சிவலிங்க வழிபாடும் பரவலாயின. கிமு. மூன்றாம் நூற்றாண்டிலே பௌத்த சமயம் பரவியதும் அதில் நாகர் ஈடுபாடு கொண்டனர். இலங்கையிலுள்ள பிராமிக் கல்வெட்டுகளில் தொண்ணூறுக்கும் மேற்பட்டனவற்றில் நாகர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சமுதாயக் கட்டமைப்பிலே பல்வேறு நிலைகளிலுள்ள நாகர் பௌத்த சங்கதாருக்கு வழங்கிய நன்கொடைகளைப் பற்றிய குறிப்புகள் அவற்றிலே பதிவுசெய்யப்பட்டுள்ளன. பௌத்த துறவிகளுக்கு உறைவிடங்களாகக் குகைகளை நாகர் வழங்கியுள்ளனர். அவர்களிற் சிலர் அரசர்; வேறுசிலர் கமஞ்செய்வோர் (கமிக) இன்னுச் சிலர் உலோகத் தொழில் புரிவோர், நாகநகர், நாககுலம் என்பன பற்றிய குறிப்புகளும் கல்வெட்டுகளிற் காணப்படுகின்றன.

நாகரிற் சிலர் கப்பலோட்டுதல், கடல்வழி வாணிபம் என்பவற்றில் ஈடுபட்டதால் அந்நாட்களிற் பரதகண்டத்திலே தொடர்பு மொழியாக விளங்கிய பிராகிருத மொழியினையும் பயன்படுத்தினார்கள். குடித்தொகையிலே இனக்கலப்புக் கூடுதலாக ஏற்பட்டிருந்த பிரதேசங்களில் நாகர் பொதுமொழியான பிராகிருதத்தைப் பயன்படுத்தினார்கள். பிராகிருதமே பௌத்த சமயத்தின் இலக்கிய மொழி என்பதாலும் போதனா மொழி என்பதாலும் அதன் செல்வாக்கு இலங்கையின் பெரும்பகுதியில் மேலோங்கியது. அதன் விளைவாக மொழிமாற்றம் ஏற்பட்டது. அது ஆதி வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்டுவிட்டது. நாகரின் பேச்சுவழக்கான தமிழ் மொழியும் இடைக்கற்கால மக்கள் பேசிய மொழியும் அழிந்துவிட்டன. ஆயினும் நாகர் வழங்கிய நன்கொடைகளைப் பதிவு செய்யும் கல்வெட்டுகளிலே பல தமிழ்ச் சொற்கள் பிராகிருத மயமான கோலத்திற் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் பதவிநிலை, நிலவியல், நீரியல் என்பன தொடர்பானவை.

இலங்கைத் தமிழரின் வரலாற்று ரீதியான வதிவிடங்களான வட, கிழக்கு மாகாணங்களில் அடங்கிய நிலப்பகுதிகளில் வேறொரு வகையான மொழிமாற்றம் ஏற்பட்டது. அங்கு தமிழ் மொழியின் செல்வாக்கு மேலோங்கிவிட்டது. பழங்குடியினரான யக்கரின் மொழியும் தொடர்பு மொழியான பிராகிருதமும் வழக்கொழிந்துவிட்டன.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை அங்கு மொழிமாற்றம் எதுவும் நிகழவில்லை பிராகிருதம் அங்கு ஒரு ஆவணமொழியாகவும் பயன்படுத்தப்படவில்லை. வல்லிபுரம் பொன்னேடு மட்டுமே புறநடையாக உள்ளது. அங்கு புழங்கிய பெயர் பொறித்த உலோகப் பொருட்கள் ஏராளமானவை. அவற்றுட்சில காலத்தால் வல்லிபுரம் பொன்னேட்டிற்கும் முற்பட்டவை. பௌத்தப்பள்ளிக்கு உரியனவும் அவற்றுள் அடங்கும்.

யாழ்ப்பாணத்திலே பௌத்த சமயம் நாகர் சமுதாயத்திலே பரவியது.  அது பெருங்கற்காலப் பண்பாட்டு மரபுகளை ஆதாரமாகக் கொண்ட மக்களிடையே பரவியது. அந்தப் பண்பாட்டை நாகரே அங்கு பரப்பினார்கள். அதனால் அங்கு தமிழ் மொழி பேச்சுவழக்கு மொழியாக வழங்கியது. அந்த மொழியைப் பேசியவர்களே பௌத்தராயினர். அதனால் பௌத்த கட்டுமானங்களிலும் பௌத்தப் பள்ளிகளில் வாழ்ந்தவர்களின் பாவனைப் பொருட்களிலும் வழிபாட்டுச் சின்னங்களிலும் பெயர்களையும் வசனங்களையும் தமிழில் எழுதியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஆதிகாலத்தில் நிலவிய பௌத்தம் பற்றிப் பேசுகின்ற பொழுது இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். பௌத்த சமய சின்னங்களில் எழுதப்பட்ட பெயர்களும் வசனங்களும் நாகர் சமுதாயத்தின் பாரம்பரியமானவை. அவை ஆதி வரலாற்றுக் காலத்தில் நிலைபெற்ற பெருங்கற்காலப் பண்பாட்டின் அம்சமானவை.  யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையிலே பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் கந்தரோடையில் மிகுந்து காணப்படுகின்றன. அதேபோல தமிழ்ச் சொற்களும் பெயர்களும் எழுதிய பௌத்த சமய சின்னங்களும் அங்குதான் பரவலாகக் காணப்படுகின்றன. மேலாகப் பெருங்கற்பண்பாட்டு காலத்து ஈமக் கல்லறைகளிற் காணப்பட்ட இரு தமிழ் வசனங்களும் கந்தரோடையிலுள்ள தூபிபோன்ற கட்டுமானங்களின் அடித்தளங்களில் அமைக்கப்பட்டுள்ளமை ஆய்வாளரதும் ஆர்வலரதும் கவனத்துக்கு உரியது.

அடிக்குறிப்புகளும் உசாத்துணையும்

  1. இலங்கை வரலாற்று நூல்களிலே தமிழர் வாழும் பகுதிகள் பற்றிய குறிப்புகள் இதுவரை மிக அரிதாகவே காணப்பட்டன. அங்குள்ள கோணேசர் கல்வெட்டு மட்டக்களப்பு பூர்வசரித்திரம் போன்றவற்றை வரலாற்று நெறியிற் பயிற்சி பெற்ற ஆசிரியர் எவரும் புலமை நோக்கிலே படித்து, அவற்றைப் பதிப்பித்து வெளிடவில்லை. சென்ற நூற்றாண்டு முடியும் வரையான காலத்திலே தொல்லியல் அகழ்வுகளின் மூலமாகப் போதியளவான விபரங்கள் கிடைக்கவில்லை. ஆயினும் கடந்த 15 வருடங்களிலே பெருந் தொகையான தமிழ்ப்-பிராமிக் கல்வெட்டுகள் அடையாளங் காணப்பட்டதன் விளைவாக நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. மறைந்தும் மறந்தும் போன இலங்கைத் தமிழரின் வரலாற்றை மீட்டுக் கொள்வதற்கான வாய்புக்கள் கிடைத்துள்ளன. சி.பத்மநாதன், இலங்கைத் தமிழர் வரலாறு கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும், இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2016.
  2. நாகதீவில் நிலவிய பௌத்த சமயம் தொடர்பான கதைகளும் சில வரலாற்றுக் குறிப்புகளும் மகாவம்சத்தில் அடங்கியுள்ளன. அதிலுள்ள கதைகள் புத்தர்பிரான் நாக அரசர்களுக்கிடையிலே ஏற்படவிருந்த போரைத் தவிர்ப்பதற்கு வான்வழியாக வந்தமை பற்றிய கதை. அந்தக் கதை மணிபல்லவம் என்னும் தீவுடன் தொடர்புபடுத்தி மணிமேகலையில் மிக விரிவாகச் சொல்லப்படுகின்றது.  மகாவம்சத்திலுள்ள வரலாற்றுக் குறிப்புகள் நாகதீவிலுள்ள பௌத்த நிலையங்களுக்கு அநுராதபுர அரசர் சிலர் வழங்கிய நன்கொடைகள் பற்றியவை.
  3. வடமாகாணத்திலே பெரியபுளியங்குளம், வெடுக்குநாறிமலை, ஒருப்பொத்தானை, மகாகச்சத்கோடி என்னும் நான்கு இடங்களில் மட்டுமே சென்ற நூற்றாண்டு முடியும் வரையான காலத்தில் பௌத்தம் தொடர்பான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவை வவுனியா மாவட்டத்து தென்னெல்லைப் புறமாகவுள்ள ஊர்களில் உள்ளவை.  பெரியபுளியங்குளத்ததுக் கல்வெட்டுக்களிற் பல நாகர்குல வேளிர்(ரஜ) குடும்பத்தவர் வழங்கிய நன்கொடைகளைப் பதிவு செய்கின்றன.  பரதவர், தமிழர், நாகர், பத என்ற சமூகத்தவர் அங்குள்ள வேள்புலத்தில் வாழ்ந்த சமூகப் பிரிவினர் ஆவர். பத என்போரைத் தவிர்ந்த மற்றவர்கள் எல்லோரும் தமிழ் மொழி பேசும் சமூகத்தவர். சி.பத்மநாதன், ஒரு மறந்துபோன நாகரிகத்தின் தரிசனங்கள் யாழ்ப்பாணத்து சமுதாயமும் பண்பாடும் (கிமு.300-கிபி.500), கொழும்புத் தமிழ்ச்சங்கம், கொழும்பு, 2023.
  4. கா.இந்திரபாலா, இலங்கையில் தமிழர் ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, குமரன் புத்தக இல்லம், சென்னைஃகொழும்பு, 2006, பக்.124-125
  5. இவ்வன்கட்டுவவில் அகழ்வாய்வுகளுக்குப் பொறுப்பாகவிருந்த பேராசிரியர் ஸேனக பண்டாரநாயக்க அங்குள்ள கல்லறைகளின் மூடிகளில் எழுத்துகள் இருப்பதை அறிந்து கொண்டார். ஆயினும் கல்வெட்டுகளைப் படிப்பதில் அனுபவம் இன்மையால் அவை என்ன மொழியில் அமைந்துள்ளன என்பதை அவராற் புரிந்துகொள்ள முடியவில்லை. Senake Bandaranayake “The Settlement patterns of the Protohistoric – Early Historic interface in Sri Lanka”, Reflections On A Heritage Historical Scholarship on Premodern Sri Lanka Ed. R.A.L.H. Gunawardana, S. Pathmanathan, M.Rohanadeera, Central Cultural Fund – Ministry of Cultural Affairs Colombo 2000, p 9.
  6. சி.பத்மநாதன், இலங்கைத் தமிழர் வரலாறு, 2016, பக்.74-85;
  7. Rajan, Early Writing System, A Journey from Graffiti to Brahmi, Pandya Nadu Centre for Historical Research, Madurai, 2015, Pp.93(5.3-5  ), (5.0-5.7), 95(12.0-12.7)
  8. சி.பத்மநாதன், இலங்கைத் தமிழர் வரலாறு, 2016, பக்.482-486.
  9. மேலது, ப.190, 255
  10. சி.பத்மநாதன், ~கோவில் குளத்தில் நாகரின் பண்பாட்டுச் சின்னங்கள்|, கலைக்கேசரி
  11. சி.பத்மநாதன், “உருத்திரபுரத்தில் நாகரமைத்த கோயில்கள்”, உதயன்
  12. சி.பத்மநாதன், இலங்கைத் தமிழர் வரலாறு, 2016, பக். 128-133.
  13. மேலது, பக்.83-97, 177-183
  14. மேலது, ப.179
  15. S.Paranavitana, “Vallipuram Gold Plate Inscription of the Reign of Vasabha”, Epigraphia Zeylanica Vol.IV, 229-237, “Vallipuram Gold Inscription”,  Inscriptions of Ceylon, Vol.2, Part I: Late Brahmi Inscriptions, Department of Archaeology, Moratuwa, 1983.
  16. The Mahavamsa (kfhtk;rk;) Translated Into English By Wilhelm Geiger, Ph.D, The Ceylon Government Information Department, Colombo, 1950, I:44-62..
  17. மணிமேகலை (புதிய பதிப்பு) புலியூர்க்கேசிகன் தெளிவுரையுடன், பாரி நிலையம் சென்னை, 1994, மணிபல்லவத்துத் துயருற்ற காதை, 54-63.
  18. மகாவம்சம், ஐ:45-51.
  19. மணிமேகலை 8:43-54.
  20. மணிமேகலை 6:211-213.
  21. மணிமேகலை 25:178-191
  22. S.Thiagarajah, Kantharodai Civilization of Ancient Jaffna 500 BCE-800 CE, Kumaran Book House, Colombo-Chennai, 2016, p.250
  23. சுடுவோர், இடுவோர் தொல்குழிப்படுப்போர, தாழ்வையின் அடைப்போர், தாழியிற் கவிப்போர் மணிமேகலை, 6:66-67.
  24. C.E.Godakumbura, “Kantharodai”, JCBRAS, Vol.12, 1968, Pp.67-76.
  25. S.Thiagarajah, Kantharodai Civilization of Ancient Jaffna 500 BCE-800 CE, Kumaran Book House, Colombo-Chennai, 2016, p.250.
  26. மேலது, ப.70.
  27. C.E.Godakumbura, “Kantharodai”, JCBRAS, Vol.12, 1968, Pp.67-76.
  28. மேலது, ப.71.
  29. மட்டக்களப்பு மாவட்டத்திற் பலாச்சோலை வில்லுக்காடு, குஞ்சன்குளம் படிவெட்டின மலை, பாலாமடு, தாந்தாமலை முதலான இடங்களிற் பெருந்தொகையான தூண்தாங்கு கற்கள் காணப்படுகின்றன. சி.பத்மநாதன் இலங்கைத் தமிழர் வரலாறு… 2016, பக்.181, 201, 206, 221, 222-227, 236,-241, 248, 276.
  30. வன்னி மாவட்டங்களில் வவுனிக்குளம், கற்சிலைமடு, மருக்காரம்பளை, பாண்டியன்குளம் போன்ற இடங்களில் பெயர் எழுதிய நாகரின் தூண்தாங்கு கற்கள் காணப்படுகின்றன.
  31. C.E.Godakumbura, “Kantharodai”, JCBRAS Vol.12, 1968, Pp.67-76
  32. மேலது
  33. இலங்கைத் தமிழர் வரலாறு…,  பக்.171, 335, 336
  34. University of Ceylon History of Ceylon, ed. S.Paranavitana, Vol.I, Part I, 1959,       p, 404.
  35. Siva Thiagarajah Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800 CE, p.255
  36. மேலது
  37. Peter Shalk, Cultural Exchanges between Tamiḻakam, Āntiram and Iḻam in the Pre-Pallava Period”, Buddhism Among Tamils in Pre-Colonial Tamiḻakam and Īḻam, Part I, Editor-in-Chief: Peter Schalk, Uppsala, 2002, Pp.218-220
  38. S.Paranavitana, “Vallipuram Gold Plate Inscription of the Reign of Vasabha”, EZ, Vol.IV, Pp.229-237.
  39. சி.பத்மநாதன், ஒரு மறைந்துபோன நாகரிகத்தின் தரிசனங்கள்: புராதனகால யாழ்ப்பாணத்தில் சமுதாயமும் பண்பாடும், கொழும்புத் தமிழ்ச் சங்கம், 2023.
  40. மேலது
  41. அவர் மேல்வருமாறு கூறுவார்: “The Contemporary Pirāmi inscriptions in the South Asian subcontinent are in the Prākrit language except in Tamiḻakam, where such records are exclusively in the Tamil language.
  42. Buddhism Among Tamils in Tamiḻakam and Īḻam, Editor-in-chief, Peter Schalk, Uppsala, 2002 ,y.168.
  43. கா.இந்திரபாலா, இலங்கையில் தமிழர் ஓர் இனக்குழு ஆக்கம்பெற்ற வரலாறு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு-சென்னை, ப.16.
  44. சி.பத்மநாதன், இலங்கைத் தமிழர் வரலாறு…, கொழும்பு, 2016.

ஒலிவடிவில் கேட்க

7605 பார்வைகள்

About the Author

சிவசுப்பிரமணியம் பத்மநாதன்

யாழ். பல்கலைக்கழக வேந்தரும் தகைசார் பேராசிரியருமான சி. பத்மநாதன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். இலங்கை வரலாறு, தென்னிந்திய வரலாறு, இலங்கையில் இந்து சமயம், இந்தியப் பண்பாடு தொடர்பில் 35 இற்கும் மேற்பட்ட நூல்களையும் 120 ஆங்கிலக் கட்டுரைகள் அடங்கலாக 200 இற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர், தனது வரலாற்று ஆய்வுகளுக்காக இலங்கையிலும் சர்வதேசத்திலும் பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். 2005 ஆம் ஆண்டு இலண்டன் Cambridge Bibliographical Association பேரா. பத்மநாதன் அவர்களுக்கு “International Bibliography Intellectual“ விருதை வழங்கிக் கௌரவித்தது. தமிழியல் பற்றிய ஆய்வுக்காக பேராசிரியர் செல்வநாயகம் விருதைப் பெற்றுக் கொண்ட முதலாவது தமிழரும் இவரே; 2008 ஆம் ஆண்டு இவ்விருதைப் பெற்றுக்கொண்டார். இதற்கு முன்னர் இவ்விருதைப்பெற்ற இருவரும் ஆங்கிலேயர்கள். 2013 ஆம் ஆண்டில் ஆசிய மரபுரிமைக்கான சர்வதேச சங்கத்தினால் நீலகண்ட சாஸ்திரி விருதைப் பெற்றுக் கொண்ட பேராசிரியர், தற்போதும் இலங்கைத் தமிழர்களின் வரலாறு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.