Arts
22 நிமிட வாசிப்பு

இலங்கை தமிழ் பௌத்தர்கள் – பகுதி 1

November 16, 2023 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன

குறிப்பு : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன அவர்களின் ‘தமிழ் பெளத்தன்’ எனும் நூல் தமிழ் பவுத்தம் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. இந்தியாவில் தமிழ் பவுத்தத்தின் தொடக்க நிகழ்ச்சிகளிலிருந்து இலங்கையில் தமிழ் பவுத்தம் வரை விரிவான தகவல்களோடு எழுதப்பட்டிருக்கிறது. சமகால அரசியலின் தேவை கருதியும், தமிழ் பவுத்தம் பற்றிய கருத்தாக்கத்தை தமிழ் வாசகர்கள் அறியச் செய்யவும் இந்நூலின் இலங்கை தமிழ் பவுத்தம் பற்றிப் பேசும் ‘இலங்கை தமிழ் பவுத்தர்கள்’ எனும் அத்தியாயம் தெரிவுசெய்யப்பட்டு மொழிபெயர்க்கப்படுகிறது. இம் மொழிபெயர்ப்பு மூன்று பகுதிகளாக எழுநாவில் வெளியாகும்.

Sunil Ariyaratne

எங்களது பௌத்தநூல் ‘தமிழ் பௌத்த’ நூலேயாகும். அதன்படி தென்னிந்தியாவில் வசித்த, வசிக்கிற தமிழ் பௌத்தர்களை நாம் இதுவரை சந்தித்துள்ளோம். மேலே குறிப்பிட்டுள்ளபடி தென்னிந்தியா அல்லது தமிழ்நாடு மாநிலம் தவிர இலங்கையிலேயே தமிழ் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. அவர்கள் மத்தியில் தமிழ் பௌத்தர்கள் இருக்கின்றனரா? இதற்கு பதில் சொல்வது எளிதான காரியம் அல்ல. ஏனெனில் ஸ்ரீ லங்காவில் தமிழ் பௌத்தம் பற்றிய பரிசோதனைகளும், ஆய்வுகளும், மிக அரிதானதாகவே காணப்படுகின்றன.

இலங்கை, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், திபெத், மங்கோலியா, சீனா, மஞ்சூரியா, தைவான், கொரியா, ஜப்பான், சிக்கிம் மற்றும் பூட்டான் ஆகியவை இன்றைய ஆசியாவில் உள்ள பௌத்த நாடுகளாகும். இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், சோவியத் ஆகிய நாடுகளையும் பௌத்தம் இருக்கும் நாடுகள் என்று கூறலாம். மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலும் போதுமான பௌத்தர்கள் உள்ளனர். எனவே நமது பௌத்த நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பௌத்தர்கள் மாத்திரமே வாழ்ந்தார்கள் என்று கூறப்படுவதிலும், எந்தக் காலத்திலும் தமிழர்கள் பௌத்தத்தை தழுவிக் கொள்ளவில்லை என்று கூறப்படுவதிலும், இருசாராருக்குமிடையே எந்த மாதிரியான மத உறவுகள் இருந்தன என்பது தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.

தமிழ்நாடும் இலங்கையும் 23 மைல்கள் குறுகிய தூரத்தில் ஒன்றிலிருந்து மற்றொன்று கடலால் பிரிக்கப்பட்டுள்ளன. கடலுக்கு அந்தப் பக்கம், அதாவது தமிழ்நாடு மாநிலத்தில் 55 மில்லியன் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். மிக அருகருகில் வசிக்கும் இந்த இரு மக்கள் சமூகங்கள் தொடர்பில் வல்பொல ராகுல தேரரின் கருத்து பின்வருமாறு காணப்படுகிறது. 

“தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையேயுள்ள குறுகிய இடைவெளி காரணமாக இரு  நாடுகளுக்கும் தொடர்ந்த உறவைப் பேணுவதற்கு எந்தத் தடையும் இல்லை. பிற்காலத்தில் தென்  இந்தியாவின் சக்திமிக்க மன்னர்கள் இந்த நாட்டின் மீது அவ்வப்போது படையெடுத்து நாட்டை சூறையாடிய போதும் தன் குழந்தையைப் பராமரிக்கும் அன்பான தாயைப் போல இந்தியா எப்போதும் இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக இருந்துவந்துள்ளது”. (இலங்கையில் பௌத்த கால வரலாறு, பக். 62)

விஜய இளவரசனும் மற்றும் அவனது தோழர்களும் தென்னகத்தின் பாண்டிய ராஜ்யத்தின் மதுராபுரியிலிருந்து தங்கள் மனைவிகளை அழைத்து வந்தனர் என்று கூறப்படுகிறது (ம.வ.அத். 7, சரணங்கள் 48-58). அப்போது மதுராபுரியின் மன்னனாக இருந்தவன் பதினெட்டு கைவினைஞர் குழுக்களை சேர்ந்த சாதியினர் 1000 பேரை தன் மருமகனுக்கு உதவும் பொருட்டு அனுப்பி வைத்தான் (ம.வ.அத். 7, சரணங்கள் 50-57). விஜய மன்னனும் தன் பங்குக்கு, மாமனாருக்கு முத்துக்களையும் ரத்தினங்களையும்  காணிக்கையாக அனுப்பி வைத்தான் (சரணம் 73 அத். கி.பி 7). மன்னன் விஜயவுக்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தை பெற்ற பாண்டுவாசுதேவ மன்னன்  வட இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட சாக்கிய இளவரசியை மணந்தார் (அத். 18, சரணங்கள் 18-27). அதன் பின்னர் மேலும் 60 சாக்கிய இளவரசர்கள் வந்தனர். பௌத்தத்திற்கு முந்தைய காலத்தின் மிகப் பெரிய அரசன் பண்டுகாபய என்பவனே. பண்டுகாபய மன்னர் காலத்து இளவரசர்களில், திசாயு என்ற ஷாக்ய இளவரசன் பெயர் பெற்றவனாக இருந்தான். இந்த சாக்கிய இளவரசர்கள் பௌத்தர்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த காரணத்திற்காகவே பிற்கால மன்னர்கள் புத்தரின் சாக்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று கூறினர் (4 வது மகிந்த மன்னன், தான் பண்டுகாபய மன்னன் மற்றும் மன்னன் சுத்தோதனன் ஆகியோரின் வழிவந்தவன் என்று கூறுகிறார் – E.Z. iii ,p . 227).

பண்டுகாபயவின் ஆட்சிக்கால தொடக்கத்திலிருந்து 19 ஆம் நூற்றாண்டில் சிங்கள அரசின் அழிவு வரை அரசாங்கத்தின் ஆதிக்கம்  பௌத்தருக்கு மட்டுமே உரித்தானததாக இருந்தது. எனவே இந்த நாட்டை ஆளும்  அரசர்கள் ஜாதி எதுவாக இருந்தாலும், மதம் பௌத்தமாக இருக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கி.மு 01 ஆம் நூற்றாண்டு சுரதிஸ்ஸ மன்னனை விரட்டியடித்து அனுராதபுர ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிய சேன, குத்திக என்ற இரண்டு குதிரை வர்த்தகர்களும் பௌத்தர்களாக இருந்ததால் நாட்டை 22 ஆண்டுகள் ஆண்டனர். இந்திய ஆய்வாளரான ஜி.வி. சரோஜா அவர்கள் கூற்றின்படி அவர்கள் பௌத்தர்கள்தான் என நிச்சயமாக கூற முடியும் (Buddhism In Tamil Nadu .p. 14). வல்பொல ராகுல தேரரின் கருத்தும் அதே தான். அவர்கள் பௌத்தர்கள் இல்லையென்றால், அவர்கள் நாட்டை தர்மத்தால் ஆண்டிருக்க முடியாது என்று மகாவம்சத்தை எழுதிய நூல் ஆசிரியர் திடமாக கூறுகின்றார் (ல.பு.இ. p. 96).

அவர்கள் தமிழர்கள் இல்லை என்பது ஆய்வாளர் பரணவித்தானவின் கருத்து. தமிழ் நாட்டு குதிரைகள் வர்த்தகம் தொடர்பாக பிரசித்தமாக இல்லாது இருப்பதுடன் அவர்களின் பெயர்கள் தமிழ் பெயர்களா என்றும் தெரியவில்லை. இவர்கள் இருவரும் இளவரசர் விஜய வந்த வடமேற்கு இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது (இலங்கை பல்கலைக்கழக வரலாறு, ஆர்ய குடியேற்றம்).

Ellaalan

இந்த நாட்டுக்கு வரும் எவராலும் பௌத்தராக இல்லாமல் இருந்து இந்த நாட்டை ஆண்டிருக்க முடியாது என ராகுல தேரர் கூறுகிறார். திராவிடர்கள் இந்நாட்டை அவ்வப்போது ஆண்டபோதும் ஆழ்மனதில் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர்கள் தமக்குக் கீழ் ஆழப்படுபவர்களிடமிருந்து மன்னன் என்ற பட்டத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் பௌத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருந்தார்கள். சேன, குத்திக ஆகிய தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து 30 வருடங்கள் கழித்து அதாவது கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் ஆட்சி செய்த எல்லாள மன்னன் ஒரு சோழ இளவரசன். அவன் பௌத்த சங்க தேரர்களை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வதற்காக  மிஹிந்தலைக்கு சென்றான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்த மதத்தின் மகத்துவமும் மதிப்பும் அவனுக்குத் தெரியாது என்றாலும் அவன் மிஹிந்தலைக்குச் சென்று முன்னைய வழக்கப்படி பௌத்த சங்கத்தினரை அழைத்ததாக மகாவம்சம் கூறுகிறது. எல்லாள மன்னன் புத்த மதத்தின் மீது உண்மையான ஆர்வத்தைக் காட்டவில்லை என்ற போதும், நாட்டின் பௌத்த சமய பழக்கவழக்கங்களை பின்பற்ற ஆர்வம் காட்டினான் என்று மகாவம்ச ஆசிரியர் கூறியுள்ளார் (ல.பு.இ. P.94). மன்னன் எல்லாளன் தொடர்பான மேற்படி விளக்கம் மகாவம்சத்தில் இருந்து பெறப்பட்டது ஆகும். எல்லாள மன்னன் மிஹிந்தலையிலிருந்து திரும்பி அனுராதபுரத்திற்கு வந்தபோது, அவனுடைய வாகனத்தின் ஒரு பக்க சில்லு மோதியதால் விகாரையின் ஒருபகுதி உடைந்து சேதம் ஏற்பட்டது. இது குறித்து அரசனிடம் அமைச்சர்கள் கூறியதும் உடனே தேரில் இருந்து இறங்கி பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமாக நீதி வழங்க வேண்டும் கூறி தனது தலையை தேர்சில்லில் வைத்து துண்டித்து விடுமாறு அமைச்சர்களை மன்னன் பணித்தான். எனினும் புத்த தர்மத்தின் படி அது அவசியமில்லை என்றும் உடைந்த விகாரையின் பகுதியை திருத்திக் கொடுப்பதன் மூலம் பிராயச்சித்தம் செய்ய முடியும் என்றும் அமைச்சர்கள் எடுத்துக்கூறினர். இதன் பிறகு மன்னனின் பெயர் தர்மத்தின் பால் மிகப் பிரசித்தமானது (ம.வ. அத். 21, 22-25 பாக்கள்).

கி.பி 5 ஆம் நூற்றாண்டில் மன்னர் புத்த பாரிந்தவின் மனைவியால் ஒரு விகாரைக்கு தானம் வழங்கப்பட்டது தொடர்பில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் அவரது கணவர் ஒரு தமிழர் என்றும் அவரது பெயர் புத்ததாச பரிதேவ என்றும் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது (E.Z. iv.p.114). புத்ததாச என்ற சொல்லை பயன்படுத்தியதன் மூலம் அவன் தமிழ் பௌத்தனாக மாறியுள்ளதைக் காணமுடிகிறது. அவனுக்கு முன் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் பாரிந்தாவும் புத்த மடாலயத்திற்கு நன்கொடை அளித்துள்ளான். அவனது கல்வெட்டு ஒன்று, வழங்கப்பட்ட பொருள்களின் தொகுப்பைக் குறிப்பிடுகிறது. தாதிய என்ற மன்னரும் பாரிந்த மன்னரும் தமிழ் வம்சத்தைச் சேர்ந்தவரே என்றும் கூறப்படுகிறது. இவர் கதிர்காமத்தைச் சேர்ந்த கிரிவிஹாரைக்கு தான பொருட்கள் வழங்கியுள்ளார் ( E.Z. iv.p. 218).

மொத்தம்  27 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட இந்த தமிழ் மன்னர்கள் மதத்தால் பௌத்தர்கள் என்று நம்பப்படுகிறது என ஆய்வாளர் பரணவிதான கூறுகின்றார். அவர்கள் பௌத்தர்கள் மட்டுமல்ல, அவர்கள் தங்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் ஒன்றாக இணைத்துக் கொள்வதற்காக அபய, மஹானா (மஹாநாக) முதலிய குடிப் பெயர்களுடன் சிங்களப் பெயர்களையும் தமது பெயர்களுக்கு முன்னால் சேர்த்திருந்ததை பரணவிதான மேலும் சுட்டிக்காட்டியுள்ளார் (E.Z. iv.p.114).

பொத்தகுட்டா, பொத்தசாத ஆகிய பெயர்கள் கொண்ட தமிழ் அமைச்சர்கள் மன்னர் நான்காம் அக்கபோதியின் அமைச்சரவையில் (கி.பி 658-674) சேவை செய்தவர்கள். மகாகந்தா என்ற தமிழ் அமைச்சர் பௌத்த மடங்களுக்கும் விகாரைகளுக்கும் தான தர்மங்கள் செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது (ம.வ. சரணங்கள் 19-23 அத். 46). பொத்தகுத்தா, மாடம்பியா ஆகிய இரண்டு விகாரைகள் அவைகளுக்கென இரண்டு கிராமங்கள், ஒரு ஏரி மற்றும் சேவை செய்வதற்காக அடிமைகள் முதலானவற்றை தானமாக வழங்கினார்கள். மேலும் கற்பூரப் பிரிவெனா மற்றும் குருந்தலபில்ல பிரிவெனா ஆகியவற்றுக்கான பிரகாரங்கள்  கட்டப்பட்டதுடன் ஜேதவன விகாரையில் பொத்தசாத அமைச்சரினால் தனது மன்னனின் பெயரிலும் மகாகந்தா என்பவரின் பெயரிலும் பிரிவெனாக்கள் கட்டப்பட்டு அவர்களது பெயர்களும் சூட்டப்பட்டன.

முதலாம் விஜயபாகுவின் வேளக்கார தமிழ் கல்வெட்டின்படி அரசனால் பொலன்னறுவை தலதா ஆலயத்தின் பாதுகாப்பு தென்னிந்தியாவிலிருந்து வந்த வேளக்கார படைவீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வேளக்கார படையினரின் மத்தியில் பௌத்தர்களும் இருந்தார்கள் என்பது தெரிய வந்தது. கணபதி என்ற தமிழ் சேனாதிபதி ‘விக்ரமசால மேஷ பெரும்பள்ளி’ என்ற  ஒரு மடத்தை தானே அமைத்து அரசர் விக்ரமபாகுவிடம் ஒப்படைத்தார் என திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாயிலிருந்து பெற்ற கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும் வேளக்கார கல்வெட்டில் உள்ளதானது, மேற்படி தலதா ஆலயம் ‘ஸ்ரீ தலதா பெரும்பள்ளி’ என்று அழைக்கப்படுகிறது என்பதாகும். காரணம் இந்தக் கல்வெட்டு தமிழில் எழுதப்பட்டது என்பதினாலாக இருக்கலாம். ஆனால் அதில் புத்தரைபற்றியும் மூவித ரத்தினத்தை பற்றியும் குறிப்பிடப்படுகிறது. ‘நமோ புத்தாய’ என்ற வசனமும் காணப்படுகிறது. அது மட்டுமின்றி ஆலயத்தின் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை மீறினால் பஞ்சானந்தரியம் என்ற பாவச் செயல் செய்யப்பட்டுள்ளது என்று கருதப்பட்டு, தவறு செய்பவர்கள் சாபம் அடைவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்தர் அல்லாத ஒருவருக்கு இந்த செய்தியின் தீவிரத்தன்மை எந்த அளவுக்கு புரியும் என்று சிந்திக்க முடியாது.

அனுராதபுர மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் பெரிய புளியங்குளத்தில் இருந்து கிடைத்த இரண்டு கல்வெட்டுகளில் (E.Z. v.p.224) தமிழ் பௌத்த துறவிகளுக்கு பூஜை செய்வதற்காக குகைகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச திருமண வைபவங்களின் போது சிங்கள-பௌத்த-தமிழ்-இந்து அனைத்தும் சேர்ந்து கலந்திருந்தன. பௌத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் நிகழ்ந்த இவ்வாறான சில சம்பவங்கள் மேலே உள்ளவாறு சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. சில பிற்கால நிகழ்வுகளின்போது, மகாதாதிய மகாநாக மன்னன் ஒரு தமிழ் இளவரசியை தனது பட்டத்து ராணியாக வைத்திருந்தான் என்றும், இளநாக அரசனின் பட்டத்து ராணி ‘தமிழ் ராணி’ என்ற பெயரால் பிரசித்தமாக இருந்தாள் என்றும் கூறப்படுகிறது. இளவரசி சந்திரமுகசிவா, இளநாக மன்னரின் மகனின் ராணி ஒரு திராவிட இளவரசியாகும். மன்னன் விஜயபாகுவின் சகோதரி இளவரசி மித்தாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி சோழ மன்னன் கோரினான். எனினும் விஜயபாகு மன்னன் தன் சகோதரியை பாண்டிய இளவரசன் ஒருவனுக்கே திருமணம் செய்து வைத்தான். ராணி அனுலா மகாராணியின் தளபதிகளில் இரண்டு பேர் தமிழர்களாக இருந்தனர். அனுராதபுரத்தின் நகராதிபதியாக வடுக என்ற தமிழர் ஒருவர் பதவி வகித்தார். மகாராணி அனுலாவின் அரண்மனை புரோகிதையாக இருந்தவள் ‘நீலி’ என்ற தமிழ் பெண்மணியாகும். தமிழர்கள் சிங்கள பௌத்தர்களை மணந்தனர்.

இளவரசிகள் எந்த மதத்தைப் பின்பற்றினார்கள் என்று வரலாறு குறிப்பிடுகிறது. மன்னர் மானாபரன் இளவரசி ரத்னாவலியை மணந்தார். புத்த பாரிந்த என்ற தமிழ் மன்னர் ராணி சபாவை மணந்தார். அவள் ஒரு புத்த விகாரைக்கு வயல் நிலங்களையும் ஆடைகளையும் தானம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணத்தால் அரசர்களின் மதம் மாறாமல் இருந்தமைக்கான காரணம் அவர் புத்த சாசனத்தின் காவலராகவும் காணப்பட்டமையினாலாகும். பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கு இலங்கை இராச்சியத்தில் உரிமை இல்லை என்று சிங்கள மன்னர்கள் ஆவணப்படுத்தியிருந்தார்கள் (கற்புத்தகம் என்ற கல்வெட்டு E.Z. ii.p 109, பொலன்னறுவை மேற்கு வாயிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு E.Z . ii.p159).

வலகம்பா மன்னன் இலங்கையை ஆட்சிசெய்த காலத்தில் இலங்கையை தாக்கிய ஏழு தமிழ் குண்டர்கள் புத்தரின் நினைவுச் சின்னத்தைத் திருடிச் சென்றனர். எதையுமே எடுத்துக் கொள்ளாமல் ‘தன்னிடம் இது இருப்பதாக’ கூறி இந்தியாவிற்கு ஓடிவிட்டனர் (ம.வ. 46 அத். 33, சரணம் 55). புத்தரின் நினைவுச்சின்னம் ஒரு தேசிய பொக்கிஷம் என்பதை இந்த தமிழ் குண்டர்கள் அறிந்திருந்தனர் என்பதை இது காட்டுகிறது.

பல பேரிடர் சந்தர்ப்பங்களில் சிங்கள பௌத்த பிக்குகள் தமிழ் நாட்டுக்கு தப்பிச் சென்றார். அதேபோல் தமிழ் நாட்டைச் சேர்ந்த புத்த துறவிகள் இலங்கைக்குத் தப்பிச் செல்வது வழக்கமாக இருந்தது. இலங்கையில் திராவிட பௌத்த துறவிகளும் பல்வேறு பௌத்த பிரிவுகளை பிரபலப்படுத்துவதில் ஆர்வம் காட்டினர். இலங்கையில் பாளி இலக்கியத்திற்கு விளக்கவுரைகளை எழுதி வளர்த்தெடுத்தவர்கள் தமிழ் பௌத்த பிக்குகளே.

பௌத்தர்களும் தமிழர்களும் இரு வேறு பிரிவினர் என்ற கருத்து வலகம்பா காலத்திலிருந்து பேசப்பட்டு வருகிறது. தமிழ் படையெடுப்பாளர்களிடமிருந்து தப்பிக்க வலகம்பா காட்டுப்பகுதியில் மறைந்திருந்தார். அவரது சில வன்முறைச் செயல்கள் சிங்கள தளபதிகளை அவரை விட்டு விலகிச் செல்ல வைத்தது. இவர்களை சமரசம் செய்ய ஹம்புகல்லக்க விகாரையில் பணிபுரிந்த திஸ்ஸ என்ற கற்றறிந்த துறவி முன்வந்தார். அவர் கேட்டார் : அதாவது அரசனைக் கொண்டு பௌத்தம் வளர முடியுமா? அல்லது தமிழர்களைக் கொண்டா ? அல்லது இரண்டுடனுமா ? (ம.வ. 46 அத். 33, 67 – 76 சரணம்). 

இந்த சிறு சிறு சம்பவங்களால் இலங்கை பௌத்தர்களுக்கும்  தமிழர்களுக்கும் இடையிலான உறவுகள் அழிந்து போய்விடவில்லை. ஏனெனில் கலிங்கமாகன் என்ற தமிழ் மன்னன் சூளவம்சத்தை மூடநம்பிக்கை, சுயநலமானது, பொறுமையற்றது, பிடிவாதமானது, அநீதியானது என்று கூறி புத்ததர்மத்தை அழித்தவன் என்று விவரிக்கப்படுகிறான். சூளவம்சம், இலங்கை தீவைக் காப்பதில் அலட்சியமாக இருந்த நாட்டவரின் வன்முறை பாவச்செயல்களால் இந்த பேரழிவு ஏற்பட்டது என்று கூறுகிறது (சூ.வ. lxxx, 53-58). ஆனால் மாகன் என்ற இந்த கொடூர மனிதன் தமிழன் அல்ல என்பதை வரலாற்றாசிரியர்கள் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர். முதலாவதாக, பண்டைய சிங்கள இலக்கியப் படைப்புகளில், திராவிடம், தமிழ் மற்றும் ‘தெமழூ’ ஆகிய சொற்கள்  ‘ஆக்கிரமிப்பாளர்’ என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பறங்கியரைக் கூட ‘தெமழூ’ என்று குறிப்பிடுகின்றன (விமல விஜேசூரிய, வடக்கில் கலிங்க இராச்சியம் மற்றும் திராவிட நாடுகளின் வரலாறு, 1984, பன்னிப்பிட்டி, பக். 17-18). பேராசிரியர் பரணவிதான, சி.டபிள்யூ. நிக்கலஸ் போன்ற வரலாற்றாசிரியர்கள் கலிங்க மாகவின் படையெடுப்பு ‘ஆக்கிரமிப்பு’ என்ற வகையில் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் அவன் இனத்தால் தமிழன் அல்ல என பேராசிரியர் பரணவித்தான மற்றும் சி. டபிள்யூ. நிக்கலஸ் ஆகியோர் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் பின்வருவன. மாகன், திராவிட நாட்டில் இருந்து வரவில்லை. அவன் திராவிட நாட்டிலிருந்து வந்திருந்தால், அவனின் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்ட பௌத்த துறவிகள் புனித பற்சின்னத்தையும், பாத்திரச் சின்னதையும் மறைத்து வைத்துவிட்டு திராவிட நாட்டிற்கு ஓடியிருக்க மாட்டார்கள். பௌத்த விகாரைகளை மட்டுமன்றி இந்து ஆலயங்களையும் அவன் அழித்தான். இதன்படி கலிங்க மாகன் ‘தாந்த்ராயன பௌத்தம்’ என்ற பிரிவை சேர்ந்தவன் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவன் தேரவாத புத்தகங்களை எரித்திருக்கிறான் என்றும், அவனது தாயகம் மலாயாவில் சுமாத்ரா என்றும், மாகன் தமிழ் கூலிப்படைகளுடன் வந்ததை பரணவித்தான ஒப்புக்கொண்டாலும், 24,000 பேர் கொண்ட இராணுவமும் மலாய்க்காரர்களே என்று நிக்கலஸ் கூறுகிறார் (Concise History Of Ceylon p. 244).

1923 முதல் 1926 வரை தமிழ் நாட்டில் வாழ்ந்து  இலங்கையில் உள்ள தமிழ் கல்வெட்டுகளில் இருந்து தொல்லியல் துறையையும் பயின்ற பேராசிரியர் பரணவித்தானவால் 9 கல்வெட்டுக்கள் வாசிக்கப்பட்டு திருத்தப்பட்டன. 1926 முதல் 1960 வரையிலான முற்பத்து நான்கு ஆண்டுகளில் இலங்கையில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை படிக்கவும், புரிந்து கொள்ளவும், வெளியிடவும் பேராசிரியர் பரணவித்தானவை தவிர உலகில் எந்தத் தமிழறிஞரும் ஆர்வம் காட்டவில்லை என்று தமிழறிஞரான பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா தெரிவித்துள்ளார் (இலக்கியம், பரணவித்தான. எண். பக். 43).

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் என்ற பெயர் கொண்ட இத்தலத்தில் காணப்படும் சில கல்வெட்டுகளோடு மதவாச்சி, ஹொரவபத்தான வீதி, மாத்தளை தல்கஹகொட விகாரை மைதானத்தில் காணப்பட்ட கல்வெட்டு போன்ற கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ் பௌத்தர்கள் பற்றிய தகவல்கள்  காணப்படுகின்றன.

திராவிட மன்னன் ஒருவனால் பௌத்த விகாரை ஒன்று புதுப்பிக்கப்பட்டு அதற்கு திராவிடப் பெயரும் வழங்கப்பட்டது தொடர்பிலான விவரங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கோவில் பற்றி கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் விளக்கம் பின்வருமாறு உள்ளது :

‘அவர்கள் பௌத்த வெறுப்பாளர்களாக இருந்ததுடன் சிங்களவர்களால் மிகுந்த மரியாதையுடனும் பாதுகாக்கப்புடனும் பேணப்பட்டு வந்த தேசிய பௌத்த விகாரைகளை அழித்தவர்கள்’ என இலங்கை வம்சபரம்பரை கதைகளில் சோழர்கள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திராவிடர்களால் ஒரு பௌத்த வணக்கத்தலத்திற்கு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து கிடைத்த கொடைகள் பற்றிய கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இதில் ஒரு கல்வெட்டு, முதலாவது ராஜேந்திர சோழ மன்னனின் ஆட்சிக் காலத்திற்கு உரியது. இந்த விகாரைக்கு சிங்களத்தில் ‘வெல்கம் விஹாரை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சோழ மன்னன் முதலாம் இராஜராஜனின் நினைவாக ‘ராஜராஜபெரும்பள்ளி’ அர்ப்பணிக்கப்பட்டதாக  கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது (இலங்கை பல்கலைக்கழகத்தின் இலங்கை வரலாறு, இரண்டாவது தொடர், பக். 395-396). சி.டபிள்யூ. நிக்கலஸ் இந்த ஆலயத்தின் விளக்கத்தையும் அளித்துள்ளார். சோழர்கள் புத்த விகாரைகளை அழித்ததாகவும், பொக்கிஷங்களை கொள்ளையடித்ததாகவும் கூறப்படுகின்றபோதும் பழமையான வெல்கம் கோவில் தொடர்பில் வித்தியாசமாக நடந்துகொண்டனர் என்று கூறப்படுகிறது. தற்போது ‘நாத்தனார் கோவில்’ என்ற பெயரில் உள்ள இத்தலத்தின் புகழ்பெற்ற கல்வெட்டு திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மிக முக்கியமான கல்வெட்டாக கருதப்படுகிறது. இக்கோயில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்கள பௌத்தர்களால் கட்டப்பட்டது. சோழர் ஆட்சியின் போது சோழர்கள் இக்கோயிலுக்கு உதவிகள் வழங்கி கட்டிடங்களை பழுதுபார்த்த பிறகு, மன்னரின் பெயரால் இது ‘ராஜராஜ பெரும்பள்ளி’ என்று அழைக்கப்பட்டது. புதிய பெயரும் சூட்டப்பட்டது. இந்த இடத்தில் அவர்களால் அமைக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இந்த பௌத்த விகாரைக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டதை கூறுவதாக  ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடுகின்றனர். இந்தக் கல்வெட்டுகள், இது சோழ மன்னர்களான இராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது என சுட்டிக்காட்டுகின்றன. அக்காலக் கல்வெட்டுகளின்படி, கோவிலின் உரிமை சிங்களவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெல்கம் கோயிலின் சிலை, கட்டிடம் என்பன இந்து கட்டிடக்கலைப்படி கட்டப்பட்டிருக்கிறது. இலங்கையில் உள்ள ஒரே தமிழ் விகாரை அல்லது பௌத்த தேவாலயம் இதுதான் (ல.இ.p.413).

SriLankan Tamil Vihara

வெல்கம் கோவிலில் 18 தமிழ் கல்வெட்டுக்கள் உள்ளன. அவை வெல்கம் கோவிலுக்கு சிங்கள, தமிழ் பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் பற்றி குறிப்பிடுவதாக கூறும் தொல்பொருள் ஆய்வாளர் எல்லாவல மேதானந்த தேரரின் 07 கட்டுரைகள் சிங்கள மொழிபெயர்ப்புகளுடன் வழங்கப்பட்டுள்ளன (கிழக்கு மற்றும் வடக்கு மாகாணம் சிங்கள பௌத்த பாரம்பரியம், பக். 462-468).

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மேதானந்த தேரரால் 72 பௌத்த விகாரைகளும் வட மாகாணத்தில் 25 பௌத்த விகாரைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. 1980 ஆம் ஆண்டு, உதவி தொல்பொருள் ஆணையாளர் எம்.எச். சிறிசோமா வடக்கை ஆய்வு செய்தார். கிழக்கு பிராந்தியங்களில் ஆய்வு செய்த தொல்லியல் திணைக்களம், இது இலங்கையின் சிறந்த பௌத்த எச்சங்களைக் கொண்ட ஒரு தொல்பொருள் தளமாகும் என்றும் பௌத்த இடிபாடுகளுடன் 261 இடங்கள் இனங்காணப்பட்டு வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. அப்போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அமைச்சராக இருந்த களனி பிரதேசத்தைச் சேர்ந்த சிறில் மெத்தியூ எம்.பியின் முன்னுரைடனும் வரைபடத்துடனும் “சிங்களவர்களே! புத்த சாசனத்தை காப்பாற்றுங்கள்” (சேருவில பூஜா நகர அபிவிருத்திச் சங்கம்) என்ற ஒரு நூல் (1981) வெளியிடப்பட்டது. இது 1975 முதல் 2002 வரையான  பாராளுமன்ற ஹன்சார்ட் அறிக்கையாகும். அதாவது வடக்கு, கிழக்குப் பிரிவுகளின் சிங்கள பௌத்த மரபுரிமையை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் திரு. மெத்யூ ஆற்றிய உரைகள் இந் நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்த உரைகளில் இருந்து வடக்கு கிழக்கு மாகாணங்கள் நீண்ட காலமாக சிங்கள பௌத்த அரசுக்கு உட்பட்டதாக இல்லை என்று கூறப்படுகிறது. இருந்ததைக் காட்டிலும், அந்த மாகாணங்களில் சிங்கள பௌத்த மக்கள் வாழ்ந்ததில்லை என்றும் அவற்றில் உள்ள பௌத்த சமய புராண இடிபாடுகளை தமிழர்கள் அழிக்கிறார்கள் என்பதையும்  சுட்டிக் காட்டிகாட்டியுள்ளது. இது பல அறிக்கைகளின் தொகுப்பாகும். திருகோணமலையில் கோகர்ண புத்த கோயிலின் பழங்கால கற்சிற்பங்கள் மற்றும் புத்தர் சிலைகள் கடலில் தூக்கி எறியப்பட்டுள்ளன. கிளிவெட்டியிலுள்ள ஸ்ரீவர்தன புத்தர்கோயில் சிலைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

குச்சவெளி கல்வெட்டுகளுக்கு அடுத்துள்ள பௌத்த தாகபா உடைக்கப்பட்டு கல்வெட்டில் தார்பூசி அழிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் சமஸ்கிருதத்தில்  எழுதப்பட்டுள்ளன. குச்சவெளியில் இருந்து சுமார் 05 மைல் தொலைவில் உள்ள செம்பிமலையில் அமைக்கப்பட்டிருந்த 9 1/2 அடி உயர புத்தர் சிலை அக்டோபர் 1978 பின் ஒரு மாதம் கழித்து அழிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை-கந்தளாய் வீதியில் உள்ள விலாங்குளம் என்ற இடத்தில் ஒரு சில தமிழ் குடும்பங்கள் ஏரியை அண்டிய பகுதியில் புராதான தாகபாக்கள் இருந்த இடத்தில் வீடுகளை அமைத்துள்ளதுடன் கழிப்பறைகளும் கட்டியுள்ளனர். புத்தர் இலங்கைக்கு விஜயம் செய்த இடமான லங்கா பட்டணவில் உள்ள இரண்டு தாகபாக்களின் இடிபாடுகளின் மீது ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் நெலுங்குளத்தில் சுமார் 30 அடி உயர தாகபாவின் இடிபாடுகளின் மீது கொங்கிரீட் மதில் போடப்பட்டு, திரிசூலம் பொருத்தப்பட்டுள்ளது. இவை திரு. மெத்யூவால் வழங்கப்பட்ட சில விபரங்கள் மட்டுமே. இந்த விபரங்களிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியது என்னவென்றால் தமிழர்கள் மத்தியில் பௌத்த விரோதத் தன்மை காணப்படுவது போலவே சிங்களவர் மத்தியிலும் தமிழ் விரோதத் தன்மை காணப்படுகின்றது என்பதாகும். அதனால்தான் இலங்கையில் ‘தமிழ் பௌத்தம்’ போன்ற கருத்துருவுக்கு இடமில்லாதிருக்கிறது போலும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10036 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார். விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்.