Arts
14 நிமிட வாசிப்பு

‘அப்ரிமெஸ் ரெக்’ மென்பொருள் நிறுவனம் : ஒரு படுக்கையறையிலிருந்து ஏழாயிரம் சதுர அடிகள் வரை

January 9, 2024 | Ezhuna

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

தமிழில் : த. சிவதாசன்

யாழ் ஜீக் சலெஞ் (Yarl Geek Challenge) வடக்கின் பெரும்பாலான தொழில்நுட்ப முயற்சிகளுக்கான நாற்றுமேடை என்பதில் சந்தேகமில்லை. 2022 இல் அது தனது 11 ஆவது போட்டியை நடத்தி முடித்திருக்கிறது. YGC நாற்றுக்கள் இதுவரை 60 நிறுவனங்களின் உருவாக்கத்துக்கும் பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் காரணமாக இருந்திருக்கின்றன. அதே வேளை இப்படி உருவான நிறுவனங்களிலிருந்து பிரிந்துபோய் தமது சொந்த நிறுவனங்களை உருவாக்கியோரை நாம் இங்கு கணக்கில் எடுக்கவில்லை. அவை பலவிதமான புதிய தொழில் முயற்சிகளுக்கு வித்திடும் கல்லூரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் பெருமை சேர்க்கின்றன. இந்நிறுவனங்களால் உருவாக்கப்படும் திறமைசாலிகள் பிரிந்து சென்று மேலும் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குவதே உண்மையான தொடர் இயக்கத்தை ஆரம்பிக்கும். அப்போதுதான் இயந்திரமே இயங்க ஆரம்பிக்கிறது. குழுக்கள் மேலும் குழுக்களை ஆரம்பித்து உலக அனுபவமும் அதன் உந்துசக்தியும் இணைந்து சங்கிலித் தொடர் இயக்கமாகப் பரிணமிக்கிறது. இதன் மூலமே நாம் கனவு கண்ட, அந்த சுயநிறைவை எய்தக்கூடிய, தொழில்துறையை வளர்த்துக்கொள்ள முடியும். கலிபோர்ணியாவில், லண்டனில், கொழும்பில் இதைப் பார்த்தோம். யாழ்ப்பாணத்தில் இது இப்போது ஆரம்பிக்கிறது.

தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் (Information and Communication Technology (ICT)) புதிய தொழில் முயற்சி ஆரம்பத்திற்கு மிகவும் உகந்த ஒரு துறை. இதற்கான நிறுவன ஆரம்பச் செலவுகள் மிகவும் குறைவு. ஒரு மடிக்கணனியையும் இணைய இணைப்பையும் 1000 அமெரிக்க டொலரிற்குள் பெற்றுவிட முடியும். அம்மாவுடனான உரசல் புரசல்களைச் சமாளிக்க முடியுமாயின் அவரது சாப்பாட்டு மேசையையே அலுவலகமாக்கிவிட முடியும். சந்தைக்குள் வேகமாக நுழைந்துவிடலாம். யாழ்ப்பாணக் கொக்குவில் வீட்டின் ஒரு படுக்கையறை இணையத்தின் மூலம் நியூ யோர்க்கின் வால் ஸ்ட்றீட்டுடன் இலகுவாகத் தொடர்பு கொண்டுவிட முடியும்.

மற்றெல்லா துறைகளையும்விட ICT துறைக்கு பெருத்த அனுகூலமிருக்கிறது. கோப்பாய் கிராமத்தில் செய்யப்பட்ட மாங்காய் சட்னி அல்லது கைவினைப் பொருள் சர்வதேச அங்காடிகளின் தட்டுகளில் போய்க் குந்துவதற்கு முன் அது பல நிறுவன முகவர்களின் தட்டுத் தடங்கல்களையும் விருப்பு வெறுப்புக்களையும் மீறித் தனது மெதுவான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு செயலி (App), அது நல்லதோ கெட்டதோ, ஒரு சர்வதேச பாவனையாளரை இப்பொருட்களுடன் சில விநாடிகளில் இணைத்துவிடுகிறது. இப்படியான எண்ணற்ற செயலிகளை உள்ளடக்கும் தகமையை Google Play கொண்டிருக்கிறது. நீங்கள் சட்னியைத் தயாரிப்பவரோ அல்லது செயலியைத் தயாரிப்பவரோ என்பது முக்கியமில்லை. பணம் சம்பாதிப்பது என்பது உங்கள் பண்டத்திலும் (product) சந்தைப்படுத்தும் திறமையிலுமே தங்கியிருக்கிறது.

உலகம் முழுவதிலும் முளைத்த தொழில்நுட்ப முயற்சிகள் (tech startups) ஒரு கடைக்கோ அல்லது ஒரு மருத்துவ மனைக்கோ அல்லது ஏதாவதொரு வியாபார முயற்சிக்கோ தேவையான செயலியை உருவாக்குவதன் மூலமே ஆரம்பித்திருக்கின்றன. முதலாவது முயற்சி எங்கோ இருவரால் அவர்களது படுக்கையறைகளிலேயே கட்டியெழுப்பப்பட்டிருக்கலாம். அதைத் தொடர்ந்து மேலும் பல வாடிக்கையாளர்களுக்கு அது போன்ற சேவைகள் தேவைப்பட்டிருக்கலாம். முதலாவது முயற்சியில் அவர்கள் கணிசமான நேரத்தைச் செலவிட்டு அதன் மூலம் இலாபமே சம்பாதிக்க முடியாமலேயே போயிருக்கலாம். இரண்டாவது முயற்சியில் அவர்களுக்கு அதிக நேரம் செலவிடத் தேவையில்லை. சிறிய மாற்றங்களுடனே அவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்துவிடுவார்கள். ஆனால் இப்போது வாடிக்கையாளர்களிடமிருந்து போதுமான பணத்தை அவர்களால் அறவிட்டுக்கொள்ள முடியும். அதே செயலியை அவர்கள் வேறும் பலருக்கு விற்று அதிக இலாபத்தை ஈட்டுவார்கள். இப்போது அந்த இருவரும் குழுவாக அதிகரிப்பார்கள். அதிக வாடிக்கையாளர்களை நாடுவார்கள். வேறும் பல துறைகளில் அவர்களது சேவைகளை விஸ்தரிப்பார்கள். விரைவிலேயே அவர்களது நிறுவனம் கொடிகட்டிப் பறக்கும். மேலும் சந்தர்ப்பங்களைத் தேடி அவர்கள் ஓடுவார்கள். இதனால் பலருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் பெருகும். நிறுவனமும் வளரும். இக்கட்டுரைக்குக் காரணமான Apptimus Tech இப்படித்தான் உருவாகியது.

தக்கன பிழைக்கும் என்ற டார்வினின் தத்துவத்துக்கமைந்ததே தகவல் தொழில்நுட்பத் துறையும். புதிய ஆரம்பங்கள் தோல்வியில் முடிந்தாலும் தோற்றுப்போனவர்களுக்கு அவை நிறையப் பாடங்களைக் கற்பிக்கின்றன. அதில் நிச்சயமாக ஒன்று இன்னுமொரு தடவை முயற்சித்துப் பார், அல்லது அதில் கற்ற அனுபவத்துடன் இன்னுமொரு ஸ்திரமான நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிடு என்பதே.

2018 இல் நடைபெற்ற YGC யின் 8 ஆவது போட்டியில் வெற்றிபெற்ற ‘ரீம் மஜெண்டா’ வை உருவாக்கிய யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட Apptimus Tech நிறுவனம் பற்றிய கட்டுரையில் YGC மூலம் முளைத்தெழுந்த பல நிறுவனங்கள் பற்றி நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். 3 Axis Labs; SenzMate; Arogya Life ஆகியனவே அவை. 

அனோஜன் கணேசதாஸினால் உருவாக்கப்பட்ட ‘அப்ரிமஸ் ரெக்’ இல், பின்னர் அவரது இளைய சகோதரர் மனோஜனும் இணைத்துக்கொள்ளப்பட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சில கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் சுன்னாகத்திலுள்ள வசதியான குடும்பமொன்றிலிருந்து வந்தவர்கள் இச் சகோதரர்கள். அவர்களது தந்தையார் ஒரு இளைப்பாறிய கிராம சேவகர். தாயார் ஒரு திருமணப் பதிவாளர். இரு சகோதரர்களும் கணிதம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் பிரபலமான யாழ். இந்துக்கல்லூரியில் கல்வி கற்றார்கள். அனோஜன் களனிப் பல்கலைக் கழகத்தில் தனது விஞ்ஞான இளமானிப் பட்டத்தையும் பின்னர் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் முதுமானிப்பட்டத்தையும் பெற்றிருந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ESoft கல்லூரியில் மனோஜன் தனது கல்வியைப் பெற்றிருந்தார்.

2014 இல் தனது பட்டப்படிப்பின் ஒரு அங்கமாக, அனோஜன் 6 மாத துரித பயிற்சிக்காக டெல்லிக்குப் போகவேண்டி இருந்தது. சுகாதாரத் தகவல்கள் தொடர்பான கல்வியை வழங்கிய ஒரு தொண்டு நிறுவனத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட இக் கற்கைநெறியில் C# மென்பொருள் கற்கும்போது அனோஜன் Point of Sales (POS) என்னும் தொழில்நுட்பத்தை உருவாக்கினார் (இது கடைகளில் கடனட்டைகள் போன்றவற்றை உரசுவதற்குப் பாவிக்கப்படும் சாதனம் போன்றதென வைத்துக்கொள்ளுங்கள்).

2015 இல் அனோஜன் தான் உருவாக்கிய இந்த POS சாதனத்தை யாழ்ப்பாணத்திலுள்ள வியாபார நிலையமொன்றிற்கு விற்றார். இதைத் தொடர்ந்து தனது நண்பர்கள் மூலமாக மேலும் பலவற்றை விற்பனை செய்தார். ஒரு உணவகம் இந்த POS ஐ சாதாரண பாவனைக்காகவும் இன்னுமொரு அழகு ஆடை விற்பனைக்கடை தமது முன்னரங்க விற்பனையுடன் கூடவே தமது கையிருப்புக்களையும் கணக்கெடுக்கும் வகையிலான மென்பொருளுடன் கூடிய POS ஐயும் வாங்கினார்கள். வேறு பல நிறுவனங்களுக்கு அவர்களது நிதிக் கணக்குகளைக் கவனித்துக்கொள்ளும் வகையிலும், சிலவற்றிற்கு அவற்றின் பணியாளர் பற்றிய தரவுகளைத் தெரிவிக்கும் மென்பொருளை உள்ளடக்கியதாகவும் சிலவற்றில் இணையவழி விற்பனைகளைக் கவனிப்பதற்காகவும் தனது POS சாதனங்களை வடிவமைத்தார். இவ்வகையில் அனோஜனது மென்பொருள் பண்டம் வளர்ச்சியடைந்தது.

இரு சகோதரர்களையும் அரச உத்தியோகங்களை எடுத்துக்கொள்ளுமாறு அவர்களது பெற்றோர்கள் அழுத்தங்களைக் கொடுத்தார்கள். இருப்பினும் இருவருமே தகவல் தொழில்நுட்பத்தோடு தம்மை இணைத்துக்கொண்டு விட்டனர். 2015 இல் நிறுவனம் ஆரம்பிக்கப்படும் முன்னரே சந்தைப்படுத்தல் மற்றும் இதர ஆதரவுகளுக்கென விதுஷன் என்பவரைத் தனது முதலாவது பணியாளராக அனோஜன் அமர்த்துகிறார். 2016 இல் மேலும் இருவர் பணிக்கமர்த்தப்படுகிறார்கள். 2017 இல் தான் Apptimus Tech நிறுவனமாகப் பதிவுசெய்யப்படுகிறது.

அனோஜனது வீட்டில் தான் அவர்களது அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பின் தோட்டத்தில் தனியான ஒரு அலுவலகத்தை அவர்கள் நிர்மாணித்தார்கள். 2018 இன் முடிவில், நிறுவனம் 10 பணியாளர்களைக் கொண்டதாக வளர்ந்துவிட்டது. தோட்ட அலுவலகத்தால் தாங்க முடியாமற் போகவே அவர்கள் மீண்டும் வீட்டிற்குள் புகுந்து ஏறத்தாழ வீடு முழுவதையும் ஆக்கிரமித்து விட்டார்கள்.

2019 இல் ‘அப்ரிமஸ் ரெக்’ தனது முதலாவது பெரிய வாடிக்கையாளராக யாழ்ப்பாணத்தின் பிரபல ஹொட்டேலான வலம்புரி ஹொட்டேலைப் பெற்றுக்கொள்கிறது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையின் சுற்றுலாத்துறை படு வீழ்ச்சியடைந்தாலும் வலம்புரியின் உணவகம் தொடர்ந்தும் களைகட்டியபடியே இருந்தது. வலம்புரி ஒருபோதும் சுற்றுலாவாசிகளில் தங்கியிருக்கவில்லை. அதன் சுவையான ‘யாழ்ப்பாணத்து’ உணவு யாழ்ப்பாணத்தவரின் பசியைப் போக்கவே போதுமாகவிருந்தது.

2022 இல் ‘அப்ரிமஸ் ரெக்’ 52 பணியாளர்களுடன் மல்லாகத்திலுள்ள 7,000 சதுர அடி பரப்பளவுள்ள கட்டிடத்திற்கு நகர்ந்துகொண்டது. அடுத்த இரண்டு வருடங்களுக்குள் தனது பணியாளரின் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்த அனோஜன் தீர்மானித்திருக்கிறார்.

இக்காலகட்டத்தில் ‘அப்ரிமஸ் ரெக்’ வியாபார வளத் திட்டமிடல் (Enterprise Resource Planning (ERP)) என்ற துறைக்கான மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இதன் மூலம் சிறிய மற்றும் மத்தியதர நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை இலாபகரமாக வளப்படுத்திக்கொள்ள முடியும். இதற்காக ‘அப்ரிமஸ் ரெக்’ உருவாக்கிய மென்பொருளைத் தமது பெயரைத் தாங்கியதாக ‘அப்ரிமேட்’ (Apptimate) எனப் பெயரிட்டனர். தனது சேவைகளைப் பெறும் வாடிக்கையாளரைத் தேடும்போது பல புதிய சந்தர்ப்பங்களுக்கான கதவுகள் திறக்கப்படுவதை அனோஜன் உணர்ந்தார். பல பழைய நிறுவனங்களில் செயற்பாடுகள் தொடர்பற்றவையாக இருந்தன. முன்னரங்க விற்பனைக்கென ஒரு POS உம் பின்னரங்க நிதிக்கணக்குகளுக்கென இன்னுமொரு செயற்பாட்டு முறையும் பிரயோகத்தில் இருந்தன. கையிருப்புக்ளைக் கணக்கிடத் தனியான ஒரு மென்பொருளை ஒருவர் வடிவமைத்திருப்பார். வாடிக்கையாளர் பற்றிய தவல்களைச் சேகரிக்க CRM போன்ற மென்பொருட்கள் பாவனையில் இருக்கவில்லை. ஆரம்பத்தில் பல நிறுவனங்கள் மலிவான சேவைகளையே நாடின. பின்னர் அவர்கள் ஸ்திர நிலையை அடைந்ததும் விலையுயர்ந்த செயலிகளை வாங்கும் பக்குவத்துக்கு உந்தப்பட்டார்கள். இப்படியான வளரும் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஒன்றிணைப்பதன் மூலம் ‘அப்ரிமஸ் ரெக்’ சேர்ந்தே வளர்ந்தது. அது மட்டுமல்லாது வெவ்வேறு துறைகளுக்கான செயலிகளை உருவாக்குவதில் ‘அப்ரிமஸ் ரெக்’ கவனம் செலுத்தியது.

மருத்துவ மனைகள்: வட மத்திய மருத்துவமனை (North Central Hospital) உட்பட பல மருத்துவ மனைகள் இப்போது ‘அப்ரிமஸ் ரெக்’ இன் வாடிக்கையாளர்களாக உள்ளன. தெலுங்கானா மாநிலத்திலுள்ள அப்போலோ மருத்துவமனை தமக்கெனத் தனித்துவமான செயலி ஒன்றை ‘அப்ரிமஸ் ரெக்’ மூலம் உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறது. சகல அப்போலோ மருத்துவமனைகளையும் ஒருங்கிணைக்கும் செயலி இது. கொழும்பிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையொன்றின் ஒருங்கிணைந்த சேவைக்கான செயலி ஒன்றை வழங்குவதற்கு ‘அப்ரிமஸ் ரெக்’ திட்டமிட்டு வருகிறது. இம்மருத்துவமனை தற்போது 30 தனித்தனியான செயலிகள் மூலம் தன் செயற்பாடுகளைக் கவனித்து வருகிறது.

சட்ட அலுவலகங்கள்: கொழும்பிலுள்ள பிரபல சட்ட நிபுணர் மூலம் சட்ட அலுவலகங்களுக்கான செயலி ஒன்றை உருவாக்குவதில் ‘அப்ரிமஸ் ரெக்’ ஈடுபட்டு வருகிறது. வினைத்திறன் குறைந்த தொழில் எனக் கருதப்படும் சட்டத்துறையை முன்னேற்ற இது உதவும். கொழும்பில் ஹல்ற்ஸ்டோர்ஃப் மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களுக்கு வெளியே கறுப்பு ஆடைகளுடன் அலையும் சட்டத்தரணிகளைக் கண்டால் உங்களுக்கு இது புரியும். சட்டத்தரணிகள் அமைதியாகவும், அவர்களது வாடிக்கையாளர்கள் அமைதியின்றியும் நீதிமன்ற ஆசனங்களில் இருப்பதை அவதானிப்பவர்களுக்கு இது புரியும் (நான் ஒரு அவதானிப்பவனாக, பங்கு பெறுபவனாக அல்ல, பல தடவைகள் அங்கு அமர்ந்திருக்கிறேன்). ‘அப்ரிமஸ் ரெக்’ போன்ற நிறுவனங்களுக்கு இத்துறையில் வெகுவான தேவையிருக்கிறது.

சுற்றுலாத்துறை: வலம்புரி, ரில்கோ ஜாஃப்னா சிற்றி ஹொட்டேல், றீச்சா ஆகிய ஹொட்டேல்கள் உட்பட பலவற்றில் ‘அப்ரிமஸ் ரெக்’ செயலிகள் செயற்பாட்டில் உள்ளன. பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ‘அப்ரிமஸ் ரெக்’ செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் பல நாடுகளுக்கு விஸ்தரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆட்சேர்ப்பு: Placements.lk (https://placements.lk) என்பது ‘அப்ரிமஸ் ரெக்’ இன் இன்னுமொரு சேவை. இலங்கையின் முதலாவது ‘விண்ணப்பதாரியை மையமாகக் கொண்ட’ ஆட்சேர்ப்பு செயலி பற்றி அனோஜன் விபரிக்கிறார். இலங்கையிலுள்ள தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களுக்கு மாணவ விண்ணப்பங்களைக் கோருவது முதல் அவர்களைத் தெரிவுசெய்வது வரை இந்நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் முயற்சியில் ‘அப்ரிமஸ்’ இறங்கியிருக்கிறது. கடந்த 12 மாதங்களுக்குள் பல நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் தமது பணியாளர் தேவைக்கான வெற்றிடங்களை இச்செயலியில் பதிவிட்டிருக்கிறார்கள்.

Placements.

16 நாடுகளில் 13 துறைகளில் 500 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என அனோஜன் தெரிவிக்கிறார். அவர்களது மென்பொருள்களையும் தாண்டி வாடிக்கையாளர்களின் தேவையைப் பொறுத்து விசேடமாக வடிவமைக்கப்பட்ட (customized) மென்பொருள்களையும் ‘அப்ரிமஸ்’ தயாரித்துக் கொடுக்கிறது. இணையத்தளங்கள், கைபேசிச் செயலிகள், மேசைக்கணனிச் செயலிகள் எனச் சகல தேவைகளுக்குமான சேவைகளை ‘அப்ரிமஸ்’ வழங்குகிறது.

வெளிநாடுகளில் தனது நிறுவனத்தின் சேவைகளை விஸ்தரிப்பதுவே அனோஜனின் எதிர்காலத் திட்டம். அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, இந்தியா ஆகிய நாடுகளில் பல வாடிக்கையாளர்கள் இருப்பதாலும் பல வாய்ப்புக்கள் இருப்பதாலும் அங்கு பல கிளைகளை நிறுவும் உத்தேசமும் அவருக்கு உண்டு. சிறிய நிறுவனங்கள் தமது சேவைகளை இலங்கையிலிருந்தே பெற்றுக்கொள்வதில் திருப்தியடைந்தாலும் பெரிய நிறுவனங்கள் எமது பணியாளர்களின் நேரடிப் பங்கேற்பையே விரும்புகிறார்கள் எனக்கூறும் அனோஜன் வெவ்வேறு சந்தைத் தேவைகளுக்கேற்ப கிளை நிறுவனங்களை உருவாக்க திட்டமிடுகிறார்.

C# மென்பொருளைக் கற்பதற்காக ஒரு பொழுதுபோக்காகவே POS செயலியை அனோஜன் உருவாக்கினார். அவரது பொழுதுபோக்கு இப்போது ஒரு நிறுவனமாகவே மாறியிருக்கிறது. முதலில் அவரது பெற்றோரது வீட்டில் பின்னர் தோட்டத்தில் இறுதியாக, 2022 இல், 7,000 சதுர அடி அலுவலகத்தில் அது இயங்குகிறது. தனியொருவனாக ஆரம்பித்த அவரது நிறுவனம் 100 இற்கும் மேலான பணியாளர்களைக் கொண்டு இயங்குகிறது. மேலும் விஸ்தரிக்கும் திட்டங்களும் உண்டு. உலகில் 16 நாடுகளில் அப்ரிமஸ் ரெக் நிறுவனத்தின் பண்டங்களும் சேவைகளும் விற்பனையாகின்றன. இளைஞரான அனோஜன் தனது நிறுவனத்தை மென் மேலும் உயர்த்துவதற்கான நேரத்தையும் சக்தியையும், பேராவலையும் இப்போதும் கொண்டிருக்கிறார் என்பது நிறைவுதரும் திருப்தி.

மனோஜனைத் தொடர்பு கொள்ள: info@apptimustech.com

நன்றி : மறுமொழிLanka Business Online (www.lankabusinessonline.com)

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

5330 பார்வைகள்

About the Author

ஜெகன் அருளையா

இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் தனது பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக, இலங்கையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர். 2015 இல், நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்குக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)