Arts
18 நிமிட வாசிப்பு

இந்துக்களின் பஞ்சாங்கமும், தமிழர்களின் வானிலையும் காலநிலையும்

January 5, 2024 | Ezhuna

ஒரு பிரதேசத்தின் பல்வேறு விடயங்களை கட்டமைப்பதில் அந்தப் பிரதேசத்தின் இயற்கை அம்சங்கள் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றன. குறிப்பாக ஒரு பிரதேசத்தின் காலநிலை சார்ந்த அம்சங்கள் அந்தப் பிரதேசத்தினுடைய இயற்கையையும் அந்த பிரதேசத்திற்குரிய பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களையும் கட்டமைப்பதில் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றது. அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தினுடைய பல்வேறு வகைப்பட்ட விடயங்களை தீர்மானித்ததில் வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை மிகப்பெரிய செல்வாக்கினை பெற்றிருக்கின்றது. வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை சார்ந்த பாரம்பரிய அறிவியல் விடயங்களையும் நவீன விஞ்ஞான ரீதியிலான ஆய்வு சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கியதாக வடக்கு மாகாணத்தினுடைய காலநிலைப் பண்புகளை முழுமைப்படுத்தி வெளியிடுவதாக ‘பிராந்திய காலநிலையியல் : வடக்குப் பிராந்தியம், இலங்கை‘ எனும் தொடர் அமைகின்றது.

அறிமுகம்

வானிலையும் காலநிலையும் மனித வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கின்றன. மழைவீழ்ச்சி, வெப்பநிலை, காற்று, ஆவியாதல் மற்றும் சூரியக் கதிர்வீச்சு போன்ற பல்வேறு வானிலை நிகழ்வுகளைப் பொறுத்து மனித உயிர்வாழ்வின் ஒவ்வொரு செயற்பாடும் தங்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல வானிலை கண்காணிப்பு மையங்களில் வானிலை தரவுகளை சேகரிக்க பல கருவிகள் உதவுகின்றன. மேலும் வானிலை ஆய்வாளர்கள் ஒரு இருப்பிடத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால வானிலை நிலைமைகளை பகுப்பாய்வு செய்து கணிக்க பல முறைகளைப் பயன்படுத்துகின்றார்கள் (Sivapragasam And Kanagasabai, 2008).

வானிலை முன்னறிவிப்பு, குறிப்பாக நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு, மனிதர்களின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் நடவடிக்கைகளுக்கு அவசியமாகும். பொருளாதார நடவடிக்கைகள் குறிப்பாக விவசாய நடவடிக்கைகளின் ஒவ்வொரு கட்டமும் வானிலைக் காரணிகளில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு வானிலை முன்னறிவிப்பே அடிப்படையாக அமைகின்றது.  உள்நாட்டு வாழ்க்கைமுறை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் வானிலை முன்னறிவிப்பு அறிக்கைகளைப் பொறுத்தே வெற்றியடைகின்றது. இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதர்களும் வானிலை முன்னறிவிப்பை அத்தியாவசியமான ஒன்றாக கருதுகின்றார்கள். எனவே, வானிலை முன்னறிவிப்பு அறிக்கைகள் அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாகி வருகின்றன. 

தேவையற்ற மனித உயிர் இழப்பு மற்றும் சொத்து சேதங்களை தவிர்க்க அனைத்து அரசாங்கங்களும் வானிலை முன்னறிவிப்புகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளன. பெரும்பாலான நாடுகள் காலநிலை மாற்றத்தின் பின்னணியில் துல்லியமான வானிலை முன்னறிவிப்பைச் செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் நீண்ட கால வானிலை முன்னறிவிப்பில் இன்னும் சிரமங்களை எதிர்கொள்கின்றன. நீண்ட கால வானிலை முன்னறிவிப்புடன் ஒப்பிடும்போது குறுகிய கால வானிலை முன்னறிவிப்பு, அவதானிக்க, பகுப்பாய்வு செய்ய மற்றும் முன்னறிவிப்பு செய்ய எளிதானது. ஆனால் நீண்ட கால முன்னறிவிப்பு, வானிலை அளவுருக்களில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் காரணமாக கடினமான செயற்பாடாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயினும்கூட, பல நிறுவனங்கள் தங்கள் வானிலை முன்னறிவிப்பை மிகவும் பயனுள்ளதாகவும் திறமையாகவும் செய்ய பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொள்கின்றன. மேலும் உலகளவில், வானிலை முன்னறிவிப்பதற்காக பல முறைகள் நடைமுறையில் உள்ளன. இந்த முறைகளில் பெரும்பாலானவை நவீன தொழில்நுட்பங்களுடன் தொடர்புடையவையாகவே காணப்படுகின்றன.

விஞ்ஞான முறையிலான வானிலை முன்னறிவிப்பு செயற்பாடுகள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. ஏனெனில் நவீன தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களுடன் கூடிய பல்வேறு முன்னறிவிப்பு முறைகள் 19 ஆம் நூற்றாண்டிலேயே  உருவாக்கப்பட்டது. இருப்பினும், சில சமூகங்கள் அல்லது குழுக்கள் இன்னும் பாரம்பரிய வானிலை முன்னறிவிப்பு முறைகளைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் தங்களின் பாரம்பரிய வானிலை முன்னறிவிப்பு அறிவின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துள்ளனர். 

இலங்கையில் தமிழர்கள் இரண்டாவது பெரும்பான்மை இனத்தவர்கள். பெரும்பாலான தமிழர்கள் இந்தியாவின் மிகப் பழமையான மதமான இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இலங்கைத் தமிழர்கள் தனித்துவமான மற்றும் குறிப்பிட்ட கலாச்சார அடையாளங்களைக் கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் குறிப்பிட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் மதிப்புகளைக் கொண்டுள்ளனர். இலங்கைத் தமிழர்களில் குறிப்பாக இந்துக்களில் 85% இற்கும் அதிகமானோர் பஞ்சாங்கத்தை கண்டிப்பாகப் பின்பற்றுகிறார்கள் (Sivapragasam and Kanagasabai, 2008). 

வாழ்க்கைச் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பஞ்சாங்கம் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக, தமிழர்கள், குறிப்பாக இந்துக்கள், தங்கள் புனிதச் சடங்கு மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக மிக உயர்ந்த பஞ்சாங்க முறைகளைப் பயன்படுத்தினர். தமிழர்கள், குறிப்பாக விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தங்கள் வானிலை மற்றும் காலநிலை நோக்கங்களுக்காகப் பஞ்சாங்கத்தை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். பஞ்சாங்கக் கணிப்பு அடிப்படையில் அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையையும்  வடிவமைத்துள்ளனர்.

பஞ்சாங்கம் பற்றிய அறிமுகம்

இந்தியா, இலங்கை, நேபாளம், தாய்லாந்து, மலேசியா, மியான்மர், பூட்டான், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள இந்துக்கள் பல வகையான பஞ்சாங்கங்களைப் பயன்படுத்துகின்றனர் (Vandeep et.al, 2012). கணக்கீடு மூலம், முறை, விளக்கம் மற்றும் நேர மண்டலங்களைக் கருத்தில் கொண்டு இந்த பஞ்சாங்கங்களில் சில வேறுபாடுகளை அடையாளம் காணலாம். இலங்கையில், இந்துக்கள் பெரும்பாலும் இரண்டு வகையான பஞ்சாங்கத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஒன்று ‘வாக்கிய பஞ்சாங்கம்’ (சுத்த வாக்கிய பஞ்சாங்கம்), மற்றொன்று ‘கணித பஞ்சாங்கம்’ (திருக்கணித பஞ்சாங்கம்). பொதுவாக, பெரும்பாலான தமிழர்கள் (குறிப்பாக இந்துக்கள்) இரண்டு முறைகளிலான பஞ்சாங்கத்தையும் பயன்படுத்துகின்றார்கள் (அட்டவணை 3.1). இருப்பினும் இந்த இரண்டு வகைகளுக்கு இடையே சில கால வேறுபாடுகளை அடையாளம் காண முடியும். திருக்கணித பஞ்சாங்கம் கிரகங்கள் மற்றும் ஜோதிடக் கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டது. அதேசமயம் பண்டைய காலத்தில் முனிவர்கள் வழங்கிய வாக்கியங்களின் அடிப்படையில் வாக்கிய பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. வாக்கிய பஞ்சாங்கம், கணித பஞ்சாங்கம் ஆகிய இரண்டும்  கிரகங்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டு பஞ்சாங்கங்களுமே சூரியனையும் சந்திரனையும் கோள்கள் என்ற அடிப்படையிலேயே கணிப்பீடுகளை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதனால் பண்டைய காலங்களில் சூரியனும் சந்திரனும் ஏனைய கோள்களோடு இணைந்த ஒரு கோள்களாக கருத்தில் கொண்டே வாக்கிய பஞ்சாங்கமும் திருக்கணித  பஞ்சாங்கமும் கணிப்பீடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் பின்வந்த அறிஞர்கள் சிலர் சூரியனையும் சந்திரனையும் கோள்களாக கருதுகின்றமை நவீன அறிவியலுக்கு பொருத்தமற்றது என்று கூறி பஞ்சாங்கத்தின் கணிப்பீடுகளை நிராகரிப்பதும் உண்டு.

Panchaankam 1

இந்த கட்டுரை முதன்மையாக இலங்கையில் உள்ள தமிழ் இந்துக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் வாக்கிய பஞ்சாங்கத்தின் மீது கவனம் செலுத்துகிறது. வாக்கிய பஞ்சாங்கம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இந்து யோகிகளால் வழங்கப்பட்ட அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையை அகத்திய முனிவரும் பராசர முனிவருமே உருவாக்கினார்கள். அதற்குப் பின்னர் பல்வேறு முனிவர்கள் பல மாற்றங்களை செய்துள்ளனர். ஆரம்ப காலத்தில் வாக்கிய பஞ்சாங்கத்திற்கான அடிப்படைகளை அகத்திய முனிவரும் பராசர முனிவரும் ஏற்படுத்தியிருந்தாலும் கூட பின்னர் வந்த காலப்பகுதிகளில் இருந்த ஒவ்வொரு முனிவர்களும் பல்வேறு வகைப்பட்ட இணைப்புகளை ஏற்படுத்தி வாக்கிய பஞ்சாங்கத்திற்கு வலுவூட்டினார்கள். வேதாந்த ஜோதி என்பவர் கி.மு 1400 – 1300 இற்கு இடைப்பட்ட காலத்தில் திருத்தப்பட்ட ‘வாக்கிய பஞ்சாங்கம்’ ஒன்றை வெளியிட்டார். அதன்பின்னர் ‘பிரிஹத் சம்ஹிதா வராஹம்ஹிரா’ என்ற முனிவர் இந்த வாக்கியத்தை கி.பி 505 இல் மீண்டும் எழுதினார். பிரிஹத் சம்ஹிதா என்ற முனிவரே முதன்முதலாக வாக்கிய பஞ்சாங்கத்தின் இந்த புதிய பதிப்பில் பல வானிலை அம்சங்களை அறிமுகப்படுத்தினார். 

வாக்கிய பஞ்சாங்கம் அறுபது வருட சுழற்சியைக் கொண்டுள்ளது. பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு தனிப்பட்ட பெயர் உள்ளது. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பெயர் (ஆண்டு) மீண்டும் தோன்றும். அறுபது ஆண்டுகள் ஐந்து பெரிய பிரிவுகளை உள்ளடக்கியது. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் 12 ஆண்டுகள் உள்ளன. பஞ்சாங்க முறைமைகளின் படி ஒரு ஆண்டின் தொடக்கம் ஆங்கில ஆண்டின் ஏப்ரல் மாதம் 14 அல்லது 15 ஆகவே அமைகின்றது. பஞ்சாங்கத்தின்படி ஆண்டுத் தொடக்கம் ஒரு குறிப்பிட்ட ஆண்டின் ஏப்ரலில் தொடங்கி அடுத்த ஆண்டின் ஏப்ரல் 13 அல்லது 14 ஆம் திகதிகளில் முடிவடைகின்றது. எனவே பஞ்சாங்கம் குறிப்பிடுகின்ற ஆண்டு என்பது ஒரு ஆண்டின், அதாவது ஆங்கில ஆண்டின் ஏப்ரலில் இருந்து அடுத்த ஆண்டின் ஏப்ரல் வரையான பகுதியையே உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வானிலை அம்சங்களுடன் தொடர்புடைய இந்த வாக்கியப் பஞ்சாங்கத்தில் பல வானிலை நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த பஞ்சாங்கத்தில், மழையின் அளவு ‘மரக்கால்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூரியனின் கோணம் மற்றும் வெப்பநிலை ‘காண்டாவனம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கெர்ப்போட்டம்; காற்றின் திசை மாற்றங்கள், மேக வகைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. இலங்கையின் வடக்குப் பகுதியானது பஞ்சாங்கம் முன்னறிவிக்கப்பட்ட வானிலை நிகழ்வுகளுக்குப் பொதுமைப்படுத்தக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது. ஏனெனில் பெரும்பாலான வட மாகாண மக்கள் பஞ்சாங்கத்தை தங்கள் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். அத்துடன் அவர்கள் புனித அல்லது பாரம்பரிய சடங்குகளான திருமணம் (பொருத்தமான இணையை தெரிவுசெய்வதற்கும், திருமண நாளைக் குறிப்பதற்கும்), பூப்பனித நீராட்டுவிழா, திவசம், குழந்தைகளுக்கு பெயரிடல், நற்காரிய தொடக்கங்களுக்கான தேதிகளை நிர்ணயம் செய்வதற்கும் பஞ்சாங்கத்தை பயன்படுத்துகின்றனர். இலங்கையின் வடக்கு மாகாண மக்கள் தொகையில் 71% இற்கும் அதிகமானோர் பல்வேறு நோக்கங்களுக்காக வாக்கிய பஞ்சாங்கத்தை (ரகுநாதய்யர் சுத்த வாக்கிய பஞ்சாங்கம்) பயன்படுத்துகின்றனர். 

வாக்கிய பஞ்சாங்கம் என்பது முற்காலத்து முனிவர்களால் உருவாக்கப்பட்ட பாடல்களின் வரிகளைப் பயன்படுத்தி வானிலை விவரங்களைக் குறிக்கிறது. இந்த ஆய்வு 1970 முதல் 2022 வரையிலான ஐம்பது ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டு பஞ்சாங்கம் கூறும் வானிலை அம்சங்களை ஆராய்கின்றது. பஞ்சாங்கம் ‘தத்து’ முதல் ‘யுவா’ வரை 60 ஆண்டு சுழற்சியைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தனிப்பெயரைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பெயரும் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் வரும். இது ஒரு சுழற்சி முறை.

பஞ்சாங்கம் வானிலை பற்றிய தனித்துவமான அமைப்பை விவரிக்கிறது. பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட வானிலை அளவுருக்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றன. மழைவீழ்ச்சி, தீவிர வெப்பநிலை, காற்றின் திசை போன்ற விடயங்கள் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படுகின்றன. அத்துடன் பஞ்சாங்கம் ஒவ்வொரு ஆண்டும் பின்வருவனவற்றைக் குறிக்கிறது:

1. ஆளும் கிரகம்: குறிப்பிட்ட ஆண்டிற்கான முக்கிய கிரகம் மற்றும் அதன் தனித்துவமான பண்புகளின் அடிப்படையில் ஆண்டின் அடிப்படை அம்சங்கள் கணக்கிடப்படுகின்றன.

2. மந்திரி கிரகம்: குறிப்பிட்ட ஆண்டிற்கான ஆளும் கிரகத்தை ஆதரிக்கும் சூரிய குடும்பத்தில் இரண்டாவது ஆதிக்கம் செலுத்தும் கிரகம்.

3. மேகாதிபதி கிரகம்: குறிப்பிட்ட ஆண்டின் முழு வானிலை அமைப்பையும் தீர்மானிக்கும் கிரகம்

4. மேகம் வகை: யோகிகள் மேகத்தை வகைப்படுத்துகிறார்கள், மேலும் இந்த வகைப்பாட்டின்படி மழை மற்றும் மழை நாட்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்று இந்த பஞ்சாங்கம் கூறுகிறது.

பஞ்சாங்கத்தில் மழைப்பொழிவை ‘மழை மரக்கால்’ என்ற பெயரிலும், அதன் அளவு மரக்கால் அளவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மரக்கால் என்பது பண்டைய இந்துக்கள் தானியங்கள் மற்றும் திரவங்களை அளவிடுவதற்கு நீண்ட காலமாக பயன்படுத்திய அளவிடும் கருவிகளில் ஒன்றாகும். 

ஒரு ஆண்டின் அதாவது இந்து ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படுகின்ற பஞ்சாங்கம் என்பது அந்த ஆண்டு முடியும் வரையிலான காலப்பகுதிக்கு கிடைக்கவுள்ள மழையின் அளவை மரக்கால் என்ற எண்ணிக்கையில் குறிப்பிடுகின்றது. அதாவது ஒரு ஆண்டின் ஏப்ரல் 14 ஆம் தேதியில் தொடங்கும் இந்து ஆண்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி உடன் முடிவடையும். முந்தைய ஆண்டின் ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று அடுத்த ஆண்டின் ஏப்ரல் 14 வரையான காலப்பகுதிக்கு மழை எத்தகைய அளவில் கிடைக்கும் என்ற விடயம் குறிப்பிடப்படும். இது ஒரு நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு முறையாகும். இவ்வாறு கிடைக்க உள்ள மழையின் அளவை ‘மரக்கால்’ என்ற பெயரில் குறிப்பிடுகின்றது. இந்த மரக்கால் என்பது எத்தனை மரக்கால் என்ற எண்ணிக்கையில் குறிப்பிடப்படும். உதாரணமாக மூன்று மரக்கால் மழை அல்லது நான்கு மரக்கால் மழை கிடைக்கும் என்ற எதிர்வுகூறலை பஞ்சாங்கம் ஒரு ஆண்டில் ஏப்ரல் மாதத்திலேயே வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும், அந்தத் தொகை ஆண்டு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாங்கம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி மார்ச் மாதம் முடியும். புதிய பஞ்சாங்கம் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும். அதில் ஆண்டு முழுவதும் கிடைக்கவுள்ள மழையின் மொத்த அளவு குறிப்பிடப்படும். நடைமுறையில் ஒரு மரக்கால் என்பது 350 மி.மீ. மழைக்கு சமமானதாகும். 

காண்டவனம் என்பது ஒரு ஆண்டின் அதிகூடிய வெப்பநிலை நிலவும் காலப்பகுதியாகும். குறிப்பிட்ட மாதத்தின் தீவிர வெப்பநிலை மற்றும் வெப்பமான நாட்களை வரையறுக்கப்பட்ட காலம் மற்றும் குறிப்பிட்ட நாட்கள் என பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. பஞ்சாங்கம், காண்டாவனம் குறிப்பிட்ட நாளில் தொடங்கி இந்த நாளில் முடிவடையும் என்று அறிவுறுத்துகிறது. இந்த இரண்டு குறிப்பிட்ட நாட்களுக்கு இடைப்பட்ட காலம் காண்டாவன காலம் எனப்படும். இந்த காலகட்டம் ஒவ்வொரு வருடமும் வெப்பமான நாளாக இருக்கும் என்று பஞ்சாங்கம் சுட்டிக்காட்டுகிறது. 

இவ்வாறு பஞ்சாங்கம் குறிப்பிடுகின்ற வானிலை தரவுகளுக்கும் உண்மையான வானிலை தரவுகளுக்கும் இடையில் ஏதாவது ஒற்றுமை உள்ளதா? பஞ்சாங்கம் குறிப்பிடுகின்ற வானிலை தொடர்பான விடயங்கள் விஞ்ஞான ரீதியிலான வானிலை விடயங்களுடன் ஒத்துப் போகின்றதா என்பதை அறிந்து கொள்வதற்காக, வடக்கு மாகாணத்தில் அவதானிக்கப்பட்ட மழைவீழ்ச்சி அளவு, வெப்பநிலை, மழை நாட்கள், காற்று திசை போன்ற தரவுகள் பெறப்பட்டு, பல்வேறு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகள் சராசரி காணப்பட்டு, அந்த சராசரி முடிவுகளுடன் பஞ்சாங்கம் குறிப்பிடுகின்ற வானிலை தொடர்பான தரவுகள், முக்கியமாக மழையின் அளவு, காண்டாவனம் எனக் குறிப்பிடப்படுகின்ற காலப்பகுதியின் வெப்பநிலை அளவு போன்ற விடயங்கள் நடைமுறையில் அவதானிக்கப்பட்ட வானிலை தரவுகளோடு ஒப்பிட்டு முடிவுகள் பெறப்பட்டன. 

பகுப்பாய்வுகளின் படி கடந்த 70 ஆண்டு கால பஞ்சாங்கம் குறிப்பிடுகின்ற மழை அளவுகளின் எண்ணிக்கை, அதாவது மரக்காலின் எண்ணிக்கை, மூன்று அல்லது நான்கு அல்லது இரண்டு அல்லது ஐந்து மழை மரக்கால்கள் ஆகும். அந்த அடிப்படையில் கடந்த 70 ஆண்டு சராசரியாக பஞ்சாங்கம் 3.5 மரக்கால் அளவில் மழை கிடைக்கும் என கணிப்பீடு செய்துள்ளது. அதேவேளை அவதானிக்கப்பட்ட விஞ்ஞான முறையிலான வானிலை அவதான நிலையங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சராசரியாக 1255 மில்லி மீற்றர் மழை கிடைத்துள்ளது. ஆகவே ஒரு மரக்கால் 350 மில்லி மீற்றர் மழைக்கு சமம் என்ற அடிப்படையில் 3.5 மழை மரக்கால் என்பது 1200 மில்லி மீற்றர்க்கு சமனாக காணப்படுகின்றது. அதேபோல சராசரியாக அவதானிக்கப்பட்ட மழையின் அளவு 1250 மில்லி மீற்றர் ஆக காணப்படுகின்றது. எனவே அந்த அடிப்படையில் மழை மரக்கால் குறிப்பிடுகின்ற மழையின் அளவுக்கு, அதாவது பஞ்சாங்கம் குறிப்பிடுகின்ற மழை மரக்காலின் மழை அளவு, நிகழ்நேர வானிலை அவதான நிலையங்களில் அவதானிக்கப்பட்ட மழையின் அளவோடு ஒரு தொடர்பு இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை இரண்டு தரவுகளின் ஒப்பீட்டு ரீதியிலான ஆய்வு முறை மூலம் அவதானிக்க முடிகின்றது. 

அவதானிக்கப்பட்ட வானிலை தரவுக்கும் பஞ்சாங்கத்துக்குமான தொடர்பு

1970 ஆம் ஆண்டு தொடங்கி ஐம்பது ஆண்டுகளாக வானிலை ஆய்வுத் துறையிலிருந்து அவதானிக்கப்பட்ட மழை, வெப்பநிலை மற்றும் காற்றின் தரவு சேகரிக்கப்பட்டது. பஞ்சாங்கம் ஆண்டு மழை அளவை மட்டுமே குறிக்கிறது. எனவே, பஞ்சாங்கம் கணித்த மற்றும் அவதானிக்கப்பட்ட மழைப்பொழிவை ஒப்பிடுவதற்காக இந்த ஆய்வுக்காக மொத்த ஆண்டு மழைவீழ்ச்சி சேகரிக்கப்பட்டது. பஞ்சாங்கத்திற்கு என்று குறிப்பிட்ட மழை அளவீட்டு நிலையம் இல்லை. பஞ்சாங்கம் முழுப் பிராந்தியத்திற்கும் வானிலை விவரங்களைக் குறிக்கிறது. எனவே, இந்த ஆய்வு இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இயங்கும் பதினாறு நிலையங்களின் சராசரி மதிப்புகளைக் கருத்தில் கொள்கிறது. முதலாவதாக, ஐம்பது ஆண்டுகளுக்கான வருடாந்த மொத்த மழைவீழ்ச்சி பதினாறு நிலையங்களிலிருந்து சேகரிக்கப்பட்டது, அதன்பின் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்திற்கான சராசரி வருடாந்த மொத்த மழைவீழ்ச்சியை சுருக்கி பெறப்பட்டது.

உண்மையான மற்றும் பஞ்சாங்க மழை உறவு

வடக்கு மாகாணத்தில் அவதானிக்கப்பட்ட 16 மழை வீழ்ச்சி நிலையங்களின் சராசரி அளவும் பஞ்சாங்கம் கூறுகின்ற ஆண்டுக்கான மொத்த மழைவீழ்ச்சி மரக்காலின் எண்ணிக்கையும் உறவுமுறை பகுப்பாய்வின் கீழ் (Correlation Analysis) பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டது (அட்டவணை 3.2).

Panchaankam 2

அந்த அடிப்படையில் அவதானிக்கப்பட்ட மழைவீழ்ச்சிக்கும் பஞ்சாங்கம் கூறுகின்ற மரக்கால் எண்ணிக்கைக்கும் இடையிலே நேரான தொடர்பு இருப்பதும் அதுவும் உறுதியான நேரான தொடர்பு இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது (படம் 3.1). அதாவது ஆண்டு சராசரி மழை வீழ்ச்சியாக 1250 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி காணப்படுகின்ற அதே வேளை மரக்காலின் ஆண்டு சராசரியாக, 3.5 மரக்கால் குறிப்பிடப்படுகின்றது. எனவே அவதானிக்கப்பட்ட தரவுகளோடு மழை மரக்காலினுடைய தரவுகளை ஒப்பிடுகின்ற பொழுது அது மிகப்பெரிய தொடர்பை கொண்டு காணப்படுகின்றது (Correlation analysis R-0.7816). எனவே இதன் மூலம் பஞ்சாங்கம் கூறுகின்ற மழையின் அளவும் அவதானிக்கப்பட்ட மழையின் அளவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதினால் பஞ்சாங்கத்தினை ஆண்டுக்கான மொத்த மழை வீழ்ச்சியின் முன்னறிவிப்புக்கான, அதாவது நீண்டகால முன்னறிவிப்புக்கான ஒரு முறையாக ஏற்றுக் கொள்ளலாம் என்பதை இந்த விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. 

Panchaankam 3

ஆளும் கிரகமும் மழையும்

ஆளும் கிரகத்திற்கும் ஆய்வுப் பகுதியின் மொத்த மழைவீழ்ச்சிக்கும் இடையே ஒரு வலுவான உறவு உள்ளது. சந்திரன் ஆட்சிக் கிரகமாக இருக்கும்போது, ​​அதிக மழையை அனுபவிக்கிறோம். செவ்வாய் ஆட்சி கிரகமாக இருக்கும்போது, ​​குறைவான மழையைப் பெறுகிறோம். மந்திரி கிரகத்திற்கும் பெறப்பட்ட மொத்த மழைக்கும் இடையே ஒரு வலுவான உறவு உள்ளது. ஆளும் கிரகத்துக்கும் மழை வீழ்ச்சிக்கும் இடையில் மிகப்பெரிய தொடர்பு காணப்படுகின்றது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கிரகத்தினதும் ஆட்சி நடப்பதாக பஞ்சாங்கம் கருதுகின்றது. அந்த அடிப்படையில் ஆளும் கிரகத்திற்கும் அந்த ஆண்டுக் காலத்துக்கான மழை வீழ்ச்சிக்கும் இடையில் மிகப்பெரிய தொடர்பு இருப்பதாக பஞ்சாங்கம் குறிப்பிடுகின்றது. அந்த அடிப்படையில் சந்திரன் ஆட்சிக்கிரகமாக காணப்பட்டால் மிகப்பெரிய அளவில் மழை கிடைப்பதாகவும் சூரியன் ஆட்சிக்கிரகமாக காணப்பட்டால் நடுத்தரமான மழை கிடைப்பதாகவும் செவ்வாய் ஆட்சிக்கிரகமாக காணப்பட்டால் மிகக் குறைவான மழை வீழ்ச்சி கிடைப்பதாகவும் பஞ்சாங்கம் குறிப்பிடுகின்றது. அந்த அடிப்படையில் நோக்குகின்ற பொழுது, மழை மரக்காலில் மாத்திரமன்றி, அவதானிக்கப்பட்ட நிகழ்நேர மழை வீழ்ச்சி தரவுகளிலும் இந்த ஒற்றுமை காணப்படுகின்றது. அதாவது செவ்வாய் ஆட்சி கிரகமாக பஞ்சாங்கம் அறிவிக்கின்ற பொழுது அந்த ஆண்டுக்கான மழை வீழ்ச்சி மிக மிகக் குறைவான நிலைமையில் காணப்படுகிறது. அதே வேளை சந்திரன் ஆட்சிக்கிரகமாக காணப்படுகின்ற காலப்பகுதிகளில் ஆண்டு மழை வீழ்ச்சி மிக உயர்வாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாக உள்ளது. எனவே ஆட்சி கிரகத்திற்கும் மழை வீழ்ச்சிக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்பு காணப்படுவதாக பஞ்சாங்கம் கூறுகின்ற நிலைமை நிகழ் நேர வானிலை அவதானிப்பிலும் பொருத்தமானதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது (அட்டவணை 3.3). 

Panchaankam 4

அதேபோன்று பிரதான அமைச்சு கிரகத்திற்கும் மழை வீழ்ச்சிக்கும் இடையில் மிகப்பெரிய தொடர்பு காணப்படுகின்றது. அதாவது சனி அமைச்சுக் கிரகமாக இருந்தால் அந்த ஆண்டின் மழை மிகக் குறைவாகவும் புதன் அமைச்சுக் கிரகமாக இருந்தால் மிகக் கூடிய அளவு அளவில் மழை கிடைப்பதாக பஞ்சாங்கம் கூறுகின்றது (அட்டவணை 3.4). வியாழன் அல்லது வெள்ளி அமைச்சுக் கிரகமாக இருந்தால் அக்காலப் பகுதியில் நடுத்தரமான அளவில் மழை கிடைப்பதாக குறிப்பிடப்படுகிறது.  எனவே பஞ்சாங்கம் கூறுகின்ற ஆண்டுக்குரிய அமைச்சு கிரகத்திற்கும் அந்த ஆண்டு கிடைக்கும் மழைவீழ்ச்சிக்குமிடையில் மிகப்பெரிய தொடர்பு காணப்படுகின்றது. அதே போன்று மேகாதிபதியாக எந்த கிரகம் விளங்குகின்றதோ அதை பொறுத்து மழை அமைந்திருப்பதாக பஞ்சாங்கம் கூறுகின்றது (அட்டவணை 3.5). உதாரணமாக சந்திரன் மேகாதிபதியாக இருக்கின்ற பொழுது மிக கனமழையும், வெள்ளி மேகாதிபதியாக இருக்கின்ற பொழுது மிக குறைவான மழையும் கிடைப்பதாக பஞ்சாங்கம் கூறுகின்றது. நடைமுறை வானிலை அவதானிப்பு சார்ந்த மழைவீழ்ச்சி தரவுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. 

Panchaankam 5
Panchaankam 6

அதேவேளை ஆட்சிக்கிரகமாக சந்திரனும் அமைச்சுக் கிரகமாக புதனும் மேகாதிபதியாக சந்திரனும் நிலவும் காலப் பகுதிகளில் வடக்கு மாகாணம் மிகப்பெரிய அளவில் அதாவது வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு மழையை பெற்றுள்ளமை பஞ்சாங்கங்களில் இருந்தும், அவதானிக்கப்பட்ட நிகழ்நேர மழை வீழ்ச்சி அளவீடுகளில் இருந்தும் அறிந்து கொள்ள முடிகின்றது. அதேபோன்று ஆட்சிக்கிரகமாக செவ்வாயும் அமைச்சுக் கிரகமாக சனியும் மேகாதிபதியாக வெள்ளியும் உள்ள காலப் பகுதிகளில் மிக மிகக் குறைவான மழை வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கின்ற அதே சமயம் வரட்சி மற்றும் நீர் பற்றாக்குறையால் வடக்கு மாகாணம் பல்வேறு வகைப்பட்ட பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பதும் அவதானிக்கப்படுகின்றது. எனவே பஞ்சாங்கம் கூறுகின்ற ஆட்சிக்கிரகம், அமைச்சுக் கிரகம், மேகாதிபதி போன்றவற்றிற்கும் மழை வீழ்ச்சிக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்பு காணப்படுவது இதன் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது. 

காண்டாவனம் என்பது இந்துக்களின் பஞ்சாங்கத்தில் முக்கியமான வார்த்தையாகும். ஏனெனில் இது சூரிய கதிர்வீச்சின் அளவு மற்றும் வெப்பநிலையைப் பற்றியது. காண்டாவனக் காலத்தில் வெப்பநிலை அதிகரிப்பதால் புதிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்துக்களின் பஞ்சாங்கத்தின் படி, காண்டாவனம் எட்டு முதல் பதின்மூன்று நாட்கள் வரை இருக்கும் (படம் 4). பஞ்சாங்கம் எந்தக் காலப்பகுதியை காண்டாவனம் என குறிப்பிடுகிறதோ, அதுவே அதிகபட்ச சூரியக் கதிர்வீச்சுக் காலத்துடன் கூடிய மிக உயர்ந்த வெப்பநிலையாக இருக்கும். 60 ஆண்டுகளில், பஞ்சாங்கம் அதிகபட்ச வெப்பநிலை காலத்தை துல்லியமாக கணித்துள்ளது (படம் 3.2). 

Panchaankam 7

காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை தொடர்பில் இலங்கையில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும், பஞ்சாங்கம் மற்றும் மழைப்பொழிவு அல்லது வேறு எந்த வானிலை அம்சங்கள் தொடர்பான பாரம்பரிய முறைகளோடு தொடர்பு படுத்தி ஆய்வுகள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் சில ஆய்வுகள், குறிப்பாக சிங்கள மக்களிடையே வானிலை முறை குறித்த உள்ளூர் பழங்குடி அறிவை விளக்குகின்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பஞ்சாங்கம், ஆண்டுக்கான மொத்தப் பகுதிக்கான மழையின் அளவைக் கணித்துள்ளது. இருப்பினும், இந்த வகையான முன்னறிவிப்பு விவசாயிகளுக்கும் வானிலை முன்னறிவிப்பு தேவைப்படும் பிற மக்களுக்கும் பயன்படுகின்றது. பஞ்சாங்கம் என்பது மிக நீண்ட காலமாக நீண்டகால வானிலை முன்னறிவிப்புக்காக இந்து மக்களால் பயன்படுத்தப்படுகின்ற ஒன்றாகும். பஞ்சாங்கங்களில் திருக்கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் என இரண்டு வகையான பஞ்சாங்கங்கள் காணப்பட்டாலும் கூட இரண்டையும் தனித்தனியே பின்பற்றுபவர்களும் இணைத்து பின்பற்றுபவர்களும் காணப்படுகின்றார்கள். இந்த பஞ்சாங்கம் இயற்கை தொடர்பான பல்வேறு விடயங்களை தன்னுள்ளே கொண்டிருக்கின்றது. அவற்றில் சிறப்பாக வானிலை தொடர்பான அம்சங்கள் மிகவும் உத்தமமான அளவில் விதந்துரைக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் மழைவீழ்ச்சியின் அளவையும் மழை நாட்களின் அளவையும் அதிதீவிர வெப்பநிலையின் அளவையும் பஞ்சாங்கம் கூறியிருப்பது நிகழ்காலத்தில் நடைமுறை சார்ந்த வானிலை அவதானிப்புகளுடன் குறிப்பாக மழைவீழ்ச்சி வெப்பநிலையோடு ஒத்துப் போவதனை காணமுடிகின்றது. குறிப்பாக மழை மரக்காலினுடைய சராசரிக்கும் மழைவீழ்ச்சியின் சராசரிக்கும் இடையில் மிகப்பெரிய நெருக்கமான தொடர்பு இருப்பது அவதானிக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு காண்டாவன காலப்பகுதிகளில் வெப்பநிலையின் அளவு உயர்வாக இருப்பதும் அவதானிக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு ஆட்சிக்கிரகங்களின், அமைச்சுக் கிரகங்களின், மேகாதிபதி கிரகங்களின் தன்மைக்கும் கிடைக்கும் மழைவீழ்ச்சிக்கும் இடையில் மிகப்பெரும் தொடர்பிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாங்கம் கூறுகின்ற அளவிலான மழை, நிகழ் நேர மழை அவதானிப்போடு ஒத்துப்போவது அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பஞ்சாங்கங்கள் பற்றிய மிகச் சரியான வாசிப்பும், மிகச் சரியான கணிப்பும், மிகச் சரியான பிரதிக்கினையும், மிகச்சரியான மொழிபெயர்ப்பும் இதன் உண்மைத்தன்மையை இன்னமும் வலுவாக்கும் என்பது உண்மை. 

கெர்ப்போட்டம் அல்லது கர்ப்போட்டம் அல்லது கருவோட்டம்

வளிமண்டலவியல் திணைக்களங்கள் உருவாகுவதற்கு முன்னர் மழையை கணிக்க நம் தமிழர்கள் மிகச் சிறந்த முறையை பின்பற்றினார்கள். அதாவது டிசம்பர் மாதத்தில் கருக்கொள்ளும் மேகத்தின் தெற்கு சார்பான ஓட்டம் பற்றிய கணிப்பு அதில் முக்கியமானது. தற்போதைய வளிமண்டலவியலாளர்கள் மத்திய கோட்டிற்கு வடக்கே 5 பாகையிலும் தெற்கே 5 பாகையிலும் ஏற்படுகிற சூழலே பருவக்காற்று தோன்றுவதற்கு காரணம் என்று கண்டறிந்துள்ளனர். கெர்ப்போட்ட முறையில் டிசம்பர் மாதத்திலேயே அடுத்து வரும் 12 மாதங்களுக்கான (ஓர் ஆண்டு) மழை நிலவரத்தை முன் கூட்டியே கணித்து விட முடியும். இந்த எதிர்வு கூறல் கணிப்பு கிட்டத்தட்ட 70% சரியாக இருப்பதாக விவசாயிகள் சொல்லுகிறார்கள். 100% சரியாக இல்லாமல் போவதற்கு தற்போதைய காலநிலை மாற்றம் பிரதான காரணமாக உள்ளது. கெர்ப்போட்டம் அல்லது கருவோட்டம் என்பது பஞ்சாங்கங்களின் பிரகாரம் சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது. பூமி சூரியனை சுற்றுவதால் சூரியன் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருப்பது போல் நமக்குத் தோன்றுகிறது. இதனால் எமது முன்னோர்கள் சூரியன் சுற்றுவதாக எண்ணினார்கள். இவ்வாறு சுற்றும் போது ஒவ்வொரு ராசியைக் சூரியன் கடக்க அது 30 நாள்கள் எடுத்துக் கொள்கிறது. 

சூரியன் ஒவ்வொரு ராசியைக் கடக்கும் போதும் அதிலுள்ள நட்சத்திரங்களையும் கடந்து செல்கிறது. இதில் தனுசு ராசியை சூரியன் கடந்து செல்லும் போது அதிலுள்ள பூராடம் நட்சத்திரத்தைக் கடப்பதற்கு 14 நாள்களை எடுத்துக் கொள்கிறது. இது மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது. இந்த நாள்களில் அதாவது டிசம்பர் 28 முதல் ஜனவரி 11 வரை (ஏறக்குறைய) உள்ள நாள்களில் காணப்படுகிற கடல் மற்றும் தரை வெப்ப நிலையை அடிப்படையாக வைத்து அடுத்த ஓராண்டிற்கான மழை கணிக்கப்படுகிறது. இதற்குத் தான் கெர்ப்போட்டம் என்று பெயர். இந்தப் 14 நாள்களிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தால், லேசான தூறல் இருந்தால், மேகங்கள் வானில் திரிந்தால், வானம் மேகமூட்டமாக இருந்தால் எதிர்வரும் ஆண்டு நல்ல மழை இருக்கும்.

கெர்ப்போட்ட நாள்களில் நல்ல வெயில் அடித்தால், கனமழை பெய்தால், வானத்தில் வெள்ளை மேகங்கள் திரிந்தால், வானம் வெட்ட வெளியாய் இருந்தால் எதிர்வரும் நாள்களில் மழை பொய்த்துப் போகும் எனபது தான் கெர்ப்போட்டத்தின் பிரதிபலிப்பு. இது தான் கெர்ப்போட்டம் மூலம் மழையை  எதிர்வு கூறும் நீண்ட கால முறையாகும்.

கெர்ப்போட்டம் குறித்து விளக்கும் பழந்தமிழ் பாடல்: 

“தீயபூ ராடம் வெய்யோன் சேர்ந்திடு நாளில் வட்டம்
தூயமந் தாரம் தோன்றில் சுடரவன் ஆதி ரைக்கேபாயுநாள்
தொட்டு முன்பின் ஒருநாட்கும் பதினாலாக
காயும்வேற் கண்ணாய் சொல்லும் கார்மழை கர்ப்பம் தானே”

-சூடாமணி உள்ளமுடையன் என்ற நூலின் 258 ஆவது பாடல்-

மார்கழி மாதம் தனுசு ராசியில் சூரியன் நகரும் பதினான்கு நாள்களில் காணப்படும் கடல் மற்றும் தரை வெப்ப நிலையைப் பொறுத்து எதிர் வரும் ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களில் மழைப்பொழிவு இருக்கும் என்பதே இப் பாடலின் கருத்து. தமிழர்களின் பாரம்பரிய முறைகளிலான நீண்ட கால வானிலை முன்னறிவித்தலின் விஞ்ஞான தன்மை குறித்து நீண்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இலங்கை, உருகுணைப் பல்கலைக்கழத்தின் மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் ஆய்விதழுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வெளியீடு செய்வதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் ஒரு சிறிய பகுதியே இது. 

இது தொடர்பான ஆய்வுக்கு தூண்டி ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் தகுதி வாய்ந்த அதிகாரியும், பௌதீகவியல் பேராசிரியருமான, பேராசிரியர் க. கந்தசாமி அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த நன்றிகள்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7319 பார்வைகள்

About the Author

நாகமுத்து பிரதீபராஜா

கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார். காலநிலையியலில் தனது கலாநிதி பட்டத்தினை பூர்த்தி செய்த பிரதீபராஜா காலநிலையியல் தொடர்பான பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை பற்றியும் பொதுவான காலநிலை அம்சங்கள் தொடர்பாகவும் 07 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 40 இற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரித்துள்ளார். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, வடக்கு மாகாணத்தினுடைய வானிலை தொடர்பான இவரது எதிர்வு கூறல்களை பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)