Arts
15 நிமிட வாசிப்பு

3AxisLabs : யாழ். தகவல் தொழில்நுட்பச் சமூகத்திற்கு மேலுமொரு வருகை

March 1, 2024 | Ezhuna

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

தமிழில் : த. சிவதாசன்

யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்பம் செழித்தோங்குவதற்கு, Yarl IT Hub எனும் நிறுவனத்தினால் நடாத்தப்பட்டுவரும் The Yarl Geek Challenge (YGC) எனப்படும் போட்டி நிகழ்வு ஒரு முக்கிய காரணமாகும். இந் நிகழ்வு இலங்கை முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல நூற்றுக்கணக்கான அறிவுடையோரை உருவாக்கித் தந்ததுடன் இத் துறையில் பிரபலமான பல நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளது. இதில் உள்ள விசேடம் என்னவென்றால் YGC தனியே தமது புதிய படைப்புக்களையோ அல்லது பண்டங்களையோ இங்கு காட்சிப்படுத்தவில்லை. மாறாக அது நமது சமூகத்திலிருந்து முளைத்தெழும் இளைய தலைமுறையினரையும் அவர்களது கூட்டு முயற்சிகளையுமே காட்சிப்படுத்துகிறது. பல தடவைகளில் போட்டி முடிவில் இவர்களது படைப்புகள் பயனளிக்காமல் போய்விடுவதுண்டு எனினும் அவற்றை உருவாக்கிய குழுவினர் தொடர்ந்தும் வேறுபல முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை ஈட்டிவருவது இந் நிகழ்வுக்குப் பெருமை சேர்ப்பதாகும். 3AxisLabs என்னும் நிறுவனம் இப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்ட படைப்பு மட்டுமல்ல வெற்றிகரமாக இயங்கிவரும் வியாபார முயற்சியுமாகும்.

Busseat.lk

Busseat.lk என்ற தனியார் பஸ்சேவை பயணச்சீட்டுகளை ஒதுக்கீடு செய்யும் சேவையை வழங்கும் இணையத்தளத்தை எடுத்துக் கொள்வோம். இது 2014 இல் நடைபெற்ற, YGC போட்டித் தொடரின் மூன்றாவது நிகழ்வில் (YGC3) பங்குபற்றி வெற்றியீட்டிய ஒரு இளைஞர் குழுவின் வெற்றிக் கதை. ஐந்து பேரைக் கொண்ட இக்குழுவிலிருந்து மூவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றச் சென்றுவிட்டார்கள். ஒருவர் PhD மேற்படிப்பை மேற்கொள்வதற்கெனச் சென்றுவிட்டார். இறுதியில் தனித்துவிடப்பட்ட நிலையில் அக் குழுவின் தலைவரான பிரசாந்த் சுபேந்திரனுக்கு கொழும்பிலுள்ள மிகவும் பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து முதன்மை தொழில்நுட்ப அதிகாரி (CTO) பதவிக்கான அழைப்பு வந்தது. ஆனாலும் அப் பதவியை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டு Busseat.lk நிறுவனத்தை ஆரம்பித்தார்.

busseat.lk

YGC3 நிகழ்வின் வழிகாட்டிகளில் ஒருவரும், YGC நிறுவனத்த்தின் ஆலோசககருமான ஜெஸ்டன் நிரோஜன் 3AxisLabs நிறுவனத்தின் இணை ஸ்தாபகர்களில் ஒருவராவார். பிரசாந்தின் குழுவினருக்கு அவர் வழிகாட்டியாக (mentor) இருக்காவிடினும், அக்குழுவின் நடவடிக்கைகளை உற்று அவதானித்த ஜெஸ்டன குறிப்பாக ஒரு விடயத்தை அவதானித்தார். அதாவது, காட்சிப்படுத்தலின்போது பிரசாந்தின் கவனம் தொழில்நுட்பத்தில் எழுந்த சவால்களை எதிர்கொள்வதை விடவும் அதன் வியாபார முன்னேற்பாடுகள் குறித்த சவால்கள் மீதே குவிந்திருந்தது. பின்னர் ஒருநாள், வெள்ளவத்தையில் நிரோஜன் பிரசாந்தைச் சந்திக்கும் சந்தர்ப்பம் நேரிட்டபோது பிரசாந்தின் கோரிக்கையை ஏற்று அவரோடு இணைந்து செயற்பட இணங்கிக்கொண்டார்.

இச் சந்திப்பைத் தொடர்ந்து கொழும்பின் பிரபலமான நிறுவனமான Hsenid இல் பணிபுரிந்து கொண்டிருந்த நிரோஜன் தன் பதவியைத் துறந்துவிட்டு பிரசாந்துடன் சேர்ந்து தனது கனவுப் பயணத்தில் காலடி எடுத்து வைத்தார். வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை, வெள்ளிகளில் காலை 7 முதல் பி.ப. 3 மணிவரை, சனி-ஞாயிறு என்று வாரம் முழுவதும் முழுநேரமாக இருவரும் உழைத்தனர். சமைப்பதற்கோ உடை அலங்காரத்திற்கோ இருவருக்கும் நேரமில்லை. வெள்ளவத்தை கடைகளே அவர்களுக்கு உணவளித்தன. Busseat.lk முகிழ்த்தது. அதில் இணைந்து கொள்ளுமாறு கொழும்பிலுள்ள தனியார் சொகுசு வாகன உரிமையாளர்களிடம் வேண்டிக்கொண்டனர். அவ்வப்போது சினிமாவுக்கும் அழைத்துப்போவது வழக்கமாகியது. மே 2015 இல் Busseat.lk இற்கான மென்பொருள் தயாரிப்பு ஆரம்பமாகியது. ஐந்தே மாதங்களின் பின்னர் அதே வருடம் ஆகஸ்ட்டில் Busseat.lk தனது சேவைகளை ஆரம்பித்தது.

தனது மொறட்டுவ பல்கலைக்கழகத் தோழர்கள் நவநாகரீக ஆடைகளை அணிந்துகொண்டு குளிரூட்டப்பட்ட கொழும்புக் கோபுர அறைகளில் பணிபுரியும்போது தான் மட்டும் வியர்வையில் தோய்ந்து முதலாளிகளின் படிகளில் ஏறி இறங்குவதைப் பற்றி பிரசாந்த் முகச்சுழிப்போடு கூறிக்கொள்வார். பஸ் முதலாளிகளைத் தமது சேவையில் இணைத்துக்கொள்வது ஏறத்தாழ இயலாமலேயே இருந்தது. பொதுவாக தொழில்நுட்ப அறிவற்றவர்களாக இருந்த அவர்கள் அந்நியமாக இருந்த இச்சேவையை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். இலங்கையில் இருந்த 20 பஸ் நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக மறுப்புத் தெரிவித்துவிட்டன. அதன் பின்னர நோர்வேயிலிருந்து இலங்கையில் சொகுசு வாகனச்சேவை ஒன்றை நடத்திக்கொண்டிருந்த தமிழர் ஒருவரை அணுகினார்கள். ஆரம்பத்தில் தன்னிடமுள்ள ஒவ்வொரு வாகனத்திலும் நான்கு ஆசனங்களை அவர் Busseat.lk இற்கு வழங்கினார். இதைப் பார்த்த இதர முதலாளிகள் பலரும் படிப்படியாக Busseat.lk இற்குப் படையெடுத்தனர். இவர்களது வரவுடன் Busseat.lk இன் மென்பொருள் அபிவிருத்தியும் வளர்ச்சியடைந்தது. வாகனச் சேவைகளின் பாதைகளையும் நேர-கால அட்டவணைகளையும் செவ்வனே நிர்வகிக்க Busseat.lk இன் மென்பொருள் அவர்களுக்கு மிகவும் உதவியது. பயணிகளும் முகவர்களும் ஆசனங்களை முற்கூட்டியே பதிவுசெய்ய Busseat.lk இன் சேவை உதவியது.

குறைந்தபட்ச சாத்தியப் பண்டம் (Minimum Viable Product – MVP)

தலைப்பு குழப்பமாக இருந்தாலும் கருத்து இதுதான். ஒரு பண்டத்தை – இவ்விடயத்தில் ஆசன ஒதுக்கீடு – தெரிவு செய்யும்போது அத் தேர்வு முறையை எது இலகுவாக ஆக்குகிறதோ அப்பண்டத்தையே மக்கள் விரும்புவார்கள். இப்படியான அணுமுகுறையுடனேயே Busseat.lk தனது சேவைய ஆரம்பித்தது. பூரண திருப்தி தரும் ஒன்றாக அது இல்லாவிட்டாலும் ஒப்பீட்டளவில் ஏனைய சேவைகளைவிட Busseat.lk மிகவும் தரமானதாகவும் இலகுவானதாகவும் இருந்தது. ஒரு பாவனையாளர் தனது வாகன ஆசனப் பதிவுக்காக பயண முகவர்களைத் தேடி யாழ்ப்பாணத்தின் புழுதி தெளித்த வீதிகளில் அலையாமலோ அல்லது தொலைபேசிகளில் நீண்ட நேரத்தைச் செலவழிக்காமலோ பதிவுகளைச் செய்வதற்கு Busseat.lk வசதி செய்தது. நானே எனது கொழும்புப் பயணத்துக்காக தொலைபேசிகளில் தூங்கி வழிந்தும், ஆஸ்பத்திரி வீதியில் பயண முகவர் அலுவலகங்களில் ஏறி இறங்கியுமிருக்கிறேன். இப்போது Busseat.lk எனது குறைகளை நிவர்த்தி செய்திருக்கிறது. குறிப்பாகத் தமிழ் மொழிப் பாவனையில் இடர்படும் எனக்கு, மனிதத் தொடர்பாடல்களே அவசியமில்லாது எனது காரியங்களைப் பூர்த்தி செய்ய இச்சேவை உதவுகிறது.

பூரண திருப்தியைத் தராதபோதும் அத்தியாவசியத் தேவைகளை வழங்கக்கூடிய ‘குறைந்த சாத்தியப் பண்டமாக’ அறிமுகப்படுத்தப்பட்ட Busseat.lk பயணிகளின் (பயண) அனுபத்தை அறிந்துகொள்வதையே தனது முதல் குறியாகக் கொண்டிருந்தது. பிரயாணிகள் தமது பயணத் தேவைகளை இலகுவாகப் பதிவு செய்துகொள்வதை அது இலகுவாக்கியது. பதிவுகளைப் பெற்றதும் பின்னணியில் அத் தகவல்களைக் கையாள்வது முதல் பயணிகளுக்கு அவற்றை மின்னஞ்சல் மூலம் அறிவிப்பது வரை எல்லாமே மனிதர்களாலேயே செய்யப்பட்டது.

வருடங்கள் நகர, பயணிகளின் அனுபவங்களைக் கொண்டு Busseat.lk மேலும் வளர்ச்சியடைந்தது. விமானப் பயணச்சீட்டுகளைப் பதிவுசெய்யும் தரத்துக்கு அது இப்போது வளர்ந்திருக்கிறது. வாகனத்தின் பயண இருக்கைகளைக்கூட ஒரு பயணி தற்போது தேர்வுசெய்துகொள்ளலாம். ஒரு பெண் பயணி தனக்குப் பக்கத்தில் இன்னுமொரு பெண்ணே இருக்கவேண்டுமெனத் தீர்மானித்தால் அதையும்கூட பதிவின்போது தெரிவு செய்யமுடியும். நாட்டு நடப்புகளை விடுப்புப் பார்க்க விரும்பும் ஒருவர் யன்னலோரமாக ஆசனங்களைத் தெரிவு செய்துகொள்ளவும் வசதியுண்டு. குடும்ப உறவினர் எல்லோரும் அருகருகேயோ, விருப்பமில்லாவிட்டால் மிகவும் தூரத்திலேயோ தமது ஆசனங்களைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

2015 இல் Busseat.lk நிறுவனத்தை ஆரம்பித்ததுமே பிரசாந்தும் நிரோஜனும் ஒரு மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பிக்க முடிவுசெய்தனர். ஆனால் அதைச் சாத்தியமாக்குமளவிற்குப் போதுமான திட்டங்கள் அவர்கள் கைவசம் இருக்கவில்லை. இதனால் பிரசாந்த் கொழும்பில் தங்கி Busseat.lk அலுவல்களைக் கவனிக்க, 2017 இல் நிரோஜன் யாழ்ப்பாணம் திரும்பினார். யாழ்ப்பாணத்தில் அவர் ஆரோக்யா லைஃப் சிஸ்டம்ஸ் (Arogya Life Systems) என்னும் நிறுவனத்தில் முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) இணைந்து கொண்டார். YGC நிகழ்வுகளின் பெறுபேறாக உருவாகிய இன்னுமொரு தொழில்நுட்ப நிறுவனமே ‘ஆரோக்யா’. முன்னணி மருத்துவமனைகளான Durdans, Hemas உட்பட இலங்கையின் பல மருத்துவமனைகளின் செயற்பாடுகளை நிர்வகிக்கும் மென்பொருளைத் தயாரித்தது இந் நிறுவனமே.

3AxisLabs இன் ஆரம்பம்

2021 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட கோவிட் நகர்முடக்கம் Busseat.lk இன் செயற்பாட்டுக்கு மிகவும் பேராபத்தாக அமைந்தது. மக்களின் நகர்வுகளுக்கு விதிக்கப்பட்ட நீண்டகாலப் பயணத்தடையால் Busseat.lk இன் ஆசனப்பதிவுகள் ஏறத்தாழ இல்லாமலேயே போய்விட்டது. 2019 இல் பிரசாந்தும் நிரோஜனும் மீண்டும் இணைந்து இன்னுமொரு தொழில்நுட்ப நிறுவனத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டார்கள். அதுவே 3AxisLabs. ஆரோக்யாவின் சகோதர நிறுவனமான அரிமாவில் பணியாற்றிக்கொண்டிருந்த தனது நண்பரான சாஹித்யன் விக்னேஸ்வரனையும் நிரோஜன் தம்முடன் இணைத்துக்கொண்டார். 2019 முதல் 2021 வரை இம் மூவரும் தமது திட்டத்தைப் பூரணப்படுத்தினார்கள். பிரசாந்த், நிரோஜன், சாஹித்யன் ஆகிய மூவரையும் இணை ஸ்தாபகர்களாகக் கொண்டு, ஏப்ரல் 2021 இல் 3AxisLabs பிறந்தது. ஒரு வருடத்தின் பின்னர், ஏப்ரல் 2022 இல் அது மேலும் 9 பணியாளர்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது.

3axislabs

ஒரு நிறுவனத்தைத் தனியாக ஆரம்பிப்பதென்பது இலகுவானதொரு காரியமல்ல என்கிறார் பிரசாந்த். மாறுபட்ட செயற்திறன்களைக் கொண்டுள்ளவர்களைப் பங்காளிகளாகக் கொண்டிருப்பது எப்போதுமே நல்லது. ஒவ்வொருவரும் தத்தமது திறன்களில் நம்பிக்கையோடு செயற்படவும் மற்றவர்கள் தமது துறைகளிலும் அதே போன்றே செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நிறுவனத்தை முன்கொண்டு நகர்த்தவும் இது உதவும் என்பது பிரசாந்தின் நம்பிக்கை. 3AxisLabs நிறுவனத்தில் பிரசாந்த் பண்ட விருத்தி (product development), விற்பனை (sales), திட்ட நிர்வாகம் (project management), வாடிக்கையாளர், முதலீட்டாளர் தொடர்புகள் (customer and investor relations) ஆகிய விடயங்களைக் கையாள்கிறார். தொழில்நுட்ப முனைவராக சாஹித்யன் செயலிகள் உருவாக்கம் (mobile applications), முன்னணி (front end), பின்னணி (back end) இயங்குதளங்கள் மற்றும் சிஸ்டம் கட்டுமானம் (system architecture) ஆகிய விடயங்களைக் கையாள்கிறார். முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாக (Chief Technology Officer) நிரோஜன், நிறுவனத்தின் தொழில்நுட்ப வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதில் செலவிடுகிறார்.

சர்வதேச வாடிக்கையாளர்கள், கவர்ச்சியான பெயர்

3AxisLabs நிறுவனத்திற்கு அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், டென்மார்க், பிரித்தானியா போன்ற நாடுகளில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் புலம்பெயர் தமிழர்களின் சிபாரிசுகள் மூலமாகவே வருகிறார்கள். லிங்க்ட் இன் (linked-in) போன்ற சமூக ஊடகத் தளங்களும் பேருதவி புரிகின்றன. பிரித்தானியாவிலுள்ள நிறுவனமொன்று 2017 இல் இந்தியாவில் தனது பண்டமொன்றைத் தயாரித்தது. ஆனால் வேறு துறைகளுக்கு மாறிக்கொண்டுவிட்டதனாலோ என்னவோ அதன் இந்தியத் தயாரிப்பாளர் பின்னர் காணாமற் போய்விட்டார். மிகவும் தெளிவற்ற மூலாதாரத் தகவல்களைக் கொண்ட இத் திட்டத்தை 3AxisLabs தத்தெடுத்துக்கொண்டது மட்டுமல்லாது அதை மேலும் மெருகூட்டியும் கொடுத்தது. புதிய பண்டங்களைத் தயாரிப்பதில் மட்டுமல்ல ஏற்கனவே இயங்குநிலையில் இருக்கும் பண்டங்களையும் புதிய தளங்களில் (platforms) இயங்குவதற்கேற்றவாறு மாற்றியமைத்துக் கொடுப்பதிலும் 3AxisLabs மிகத் திறமையாகச் செயற்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாது சிங்கப்பூரிலுள்ள ஒரு வாடிக்கையாளரின் மென்பொருள் அபிவிருத்திக் குழுவில் இணைந்து பணியாற்றுவதற்கென தனது பணியாளர்களையும் இணைத்துக்கொண்டுள்ளது.

3axislabs team

எப்படியான தொழில்நுட்பத் தளங்களில் மென்பொருள்களைத் தயாரிக்கிறீர்கள் என நான் பிரசாந்திடம் கேட்டேன். நான் அறிந்தே இராத நீண்ட பட்டியலோடு வந்தார். இங்கு எழுதமுடியாத அளவுக்கு நீண்டது அது. Clojure, Quarkus, Flutter, MongoDB, Neo4j, Hadoop, Kubernetes, JanusGraph ஆகியன அவற்றில் சில. எனது மென்பொருள் பணிக்காலத்தில் எனக்குத் தெரிந்த மென்பொருள் மொழி BASIC மட்டுமே. தொழில்நுட்பவியலாளர்கள் இப்போது தமது கற்பனைகளை எங்கெங்கெல்லாமோ கொண்டுபோய் விட்டார்கள்.

3AxisLabs இணை ஸ்தாபகர்கள் எது தேவையோ அதைச் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள். ஒரு பணி அதன் உயர் தரத்துக்கேற்பச் செய்து முடிக்கப்படாவிடில் மூவரில் ஒருவர் அவரது துறைக்கேற்ப வழிகாட்டியாக இயங்கி அப்பணியைத் திறம்பட முடித்துவிடுவார். அல்லாது போகில் அவரே அப்பணியை எடுத்து எதிர்பார்த்த தரத்திற்கு அதைச் செய்து முடித்துவிடுவார். மென்பொருள் நிறுவனமாயிருந்தாலென்ன வெதுப்பகமாயிருந்தாலென்ன, மெழுகுதிரித் தொழிற்சாலையாகவிருந்தாலென்ன சிறு நிறுவனங்களின் ஸ்தாபகர்கள் தேவையானால் தாமே களத்தில் இறங்கித் தமது பண்டத்தின் தரத்தைச் சீர்செய்து கொள்ளவேண்டும்.

இப்போது இல்லாவிடில் எப்போது?

தனது பெரும்பாலான வாடிக்கையாளர்களை 3AxisLabs புலம்பெயர் தமிழர்கள் மூலமாகவே பெற்றுக்கொள்கிறது. வடக்கின் மீள்நிர்மாணத்தைச் செய்வதற்குப் புலம்பெயர் தமிழர்களால் செய்யக்கூடிய அதியுயர் உதவி இதுவாகவே இருக்கும். பண முதலீடுகள் மட்டுமல்ல வெளிநாட்டு நிறுவனங்களுடனான இணைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக வியாபார வலையமைப்பை விருத்திசெய்வதும் எமது மக்களுக்கான உதவிதான்.

பிரசாந்த், நிரோஜன், சாஹித்யன் ஆகியோர் உற்சாகத்துடனும், இலட்சியத்துடனும் தமது இளைய நிறுவனத்தைக் கட்டியெழுப்பி வருகிறார்கள். மென்பொருளுக்கும், தகவல் தொழில்நுட்பத்துக்கும் உலகம் தேடும் சிறந்த இடமாக யாழ்ப்பாணம் இன்னும் உருவாகவில்லை. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், அனுபவம் மிக்க பணியாளர்களைத் தேடி தனியார் நிறுவனங்கள் ஓடி வருவதற்கும் தக்க வகையில் பிரபலமானதொரு யாழ்ப்பாணத்தை உருவாக்க வேண்டும். ஆரோக்யா, 3AxisLabs, Yarl IT Hub, Yarl Geek Challenge உட்பட்ட நிறுவனங்களும் அமைப்புகளும் இப்பணியைச் செய்வதற்குப் பாடுபடுகின்றன. சமகால பொருளாதாரச் சீர்குலைவு நாட்டைப் பாதித்திருக்கும்போது இப்படியான நிறுவனங்களுக்கு ஆதரவு தருவதன் மூலம் நாம் அனைவருமே நன்மையைப் பெறமுடியும்.

வடக்கில் தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்க எண்ணுபவர்களும், முதலீடுகளைச் செய்ய விரும்புபவர்களும் ‘சரியான தருணத்துக்காக’ தாம் எதிர் பார்த்திருப்பதாகக் கூறுகிறார்கள். இப்படியாகப் பலர் எதிர்பார்த்து எதிர்பார்த்து சரியான தருணங்களை இழந்துவிட்டிருக்கிறார்கள். ‘முழுநிறைவு முன்னேற்றத்தின் எதிரி’ (Perfection is the enemy of Progress) என வின்ஸ்டன் சேர்ச்சில் கூறுவார். “அழகற்ற வைரம் சிப்பியை விடச் சிறந்தது” (A flawed diamond is better than a pebble) எனக் கூறுகிறார் கொன்ஃபூசியஸ்.

பிரசாந்த் சுபேந்திரனோடு தொடர்புகொள்ள விரும்புபவர்கள் prasanth@3axislabs.com என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி : மறுமொழிLanka Business Online (www.lankabusinessonline.com)

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4797 பார்வைகள்

About the Author

ஜெகன் அருளையா

இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் தனது பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக, இலங்கையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர். 2015 இல், நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்குக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)