Arts
15 நிமிட வாசிப்பு

பாரம்பரிய விவசாயமும் சூழல் சமநிலையும்

September 30, 2022 | Ezhuna

நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும்  ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரமாகவும் ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர் அமைகிறது. இலங்கையின் பாரம்பரிய வேளாண்மை முறைமையில் உள்ள சாதக – பாதகங்கள், அதிலுள்ள போதாமைகளை நிவர்த்திக்கும் வகையில் நவீன நுட்பங்களைப் புகுத்துதல், நவீன நுட்பங்களால் உண்டாகக்கூடிய விளைவுகள், இலங்கையில் பசுமைப்புரட்சிக்காக முன்வைக்கப்படவேண்டிய விவசாயக் கொள்கைகள் என்பன பற்றி விரிவாகவும், ஆய்வுத்தளத்திலும் இந்தக்கட்டுரைத்தொடர் விபரிக்கின்றது.

அறிமுகம்

மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதன் கூட்டமாக அலைந்து திரிந்து வேட்டையாடி உண்ணுகின்ற வேடுவ நாகரிகத்தில் இருந்து நதிக்கரைகளை அண்டி நிரந்தரக் குடியேற்றங்களை அமைத்து, விவசாயம் செய்து வாழத் தொடங்கியதில் இருந்து மனித நாகரிகத்தில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் வேளாண்மை யுகமும் ஆரம்பமானது. இவ்வாறுதான், மனித நாகரிக வளர்ச்சி உலகம் முழுவதும் ஏற்பட்டது. இதனைச் சான்றாக வைத்துத் தான் நான் எனது முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன், வேடுவர் தான் இலங்கையின் விவசாயப் பூர்வீகத்தின் முன்னோடிகள் என்று, ஏனென்றால், வேடுவனாக காட்டில் மனிதன் அலைந்து திரிந்தபோது, தனியே வேட்டையாடும் நுட்பங்களை அவன் கற்கவில்லை. மேலதிகமாக, எந்த இயற்கைச் சூழலில் என்னென்ன விலங்குகள் வாழ்கின்றன, அவை எவற்றை உண்கின்றன, எந்தக் காலநிலையில் எந்த விலங்குகளின் நடமாட்டம் அதிகம், அந்தக் காலங்களில் எந்தத் தாவரங்கள் வளர்கின்றன, அந்தத் தாவரங்களுக்கு என்ன சூழல் நிபந்தனைகள் தேவை போன்ற விடயங்களை கற்றதோடு பல இயற்கையாக வளர்ந்த தானியங்கள் மற்றும் விலங்குகள் உண்ணும் பழத்தை தானும் ருசித்து அவற்றில் தனக்குப் பிடித்த விதைகளையும் சேகரித்தான். பின்னர், நதிக்கரைகளை அண்டி கூட்டமாக வாழ்ந்தபோது, தான் வாழ்ந்த சூழலில் அத் தானியங்களையும் மற்றும் பழங்களையும் பயிரிட்டான். அந்தச் சமயத்தில் இருந்து வேடுவ யுகம் முடிந்து விவசாய யுகம் ஆரம்பித்தது. பண்டைய விவசாயம் முற்றுமுழுதாக இயற்கையை அண்டிய இயற்கைச் சூழல் விவசாயமாகக் காணப்பட்டது.

நாம் வாழும் சூழல்தொகுதி

சூழல்தொகுதி (ecosystem) என்பது இப்பிரபஞ்சத்தின் ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியிலுள்ள உயிரற்ற இயற்பியல் கூறுகளுடன், உயிரினங்கள் ( தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள், நுண்ணுயிர்கள், மனிதன்) ஊடுதொடர்பு முறைமையில் இடைத்தாக்கம் புரிந்து ஒருமித்து இணைந்து வாழ்கின்ற ஒரு இயற்கை அலகு ஆகும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தாங்கள் வாழும் இடத்தின் சூழலைப் பொறுத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. 1930 ஆம் ஆண்டில் ரோய் கிளஃபாம் (Roy Clapham) என்பவர், சூழலின் இயற்பியல் மற்றும் உயிரியல் கூறுகளை அவற்றிடையேயான தொடர்புகளுடன் சேர்த்து ஓரலகாகக் பயன்படுத்துவதற்காக சூழல் மண்டலம் என்பதற்குச் சரியான ecosystem என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார். சூழல் தொகுதிகளை எண்ணற்ற வழிகளில் வரையறுத்து விளக்க முடியும் என்பதுடன் எங்கெங்கெல்லாம் உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையே தொடர்பு உள்ளதோ அவற்றையும் சூழல் மண்டல அடிப்படையில் விபரிக்க முடியும்.

இப் பூமிப்பந்தில் இரண்டு மிகப் பெரிய சூழல் தொகுதிகள் காணப்படுகின்றன.

  1. நீர்ச் சூழல்தொகுதி (Aquatic Ecosystem): நீர்சார் சூழல் தொகுதி என்பது நீர்நிலைகளில் காணப்படும் ஒரு சூழல் தொகுதி ஆகும். இதில் ஒன்றில் ஒன்று, தம்முடைய சூழலிலும் தங்கியிருக்கும் பல்வேறு உயிரினங்கள் ஒருமித்து வாழ்கின்றன.
  2. நிலச் சூழல்தொகுதி (Terrestrial Ecosystem): நிலம்சார் சூழல்தொகுதி என்பது நிலத்தில் காணப்படும் சூழல் தொகுதி ஆகும். உதாரணமாக காடு சூழல்சார் தொகுதி, புல்வெளி சூழல்சார் தொகுதி மற்றும் பாலைவனம் சூழல்சார் தொகுதி போன்றனவாகும்.

இந்த ஒவ்வொரு சூழல் தொகுதியும் வெற்றிகரமாக இயங்குவதற்கு அந்த அந்தச் சூழல் தொகுதியில் காணப்படும் உயிரற்ற பௌதீகக் காரணிகளான சூரிய ஒளி/ ஆற்றல், வெப்பநிலை/ வெப்பம், வாயுக்கள், நீர்/ மழைவீழ்ச்சி/ ஈரப்பதன், மண், கனிமங்கள் போன்றன மிகப் பொருத்தமாக இருக்க வேண்டும். இவற்றை ஆதி மனிதன் மிகத்திறமையாக தெரிந்துகொண்டு இயற்கை மாற்றத்திற்கு ஏற்றவாறு பயிர்களைப் பயிரிட்டான். மனிதன் சூழலின் ஒரு கூறு மாத்திரமேயாகும் என்பதுடன் சூழலின் உயிர்வாழ்விற்கு மனிதன் இன்றியமையாத காரணி அல்ல, ஆனால் மனிதனின் நிலையான இருப்புக்கு சூழல் சமநிலை அவசியம். இதை உணர்ந்த பண்டைய மக்கள், மனிதன் இயற்கையால் ஆளப்படுகிறான் என்பதை எண்ணி வாழ்ந்தனர். ஆனால் சமூக பரிணாம வளர்ச்சியுடன், சூழல் என்பது மனித விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தக்கூடிய ஒரு சொத்தாக மாறியது. இதன் விளைவாக, உலகளாவிய ரீதியில் சூழல் மாசடைவு அதிகரித்து வருகிறது.

பண்டைய விவசாயமும் சூழல் சமநிலையும்

ஆரம்பத்தில் மனிதன் இயற்கையாக இருந்த சிறு சிறு நிலப்பரப்புக்களில் தான் வேடுவனாக இருந்தபோது சேகரித்த தானியங்களை எந்த நிலப் பண்படுத்தலை செய்யாமல் பயிரிட்டான், அதில் வெற்றியும் கண்டான். இந்த வெற்றி மேலும் பயிர் செய்வதற்கு அவனுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த, மெதுவாக புதர்கள் மற்றும் சிறு மரங்களை வெட்டி நிலத்தை துப்பரவு செய்து விஸ்தரிக்கப்பட்ட அளவில் பயிர் செய்ய ஆரம்பித்தான். உணவு கிடைத்தது, மனிதக் குடித்தொகை பெருக ஆரம்பித்தது. இப்படிச் செய்யப்பட்ட விவசாயம் முற்று முழுவதுமாக இயற்கையுடன் ஒன்றிணைந்து இயற்கை சமநிலைக்கு குந்தகம் ஏற்படாமல் நடைபெற்றது. இயற்கையைப் பாதுகாப்பதற்காக அனைவரும் இயற்கையை நேசிக்கும் முகமாக, கடவுள் நம்பிக்கையுடனும் மற்றும் சமயத்துடனும் இயற்கையை இணைத்தனர். உதாரணமாக இந்துசமய நம்பிக்கையாக “பூவுலகில் உள்ள அனைத்தும் இறைவனுடையதே” உயிருள்ள உயிரற்ற அனைத்திலும் இறைவனுடைய சக்தி வியாபித்துள்ளது, இதனால் ஒருவர் தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு மிகுதியை இறைவனுக்கு விட்டுவிட வேண்டும் என காலம் காலமாகச் சொல்லப்படுகிறது.

செவ்விந்தியர்களின் சூழல் ஒழுக்கநெறி (Environmental Ethics) எதைத் தெளிவுபடுத்துகிறது என்றால், அவர்களின் “உன்னதமான நம்பிக்கையான பூமியில் காணப்படும் ஒவ்வொரு அங்குல நிலமும் அதன் பகுதிகளும் எமது மக்களினுடைய சொத்துக்கள், சூரிய ஒளியினால் மரங்கள் மற்றும் கற்பகதருக்கள் சக்தி பெறுகின்றன. வெள்ளை மணலால் சூழப்பட்ட கடற்கரைகள், திறந்த வெளிகள், காடுகள் மற்றும் நுண்ணுயிர்கள் அனைத்தும் எமக்காக இறைவன் அருளிய வளங்கள். ஆறுகளில் பாய்ந்து செல்லும் நீர் எமது மூதாதையரின் உதிரம். ஆற்று நீரின் ஒலி எமது முன்னோர்களின் பேச்சொலி. வாசனை உள்ள மலர்கள் எமது சகோதரர்கள். வனவிலங்குகள் இல்லாத பூமியில் மனிதன் தனிமைப்பட்டு இறப்பான். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன. இயற்கையை அழித்தால் மனிதன் அழிவான்” என அவர்கள் அதிகமாக நம்பினார்கள். மற்றவர்களுக்கும் அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள்.

இந்த சமய மற்றும் பரம்பரை நம்பிக்கைக்கைகளுக்கு அமைவாக பல்வேறுவகைப்படுத்தப்பட்ட விவசாய முறைகள் தோற்றம் பெற்றன. அவையாவன

A. இயற்கை விவசாயம் (Nature Farming)

B. உயிர் இயக்கவியல் விவசாயம் (Biodynamic Farming)

C. சூழல் நேய விவசாயம் (Ecological Farming)

D. சேதன அல்லது கரிம விவசாயம் (Organic Farming)

இவை சிறு சிறு மாறுபட்ட முறைகளுடன் செய்யப்பட்டாலும், எல்லா விவசாய முறைகளினதும் பிரதான குறிக்கோள் மண், நீர், விலங்குகள், மற்றும் தாவரங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் மூலம் ,சூழல் சமநிலையைப் பேணுதல் ஆகும். மேலும் சூழல் சமநிலையை வலுப்படுத்த பின்வரும் நடவடிக்கைகளும் விவசாயத்தில் பின்பற்றப்பட்டன.

  1. கழிமுகங்கள் மற்றும் ஆற்றுப் படுக்கையை அண்டிய விவசாயம்:

ஆரம்பத்தில் அனைத்து விவசாயம் சார்ந்த மனித நாகரிகங்களும் கழிமுகங்கள், ஆற்றுப்படுக்கையை அண்டியே உருவாகின. உதாரணமாக, உலகின் மிகப் பழமையான இந்தியாவின் வடமேற்கே சிந்து ஆற்றின் கரைமருங்கு இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்குமுன் சிறந்த விவசாய நாகரிகத்தோடு விளங்கியிருந்து. பின் மண்மூடுண்ட ‘மொஹெஞ்சொ-தரோ’ ‘ஹரப்பா’ முதலிய பெரு நகரங்கள், அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டன. ஏன் அன்று வேளாண் குடிகள் நதிக்கரைகள் மற்றும் ஆற்றுப் படுக்கைகளை தேர்வு செய்து குடியேறி விவசாயம் செய்தார்கள் என்றால், ஆற்று நீர் அடித்து வரும் மண் கடலுடன் சேருமிடத்தில் (கழிமுகம்) மிக வளமான வண்டல் மண் அதிகம் காணப்பட்டமை தான். வண்டல் மண் (Alluvial Soil) என்பது மலையில் இருந்து ஓடிவரும் ஆறு, மக்கிய செடி, கொடி, தழைகளையும் பல தாதுப் பொருள்களையும் அடித்தவாறு சேதனப் பொருட்கள் ஒன்றிணைந்து உருவாகிறது. எனவே இவை வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாகவும் தழைச்சத்து (Nitrogen), மணிச்சத்து (Phosphorus), சாம்பல்சத்து (Potassium), மற்றும் இதர கனிமங்கள் உடையதாகவும் உள்ளன. இந்த மண்ணில் பயிர்கள் மிகவும் செழித்து வளர்ந்தன மற்றும் மண்ணை பண்படுத்தவேண்டிய தேவையும் இருக்கவில்லை.

2. விவசாயத்தில் உயிரியற் பல்வகைமையைப் பேணுதல்:

பல்லுயிர் பல்பயிச்செய்கை

பண்டைய காலப் பயிற்செய்கையில் இயற்கைக் காட்டுச் சூழல் தொகுதியை ஒத்த முறையே பயன்படுத்தப்பட்டது. ஒரு இயற்கைக் காட்டுச் சூழல் தொகுதியை எடுத்தோமானால் பலதரப்பட்ட உயிர்கள் பலதரப்பட்ட உயிரிகளுடன் அண்டிவாழும் நிலைமையை பார்க்கலாம். மரங்களை எடுப்போமானால், பல்வேறு உயரத்தில் மரங்கள் காணப்படும். அனைத்து மரங்களும் சூரிய ஒளி கிடைக்கக் கூடியவாறான ஒழுங்கில் அமைந்து இருக்கும். உயரமான மரங்களில் சிறிய கொடிகள் படர்ந்து இருக்கும். மரங்களின் கிளைகளில் பறவைகள், சிறு முலையூட்டிகள், இரைகவ்விகள் மற்றும் பூச்சிகள் வாழும். நிலத்தில் பெரிய தாவர உண்ணி மற்றும் ஊன் உண்ணி விலங்குகள் மற்றும் ஊர்வன வாழும். மண்ணில் பல கோடிக்கணக்கான நுண்ணங்கிகள் வாழும். காட்டினூடு ஆறுகள் ஓடும், மரத்தின் வேர்கள் மண்ணில் பல்வேறு ஆழத்தில் காணப்படும், மரங்களில் இருந்து விழும் இலைகள் மற்றும் இறந்த உயிரினங்களின் உடல் மண்ணுக்கு உரம் சேர்க்கும். இது ஒரு மூடிய சூழல் தொகுதி. இச் சூழல் தொகுதியில் அனைத்து உயிரிகளும் இயற்கையின் நியதிக்கு ஏற்ப சமநிலையாக வாழ்கின்றன. ஏதாவது ஒரு உயிரியினுடைய குடித்தொகை அபரிமிதமாக அதிகரிப்பதும் இல்லை, குறைவடைவதும் இல்லை. அனைத்து சூழல் இயற்கை வட்டங்களும் உதாரணமாக நீர்வட்டம், நிதர்சன வட்டம், காபன் வட்டம் போன்றன வரிசைக் கிரமமாக நடைபெறுகிறது.

இந்தமுறையே ஆரம்பத்தில் விவசாயத்திலும் கையாளப்பட்டது. பல பயிர்கள், பல் பயிர்ச்செய்கைக் கோலங்கள், இறந்த தாவர விலங்குக்கழிவுகளை மண்ணுக்கு இட்டு உரமூட்டுதல், பருவப் பெயர்ச்சிக்கு ஏற்றவாறான பயிர்களை உற்பத்தி செய்தல், கால்வாய்கள் மூலம் நீர்ப்பரிபாலனம், வன விலங்குகளைக் பயன்படுத்தி நிலப் பண்பாடு மற்றும் அறுவடை போன்றன நடைபெற்றன. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இயற்கைச் சமநிலை பேணப்பட்டது.

  1. விவசாயத்தில் உயிர் இயக்கவியல் சக்தியைப் (Biodynamic Forces) பயன்படுத்தல் :

உயிர் இயக்கவியல் சக்தியைப் பயன்படுத்திய விவசாயம் என்பது எமது மூதாதையர்களினால் பயன்படுத்தப்பட்ட ஒருமுறை. இந்தமுறையில் எமது வேதங்களில் சொல்லப்பட்ட பஞ்ச பூதங்களின் சக்தியை விவசாயத் தேவைகளுக்காக குறிப்பாக தாவரங்களின் உற்பத்தித்திறன் மற்றும் மண்ணின் வளமேம்பாடு ஆகியவற்றில் பயன்படுத்தினார்கள். எம்முன்னோர்கள் விவசாயக் காலநிலைகளை வகைப்படுத்த சூரியன் மற்றும் சந்திரனின் சுழற்சி மற்றும் அதன் அசைவைப் பயன்படுத்தி பயிர்நாட்காட்டியை (Cropping Calendar) உருவாக்கி அதன் மூலம் தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இந்தப் பரம்பரைப் பழக்கம் உயிர் இயக்கவியல் சக்தியைப் பயன்படுத்திய விவசாயம், விஞ்ஞான ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் 1924 ஆம் ஆண்டு ருடால்ஃப் ஸ்டெய்னர் (1861-1925) என்பவரால் வரைவிலக்கணப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விவசாயத்தின் ஒரு வடிவமாக பிரபல்யமடைந்து வருகிறது. உயிர் இயக்கவியல் விவசாயம் (Biodynamic Farming) மண் வளம், தாவர வளர்ச்சி மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவற்றை சூழலியல் ஒன்றோடொன்று தொடர்புடைய பணிகளாக கருதுகிறது மற்றும் ஆன்மீக மற்றும் மாயக் கண்ணோட்டங்களை வலியுறுத்துகிறது.

இலங்கையில் இயக்கவியல் விவசாய முறைகள்

இயக்கவியல் விவசாயம், கரிம (organic) அணுகுமுறைகளுடன் மிகவும் பொருத்தப்பாடானது. இயக்கவியல் விவசாயம் இயற்கை உரங்களின் பாவனையை வலியுறுத்துகிறது மற்றும் மண் மற்றும் தாவரங்களில் செயற்கை (செயற்கை) உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாட்டை விளக்குகிறது. இயக்கவியல் விவசாய அணுகுமுறையின் தனித்துவமான முறைகள், விலங்குகள், பயிர்கள் மற்றும் மண்ணை ஒரே அமைப்பாகக் கையாளுதல் போன்றவற்றை வலியுறுத்துவதோடு, சில ஜோதிட விதைப்பு முறைகள் மற்றும் நடவு நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக பூரணை தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் விதை விதைத்தல் அல்லது பூரணை தினத்தில் இருந்து 3-5 நாட்களின் பின்னர் நாற்று நடுதல் போன்றவற்றை முக்கியத்துவப்படுத்துகிறது. இவ்வாறு விதைப்பதனால், சந்திரனுடைய சக்தி முழுவதுமாக தாவர வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் வேரினுடைய சக்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் தாவரத்தின் உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது. இவற்றுடன், பூரணைதினம் (பூரணை தினத்தில் அறுவடை செய்யக்கூடாது), அமாவாசை (பெரிய மரங்கள் அறுவடை செய்வதால் மரம் பழுதடையாமல் தடுக்கப்படுகிறது), சதுர்த்தி மற்றும் வளர்பிறை போன்றன இயக்கவியல் விவசாயத்தில் முக்கியமாகக் கருதப்படுகின்றது. அதுமட்டுமன்றி பசுவின் கொம்புகளின் குவார்ட்ஸ் மற்றும் சாணியை நிரப்பி மண்ணில் புதைப்பதன் மூலம் “மண்ணில் உள்ள பிரபஞ்ச சக்திகளை” அறுவடை செய்வதாகக் கூறப்படும் வேளாண் விஞ்ஞானத்தை விட இறைமந்திரத்திற்கு மிகவும் ஒத்த முறைகளைப் பயன்படுத்தி இவை தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் இயற்கைசக்திகள் விவசாயத்தில் பயன்படுத்தப்படுவதினால் சூழல் சமநிலை ஏற்படுகிறது.

இலங்கையில் இயக்கவியல் விவசாயத்தை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் பண்டைய அனுபவ விவசாய முறைகளை மேம்படுத்தி இயற்கை விவசாயத்தை மற்றும் கரிம விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும் Biodynamic Association of Sri Lanka (BDASL) என்ற அமைப்பு இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது.

4. விவசாய விரிவாக்கமும் சூழல் சமநிலைக் குலைவும்

சூழல் சமநிலையைக் குறைக்கும் விவசாய நடைமுறைகள்

சூழலுக்கு இசைவான விவசாய நடைமுறைகளை எமது முன்னோர்கள் பயன்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்தார்கள். இவ்வாறு சுகாதாரமான உணவை உற்பத்தி செய்து உண்டு சந்தோசமாக வாழத்தொடங்கியபோது, மனிதக் குடித்தொகை பெருக ஆரம்பித்தது. சனத்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்றவாறு உணவு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியதோடு மட்டுமல்லாமல் மனிதன் வாழ்வதற்கான இடத்திற்காகவும் காடுகளை அழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் மனித உணவிற்காக கால்நடைகள் மற்றும் பண்ணை விலங்குகளைப் பெருக்கவேண்டிய நிலைக்கும் மனிதன் தள்ளப்பட்டான். இவ்வாறு பெருகிய மனிதக் குடித்தொகை கூட்டம் கூட்டமாக வேறு இடங்களுக்கு சென்று வாழத் தொடங்கியபோது வாழும் இடங்களில் காடுகளை அளித்து சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டார்கள். உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு பல்லுயிர் பயிர்ச்செய்கை முறையில் இருந்து ஓரினப் பயிர்செய்யும் (Mono-cropping) முறையை ஆரம்பித்தான். இதனால் ஒருசில பூச்சிகளுக்குத் தேவையான உணவு அதிகமாகக் கிடைத்தது, இதனால் பீடைக் குடித்தொகை அதிகரித்து பீடைத்தாக்கம் அதிகரித்தது. பீடைத்தாக்கத்தின் மூலம் ஏற்படும் விளைச்சல் குறைவை குறைக்க பீடைநாசினிகளைப் பாவிக்க ஆரம்பித்தான். இதன்மூலம் இயற்கை எதிரிகள் அழிவடைந்தன.

இவ்வாறு மனிதனுடைய செயற்பாடுகள் இயற்கையைச் சீண்டும் முகமாகவும் மற்றும் கைத்தொழில் புரட்சியின் மூலம் இயற்கையால் அடக்கி ஆளும் முகமாகவும் அமைய ஆரம்பித்தது. இச்செயற்பாடுகள் காலநிலை மாற்றத்துக்கு முக்கிய பங்காக விளங்கும் பச்சை வீட்டு வாயுக்களின் வெளியீட்டுக்கு வகை செய்தது. இப்பச்சை வீட்டுவாயுக்களினால் பூகோள வெப்பநிலை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் காலநிலை மாற்றத்தினையும் தோற்றுவிக்கின்றது. இக்காலநிலை மாற்றத்தினால் சூழல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. குறிப்பாக பனிப்படலம் உருகுதல், வரட்சி, சூறாவளி ஏற்படுதல், கடல் நீர் மட்டம் அதிகரித்தல், சூழல் மாசடைதல், மற்றும் பீடைத்தாக்க அதிகரிப்பு அபாய நிலை ஏற்பட்டிருக்கிறது.

மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து மனித நடவடிக்கைகளாலும், இயற்கைச் சமநிலைக் குலைவு ஏற்பட்டு விவசாய நடவடிக்கைகளிலும் மற்றும் உணவு உற்பத்தியிலும் பாரிய மறை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

உசாத்துணை:

  1. https://www.biodynamicsrilanka.org/
  2. https://agrislanka.blogspot.com/2018/03/biodynamic-preparations-vitalizers.html
  3. Ulluwishewa, Rohana. (1996). Biodynamic Agriculture and Traditional Farming Practices in Sri Lanka.

ஒலிவடிவில் கேட்க

12844 பார்வைகள்

About the Author

கந்தையா பகீரதன்

கந்தையா பகீரதன் அவர்கள் 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் விவசாய விஞ்ஞான இளமாணிப் பட்டத்தைப் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டுமுதல் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். இவர் 2012ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பிற்கான விவசாய நிறுவகத்தில் தாவர பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தனது முதுமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். பின்னர் இவரின் ஆராய்ச்சித் திறமைகளுக்காக 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பட்டப்பின் ஆராய்ச்சிக்கான புலமைப்பரிசில் மற்றும் அவுஸ்திரேலியன் முதுகலை விருதையும் (IPRS&APA) பெற்று அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்றியல் தாவர பாதுகாப்புப் பிரிவில் கலாநிதிப் பட்டத்தை 2017 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார்.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் மற்றும் விவசாய உயிரியல் துறையின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார். இவர் தனது ஆராய்ச்சி முடிவுகளை 30இற்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மாநாடுகளில் முன்னிலைப்படுத்தியதோடு மட்டுமல்லாது, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற சஞ்சிகைகளிலும் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிரசுரித்துள்ளார். இவர் எழுதிய ‘அந்நியக்களை பாதீனியம்: அடங்க மறுப்பது ஏன்? அறியாததும் புரியாததும்’ என்ற நூல் வெளிவரவுள்ளது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)