Arts
17 நிமிட வாசிப்பு

நவீன விவசாயமும் உணவுப் புரட்சியும்

February 9, 2023 | Ezhuna

நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும்  ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரமாகவும் ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர் அமைகிறது. இலங்கையின் பாரம்பரிய வேளாண்மை முறைமையில் உள்ள சாதக – பாதகங்கள், அதிலுள்ள போதாமைகளை நிவர்த்திக்கும் வகையில் நவீன நுட்பங்களைப் புகுத்துதல், நவீன நுட்பங்களால் உண்டாகக்கூடிய விளைவுகள், இலங்கையில் பசுமைப்புரட்சிக்காக முன்வைக்கப்படவேண்டிய விவசாயக் கொள்கைகள் என்பன பற்றி விரிவாகவும், ஆய்வுத்தளத்திலும் இந்தக்கட்டுரைத்தொடர் விபரிக்கின்றது.

அறிமுகம்

கடந்த பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரிய விவசாய முறைகளைப் பயன்படுத்தி வளர்ந்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சுகாதாரமான உணவை, எமது விவசாயப் பெருமக்களால் அனைத்து மக்களுக்கும் வழங்க முடிந்தது. எனினும் நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல் 18 ஆம் நூற்றாண்டில் மனிதப் பெருக்கத்தின் அசுர வளர்ச்சியானது மிகப் பயங்கரமான உணவுப் பஞ்சம், இடப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, காலநிலை மாற்றம், நாடுகளுக்கு இடையான போட்டி எனப் பல விளைவுகளை ஏற்படுத்தியது. பாரம்பரிய முறைகள் மூலமான உணவு உற்பத்தி போதுமானதாக இருக்கவில்லை என்பதே இவை அனைத்துக்கும் பிரதான காரணமாகும். இதற்கு மாற்றீடான தந்திரோபாயமாக பாரம்பரிய விவசாய முறைமைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி நவீன விவசாயத்துக்கு செல்லவேண்டியதன் கட்டாயத்தை உலகிற்கு உணர்த்தியது. இதற்கு உறுதுணையாக அந்தக்காலகட்டத்தில் ஏற்பட்ட இயந்திரத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும், விவசாயத்துறையில் மேற்கொள்ளப்பட்ட அயராத ஆராய்ச்சிகளுமே காரணம். தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளையும் விவசாய ஆராய்ச்சிகளையும் இணைத்து உணவு உற்பத்தியை பலமடங்கு அதிகரிக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானி நார்மன் போர்லாக் மெக்ஸிகோவில் செயற்படுத்திக் காட்டி பசுமைப் புரட்சியை உலகறியச் செய்து, உணவுப் புரட்சியை ஏற்படுத்திக் காட்டியதன் மூலம் இன்று பல நாடுகள் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கும் வழிசமைத்தார். இந்த உணவுப் புரட்சிக்கு கணினி, விஞ்ஞானம் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் தினமும் நிகழும் மேம்பாடுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மேலும் மேலும் நவீன உத்திகளாக விவசாயத்துறையில் உட்புகுத்தப்பட்டு நவீன விவசாயம் உலகம் முழுவதும் எவ்வாறு தொழில்நுட்ப விவசாயமாகப் பரிணமித்திருக்கிறது என்பதையே இந்த அத்தியாயம் ஆராய்கிறது.

விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள் (Modern Technologies in Agriculture)

உயர்-தொழினுட்பப்-பண்ணை-இயந்திரங்கள்

விவசாயத்தில் தொழில்நுட்பம் ஊடுருவத் தொடங்கியதில் இருந்து பல்வேறு வகையான கீழ் வரும் நவீன உபகரணங்களும் அவற்றினுடைய பல்வேறு பயன்பாடுகளும் விவசாயத்துறையில் மனித வலுவின் பயன்பாட்டையும், நேரத்தையும், மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள இயற்கை வளங்கள் வீணாவதையும், அபரிமிதமான செயற்கை விவசாய இயற்கை உள்ளீடுகளின் பாவனையைக் குறைத்து, சூழல் மாசடைதலைத் தடுத்து, உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தி, குறைந்த காலத்தில் மிகையான உணவு உற்பத்தியைப் பெற வழி சமைத்துள்ளன.

  1. நவீன பண்ணை இயந்திரங்கள் (Modern Farm Machineries):

பயிர்களை நடவும், விதைகளை விதைக்கவும், களைகளை அகற்றவும், மண்ணைப் பண்படுத்தவும் நவீன மற்றும் ஒருங்கிணைந்த அறுவடை மற்றும் நடவு இயந்திரங்களின் ஆதிக்கம் உலகம் முழுவதும் விவசாயத்தில் பெருமளவு செலவைக் குறைத்ததோடு, முன்கூட்டியே நடவு செய்வதும், சரியான நேரத்தில் அறுவடை செய்வதும், மகசூல் சரியான நேரத்திற்குள் சேமிக்கப்படுவதையும், விவசாயிகள் மிகக் குறுகிய காலத்திற்குள் பரந்த அளவிலான உணவை உற்பத்தி செய்வதையும் உறுதி செய்தது. குறிப்பாக, இந்த இயந்திரங்களின் மேம்பாட்டில் இன்று ஓட்டுநர் தேவையில்லாத ஓட்டோபைலட் டிராக்டர்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது (படம் 1).

இத்தகைய தொழில்நுட்பம் விவசாயத்தில் சிறந்த மற்றும் திறமையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கிறது. எடுத்துக்காட்டாக, தன்னியக்க டிராக்டர்கள் மற்றும் தெளிப்பான்கள் கண்காணிப்பு அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளதனால், அவை மனிதனால் விடப்படக்கூடிய பிழையை நீக்குகின்றன மற்றும் இறுதியில் எரிபொருள் மற்றும் இதர வளங்களைச் சேமிக்கின்றன.

  1. Global Information System (GIS) மென்பொருள் மற்றும் Global Positioning System (GPS) விவசாயம்:

GIS மென்பொருள் விவசாய நிலங்களின் வெப்பநிலை, மழைவீழ்ச்சி, பயிர் விளைச்சல், மண்ணின் வகை மற்றும் பலவற்றை வரைபடமாக்க அனுமதிக்கிறது. இந்தத் தரவுகள் பண்ணையாளர்களுக்கும், பண்ணைகளை வாங்க முனைபவர்களுக்கும் அல்லது பண்ணையில் முதலீடு செய்ய முனைபவர்களுக்கும் மற்றும் வணிக உரிமையாளர்களுக்கும் பண்ணையின் கடந்தகால உற்பத்தி மற்றும் விளைதிறன் நிலைமைகளைப் படிப்பதன் மூலம் எதிர்காலத்தைத் திட்டமிடவும் உதவும். மேலும் GPS உடன் இணைக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பங்கள் தன்னியக்க டிராக்டர்கள், விதைகள் மற்றும் அறுவடை இயந்திரங்களை தூர இடங்களில் இருந்து இயக்கவும் மற்றும் ஒருங்கிணைத்து ஒரு துல்லியமான உத்தியைப் பின்பற்றி வயல்களில் வேலை செய்யவும் வழிகாட்டுகின்றன. GIS மென்பொருள் விவசாய அமைப்பில் ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி பயிரின் நிலைமை (உயரம், இலைகளின் நிறம்), உயிரிகள் (பீடைகள், நன்மை பயப்பவை, etc), களைகளின் இருப்பு, நிலப்பரப்பு மற்றும் வானிலை ஆகியவற்றை வான்வழி மதிப்பீடு செய்து பண்ணையாளர் அல்லது சேவை வழங்குநர் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உதவுகிறது.

  1. மண் மற்றும் நீர் உணரிகள் (Soil and Water Sensors):
செயற்கை-மண்-மற்றும்-நீர்-உணரிகள்

உயிரிகள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பார்ப்பதற்கும், சூழல் மாற்றங்களை அறிவதற்கும் தங்களிடம் உள்ள புலன்களைப் பயன்படுத்துகின்றன. மனிதர்களும் இவ்வாறு வரையறுக்கப்பட்ட உணர்திறன் மிக்க புலன் அங்கங்களை விவசாயத்திலும் சில முடிவுகளை எடுக்கப் பயன்படுத்தினார்கள். ஆனால் மண்ணில் உள்ள போசணை அளவுகளை மற்றும் பயிரில் உள்ள போசணை அளவுகளை பரிசோதனை செய்ய முடியாமல் அல்லது உடனடியாக அறிய முடியாது தடுமாறினார்கள். ஆனால் இன்று விஞ்ஞான வளர்ச்சி தந்த செயற்கை உணரிகளால் (ரோபோடிக் சென்சார்கள்) (படம் 2), நாம் பார்ப்பதற்கு அப்பால் உள்ள தரவையும் வழங்குகின்றன. மண்வெப்பநிலை, மண்ணின் அமில காரத்தன்மை (pH), காற்றின் மற்றும் மண்ணின் ஈரப்பதம், தாவர ஆரோக்கியம் மற்றும் பூச்சி அழுத்தம் போன்ற அனைத்து நிலைகளையும் செயற்கை உணரிகளால் கண்காணித்து தரவுகளை உடனடியாக வழங்க முடியும். இன்று தொழில்நுட்ப மேம்பாட்டில் இயங்கும் பண்ணைகள் செயற்கை உணரிகள், உணரிகள் பொருத்திய ரோபோக்களைப் பயன்படுத்தப்படும்போது மனிதப் பிழையைக் குறைக்கலாம் மற்றும் வேலை நேரத்தை மிகவும் திறமையாக நிர்வகிக்கலாம். இந்த உணரிகள் மூலம் பெறப்படும் தகவல்கள் துல்லியமானவை மட்டுமல்ல, விவசாயிகளுக்கு விரைவாகவும் தொலைதூரத்திலும் தெரிவிக்கப்படுகின்றன. கணினிமயமாக்கப்பட்ட உணரிகளால் தரவுகளினை ஆராய்ந்து தேவையான செயற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள முடியும். உதாரணமாக, மண்ணின் ஈரப்பதனை நிர்வகிக்கும் உணரிகள் மண்ணின் நீர் குறையும் போது கணினிக்கு அறிவித்து நீரைத் தேவையான அளவு பயிருக்கு இறைக்கின்றன. உணரிகள் வயல்களின் நிகழ்நேர நிலைமைகளின் அடிப்படையில் பயிர்களுக்கான பல்வேறு விளைவுகளை துல்லியமாக கணிக்கும் விவசாய வழிமுறையை உருவாக்கி விவசாயிகளுக்கு பயிர் இழப்புகளைத் தடுக்கவும், லாபத்தை அதிகரிக்கவும், திட்டமிடவும், விவசாய முறைமைகளை மாற்றியமைக்கவும் உதவும்.

  1. செயற்கைக்கோள் புறத்தோற்ற படத் தொழில்நுட்பம் (Satellite Imaging and Phenotyping):

செயற்கைக்கோள்கள் பல்வேறுபட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, இவற்றில் ஒன்று, செயற்கைக்கோள்களை விவசாயத் தேவைகளுக்காகப் பயன்படுத்துதல். நவீன செயற்கைக்கோள்கள் விவசாய நிலங்களில் வளரும் பயிர்களின் துல்லியமான படங்களை விவசாயிகளுக்கு அனுப்பி, விவசாயிகள் அவற்றை பொருத்தமான நிறமாலைக் குறியீடுகளிலிருந்து தரவுகளை இணைக்க அனுமதிக்கின்றன.

விவசாயத்தில் நான்கு முக்கிய நிறமாலைக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

  • Normalized Difference Vegetation Index (NDVI) [தாவரங்களின் இயல்பாக்கப்பட்ட வேறுபாட்டுக் குறியீடு]
  • Normalized Difference RedEdge (NDRE) [இயல்பாக்கப்பட்ட வேறுபாட்டு RedEdge]
  • Canopy Chlorophyll Content Index (CCCI) [விதான நிறப்பொருள் உள்ளடக்க அட்டவணை]
  • Modified Soil-Adjusted Vegetation Index (MSAVI) மாற்றியமைக்கப்பட்ட மண்-சரிசெய்யப்பட்ட தாவர அட்டவணை]
செயற்கைக்கோள்-தாவரப்-புறத்தோற்ற-அமைப்புப்-படத்-தொழினுட்பம்

இதில் முதல் மூன்று நிறமாலைகளையும் பயன்படுத்தி பயிர்களின் நிறப்பொருள் அளவை ஆய்வு செய்து உரக் குறைபாட்டினால் (குறிப்பாக நைதரசன்) பயிர்கள் பாதிப்படையாமல் விவசாயிக்கு துல்லியமான உரங்களைத் தெளிக்க/வழங்க அனுமதிக்கும். விதைகள் விதைப்புச் செய்து அல்லது நாற்றுக்கள் இயந்திரங்கள் மூலம் நடவு செய்த தரைகளில் பயிர்கள் வளராத அல்லது பயிர்கள் பட்ட இடங்களைக் கண்டறிய MSAVI பயன்படுத்தப்பட்டு மேலதிக விதைப்புகளைச் செய்ய உதவுகிறது. இவற்றின் மூலம் மிகக் குறைந்த மனிதவலுவுடன் விவசாயி தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். மேலும் ஆளில்லா விமானங்கள் எடுக்கும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் தாவர நோயினால் அல்லது பீடையினால் பாதிக்கப்பட்ட இடங்களை இனம் கண்கொண்டு அந்தப்பகுதிகளுக்கு மாத்திரம் தெளிக்கும் டிரோன் மூலம் தெரிவு செய்த பீடை நாசினிகளைத் தெளிப்பதன் (Intelligent spray) மூலம் செலவு குறைவடைவதோடு சுற்றுப் புறச் சூழல் மாசடைதலும் தவிர்க்கப்படும்.

  1. உட்புற விவசாயம் (Indoor Farming) :

உட்புற விவசாயம் என்பது ஒரு மூடிய மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பயிர் செய்வதைக் குறிக்கிறது. செயற்கை வளர்ச்சி விளக்குகள் உட்புற இடத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன, இது வளரும் செயல்முறையின் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது. நகர்ப்புற உட்புற வீட்டு விவசாயம் மிகவும் பிரபலமாகி வருகிறது, இது சில பயிர்களை வளர்ப்பவர்களுக்கு வெளியில் உள்ள வானிலையைப் பொருட்படுத்தாமல் ஆண்டு முழுவதும் வளர வழி சமைக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒளி-காலும் இருவாயிகளைக் கொண்ட எல்.இ.டி மின்குமிழ்கள் மூலம் மலிவான மற்றும் சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட நவீன விவசாய தொழில்நுட்பக் கட்டமைப்புகள் மூலம் பயிர் உற்பத்தியை எளிதாக்கியுள்ளன (படம் 4).

இதைத் தவிர சிறிதளவு இடம் கிடைக்கக் கூடிய இடங்களில் குறிப்பாக நகர்ப்புற மொட்டை மாடிகளில் தானியங்கி வலை இல்லங்கள் (Automated Net House) அமைத்து மண் இந்திய விவசாயம் மூலம் அல்லது சாடி விவசாயம் மூலம் மிகக் குறைந்த மனித வலுவுடன் பீடைகளின் தாக்கம் இல்லாத மரக்கறிகள் மற்றும் பழங்களை அதிக விளைச்சலுடன் அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும்.

  1. செங்குத்து விவசாயம் (Vertical Farming)
செங்குத்து-விவசாய-முறைகள்

செங்குத்து விவசாயம் என்பது செங்குத்தாக உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில் பயிர்களை வளர்ப்பதைக் குறிக்கிறது. பயிர்களை செங்குத்தாக வளர்ப்பதன் மூலம், விவசாயிக்கு வழக்கமான வரிசை விவசாயத்தை விட குறைவான நிலமே தேவைப்படுகிறது. இந்த நுட்பம் முதன்மையாக நகர்ப்புற அமைப்புகளில் பயன்படுத்தப்பட்டாலும், உற்பத்தியை அதிகரிக்க விரும்பும் எவரும் செங்குத்தாக வளர்வதன் மூலம் பயனடையலாம். செங்குத்து விவசாய நுட்பங்களில் மண்ணின் பாரம்பரிய பயன்பாடு, ஊட்டச்சத்து – அடர்ந்த நீரைப் பயன்படுத்தும் ஹைட்ரோபோனிக் நுட்பங்கள் மற்றும் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை தாவர வேர்களில் மட்டுமே தெளிக்கும் ஏரோபோனிக் நுட்பங்கள் ஆகிய இரண்டும் அடங்கும். பாரம்பரிய விவசாயத்தை விட செங்குத்து விவசாயத்திற்கு பொதுவாக 70 சதவீதம் குறைவான தண்ணீர் தேவைப்படுகிறது. செங்குத்து விவசாயத்திற்கான தொழிலாளர் தேவைகள் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும், மேலும் சில செங்குத்து பண்ணைகள் தொழிலாளர் தேவைகளை இன்னும் குறைக்க ரோபோ நடவு மற்றும் அறுவடையை செயல்படுத்துகின்றன.

  1. ரேடியோ அதிர்வெண் அடையாளத் தொழில்நுட்பத்துடன் (Radio Frequency Identification [RFID Technology] சந்தைப்படுத்தல்:

’பார் கோட்’ தொழில்நுட்பம் என்பது விவசாயத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல. நவீன விவசாயத்தில் ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தை (RFID) இணைப்பது பயிர்க் கண்காணிப்பை மேம்படுத்தி இலகுவாக கலப்படம் இல்லாமல் சந்தைப்படுத்தலாம் என்று விவசாயிகள் கண்டறிந்துள்ளனர். RFID என்பது ’பார்கோட்’ போன்றது. ஆனால் பல அடி தூரத்தில் இருந்தும், மண்ணின் வழியாகவும் ஸ்கான் செய்ய முடியும். RFID குறிச்சொற்களை 2 KB வரையிலான தரவுகளுடன் நிரலாக்க முடியும், பயிரின் பெயர், இனம், இடம் நடவு செய்த திகதி மற்றும் பயன்படுத்தப்பட்ட உள்ளீடுகள் ஆகியவற்றை சுட்டி இடுவதற்கு (Labelling) அவற்றை எளிதாக்குகிறது. RFID பண்ணைப் பொருட்கள் சந்தைக்கு அனுப்பப்படும்போது அவற்றைக் கண்காணிப்பதை எளிதாக்கும். ஒரு எளிய ஸ்கேன் மூலம் தயாரிப்பின் அத்தனை விபரத்தையும் வெளிப்படுத்தும். RFID தொழில்நுட்பம் தயாரிப்பில் தரவைப் பாதுகாப்பாகச் சேமிப்பதன் மூலம் மனிதப் பிழையைக் குறைக்கலாம். RFID தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் போது, சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் உணவுப் பொருட்களின் உண்மைத் தரவுகளை அறிந்து நம்பிக்கையுடன் வாங்க முடியும்.

இவ்வாறாக வளர்ந்துவரும் நவீன தொழில்நுட்பங்களை தினம் தினம் விவசாயத்தில் புகுத்தி பசுமைக்கு புதுமை சேர்த்து உணவு உற்பத்தியில் பல நாடுகள் அதிக லாபத்தை ஈட்டிவருவதோடு, சிறிய நிலப்பரப்பில் இருந்து பன்மடங்கு விளைச்சலையும் பெறுகின்றன. இதற்கு உதாரணமாக மிகச் சிறிய நாடுகளாக இருக்கின்ற இஸ்ரேல், நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்றவற்றைக் குறிப்பிடலாம். இருந்தாலும் இன்று உலக வல்லரசுகளாக தம்மை காட்டிக் கொள்ள போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற நாடுகள் இவற்றை மிகப் பரந்த அளவில் பயன்படுத்தி தமது நாட்டில் தன்னிறைவு அடைந்தது மட்டுமல்லாமல் உலக மக்களுக்குதத் தேவையான உணவின் பெரும் பகுதியை தாமே உற்பத்திசெய்து ஏற்றுமதி செய்து பணக்கார நாடுகளாக தொடர்ந்து வலம் வருகின்றன. இவற்றில் அபரிமிதமான உணவு உற்பத்தியில் ஈடுபடுகின்ற முதல் ஐந்து நாடுகளின் உணவு உற்பத்தித் தரங்கள் கீழுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.

தொழில் நுட்ப விவசாயத்தினூடு உணவு உற்பத்தியில் உலகை ஆளும் ஐந்து நாடுகளும் அவற்றின் உற்பத்திச் சிறப்பு அம்சங்களும்

இந்த நாடுகளைப் போல் நமது நாடும் விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை கொடுத்து உணவுத் தேவைக்காக மற்ற நாடுகளிடம் கையேந்தாது, விவசாயத்துறை சார் நிபுணர்களின் ஆலோசனையை செவிமடுத்து, அரசியல் தலையீடுகளையும் ஊழலையும் களைந்து தற்சார்பு நவீன விவசாயத்தின் மூலம் மற்ற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் உணவு உற்பத்தியைப் பெருக்கவேண்டும் என்பதே விவசாயத்தை நேசிக்கும் அனைவரினதும் விருப்பம்.

உசாத்துணை

  1. masschallenge.org/articles/agriculture-innovation
  2. www.farmmanagement.pro/modern-agricultural-technology-adoption-and-its-importance
  3. theenterpriseworld.com/modern-agriculture-technology
  4. btcbank.bank/about/agriculture-technology-in-modern-farming
  5. www.plugandplaytechcenter.com/resources/new-agriculture-technology-modern-farming/
  6. onetext.org/index.php/admin/OneText/contents_view/tm/Articles/232
  7. www.bookmycrop.com/blog-details/top-10-countries-for-agriculture-production-in-2022

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

20033 பார்வைகள்

About the Author

கந்தையா பகீரதன்

கந்தையா பகீரதன் அவர்கள் 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் விவசாய விஞ்ஞான இளமாணிப் பட்டத்தைப் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டுமுதல் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். இவர் 2012ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பிற்கான விவசாய நிறுவகத்தில் தாவர பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தனது முதுமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். பின்னர் இவரின் ஆராய்ச்சித் திறமைகளுக்காக 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பட்டப்பின் ஆராய்ச்சிக்கான புலமைப்பரிசில் மற்றும் அவுஸ்திரேலியன் முதுகலை விருதையும் (IPRS&APA) பெற்று அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்றியல் தாவர பாதுகாப்புப் பிரிவில் கலாநிதிப் பட்டத்தை 2017 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார்.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் மற்றும் விவசாய உயிரியல் துறையின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார். இவர் தனது ஆராய்ச்சி முடிவுகளை 30இற்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மாநாடுகளில் முன்னிலைப்படுத்தியதோடு மட்டுமல்லாது, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற சஞ்சிகைகளிலும் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிரசுரித்துள்ளார். இவர் எழுதிய ‘அந்நியக்களை பாதீனியம்: அடங்க மறுப்பது ஏன்? அறியாததும் புரியாததும்’ என்ற நூல் வெளிவரவுள்ளது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)