Arts
10 நிமிட வாசிப்பு

குயர் மக்களும் மதங்களும்

March 31, 2023 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாகாணத்தில் குயர் மக்களுக்கான உரிமைக் குரல்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணமுடிகிறது. ‘வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல்’ என்ற இத் தொடரானது, வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல், குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதற்குக் கலாசாரம் சமய அல்லது மத கட்டமைப்புக்களின் பங்கு, வடபுலத்தில் குயர் அரசியல், குயர் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய குயர் செயற்பாட்டாளர்களின் சமத்துவம் நோக்கிய முன்னெடுப்புக்கள், கல்வியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட  மையக்கருத்து வெளிப்பாட்டளர்கள் குயர் அரசியல் அல்லது அதுசார்ந்த விடயங்களில் பேணும் மௌனிப்பு என்பன பற்றி பேசவிழைகின்றது.

இலங்கை, வேறுபட்ட மதங்களையும் தந்தையாதிக்கக் கருத்தியல்களையும் தன்னகத்தே கொண்டு கட்டமைக்கப்பட்ட பாரம்பரியமான பண்பாடுகளைப் பின்பற்றக்கூடிய பெரும்பாலான மக்களைக் கொண்ட ஒரு நாடு. இது பௌத்தர்கள் மற்றும் சைவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாக இருக்கிறது. வடபுலத்தில் இருக்கக்கூடிய மக்கள் அதிகமாக சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். இங்கு தென்னிந்திய இந்துப் பண்பாட்டின் செல்வாக்குகளை அதிகம் காணலாம்.

“தன்பாலீர்ப்பு இயற்கைக்கு மாறானது. அது எங்களுடைய சமயத்துக்கும் கலாசாரத்திற்கும் எதிரானது. மனுதர்ம சாஸ்திரம் தன்பாலீர்ப்பை எதிர்க்கிறது. இப்போது தன்பாலீர்ப்பு என்பது ஒரு ’ரென்ட் ’(trend) ஆகப் போய்விட்டது. இதனைக் காமம் சார்ந்ததாகவே பார்க்கத் தோன்றுகின்றது. இது கலாசாரச் சீரழிவு. தன்பாலீர்ப்பாளர்கள் நினைத்தால் இதனைக் கட்டுப்படுத்தலாம்” என்கின்ற வாதம் பலர் மத்தியில் இருக்கிறது.

arthanareeswarar

ஆனால் இந்துப் பண்பாட்டில் நம்மாழ்வார் பாடல்களில் “அலி” என்ற பதம் திருநர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தக்காலத்தில் திருநர்கள் ஒரு பாலினமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல் மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் கதாபாத்திரங்களான அரவான் மற்றும் சிகண்டி ஆகிய கதாபாத்திரங்கள் முக்கியமான பாத்திரமாக சித்திரிக்கப்பட்டிருக்கின்றமை அந்தக்காலச் சூழலில் திருநர்கள் வாழ்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.  

இந்தியாவில் உள்ள கயிராகோ கோவில் சிற்பங்கள் தன்பாலீர்ப்புள்ளவர்களைச் சித்திரிக்கும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. அது மட்டுமல்லாமல் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் நாயகன், நாயகி பாவத்தில் தன்னைக் காதலியாகவும் சிவபெருமானைக் காதலன் ஆகவும் நினைத்துப் பாசுரங்கள் பாடியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தன்பாலீர்ப்பின் இன்னொரு வடிவமாகவே பார்க்கலாம். அது மட்டுமல்லாமல் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் மோகினி வழிபாடு (ஹரிஅரன் தோற்றப்பாடு) மற்றும் ஐயப்பன் வழிபாடும் எம் மக்கள் மத்தியில் இருக்கிறது. அர்த்தநாரீஸ்வரர் மற்றும் மோகினி வழிபாடு ஆணும் பெண்ணும் இணைந்த வடிவங்களாகவே சொல்லப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், சில இந்து ஆலயங்களின் சுவர்கள் மற்றும் கோபுரங்களில் உள்ள ஓவியங்கள் குயர் மக்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இந்து மதக் கூறுகளில் குயர் மக்களை ஏற்றுக்கொள்வதான விடயங்கள் விரவி இருப்பதனைக் காணமுடியும். மேலும் குயர் மக்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும் இந்து மதம் குயர் மக்கள் பற்றிக் குறிப்பிட்டாலும் கூட மக்கள் மத்தியில் சக பாலினமாக, சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ளல் என்பது மிக அரிதாகவே காணப்படுகிறது.

ஏனைய மதங்களை நோக்கினால் அவையும் குயர் மக்களை எதிர்ப்பதான ஒரு தோற்றத்தையே கொண்டிருக்கின்றன. இந்து ஆலயங்களில் வரையப்பட்டுள்ளதான சிற்பங்களையோ அல்லது ஓவியங்களையோ கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் காணமுடியாது. மதத்தை முன்னிலைப்படுத்தியே பெரும்பாலானவர்கள் குயர் மக்களை எதிர்க்கிறார்கள்.        

இலங்கையில் பெரும்பாலானவர்கள் தமது மதம் சார்ந்த பண்பாட்டைப் பின்பற்றுபவர்களாகவும், மதம் சார்ந்த பண்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். எனவே  “ இது எமது பண்பாட்டிற்கும் வாழ்க்கை முறைக்கும் பொருத்தமற்ற விடயம். பௌத்த ஜாதகக் கதைகளில் தன்பாலீர்ப்புத் தொடர்பாகக் கூறப்பட்டிருக்கிறது. பௌத்தம் இதனை எதிர்க்கிறது” என்கிற கருத்துப் பௌத்தத்தைப் பின்பற்றுபவர்களின் மத்தியில் நிலவுகிறது.

Erotic-sculptures-of-two-men-center-at-the-Khajuraho-temples

“பல்கிப்பெருகி பூமியை நிரப்புங்கள்” என்று பைபிளில் கூறப்படுகிறது. பைபிள் தன்பாலீர்ப்பை எதிர்க்கிறது. கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்ததன் நோக்கம் எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதே. தன்பாலீர்ப்பாளரினால் உருவாக்கப்படும் திருமணங்கள் எதிர்காலச் சந்ததியை உருவாக்காது. தன்பாலீர்ப்பு இயற்கைக்கு மாறானது. உணர்வின் அடிப்படையானது என்பதால் மாற்றப்படக்கூடியது. சுதந்திரமாக வாழ்வதற்கும் பொறுப்புகளைப் புறந்தள்ளுவதற்கும் தன்பாலீர்ப்பாளர்களாக இருக்கிறார்கள். இளம்பராயத்தில் அவர்கள் வளர்க்கப்பட்ட சூழலும் அனுபவங்களுமே இவர்களது பாலினத்தன்மைக்கு காரணம்” என்பது பைபிளைப் பின்பற்றும் பலரின் கருத்தாகவும் இருக்கிறது. பைபிளில் “அன்னகர்” என்ற சொல் திருநரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பைபிளையும் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுபவர்கள் அதனைக் குறிப்பிட்டே குயர் மக்களை புறந்தள்ளுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

“இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளவர்கள் குர்ஆன் மற்றும் அல்கதீசைப் பின்பற்றுகின்றவர்கள். இஸ்லாத்தில் தன்பாலீர்ப்பு தவிர்க்கப்படவேண்டும் எனவும் தண்டனை வழங்கப்படவேண்டும்” என்றும் கூறப்படுகிறது. இது மதத்திற்கு விரோதமானது என்ற கருத்து இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் நிலவுகிறது.  

அதேநேரம் பெரும்பாலானவர்கள் குயர் கருத்தியலை ஒரு மேலைத்தேய கருத்தியலாகக் குறிப்பிட்டு, கலாசாரச் சீர்கேடு என்று முத்திரை குத்துகின்ற சூழ்நிலை காணப்படுகின்ற போதிலும் ஆய்வின் அடிப்படையில் இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் திருநர்கள் மற்றும் தன்பாலீர்ப்பாளர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றமைக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இலங்கையில் கண்டி இராசதானி காலத்தில் தன்பாலீர்ப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள் எனச் சொல்லப்படுகின்றது. குயர் எதிர்ப்பானது காலனித்துவ காலத்திலேயே இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் குற்றமாகக் கருதப்பட ஆரம்பித்ததாகச் சொல்லப்படுகிறது.

“ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள உறவை நாம் ஏற்றுக்கொள்ளும் போது தன்பாலீர்ப்பினரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். காதல் இனம், மதம், மொழி, பண்பாடு என்பவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டது எனின் பால் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டது தானே. தனிநபருடைய உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.  யாரும் யாருக்கும் இரக்கப்படத்தேவையில்லை. அவர்களுடைய தனிமனித சுதந்திரத்தில் தலையிடாமல் இருந்தால் சரி” என்கிற கருத்தை முன்வைக்கக்கூடிய நபர்கள் நம் மத்தியில் இல்லாமலில்லை.

தன்பாலீர்ப்பினரை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் மதங்களைப் பின்பற்றுபவர்களாக இருக்கின்ற போதிலும் திருநர்களை தாம் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடுகின்றனர். திருநர்களுக்கு சம உரிமை வழங்கப்படவேண்டும் எனவும் அவர்களை வேறுபாடாய்ப் பார்க்கவில்லை எனவும் பலர் குறிப்பிடுகின்றனர். வடபுலத்திலும் மதங்களை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலானவர்களின் நிலைப்பாடு இருக்கின்றது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7345 பார்வைகள்

About the Author

அனுதர்சி கபிலன்

அனுதர்சி கபிலன் அவர்கள் தனது இளமாணிப் பட்டத்தைத் திருகோணமலை வளாகம், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் இதழியலில் “டிப்ளோமா“ பட்டத்தைக் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் விரிவுரையாளராகப் பணிப்புரியும் அனுதர்சி முதுமாணிப் பட்டப்படிப்பைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகத்தில் வெகுஜன ஊடகவியலில் தொடர்கின்றார்.

'இலங்கை அரசியல் அரசியல்வாதிகள்' என்ற தலைப்பில் 2015 இல் அவரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நேர்காணல்கள் 2017 இல் நூல்வடிவில் வெளியிடப்பட்டது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)