Arts
5 நிமிட வாசிப்பு

காதல் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது எனின், பால் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டதா?

December 31, 2022 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாகாணத்தில் குயர் மக்களுக்கான உரிமைக் குரல்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணமுடிகிறது. ‘வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல்’ என்ற இத் தொடரானது, வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல், குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதற்குக் கலாசாரம் சமய அல்லது மத கட்டமைப்புக்களின் பங்கு, வடபுலத்தில் குயர் அரசியல், குயர் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய குயர் செயற்பாட்டாளர்களின் சமத்துவம் நோக்கிய முன்னெடுப்புக்கள், கல்வியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட  மையக்கருத்து வெளிப்பாட்டளர்கள் குயர் அரசியல் அல்லது அதுசார்ந்த விடயங்களில் பேணும் மௌனிப்பு என்பன பற்றி பேசவிழைகின்றது.

தன்பாலீர்ப்பு என்பது வடபுல சமூகத்தளத்தில் பெரும்பாலானவர்களால் விலக்கப்பட்ட (Taboo) ஒரு விடயமாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக தன்பாலீர்ப்பாளர்கள் இந்த சமூகத்திற்குள் தம்மை வெளிப்படுத்த முடியாதவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். பல போராட்டங்களுக்கு மத்தியில் தம்மை வெளிப்படுத்தும் தன்பாலீர்ப்பினரை இந்தச் சமூகம் பார்க்கும் பார்வை மதிப்பிற்குரியதுதானா?

தன்பாலீர்ப்பு (Homosexual) என்பது ஒருவர் தன்பாலினத்தை சேர்ந்த ஒருவர் மேல் காதல் கொள்ளுதல் எனலாம். இதில் பெண் தன்பாலீர்ப்பாளர்கள் (Lesbian) மற்றும் ஆண் தன்பாலீர்ப்பாளர்கள் (Gay) அடங்குவர். இலங்கையில் குறிப்பாக வடபுலத்தை பொறுத்தமட்டில் தன்பாலீர்ப்பாளர்கள் தம்மை வெளிப்படுத்தத் தயாராக இல்லை. அதிலும் ஆண் தன்பாலீர்ப்பாளர்கள் (Gay) தம்மை ஓரளவு அடையாளப்படுத்துகின்ற போதிலும், பெண் தன்பாலீர்ப்பாளர்கள்(Lesbian) தம்மை வெளிப்படுத்த முடியாதவர்களாக இருப்பதையே அவதானிக்க முடிகிறது. இங்கும் தந்தையாதிக்க சமூகக் கட்டுப்பாடுகள் ஆண்களை விடப் பெண்களை அதிகம் பாதிக்கின்றமையைக் காணலாம்.

தன்பாலீர்ப்பினர் தொடர்பில் மக்கள் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். “தன்பாலீர்ப்பிற்கு உடல் மற்றும் உளவியல் ரீதியான காரணங்கள் உண்டு எனச் சொல்லப்படுகிறது. ஆனால் இளம்பராயத்தில் அவர்கள் வளர்க்கப்பட்ட சூழலும் அனுபவங்களுமே இவர்களது பாலினத்தன்மைக்குக் காரணம்” என்பது இந்தச் சமூகத்தில் பலரின் தவறான கருத்தாக இருக்கிறது. தன்பாலீர்ப்பு ஒருவரின் வளர்ப்பு முறையிலோ அல்லது அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்களாலோ வருவதல்ல என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை “ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள உறவை நாம் ஏற்றுக்கொள்ளும் போது தன்பாலீர்ப்பினரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனவும், தன்பாலீர்ப்பினருக்கும் சமஉரிமை வழங்கப்படல் வேண்டும் எனவும் கருதும் பால்நிலை சார்ந்த புரிதல் உள்ள நபர்களும் இந்தச் சமூகத்தில் இருப்பதுடன், குயர் மக்களுக்கான உரிமைகள் சட்டபூர்வமாக்கப்படவேண்டும் என இவர்கள் குரல்கொடுக்கின்றனர். பால்நிலை சார்ந்த புரிதல் உள்ள நபர்கள் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்தளவினராக இருக்கிறார்கள்.

“கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்ததன் நோக்கம் எதிர்காலச் சந்ததிகளை உருவாக்குவதே. தன்பாலீர்ப்பினரால் உருவாக்கப்படும் திருமணங்கள் எதிர்காலச் சந்ததியை உருவாக்காது. எனவே தன்பாலீர்ப்பு இயற்கைக்கு மாறானது. உணர்வின் அடிப்படையானது என்பதால் மாற்றப்படக்கூடியது. சுதந்திரமாக வாழ்வதற்கும் பொறுப்புக்களைப் புறந்தள்ளுவதற்கும் தன்பாலீர்ப்பாளர்களாக இருக்கிறார்கள். இதனைச் சட்டரீதியாக்கும் போது மற்றவர்களும் தன்பாலீர்ப்பினராவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது” என்பது தன்பாலீர்ப்பினரை எதிர்க்கும் பலரது பொதுப்படையான கருத்தாக இருக்கிறது. தன்பாலீர்ப்பினரை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் மாற்றுப்பாலினரை தாம் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடுகின்றனர். மாற்றுப்பாலினருக்கு சம உரிமை வழங்கப்படவேண்டும் எனவும் அவர்களை வேறுபாடாய்ப் பார்க்கவில்லை எனவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் தன்பாலீர்ப்பு என்பது மேலைத்தேயப் பண்பாடு, இன்றைய இளைஞர்கள் காலமாற்றத்தால் வழிமாறிப்போகிறார்கள் என்ற கருத்தை முன்வைப்பவர்கள் எமது சமூகத்தில் அதிகம். இலங்கை மற்றும் இந்திய வரலாற்றில் தன்பாலீர்ப்பாளர்கள் பற்றி மத நூல்களிலும், வரலாற்று நூல்களிலும் கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே இது காலமாற்றத்தால் விளைந்ததோ அல்லது மேலைத்தேயப் பண்பாடு என்ற முடிவுக்கோ வரமுடியாது.

பெரும்பாலானோர் சில பிழையான முன்னுதாரணங்களை வைத்துக்கொண்டு தன்பாலீர்ப்பினர் அனைவரையும் எதிர்ப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. மனிதர்கள் எல்லாவிதமான குணாதிசயங்களுடனும் இருக்கிறார்கள். எவ்வாறு எதிர்ப்பாலீர்ப்பாளார்களில் தவறான முன்னுதாரணங்கள் இருப்பதைப் போலவே தன்பாலீர்ப்பாளர்களிலும் தவறான முன்னுதாரணங்கள் இருப்பது இயல்பானது. எனவே ஒரு சில நபர்களை உதாரணமாகக் கொண்டு ஒட்டுமொத்த சமூகத்தையுமே எதிர்ப்பது தவறானது.

தன்பாலீர்ப்பு என்பது அவர்களது அடிப்படை உரிமை சார்ந்த ஒன்று என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இந்தப் புரிந்துகொள்ளல் என்பது மற்றைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்ச்சமூகத்தில் பாரிய பின்னடைவாகவே நோக்கவேண்டியிருக்கிறது. பால்நிலை ரீதியில் தமிழ்ச் சமூகம் பின்நோக்கிச் சிந்திப்பதான நிலைப்பாட்டையே காணக்கூடியதாக இருக்கிறது.

பெரும்பாலானவர்களுக்கு தன்பாலீர்ப்பினர் என்றால் யார்  என்ற புரிதல் இல்லை. தன்பாலீர்ப்பினரைக் கேலி செய்தல் மற்றும் அவதூறு பரப்புதல் என்பன பொது வெளியிலும் ஊடக வெளியிலும் அதிகம் இடம்பெறுகின்றன. தன்பாலீர்ப்பினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறைகளை வெகுஜன மற்றும் புதிய ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. தன்பாலீர்ப்பினரை மோசமானவர்களாகச் சித்தரிப்பதன் மூலம் அவர்கள் தொடர்பான தவறான எண்ணப் போக்கைச் சமூகப்பொறுப்பற்ற ஊடகங்கள் மக்களுக்கு வழங்கியிருக்கின்றன. பெரும்பாலான ஊடகங்களில் இழிவுபடுத்திச் சித்தரிக்கப்படும், ஊடகக் கற்பிதங்களை உண்மை என நம்புகின்றவர்களாக ஒரு சிலர் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான நபர்களுக்கு தேடலோ, பால்நிலை சார்ந்த விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமோ, வாசிப்பதில் ஈடுபாடோ கிடையாது. முட்டாள்தனமான தமது நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு அதைத் தனிமனிதர்கள் மேல் திணிப்பதையே இவர்கள் தமது கடமையாகக் கொண்டிருக்கிறார்கள். தன்பாலீர்ப்பு இலங்கையில் சட்டபூர்வமாக்கப்படக்கூடாது என்றும் பலர் குறிப்பிடுகின்றனர்.

அதேவேளையில், இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் தன்பாலீர்ப்பாளர்கள் தொடர்பில் குறிப்பிடத்தக்க அளவில் சாதகமான மாற்றங்கள் நிகழ்வதை அண்மைக் காலங்களில் அவதானிக்க முடிகிறது. தென்னாசியாவில் முதன் முதலில் இந்தியா “வாழ்க்கையை அர்த்தமாக்குவது காதல். காதலிக்கும் உரிமையே நம்மை மனிதனாக்குகிறது. காதலை வெளிப்படுத்துவது குற்றம் என்றால் அது மனிதாபிமானத்திற்கு எதிரானது மற்றும் கொடூரமானது” எனவும் “இயற்கை எது என்பதை நாம் தீர்மானிக்க முடியாது” எனக்குறிப்பிட்டு தன்பாலீர்ப்பினை தண்டனைக்குரிய குற்றம் இல்லை என இந்திய தண்டனைச் சட்டக்கோவையின் 377ஆவது சரத்தை 6ஆம் திகதி செப்டெம்பர் மாதம் 2018ஆம் ஆண்டு நீக்கியதன் மூலம் அறிவித்திருக்கிறது. இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் ஒருபாலினத் திருமணங்கள் அங்கு சட்டரீதியாக்கப்பட்டன. அதன் பின்னரே இந்தியாவில் தன்பாலீர்ப்பாளர்களுடைய திருமணங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன எனலாம். அதற்கு நேர் எதிராக இலங்கையில் திருநர்களையே அங்கீகரிக்காத சமூகமும் சட்டமும் காணப்படுகிறது. காதல் இனம், மதம், மொழி, கலாசாரம் என்பவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டது எனின், பால் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டது தானே. தனிநபருடைய உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.  

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4602 பார்வைகள்

About the Author

அனுதர்சி கபிலன்

அனுதர்சி கபிலன் அவர்கள் தனது இளமாணிப் பட்டத்தைத் திருகோணமலை வளாகம், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் இதழியலில் “டிப்ளோமா“ பட்டத்தைக் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் விரிவுரையாளராகப் பணிப்புரியும் அனுதர்சி முதுமாணிப் பட்டப்படிப்பைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகத்தில் வெகுஜன ஊடகவியலில் தொடர்கின்றார்.

'இலங்கை அரசியல் அரசியல்வாதிகள்' என்ற தலைப்பில் 2015 இல் அவரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நேர்காணல்கள் 2017 இல் நூல்வடிவில் வெளியிடப்பட்டது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)