Arts
8 நிமிட வாசிப்பு

குயர் மக்களும் இணையவெளியும்

May 31, 2023 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாகாணத்தில் குயர் மக்களுக்கான உரிமைக் குரல்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணமுடிகிறது. ‘வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல்’ என்ற இத் தொடரானது, வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல், குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதற்குக் கலாசாரம் சமய அல்லது மத கட்டமைப்புக்களின் பங்கு, வடபுலத்தில் குயர் அரசியல், குயர் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய குயர் செயற்பாட்டாளர்களின் சமத்துவம் நோக்கிய முன்னெடுப்புக்கள், கல்வியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட  மையக்கருத்து வெளிப்பாட்டளர்கள் குயர் அரசியல் அல்லது அதுசார்ந்த விடயங்களில் பேணும் மௌனிப்பு என்பன பற்றி பேசவிழைகின்றது.

உலகில் தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேண, இணையவழி ஊடகங்கள் வழிகோலின. இணைய வழி ஊடகங்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்று அவை இன்றியமையாதவையாக மாறி வருகின்றன. முதலாளித்துவ ஆணாதிக்க உலகில் பெண்கள் மற்றும் குயர் மக்களுக்கெதிரான வன்முறைகள் புதிய ஊடகங்கள் மூலம் நவீன வடிவம் பெறுகின்றன. குறிப்பாகச் சமூக ஊடகங்கள் மூலமாக அதிக அளவில் இணைய ரீதியான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் இடம்பெறுகின்றமையை அவதானிக்க முடிகிறது. நேர்மையாகக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் பாலியல் ரீதியான தாக்குதல்களை நேரடியாகவும் இணைய வெளியிலும் மேற்கொள்கின்றனர். அண்மைக் காலங்களில் இலங்கை போன்ற தென்னாசிய நாடுகளிலும் இணையவழி வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய இணைய உலகில் சமூக ஊடகங்கள் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்துள்ளன. அதனால் சமூக ஊடகங்களில் கிடைத்த உச்சபட்ச சுதந்திரம் குயர் மக்கள் மற்றும் பெண்கள் மீது இணையவழி வன்முறைகள் அதிகம் நிகழ்வதற்கும் காரணமாகியது. இணையவெளியும் புதிய தொழில்நுட்பங்களின் வரவும் பால்நிலைச் சமத்துவம்மிக்கதாக இல்லை என்பதே யதார்த்தம். அந்தவகையில் இலங்கையின் வடபுலத்திலும் கூட இணையவழி வன்முறைகள் அதிகம் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான இணையவழி வன்முறைகளுக்குச் சமூகத்தில் ஊறிப்போன கருத்தியல்களும் கட்டமைப்புக்களும் கூட முக்கியமான காரணம் எனலாம்.

சமூக ஊடகங்களில் பிரசைகளின் செயற்பாடானது சமூகத்தில் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் விளைவிக்க வழிவகுத்து வருகின்றது. புதிய ஊடகங்களில் தணிக்கை இன்றிச் செய்திகளைப் பகிரக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றமை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவும் காரணமாகியுள்ளது. உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பகிர்தல், இணையக் குற்றங்கள், பிழையான அரசியல் செயற்பாடுகள், வன்முறையைத் தூண்டக்கூடிய செய்திகள் மற்றும் புகைப்படங்களைப் பகிர்தல், தனிநபர் தாக்குதல்கள், போலிச் செய்திகள் மற்றும் தனிநபர் வெறுப்பை வெளிப்படுத்தல் என்பன இன்றைய சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் புலமைத்திருட்டு, இணையச் சுரண்டல் என்பனவும் இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகின்றது. இவை அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கக்கூடிய இணையவழி வன்முறைகளாக இருக்கின்ற போதிலும்,  சமூக அங்கீகாரத்திற்காகப் பல சவால்களை எதிர்கொண்டுவரும் குயர் மக்கள் இதனால் இணைய வெளியிலும் அதிக பாதிப்புக்களையும் மன உளைச்சல்களையும் சந்திக்கின்றனர்.

இலங்கையில் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இணையக் குற்றங்கள் மிக வேகமாக அதிகரித்து வருவதாகச் CERT நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தின் உத்தரவுடன் இலங்கையில் ஆபாச இணையத்தளங்களைத் தடைசெய்கின்ற நடைமுறை இருந்து வருகின்றது. இணையதளங்கள் மற்றும் ஏனைய இணையவழி ஊடகங்கள் தொடர்பான பொருத்தமான சட்டங்களும் நெறிமுறைகளும் அறிமுகப்படுத்தப்படுதல் அவசியம். இணையத்தினூடாக ஒருவர் கேலிசெய்யப்பட்டாலோ, அச்சுறுத்தப்பட்டாலோ, மிரட்டப்பட்டாலோ, பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்பட்டாலோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டாலோ அது இணையவழி வன்முறை எனக்கொள்ளப்படும். வன்முறையின் எல்லா வடிவங்களும் பால்நிலையின் பரிமாணத்தைக் கொண்டுள்ளன.

இலங்கையில் உள்ள பெரும்பாலான குயர் மக்கள் அண்மைக் காலங்களில் முகப்புத்தகம், டுவிட்டர், கூகுல் பிளஸ், லிங்ட் இன், வைபர், வாட்ஸ் ஆப், இன்ஸ்ரகிராம், யூரியூப், பின்ரறஸ்ற், வேர்ட் பிறஸ், சினப் சற்(Facebook, Twitter, Instagram, Youtube, Wikipedia, LinkedIn, WordPress, Blogspot, Viber, Pinterest,, Snapchat) போன்ற பல சமூக ஊடகங்களையும் செயலிகள் மற்றும் பாதுகாப்பான, பாதுகாப்பற்ற இணையத்தளங்களையும் தமது பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். இவற்றின் ஊடாகக் குயர் மக்கள் வெறுப்பு பேச்சு, போலிச் செய்திகள், உளவியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், பாலியல் ரீதியான இணையச் சுரண்டல், தனிப்பட்ட புகைப்படங்கள், தனிப்பட்ட தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படல், மீள்வருவார்ப்புக்களை உருவாக்குதல், தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தல், மோசமான சித்திரிப்பு, பண்பாட்டு ரீதியான பாரபட்சம், மற்றும் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் போன்றவற்றை இணைய வழியில் எதிர்கொள்கின்றனர்.

பெரும்பாலான குயர் மக்களது முகப்புத்தகம் போன்ற சமூக ஊடகங்களின் பதிவுகளிற்கும் புகைப்படங்களிற்கும் இடப்படும் பின்னூட்டங்கள் குயர் வெறுப்பை வெளிப்படுத்துகின்றமையால் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றனர். பேர் ஊர் தெரியாத நபர்களால் தனது முகப்புத்தகத்தில் மிக மோசமான பின்னூட்டங்கள் இடப்பட்டதாகத் திருநங்கை ஒருவர் குறிப்பிட்டார். அதேவேளை “இணைய வன்முறைகள் என்னை மனதளவில் பாதிக்கின்றன. முகப்புத்தகத்தில் திருநர்களைக் கேலி செய்யும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை எதிர்கொள்கிறேன்” என மற்றுமொரு திருநங்கை குறிப்பிட்டார்.

“வட்ஸப்பில் என்னிடம் தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கின்றமையானது என்னைச் சங்கடத்திற்குள்ளாக்குகிறது” எனத் தன்பாலீர்ப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார். பெரும்பாலான தன்பாலீர்ப்பு வெறுப்பாளர்கள் தமது குயர் வெறுப்பை வெளிப்படுத்துவதற்கான தளமாக இணையவழி ஊடகங்களைப் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். குயர் மக்களிடம் அவர்களது தனிப்பட்ட மற்றும் பாலியல் சார்ந்து கேள்விகளை சமூக ஊடகங்களில் எழுப்புவதன் மூலமும் ஏனைய இணையவழி வன்முறைகளை முன்னெடுப்பதன் மூலமும் குயர் மக்களுக்கெதிரான இணையவழி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். உதாரணமாக, முகநூல் பக்கம் ஒன்றில் “இலங்கையில் உள்ள  பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ கலாசாரங்கள் எவற்றிலும் ஒருபாலுறவு அனுமதிக்கப்படவில்லை. ஒரு பாலீர்ப்பு என்பது ஒரு நோய். குறித்த நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு, சாதாரண மனிதர்களாக மாற்றும் மனநிலையை ஏற்படுத்த வேண்டும்” என்றவாறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது மிக மோசமான தன்பாலீர்ப்பு வெறுப்பாகவே பார்க்கவேண்டியுள்ளது. இது போன்ற ஏராளமான பதிவுகளை நாளாந்தம் இணையவெளியில் அவதானிக்க முடிகின்றது.

அதுமட்டுமல்லாமல் குயர் மக்களிடம் பாலியல் லஞ்சம் கேட்பதற்கான ஊடகமாக பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இருப்பவர்களிடமும் உதவி நாடுபவர்களிடமும் இணைய வெளியில் தவறான நோக்கில் செயற்படுகிறார்கள். இவ் வகையில் ஆரம்பிக்கின்ற இணையவழி வன்முறைகள் நேரடியான பாலியல் ரீதியான வன்முறைக்குவழி வகுக்கும் சந்தர்ப்பங்களையும் உருவாக்குகின்றன.

குயர் மக்கள் பற்றிய மீள்வருவார்ப்புக்களை உருவாக்குவதற்கான ஊடகமாக இணையவழி ஊடகங்களும் செயற்படுகின்றன. பெரும்பாலான செய்தித் தளங்கள் கூட பால்நிலை சார்ந்த புரிதலற்ற ஊடகவியலாளர்களைக் கொண்டிருக்கின்றமையையே அவர்களது இணையச் செய்திகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. குயர் மக்களுடைய சுய கௌரவத்தைப் பாதிக்கும் வகையிலும் அவர்களை மோசமாகச் சித்திரித்தும் செய்தி வெளியிடும் போக்கைப் பெரும்பாலான ஊடகங்களில் காணமுடிகிறது. பெரும்பாலான தமிழ்பேசும் ஊடகங்கள் பால்நிலை சார்ந்த விடயங்களில் தம்மை இற்றைப்படுத்தத் தவறி விடுகின்றமையை அவர்களது பால்நிலை உணர்திறன் அற்ற செய்தி அறிக்கையிடல்  மூலம் அறிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களில் தன்பாலீர்ப்பாளர்களுடைய திருமணங்கள், அவர்கள் பற்றிய பதிவுகளின் கீழ் மிக மோசமான பின்னூட்டங்களை அவதானிக்க முடிகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்து முறைப்படி கனடாவில் இடம்பெற்ற பெண் தன்பாலீர்ப்பாளர்களுடைய திருமணம் மற்றும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவின் கோவாவில் இரண்டு பெண் மருத்துவர்கள் தமது திருமண அறிவிப்பைச் செய்துகொண்டமை போன்றவற்றுக்கெதிரான வடபுல தமிழ் சமூகங்களிடையேயான இணையவெளி உரையாடல்களில் பெரும்பாலானவை குயர் வெறுப்பை வெளிப்படுத்தியமையே அவதானிக்க முடிந்தது.

உளவியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் குயர் மக்கள் எதிர்கொள்ளும் இணையவழி வன்முறையின் இன்னொரு வடிவமாகும். குயர் மக்கள் பல்வேறுபட்ட உளவியல் ரீதியான தாக்கங்களை இணையவெளியில் எதிர்கொள்கிறார்கள். பாலியல் ரீதியான இணையச் சுரண்டல்களையும் இவர்கள் இணைய வெளியில் எதிர்கொள்ள நேரிடுகிறது. இந்த இணைய வழி வன்முறைகள் இணைய வெளிகளைக் கடந்தும் தொழில் மற்றும் நாளாந்த வாழ்கையிலும் தாக்கம் செலுத்துவனவாக இருக்கின்றன.

பால்நிலை சார்ந்த மதிப்பீடுகளை உருவாக்குகின்ற சமூகத்தில் குயர் மக்கள் வன்முறைகளையும் துஷ்பிரயோகங்களையும் எதிர்கொள்கின்றனர். அவர்களின் குரல்களை மௌனிக்கச் செய்வதற்கான ஆயுதமாக இன்றைய காலத்தில் இணையவழி வன்முறைகள் அதிகரித்துவருகின்றன. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பிரஜையும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்படுதல் அவசியம். பிரஜைகள் தாங்கள் சார்ந்த சமூகத்தை மாத்திரம் அல்லாது அனைத்து பால்நிலையினரையும் பாதிக்காத வகையில் தமது பதிவுகளைச் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளுவது அவசியம். காயப்படுத்துகின்ற சொற்பிரயோகங்களைத் தவிர்த்தல், கட்டுக்கதைகள் மற்றும் பால்நிலை ரீதியில் நிகழ்த்தப்படும் அனைத்துவிதமான இணையவழி வன்முறைகளையும் தவிர்த்தல் வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் கருத்தியல் ரீதியான விவாதங்களை சமூக ஊடகங்களில் முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து தனிமனிதர்களையும் அவர்களுடைய வாழ்வையும் விமர்சித்தல் தவறானது. பால்நிலை ரீதியான சீண்டல்களும் தாக்குதல்களும் சமூக ஊடகக் கருத்தாடல்களில் தவிர்க்கப்படல் வேண்டும். பாலியல் ரீதியான வன்முறைகளைப் பதிவிடும் போது பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் தவிர்த்தல் அவசியம். முரண்பாட்டு உணர்திறன் மிக்க செயற்பாடுகளை மேற்கொள்வதும் அவசியமாகும்.

இலங்கையில் இணையக் குற்றங்களுக்கெதிரான சட்டங்கள் வலுவானவையாக இல்லை. போலிக் கணக்குகள் தொடர்பில் முகப்புத்தக நிறுவனத்திற்கு முறைப்பாடு செய்தாலும் குறிப்பிட்ட முகப்புத்தகக் கணக்குகளை தற்காலிகமாகவே முடக்க முடியும். கொழும்பில் இயங்கும் இணையக் குற்றங்கள் தொடர்பான பிரிவுக்கு இது தொடர்பாக முறைப்பாடு செய்ய முடியும். இருந்தாலும் கூடக் குறிப்பிட்ட போலி இணையத்தளங்களையும் சமூக ஊடகங்களையும் வெவ்வேறு நாடுகளில் இருந்து இயக்குவதால் அது சவால்மிக்கதாக இருக்கின்றது. இதனால் இது போன்ற இணையக் குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர்.

பொதுவாகவே நமது சமூகங்களில் பெண்கள் மற்றும் குயர் மக்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளை மிக இலகுவாகக் கடந்து செல்லும் ஒருவித அலட்சிய மனோபாவம் காலங் காலமாகப் புரையோடிப் போயுள்ளது. அது எல்லோருக்கும் இலகுவான ஒன்றாகவும் இருக்கிறது. அதற்கு இணையவழி வன்முறையும் விதிவிலக்கல்ல. இருப்பினும் கூட இணையவெளியில் குயர் மக்களுக்கான ஆதரவுக் குரல்களையும் சமூக மாற்றத்திற்கான எத்தனங்களையும் அவதானிக்காமல் இல்லை.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9854 பார்வைகள்

About the Author

அனுதர்சி கபிலன்

அனுதர்சி கபிலன் அவர்கள் தனது இளமாணிப் பட்டத்தைத் திருகோணமலை வளாகம், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் இதழியலில் “டிப்ளோமா“ பட்டத்தைக் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் விரிவுரையாளராகப் பணிப்புரியும் அனுதர்சி முதுமாணிப் பட்டப்படிப்பைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகத்தில் வெகுஜன ஊடகவியலில் தொடர்கின்றார்.

'இலங்கை அரசியல் அரசியல்வாதிகள்' என்ற தலைப்பில் 2015 இல் அவரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நேர்காணல்கள் 2017 இல் நூல்வடிவில் வெளியிடப்பட்டது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)