Arts
7 நிமிட வாசிப்பு

வடபுல சமூகமும் திருநர்களும்

February 17, 2023 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாகாணத்தில் குயர் மக்களுக்கான உரிமைக் குரல்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணமுடிகிறது. ‘வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல்’ என்ற இத் தொடரானது, வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல், குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதற்குக் கலாசாரம் சமய அல்லது மத கட்டமைப்புக்களின் பங்கு, வடபுலத்தில் குயர் அரசியல், குயர் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய குயர் செயற்பாட்டாளர்களின் சமத்துவம் நோக்கிய முன்னெடுப்புக்கள், கல்வியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட  மையக்கருத்து வெளிப்பாட்டளர்கள் குயர் அரசியல் அல்லது அதுசார்ந்த விடயங்களில் பேணும் மௌனிப்பு என்பன பற்றி பேசவிழைகின்றது.

வடபுல சமூகத்தளத்தில் தன்பாலீர்ப்பை விலக்கப்பட்ட(Taboo) ஒரு விடயமாகப் பார்க்கும் பெரும்பாலானவர்கள் திருநர்களை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிடுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் திருநர்களைப் பற்றிய தெளிவு பெரும்பாலானவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது எனலாம். இருந்தாலும் கூட எவ்வாறு, தந்தையாதிக்கச் சமூகங்களில் பெண் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்கிறாளோ அதே போல் திருநங்கைகளும் திருநம்பிகளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்கிறார்கள்.

குடும்பத்தால் புறக்கணிக்கப்படுவதாலேயே பெரும்பாலான திருநர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது. “அன்று என் தந்தை வார்த்தையாலும் பிரம்பாலும் என்னைத் தாக்கிப் புறக்கணிக்காமல் விட்டிருந்தால், என் வாழ்க்கை மாறியிருக்கும்” என்பது திருநங்கை ஒருவரது கருத்தாகும். இது போலவே திருநர்கள் பலரும் கருதுகிறார்கள். பெரும்பாலான திருநர்கள் தமது பால்நிலை அடையாளங்களை வெளிப்படுத்தும் போது தாம் சார்ந்த குடும்பம், உறவுகள் மற்றும் சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதனால் இவர்களது அடிப்படைத்தேவைகளான உணவு, உடை, வசிப்பிடம், மருத்துவ தேவைகள்(ஹோமோன்ஸ்) போன்றவற்றுக்கும் வேலைவாய்ப்பொன்றைப் பெற்றுக்கொள்வதற்கும் போராடுகிறார்கள். “சமூகத்தில் என்னைத் திருநங்கையாக வெளிப்படுத்துவதே மிகப்பெரிய சவாலாகும்” என மற்றுமொரு திருநங்கை குறிப்பிட்டார். வடபுலத்தை எடுத்துக்கொண்டால் பெரும்பாலான திருநர்கள் சுயதொழிலில் ஈடுபடுபவர்களாகவும் அரச மற்றும் தனியார் தொழிலில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறார்கள். அதேவேளை தமது பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்தவர்களும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தமது கல்வியைத் தொடரமுடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த அல்லது பணிபுரிகின்ற சிலருக்கு அவர்களது வேலைத்தளம் மிகப் பிடித்த இடமாகவும் சிலருக்கு சக பணியாளர்களால் ஒதுக்கப்படும் இடமாகவும் இருக்கிறது.

யாழ்ப்பாணத்-திருநர்-வலையமைப்பு-1-1

அதுமட்டுமல்லாமல், திருநர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தங்களுடைய மாற்றம் குறித்தும் பால்நிலை குறித்துமான புரிதல் போதாமல் இருக்கிறது. ஏனெனில் இலங்கை போன்ற நாடுகளில் அடிப்படைக் கல்வியில் இதுபோன்ற விடயங்கள் இல்லை. எனவே அவர்கள் தம்மைப் போன்றவர்களை இனங்கண்டே தம்மைப் பற்றிப் புரிந்துகொள்ள முடிகிறது. கொழும்பில் 1990 களில் இருந்து திருநர்களுக்கான அமைப்புகள் அவர்களுக்கான உதவிகளை வழங்கினாலும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் 2017 ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பாணச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் தமிழ் பேசும் குயர் மக்களுக்கான அமைப்பொன்று தோற்றம் பெற்றது. அதன் பின்னர் யாழ்ப்பாணத் திருநர் வலையமைப்பு ஆரம்பிக்கப்பட்டதுடன், அண்மைக் காலத்தில் Voice of Equality, விளிம்பின் குரல் ஆகிய அமைப்புக்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன. இவ் அமைப்புக்கள் 2017 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் குயர் மக்களை ஒன்றிணைத்து அவர்கள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் கரிசனை காட்டிவருகின்றன. மேலும் குயர் மக்களுக்கான உரிமைகள் தொடர்பிலும் இவை முனைப்புடன் இயங்கிவருகின்றன. இவ் அமைப்புகளின் உதவியுடனும் சக திருநர்களின் உதவியுடனும் சமூகத்தில் இலைமறை காயாகத் தம்மை வெளிப்படுத்த முடியாமல் இருந்த பல திருநர்கள் தமது பாலின அடையாளங்களை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள்.

அண்மைக்காலத்தில் திருநர்களுக்கான நிறுவனங்கள் இருப்பதனாலும் அவை அவர்களது உரிமைகள் சார்ந்து செயற்படுவதனாலும், 2000 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் திருநர்களின் வாழ்வில் மட்டுமல்லாது சமூகத்திலும் திருநர் குறித்த புரிதலில் பாரியளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தமிழ் வானவில் பெருமிதம், யாழ்ப்பாணக் குயர் விழா போன்ற விழாக்கள் திருநர்கள் உட்பட ஒட்டுமொத்தக் குயர் மக்களின் இருப்பை வெளிப்படுத்துவதுடன் அவர்களின் உரிமைக்கான குரலாகவும் விளங்குகின்றன. சமூக மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டாலும் கூட திருநர்வெறுப்புச்(Transphobia) சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது என்பதில் மாற்றமில்லை. கேலி செய்தல், கிண்டல், பாரபட்சம், சுரண்டல் மற்றும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை திருநர்கள் பொதுவெளியிலும் தொழிலிடங்கள் போன்றவற்றிலும் எதிர்கொள்கிறார்கள். திருநங்கைகள் எதிர்கொள்ளும் மிக மோசமான சவாலாக இருப்பது பாலியல் ரீதியான வன்முறைகளாகும். இவையெல்லாவற்றையும் திருநர் வெறுப்பின் வடிவங்களாகவே கொள்ளமுடியும். இது போன்ற ஆதிக்கமனோபாவங்களை இல்லாதொழித்தல் என்பது சமத்துவம், சமூக நீதி மற்றும் பன்மைத்துவம் போன்ற விடயங்களைப் பெயரளவில் கொண்டிருக்கும் சமூகத்தில் சிக்கலானது. இது இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரிடமும், ஆழவேரூன்றியுள்ள மனோபாவம் திருநர்வெறுப்பை மேற்கொள்கின்றது என்று தான் சொல்லவேண்டும். பெண்ணைத் தெய்வமாகப் போற்றுகின்றோம் என்கிற சமூகத்திலேயே, பெண் அதிகமாகத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகிறாள். அதுபோலவே திருநர்களை ஏற்றுக்கொள்கிறோம், புரிந்துகொள்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இந்தச் சமூகத்தில் பலர் திருநர்களுக்கெதிரான வன்முறைளை இழைக்கிறார்கள்.

பாடசாலை, அரச, தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வைத்தியசாலைகள் போன்றவை முற்று முழுதாக சமத்துவத்துடன் சேவையாற்றுகின்றன எனச் சொல்லமுடியாது. திருநர்களுக்கெதிரான வன்முறைகள் பாடசாலைகளிலேயே ஆரம்பித்துவிடுகின்றன. பல திருநர்களின் கல்வி பாதிக்கப்படுவதற்கு அவர்கள் பாடசாலைகளில் எதிர்கொண்ட கேலி, கிண்டல், பாரபட்சம் மற்றும் வன்முறைகள் என்பன காரணம் எனலாம். சரியாக வழிநடத்த வேண்டிய ஆசிரியர்களே பல திருநர்களை பாரபட்சமாக நடத்தியிருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும். வடபுலத்தில் இதுபோன்ற எந்த பொது இடத்திலும் பால்நிலைச் சமத்துவம் மிக்க மலசலகூடங்களைக்(gender neutral toilets) காணமுடியாதுள்ளது. திருநர்கள் பொதுவைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போது அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள்.

திருநங்கைகளுடைய வாழ்வில் திருமணம் மற்றும் குழந்தை என்பன பிரச்சினைக்குரிய விடயங்களாகப் பார்க்கப்படுகின்றன. திருநர்களுடைய திருமணங்கள் சிக்கலுக்குரியவையாக மாறுவதற்கு இந்தச் சமூகமும் ஒரு காரணம் எனலாம். இந்தச் சமூகம் திருநர்களின் காதலையும் திருமணத்தையும் ஆதரிப்பதாக இல்லை. அதற்கெதிரான விமர்சனங்களையே எப்போதும் முன்வைக்கின்றது.

வடபுலத்தில் திருநம்பிகளை விடத் திருநங்கைகளே அதிகம் இருப்பதனை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இதன் பின்னணியில் கூட ஆதிக்கக் கருத்தியல்கள் காரணமாக இருக்கலாம். யாழ்ப்பாணத்தில் வேறு பிரதேசங்களைச் சேர்ந்த திருநர்கள் பலர் வசிக்கிறார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் தனியார் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களில் தொழில்புரிபவர்களாகவும் சுயதொழிலில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களுடைய சொந்த இடங்களை விடவும் யாழ்ப்பாணம் அவர்களுக்கு வாழ்வதற்கான சூழலை வழங்குவதுடன் தமது பால்நிலை அடையாளங்களை தமது விருப்பத்திற்கு ஏற்ப வெளிக்காட்டவும் உதவுகின்றது எனலாம். இது போன்ற விடயங்களை நோக்கும் போது வடபுலம் திருநர்களுக்கான ஓரளவு பாதுகாப்பான இடமாகத் தான் இருக்கிறது. அதேவேளை வடபுலத்தில் இருக்கக்கூடிய திருநர்கள், வடபுலத்திற்கு வெளியே தாம் சுதந்திரமாக உணர்வதாகக் குறிப்பிடுகிறார்கள். தாம் சார்ந்த சமூகத்திலிருந்து வெளிவரும் போதுதான் தாம் தாமாக இருப்பதற்கான வெளி ஒன்றை உணர்வதாகச் சிலர் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையில் ஒருவரின் பாலின அடையாளத்தை நிகராக்குவதற்கு ஒருவரின் பாலின அடையாளத்தை மாற்றக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. சுகாதார அமைச்சானது இந்த நடைமுறையை இலகுபடுத்துவதற்கு உதவுகின்றது. திருநர்கள் தமது மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதன் மூலம் தேசிய அடையாள அட்டைகள், கடவுசீட்டுகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களில் மாற்றங்களைச் செய்யலாம். “ஆள் அடையாளப்படுத்தும் கடிதத்துடனேயே நடமாடவேண்டியிருக்கிறது” என்கிறார் திருநங்கை ஒருவர். அதாவது அடையாள அட்டையை மாற்றாதவிடத்தும் திருநராக முற்றுமுழுதாக மாறாத சந்தர்ப்பத்திலும் அவர்கள் தம்மை ஆணாகவோ பெண்ணாகவோ அடையாளப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இதுபோன்ற ஆவணங்களை மாற்றுதல் எல்லாத் திருநர்களுக்கும் இலகுவானதாக இல்லை. பால்நிலையை மாற்றுவதற்கான வாய்ப்புகள் இலங்கையில் காணப்படுகின்றபோதும் அரசாங்கத்திடமிருந்து சலுகைகள் என்ற ரீதியில் எவையும் வழங்கப்படுவதில்லை என்று தான் சொல்லவேண்டும். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் பால்மாற்று அறுவைச்சிகிச்சைக்கான வசதிகளும் குறைவாகக் காணப்படுகின்றன.

“எங்களை சமூகத்தில் சராசரி மனிதர்களாக நினைக்கிறார்கள் இல்லை, விசித்திரமாகப் பார்க்கிறார்கள்” என்ற கருத்து திருநர்கள் பலரின் மத்தியில் இருக்கிறது. எங்களைப் பெண்ணாகப் பாருங்கள் என்பது திருநங்கைகளின் கருத்தாகவும் எங்களை ஆணாகப் பாருங்கள் என்பது திருநம்பிகளின் கருத்தாகவும் இருக்கிறது. இந்தச் சமூகம் திருநர்களையும் சக மனிதர்களாக நேசிக்கப் பக்குவப்படவேண்டும். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7410 பார்வைகள்

About the Author

அனுதர்சி கபிலன்

அனுதர்சி கபிலன் அவர்கள் தனது இளமாணிப் பட்டத்தைத் திருகோணமலை வளாகம், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் இதழியலில் “டிப்ளோமா“ பட்டத்தைக் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் விரிவுரையாளராகப் பணிப்புரியும் அனுதர்சி முதுமாணிப் பட்டப்படிப்பைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகத்தில் வெகுஜன ஊடகவியலில் தொடர்கின்றார்.

'இலங்கை அரசியல் அரசியல்வாதிகள்' என்ற தலைப்பில் 2015 இல் அவரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நேர்காணல்கள் 2017 இல் நூல்வடிவில் வெளியிடப்பட்டது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)