Arts
12 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுப்பழக்கத்தில் பருப்பு வகைகள் – பகுதி 2

December 5, 2022 | Ezhuna

ஈழத்தில் யாழ்ப்பாணம் தனக்கென சிறப்பான உணவுப் பழக்கவழக்கங்களையும் மருத்துவத்தில் சில விசேட முறைகளையும் கொண்டிருந்தது. ஆயினும் அந்நியர் ஆட்சி, பூகோளமயமாதல், வர்த்த நோக்கிலான வாழ்வியல், நாகரிகமோகம் என்பன அந்த உணவுப்பழக்கவழக்கத்தைக் குலைத்துப்போட்டது. அதன் விளைவாக, ஆரோக்கியக் குறைபாடுகள், தொற்றா நோய்கள் என பலவீனமான சமுதாயம் ஒன்று நம்மிடையே உருவெடுத்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைத்து, மீண்டும் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எமது பாரம்பரிய உணவுமுறைமையை மீட்டெடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் உணவுப்பழக்க வழக்கங்கள், உணவுகள் என்பன தொடர்பாக  சித்தமருத்துவம், தற்கால உணவு விஞ்ஞான  ஆய்வு என்பவற்றின் நோக்குநிலையில் விளக்குகின்றது ‘மாறுபாடில்லா உண்டி’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர்.

கடலை

“கடலை வயிறூதற் கன்றா றகஞ்செய்யுங்
குடலைவலிப் பித்து மலங்கொட்டுந் – திடமருந்தைச்
சேதமுறப் பண்ணுந் தியக்கமொடு வாயுவையுந்
போத வழைக்கும் புகல்”

-பக். 253, பதார்த்தகுண சிந்தாமணி.

கடலை – வயிறு ஊத வைக்கும், அஜீரணத்தை உண்டாக்கி குடலை வலித்து மலம் போக்கும். மருந்தை முறிக்கும். ஆதலால் மருந்துண்ணுங்காலத்தில் கடலை உண்ணலாகாது. மருந்துக்கு அபத்தியமாகும். சோர்வையுண்டாக்குவதுடன் வாயுவையும் அதிகரிக்கும்.

எனவே கடலையை அளவுடன் உண்ணுதல் வேண்டும். வாயுவைக் கட்டுப்படுத்தக் கூடியதும், சமிபாட்டை சீராக்கக்கூடியதுமான பொருட்களான சீரகம், கடுகு, வெங்காயம், செத்தல்மிளகாய் என்பன கடலையுடன் சேர்க்கப்படல் வேண்டும். மதியத்துக்கு பின்னர், இரவுவேளைகளில் அதிகம் உண்ணுதல் ஆகாது.

பொதுவாக உணவுப்பொருட்களுக்கு  குறிப்பிடப்படும் உபத்திரவங்கள் அவை உட்கொள்ளும் பொழுதுகள், பருவகாலங்கள், உட்கொள்ளும் அளவு, தொடர்ச்சியாக உட்கொள்ளல், சேர்த்து உட்கொள்ளப்படும் பதார்த்தங்கள், முக்கியமாக உட்கொள்பவரின் உடலின் தன்மை (வாத, பித்த, கப உடலமைப்பு) மற்றும் சமிபாட்டுத்தொகுதியின் தன்மை (பசித்தீயின் தன்மை) என்பவற்றில் தங்கியுள்ளன.

கடலையை 2 – 3 நாட்கள் நீரில் ஊறவைத்து ,முளைவிட்டபின்னர் உணவாக்கி உட்கொள்ளும்போது மேற்படி உபத்திரவங்கள் குறைவடையும்.

கொள்ளு, எள்

“கொள்ளிற்கு வாதம் வாயு கொடுஞ்சுர வெப்பும் போகும்
எள்ளிற்கு குளிர்ச்சி யுண்டா மியம்பரும் பெலனுஞ் சேரும்
அள்ளுமிப் பிண்ணாக் குண்ண வருஞ் சல ரோக மூலம்
கொள்ளுநீர்க் கடுப்பெ ரிப்புக் குறைந்திடு மந்த மாமே”

-பக்.63, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.

கொள்ளு (காணப்பயறு)

இன்று உடல்நிறை குறைக்க விரும்புபவர்களின் தெரிவு கொள்ளாக உள்ளது. இதனால் பலன் உண்டா என்று பார்ப்போம். இதன் தாவரவியற் பெயர் – Macrotyloma uniflorum (Lam) Verdc. கொள்ளானது கருமை, செம்மை, வெண்மை என மூன்று வகைப்படும்.

“குடல்வாதங் குன்மமுண்டாங் கொள்மருந்தோ நாசம்
அடலேறு பித்தமிக ஆகுங் – கடுகடுத்த
வாதநீ ரேற்றமொடு மன்னுகுளிர் காய்ச்சலும்போஞ்
சாதிநறுங் கொள்ளுக்குத் தான்”

-பக்.393, மூலிகை வகுப்பு, குணபாடம்.

கொள்ளானது குடல் வாதத்தையும் (குடல் முறுக்கல்) குன்மத்தையும் (வயிற்றுப்புண்) உண்டாக்கும். உட்கொள்ளும் மருந்துகளை முறிக்கும். பித்தம் அதிகரிக்கும். எனவே கொள்ளினை உடல்மெலிவுக்கென நீண்டகாலம் உட்கொள்ளும்போது மேற்படி உபத்திரவங்கள் ஏற்படலாம்.

கொள்ளு சாப்பிட வாத நீரேற்றம் (சுவாசப்பையில் சளி அதிகரித்தல்), குளிர் சுரம் என்பன போகும் – நிமோனியாவுக்கு (Pneumonia) இது சிறந்த உணவு.

கொள்ளுக் கஞ்சி / அவிழ்தக் கஞ்சி

கொள்ளுக் கஞ்சியை சங்க காலத்தில் அவிழ்தக் (மருந்து) கஞ்சி எனக் குறிப்பிட்டுள்ளனர். “விற்றூற்று மூதெயினனார்” என்பவர் பாடிய அகநானூற்று 37 வது பாடலில் 12 -14 வரிகள் இதனைக் குறிப்பிடுகின்றது.

“கொள்ளோடு பயறு பால் விரை வெள்ளிக்
கோல் வரைந்தன்ன வால் அவிழ்த மிவை
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய…”

-பக். 31, சுவையான சங்ககால சமையல்.

சங்க காலத்தில் உழவுத் தொழிலில் ஈடுபட்டவர்கள், உழைத்துக் களைத்த மக்கள் கொள்ளுடன் பயறும் பாலும் சேர்த்து ஆக்கிய அவிழ்தக் கஞ்சியை போதும் என்று கை தடுக்கும் வரை உண்டனர்.

கொள்ளுக் கஞ்சிக்கு தேவையான பொருட்கள்

கொள்ளுக்-கஞ்சி
  1. கொள்ளு – 50 கிராம்
  2. பால்  – 250 மி.லீ
  3. உப்பு – தேவையான அளவு
  4. அரிசி – 100 கிராம்
  5. பச்சைப்பயறு – 50 கிராம்
  6. தண்ணீர் – தேவையான அளவு
  7. சீரகம் – 1 தேக்கரண்டி

கழுவி சுத்தம் செய்த அரிசி, பயறு, கொள்ளுடன் பால் தண்ணீர் சேர்த்து நன்கு குழைந்து அவிய விடவேண்டும். இதனுடன் உப்பு, சீரகத்தை சேர்த்து நன்கு மசித்து இறக்கிக் கொள்ளல் வேண்டும்.

கொள்ளுக் கஞ்சியைக் குடித்துவந்தால்,

  • அதிக பசி ஏற்படும்.
  • உடல்வன்மை அடையும்.
  • நலிந்த உடல் பருத்து உரமடையும்
  • வீரியவிருத்தி உண்டாகும்.

எனக் கீழ்வரும் சித்தமருத்துவ பாடல் கூறுகின்றது.

“கொள்ளுந்தண் டூலமாய்க் கூட்டியடுங் கஞ்சியது
கொள்ளுங்காற் றீபனத்தைக் கூறுவதோ – எள்ளை
நசுக்கிப் பிழிபலமு நல்விந் துவுமே
வசிக்குங் கிழவர்க்கும் வை.”

-பக்.394, மூலிகை வகுப்பு, குணபாடம்.

கொள்ளுக்கஞ்சிக்கு தீபனம் அதிகரிக்கும், எள்ளை நசுக்கிப்பிழிந்து எண்ணெய் எடுக்கும் அளவுக்கு உடல் வன்மை பெறும், விந்துற்பத்தி கிழவர்க்குக் கூட அதிகரிக்கும்.

மேற்கூறப்பட்ட பாடல்களில் கொள்ளானது உடல் எடையைக் குறைக்கும் என குறிப்பிடப்படவில்லை. எனினும் தேரையர் காப்பியத்தில் கொள்ளானது கப தோச அதிகரிப்பை, உயிரைக் கொல்வதற்கு எமன் துரத்துவது போல் துரத்தும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

காராமணி, கொள்ளு, கோதுமை

“காரா மணியுடற் காற்பிணி யொன்றாஞ்
சுரமே னிக்குரந் தொக்கவுண் டாகுமே
குலுத்தங் கபத்தினைக் கூற்றெனத் துரத்தும்
பலுத்த கோதுமையும் பண்பென லாகுமே”

-பக். 26, தேரையர் காப்பியம்.

உடற்பருமன் அதிகரிப்புக்கு கபதோசம் முக்கியமானது. இத்தோசத்தின் பஞ்சபூதக் கூறுகள் நிலமும், நீரும் ஆகும். உடலிற் சேரும் தேவையற்ற கொழுப்பு சேமிப்பின் மூலம் ஏற்படும் உடற்பருமனை இது குறைக்கும். இங்கு உடற்பருமன் மட்டுமல்லாது கபதோசத்தால் ஏற்படும் அனைத்து ரோகங்களையும் துரத்தும் எனக் கொள்ளல் வேண்டும்.

இவற்றைவிட பொட்டுக்கடலை, பட்டாணி, துவரம்பருப்பு, பாதாம்பருப்பு, மரமுந்திரிகை, மொச்சை எனப்பல பருப்புவகைகளும் நமது யாழ்ப்பாண பாரம்பரியத்தில் காணப்படுகின்றன.

எள்

கொள்ளு, எள்

யாழ்ப்பாண நூலான “அமிர்த சாகரம் பதார்த்த சூடாமணியில்” குறிப்பிட்டுள்ளதின்படி எள்ளானது உடலுக்கு குளிர்ச்சியையும் பலத்தினையும் தரும். இதிலிருந்து எண்ணெய் வடித்தபின் வரும் பிண்ணாக்கானது சலரோகம், மூலம், நீர்க்கடுப்பு, நீரெரிவு போன்றவற்றை குறைத்திடும். சோர்வினைத் தரக்கூடியது.

எள்ளும் எள் சார்ந்த உணவுப்பொருட்களும், எள்ளெண்ணெயும் யாழ்ப்பாண தமிழர் வாழ்வியலில் அதிமுக்கியம் வாய்ந்த இடத்தைக் கொண்டவை. உணவாக உட்கொள்ளல், உடலுக்கு வெளிப்பிரயோகம் என கைமருந்தாகவும், சித்தமருத்துவத்தில் மருந்தாகவும் சமய சடங்குகளில் முதன்மையான தானியமாகவும் காணப்படுகின்றது.

“எள்ளுமருந்தைக் கெடுக்கு மேறனலாந் திண்மைதரு
முள்ளிலையைச் சேர்க்கு முதிரத்தைத் – தள்ளுமிரு
கண்ணுக் கொளிகொடுக்குங் காசமுண்டாம் பித்தமுமாம்
பண்ணுக் கிடர்புரியும் பார்”

– பக்.254, பதார்த்த சூடாமணி

எள்ளானது உடலுக்கு வன்மையைத் தரும். பெண்களின் வயிற்றில் (கருப்பையில்) கட்டுப்பட்ட குருதியை வெளித்தள்ளும். இதனாலேயே கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. கண்ணுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து சிறந்த ஒளியைக் கொடுக்கும்.

காசம் எனப்படும் நோயை உண்டாக்கும். பித்ததோசத்தை அதிகரிக்கும். எள்ளானது சுவையில் இனிப்பு சுவையை சார்ந்ததாக இருப்பினும் இதன் தன்மை வெப்பத்தை உண்டாக்கும். பித்ததோசத்தை அதிகரிப்பதால் உடலுக்கு வன்மையுடன் வெப்பத்தையும் அதிகரிக்கும்.

எள் மருந்துக்கு ஆகாது. மருந்தை முறிக்கும். எனவேதான் சித்தமருத்துவத்தில் பொதுவான பத்தியாபத்தியத்தில் எள் சேர்க்கக்கூடாத (அபத்தியமான) பொருளாகக் காணப்படுகின்றது. இது பற்றி பதினெண் சித்தர்களில் ஒருவரான தேரையரும் தனது நூலான தேரையர் காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“திலமுடற் கியல்வது செய்யுர மேனும்
நலமெனப் படாதது நன்மையைக் கெடுக்கும்”

-பக். 26, தேரையர் காப்பியம்

எள்ளானது உடலுக்கு வன்மையைத் தரினும் அதிகமாகப் பயன்படுத்துவது நல்லது அன்று. அதேவேளை அதிகம் பயன்படுத்தும்போது அதனால் ஏற்படும் நன்மைகளையும் கெடுக்கும்.

அத்துடன்  நோய் நிலைகளில் உடலுக்கு நன்மை தரக்கூடியதன்று. பத்தியாபத்தியம் தொடர்பான பாடலிலும் எள்ளினைக் அபத்தியமாக குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அபத்தியப்பொருட்களுக்குள் எள்ளும், எள்ளெண்ணெய்யும் சேர்க்கப்பட்டிருப்பதால் இவற்றை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் எனக் கொள்ளலாம்.  

உளரீதியான ஆரோக்கியத்துக்கு எள்ளில் உள்ள புரதம் உதவுகின்றது. எமது மனமானது பதற்றமில்லாது, மனச்சோர்வு இல்லாது இருப்பதற்கும், மனநிலையை மகிழ்ச்சியாகவும் நிலையாகவும் வைத்திருப்பதற்கு செரரோனின் (Serotonin) என்னும் ஓமோன் காரணமாகின்றது. இதன் உற்பத்திக்கு ரிப்ரோபன் (Tryptophan) என்னும் புரதக்கூறான அமினோஅமிலம் உதவுகின்றது. இந்த ரிப்ரோபன் ஆனது எள்ளில் அதிகளவு காணப்படுகின்றது. இதனால் எள்ளினை உண்ணும்போது மனம் இலகுவாகின்றது, மகிழ்வடைகின்றது.

அண்மைய ஆய்வுகளின் பிரகாரம் எள்ளின் பயன்கள்

  • வயதுமுதிர்வால் ஏற்படும் உபத்திரவங்களில் இருந்து பாதுகாக்கும்.

சித்தமருத்துவம், ஆயுள்வேத மருத்துவம், சீன மருத்துவம் என்பன எள்ளினை முடியுதிர்தல், தலைமயிர் நரைத்தல், ஞாபகசக்திக் குறைபாடு, கண்பார்வைக் குறைபாடு, தோல்சுருக்கம் போன்ற பல்வேறு வயது முதிர்வுடன் குறைபாடுகளுக்கு பயன்படுத்துகின்றன. அதேபோல் பெண்களுக்கு மாதசுகயீனம் நிற்றலுடன் ஏற்படும் உபத்திரவங்களில் (Postmenopausesal Syndromes) இருந்து பாதுகாக்கின்றது. இதற்கு எள்ளில் உள்ள தாவர இரசாயனங்கள் (Phyto chemicals), இரும்புச்சத்து, B வகை உயிர்ச்சத்துக்களும்  காரணமாகின்றன.

எள்ளில் காணப்படும் தாவர இரசாயனங்களில் வயது முதிர்வடைவதைத் தடுக்கும் தாவர இரசாயனம் Antioxidant சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள “கற்பம்” போன்றதாகும்.

கற்பங்கள் (Antioxidants) உடற்கலங்கள் சிதைவடைந்து அழிவதை, மூப்படைவதைத் தடுத்து உடலை உறுதியுடன் இளமையாக வைத்திருக்கக் கூடியன. எள், நல்லெண்ணெய்யில்  காணப்படும் கற்பங்கள் ஆவன,

  1. உயிர்ச்சத்து – E
  2. Phytosterols
  3. Lignans
  4. Sesamol
  5. Sesaminol

இங்கு Lignanas தாவர இரசாயனமானது முக்கியமானதொரு தாவர ஈஸ்ரோஜன் (Phytoestrogen) ஆகும். இது ஈஸ்ரோஜன் ஓமோனின் கட்டமைப்பை செயற்பாடுகளை கொண்டதாகக் கருதப்படுகின்றது. இது மார்பகப்புற்று நோய் வருவதை தடுக்கின்றது.

இதனாலேயே எமது யாழ்ப்பாணக் கலாசாரத்தில் பெண்களின் உணவில் முதன்மை இடத்தை நல்லெண்ணெய் பிடித்துள்ளது. பெண்கள் பருவமடையும் வயதுகளில், முதல் பூப்படைந்த காலங்களில் நல்லெண்ணெய் அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார்கள். இன்றும் பெண்கள் பருவமடைந்தால் உறவினர்கள், ஊரவர்கள் முட்டை, உளுந்து இவற்றுடன் நல்லெண்ணெயும் சேர்த்து கொடுப்பது வழக்கம்.

பெண்கள் 40 வயதின் பின்னர் நல்லெண்ணெய் பயன்படுத்துவது மாதசுகயீனம் நிற்றலுக்கு பின்னரான உபத்திரவங்களைக் தடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக நல்லெண்ணெய்யில் காணப்படும் தைரோசின் (Tyrosine) எனப்படும் அமினோஅமிலம் (புரதக்கூறு) செரடோனின் (Serotonin) என்னும் ஓமோன் சுரப்பை நன்றாகத் தூண்டுகின்றது. இது மனச்சோர்வு, உளநெருக்கடியைக் குறைத்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக மாதசுகயீனம் நிற்றலுக்கு பின்னரான குழப்பமான மனநிலை, மனச்சோர்வு என்பவற்றை குறைக்க உதவுகின்றது. மேலும் எள்ளில் உள்ள தாவர இரசாயனங்கள் நோய்கள் ஏற்படாது தடுப்பதுடன், நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.

  • தோலுக்கும் என்புகளுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கின்றது.

எள்ளில் உள்ள கல்சியம் என்பின் வன்மையாக்குகின்றது. அத்துடன் எள்ளில் காணப்படும் நார்ச்சத்தானது என்பின் அடர்த்தியைக் அதிகரிக்கின்றது. இதனால் வயதுடன் ஏற்படும் என்பு அடர்த்தி குறைதல், என்பு மூட்டுநோய்கள் என்பவற்றிலிருந்து பாதுகாக்கின்றது.

எள்ளில் அதிகமாகக் காணப்படும் உயிர்ச்சத்து E ஆனது தோலின் ஆரோக்கியத்தை நன்கு பாதுகாக்கின்றது. எள்ளில் இருந்து பெறப்படும் நல்லெண்ணெய் ஆனது உடலுக்கு பூசி உடலைப்பிடித்துவிடுவதன் மூலம் தோல் ஆரோக்கியம் பேணப்படுவதுடன் தோலில் ஏற்படும் நோய்களில் இருந்தும் பாதுகாக்கின்றது. குழந்தைகள் சிறுவர்களுக்கு நல்லெண்ணெய் பூசி உடலைப்பிடித்துவிடல் ஆரோக்கியமான பழக்கமாகும்.

  • இதயத்துக்கு சிறந்தது.

எள்ளில் காணப்படும் தாவர இரசாயனங்களான Sesamol, Sesaminol என்பன குருதியில் கொலஸ்திரோல் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. அதேவேளை எள்ளில் காணப்படும் மக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றது.

எள்ளில் உள்ள Phytosterols ஆனது கொலஸ்திரோல் அகத்துறிஞ்சலைக் குறைப்பதன் மூலம் உடலில் கொலஸ்திரோலின் அளவைக் குறைக்கின்றது. அதேபோல் உள்ளில் உள்ள ஒமேகா-3, ஒமேகா-6, ஒமேகா-9 என்பன கொலஸ்திரோலையும் Triglycerides ஐயும் கட்டுப்படுத்துகின்றன. இவற்றின் மூலமாக எள் இதயத்துக்கு பாதுகாப்பாக இருக்கின்றது.

  • தாய்ப்பால் சுரத்தலை அதிகரிக்கும்

கல்சியம், இரும்பு, நாகம், மக்னீசியம், செப்பு போன்ற கனிமச்சத்துக்களையும், B வகை உயிர்ச்சத்துக்களையும், கற்பங்களையும் அதிகம் கொண்டிருப்பதால் தாய்ப்பால் சுரத்தலை அதிகரிக்கின்றது.

எள்ளுப்பாகு

தேவையான பொருட்கள்

எள்ளுப்பாகு-1
  1. எள் – ¼ கிலோகிராம்
  2. சீனி – ¼ கிலோகிராம்
  3. பச்சையரிசி – ½ சுண்டு
  4. உளுந்து (வறுத்தது) – ½ சுண்டு
  5. நற்சீரகப்பொடி – 2 தேக்கரண்டி
  6. மிளகு தூள் – 1 தேக்கரண்டி
  7. கொதிநீர் – ½ டம்ளர்.

எள்ளைக்கழுவி துப்பரவாக்கி காயவைத்து எடுத்துக்கொள்ளவும். பச்சை அரிசியுடன் தோல்நீக்கிய உளுந்தினைச் சேர்த்து அரைத்து மாவாக்கி எடுத்துக்கொள்க. சீனியை மாவாக அரைத்துக் கொள்க.

எள்ளினை உரலில் இட்டு மசிய இடித்துக்கொண்டே கொதி நீரை சிறிதுசிறிதாக சேர்த்து இடித்துக்கொள்ளவும். இவ்வாறு இடித்துக்கொண்ட பின்பு இடித்த எள்ளினுள் சீரகப்பொடி, மிளகுதூள், அரைத்து வைத்துள்ள சீனி, அரைத்து வைத்துள்ள அரிசிமா என்பவற்றை சேர்த்து பிசைந்தபின் நன்றாக மீண்டும் இடித்துக்கொள்க.

நன்றாக இடிபட்டு எண்ணெய்த்தன்மை தோன்றி உரலை விட்டுத்திரளும் பதத்தில் இறக்கி உருண்டைகளாக்கி கொள்ளவும். எள்ளுப்பாகு ஆனது கொழுப்புச்சத்து, மாச்சத்து, புரதம் என்பவற்றுடன் கல்சியம், இரும்புச்சது,  B வகை உயிர்ச்சத்துகளை அதிகம் கொண்டுள்ளதால் சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாக உள்ளது.

எள்ளில் இருந்து பெறப்படும்  எள்ளெண்ணெய் ஆனது தமிழர் பாரம்பரியத்தில் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இந்த எண்ணெயின் குணங்களைக் கருத்திற்கொண்டே இது தமிழர் பாரம்பரியத்தில் நல்லெண்ணெய் எனப் பெயர் பெறலாயிற்று.

பொதுவாக எள்ளின் பயன்கள்

  • நிறைந்த நார்ச்சத்து கொண்டது
  • கெட்ட கொழுப்புக்களைக் குறைக்கும்
  • புரதச்சத்துக்கான சிறந்த உணவு
  • இரத்த அழுத்தத்தை குறைக்கும்
  • ஆரோக்கியமான என்புக்கு உதவும்
  • உடலில் ஏற்படும் தாபிதங்களைக் குறைக்கும்
  • B வகை உயிர்ச்சத்துக்களுக்கான சிறந்த உணவு
  • குருதிக்கலங்கள் உருவாக்கத்துக்கு உதவுதல்.

எனவே எள்ளின் சிறப்பினை அறிந்து அளவோடு உண்டு நன்மையடைவோம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

15093 பார்வைகள்

About the Author

தியாகராஜா சுதர்மன்

தியாகராஜா சுதர்மன் அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவ பட்டதாரியும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானத்தில் பட்டப்பின் டிப்ளோமா பட்டதாரியும், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் உளவளத்துணை டிப்ளோமா பட்டதாரியும் ஆவார்.

அரச சித்த மருத்துவ உத்தியோகத்தராகப் பணிபுரியும் இவர் ஒரு சிறுகதை எழுத்தாளருமாவார். இவர் 'ஆகாரமே ஆதாரம்' எனும் நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)