Arts
6 நிமிட வாசிப்பு

ஈழத்துக் கடலுணவுகளும் சாதக பாதகங்களும்

July 7, 2023 | Ezhuna

ஈழத்தில் யாழ்ப்பாணம் தனக்கென சிறப்பான உணவுப் பழக்கவழக்கங்களையும் மருத்துவத்தில் சில விசேட முறைகளையும் கொண்டிருந்தது. ஆயினும் அந்நியர் ஆட்சி, பூகோளமயமாதல், வர்த்த நோக்கிலான வாழ்வியல், நாகரிகமோகம் என்பன அந்த உணவுப்பழக்கவழக்கத்தைக் குலைத்துப்போட்டது. அதன் விளைவாக, ஆரோக்கியக் குறைபாடுகள், தொற்றா நோய்கள் என பலவீனமான சமுதாயம் ஒன்று நம்மிடையே உருவெடுத்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைத்து, மீண்டும் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எமது பாரம்பரிய உணவுமுறைமையை மீட்டெடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் உணவுப்பழக்க வழக்கங்கள், உணவுகள் என்பன தொடர்பாக  சித்தமருத்துவம், தற்கால உணவு விஞ்ஞான  ஆய்வு என்பவற்றின் நோக்குநிலையில் விளக்குகின்றது ‘மாறுபாடில்லா உண்டி’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர்.

இறைச்சி வகைகளுடன் ஒப்பிடும்போது பொதுவாகக் கடல் உணவுகளே சிறந்த ஆரோக்கியமிக்க உணவு வகைகளாகக் கருதப்படுகின்றன. கடல் உணவுகளானது இதய நோய்கள், வாதநோய்கள், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, அதியுடற் பருமன் போன்றவற்றின் தாக்கங்களைக் குறைக்கின்றன.

இதற்கு காரணம் கடல் உணவுகளில்,

  1. நிரம்பிய கொழுப்புக்கள் (Saturated fat) குறைவு. அதேவேளை இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒமேகா 3 (Omega 3) கொழுப்பமிலங்கள் உட்பட, நிரம்பாத கொழுப்புக்களையும் (Unsaturated fatty acids) கொண்டவை. ஒமேகா 3 கொழுப்பமிலங்களில் விசேடமாக Eicosatetraenoic acid (EPA). Docosahexaenoic acid (DHA) என்பன எல்லாக் கடல் உணவுகளிலும் காணப்படுகின்றன. இக்கொழுப்பமிலங்ககள் இரத்த அழுத்தத்தையும், இதயத் துடிப்பையும் சீராக வைத்திருக்க உதவுவதுடன், இதய இரத்தக்குழாய்களின் தொழிற்பாட்டுக்கும், மூளை விருத்திக்கும் பார்வைக்கும் உதவுகின்றன. ஒப்பீட்டளவில் அதிகளவு கொழுப்பைக் கொண்டதனாலேயே ஒருவகை மீன் நெய்த்தோலி / நெத்தலி மீன் எனப்படுகின்றது.
  2. மீனில் உள்ள புரதம்   தரமானதும் அதிகளவு அமினோஅமிலங்களைக் கொண்டதும் இலகுவாகச் சமிபாடு அடையக்கூடியதும் ஆகும். இவற்றின் நிறையில் 18 – 20 வீதம் புரதத்தைக் கொண்டுள்ளன. இங்கு வெவ்வேறுபட்ட மீன்வகைகள் வெவ்வேறுபட்ட பயன்களைக் கொண்டுள்ளன. கடல் மீன்கள், நன்னீர் மீன்கள், மீன் வகைகளில் உப இனங்கள் என வகைகள் வேறுபடுகின்றன. 
  3. கடல் உணவுகள் கல்சியம் சத்துக்கான சிறந்த உணவுப் பொருட்களாகும். சிறிய மீன்வகைகள் சிறந்தவை. இறாலின் தலைப்பகுதி அதிக கல்சியத்தைக் கொண்டது.
  4. அதிகளவு உயிர்ச்சத்து D கொண்டவை. கல்சியம் அகத்துறிஞ்சலுக்கு உயிர்ச்சத்து D அவசியம். இதனால் கடல் உணவுகளில் இருந்து கல்சியம்  இலகுவாக அகத்துறிஞ்சப்படுகின்றது.
  5. மீன்வகைகளில் அகத்துறிஞ்சக் கூடிய நிலையில்   இரும்புச்சத்து உள்ளது.
  6. மட்டியில் அதிகளவு நாகச்சத்து, செலனியம், அயோடின் என்பன காணப்படுகின்றன. இதனால் கண்டக்கழலை நோய் வராமல் பாதுகாக்கக்கூடியது.

ஒரு நாளைக்கு சமைத்த கடல் உணவுகள் குறைந்தது 60 கிராம் தொடக்கம் 120 கிராம் வரை உண்ணலாம். கருவாட்டு வகை எனில் 45 கிராம் தொடக்கம் 60 கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரேமாதிரியான கடல் உணவுகளை உண்பதிலும் பார்க்க பல வகைகளையும் உண்பது சிறந்தது. பொதுவாக கிழமையில் 2 – 3 நாட்கள் இவ்வாறாக கடல் உணவுகளை உட்கொள்வதுடன் ஏனைய நாட்களில் ஏனைய இறைச்சி, பருப்புக்கள் போன்ற உணவுகளை உட்கொள்வது நன்று. கர்ப்பிணித்தாய்மார், பாலூட்டும் தாய்மார் ஒருநாளுக்கு தேவையான அளவினை குறைந்தது 120 கிராம் ஆகவும் கிழமையில் கடல் உணவுகளை அதிக நாட்கள் எடுத்தலும் நன்று.

கருவாடு சமைக்கும்போது உப்பின் அளவு மிகக்குறைத்து பயன்படுத்துதல் வேண்டும்.

கடல் உணவுகளின் விசேட பயன்கள்

  • மீன் – இரத்த அழுத்தத்தை சீராகப் பேணும். நிறைந்த புரதங்களைக் கொண்டிருப்பதனால் தசை வளர்ச்சிக்கு உதவும். அதிகளவிலான உயிர்ச்சத்துக்களையும் கனிமங்களையும் கொண்டிருப்பதனால் நோயெதிர்ப்புச் சக்தி, நரம்புகள் மற்றும் என்புகளின் ஆரோக்கியத்துக்கு சிறப்பானது.
  • கணவாய் – அதிகளவிலான இரும்புச்சத்தைக் கொண்டுள்ளது. இதனால் குருதிச்சோகை ஏற்படாது.
  • நண்டு – ஞாபகமறதி ஏற்படுவதைக் குறைக்கும். இரும்புச் சத்து, போலேற், B12 அதிகம் கொண்டது. குருதிச்சோகையை மாற்றும்.
  • இறால் – செங்குருதிச் சிறுதுணிக்கைகளின் உற்பத்தியை அதிகரிக்கும். குருதிச்சோகையை தடுக்கும்.
  • கூனி இறால் – நிறைந்த கற்ப சத்துக்களைக் (Antioxidants) கொண்டது.

பொதுவான மேற்படி நன்மைகளுடன் கடல் உணவுகளின் சில சிறப்பான நன்மைகளை சித்தமருத்துவம் கூறுகின்றது.

நண்டு

“நண்டினிற் றாது நட்ட நணுகாது சுரங்கண் ணோய்போம்
கொண்டமேல் வீக்கம் வாதங் குறைந்துடல் வாடு மென்ப…”

பக்.89, அமிர்தசாகரம் பதார்த்தசூடாமணி

நண்டினை உட்கொண்டால் தாதுக்கள் விருத்தி உண்டாகி உடல் பலமடையும். சுரங்கள், கண் நோய் என்பனவற்றுக்கு சிறந்தது. உடல் வீக்கம் குறையும் (குருதிச்சோகையால் ஏற்பட்ட உடல் வீக்கம்), வாதம் பலவீனப்படும்.   சிலருக்கு அஜீரணம் ஏற்பட்டு வயிற்று வலி ஏற்படும். இதனால் உடல் சோர்ந்து போகும்.

இவற்றினாலேயே நண்டு சமைக்கும்போது அதிகம் உள்ளி, இஞ்சி சேர்ப்பதுண்டு. நண்டினை இரசமாக (Soup) அல்லது கூழ் உணவு வகையில் சேர்த்துச் சமைப்பது சிறந்தது.

சுறா, அயிரை, திருக்கை

“சுறாக்கறி கிராணி குன்மஞ் சூலைவன் னதிசா ரத்தோ
டறாப்பிணி சுரமும் போக்கு மயயிரைமீ னரோசி போக்கும்
சிறார்க்கு நன்றாகு மன்னஞ் செரித்திடுந் திருக்கை மீனால்
உறவாத பித்தந் நாளு முறும்பசி பெலனுண் டாமே”

பக்.90, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி

சுறாமீன் கறி – நாட்பட்ட நிணக்கழிச்சல், வயிற்றுப்புண், வயிற்று வலி, தீவிரமான கழிச்சல் இவற்றுடன் கூடிய காய்ச்சலுக்கு சிறந்ததாகும். அயிரை மீன் கறி – உணவில் விருப்பமின்மை, பசியின்மை என்பவற்றுக்கு சிறந்தது. அத்துடன் சிறுவர்களில் நன்றாக செரிமானத்தை ஏற்படுத்தும். திருக்கைக் கறி – வாத பித்த தோசங்கள் சேர்ந்தே சீராகி நாளும் நல்ல பசி உண்டாகும். அத்துடன் உடல் நன்கு பலமடையும்.

வாளைமீன், வாளைக் கருவாடு ஏனைய கருவாடுகள்

“வாளைமீன் பலமாம் வாத மருவுமிக் கருவாட் டிற்கு
மீள்வலி பித்தம் வாயு விலக்கிடும் பெலனுண் டாக்கும்
கேள்மற்றுங் கருவாட் டிற்கும் கிளர்மந்தஞ் சேட குன்மம்
மாளுமே பசியுண் டாகும் வயிற்றுறு வலியும் போமே”

பக்.90, அமிர்தசாகரம் பதார்த்தசூடாமணி

வாளைமீன் உடலுக்குப் பலத்தைத் தரும். இதன் கருவாட்டுக்கு வாத நோய்கள் குறைந்திடும். வலிகள், வயிற்றுக்கோளாறுகள், எரிவு, தோல் நோய்கள், உயர் இரத்த அழுத்தம் போன்ற பித்ததோச, வாயு உபத்திரவங்கள், என்பவற்றை குறைத்திடும். ஏனைய கருவாடுகளுக்கு மந்தம், ஐயகுன்மம் (ஒருவகை வயிற்றுப்புண்) தீரும். பசி உண்டாகும். வயிற்றுவலிகள் குறையும்.

இறால், உழுவை, கெண்டை

“இறான்மிக மந்த மென்ப வினிமையா மதுர மாகும்
உறாவெட்டை யுழுவை யுண்ணி லொண்மையா மனஞ்செ ரிக்கும்
அறாக்கெண்டை மீனையுண்ணி லரிப்பொடு வயிற்று நோயும்
பொறாமற்று நோயும் புண்ணும் பொருந்திடும் வாய்வுண் டாமே”

பக்.90, அமிர்தசாகரம் பதார்த்தசூடாமணி

அறுசுவைகளில் இனிப்புத் தன்மையையுடைய இறால், மிக மந்தத்தை சோர்வையும் ஏற்படுத்தும். உழுவை மீன் சூடாகும் (வெப்ப வீரியம்) இதனால் நெஞ்செரிவு ஏற்படும். கெண்டை மீன் கிரந்தியாகும். இதனால் உடலில் அரிப்பு, அசீரணம் என்பவற்றுடன் ஒவ்வாமைகளும் ஏற்படும். புண் ஏற்படும். உடலில் வாயுவை உண்டாக்கும்.

 மடவை, கத்தலை, சிற்றிறால்

“மடவைமீன் கரப்பன் வாதம் வளர்மூல மந்தத் தோடு
குடல்வாதஞ் சூலை சேர்க்குங் குறித்தகத் தலைமீ னுண்ணில்
மடியுறு பொருமல் பேதி வளர்ந்திடுங் கரப்பன் றீரும்
வடிவில்சிற் றிறால்க ரப்பன் வாதந்தீ பனமுண் டாக்கும்”

பக்.90, அமிர்தசாகரம் பதார்த்தசூடாமணி

மடவை மீன் கறியானது தோல் நோய்கள், வாதம், மூலநோய், சோர்வு என்பவற்றுடன் குடலில் வலி என்பவற்றை உருவாக்கும். கத்தலை  மீன் கறியானது வயிற்றில் ஏற்பட்ட பொருமல், வயிற்றோட்டம், தோல் நோய்கள் என்பவற்றை குறைத்திடும்.வடிவத்தில் சின்ன இறால் / கூனி இறால் தோல் நோய்கள், வாதம், பசி என்பனவற்றை அதிகரிக்கும்.

கெளிறு, வரால், ஆமை

“கெளிறுணப் பசியுண் டாகுங் கிளர்பித்தம் வாதம் போகும்
தெளிவரா லுண்ண வாதஞ் சேடமே பித்தம் வாயு
எளிதினின் மாறு மாமை யின்கறி கிராணி பித்தம்
ஒளிவிலா வாத சேட முண்மூல மதிசா ரம்போம்”

பக்.90, அமிர்தசாகரம் பதார்த்தசூடாமணி

கெளிறு மீன் கறி உண்ண பசி அதிகரிக்கும். வாதம், பித்த தோசங்கள் தம் இயல்பு நிலைக்கு வரும். இதனால் இவை தொடர்பான நோய்கள் குறைவடையும்.

வரால் மீன் / விரால் மீன் கறியுண்ண  காமாலை, பெருவயறு, வயற்றுப்புண் போன்ற வாதத்துடன்  சேர்ந்த கப நோய்கள், பித்தத்தினால் ஏற்படும் நோய்கள், உடலில் ஏற்படும் வாயு என்பன குறையும்.

ஆமையின் கறியுண்ண நீண்ட கால வயிற்றுழைவு, கழிச்சல் பித்த நோய்கள், வயிற்றுப்புண், பெருவயிறு, காமாலை போன்ற வாதகப நோய்கள், உள்மூலம், வயிற்றுப்போக்கு என்பன குறைவடையும். பொதுவாக உணவுக்கால்வாயுடன்  தொடர்பான நோய்கள் மேற்குறிப்பிட்ட மீன்கள், ஆமைக்கறி என்பனவற்றுக்கு சீராகின்றன.

தொடரும்.


5330 பார்வைகள்

About the Author

தியாகராஜா சுதர்மன்

தியாகராஜா சுதர்மன் அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவ பட்டதாரியும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானத்தில் பட்டப்பின் டிப்ளோமா பட்டதாரியும், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் உளவளத்துணை டிப்ளோமா பட்டதாரியும் ஆவார்.

அரச சித்த மருத்துவ உத்தியோகத்தராகப் பணிபுரியும் இவர் ஒரு சிறுகதை எழுத்தாளருமாவார். இவர் 'ஆகாரமே ஆதாரம்' எனும் நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)