Arts
17 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண பாரம்பரிய உணவில் கீரை, இலைவகைகள் – பகுதி 1

February 3, 2023 | Ezhuna

ஈழத்தில் யாழ்ப்பாணம் தனக்கென சிறப்பான உணவுப் பழக்கவழக்கங்களையும் மருத்துவத்தில் சில விசேட முறைகளையும் கொண்டிருந்தது. ஆயினும் அந்நியர் ஆட்சி, பூகோளமயமாதல், வர்த்த நோக்கிலான வாழ்வியல், நாகரிகமோகம் என்பன அந்த உணவுப்பழக்கவழக்கத்தைக் குலைத்துப்போட்டது. அதன் விளைவாக, ஆரோக்கியக் குறைபாடுகள், தொற்றா நோய்கள் என பலவீனமான சமுதாயம் ஒன்று நம்மிடையே உருவெடுத்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைத்து, மீண்டும் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எமது பாரம்பரிய உணவுமுறைமையை மீட்டெடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் உணவுப்பழக்க வழக்கங்கள், உணவுகள் என்பன தொடர்பாக  சித்தமருத்துவம், தற்கால உணவு விஞ்ஞான  ஆய்வு என்பவற்றின் நோக்குநிலையில் விளக்குகின்றது ‘மாறுபாடில்லா உண்டி’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர்.

இங்கு குறிப்பிடப்படும் தாவர உணவு வகைகளின் குணங்கள் அவற்றின் தனியான குணங்களாகும். இவற்றினை நாம் உணவாக்கிக் கொள்ளும்போது அவற்றின் குணங்களில் மாற்றங்கள் ஏற்படக் கூடியவாறே எமது பாரம்பரிய உணவுப்பழக்கங்கள் அமைந்துள்ளன. உணவுப்பொருட்கள் எல்லாவற்றுக்குமே இவை பொருந்தும்.

உணவுப் பொருட்களில் உள்ள நற்குணங்களை அதிகரிக்கவும், ஒவ்வாத குணங்களை இல்லாமல் செய்வதற்கு அல்லது குறைப்பதற்கும் ஏற்றவாறே நமது பாரம்பரிய உணவுத் தயாரிப்பு முறைகள் அமைந்துள்ளன. ஏற்கனவே குறிப்பட்டதுபோல் திரிதோச சமதிரவியங்கள் உணவு வகைகளில் சேர்த்தல், சில உணவுப் பொருட்களை சமைக்கும்போது சேர்க்கப்படும் ஏனைய சேர்க்கைகள் என்பனவும் இவ்வாறே அமையப் பெற்றுள்ளன.

அவற்றைவிட உணவுகளை உண்ணும் அளவு, காலங்கள், சமையல் முறைகள் என்பனவும் அமையப் பெற்றுள்ளன. எனவே இங்கு குறிப்பிடப்படும் உணவுப்பொருட்களின் குணங்களைக்  கருத்தில் கொள்ளும் அதே அளவு சிரத்தையினை அவற்றுடன் சேர்க்கப்படும் திரிதோச சமதிரவியங்கள், ஏனைய சேர்க்கைகள், சேர்க்கக்கூடாதவை, சமையல் முறைகள், உண்ணும் காலங்கள், அளவு என்பனவற்றையும் கருத்தில் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்கு முக்கியமானதாகும்.

கீரை-வகைகள்

எமது பாரம்பரிய உணவுப்பழக்கமானது ஆரோக்கியத்துக்கான முற்பாதுகாப்பினையே (Preventive care) அடிப்படையாகக் கொண்டது. சில உணவுப்பொருட்கள் ஆரோக்கியமற்ற குணங்களைக் கொண்டாலும் அவற்றிலிருந்து பயன்பெறக் கூடியவாறே எமது உணவுப்பழக்கம் அமைந்துள்ளது. இன்று நாம் அவற்றைக் கவனிக்காது செல்லும்போதுதான் எமது ஆரோக்கியம் கேள்விக்குறியாகின்றது.

கீரை, இலை வகைகள்

பொதுவாக கீரை வகைகளில் அடங்கியுள்ள சத்துக்கள் மிகக் குறைந்தளவு வேறுபாடுகளையே காட்டுகின்றன. ஆனால் அவை கொண்டுள்ள தாவர இரசாயனங்களின் அடிப்படையில் மருத்துவக் குணங்கள் வேறுபடுகின்றன.

இலங்கையைப் பொறுத்தளவில் கீரைவகைகள், இலைவகைகள் தாராளமாகக்  கிடைக்கக்கூடியனவாகக் இருப்பதுடன், பணமின்றிப் பெறக்கூடியவையாகவும் இருக்கின்றன. ஆனால் இன்று இவற்றைப் பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும், நோய்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

கீரைவகைகளில் அதிகம் காணப்படும் சத்துக்கள் (100 கிராமில்)

முளைக்-கீரை

கீரைவகைகள் அனைவருக்கும் உகந்த உணவாகக் காணப்படுகின்றன. கீரை சமைக்கும்போது தேசிப்புளியே அதிகம் சேர்க்கப்படும். இங்கு தேசிப்புளியில் அதிகம் உயிர்ச்சத்து C  காணப்படுகின்றது. இது கீரையில் உள்ள இரும்புச்சத்தினை நன்றாக அகத்துறிஞ்சுவதற்கு உதவுகின்றது.

முளைக் கீரை – கீரைத் தண்டு

அன்றாட பாரம்பரிய உணவில் முளைக்கீரை பிரதான பாகம் வகிக்கின்றது. அதிலும் முக்கியமாக பௌர்ணமி, அமாவாசை, புரட்டாதி மாத சனீஸ்வரன் விரதம் போன்ற பல்வேறு விரதங்களில் கீரை பிரதானமாகின்றது. கீரைப்பிட்டு, பிட்டும் கீரைக்கறியும் யாழ்ப்பாணத்துக்குரிய பாரம்பரிய உணவுப்பழக்கங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. குரக்கன், தினை, சாமை போன்ற சிறுதானியங்களில் பிட்டு போன்ற உணவுகள் தயாரிக்கும்போது கீரை சேர்த்து செய்வது வழக்கமாகும்.

யாழ்ப்பாண சித்தமருத்துவ நூலாகிய பதார்த்த சூடாமணியில் முளைக்கீரை தொடர்பில் கூறப்பட்டுள்ளதாவது,

“முளைக்கீரை யரோசி போக்கு மொழியிற்பத் தியத்திற் காகும்
தளர்ச்சிசே ருடலைத் தேற்றுந் தனையரா தியர்க்கு மாகும்
விளைத்திடுங் கீரைத் தண்டு வெட்டைநீர்க் கடுப்புச் சீதம்
உளைத்திடு மூல ரத்தம் போம்வலி வாய் வுண்டாமே”

– பக். 64, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.

முளைக்கீரையானது பசியின்மை, உணவில் வெறுப்பு, ஓங்காளம் என்பவற்றைப் போக்கும். பத்தியத்துக்கு உகந்தது. தளர்வடைந்த (சோர்வடைந்த) உடலைத் தேற்றும். தளர்ச்சி / சோர்வு / களைப்பு என்பது குருதிச்சோகையின் முதன்மையான குணமாகும்.

கீரைத் தண்டானது அதிக குளிர்ச்சிக் குணம் கொண்டது. சூட்டினால் அல்லது அதிக வெப்பத்தினால் ஏற்படும் நீர்க்கடுப்பு, சிறுநீரகத் தொற்று, நீரிழிவு என்பனவற்றை கட்டுப்படுத்த உதவுகின்றது. வயிற்றுக்கடுப்பு, சீதபேதி தீரும். மூலத்தால் இரத்தம் போதல் நிற்கும். ஆனால் அதிக குளிர்ச்சியைக் கொண்டிருப்பதால் உடல் வலி, வாதம் என்பன அதிகரிக்கும்.

“தளர்ந்தவர்க்கும் பாலர்க்குந் தக்கவயதோர்க்கும்
மிளங்கீரை நாவுக் கிதமாங் – கிளம்பு
சுரகாசம் போக்குந் தொடர்பசி யுண்டாக்கும்
பிரகாசமா யெடுத்துப் பேசு”

– பக் 190, பதார்த்தகுண சிந்தாமணி.

நோயுற்றவர்கள், குழந்தைகள், சிறுவர்கள், அனைத்து வயதினர்க்கும் இளங்கீரை நாவுக்கு இதமாக இருப்பதுடன் உடலுக்குப் பொருந்தக்கூடியதும் ஆகும். ஒவ்வாமைகளால் வரும் காய்ச்சலைப் (சுரகாசம்) போக்கும். நல்ல பசியை உண்டாக்கும்.

இறால் கீரைப் பிட்டு

தேவையான பொருட்கள்

  • அரிசி மா – 1 ½   சுண்டு
  • தேங்காய்ப் பூ – 3 மேசைக்கரண்டி
  • கூனி இறால் – 150 கிராம் (கோது நீக்கியது)
  • கீரை – 250 கிராம்
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • பச்சை மிளகாய் – 4
  • உப்பு – தேவையான அளவு

வழமையாகப் பிட்டுச் செய்வது போன்று அரிசிமாவினை கொதிநீர் கலந்து பிட்டைக் கொத்திக் கொள்ளவும். கீரையை நன்றாக அரிந்து சிறிதளவு உப்புச் சேர்த்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றையும் சிறிதுசிறிதாக அரிந்து கொள்ளவும்.கோது நீக்கி சுத்தம் செய்த இறாலுக்கு தேவையான அளவு உப்புச் சேர்த்து பிரட்டிக்கொள்ளவும்.

பின்பு பிட்டுமா, கீரை, தேங்காய்ப்பூ, பச்சைமிளகாய், வெங்காயம், இறால் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து நீர்த்துப்பெட்டியில் போட்டு பிட்டை அவித்துக்கொள்ளவும். சிலர் இறால், கீரை, தேங்காய்ப்பூ, பிட்டுமா என்ற  அடுக்கின் ஒழுங்கில் வைத்து பிட்டை அவித்துக்கொள்வர்.

அறைக்கீரை, சிறுகீரை

“அறைக்கீரை நீர்க்க டுப்போ டருங்கய ரோகக் காய்ச்சல்
சுறுக்கதாய் நீக்கு மென்ப சொல்லுபத் தியத்திற் காகும்
வெறுப்பிலாச் சிறிய கீரை விழிக்கேற்கு மேனி தன்னில்
பொறுக்கலா வெரிவு நீக்கு மாமெனப் புகலு நூலே”

– பக்.64, பதார்த்த சூடாமணி.

அறைக்கீரை / அறக்கீரை / அரைக்கீரை / அறுகீரை

அறைக்கீரையில் பல வகைகள் உண்டு. பிரதானமாக பச்சை, சிவப்பு என இரண்டு இனங்கள் காணப்படுகின்றன. அறைக்கீரையானது நீர்க்கடுப்புடன் வரும் கசரோகம் அதனால் ஏற்படும் காய்ச்சல் என்பவற்றை விரைவாகக் குணமாக்கும். அத்துடன் பத்தியத்துக்கு  ஏற்றது.

சிறுகீரை / குப்பைக்கீரை

சிறுகீரையானது கண்ணுக்கு சிறந்தது. உடலில் ஏற்படும் தாங்கமுடியா எரிவினை நீக்கும்.

முசுட்டையிலை

“முசுட்டையின் றழைவா தத்தை முதிர்விக்கும் பித்தம் போக்கும்
திசைப்புறு சலரோ கம்போந் தித்திக்கு மெரிப்பு நீங்கும்..”

– பக். 64, பதார்த்த சூடாமணி

முசுட்டைக்கொடி

முசுட்டையின் இலை வாததோசத்தை அதிகரித்து முதிர்ச்சியான நல்ல நிலையில் வைத்திருக்கும். இதனால் முசுட்டை இலையை நாம் எமது உணவில் சேர்த்து  உட்கொள்வோமானால் உடல் பலவீனப்படுவதும் நோய்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்படும். நீரிழிவு நோயிலும் சிறந்த பலனைத்தருவதுடன், அது உருவாவதை குறைக்கவும், தடுக்கவும் செய்கின்றது. பித்த தோசத்தைப் போக்கும். நீரிழிவால் ஏற்படும் எரிவு (பாத எரிவு) நீங்கும்.

முசுட்டை துவையல்

  • முசுட்டை  – மெலிதாக அரிந்த இலை 200 கிராம்
  • மிளகு – 01 தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு – 50 கிராம்
  • தேசிப்புளி – பாதி அளவு
  • சீரகம் – 01 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • பெருங்காயம் – தேவையான அளவு
  • செத்தல் மிளகாய் – 4
  • தேங்காய்ப்பூ – 50 கிராம்
  • பசுநெய் – 1 மேசைக்கரண்டி

நெய்யில் செத்தல் மிளகாய், உளுந்து, மிளகு, சீரகம், தேங்காய்ப்பூ, பெருங்காயம் என்பவற்றை வறுத்து இவற்றுடன் உப்பு சேர்த்து இறக்கியபின் தேசிப்புளியை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

மெலிதாக அரிந்த முசுட்டை இலைகளை நெய்யில் வதக்கி, ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் கூட்டினைக் கலந்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பயிரிக் கீரை

பயிரி பொதுவாக பிட்டுடன் அல்லது பருப்புடன் சேர்த்து சமையல் செய்யப்படும்.

“குளிர்ச்சிசேர் பயிரி வெட்டை கொடும்பயித் தியம ரோசி
இழித்திடு நீர்க்க டுப்பு மியம்புநீர்ச் சிறுப்பும் போக்கும்…”

– பக். 64, பதார்த்த சூடாமணி

பயிரி-கீரை

பயிரியானது உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத்தரும் கீரையாகும். இதனால் கோடைகால உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. அதிக உடற்சூடு (கணை), பயித்தியரோகங்கள், சமிபாட்டுக்கோளாறுகள், சிறுநீர்க்கடுப்பு, சிறுநீர் குறைவாகப்போதல், சிறுநீர் எரிவு என்பவற்றைப் போக்கும் எனக் குறிப்பிடப்படுகின்றது. கோடை காலங்களில் அதிக வெப்பத்தால் ஏற்படும் உடல் உபத்திரவங்களைக் குணமாக்கி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

துயிலி / தொய்யில்

“… பழிப்பிலாத் துயிலி வெட்டை பழமல முழலை புண்ணோ
டழித்திடுஞ் சீதஞ் சேர்க்கு மாம்……”

-பக்.65, பதார்த்த சூடாமணி

தொய்யில் கீரையானது அதிஉடற்சூடு (கணை), நாட்சென்ற மலக்கட்டு, நீர்வேட்கை (அதிகதாகம்), உடல் எரிவு, புண் என்பவற்றை மாற்றுவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியதும் ஆகும்.

முடக்கொத்தான் / முடக்கறுத்தான்

முடக்கறுத்தான்

முடக்கொத்தான் ஆனது பொதுவாக யாழ்ப்பாணத்தில் குளிர், மழைக்காலங்களில் இரசத்துக்கு சேர்க்கப்படும். வாதத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது. முடக்கொத்தான் தொடர்பில் மாறுபாடான அடையாளப்படுத்தல் பிரதேசவாரியாகக் காணப்படுகின்றது. கஞ்சிக்கொத்தான் எனப்படும் கீரைவகையையும் முடக்கொத்தான் என்றே அழைக்கின்றனர்.

முடக்கொத்தான் கீரையின் பயன்தொடர்பில் அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“முடக்கொத்தான் காலில் வாத முதிர்சூலைப் பிடிப்பு வாயு
தொடர்ச்சிசேர் சொறிசி ரங்கு தொலைவிலாக் கரப்பன் போக்கும்…”

– பக்.65, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.

முடக்கொத்தான் ஆனது காலில் வாத தோசத்தின் மாறுபாட்டால் ஏற்படும் தீவிர வலி, பிடிப்பு என்பவற்றை அகற்றும். தொடர் வாத அதிகரிப்பால் ஏற்படும் தோல் நோய்களான சொறி, சிரங்கு போன்ற கரப்பன் என்பவற்றைப் போக்கும் குணம் கொண்டது.

சிறுகுறிஞ்சா, குறிஞ்சா

சிறுகுறிஞ்சா நமது பாரம்பரியத்தில் தேவைக்கு ஏற்றவாறு உணவுடன் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. முக்கியமாக குறிஞ்சா வகைகள் சிறந்த பருவகால உணவுகளாக குளிர்காலங்களான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி போன்ற தமிழ் மாதங்களில் கூடுதலாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பெரும்பாலும் நமது பாரம்பரியத்தில் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

குறிஞ்சா

மேற்படி காலங்களில் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கும், ஏற்படும் நோய்களுக்கும் ஏற்ற ஆரோக்கியமான உணவு வகைகளாக இவை காணப்படுகின்றன. இக்காலங்களில் ஏற்படக்கூடிய தொற்றுக்கள் அவற்றால் ஏற்படும் காய்ச்சல் என்பவற்றில் இருந்து பாதுகாக்கக் கூடியன. அதேபோல் இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தக்கூடியன.

அதேபோல் உடலில் ஏற்படும் உடற்சூடு, குளிர்ச்சி என்பனவற்றை சீராகப் பேணக்கூடியன.

முக்கியமாக குளிர்காலங்களில் சூழலில் ஏற்படும் வெப்பநிலை மாறுபாட்டை அனுசரித்து உடலின் அனுசேப வீதம் அதிகரிக்கும். உடலில் இருந்து அதிக சக்தி வெப்பமாக இழக்கப்படும். இதன் மூலம் சூழல் வெப்பநிலையுடன் உடல் வெப்பநிலை சமநிலையைப் பேணிக்கொள்ளும். இதனால் மேலதிக சக்திக்காக அதிக பசி ஏற்படும். இதன்போது சமிபாட்டின் அதிகரிப்புக்கு ஏற்றவாறு சக்தியை வழங்குவதற்காக,  குளுக்கோஸ் அனுசேப செயற்பாட்டுக்கு ஏற்றவாறு இன்சுலின் சுரப்பினை சுரப்பதற்கு கணையச் சுரப்பிக்கான (Pancreas) தூண்டலையும், கணையச் சுரப்பியின் செயற்திறனையும் சிறுகுறிஞ்சா, குறிஞ்சா வகைகள்  அதிகரிக்கின்றன.

குறிஞ்சாவில் பலவகைகள் காணப்படுகின்றன. எமது பிரதேசங்களில் சிறுகுறிஞ்சா அரிதாகவே காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில்  Gymnema lactiferum, Gymnema rotundatum போன்ற உப சிறுகுறிஞ்சா இனங்களே அதிகம் காணப்படுகின்றன.

உப  இனங்கள்  பல்வேறு காணப்படுகின்றன. இவற்றின் பொதுவான மருத்துவ குணங்கள் ஒத்தனவாக இருந்தாலும் அவற்றின் செயற்திறனில்  வேறுபாடுகள் காணப்படும். சிறுகுறிஞ்சாவை விட ஏனையவை வீரியம் குறைந்தவையாகும். யாழ்ப்பாணத்தில் பொதுவாக குறிஞ்சா எனப்படும் பெருங்குறிஞ்சாவே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.                    

சிறுகுறிஞ்சா நீரிழிவு நோய்நிலையில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அண்மைய ஆய்வுகளும் நீரிழிவில் சிறுகுறிஞ்சா  தாக்கம் செலுத்துவதை உறுதிப்படுத்தி உள்ளன.

மூன்று வழிகளில் சிறுகுறிஞ்சா  நீரிழிவினைக் கட்டுப்படுத்துவதாக அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.

  1. குளுக்கோஸ் குருதியினுள் செல்வதை குறைக்கின்றது.
  2. சிறுகுடலில்  மாப்பொருள் அடிப்படைக்கூறுகளை (Oligosaccharides) அகத்துறிஞ்சும்  செயற்பாட்டைக் குறைப்பதன் மூலம் குருதியில் குளுக்கோஸ் அளவினைக் குறைக்கின்றது.
  3. இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம்

சித்த மருத்துவத்தில் மேகரோகங்கள் எனும் பிரிவுக்குள்ளேயே மதுமேகம் அடங்குகின்றது. மேகரோகங்களில் முதன்மையாக மதுமேகமே குறிப்பிடப்பட்டிருந்தது எனவும், பிற்காலத்திலேயே பிரமேகம் எனப்படும் பால்வினை நோய்களும் மேகரோகங்களுடன் சேர்க்கப்பட்டதாக “மேகவாகடத் திரட்டு” எனப்படும் தஞ்சாவூர் சரஸ்வதிமகால் நூலின் முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மதுமேக ரோகமானது தோசங்களின் அடிப்படையில் 20 வகைகளாகக் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுமேக நோய்க்கான மருந்துகளில் சிறுகுறிஞ்சா நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. எனினும் மேகரோகங்களுக்கு பொதுவாக கூறப்படும் மேகசஞ்சீவித்தைலத்தில்  சிறுகுறிஞ்சா  வேர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சிறுகுறிஞ்சாவின் இலை மதுமேக நோயில் ஏற்படக்கூடிய உபத்திரவங்களை தீர்க்கும் என சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணங்களைக் சொல்லும் பொதுக்குணப்பாட்டில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உபத்திரவங்கள் தொடர்பில் யாழ்ப்பாண சித்தமருத்துவ நூலான செகராசசேகரம் என்னும் நூலில் சில நீரிழிவு நோய் நிலைகளின்போது  தனியே குறிப்பிடப்பட்டுள்ளது, இவ்வுபத்திர நிலைகளுக்கு தனியே மருந்தும் கூறப்பட்டுள்ளது. அதாவது மதுமேகத்தில் பெருநீர்ச்சலம் (அடிக்கடி அதிகமாக சிறுநீர் கழிதல்), சிறுநீருடன் இரத்தம் போதல் அதனைத் தொடர்ந்து ஏற்படும் உபத்திரவங்களாக மேகவெட்டை (உடற் சூடு அதிகரித்தல்), தாகம், நாவரட்சி (வாய் உலர்தல்) என்பன ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கடுக்காய்நெல்லியதிமதுரம் கடலிறாஞ்சிஆவிரைவேர்
முந்தவிவை யொன்றொரு நிறையாய் முடாவில வித்துக் குடித்துவரில்
தொந்தப் பெருநீர்ச்சல மிரத்தந் தொடருங்கழிச்சல் மேகவெட்டை
வந்ததாகம் நாவரட்சி மாறிச்சலமும் மாறிடுமே”

-பக்.206, செகராசசேகரம்.

இதே உபத்திரவங்களை உள்ளடக்கி சித்தமருத்துவ நூலான பதார்த்தகுண சிந்தாமணியில் சிறுகுறிஞ்சாக்  கொடியின் (இலையின்) மருத்துவக் குணங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட பாடல்,

“சிறுகுறிஞ்சா வாதமொடு சீதத்தை நீக்கும்
மறுவுதிர மில்லாத மாதர்க் – குறுமுலகி
லத்தி சுரமு மகலாக் கடிவிடமுந்
தத்தி யகலத்தகர்க்குங் தான்”

“வாதஞ்சுரஞ் சந்நிசுர மாறாக் கபசுரமும்
பூதலம்விட் டோடப் புரியுங்காண் – மாதேகேள்
அக்கரங்கள் தீர்க்கும் அதிசுரந்தா கந்தொலைக்குந்
தக்க சிறுகுறிஞ்சாந் தான்”

– பக்.114, பதார்த்தகுண சிந்தாமணி.

இங்கு குறிப்பிடப்படுவது,  வாதம், குளிர் இவற்றை நீக்கும், மாதாந்த உதிரச்சிக்கல் நீங்கும், வாதசுரம், சன்னிசுரம், மாறாத கபசுரம் உடம்பை விட்டகலும் அதேவேளை மேகரோகங்களில் ஏற்படக்கூடிய (மதுமேகம் உட்பட) அதிசுரம் (மேகவெட்டை), தாகம், அக்கரங்கள் (வாய் உலர்தல், வாய்ப் புண்கள்) என்பவற்றைத் தொலைக்கும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

மேற்படி குறிகுணங்கள் அற்றுப் போகும்போது சிறுகுறிஞ்சாவைத் தொடர்ந்து பயன்படுத்தத் தேவையில்லை அல்லது தொடர்ந்து பயன்படுத்துவது ஆகாது என்பதற்காகவே மதுமேகத்துக்கு சிறுகுறிஞ்சாவானது மருந்தாக நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. மருந்தாக சிறுகுறிஞ்சாவைப் பயன்படுத்த வேண்டுமானால் மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துதல் வேண்டும்.

சிறுகுறிஞ்சாவின் வீரியத்தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு சிறுகுறிஞ்சா இலையை வாயில்போட்டு நன்கு மென்று உண்டபின் நாவினால் இனிப்பு சுவையை உணரமுடியாது இருக்கும். இவ்வாறான சிறுகுறிஞ்சாவின் செய்கைகளால் இதனை தமிழில் சர்க்கரைகொல்லி என்றும், வடமொழியில் மதுநாசினி என்றும், மலையாளத்தில் இவ்விரண்டு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

அண்மைய ஆய்வுகள் சிறுகுறிஞ்சாவில் உள்ள தாவர இரசாயனச் சேர்க்கை (gymnemic acid: phospholipid complex) ஈரலை (Liver) பாதிக்கும் என்பதனைக் காட்டுகின்றன. எனவேதான் தொடர்ச்சியாக அதனை மருந்தாகப் பாவிக்காது சில உபத்திரவ நிலைகளில் மட்டும் பயன்படுத்தக்கூடியவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரல் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் கீழே பயன்படுத்த வேண்டும்.

அதிலும் மருந்தாகப் பயன்படுத்தும்போது தனியே சிறுகுறிஞ்சாவைப் பயன்படுத்தாது வேறு மூலிகைகளுடன் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது. உதாரணமாக மதுமேக நோய்நிலையில் சிறுகுறிஞ்சா இலையோடு இரண்டு மடங்கு தென்னம்பாளையினுள் உள்ள தென்னம்பூ சேர்த்துக்கொள்ளப்படுகின்றது அல்லது நாவல்கொட்டை சம அளவு சேர்த்து மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. அளவு, எவ்வளவு காலம் அனுபானம் என்பன சித்தமருத்துவர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்துதல் வேண்டும்.

குறிஞ்சா

குறிஞ்சா இலையே பொதுவாக உணவாகப் பயன்படுத்தப்படுவது. சிறுகுறிஞ்சாவை ஒத்த மருத்துவகுணங்கள் இருந்தாலும் சிறுகுறிஞ்சாவுடன் ஒப்பீட்டளவில் அவற்றின் வீரியம் குறைந்ததாகவே காணப்படும். எனினும் குறிஞ்சாவுக்கு என மருத்துவ குணங்கள் பற்றி அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“குறிஞ்சாவி னிலைநோப் புண்ணே கோரமாம் வாயு வாதம்
குறுகிட வொட்டா தென்று கூறும்வா கடங்க ளெல்லாம்…”

– பக்.66, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.

குறிஞ்சாவின் இலை, புண் பெருத்து வலி அதிகரித்துக் கொள்வதைத் தடுக்கும். அதேபோல் வாயு, வாத தோசம் சலனமடைவதைத் தடுக்கும். எனவே குளிர் பருவ காலத்தில் வாத தோசத்தை நிலையாக வைத்திருக்க குறிஞ்சாவை உணவாக உட்கொள்ளல் சிறந்தது. அதாவது முதுவேனில் காலத்தில் (ஆனி – ஆடி) வாத தோசமானது உடலில் ஆரோக்கிய நிலையில் பருவகால மாற்றத்துக்கு ஏற்ப புற – அக (அண்ட – பிண்ட) சமநிலையைப் பேண அதிகரித்து காணப்படும்.

இந்த அதிகரிப்பானது மழைக் காலமான (ஆவணி – புரட்டாதி) காலத்தில் உணவு மாறுபாடு, மற்றும் சூழலின் திடீர் குளிர்ச்சியாலும், பித்ததோசமானது தன்னிலையில் விருத்தியடைந்து ஏனைய இருதோசங்களையும் பாதிப்படைய செய்வதாலும் வாததோசம் விகாரமடைவதன் மூலம் மேலும் விருத்தியடைந்து வாதநோய்களுக்கான உபாதைகளையும், வாத நோய்களையும் ஏற்படுத்தும்.

குளிர்காலமான ஐப்பசி – கார்த்திகையில்  உடலானது புறச் சூழலுக்கு இசைவாகி வாததோசம் தன்னிலைக்கு வந்துவிடும். ஆனால் பித்த தோசமானது உடலில் ஆரோக்கியமான அதிகரிப்பைத் (தன்னிலை விருத்தி) தாண்டி அதிகரித்து (பிறநிலை விருத்தி அடைந்து) உபாதைகளை உண்டுபண்ணும். இந்நிலையால் ஏனைய வாதம் மற்றும் கப தோசங்கள் சலனமடைந்து சீரற்று காணப்படும்.

உதாரணமாக, குளிர் காலத்தில் சூழலில் ஏற்படும் குளிர்ச்சியைத் தாங்க, உடலைப்பாதுகாக்க  உடலானது கூடுதலாக வெப்பத்தை உருவாக்கும். இச்செயற்பாடு பித்த தோசத்தின் அதிகரிப்பினாலேயே நிகழுகின்றது. வெப்ப உருவாக்கத்துக்காக உடலில் சக்தி கூடுதலாகப் பயன்படுத்தப்படும். இதனால் பசி அதிகரிக்கும். எனவே கூடுதலாக உணவு உட்கொள்ளப்படும்போது உள்ளெடுக்கப்படும் மாப்பொருள் சமிபாடு அடைந்து இறுதி விளைபொருள் குளுக்கோஸ் குருதியை அடையும். இங்கு குருதியில் குளுக்கோஸ் அதிகரிக்க வாதமானது தூண்டப்பட்டு அதிகரித்து கணையத்தை தூண்டி கூடுதலான இன்சுலினை சுரக்கச்செய்து கொள்ளும். குளுக்கோஸ் அனுசேபத்தின் மூலம் உடலுக்கு தேவையான சக்தி கிடைத்துக்கொள்ளும்.

இங்கு பித்த அதிகரிப்பின்போது வாதமானது அதிகரிக்காவிடின் குளுக்கோசின் செறிவானது குருதியில் அதிகரிக்கும். இந்நிலையே மதுமேகம் எனப்படும். எனவே வாதத்தை அதிகரிக்கக் கூடிய கசப்புச் சுவையுள்ள உணவுகள் கூடுதலாக மதுமேகத்தில் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக பாகற்காய், குருவித்தலைப்பாகல், சுண்டங்கத்தரி, குறிஞ்சா, முசுட்டை, வல்லாரை என்பன.

எனவே பித்த தோசத்தின் மேற்படி அதிகரிப்பை குறைத்துக்கொள்ள கைப்பு, துவர்ப்பு, இனிப்பு சுவையுள்ள உணவுகளை இக்காலப்பகுதிகளில் (ஐப்பசி- கார்த்திகை) உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் மூன்று தோசங்களையும் சமநிலையில் வைத்திருப்பதோடு பருவகால மாற்றங்களால் ஏற்படும் உடற்பாதிப்புக்களை குறைத்துக்கொள்ளலாம். முக்கியமாக அனுசேப செயற்பாடுகளில் ஏற்படும் மாறுபாடுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.

இதனாலேயே நமது பாரம்பரியத்தில் மேற்படி காலங்களில் பருவகால உணவாக பிட்டுடன் கலந்து, கறிவகைகளில் வறையாகக் குறிஞ்சா அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

பாரம்பரிய உணவில் சிறுகுறிஞ்சா (Gymnema sylvestre) சாதாரணமாகப் பயன்படுத்துவதில்லை. மேலே பாடல்களில் குறிப்பிட்டுள்ள நிலைகளில் பிரத்தியேகமாகப் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது.

(குறிப்பு – பருவகால மாதங்கள் அனைத்தும் தமிழ் மாதங்கள் ஆகும்).


ஒலிவடிவில் கேட்க

15691 பார்வைகள்

About the Author

தியாகராஜா சுதர்மன்

தியாகராஜா சுதர்மன் அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவ பட்டதாரியும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானத்தில் பட்டப்பின் டிப்ளோமா பட்டதாரியும், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் உளவளத்துணை டிப்ளோமா பட்டதாரியும் ஆவார்.

அரச சித்த மருத்துவ உத்தியோகத்தராகப் பணிபுரியும் இவர் ஒரு சிறுகதை எழுத்தாளருமாவார். இவர் 'ஆகாரமே ஆதாரம்' எனும் நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)