Arts
16 நிமிட வாசிப்பு

அரிசிசார் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகள்

August 31, 2022 | Ezhuna

ஈழத்தில் யாழ்ப்பாணம் தனக்கென சிறப்பான உணவுப் பழக்கவழக்கங்களையும் மருத்துவத்தில் சில விசேட முறைகளையும் கொண்டிருந்தது. ஆயினும் அந்நியர் ஆட்சி, பூகோளமயமாதல், வர்த்த நோக்கிலான வாழ்வியல், நாகரிகமோகம் என்பன அந்த உணவுப்பழக்கவழக்கத்தைக் குலைத்துப்போட்டது. அதன் விளைவாக, ஆரோக்கியக் குறைபாடுகள், தொற்றா நோய்கள் என பலவீனமான சமுதாயம் ஒன்று நம்மிடையே உருவெடுத்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைத்து, மீண்டும் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எமது பாரம்பரிய உணவுமுறைமையை மீட்டெடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் உணவுப்பழக்க வழக்கங்கள், உணவுகள் என்பன தொடர்பாக  சித்தமருத்துவம், தற்கால உணவு விஞ்ஞான  ஆய்வு என்பவற்றின் நோக்குநிலையில் விளக்குகின்றது ‘மாறுபாடில்லா உண்டி’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர்.

சோறு, நெற்பொரி, அவல், கஞ்சிவகைகள் போன்று அரிசி மாவில் இருந்து பல்வேறு வகையான அரிசி சார்ந்த உணவுகள் நமது பாரம்பரியத்தில் காணப்படுகின்றன.

அரிசிக்கூழ், களி, பாயசம்

“அரிசிக்கூழ் பித்தத் தோடே யரியநீர்க் கோர்வை யாற்றும்

தெரியுமிக் களிம்பு வாயு தீராத மந்த மின்னும்

தரும்வயிற் றிரைவு மென்று சாற்றினார் பாய சந்தான்

திரிபயித் தியமே பித்தஞ் செறிதாக மருவா வன்றே”

– பக். 62, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.

அரிசிக்கூழ்

அரிசிக்கூழானது பித்த மாறுபாட்டால் ஏற்படும் நோய்நிலைகளையும், தலையில் நீர் கோர்த்து ஏற்படும் உபத்திரவங்களையும் மாற்றும். அரிசிக்கூழ் என்பது சமைத்த சாதத்தினை எடுத்து அதனை நன்கு மசித்து மீண்டும் நீர் விட்டு (1 டம்ளர் சாதத்துக்கு 2 டம்ளர் நீர்விட்டு) அடுப்பில் ஏற்றி, சிறிது உப்பு சேர்த்து, இறக்கி தேவையான அளவு மோர் கலந்து கொள்வதாகும்.

களி

உடலுக்கு பலத்தை தரினும் சோம்பலையும், வயிற்றில் இரைச்சலையும் தரும்.

அரிசிப் பாயாசம்

பித்தம் அதிகரித்து பைத்தியம் ஏற்படாதவாறு நம்மை வைத்திருக்கும்.

அரிசிப்பாயாசம் – புறத்திணை நன்னாகரானால் பாடப்பெற்ற 381 ஆவது புறநானூற்றுப் பாடலில் 1-4 வரிகளில் பாயாசம் குடித்தால் உண்ட களைப்புத் தெரியாது என்றும் விரைவில் சீரணமாகிவிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் சவ்வரிசி, சேமியா இருந்திருக்கவில்லை. அத்துடன் யாழ்ப்பாண நூலாகிய அமிர்த சாகரம் பதார்த்த சூடாமணியில் , அரிசி உணவிலேயே மேற்படி பாயாசம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஊனும் ஊனும் முனையின் இனிதெனப்

பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்

அளவு கலந்து மெல்லிது பருகி

விருந்து உறுத்து ஆற்ற இருந்தென மாகச்

– பக்.91, சுவையான சங்க காலச் சமையல்

அரிசிப்பாயாசம் உள்ளீடுகளும் செய்முறையும்

  • பச்சையரிசி –  100 கிராம்
  • சீனி – 200கிராம் (தேவையான அளவு)
  • தேங்காய்ப்பால் – 200 மில்லிலீற்றர்
  • நெய் – சிறிதளவு
  • முந்திரிப்பருப்பு  – தேவையான அளவு
  • ஏலக்காய் – சிறிதளவு.

உடைத்த பச்சையரிசியை (குறுணல்) நீர்வீட்டு நன்றாக அவிந்தபின், சீனி சேர்த்து நன்றாகக் கரைத்து, ஏலக்காய்த் தூளைப் போட்டு கலக்கி, முந்திரிப்பருப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கொதித்தவுடன் இறக்கிக் கொள்ள வேண்டும்.

பாலுடை அடிசில் / பாற்சோறு

“துவரப் புலர்ந்து தூமலர் கஞலித்

தகரம் நாறுந் தண்ணறுங் கதுப்பின்

புதுமண மகடூ அயினிய கடிநகர்ப்

பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ”

– பக்.37, சுவையான சங்க கால சமையல்

நக்கீரரால் பாடப்பெற்ற 141 ஆவது அகநானூற்றுப் பாடலில் 11-14 வது வரிகளில் திருமணமான மணப்பெண் புகுந்தவீட்டில், உலைநீருக்குப் பதிலாக பாலினை உலை வைத்து, சோற்றினைச் சமைப்பதாக கூறப்பட்டுள்ளது.  நிறை உணவான பால் மற்றும் நெய், தேவையான சக்தியைத் தரக்கூடிய மாப்பொருள் கொண்ட அரிசி என்பன முழுமையான ஆகாரமாக மாறி, சந்தான விருத்தியை பெருக்குவதற்கு அடிப்படையாக அமைகின்றது.

 சந்தான விருத்திக்குரிய ஹோர்மோன்களின் தொகுப்புக்கு கொலஸ்ரோல் அவசியமாகின்றது. இதன் ஊட்டச்சத்து பெறுமதிக்கமைவாக நவராத்திரியில் ஒருநாள் ’அடிசிலை’ பிரசாதமாகப் படைக்கப்படுகின்றது. எனினும் அதிகமான பால், நெய்  என்பவற்றில் உள்ள விலங்குக் கொழுப்பான கொலஸ்ரோலை தொடர்ச்சியாக – அதிகமாகப் பயன்படுத்துவது – இதயத்துக்கு உகந்தது அல்ல எனக் கீழ்வரும் திருமூலரது திருமந்திரப்பாடல் கூறுகின்றது.

“அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்

இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்

கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே”

– பாடல் 148, முதல் தந்திரம், யாக்கை நிலையாமை.

புதிதாகத் திருமணம் செய்தவர் தொடர்ந்து அடிசில் செய்து உண்டார்கள், கணவன் மனைவி இன்புற்றிருந்தார்கள். அவ்வாறு இருக்கும்போது இடப்பக்கம் வலிக்கிறது என்ற கணவன் இறந்து போகின்றான். இங்கு உடம்பு நிலையில்லாதது என்பது பற்றி தெளிவூட்டினாலும் உணவின் தன்மையையும், அதில் உள்ள விலங்குக்கொழுப்பு அதிகமாகும்போது எவ்வாறு இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகின்றது என்பது பற்றியும்,  அடிசில் உணவினைக் கையாண்டு, கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் கூறியுள்ளார்.

பாலுடை அடிசில் உள்ளடக்கங்கள்

  • அரிசி – 200 கிராம்
  • பால் – 500 மி.லீ
  • உப்பு – தேவையான அளவு
  • நெய் – 2 மேசைக்கரண்டி

கட்டுச்சோறு / புளிச்சாதம்

“குழைந்தசோ றுண்கிற் சேடங் கொண்டிடுஞ் சோம்புண்டாகும்

கழிந்திடும் பிரமே கங்கள் கட்டுச்சோ றுண்கின் மேகம்

கிளர்ந்தகண் டத்து ரோகங் கெட்டிடச் செய்யுங் குன்மம்

எழுந்திடும் பீனி சங்க டாமுமென் றியம்பி னாரே”

– பக். 62, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி

புளிச்சாதம் உண்டால் மேக ரோகங்கள் இல்லாது போகும். ஆனால் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது வயிற்றுப்புண், பீனிசம் என்பவற்றை உருவாக்கும். மேக ரோகம் என்பது அனுசேபத் தொழிற்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களால் அல்லது தொற்றுக்களால்    சிறுநீரில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

குடவாயிற் கீரத்தனார் எனும் புலவரால் பாடப்பெற்ற 79 ஆவது அகநானூற்று பாடலில் 1-4 வரிகள் கட்டுச்சோறு பற்றி குறிப்பிடுகின்றது.

“தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர்

கனைபொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து

கல்லுறுத்து இயற்றிய வல்உயர்ப் படுவில்

பார்உடை மருங்கின் ஊறல் மண்டிய…..”

– பக். 38, சுவையான சங்ககால சமையல்.

வேகவைத்த சோற்றினை நீண்டதூரப் பயணத்தின்போது பழுதாகாமல் இருக்க தமிழர்கள் உப்பு, புளி ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டனர். தூர இடங்களுக்கு கட்டிக் கொண்டு செல்வதால் கட்டுச்சோறு என்றும் புளியைப் பயன்படுத்துவதால் புளிச்சாதம் என்றும் இது அழைக்கப்படுகின்றது.

நீண்டதூரம் செல்லும் ஆடவர் தோளில் கட்டுச்சோறினை சுமந்து சென்றதாக பாடல் கூறுகின்றது என நூலாசிரியர் கூறுகின்றார்.

புளிச்சாதம் – தேவையான பொருட்கள்

புளிசாதம்
  • வடித்தசாதம் – 2 குவளை (200மி.லீ)
  • புளி – ஒரு எலுமிச்சம் காய் அளவு
  • மிளகு – 1 மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • நெய் – 1 மேசைக்கரண்டி
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • கடுகு – ½ தேக்கரண்டி
  • பெருங்காயத்தூள் – ¼ தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு – 1 மேசைக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு  – 1 மேசைக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • வெந்தயம் – மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் –  ¼ தேக்கரண்டி

சிறிதளவு சுடுநீரில் புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், பொடித்த பெருங்காயம் என்பவற்றை நெய் சேர்க்காமல் வறுத்து எடுத்துக்கொள்ளவும். சூடு ஆறியதும் அருவல்நொருவலாக பொடித்து, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, கடுகு, மஞ்சள்தூள் என்பவற்றை சேர்த்து நெய்யில் வதக்கவும். இதனுள் கரைத்து வைத்த புளியைச் சேர்த்து கொதிக்கவிடவும். இதன்போது அருவல்நொருவலாக உள்ள பொடியையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். கொதித்த புளிச்சாற்றை விட்டு நெய் மிதந்துவரும்போது அடுப்பில் இருந்து இறக்கி அதனுள் சாதத்தை போட்டு நன்றாக கலந்துகொள்ளவும்.

கோழிப்புற்கை  – சுறாப்புற்கை

இவை விசேடமாக யாழ்ப்பாணம் வடமராட்சியில் புழக்கத்தில் உள்ள நல்லதொரு ஆரோக்கியமான உணவாகும். கூடுதலாக நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும்போது அல்லது நோய்கள் வந்து மாறிய நிலையில் போசாக்கினை வழங்கி உடலைத்தேற்றுவதற்காக எடுக்கப்படுகின்றது.

இதன் விசேட அம்சம் உடல் பலவீனமான நிலையில் உடற்தொழிற்பாடுகளுக்கு, சமிபாட்டுக்கு தேவையான சக்தியை சாதம் வழங்கி புரத சமிபாட்டு சிக்கலை தவிர்க்கும் அதேவேளை  சாதத்துடன் சேர்க்கப்படும் இறைச்சி, சுறா என்பன உடலுக்குத்தேவையான புரதத்தினையும், நேரடியாக அகத்துறிஞ்சக்கூடிய நிலையில் உள்ள இரும்புச்சத்தையும் ஏனைய உயிர்ச்சத்துக்கள், கனிமங்களையும் இவ்வுணவு தாராளமாக வழங்குகின்றது.   இதில் சேர்க்கப்படும் அரிசி பாரம்பரியமாக மொட்டைக்கறுப்பன் அரிசியாகவே உள்ளது. இது நடுத்தரமான Glycemic Index ஐ கொண்டதாகக் காணப்படுகின்றது. இதனால் நீரிழிவு நோயாளிகளும் அளவுடன் உட்கொள்ளக் கூடியதாக உள்ளது.

சுறா சேர்க்கும்போது பாலூட்டும் தாய்மார்களில் தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கு உதவுகின்றது. இதனால் உடல் நன்கு தேறுவதுடன் நோய்களின் தாக்கமும் குறைவடைகின்றன.

தேவையான பொருட்கள்

  • மொட்டைக்கறுப்பன் பச்சையரிசி – ½ கிலோ
  • கோழி இறைச்சி / சுறா – ½ கிலோ
  • தேங்காய் பெரியது – 1
  • மிளகாய்த்தூள் – 4 – 5 மேசைக்கரண்டி
  • சின்ன வெங்காயம் – ¼ கிலோ
  • இறைச்சித் தூள் – 1 தெக்கரண்டி
  • தேசிப்பழம் – 2
  • உப்பு – தேவையான அளவு

பால் புளிந்த தேங்காய் பூவினுள் இரண்டு போத்தல் நீர்விட்டு நீர் கொதித்தபின் அரிசி, இறைச்சி என்பவற்றைப்போட்டு அவிய விட்டு, முக்காப்பதம் அவிந்துவரும்போது தூள், வெங்காயம் என்பவற்றையும் போட்டு அவியவிடவும்.

இறைச்சிக்குப் பதில் சுறா சேர்ப்பதாயின் அரிசி ஓரளவு அவிந்தபின்னரே சுறா சேர்த்துக்கொள்ளல் வேண்டும். உலைநீர்வற்றி சாதம் பதத்துக்கு வரும்போது பிழிந்த பாலையும், இறைச்சித் தூளையும் சேர்த்து கிழறிக் கொள்ளவும். மாமிச உணவு உண்ணாதோருக்கு இறைச்சிக்குப்பதில் வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். இதனை வெங்காயப் புற்கை என்பர். இதேபோல் நெய்ச்சோறு, தயிர்ச்சோறு, மஞ்சட்சோறு, குழைசோறு என்பனவும் எமது பாரம்பரியத்தில் உள்ளது.

மோதகம், பிட்டு, உறட்டி, கொழுக்கட்டை

“சட்டகம் பருக்குஞ் சக்குக் குளிர்ந்திடும் பெலனுஞ் சாரும்

கட்டமா மலமும் போக்குங் கழறுமோ தகத்தினோடு

பிட்டுறட் டியுமே கொள்ளும் பிடிக்கொழுக் கட்டை யெல்லாம்

இட்டமாம் வாயு மந்த மிசைவிக்கும் பெலனுண் டாமே”

– பக். 62, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.

மோதகம்

மோதகம், பிட்டு, உறட்டி, கொழுக்கட்டை

மோதகத்துக்கு உடல் பருக்கும், கண் குளிர்ச்சியடையும், உடற்பலம் உண்டாகும். மலமிளக்கியாக செயற்படும். உண்மையில் மோதகம் ஒரு நிறையுணவாகவே கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் மோதகத்தில் சேரும்பொருட்கள் பெரும்பாலான சத்துக்களைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. முக்கியமாக மாபோசணைக் கூறுகளான மாப்பொருள், புரதம், கொழுப்பு என்பவற்றை முறையே மோதகத்தில் சேரும் அரிசிமா மற்றும் சர்க்கரை, பயற்றம்பருப்பு, தேங்காய்ப்பூ என்பன வழங்குகின்றன.

அதேபோல் அரிசிமா, பயறு, தேங்காய்ப்பூ என்பவற்றில் தேவையான அளவு உயிர்ச்சத்துக்களும், கனிமங்களும் காணப்படுகின்றன.

மோதகத்துக்கு ஏலக்காய் சேர்ப்பது வழக்கம். இதனால் உடலுக்குத் தேவையற்று  ஏற்படும் ஒவ்வாமைகளைக் குறைப்பதுடன் சமிபாட்டினையும் நன்றாகச் செயற்பட வைக்கின்றது. சித்தமருத்துத்துவத்தில் ஏலக்காய்  திரிதோச சம திரவியப் பொருட்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது.

“ஒன்றிய வாத பித்த கபமிவை யுயரா வண்ணம்

நன்றுறு கறிக ளெல்லா நாளுமே சமைப்ப ராய்ந்தோர்

தின்றிடு மிளகு மஞ்சள் சீரக முயர்ந்த காயம்

வென்றிகொள் சுக்கோ டேலம் வெந்தய முள்ளி சேர்த்தே”

– பக்.360, பதார்த்தகுண சிந்தாமணி.

மிளகு, மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்கு (வேர்க்கொம்பு), ஏலம், வெந்தயம், உள்ளி என்பன திரிதோசங்களை சமப்படுத்துபவை ஆகும். இதனால் இவற்றை திரிதோச சமனிகள் என்பர்.  இவற்றில் குறைந்தது ஏதாவது ஒன்று பயன்படுத்தல் வேண்டும். திரிதோசங்கள்/ முக்குற்றங்கள்/ உயிர்த்தாதுக்கள் என்றால் என்ன என்பது பற்றி சுருக்கமாக கீழே தரப்படுகின்றது.

உயிர்த்தாதுக்கள் / முக்குற்றங்கள் / திரிதோசங்கள்

உயிர்த்தாதுக்கள் எனப்படுபவை வாதம், பித்தம், கபம் என்பவையாகும். இவை மூன்றுமே உடல் உயிர்ப்புடன் செயற்படுவதற்கும் உடலில் உள்ள அனைத்து தொழிற்பாடுகளுக்கும் சித்தமருத்துவ அடிப்படையில் காரணமானவையாகும். உண்மையில் இவை பஞ்சபூதங்களின் சேர்க்கைகளின் அளவுகளினை அடிப்படையாகக் கொண்டு வளி (வாதம்), அழல் (பித்தம்), ஐயம் (கபம்) என்பன சித்தமருத்துவ சொல்லாடல்களால் குறிப்பிடப்படுபவை. பின்னர் வடமொழியின் கலப்புக்களினால் வாதம், பித்தம், கபம் என சொல்லாடல்கள் நிலைபெற்று விட்டன.

இம்மூன்றும், உடற் தொழிற்பாடுகளை மேற்கொள்ளும் அதேவேளை அகக் காரணிகளாலும் புறக்காரணிகளாலும் சடுதியாக மாற்றங்களைப் பெறக்கூடியன. இவ்வாறான மாற்றங்களினால் உடலில் மாறுபாடுகள் ஏற்பட்டு நோய்கள் உருவாகின்றன. இதனாலேயே இவை முக்குற்றங்கள் அல்லது திரிதோசங்கள் எனப்படுகின்றன.

இதனையே திருவள்ளுவர் திருக்குறளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்

“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று”

வளி, அழல், ஐயம் ஆகிய மூன்று உயிர்த்தாதுக்களும் கூடினாலும் குறைந்தாலும் நோய்களை உருவாக்கும் என மருத்துவநூல்கள் கூறுகின்றன. இவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும் புறக்காரணிகளில் முக்கியமானவை உணவும், உணவுப்பழக்கங்களும் தான். இதனாலேயே திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களில் ஆறு குறள்கள் உணவைப்பற்றி கூறுகின்றன.

உதாரணமாக,

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்”

நாம் உண்ட உணவு நன்றாகச் சமிபாடு அடைந்தது அறிந்து, அதன் பின் உணவினை உட்கொண்டோமானால் எமது உடம்புக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்கின்றார்.

பொதுவாக நாம் உணவுகளுடன் மேற்படி திரிதோச சம திரவியங்களை வாசனைக்காகவும், சுவைக்காகவும் சேர்த்துக் கொள்வது எமது பாரம்பரிய உணவுப்பழக்கங்களின் சிறப்பாகும். இதன்மூலம் தோசங்களின் சமநிலை குழம்பி நோய்கள் ஏற்படுவது குறைக்கப்படுகின்றது. வருமுன் காப்பதே நமது யாழ்ப்பாண பாம்பரிய உணவுப்பழக்கங்கள் ஆகும்.

மோதகமானது சித்தமருத்துவத்தில் குறிப்பிட்டுள்ள காலை உணவுபற்றிய கொள்கையுடன் மிகவும் ஒத்துப்போவதுடன், காலை ஆகாரத்துக்கு சிறுவர்களுக்கு சிறந்ததொன்றாகவும் காணப்படுகின்றது.

பிட்டு, உறட்டி, பிடிக்கொழுக்கட்டை

பிட்டு, உறட்டி, பிடிக்கொழுக்கட்டை என்பன வாயுவையும் சோம்பலையும் தோற்றுவிக்கும் என்றாலும் உடலுக்கு பலத்தைக் கொடுக்கக்கூடியன.

பிட்டு

“செம்புனலுங் கட்டுத் தெளியும் உரமாகும்

வெம்பனிலம் உட்புறத்தில் வீறுங்காண் – செமீபழத்தை

வட்டைப் பழிக்கும் வனமுலைமா தேயரிசிப்

பிட்டைப் புசிப்பார்க்குப் பேசு”

– பக்.404, பதார்த்தகுண சிந்தாமணி

அரிசிமாப் பிட்டுப் உடலைப் பலமாக்கும், உடலுள்வாத வெப்பத்தை அதிகரிக்கும். அதாவது உடலைச் சுறுசுறுப்பாக்கும். மாதர்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் உதிரப்பெருக்கை கட்டுபடுத்தும்.

பொருத்துமான்கொடி பிட்டு

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதிகளில் பொருத்துமான் கொடி இலைகளை அரிசிமா அரைக்கும்போது அரிசியுடன் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்வார்கள். இப்பொருத்துமான் கொடி சேர்ந்த பிட்டானது பெண்களுக்கான கர்ப்பரோகங்களை வரவிடாது செய்வதுடன் கர்ப்பப்பை உரமாக்கியாகவும் செயற்படுகின்றது. பெண்களின் ஆரோக்கியத்தில் சிறந்தபலனை பாரம்பரியமாக அப்பிரதேச மக்கள் பயன்படுத்துகின்றார்கள்.

பொருத்துமான் கொடியானது இப்பிரதேசத்தில் இயற்கையாக வளரும் ஒருகொடி வகையாகவும், இப்பிரதேசத்துக்குரிய சிறப்பான மூலிகையாகவும் காணப்படுகின்றது.

களப்பன்னம் பிட்டு

 Glycosmis pentaphylla (Retz) correa

யாழ்ப்பாணத்தில் குறிப்பாக தீவுப்பகுதிகளில் (புங்குடுதீவு) அரிசிமாவுடன் களப்பன்னை (களப்பன்னம்) சேர்த்து பிட்டவித்துக் கொள்வார்கள். இது வாதரோகங்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கின்றது. உடல்நோ, குத்துழைவு, அடிபட்டநோ  போன்றவற்றை நீக்குகின்றது. உடற்சூட்டை அதிகரிக்கின்றது.

களப்பன்னத்தின் தாவரவியற் பெயர் – Glycosmis pentaphylla (Retz) correa / English Name – Opal ormge தாவரக் குடும்பம்  – Rutaceae

களப்பன்னத்தின் மருத்துவ குணங்கள்

களப்பன்னம் இலைகளை சுத்தமாக்கி அரிசியுடன் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் அதனைவைத்து பிட்டு அவிக்கும்போது தேங்காய்ப்பாலில் குழைத்து பிட்டவித்து வைத்துக்கொள்ளவும்.

பிறிதொரு தாச்சியில் முதல் தேங்காய்ப்பாலை கொதிக்கவைத்து அதனுள் தேவையான அளவு சின்னவெங்காயம், மஞ்சள், சீரகத்தூள், பனங்கட்டி, உப்பு என்பவற்றைச் சேர்த்துக் காய்ச்சும்போது எண்ணெய் மிதக்கும் போது பிட்டைக் கொட்டிக்கிளறி இறக்கிக் கொள்ளவும்.

இதனை பொட்டணியாகக் கட்டி நோவுகளுக்கு ஒத்தடமும் கொடுக்கலாம். களப்பன்னை தொடர்பாக யாழ்ப்பாணத்து நூலான அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“கரப்பன்சில் விசமு மாறுங் கருதுமுட் டணமா மென்றே

உரைத்தனர் முனிவர் தாமு முயர்கோழி யவரைக் கேதான்

கருத்துறு புரசினோடு  களப்பன்னை யிவைக டம்மிற்

பெருத்திடு குணங்கள் சொல்லிற் பேசுமுட் டணமே தாமே”

– பக்.66, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி

மேற்படி பிட்டுக்களைப்போன்று குறிஞ்சா, சிறுகுறிஞ்சா, பூவரசம் பழுத்தல் மற்றும் விடத்தல் அலைகளையும் அரிசியுடன் அரைத்து பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்களான மாதாந்த அதிக இரத்தப்போக்கு, வெள்ளைப்படல் மற்றும் நீரிழிவு நோய்நிலைகளுக்கு பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

பூவரசம் பழுத்தல் சேர்க்கும்போது இலையின் நரம்புகள் நீக்கப்பட வேண்டும்.

இவைபோன்று பிட்டு அவிக்கும்போது அரிசிமா நீர்விட்டு குழைத்தபின்னர் அதனுடன் கீரை, தவசிமுருங்கை, சண்டியிலை, வல்லாரை, முருங்கையிலை, குறிஞ்சா, பயரி என பல மூலிகைகள் உணவுப்பொருளாகி,  நமது பாரம்பரிய உணவுப்பழக்கங்களில் உணவே மருந்தாகியுள்ளன.

பாற்புட்டு

பால்புட்டு

அரிசிமாவுடன் (ஒரு பங்கு) உளுத்தம் மா (ஒரு பங்கு),  சேர்த்து  பிட்டவித்தல், தேவையான அளவு தேங்காய்ப்பால் சீனி, மிளகு, சீரகம் சேர்த்து காய்ச்சி இதனுள் பிட்டினைப்போட்டு கிளறி எடுத்தல்.

சில்லுப்பிட்டு

பாற்பிட்டினைப்போல் அரிசிமா உளுத்தமா என்பவற்றைக் கலந்து இடியப்ப பதத்தில் குழைத்து, சில்லு சில்லாக தட்டி அவித்து உடுத்தபின், போற்பிட்டில் தேங்காய்ப்பால் ஏனைய பொருட்கள் சேர்த்து காய்ச்சி எடுத்து அப்பாணியினுள் அவித்த சில்லுப்பிட்டுகளை தோய்த்துவிடல். பாற்புட்டைவிட தேங்காய்ப்பால் பாணி அதிகமாக இருக்கும்.

குழல் பிட்டு

மூங்கில் துளையினுள் குழைத்து கொத்திய அரிசிமாவினையும் தேங்காய்ப் பூவினையும், மாறி மாறி போட்டு நீராவியில் அவித்து எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

“பிட்டு” சொல் அதன் செயன்முறையை அடிப்படையாகக்கொண்டு  சித்தமருத்துவத்தில் உட்கொள்ளும் மருந்து வகைகளான 32 இல் ஒன்றாகப் காணப்படுகின்றது.

அரிசி மாவினைக் கொண்டு பலவிதமான பலகாரங்கள் செய்யப்படுகின்றன. விசேடமாக பால்ரொட்டி, அரியதரம், முறுக்கு, சிப்பி போன்றன. அதேபோல் சிற்றுண்டியாக பொரிஅரிசிமா, அப்பம், தோசை,இடியப்பம் போன்றனவும் காணப்படுகின்றன.

குறிப்பாக புளிக்கவைத்து செய்யப்படும் உணவுகளில் போசணைகள் செறிவாவதுடன், உடலுக்கு நன்மைதரும் பற்றீரியாக்கள், மதுவம் போன்றன (Probiotics) இவ்வுணவுகளில் இருந்து தாராளமாகக் கிடைக்கின்றன. இவை உணவுச் சமிபாட்டை சீராக்குவதுடன் மலச்சிக்கலையும் தடுக்கின்றன. இதன் மூலம் உணவுக்கால்வாய்த் தொகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்கள் குறைகின்றன.

யாழ்ப்பாணப்  பாரம்பரியத்தில் யாரேனும் நோய்வாய்ப்படும்போது இலகுவாகச் சமிபாடு அடையக்கூடியதும் தேவையான சக்தியை வழங்கக்கூடியதுமாக இடியப்பமே வழங்கப்பட்டு வருகின்றது. மெல்லிய இழைகளாகவும், நீர்ச்சத்தையும் அதிகமாகக் கொண்டதாக காணப்படுவதால் விரைவாகச் சமிபாடு அடையக்கூடியதாக இடியப்பம் காணப்படுகின்றது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

20293 பார்வைகள்

About the Author

தியாகராஜா சுதர்மன்

தியாகராஜா சுதர்மன் அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவ பட்டதாரியும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானத்தில் பட்டப்பின் டிப்ளோமா பட்டதாரியும், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் உளவளத்துணை டிப்ளோமா பட்டதாரியும் ஆவார்.

அரச சித்த மருத்துவ உத்தியோகத்தராகப் பணிபுரியும் இவர் ஒரு சிறுகதை எழுத்தாளருமாவார். இவர் 'ஆகாரமே ஆதாரம்' எனும் நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)