Arts
20 நிமிட வாசிப்பு

கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் – பகுதி 3

November 3, 2022 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம்: – அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன்

கனடாவின் சமஷ்டியின் வரலாறு ‘பிரிந்து வேறாதல்’ ‘ஒன்றாக இணைதல்’ என்ற இருவேறு செயல்முறைகளும் சமாந்தரமாகச் செயற்பட்டதொன்றாகவே இருந்துள்ளது. சமஷ்டிச் சட்டம், 1867 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தில் பின்வரும் மூன்று விடயங்கள் கூறப்பட்டுள்ளன.

  1. பெரிய பிரித்தானியாவின் முடிக்குரிய டொமினியன் நாடாக கனடா விளங்குகிறது.
  2. கனடா மாகாணம், நோவாஸ்கொட்டியா மாகாணம், நியுபிறன்ஸ்விக் மாகாணம் என்பன கனடா சமஷ்டியில் இணைவதை விரும்பியுள்ளன.
  3. ஐக்கிய இராச்சியத்தை (U.K) ஒத்த அரசியல் யாப்பினைக் கொண்டதாக கனடா இருத்தல் வேண்டும் எனவும் இவை விரும்புகின்றன.

ஐக்கிய அமெரிக்காவைப் போலன்றிக் கனடா பாராளுமன்ற முறையுடைய சமஷ்டியாகும் என்பது கவனிக்கத்தக்கது.

1867 ஆம் ஆண்டின் சட்டம் கனடாவின் மக்கள் பிரிவினரின் இணக்கப்பாட்டால் உருவானதாகும். சேர். யோன் ஏ. மக்டொனால்ட் என்ற கனடா தேசத்து ஆங்கிலேயர் கனடா ஒரு ‘கொன்பெடரேசன்’ ஆக வேண்டும் என உழைத்தவர். ஆனால் கனடா காலப்போக்கில் ஒற்றையாட்சி நாடாக மலரும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்தது. கனடாவின் ‘கொன்பெடரேசனில்’ மத்திய அரசுக்கு அதிகளவு அதிகாரங்கள் இருந்தன. ஆதலால் அது ‘கொன்பெடரேசன்’ அல்ல உண்மையில் அது அரைகுறைச் சமஷ்டி (quasi-federal system) ஆகும் என்ற கருத்தை சமஷ்டி பற்றிய ஆய்வாளர் கே. சி. வெயர் (KC Wheare) கூறியுள்ளார். 1867 இன் சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் சேர். யோன் மக்டொனால்ட் உடன் பேரம்பேசலிலும் உரையாடலிலும் ஈடுபட்ட கியூபெக் பிரதிநிதிகள் கியூபெக்கின் சுயாட்சியை உறுதி செய்வதற்கு சமஷ்டி அவசியமானது என்று கருதினர். (இப்பிரதிநிதிகளில் Georges Etienne Cartier ஒருவர்) கியூபெக் பிரதிநிதிகள் 1867 இன் இணக்கப்பாடு கனடாவின் இரு தேசியக் குழுக்களிற்கிடையில் ஏற்படுத்தப்பட்ட இரு தரப்பு உடன்பாடு (Dualist Compact) என்ற கருத்தைக் கொண்டவர்களாக இருந்தனர்.

கொன்பெடரேசன் அமைக்கப்பட்ட பின்னர் உள்ள காலத்தில் ஒன்டாரியோவிலும், புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலங்களான மனிடோபா, சஸ்கற்சுவன், அல்பேர்ட்டா , வடமேற்குப் பிரதேசம் (North – west Territories) ஆகியவற்றிலும் வாழும் பிரஞ்சு மொழிபேசும் மக்களின் மொழி உரிமைகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் இயற்றப்பட்டன. இவ்வாறான நடவடிக்கை பிரஞ்சுமொழி பேசும் மக்களிடையே கியூபெக் தவிர்ந்த பிற இடங்களில் தங்கள் தேசிய அடையாள உணர்வுக்கு மதிப்பு இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தியது. அவர்களின் தேசிய அடையாள உணர்வு கியூபெக் சார்ந்ததாக வளரலாயிற்று. இது முக்கிய வரலாற்றுத் திருப்பம். கியூபெக் தவிர்ந்த பிற மாநிலங்களில் பிரஞ்சுமொழி பேசுவோர் சனத்தொகை காற்பங்காகவோ அல்லது மூன்றில் ஒரு பங்காகவோ உயர்ந்திருக்குமானால் கனடாவின் மொழி உறவுகள் வித்தியாசமானதாய் இருந்திருக்கும். இதற்கு மாறாக பிரஞ்சு மொழி பேசுவோர் கியூபெக்கிலும் அதன் எல்லைப் பகுதிகளிலும் செறிந்து வாழ்ந்து வந்தனர். பிற மாநிலங்களிலும் பிரஞ்சு மொழியினர் பரவி வாழ்ந்திருந்தாலும் கனடாவின் அரசியலிலும், வாழ்க்கையிலும் மொழி முக்கிய ஒரு விடயமாகவே இருந்திருக்கும். எனினும் மொழிப் பிரச்சினை தனிநாடாகப் பிரிந்து போதல் என்ற கோரிக்கையாக மாறியிருக்காது.

ட்றூடே (Trudeau) ஆட்சியில் கனடா மக்கள் யாவரும் சமத்துவமானவர்கள் என்ற கொள்கை பின்பற்றப்பட்டது. கனடாவின் மத்திய அரசு நிறுவனங்களில் பிரஞ்சு மொழியினருக்கு கூடியளவு பிரதிநிதித்துவம் உள்ள வகையில் பதவிகள் வழங்கப்பட்டன. நாடு முழுமையிலும் பரவியுள்ள மொழிச் சிறுபான்மையினருக்கு அரசியல் யாப்பு வழங்கும் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்தும் வகையில் சேவைகள் வழங்கப்பட்டன. இவ்விதமாக மொழி உரிமைகளை பாதுகாக்கும் கொள்கைகள் 1969 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட உத்தியோக மொழிச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. இக்கொள்கைகள் பின்னர் 1982 ஆம் ஆண்டின் அரசியல் யாப்புச் சட்டத்திலும் குறிப்பிடப்பட்டு அரசியல் யாப்பு அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. காலனித்துவ ஆட்சியின் எச்சங்களாக இருந்தவற்றை கனடாவின் அரசியல் சமூக வாழ்வில் இருந்து நீக்குவதற்கு இச்சட்டவாக்க, அரசியல் யாப்புத் திருத்த செயல் முறைகள் உதவின. அரசியல் யாப்பினால் அங்கீகரிக்கப்பட்டதும், சமஷ்டி உயர்நீதிமன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டதுமான மக்களின் உரிமைகளும் சுதந்திரங்களும் பற்றிய சாசனம் (Charter of Rights and Freedom) உருவானது. ‘கனடாவின் உற்பத்தி’ (Made in Canada) என்று சொல்லக்கூடிய அரசியல் யாப்பு திருத்தச் செயல்முறை ஒன்று உருவானது. ஆனால் கியூபெக் “மக்களின் சுயாட்சிக் கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்படவில்லை. கியூபெக்கின் அரசியல் தலைவர்களும் அரசியல் யாப்புத் திருத்தத்திற்குத் தமது ஒப்புதலை வழங்கவில்லை. இறைமையுள்ள தனிநாட்டை கோரியவர்கள், சமஷ்டிக்கு ஆதரவானவர்கள் என்ற வேறுபாடு இன்றி கியுபெக்கின் எல்லா அரசியல் தலைவர்களும் தமது ஒப்புதலை வழங்குவதை மறுத்தே வந்துள்ளனர்.

1960 கள் காலத்தில் கியூபெக்கின் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் மூன்று போக்குகள் வெளிப்பட்டன. முதலாவது போக்கு இறைமையுள்ள தனிநாட்டை உருவாக்கும் இலட்சியம் கொண்டது. இத் தனிநாடு கனடாவின் சமஷ்டியுடன் ஓரளவுக்கு பிணைக்கப்பட்டதாகவும் இருக்கும் என்று இறைமை இலட்சிய நோக்கினர் கருதினர். இரண்டாவது போக்கு சமஷ்டி இலட்சியம் (Federalist Vision) ஆகும். சமஷ்டி இலட்சியத்தைக் கொண்டோர் அதிகாரம் முழுமையாகப் பரவலாக்கம் செய்யப்படவேண்டும் கியுபெக் தனித்துவமான அங்கீகாரம் பெறுதல், கியூபெக் மக்களது தாயகமாக அது மலர்ச்சி பெறுதல், முதன்நிலை அரசாக கியூபெக் விளங்கவேண்டும், சமச்சீரற்ற சமஷ்டி (Asymmetric Federation) தேவை என்பன போன்ற கருத்துக்களை உடையவர்களாக இவ்விரண்டாம் பிரிவினர் விளங்கினர். இதனை புதுப்பிக்கப்பட்ட சமஷ்டிவாதம் (Renewed Federalism) என்று கூறலாம். மூன்றாவது போக்கு (முன்னாள் பிரதமர்) ட்றூடேயின் இலட்சியம் என்று அழைக்கப்படக்கூடிய கனடா தேசம் முழுமையையும் தழுவியதான மொழிச் சம உரிமைக் (Pan – Canadian Linguistic Equality) கொள்கையாகும். முதலாவது இலட்சியம் இன்னும் அடையப்படவில்லை. இரண்டாவது இலட்சியம் இன்னும் அரசியல் யாப்பு அங்கீகாரத்தைப் பெறவில்லை . மூன்றாவது இலட்சியம் அரசியல் யாப்பில் உட்படுத்தப்பட்டுள்ளது. உத்தியோக மொழிச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இருந்துபோதும் கியூபெக்கிற்கு வெளியே பிரஞ்சு மொழியின் உபயோகம் பற்றிய பிரச்சினைகள் தொடர்வதை இச்சட்டத்தினால் தடுக்கமுடியவில்லை.

A poster used to advocate for Quebec’s sovereignty during the 1995 referendum

கியூபெக்கிற்கு வெளியே தேசிய இனப் பிரச்சினை தொடர்பான அரசியலில் வெவ்வேறு போக்குகள் உள்ளன.

  1. கனடாவின் ஆங்கில மொழி பேசுவோரில் சிலர் பிரிவினைக் கோரிக்கை பற்றிப் பரிசிலிப்பதற்கும், ஆலோசிப்பதற்கும் தயாராக உள்ளனர். இருப்பினும் கியூபெக் தனித்துவமான அந்தஸ்தைக் கொண்டதாக இருக்க வேண்டுமா என்பதில் கருத்தொற்றுமை அவர்களிடம் இல்லை.
  2. முறைசாரா வகையிலான சமச்சீரின்மையை (Informal, de facto asymmetry) சகித்துக் கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் பலர் தயாராக உள்ளனர். ஆனால் அதனை யாப்புத் திருத்தம் மூலம் முறைசார் சமச்சீரின்மையாக (Formal Constitutional Asymmetry) மாற்றுவதற்குப் பரவலான எதிர்ப்பு உள்ளது.
  3. கனடா தேசம் முழுமைக்குமாக உத்தியோக மொழிகளாக இருமொழிகள் இருத்தல் வேண்டும் என்ற கருத்துக்கு (Official Bilingualism) எதிர்ப்பு உள்ளது.

கியூபெக் மாநிலத்தவர்களின் அதிகாரப்பரவலாக்கல் கோரிக்கைகளைப் பின்பற்றி பிற மாநிலங்களிலும் தமக்கும் அதிகாரங்களை மேலும் பிரித்துக் கொடுக்கவேண்டும், அரசியல் யாப்புத் திருத்தம் வேண்டும் போன்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இரண்டாம் உலக யுத்த முடிவில் பெருமந்தம் (1930கள்) ஏற்பட்டபோது அனுபவித்த கஷ்டங்கள் மக்களின் நினைவில் இருந்தன. அக்காலத்தில் மாநில அரசுகள் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தோல்வி கண்டன. யுத்தத்தின் பின்னரான காலத்தில் சர்வதேச ரீதியாக பொருளாதார வளர்ச்சியில் காட்டப்பட்ட கரிசனையும், தம்நாட்டை சமூகநல அரசாக (Welfare State) மாற்றும் எண்ணமும் ஆங்கிலம் பேசும் கனடா மக்களிடம் தோன்றியபோது அவர்கள் பலம் பொருந்திய மத்திய அரசாங்கம் தேவை எனக் கருதலாயினர். கியூபெக் தவிர்ந்த பிற மாநிலங்களின் மக்களும் சமஷ்டி அரசின் தலைமைத்துவத்தை ஏற்க முன்வந்தனர். சமஷ்டி அரசும், மாநில அரசுகளும் கூட்டாகச் சேர்ந்து அபிவிருத்தித் திட்டச் செலவுகளைத் தம்மிடையே பகிர்ந்து கொள்ளும் முறையிலான செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தலைநகர் ஒட்டாவாவில் உள்ள சமஷ்டி அரசு இவ்வாறு நிதிமுதலீடு என்ற சலுகையைக் காட்டி மாநிலங்களின் அலுவல்களில் தலையிடத்தொடங்கியது. 1970 களில் நிலைமை மாறியது. மாநில அரசுகள் தம் அலுவல்களில் சமஷ்டி அரசு தலையிடுவதை விரும்பவில்லை. மாநிலங்களின் செலவுகள் அதிகரித்தன. கனடா ஒரு சமூகநல அரசாக மாறும்செயல் திட்டம் நிறைவேறியது. இக்கட்டத்தில் சமஷ்டி மாநில உறவுகளில் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் மேற்கிளம்பின. உதாரணமாக எரிசக்தி (Energy) பற்றிய பிரச்சினையைக் குறிப்பிடலாம். மாநிலங்களின் அரசு – சமஷ்டி அரசு என்ற இரு நிலைகளில் சமத்துவம் உள்ளதே அல்லாமல், சமஷ்டி அரசு ‘ எசமான்’ நிலையில் உள்ளது. அதற்குப் பணிந்து போகும் நிலையில் மாநிலங்கள் உள்ளன என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள மாநிலங்கள் விருப்பம் கொள்ளவில்லை. 1970 களில் பொதுசன அபிப்பிராயம் அதிகாரப் பரவலாக்கலுக்குச் சார்பாகத் திரும்பியது. கியுபெக் மாகாணத்தில் சுயாட்சிக் கோரிக்கை வலுவடைந்தது, பிற மாநிலங்களை விட தமக்கு கூடிய அதிகாரங்களுடைய அரசு – அதாவது சமச்சீரற்ற சமஷ்டி வேண்டும் எனவும் அவர்கள் கோரினர். ஆனால் பிறமாநிலங்களில் வேறுபட்ட கோரிக்கைகள் எழுந்தன. சில மாநிலங்கள் கூடிய அதிகாரங்களைக் கேட்டன. மாநில அதிகாரம் கூட்டப்படவேண்டும் என்றும் ‘நாம் வெளியே நிற்பதையே விரும்புகிறோம்’ (We Want Out) என்றும் கோரிக்கையை முன்வைத்தன. சில மாநிலங்கள் எமக்கு, மத்தியில் உள்ள பிரதிநிதித்துவம் போதாது, ‘எம்மை உள்ளே விடுங்கள்’ (We Want in) என்று கேட்டன. கியுபெக்கில் எழுந்த சுயாட்சிக் கோரிக்கைக்குச் சமாந்தரமான போக்குகள் பிற மாநிலங்களிலும் வளர்ச்சியுற்றதைக் காணலாம். சமஷ்டி அரசு என்ற பலமிக்க கோலியாத் (Goliath) இராட்சதனுக்கு எதிராக மாநிலங்கள் என்ற குள்ளர்கள் தமது சுயாட்சி, தனித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைக்கலாயினர்.

1995 referendum results by constituency

கியூபெக்கிற்கு தனியாட்சி உரிமையைக் கோரும் Parti Quebecois 1968 இல் ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்சி 1976 இல் முதன்முதலாக தேர்தலில் வெற்றிபெற்றது. இதன் பின்னர் கியூபெக் கட்சியும், தாராண்மைக் கட்சியும் (Liberal Party) மாறி மாறி ஆட்சியைப் பிடித்தன. தாராண்மைக் கட்சியினர் சமஷ்டிவாதிகளாக இருந்தனர். கியூபெக் கட்சி தமது ஆட்சிக்காலத்தில் 1930 இல் ஒரு தடவையும், பின்னர் 1995 இலும் சர்வசன வாக்கெடுப்பை கியூபெக்கில் நடத்தியது. சுதந்திர கியூபெக் அரசை நிறுவுவதற்கு வாக்களிக்கும்படி மக்கள் வேண்டப்பட்டனர். 1995 ஆம் ஆண்டில் சுதந்திர கியூபெக்கிற்கான ‘ஆம்’ வாக்குகள், ‘இல்லை’ வாக்குகளைவிட 50,000 குறைவாக கிடைத்ததால் 1 வீதத்திலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தால் சுதந்திர கியூபெக் கோரிக்கை தோல்வியுற்றது.

கனடாவில் அரசியல் யாப்பு திருத்தம் பற்றிய பேரம் பேசல்கள் 1960 களில் ஆரம்பித்தன. 1971 ஆம் ஆண்டில் விக்டோரியா சாசனம் (Victoria Charter) நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தன. இருப்பினும் கியூபெக் மாநிலத்தின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடியனவாய் சாசனம் அமையவில்லையாதலால் அது நிறைவேற்றப்படவில்லை. 1979 இல் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. கனடாவின் யாப்பு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்ற வேறுபட்ட நோக்குகள் இப்பேச்சுவார்த்தைகள் ஊடாக வெளிப்பட்டன. அவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் சமஷ்டி – மாநில மாநாடு நடைபெற்றபோது ஒன்றோடு ஒன்று முரண்படும் கருத்துக்கள் அரங்கேற்றப்பட்டன. இதன் பின்னர் சமஷ்டி அரசு, அரசியல் யாப்பு ஒன்றை நிறைவேற்றத் தீர்மானித்தது. மாநிலங்களின் சம்மதம் இதற்கு கிடைக்காத காரணத்தால் உயர்நீதிமன்றம் இதன் நிறைவேற்றத்தைத் தடைப்படுத்தியது. இறுதியில் சமஷ்டி அரசும் ஒன்பது மாநிலங்களும் ஒப்புதல் அளித்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1982 ஆம் ஆண்டின் அரசியல் யாப்புச் சட்டம் (Constitution Act, 1982) என்று அழைக்கப்படும் இச்சட்டத்திற்கு கியூபெக் மாநிலத்தின் சம்மதம் கிடைக்கவில்லை.

கியூபெக் மாநிலத்திற்கும் ஒட்டாவா நகரில் உள்ள சமஷ்டி அரசுக்கும் இடையில் நெருக்கடியும் முறுகல் நிலையும் தொடர்ந்தது. ஒட்டாவாவில் கன்சவேட்டிக் கட்சி ஆட்சி அமைந்தபோது ‘கியூபெக் மாநிலத்தை எமது குடும்பத்துக்குள் கொண்டுவருவோம் ‘ ( Bring Quebec back into Contutionial Family ) என்று புதிய அரசாங்கம் முன்வந்தது. இதன் பயனாக மீச்லேக் ஒப்பந்தம் (Meech lake Accord, 1987) நிறைவேறியது.

  1. கியூபெக்கினை தனித்துவம் மிக்க சமூகமாக ஏற்றல்
  2. சமஷ்டி அரசின் நிதிச்செலவுகள் அதிகாரம் பற்றிய பிரச்சினைகள், அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பான வீட்டோ அதிகாரம், குடிவரவு, உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமித்தல் ஆகிய விடயங்கள் என்பன மீச்லேக் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன. சமஷ்டி அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் ஆரம்பத்தில் ஒப்பந்தத்தை ஏற்றன. அதன் பின்னர் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு கீழ் மட்டங்களில் இருந்து உருவானது. உரிமைகளும் சுதந்திரங்களும் பற்றிய சாசனம், சமஷ்டி அரசாங்கம் ஆகியவற்றை ஒப்பந்தம் பலவீனப்படுத்தும் என்ற கருத்து வலுப்பெற்றதால் மாநில அரசுகளிடமிருந்து இணக்கத்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதன் பின்னரும் 1993 ஆம் ஆண்டில் சார்லொட்ரவுண் ஒப்பந்தம் (Charlotte Town Accord) ஏற்படுத்தப்பட்டு தீர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தடவை பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரல் விரிவாக்கப்பட்டது. கியூபெக் மட்டுமல்லாமல் பிற மாகாணங்களின் பிரச்சினைகளும் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டன. பழங்குடி மக்களின் தலைவர்களும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்து பங்கேற்றனர். பரவலான பொதுமக்கள் பங்கேற்பும் இச்செயல்முறையில் இருந்தது. நாடளாவிய ரீதியில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஒப்பந்தம் ஏற்கப்படாமையால் தோல்வியடைந்தது. கனடாவின் மக்கள் தமது வேற்றுமைகளுக்கான தீர்வைக் காணக்கூடிய அரசியல் யாப்பை உருவாக்குவதில் மீண்டும் ஒரு தடவை தோல்வியைத் தழுவினர். 1992 இன் பின்னர் கியுபெக் மக்களும், கியுபெக் மாநிலத்திற்கு வெளியே உள்ளோரும் அரசியல் யாப்புத் திருத்தம் அல்லாத வேறு தீர்வு முயற்சிகளையும் பற்றிச் சிந்தித்தனர். முக்கியமான பிரச்சினைகள் பற்றிக் கருத்தொற்றுமையை பெறுதல் இலகுவாக இருந்தபோதும், தாம் ஏற்றுக் கொண்ட விடயங்களைப் பொருத்தமான வகையில் எழுத்தில் வரைவது குறித்து ஒற்றுமை ஏற்படவில்லை அடிப்படையான பொதுவிழுமியங்கள் இருபகுதியினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதும் அவர்கள் அரசியல் யாப்பின் மொழி, அதன் வாசகங்கள் எப்படி இருத்தல் வேண்டும் என்பதில் ஒற்றுமையை எட்டவில்லை. கனடாவின் ஐக்கியத்தை பாதுகாப்பதற்கு உரிய வழிவகைகள் எவை? கியூபெக்கை தனித்த சமூகமாக அல்லது தேசியமாக (Nation) ஏற்றுக்கொள்வதா? அல்லது கியூபெக்கிற்கு வெளியே பிற மாநிலங்களில் வாழும் பிரஞ்சுக்காரர்களை அந்தந்த மாநிலங்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைய வைத்து, அவர்களுக்கும் கியூபெக்கிற்கும் இடையிலான உறவைப் பலவீனப்படுத்துவதா சமஷ்டி நிறுவனங்களில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது நல்லதா? என்பன போன்ற விடயங்கள் கனடாவில் விவாதிக்கப்பட்டன. இந்த விவாதங்கள் ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பரவலாக்கல் பற்றியும், ஸ்பெயின் நாட்டில் சுயாட்சி பற்றியும் எழுந்த விவாதங்களை ஒத்தவையாக இருந்தன. பிரிவினை பற்றிக் கனடாவின் உயர் நீதிமன்றம் 1998 ஆம் ஆண்டில் கூறிய விளக்கம் அரசியல் யாப்பு நோக்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. 1995 ஆம் ஆண்டில் சர்வசன வாக்கெடுப்பில் கியூபெக் பிரிவினை தோல்வி கண்டபின்னர் சமஷ்டி அரசாங்கம் கனடாவின் உயர் நீதிமன்றத்திற்கு விளக்கம் கேட்டு மனுவொன்றைச் சமர்ப்பித்தது. கனடாவில் இருந்து தன்னிச்சையாகவே பிரிந்து செல்லும் உரிமையை கனடாவின் சட்டமோ அல்லது சர்வதேச சட்டமோ அனுமதிக்குமா என்பதே நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வினாவாகும். நீதிமன்றம் மிகுந்த கவனத்தோடும் நடுநிலையோடும் விளக்கம் கொடுத்தது அவ்விளக்கம் பின்வருமாறு :

(1) கனடாவின் எழுதப்பட்ட யாப்பில் பிரிந்து போவதற்கான கியூபெக்கின் உரிமை சொல்லப்படவில்லை.

(2) சர்வதேச சட்டத்தின்படி பிரிந்து போகும் உரிமையைக் கோருவதற்கு கியூபெக்கியருக்கு உரிமை இல்லை. ஏனெனில் அவர்களைச் சுரண்டப்பட்ட மக்கள் (Exploited People) என்று கூற முடியாது.

(3) மேற்குறித்த இரு காரணங்களினாலும் தன்னிச்சையாக அல்லது ஒரு தலைபட்சமாக பிரிந்து போவதற்கு கியூபெக்கிற்கு உரிமை இல்லை. வெளிப்படையாக அவ்வுரிமை பற்றிய குறிப்பு அரசியல் யாப்பில் இல்லை.

(4) மேற்கண்டவாறு குறிப்பிட்ட பின்னர் கனடாவின் அரசியல் யாப்பின் அடிப்படைகளை ஆராயும் போது கியூபெக் மக்கள் பிரிவினையை ஐயம் திரிபற்ற தெளிவான ஒரு கேள்வியின்படி (A clear question) தெளிவான பெரும்பான்மை (Clear Majority) வாக்குகளால் ஆதரித்து முன்வைப்பார்களானால் நிச்சயமாக கனடா சமஷ்டியின் பங்காளர்களுக்கு ஒரு கடப்பாடு (Obligation) எழும். அதாவது ஒரு புதிய ஒப்பந்ததிற்கு வருவதற்கான கடப்பாடு தோன்றும்.

(5) ஆதலால் கனடா தேசம் பிரிபடக் கூடியது.

உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மிக முக்கியமானது.

இத்தீர்ப்பின்படி உலக நாடுகளுக்குள்ளே பிரிந்துபோவதற்கான உரிமையை அங்கீகரிக்கும் ஒரே ஒரு நாடு என்ற கணிப்பை கனடா பெற்றுள்ளது. ஆனால் இது முக்கியமான சில நிபந்தனைகளின் அடிப்படையில் உள்ள உரிமை என்பதையும் கவனித்தல் வேண்டும். சமஷ்டிவாதம் (Federalism) ஜனநாயகம், அரசியல்யாப்புவாதம் (Constitutionalism), சட்டத்தின் ஆட்சி (Rale of Law) சிறுபான்மையினர் உரிமைகளை மதித்தல் என்பன அந்நிபந்தனைகள் ஆகும்.

மேலே குறிப்பிட்ட ‘ஐயம்திரிபற்ற தெளிவான ஒரு கேள்வி’ (As clear question) தெளிவான பெரும்பான்மை (Clear Majority) என்ற இரண்டு சொற்தொடர்களிலும் வரும் ‘clear’ என்ற சொல் எதனைக் குறிப்பிடுகின்றது என்பதை நீதிமன்றம் ‘தெளிவாக’ வரையறை செய்யவில்லை.

நீதிமன்றின் மேற்குறித்த தீர்ப்பு இரு பகுதியினரும் எதிர் காலத்தில் எவ்வகையில் செயற்பட வேண்டும் என்பது பற்றிய உரையாடலை ஆரம்பிப்பதற்கான தூண்டுதலை வழங்கியது என்றே கொள்ள முடியும். ஆனால் அது நிகழவில்லை. மாறாக சமஷ்டி அரசாங்கம் ‘தெளிவுபடுத்தல் சட்டம் 2000’ (Clarity Act 2000) என்னும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டம் சர்வசன வாக்கெடுப்புக்கான கேள்வியை சமஷ்டிப் பாராளுமன்றம் மட்டுமே தீர்மானிக்கும் அதிகாரம் உடையது என்றும் சர்வசன வாக்கெடுப்பின் முடிவு தெளிவானதா என்பதையும் அதுவே தீர்மானிக்கும் என்றும் குறிப்பிட்டது. கியூபெக் அரசாங்கம் வேறு ஒரு சட்டத்தை இயற்றியது. அச்சட்டம் கியூபெக்கின் தேசிய சட்டசபை எக்கேள்வியையும் பரிசீலித்துத் தீர்மானிக்கும் உரிமை உடையது என்றும், சர்வசன வாக்கெடுப்பின்படி 50 வீதம் ஒரு வாக்கு என்ற பெரும்பான்மை முடிவு எடுக்கப்போதுமானது என்று குறிப்பிட்டது.

இன்று கனடாவில் வாழ்க்கை சுமுகமாகச் சென்று கொண்டிருக்கிறது. 1960 கள் முதல் 1990 கள் வரை நிலவிய பிரச்சினைகள் 21 ஆம் நூற்றாண்டின் முதற்பத்தாண்டில் தணிந்துள்ளன. எந்தவொரு குழுவினதும் அரசியல் நிகழ்ச்சி நிரலிலும் அரசியல் யாப்புச் சீர்த்திருத்தம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கனடா அரசாங்கம் பாராளுமன்றத்தில் (பொது மக்கள் அவை) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, இதன்படி கியுபெக் ஒரு தனித்துவமான சமூகம் என்பது அங்கீகரிக்கப்பட்டது. அத்தோடு எந்தவொரு யாப்புத் திருத்தமும் கியுபெக்கினதும், வேறு மூன்று மாநிலங்களதும் சம்மதம் இன்றி நிறைவேற்றப்படமாட்டாது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கனடாவிற்குள் சமூகவியல் அர்த்தத்தில் கியூபெக் ஒரு தேசியம் (A nation) ஆகும் என்றும் தீர்மானம் உறுதி செய்தது.

பன்மைப் பண்பாடுகளை முகாமை செய்தல் என்னும் விடயத்தில் வெற்றி பெற்ற தேசமாகக் கனடாவைக் கருதமுடியுமா? என்ற கேள்வி எழுகிறது. ஒருவர் என்ன நோக்குமுறையில் பார்க்கிறார் என்பதைப் பொறுத்து விடை வேறுபடும் . கியூபெக் தேசியவாதிகளின் பார்வையில் கனடா இவ்விடயத்தில் தோல்வி கண்டுள்ளது. பெரும்பான்மைவாத இலக்குகள் கியூபெக் மீது திணிக்கப்பட்டன. சமஷ்டி அரசின் செலவுகள் பற்றிய அதிகாரம் பிரயோகிக்கப்பட்ட விதம் இதற்குச் சிறந்த உதாரணமாகும். சமஷ்டி முறை விதித்த கட்டுப்பாடுகள் கியூபெக்கின் தேசிய அடையாளத்தை வரையறை செய்யவும், அதன் முன்னுரிமைகளை வகுத்துக் கொள்ளவும், விழுமியங்களை வளர்க்கவும் தடையாக இருந்தன என்று கியூபெக்கியர் நம்புகின்றனர்.

கனடாவின் அரசியல் யாப்பிலும் அந்நாட்டின் குறியீட்டு நிலை வெளிப்பாடுகளிலும், கியூபெக் ஒரு தேசிய இனம் என்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதும், அத்தகைய கணிப்பை வழங்குவதற்குக் கனடா தவறிவிட்டதென்பதும் மிக முக்கியமானது. இக்கட்டுரையில் ஆராயப்பட்ட விடயங்களைக் கொண்டு கனடாவில் சமஷ்டி வெற்றி பெற்றதா என்ற கேள்விக்கான விடையைக் கூறுவோம்.

(1) முதலாவதாக உலகில் மிக அதிக அளவு அதிகாரப் பரவலாக்கலைக் கொண்ட பெல்ஜியம், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளோடு கனடாவையும் சேர்க்கலாம். கியூபெக் மாநிலத்தினரின் அழுத்தங்கள் தான் இவ்வளர்ச்சிக்குக் காரணம்.

(2) இரண்டாவதாக கியுபெக்கியர்களிடம் பல மனக் குறைகள் நீண்ட காலமாக இருந்து வந்தன. இவை வரலாற்று முக்கியத்துவம் உடையன. இருப்பினும் இக்குறைகள் பெருமளவுக்கு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. கியூபெக்கியர்கள் சமஷ்டி அரசின் நிறுவனங்களில் ‘ஓரங்கட்டப்பட்ட விளிம்பு நிலையினராக’ இருந்த நிலை இன்று பெருமளவிற்குக் குறைந்துள்ளது. கியூபெக் மாநிலத்திற்குள்ளேயே பிரஞ்சு மொழிபேசுவோர் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர் என்பதை 1960 க்களில் இரு மொழியும், இருமைப் பண்பாடும்
பற்றிய ஆணைக்குழு (Royal Commission on Bilingualism and Biculturalism) ஆவணப்படுத்தியிருந்தது. இப்பிரச்சினை இன்று தீர்க்கப்பட்டுவிட்டது.

(3) மூன்றாவதாக நிதிச் சமஷ்டி (Fiscal Federalism), செலவுக்கான அதிகாரம் என்ற விடயங்களில் மாநிலங்களில் நிதிச் சுயாட்சி அதிகாரம் இன்று உள்ளதைக் காணலாம். மாநில அரசுகள் சமஷ்டி அரசுடன் ஒப்பிடுகையில் கூடியளவு சுயாட்சி அதிகாரத்தைச் செலுத்துகின்றன. சமஷ்டி அரசில் இருந்து பெறப்படும் நிதி மாற்றல்களைவிட மாநிலங்களில் வருவாய் அதிகமாக உள்ளது. ஏனைய சமஷ்டிகளோடு ஒப்பிடு போதும் கனடாவில் மாநிலங்களின் வருவாயின் குறைந்த ஒரு விகிதமாகவே நிதி மாற்றங்கள் உள்ளன. நிதிமாற்றகளுடன் நிபந்தனைகளை விதிப்பதும் கனடாவில் குறைவு. மாநிலங்களுக்கு என ஒதுக்கப்பட்ட நியாயாதிக்க விடயங்களில் சமஷ்டி அரசாங்கம் தலையிட்டுத் தானாகவே புதிய செயல் திட்டங்களை உருவாக்கும் சமஷ்டி அதிகாரத்தை கட்டுப்படுத்துவதில் கியூபெக் தலைமையில் செயற்பட்ட மாநிலங்கள் வெற்றிகண்டுள்ளன.

(4) கனடாவின் கியூபெக் சமூகம் தமது தேசியத்தைக் கட்டி வளர்க்கும் திட்டத்தில் வெற்றிகண்டுள்ளது. கனடாவின் சமஷ்டியினால் இதனைக் தடுக்க முடியவில்லை என்பது மிக முக்கியமான விடயம். கனடாவிற்குள் கியூபெக் மாநிலம் செயல்துடிப்புள்ளதும் சுயாதீனமானதுமான சிவில் சமூகம் ஒன்றை உருவாக்கியுள்ளது. கியூபெக்கில் தனித்துவம் மிக்க சமூககொள்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. கியூபெக்கிற்குள் குடியேறும் குடியேறிகளை ஒருங்கிணைக்கும் சுயாதீனமான கொள்கைகளை அம்மாநிலம் செயற்படுத்துகிறது. அங்கு செயல்வலுமிக்க வர்த்தக சமூகம் ஒன்று உள்ளது. கியூபெக்கின் பிரதிநிதிகள் சமஷ்டி அரச நிறுவனங்களில் செல்வாக்குமிக்கவர்களாகச் செயற்பட்டு வருகின்றார்கள் 1968 க்குப் பிந்திய காலத்தின் பெரும்பகுதியில் கியூபெக்கின் தலைவர்களே கனடாவின் பிரதமர்களாகவும் பதவி வகித்திருக்கிறார்கள்.

குறிப்பு : ‘Power Sharing : The International Experience’ என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் இருந்து, அலெய்ன் ஜி கக்னொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன் எழுதிய,  ‘Addressing Multi Culturalism in Canada’ என்ற கட்டுரையின் மொழிப்பெயர்ப்பே இக்கட்டுரையாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10738 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (16)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)