Arts
24 நிமிட வாசிப்பு

கனடாவின் பாரளுமன்ற சமஷ்டி முறைமை

March 15, 2024 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம் : டேவிட்.ஆர். கமரன்

கனடா ஒரு பாராளுமன்ற ஜனநாயக முறையை உடைய நாடு. கனடாவின் அரசுத் தலைமையாளாக பிரித்தானியாவின் எலிசபெத் II அரசி விளங்குகிறார். அவரின் பிரதிநிதியான ஆளுநர் நாயகம் சமஷ்டி அரசின் பிரதிநிதியாக விளங்குவார். அவ்வாறே மாகாணங்களில் ஆளுநர்களும் அரசியின் பிரதிநிதியாக உள்ளனர். கனடாவின் புவி இடப்பரப்பு 9 மில்லியன் சதுர கிலோமீற்றர் ஆகும். இப் புவிப்பரப்பு மூன்று நேர வலயங்களை (TIME ZONES) உள்ளடக்கியது. இந்நாட்டின் சனத்தொகை 31 மில்லியன் ஆகும். சனத்தொகையின் பெரும் பங்கினர் நகரங்களிலும் பட்டினங்களிலும் செறிந்துள்ளனர். இந்நகரங்களும் பட்டினங்களும் பெரும்பான்மை கனடாவின் வடக்கே ஐக்கிய அமெரிக்க எல்லையோரமாக நேர்கோட்டில் அமைந்துள்ளன. 

1867 இல் பிரித்தானியாவின் மூன்று காலனியப் பிரதேசங்களை ஒன்றியமாக (UNION) ‘பிரித்தானிய வட அமெரிக்கா’ என அமைத்த போது கனடா என்ற தேசம் தோன்றியது. நோவா ஸ்கோஷிசியா, நியு பிறவுண்ஸ்விக், கனடாவின் ஐக்கிய மாகாணங்கள் என்பனவே மேற்குறிப்பிட்ட மூன்று காலனிகளாகும். இறுதியாகக் குறிப்பிட்ட கனடாவின் ஐக்கிய மாகாணம் (UNITED PROVINCE OF CANADA) கிழக்கு, மேற்கு என்ற இரு பிரிவுகளைக் கொண்டிருந்தது. 1867 இன் பின்னர் இவை முறையே குயுபெக், ஒன்டாரியோ என இரண்டு மாகாணங்களாகப் பிரிந்தன. பின்னர் ஆறு வெவ்வேறு மாகாணங்களும் கனடாவுடன் இணைந்தன. அவையாவன: 

canadian territories

மனிட்டோபா (1870), பிரித்தானிய கொலம்பியா (1871), பிரின்ஸ் எட்வேட் தீவு (1873), சஸ்கற்சுவானும் அல்பேர்ட்டாவும் (1905), நியுபவுண்ட்லாந்து (1949), இவற்றை விட யுகொன், வடமேற்குப் பிரதேசம், நுனாவுட் என்னும் மூன்று வடக்குப் பிராந்தியங்கள் (NORTHERN TERRITORIES) 1999 இல் உருவாக்கப்பட்டு கனடாவின் பிராந்தியங்களாக அமைந்துள்ளன. 

கனடாவின் பன்மைத்துவம் மூன்று வகையினதாக இணைந்து அமைந்துள்ளது. 

1) மொழி அடிப்படையான பன்மைத்துவம் – ஆங்கிலம், பிரஞ்சு என்பன முதன்மை மொழிகளாகவும் ஏனைய பல மொழிகள் பிற இனக்குழும மொழிகளாகவும் உள்ளன. 

2) பிராந்திய ரீதியான பன்மைத்துவம் (REGIONAL DIVERSITY)

3) இனக்குழும பண்பாட்டுப் பன்மைத்துவம் (ETHNO – CULTURAL DIVERSITY)

வரலாற்று ரீதியாக ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய இரு மொழிகளின் நாடாக உருவான கனடாவின் இருமொழிச் சமூகங்கள் பிரதான மொழிச் சமூகங்களாக (MAIN LANGUAGE COMMUNITIES) உள்ளன. ஆங்கிலம் கனடாவின் 65% வீத மக்களின் தாய்மொழியாக உள்ளது. பிரஞ்சு 24% வீத மக்களின் தாய் மொழியாக உள்ளது. பிரஞ்சு மொழியினர் குயுபெக்கிலேயே பெரும் பங்கில் செறிந்து வாழ்கின்றனர். கனடாவின் குடியேற்றமும், அதன் வளர்ச்சியும் குடிவரவில் தங்கியிருப்பதால் பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட சனத்தொகை 14% வீதமாக உள்ளது. 1991 இல் 1 மில்லியன் மக்கள் தாம் பழங்குடியினர் மூலத்தை ஓரளவுக்காயினும் உடையவர்கள் எனக் குறிப்பிட்டனர்.

Canadian languages

மேற்குலகின் கைத்தொழில் வளர்ச்சியுற்ற நாடுகளில் கனடா ஏழாவது இடத்தைப் பெறுகிறது. அது கைத்தொழில் நாடுகளின் கூட்டான ‘GROUP 8’ (எண்மர்குழு) இல் உறுப்பினராக உள்ளது. கனடாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் மேம்பட்டு, தடைகள் குறைக்கப்பட்டு வந்துள்ளன. கனடாவின் ஏற்றுமதிகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 40% ஆக உள்ளது. இது உலகின் பிறநாடுகளுடன் ஒப்பிடும் போது மிக உயர்வான நிலை ஆகும். கனடாவின் ஏற்றுமதிகளில் 80% வீதம் ஐக்கிய அமெரிக்காவிற்கு செல்கிறது. கனடாவின் பொருளாதாரம் ஐக்கிய அமெரிக்காவுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளின் வர்த்தக உறவுகளில் கவனிப்புக்குரிய விடயம் யாதெனில் கனடாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக ஐக்கிய அமெரிக்காவும், ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக கனடாவும் விளங்குவதாகும். இவ்விரு நாடுகளதும் வர்த்தக உறவுகள் 1989 இல் மேற்கொள்ளப்பட்ட கனடா – ஐக்கிய அமெரிக்கா சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் பலப்படுத்தப்பட்டுள்ளன.  பின்னர் 1992 இல் கனடா ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (NAFTA) ஒன்றைச் செய்து கொண்டன. இவ் உடன்படிக்கை இவ்வுறவுகளை மேலும் பலப்படுத்தியுள்ளது. 

கனடாவின் பொருளாதாரம் அதன் நிறைந்த இயற்கை வளங்களை ஆதாரமாகக் கொண்டு வளர்ச்சியுற்றது. கனியவளம், விவசாயம், மீன்பிடி, வனத்துறை என்பவற்றோடு இன்று கைத்தொழில்களும் உயர் தொழில்நுட்பத் துறைகளும் பொருளாதாரத்தில் பிராந்தியப்படுத்தப்பட்டதாக உள்ளது. கனடாவின் உற்பத்தியின் பெரும்பங்கு ஒன்டாரியோ, குயுபெக் ஆகிய மத்திய மாகாணங்களின் பங்களிப்பாக உள்ளது. இவ்விரு மாகாணங்களும் சேர்ந்து கனடாவின் கைத்தொழில் உற்பத்திக்கு 80% வீத பங்களிப்பை வழங்குகின்றன. கனடாவின் அரசியல் உறுதிநிலைக்கு கனடாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதனை விட இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் பின்வரும் நான்கு காரணிகள் கனடாவின் சமஷ்டி முறையின் வளர்ச்சிக்கும் நிலைபேறுக்கும் உதவின. 

அ) கனடாவின் சமூகநல அரசு (WELFARE STATE) உருவாக்கம் பெற்றுப் பலப்படுத்தப்பட்டது. அது சமூக நலன்களை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அரசாகவும் வளர்ச்சியுற்றது. 

ஆ) பிரஞ்சுக்காரர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட குயுபெக் மாகாணத்தில் 1960 களில் தாராண்மைத் தேசிய வாதம் (LIBERAL NATIONALISM) வளர்ச்சியுற்றமை இரண்டாவது காரணியாகும். 

இ) குயுபெக்கில் தேசியவாதம் வளர்ச்சியுற்ற அதேவேளை பிற எல்லா மாகாணங்களிலும் மாகாணங்களைப் பலப்படுத்தல், கட்டி வளர்த்தல் (PROVINCE BUILDING) என்னும் செயல்முறையும் இயக்கம் பெற்றது.

ஈ) நான்காவதாக கனடாவின் பூர்வகுடிகள் (ABORIGINES) சுயநிர்ணய உரிமையை (SELF DETERMINATION) அவாவி நின்றனர். 

இந்த நான்கு காரணிகள் மட்டுமல்லாது வேறு பல காரணிகளையும் அடையாளம் காண முடியும். ஆயினும் மேற்கூறிய நான்கும் கனடாவின் சமஷ்டி பற்றிய புரிதலில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. 

சமஷ்டி குறித்த அரசியல் யாப்புக் கூறுகள் 

பிரித்தானியாவின் பாராளுமன்ற முறையுடன் சமஷ்டி முறையை இணைத்து பாராளுமன்ற சமஷ்டி (PARLIAMENTARY FEDERATION) என்ற யாப்பு முறையை நடைமுறைப்படுத்திய முதலாவது நாடு கனடாவாகும். இம்முறையில் மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கங்கள் என்ற இரு வகை அரசாங்கங்களிடையே இறைமை பிரிபட்டு இருக்கும். இவ் இருவகை அரசுகளும் பாராளுமன்றங்களைக் கொண்டிருக்கும். இதுவே பிரித்தானியப் பாராளுமன்ற ஜனநாயக முறையுடன் சமஷ்டி இணைத்திருப்பதன் தாற்பரியமாகும். சமஷ்டி முறை கனடாவில் பிரிக்கப்பட்ட மாதிரியில் அல்லாத பகிரப்பட்ட மாதிரியாக (SHARED MODEL OF FEDERALISM) உள்ளது. கனடாவின் மத்திய அரசின் மாகாணங்களின் பிரிதிநிதித்துவம் பலமற்றதாக உள்ளது. செனற்சபை பலம் குறைந்தது. இதனால் ஒட்டாவாவில் உள்ள நிர்வாகத்துறை பலமுற்றது. அதைப் போன்றே மாகாண அரசுகளின் நிர்வாகத் துறைகளும் பலம் மிக்கவை. கனடாவின் அரசு முறையில் நிர்வாகத்துறையின் மேலாதிக்கம் (EXECUTIVE DOMINATION) இருந்து வருகிறது. 

canadian parliament

1867 இல் கனடா மத்தியப்படுத்தப்பட்ட சமஷ்டியாக உருவாக்கப்பட்டது. அவ்வேளை கனடாவின் ஒட்டாவா அரசாங்கம் பலமுடையதாகவும், மாநிலங்களின் மீது ஆதிக்கம் கொண்டதாகவும் இருந்தது. ஆரம்பம் இவ்வாறு அமைந்த போதும் கனடா இன்று பெருமளவில் பரவலாக்கப்பட்ட அதிகாரங்களை உடையதாக மாறியுள்ளது. இவ்வாறு பரவலாக்கம் நிகழ்ந்தமைக்குப் பல காரணங்கள் இருந்தன. 

அ) நீதிமன்றங்களின் அதிகாரங்களின் பகிர்வு பற்றிய வியாக்கியானங்களை வழங்கும் தீர்ப்புகள் மாகாண அரசுகளுக்குச் சாதகமாக அமைந்தன. 

ஆ) கனடாவின் மத்திய அரசு நிறுவனங்கள் மாகாணங்களின் நலன்களை பிரிதிநிதித்துவம் செய்யக்கூடியனவாய் இருக்கவில்லை. அது கனடாவின் பன்மைத்துவத்திற்கு ஈடு கொடுக்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. இந்நிலையில் மாகாண அரசுகள் தமது அதிகாரங்களைப் பலப்படுத்துவதற்கு மக்களின் ஆதரவு கிடைத்தது. 

இ) சுகாதாரம், சமூகநலன் சேவைகள், கல்வி என்பன மாகாணங்களுக்குரிய விடயங்களாகும். இவை 19 ஆம் நூற்றாண்டில் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. 20 ஆம் நூற்றாண்டில் இவை முக்கியம் பெற்றதால் மாகாணங்களின் அதிகார எல்லையும் விரிவடைந்தது. 

ஈ) இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் குயுபெக்கில் தேசியவாதம் தீவிர வளர்ச்சி பெற்றது. குயுபெக் அரசாங்கத்திற்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதனால் ஏனைய மாகாணங்களும் நன்மை பெற்றன. 

மேற்குறித்த காரணங்களால் கனடாவின் ஒட்டாவா அரசாங்கமும் மாகாண அரசாங்கங்களும் அதிகாரப்பலம் மிக்கனவாக விளங்குகின்றன. 

அவை இன்று சமூக அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றில் முக்கிய பங்காற்றுகின்றன. அரசாங்கங்களுக்கு இடையிலான ஒருங்கிணைவிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. இடையிடையே அரசாங்கங்களுக்கிடையிலான முறுகல் நிலை எழுந்த போதும், பொதுவாக ஒருங்கிணைப்பும் கூட்டுறவும் முன்னேற்றப் பாதையில் செல்கிறது. 

கனடாவின் பிரதான அரசியல் யாப்பு ஆவணங்கள் இரண்டாகும். 

  1. அரசியல் யாப்புச் சட்டம் 1867
  2. அரசியல் யாப்புச் சட்டம் 1982

1867 சட்டம் ‘பிரித்தானிய வடஅமெரிக்க சட்டம்’ எனவும் அழைக்கப்பட்டது. அச்சட்டம் பிரித்தானியப் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது. அச்சட்டம் ஆரம்பத்தில் மூன்று காலனிப் பகுதிகளை ஒன்றிணைத்து கனடாவிற்கு சமஷ்டி முறையையும், பாராளுமன்ற முறையையும் வழங்கியது. 1867 சட்டத்தில் தான் அதிகாரப் பகிர்வு பற்றிய பொது விதிகள் கூறப்பட்டுள்ளன. பாராளுமன்றம், மாகாண சட்டசபைகள், நீதிமன்றங்கள் என்பன பற்றியும் இச்சட்டமே வரையறை செய்துள்ளது. அரசியல் யாப்புச் சட்டம் 1982 அதிகாரங்களை பிரித்தானியாவில் இருந்து கனடாவிற்கு மாற்றுவதற்கான சட்டமாகும். இச்சட்டம் அரசியல் யாப்பை திருத்துவதற்குரிய அதிகாரத்தைக் கனடாவிற்கு வழங்கியுள்ளது. இதனைவிட கனடாவின் பூர்வ குடிகளது உரிமைகள், உடன்படிக்கை உரிமைகள் (TREATY RIGHTS) என்பவற்றை உறுதிப்படுத்துவதாகவும், அனைத்துப் பிரஜைகளுக்கும் பொருந்துவதும் அனைத்து அரசாங்கங்களையும் சட்ட சபைகளையும் கட்டுப்படுத்துவதுமான ‘உரிமைகளும் சுதந்திரங்களும் பட்டயத்தை’ (CHARTER OF RIGHTS AND FREEDOMS) அறிமுகப்படுத்துவதாகவும் 1982 ஆம் ஆண்டுச் சட்டம் அமைந்தது. 

1867 அரசியல் யாப்புச் சட்டத்தின் பிரிவு 91-95 இன் படி சமஷ்டி அரசாங்கத்திற்கும் மாகாண அரசாங்கங்களிற்கும் உரிய அதிகாரங்கள் வகுத்து ஒதுக்கப்பட்டுள்ளன. இச் சட்டத்தின்படி கனடாவின் பாராளுமன்றம் அகல் விரிவான அதிகாரங்களை உடையதாக உள்ளது. கனேடிய பாராளுமன்றத்திற்கென குறிப்பாக ஒதுக்கப்படாத எந்தவோர் அதிகாரமும் கனடாவின் (சமஷ்டி) பாராளுமன்றத்திற்குரிய எஞ்சிய அதிகாரங்கள் (RESIDUAL POWERS) ஆகும். அவை கனேடிய பாராளுமன்றத்திற்கு உரித்தானவை. மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் குறிப்பானவையாகவும் வரையறுக்கப்பட்டவையாகவும் (SPECIFIC AND LIMITED) இருந்தன. ஆயினும் நீதிமன்ற விளக்கம் (JUDICIAL INTERPRETATION) பிரிவு 92 (13) இன் படியான சொத்துக்களும் சிவில் உரிமைகளும் பற்றிய மாகாணங்களின் அதிகாரங்களை ஒரு வகை எஞ்சிய அதிகாரங்களாக மாற்றியுள்ளன. 

P.O.G.G அதிகாரங்கள் 

சமஷ்டி பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரங்கள் அரசியல் யாப்புச் சட்டம் 1867 இன் பிரிவு 91 இல் கூறப்பட்டுள்ளன. இப் பிரிவு கனேடிய பாராளுமன்றம் ‘சமாதானம், ஒழுங்கு கனடாவின் நல்லாட்சி’ என்னும் நோக்கங்களோடு சட்டங்களை, மாகாணச் சட்ட சபைகளுக்குக் குறித்தொதுக்கப்படாத விடயங்களில் ஆக்கலாம் எனக் குறிப்பிடுகிறது. இது அதன் விரிந்த சட்டவாக்க அதிகாரத்தை எடுத்துக் காட்டுவது. இது கனடாவின் சமஷ்டி பாராளுமன்றத்திற்கு கொடுக்கப்பட்ட பொதுவான அதிகாரமாகும். அரசியல் யாப்பினை வரைந்தவர்கள் இப் பொது அதிகாரத்தின் கீழ் அமைவனவான 29 அதிகாரங்களின் தலைப்புகளை அறிவித்தார்கள். இவ் அதிகாரம் ‘P.O.G.G ‘ அதிகாரம் எனக் குறிப்பிடப்படும். அதாவது சமாதானம், ஒழுங்கு, கனடாவின் நல்லாட்சி (PEACE, ORDER AND GOOD GOVERNANCE OF CANADA – சுருக்கம் P.O.G.G) என்னும் பொது அதிகாரம் என்ற பொருள் உடையதாகும். 1867 இன் பின்னர் நீதிமன்றங்கள் (P.O.G.G ‘POWERS’) பி.ஓ.ஜி.ஜி அதிகாரங்கள் என்பனவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளன. P.O.G.G அதிகாரங்களை மூன்று நிலைமைகளுக்கு மட்டும் சமஷ்டிப் பாராளுமன்றம் பிரயோகிக்கலாம் என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. அம்மூன்று நிலைகளாவன: 

1) அதிகாரப் பகிர்வில் ஓர் சட்டவாக்க இடைவெளி (LEGISLATIVE GAP) உருவாகியிருத்தல் : உதாரணமாக கடற்கரையோர கனிய வளங்கள் அல்லது சமஷ்டி மொழிக் கொள்கை

2) ‘தேசிய நலன் சார்ந்த கவலை’க்குரியதும் கனடாவின் பாராளுமன்றத்திற்குரிய அதிகாரங்களாகக் குறிப்பிடப்படாதனவும். உதாரணங்கள் கடல் அழுக்காதல், விமானப் போக்குவரத்து 

3) தேசிய அவசர காலநிலை (NATIONAL EMERGENCY) ஏற்பட்டிருத்தல். உதாரணம் : நாட்டில் சிவில் குழப்பம் (CIVIL DISORDER) ஏற்படுதல், மோசமான பணவீக்கத்தால் பொருளாதார நெருக்கடி ஏற்படுதல். 

29 தலைப்புக்களில் குறிப்பிடப்பட்டவற்றுள் முக்கியமானவை சில வருமாறு: 

• வியாபாரத்தையும் வர்த்தகத்தையும் ஒழுங்குபடுத்துதல் – பிரிவு 91(2) – இது தற்போது முழு நாட்டினையும் பாதிக்கும் சர்வதேச வியாபாரமும் வர்த்தகமும், மாகாண வியாபாரமும் வர்த்தகமும் என்பனவற்றை உட்படுத்துவதாக உள்ளது. 

• வேலையற்றோருக்கான காப்புறுதி – பிரிவு 91(2a) – இப்பிரிவு 1940 ஆம் ஆண்டின் அரசியல் யாப்புச் சட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

• வரிவிதிப்பு – பிரிவு 91(3). இப்பிரிவு எம்முறையிலோ, வகையிலோ வரிவிதிக்கும் அதிகாரத்தைச் சமஷ்டி அரசுக்கு வழங்கியது.

• இந்தியர்களும், இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளும் – பிரிவு 91(24) (இந்தியர் என்பது பழங்குடிகளைக் குறிப்பது). 

• உடன்படிக்கைகளைச் செய்யும் அதிகாரம் – பிரிவு 132. இப்பிரிவு சர்வதேச உடன்படிக்கைகளைச் செய்யும் அதிகாரத்தை சமஷ்டி அரசாங்கத்திற்கு வழங்கியது. உடன்படிக்கை மாகாணங்களின் நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட விடயமாயின் மாகாணங்கள் அவ் உடன்படிக்கையை ஏற்று அங்கீகரிக்கும் வரை செயற்பாடுடையதாகாது.

• பணமும் வங்கிகளும் பற்றிய அதிகாரம், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து அதிகாரம்.

1867 ஆம் ஆண்டின் அரசியல் அமைச்சுச் சட்டம் 92 விடயங்களை மாகாணங்களுக்கு உரியன எனக் குறிப்பிட்டுள்ளது. அவற்றுள் மிக முக்கியமானவை பின்வருவன:

• நேரடி வரிகள் – பிரிவு 92 (2) 

இப் பிரிவு நேரடி வரிகள் (DIRECT TAXES) மாகாணத் தேவைகளுக்கான வருமானத்தைப் பெறும் அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்கியது. 

• அரசாங்க காணிகளின் விற்பனையும் முகாமை செய்தலும் – பிரிவு 92(5) – மாகாணத்தில் உள்ள காணிகளும் அரசாங்க காணிகளும் இயற்கை வளங்களும் அம்மாகாணத்தின் சொத்தாகும். இவற்றின் மூலம் குறிப்பிடத்தக்களவு அரச வரிகள் வருவாய் கிடைப்பதோடு, இவ் வரிவருவாய் மாகாணத்தின் பொருளாதாரத்தை இயக்குவதற்கு உபயோகமாகிறது.

• சுகாதாரமும் நலன்புரி சேவைகளும் – பிரிவு 92(7) – இது 20 ஆம் நூற்றாண்டில் முக்கியத்துவம் பெற்ற ஒரு துறையாகும். இன்று சுகாதாரப் பராமரிப்பு மாகாண அரசாங்கங்களுக்குப் பெரும் செலவை ஏற்படுத்துவதாக உள்ளது. 

• மாநகரசபை நிறுவனங்கள் – பிரிவு 92(9) – அதாவது மாநகரசபை அரசாங்கங்களை மாகாண அரசாங்கங்கள் ஆக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும்.

• பிரதேசப் பணிகளும் நடவடிக்கைகளும் – பிரிவு 92(10).

• மாகாணத்தினுள் சொத்துரிமைகளும் குடியியல் உரிமைகளும் – பிரிவு 92(13). மாகாணங்களின் அதிகாரங்களில் இதுவே முக்கியமானதாகக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் மாகாணங்கள் இப்பிரிவில் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களை உபயோகித்து காணிச் சொத்துக்கள், குடியியல் உரிமைகள் ஆகியன தொடர்பாக தத்தமது மாகாணங்களுக்குரிய சட்டங்களை இயற்றலாம். 

• உள்ளூர் சார்ந்த தனியாள் சார்ந்த விடயங்கள் – பிரிவு 92 (16). இது மாகாண அதிகாரத்தின் இன்னொரு மூலமாகக் கருதப்படுகிறது. உள்ளூர் சார்ந்த அல்லது தனிநபர் சார்ந்த விடயங்களுடன் தொடர்புடையவை. மேலும் மாகாணங்களின் வேறு அதிகாரங்களுடன் குறிப்பிட்டு சொல்லப்படாதவற்றுடன் இது தொடர்புடையதாக இருக்கின்றது. 

ஒருங்கிணை அதிகாரங்கள் (CONCURRENT POWERS) நான்கு உள்ளன. 

• முதலாவது ஒருங்கிணை அதிகாரமாக குறிப்பிடத்தக்கது விவசாயமும் குடிவரவும் (பிரிவு 95) ஆகும். 95 ஆம் பிரிவு இவ்விடயங்கள் சம்மந்தமாக சமஷ்டி பாராளுமன்றமும் மாகாண பாராளுமன்றங்களும் சட்டம் இயற்றலாம் எனக் குறிப்பிடுகின்றது. முரண்பாடு ஏற்படுமிடத்து சமஷ்டி சட்டமே வலிதுடையதாகும். 

• இரண்டாவது ஒருங்கிணை அதிகாரம் இயற்கை வளங்களுடன் தொடர்புடையது. பிரிவு 92 A,  1980-92 காலத்தில் அரசியல் யாப்பு தொடர்பான உரையாடல்கள் இடம்பெற்றன. அதன் பயனாக இப்பிரிவு 92(A)  சேர்க்கப்பட்டது.

இப்பிரிவின் அதிகாரத்தை உபயோகித்து மாகாணங்கள் தமது பகுதியின் புதுப்பிக்கப்பட முடியாத வளங்கள், வனவளம், மின்சாரவளம் என்பன பிற மாகாணங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைக் கட்டுப்படுத்தலாம். முன்னர் மாகாணங்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இப்பிரிவு நீக்கி விட்டது. இவ்விடயத்திலும் முரண்பாடு ஏற்படுமிடத்து சமஷ்டி பாராளுமன்றச் சட்டமே வலிதுடையதாகும். 

• மூன்றாவது ஒருங்கிணை அதிகாரம் கல்வி பற்றிய பிரிவு 93 ஆகும். கல்வி தொடர்பாக சமஷ்டி பாராளுமன்றத்திற்கு உரிய அதிகாரம் பொதுவானது அன்று. விசேட சூழ்நிலைகளின் போது (SPECIAL SITUATIONS) சம்மந்தப்பட்டதே இதுவாகும். கல்வி மாகாணங்களிற்குப் பொறுப்பான அதிகாரமாகும். சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் சமயப் பாடசாலைகள் ஆகியவற்றின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இவ்வுரிமை வழங்கப்படுகிறது. இதன்படி மாகாணங்களின் அதிகாரத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கல்வி தொடர்பாக சமஷ்டி பாராளுமன்றம் குறைதீர் சட்டவாக்கத்தையும் (REMEDIAL LEGISLATION) கொண்டு வரலாம். ஆயினும் இவ் அதிகாரம் இதுவரை உபயோகிக்கப்படவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் நவீன ஜனநாயக அரசாக கனடா வளர்ச்சியுற்றுள்ள நிலையில் சுகாதாரம், நலன்புரி சேவைகள் போன்று கல்வியும் மிக முக்கியமான பொறுப்பாக மாறியுள்ளது. உலகின் சமஷ்டிகளுள் கனடா, சமஷ்டி அசராங்கத்திற்கு குறைந்தளவு அதிகாரங்களை வழங்கும் சமஷ்டி முறையாக விளங்குவது ஒரு வழமைக்கு மாறான சிறப்பாகும். 

• நான்காவது ஒருங்கிணை அதிகாரம் ஓய்வூதியம்  தொடர்பான 94 (a) ஆகும். இப்பிரிவு 1951 இல் புதிதாகச் சேர்க்கப்பட்டது. பின்னர் 1964 இல் திருத்தம் செய்யப்பட்டது. இது முதிய வயது ஓய்வூதியம் அதற்குத் துணையான மேலதிக நன்மைகள் பற்றிய அதிகாரமாகும். மாகாணச் சட்டங்களுக்கும் சமஷ்டிச் சட்டங்களுக்கும் முரண்பாடு ஏற்படுமிடத்து இவ்விடயத்தில் மாகாணச் சட்டங்களே வலிதுடையனவாகும் என்று குறிப்பிட்டிருப்பது வழமைக்கு மாறானது. 

மேற்குறிப்பிட்டவற்றை விட மாகாணச் சட்டவாக்க உரிமைகளும் சமஷ்டி சட்டவாக்க உரிமைகளும் மேவுகை (OVERLAP) ஏற்படும் மூன்று விடயங்கள் உள்ளன.

முதலாவது, குற்றவியல் சட்டம் தொடர்பான பிரிவு 91 (27) ஆகும். இப்பிரிவு சமஷ்டி பாராளுமன்றத்திற்கு குற்றவியல் தொடர்பான சட்டங்கள், அதன் நடைமுறை (CRIMINAL PROCEDURE) என்பன பற்றி சட்டமியற்றும் அதிகாரத்தை வழங்குகிறது. ஆயினும் பிரிவு 92 (14) மாகாணங்களுக்கு நீதி நிர்வாக அதிகாரத்தை (ADMINISTRATION OF JUSTICE) வழங்குகிறது. ஆகவே குற்றவியல் சட்டக்கோவை சமஷ்டி அரசாங்கத்தின் சட்டமாகவும், காவல் பணியும் (POLICING) வழக்குத் தொடுத்தலும் (PROSECUTION) மாகாணங்களால் பிரிவு 92(14) மூலம் நிறைவேற்றப்படுவனவாகவும் உள்ளன. 

இரண்டாவது, நீதிமன்றுகள் தொடர்பானவை. கனடா ஒன்றிணைந்த நீதி முறைமையை உடையதாய் விளங்குகிறது. சமஷ்டி அரசாங்கம் உயர்நீதிமன்றுகளின் நீதிபதிகளது நியமனம், சம்பளம், படிகள், ஓய்வூதியம் என்பனவற்றிற்குப் பொறுப்பாக உள்ளது. மாகாண அரசாங்கங்கள் நீதிமன்றுகளைத் தாபித்தல் அவற்றின் நிர்வாகம் என்பனவற்றிற்குப் பொறுப்பாக உள்ளன. ஒவ்வொரு மாகாணத்தினதும் கீழ்நிலை நீதிமன்றங்களின் நிர்வாகமும் அந்தந்த மாகாணத்திடமே உள்ளது. 

மூன்றாவது ஒருங்கிணை அதிகாரம் சமஷ்டி அரசாங்கத்தின் செலவிடும் அதிகாரமும் (SPENDING POWER) பகிரப்பட்ட செலவுத் திட்டங்களுமாகும். பகிரப்பட்ட செலவுத்திட்டத்தின்படி சமஷ்டி அரசாங்கம் மாகாண அரசுகளுக்கு அவற்றின் அரசியல் யாப்புப் பொறுப்புக்கள் சிலவற்றை நிறைவேற்றுவதற்குரிய நிதியை வழங்குகிறது. இது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வருகிறது. சுகாதாரம், சமூக உதவி, இரண்டாம் நிலைக் கல்விக்குப் பிந்திய கல்வி என்பன இவற்றுள் பெரும் செலவுத் திட்டங்களாகும். இவை தற்போது கனடா சுகாதார சமூக மாற்றத் திட்டத்தில் (CANADA HEALTH AND SOCIAL TRANSFER PROGRAM) இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் கீழ் காசாகவும், வரிப்பண மாற்றாகவும் 25 மில்லியன் கனடிய டொலர்கள் ஆண்டு தோறும் மாகாணங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. சமஷ்டி அரசாங்கத்தின் இச் செலவிடும் அதிகாரம் (SPENDING POWER) 91 ஆவது பிரிவில் வெளிப்படையாகக் குறிப்பிட்ட அதிகாரம் அன்று. இது 1867 ஆண்டுச் சட்டத்தின் பல பிரிவுகளின் ஏற்பாடுகளின்படி ஊகித்துக் கொள்ளப்படும் (INFERRED) அதிகாரமாகும். 

கனடாவின் இரண்டாவது அல்லது மேற்சபை செனற் ஆகும். இச்சபையில் 105 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் ஆளுநர் நாயகத்தினால் பிரதமரின் சிபாரிசின் படி நியமிக்கப்படுபவராவர். இந் நியமனங்கள் பிராந்திய நலன்கள், அரசியல் சார்பு என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுபவை. கட்சி விசுவாசம் அர்ப்பணிப்புடைய சேவை என்பனவற்றிற்காக வழங்கப்படும் வெகுமதியாகவும் இவை கருதப்படுகின்றன. சட்டங்கள் சனப் பிரதிநிதிகள் சபை, செனற் என்ற இரண்டினாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். 

இதனால் செனற்றுக்கு ‘வீட்டோ’ (VETO) அதிகாரம் கிடைக்கின்றது. இவ் ‘வீட்டோ’ அதிகாரம் மிக அருமையாகவே நடைமுறையில் பிரயோகிக்கப்பட்டது. எதிர்காலத்திலும் இது பிரயோகிக்கப்படும் சாத்தியம் குறைவு. செனற் சபை தெரிவு செய்யப்பட்ட சபை அன்று. அது நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபையாகும். ஆகையால் பிரதம மந்திரியின் ஆதரவாளர்களைக் கொண்ட சபையாக உள்ள இச்சபை ஜனநாயக ஏற்புடமை பெற்ற சபையாக இல்லை. செனற் சபைச் சீர்திருத்தம் பற்றிய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாகாணங்களின் குரலாக செனற் சபை ஒலிக்க வேண்டுமானால் அது தெரிவு செய்யப்பட்ட சபையாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆயினும் இன்றுவரை எவ்வித சீர்திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. 

கனடிய அரசியல் யாப்புச் சார்ந்த சட்டங்களுக்கு விளக்கமளித்தல், சமஷ்டி அரசாங்கம் – மாகாண அரசாங்கங்கள் என்ற இரு வகை அரசாங்கங்கள் மத்தியில் எழக்கூடிய சட்டப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் ஆகியன நீதித்துறை அதிகாரம் சார்ந்த விடயங்களாகும். இவ் அதிகாரம் 1949 ஆம் ஆண்டு வரை, பிரித்தானியாவின் பிரபுக்கள் சபையின் ஒரு அங்கமாக விளங்கும் கோமறைக்கழகத்தின் பிரித்தானிய நீதிக்குழுவின் (JCPC) அதிகாரமாக இருந்தது. இச் சபைக்கு மேன்முறையீடு செய்தல் 1949 இல் ஒழிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அதி உயர் நீதி அதிகாரம் பெற்றதாகக் கனடிய உயர்நீதிமன்றம் விளங்குகிறது. இம் மாற்றம் அரசியல் யாப்புத் திருத்தமாக அரசியல் யாப்பின் பகுதியாக உட்படுத்தப்படவில்லை. கனடிய சமஷ்டி அரசாங்கத்தின் சாதாரண சட்டம் மூலம் இம் மாற்றம் கொண்டுவரப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் கனடிய அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். இந் நியமனங்களில் மாகாணங்களிற்கு எவ்வித முறைசார் வகிபாகமும் இல்லை. ஆயினும் நீதிபதிகள் பிராந்திய அளவுகோல்களின் படி நியமிக்கப்படுகின்றனர்.

1982 ஆம் ஆண்டு அரசியல் யாப்புச் சட்டம் பிரித்தானியர் தொடர்பில் இருந்து விடுபட்டு கனடாவின் அரசியல் யாப்புத் திருத்தத்திற்கான வழிவகைகளையும் சேர்த்துக் கொண்டுள்ளது. இதனால் பிரித்தானியாவின் பங்களிப்பு இல்லாமலே அரசியல் யாப்பைத் திருத்திக் கொள்ள முடிகிறது. கனடாவின் அரசியல் யாப்பைத் திருத்துவதற்கான ஐந்து வழிமுறைகள் உள்ளன. செய்யப்படவேண்டிய திருத்தத்தின் தன்மையைப் பொறுத்து ஐந்து முறைகளில் ஒன்று தேர்வு செய்யப்படும். ஆயினும் எல்லா வகைத் திருத்த முறைகளுக்கும் பொருத்தமான பொதுவான திருத்த விதிமுறை (AMENDING FORMULA) ஒன்று உள்ளது. அதன்படி கனடிய பாராளுமன்றமும், கனடாவின் பத்து மாகாணங்களின் சட்டசபைகளுள் ஏழு மாகாணங்களின் சட்டசபைகளின் அங்கீகாரத்துடன் திருத்தம் செய்யப்படும். மாகாண சபைகள் ஏழினதும் சனத்தொகை கனடாவின் மொத்தச் சனத்தொகையின் 50 வீதத்தை உள்ளடக்கியதாக இருத்தலும் வேண்டும்.

டேவிட்.ஆர். கமரன் (David.R. Cameron)

david r cameron

இவர் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் பேராசிரியரும், அத் துறையின் ஐரோப்பிய யூனியன் கற்கைகள் திட்டத்தின் பணிப்பாளரும் ஆவார். ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகம், பொருளாதாரம், அரசியல், அயலுறவுக் கொள்கை ஆகிய விடயங்கள் பற்றி ஆய்வுகளை எழுதி வெளியிட்டுள்ளார். கனடாவின் சமஷ்டி முறை பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். இக் கட்டுரை இவரால் 2004 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இது ‘The federal Idea’ என்னும் தலைப்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனத்தின் (CPA) வெளியீட்டில் இடம்பெற்றுள்ளது. 

மேலதிக தகவல்களைப் பெறக் கூடிய மூலங்கள் (SOURCES FOR FURTHER INFORMATION) :

  1. Funston, Bernard and Eugene Meehan, Canada’s Constitutional Law in a Nutshell, Toronto: Carswell, 1998.
  2. Hogg. Peter, Constitutional Law of Canada, Student Edition, Toronto: Carswell 2003.
  3. Russell, Peter, Constitutional Odyssey: Can Canadians Become a Sovereign People? Toronto and Buffalo: University of Toronto Press. Third edition pending.
  4. Canadian Network for Federalism Studies, www.cnfs-rcef.net
  5. Forum of Federations, www.forumfed.org
  6. Government of Canada, www.gc.ca
  7. Queen’s University, Institute of Intergovernmental Relations, www.iigr.ca
  8. Statistics Canada, Canada Year Book, Ottawa, www.statcan.gc.ca


ஒலிவடிவில் கேட்க

3822 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)