Arts
20 நிமிட வாசிப்பு

பெல்ஜியத்தின் சமஷ்டி முறை ஆட்சி: அதன் அடிப்படைகளும், குறை நிறைகளும் – பகுதி 2

March 21, 2023 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம் – கெல்லி பிறியன் –

பெல்ஜியம் சமஷ்டியின் சாதகமான அம்சங்கள்

1. பல்வேறு மக்கள் குழுக்களுக்கும் அவர்களின் குரலை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம்

பெல்ஜியம் சமஷ்டியை இலங்கைக்குப் பொருத்தமானதெனச் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் இனக்குழுமங்களின் பரம்பலில் பெல்ஜியம் போன்றதொரு நிலை காணப்படுகிறது. தமிழர் செறிந்து வாழும் பகுதியான வடக்குக் கிழக்கு, சிங்களவர் செறிந்து வாழும் ஏனைய மாகாணங்கள் என்ற மொழி அடிப்படையான பிரிவுகள் உள்ளன. இதனைவிட இலங்கையின் மத்திய பகுதியில் மலையகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். வடக்குக் கிழக்கில் தமிழர் பகுதிக்குள் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதி ஒன்று உள்ளது. இதனைவிட கொழும்பு நகரம் இருமொழிப் பிரதேசமாக பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரை ஒத்ததாக உள்ளது. ஆதலால் இலங்கையின் இனக்குழும மொழிப் பிரச்சினை பெல்ஜியம் போன்று சிக்கலானது. ஒன்றை ஒன்று மேவிநிற்கும் குழுக்களையும், அடுக்குகளையும் கொண்ட சிக்கலான இனக்குழு – மொழி பரம்பலைக் கொண்ட இலங்கையில், சிங்களவர் – தமிழர் வாழும் பகுதிகள் என்ற முறையில் எளிமையான ஒரு தீர்வை (a bipolar solution) கொண்டுவரமுடியாது. அது நிலைபேறுடையதான, நீண்ட காலத் தீர்வாக அமையாது என்று கூறப்படுகிறது. இக்கருத்தை கலாநிதி விக்டர் ராஜகுலேந்திரன். கூறியுள்ளார். கனடா எளிமையான பகுப்பை உடையது. அங்கு ஆங்கிலம், பிரஞ்சு. என்ற இரு மொழி பேசும் குழுக்கள் உள்ளன என்றும் கலாநிதி விக்டர் ராஜகுலேந்திரன் கூறியுள்ளார். வரலாற்று நோக்கில் பார்க்கும் போது அவரின் கனடா உதாரணம் தவறானது. கனடா ஒரு கொன்பெடரேசன்’ (Confederation) ஆக உருவாக்கப்பட்ட பொழுது ஒரு வரலாற்றுத் தவறு நிகழ்ந்தது. அங்கு அதிகாரங்களை ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர் என்ற இருமொழியினரும் பகிர்ந்து கொண்டார்கள். அப்போது அங்கிருந்த மூன்றாவது குழுமம் ஆகிய சுதேசிய இனத்தவர்கள் ஒதுக்கப்பட்டார்கள். அவர்கள் பற்றிக் கவனிக்கப்படவில்லை. கனடாவின் ‘First Nations’ முதலாவது மக்கள் என்ற சுதேசிகளை புறக்கணித்தமையும், கண்டு கொள்ளாமையும் என்ற தவறு பின்னர் திருத்தப்பட்டது. கனடாவை உருவாக்கிய மக்கள் குழுமங்களில் சுதேசிகளும் அடங்குவர் என்ற கணிப்பையும், தகுதியையும் பெறுவதற்காக கனடாவின் சுதேசிகள் இன்றும் கூடப் போராடிக் கொண்டிருக்கின்றனர், கனடா உதாரணம் உணர்த்துவது யாதெனில் இலங்கை இதுபோன்ற தவறை இழைக்கக்கூடாது. இலங்கையில் வாழும் அனைத்து இனக்குழும – மொழிப் பிரிவினர்களும் பிரதிநிதித்துவம் பெறக்கூடிய முறையே இலங்கைக்குப் பொருத்த மானது.

Belgium-map

2. வேறுபாடுகளை முகாமைசெய்தலும் பிரிவினைவாதமும்

இனக்குழும – மொழிப் பிரிவினர்களிடையே உள்ள நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் சமாதானமான ஜனநாயக வழியில் தீர்வு செய்வதில் பெல்ஜியம் சமஷ்டி வெற்றிகண்டுள்ளது. அதன் மூலம் உறுதியான ஆட்சியை நாட்டில் ஏற்படுத்த முடிந்தது. அந்நாட்டின் மூன்று சமஷ்டி அலகுகளினதும் அரசாங்கங்கள் உறுதியுடையனவாகச் செயற்பட்டன. இது அரசியல் உறுதிநிலைக்கு எடுத்துக் காட்டாகும். இருப்பினும் அந்நாட்டில் கட்சிகளின் கூட்டணிகள் உறுதியற்றவையாய் இருந்தன என்பது உண்மையே.

பெல்ஜியம் சமஷ்டியை விமர்சிப்போர் சிலர். அது பிரிவினையைத் தடுக்கவில்லை, பிரிவினையைத் தூண்டியபடியே உள்ளது என்று கூறுவர். பெல்ஜியம் அரசு சிலவேளைகளில் உடைந்து போகும் அல்லது பிளவுபட்டுப்போகும் சந்தர்ப்பங்கள்கூட எழுந்தன. கிம்லிக்கா (kymilicka) கருத்துப்படி பிரிவினைவாதம் ஒரு நாட்டில் இருப்பது அந்நாட்டின் சமஷ்டி முறை தோல்வியுற்றதென்பதற்கு அடையாளம் அல்ல. ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்கள், சமாதானம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்பனவற்றைக் கொண்டே நாடுகளின் அரசியல் முறையை மதிப்பீடு செய்ய வேண்டும். ஒரு நாட்டில் பிரிவினைவாத இயக்கங்கள் இருந்தால் அது அந்நாட்டில் ஆரோக்கியமான ஜனநாயகம் நிலவுகின்றது என்பதற்கு அடையாளமாகலாம். நடைமுறையில் ஒரு ஜனநாயக நாட்டில் மத்தியப்படுத்தப்பட்ட அரசுமுறை இருக்குமாயின் அங்கு சிறுபான்மை தேசியவாதத்தை அடக்கிக் கட்டுப்படுத்திவிடலாம். அங்கு பல்தேசிய சமஷ்டி முறை இருக்குமாயின் பிரிவினைவாதம் சுதந்திரமான முறையில் இயங்கி, மக்களை ஒன்று திரட்டமுடியும். அத்தகைய நாட்டில் பிரிவினை ஏற்பட்டாலும் அதன் பயனாக என்ன நன்மைகள் கிடைக்கப்போகின்றன என்ற கேள்வி எழும். உதாரணமாக கனடாவின் கியுபெக் பகுதியோ அல்லது பெல்ஜியத்தின் பிளான்டர்ஸ் பகுதியோ பிரிந்து தனிநாடாவதால், தற்போது சமஷ்டியின் கீழ் கிடைக்கும் நன்மைகள் இல்லாது போகும். இதனால் ஜனநாயக சமஷ்டிகளில் பிரிவினைக்கான தூண்டுதல்கள் குறைவு.

3. வளைந்து கொடுக்கும் சமஷ்டிமுறை

பெல்ஜியம் சமஷ்டி வளைந்தும், நெகிழ்ந்தும் கொடுக்கும் இயல்புடையது. கொன்சோசியேசனிசம் (Consociationalism) என்னும் கூட்டாளி அதிகாரமுறை அதற்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கியுள்ளது. கூட்டாளி அதிகார முறையின் ஆதாரமாக இருக்கும் தத்துவம் முக்கியமானது. செயல்முறை (Process) கிடைக்கும் முடிவுப்பயனைவிட முக்கியமானது என்று கருதப்படுகின்றது. ஒரு விடயம் நீதியானதா? நியாயமானதா? என்பதை அவ்விடயம் பற்றிய செயல்முறையில் யாவரும் உட்படுத்தப்பட்டனரா, எல்லோருக்கும் பங்குபெறும் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டதா என்ற செயல்முறை கொண்டே மதிப்பிடுதல் வேண்டும். அடையப்பட்ட முடிவுப்பயன் இரண்டாம் நிலைப்பட்டது. அதனை விட செயல்முறை தான் முக்கியம். அடுத்ததாக கூட்டாளி அதிகார முறை என்ற கொள்கை ‘மோதலும் முரண்பாடும் வாழ்க்கையின் அடிப்படை நியதி` என்பதை ஏற்றுக் கொள்வது. முரண்பாடுகளையும் மோதல்களையும் தீர்த்துக் கொள்வதற்கான முதற்படியாக இது அமைகிறது.

4. செலவுகளைக் குறைத்தல்

Brussels

சமஷ்டி முறையைப் பேணுவதற்காக பெரும் தொகைப் பணத்தை நாடுகள் செலவிடவேண்டியுள்ளன. கனடா நாட்டில் உள்நாட்டு வர்த்தகத் தடைகளை நடைமுறைப்படுத்துவதற்காக மொத்தத் தேசிய வருமானத்தின் (GN) 1.5 வீதம் செலவிடப்படுகிறது. பெல்ஜியத்திலும் சமஷ்டி முறைக்கு மாறியதனால் பெருந்தொகைப் பணம் செலவானது. எவ்வாறிருப்பினும் ஒற்றையாட்சி முறைக்குள் பல்வேறு குழுக்களுக்கிடையிலான சச்சரவுகள் மறைந்து கிடந்தன. அவற்றைத் தீர்வு செய்வதற்கும் மேற்கிளம்பாது மறைப்பதற்கும் சமஷ்டிக்கு முந்திய காலத்தில் செலவிடப்பட்ட பணத்தோடு ஒப்பிடும்போது, சமஷ்டி முறையால் ஏற்பட்ட செலவு குறைவு என்றே கூறப்பட வேண்டும். உதாரணமாக சமஷ்டி முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் பெல்ஜியத்தின் இரு மொழிகளிடையேயும் சமத்துவத்தைப் பேணுவதற்காக பணம் செலவழிக்கப்பட்டது. குறித்த விடயம் பற்றிய தேவை எப்படி இருப்பினும் அத்தேவைக்காகப் பிரஞ்சு மொழிக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டதோ அதேயளவு தொகை டச்சு மொழிக்கும் ஒதுக்கப்பட்டது. உதாரணமாக வலூனியாவில் ஒரு பாடசாலை தொடங்கப்பட்டால் அதைப் போன்ற பாடசாலையை பிளாண்டர்ஸ் பகுதியிலும் தொடங்கவேண்டும். இவ்விதம் டச்சு, பிரஞ்சு மொழிகளுக்கிடையே சமத்துவம் பேணும் தேவை ஒற்றையாட்சியில் இருந்தது. இதனால் பெருந்தொகைப் பணம் விரயம் செய்யப்பட்டது. சமஷ்டிமுறை ஏற்படுத்தப்பட்ட பின்னர் தோற்ற அளவிலும் நடுநிலை பேணும் தேவை இல்லை. ஏனெனில் ஒவ்வொரு குழுவிற்கும் அரசியல் யாப்பு பாதுகாப்புக்கள் உள்ளன. இதனால் செலவுகளில் வீண்விரயம் இல்லை. தமக்கு எது தேவையோ அதன்படி குழுக்கள் தம் செலவுகளைத் தீர்மானித்துக்கொள்ள முடியும்.

5. தேசிய அடையாளம்

சமஷ்டி முறையில் பலகுழுக்கள் தனித்தனியாக வாழ்கின்றன என்பது போன்ற வேற்றுமை உணர்வு வளர்க்கப்படுகின்றது என்ற விமர்சனம் பிரதானமானது. ‘ஒன்றுபட்ட ஒரு அரசியல் சமூகம்’ என்ற உணர்வு பெல்ஜியத்தில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை உள்ளது. இருப்பினும் பெல்ஜியம் பன்மைத்துவ நாடு. அந்தப் பன்மைத்துவத்தின் வெளிப்பாடு இவ்விதமான வேற்றுமையாக வெளிப்படுவது இயல்பே. அது பெல்ஜியத்தின் யதார்த்தமான பன்மைத்துவ அரசியல் வாழ்வின் வெளிப்பாடே என்று கூறவேண்டும்.

சில ஆய்வுகள் பெல்ஜியத்தில் வேற்றுமையைவிட ஒற்றுமையே சமஷ்டி முறையினால் வளர்க்கப்படுகின்றது என்று சுட்டிக்காட்டுகின்றன. பெல்ஜியம் நாட்டு மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி பின்வருமாறு இருந்தது; உங்கள் முழுமையான விசுவாசம் உங்கள் பிரதேசத்திற்கு உரியதா? அல்லது முழு பெல்ஜியத்திற்குரியதா? அல்லது உங்கள் பிரதேசம், பெல்ஜியம் என்ற இரண்டிற்கும் சம அளவிலான விசுவாசம் உங்களிடம் உள்ளதா? இக் கேள்விக்கு தாம் முழு பெல்ஜியத்திற்கும் விசுவாசம் உடையவர்களாக இருக்கிறோம் என்ற பதிலை பெரும்பான்மையான இளைய சந்ததியினர் கூறினர். பெல்ஜியம் என்ற தேசிய அடையாள உணர்வு சமஷ்டி உருவாக்கப்பட்ட பின்னர் அதிகரித்திருப்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. பெல்ஜியத்தின் சமஷ்டி முறை அதன் பிரஜைகளுக்கு தமது பொதுவாழ்வு, தனிப்பட்ட வாழ்வு என்ற இரண்டும் எப்படி அமையவேண்டும் என்பதை சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்பத் தெரிவு செய்துகொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளது. பெல்ஜியம் என்ற முழுத்தேசத்தோடும் தமது அடையாளத்தை இணைத்துக்கொள்ளும் போக்கு வளர்கிறதா என்பதை பொறுத்திருந்து எதிர்காலத்தில் கண்டு கொள்ளவேண்டும்.

பெல்ஜியம் சமஷ்டி முறையின் குறைகள்:

1. மத்தியில் இருந்து விலகிச் செல்லுதல்

பெல்ஜியத்தில் மத்தியில் இருந்து விலகிச்செல்லும் செயல்முறை (Centrifugality) செயற்படுகிறதெனக் கொள்ளலாம். இதனால் மத்திய நிறுவனங்களின் அதிகாரங்களும் தகைமைகளும் வெறுமையாக்கப்படுகின்றன. மத்திய நிறுவனங்கள் மையம் – சார்புப் பகுதி (Centre -periphery) என்பவற்றுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்வு செய்யும் ஆற்றலை இழக்கின்றன என்ற விமர்சனம் சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. நெகிழ்ந்து கொடுக்கும் மாற்றம் என்பதற்குப் பதில் கட்டுக்கடங்காத மாற்றங்கள் என்ற நிலை உருவாகின்றது. சமஷ்டி முறையில் அரசியல் யாப்பு ஒட்டு வேலைகள் (Constitutional Tinkering) அனுமதிக்கப்படுகின்றன. பெல்ஜியத்தின் அரசியல் எப்போதும் “சீர்திருத்தம்’ நோக்கியதாக உள்ளதே அன்றி அரசினை நிர்வகித்தல் என்பதாக இல்லை. இலங்கை இதுபோன்ற வலைக்குள் வீழ்வதைத் தவிர்க்கவே விரும்பும். நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய அளவிற்கு நெகிழ்ந்து கொடுக்கும் சமஷ்டியை உருவாக்குவது தான் நோக்கமாக இருக்க வேண்டுமேயன்றி சதா மாறிக்கொண்டிருக்கும் முறை தேவையற்றது. அது அரசியல் சக்தியை வீண் விரயம் செய்வது. உண்மைப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதாக இருக்கும். பெல்ஜியம் சமஷ்டி நெகிழ்வுடையதாக இருக்கிறது. இதன் விளைவாக அங்கு தொடர்ந்து மாற்றம் தவிர்க்க முடியாதது. அச்சமஷ்டி அமைக்கப்பட்டு நீண்டகாலம் செல்லவில்லை. மத்தியில் இருந்து விலகிச் செல்லுதலும் நெகிழ்ச்சியும் என்ற விடயம் பற்றி பெல்ஜியத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதற்கு இன்னும் காலம் செல்ல வேண்டும்.

2. தீவிர தேசியவாதம்

கொன்சேசியேசனலிசம் என்னும் கூட்டாளி அதிகாரமுறையின்படி, முரண்பாடுகள் இருத்தல் நன்மையைத் தரும். ஏனெனில் முரண்பாடுகள் இருப்பதால் தான் இனக்குழும – மொழி அடிப்படையிலான கூட்டுக்களை ஏற்படுத்தமுடியும் என்ற கருத்து உள்ளது. தேசியம் அல்லாத அடிப்படையில் அமையும் குழுக்கள் பல உள்ளன. அக்குழுக்களும் தமது கோரிக்கைகளை தேசியம் என்ற வரையறைக்குள் முன்வைத்து அவற்றை நிறைவேற்றிக் கொள்கின்றன. பேச்சுகளின்போது இவ்வாறாக தேசியம் என்ற வரையறைக்குள் கோரிக்கைகளை முன்வைப்பதன் நன்மையைக் குழுக்கள் உணர்ந்து செயற்படுகின்றன. இதனால் தேசியம் சாராத பிரச்சினைகள் (Non – Nationalist Issues) தேசியச் சாயம் பூசப்பட்டு முன்வைக்கப்படுகின்றன. பெண்கள், பாலியல் சிறுபான்மையினர், சமயச் சிறுபான்மையினர் ஆகிய குழுக்கள் அவற்றின் கோரிக்கைகளை இவ்விதம் தேசிய வரையறைக்குள் முன்வைத்தல், அவற்றைத் தரம் தாழ்த்திக் கொள்ளவே வழிசெய்கின்றன.

பிரதேச வாதமும், போட்டியும் சர்வதேச நிலையில் ஒருங்கிணைதலுக்கு தடையாக உள்ளன. உதாரணமாக சமஷ்டி முறை ஐரோப்பிய யூனியனுடன் இணைவதில் தடைகளை ஏற்படுத்துகின்றது. கனடாவில் பிரதேச வர்த்தக உடன்படிக்கைகள் சர்வதேச உடன்படிக்கைகளோடு முரண்படுவனவாக இருத்தல் இன்னொரு உதாரணமாகும்.

3. கட்சி ஆட்சியின் பிரச்சினைகள்

கட்சிகளிற்கு இடையிலான நிலையான கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்வதில் பெல்ஜியம் சமஷ்டியின் வெற்றி தங்கியுள்ளது. கூட்டுறவும், கூட்டணி அமைப்பதில் விருப்பமும் இதற்கு அவசியமானவை. பிரதேச அரசியலிற்கும், தேசிய அரசியலிற்கும் இடையில் பொருந்தாமை இருப்பதை கூட்டணியை அமைக்கும் அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் (பிளமிஷ்) சோசலிஸ்டுகள் (பிரஞ்சு) என்ற இரு கட்சிகள் பெல்ஜியத்தின் அரசியலில் செல்வாக்கைச் செலுத்துகின்றன. இவ்விரு கட்சிகளும் இணைந்து அதிகாரத்தை ஒருங்காக பிரயோகிக்கும்போது போட்டியும் ஏற்படும். கூட்டுறவும் இருக்கும், சில சமயங்களில் கூட்டணி உடைந்துபோகும் நிலையும் ஏற்படும். அண்மையில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். வலூன் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து நேபாலிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதை ஆட்சேபித்த பசுமைக்கட்சி (Green Party) அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தது.

அரசியல் கூட்டணிகளை இணக்கம் மூலம் ஏற்படுத்துவதை விடுத்து குழுக்களை விலைக்கு வாங்குவதன்மூலம் சேர்த்துக் கொள்வதும் இடம்பெறும். கூட்டணியில் சேர்ந்து ஆதரவுகொடுப்பதற்காக சலுகைகளையும் ஊக்குவிப்புக்களையும் வழங்கிக் கட்சிகளை இணைத்து கொள்ளலாம். இதனால் கட்சிகள் சில பிரச்சினைகளில் விட்டுக்கொடுப்புக்களைச் செய்தல் வேண்டும். ஜேர்மன் மொழி பேசும் சிறுபான்மையினர் போன்றோர் இவ்வாறு சில சலுகைகளுக்காக விட்டுக் கொடுப்புகளைச் செய்வதால் இழப்புகள் தொடர்ந்து ஏற்படுகின்றன என்பதே உண்மைநிலை.

4. இருதுருவ அரசியல் உரையாடல்

பெல்ஜியத்தின் அரசியல் பிளமிஷ் எதிர் பிரஞ்சு என்ற இருதுருவ உரையாடலாக (Bipolar dialogue) அமைவதால் பெல்ஜியத்தில் அரசியல் பண்பாட்டு வாழ்வு இருமையாகச் சாராம்சப்படுத்தப்படுகிறது. பொதுத் தொடர்பாடலில் பிரஞ்சு, பிளமிஷ் (டச்மொழி) என்ற இருமுனைப் பிரிவு வெளிப்படையாக வானொலி, தொலைக்காட்சி, முக்கிய பத்திரிகைகள் என்பனவற்றில் தெரிகிறது. இவை ஒன்றில் பிரஞ்சு அல்லது டச்சு மொழி என்ற முறையில் பிரிந்து செயற்படுகின்றன. இவ்வாறான இருதுருவ உரையாடல் குறுகியதாகவும், தனிப்பட்ட குழு நலன்கள் சார்ந்தவையாக இருப்பினும் இது பொதுவாக எல்லாச் சமஷ்டி நாடுகளிலும் காணப்படும் பிரச்சினையாகும். உதாரணமாக பழங்குடி மக்கள் பிரஞ்சு  – ஆங்கிலம் என்ற இருமொழிகள் ஊடாக நடைபெறும் சமஷ்டி விவாதத்தில் பங்கு பெறாமல் ஒதுக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் சிங்களவர், தமிழர் இடையிலான விவாதத்தில் முஸ்லிம்கள் இன்றுவரை சேர்ந்து கொள்ளாதிருத்தல் குறிப்பிடத்தக்க இன்னொரு உதாரணம்.

பெல்ஜியம் நாட்டில் பத்து பிரதேச அலகுகளையும், சமுதாயங்களையும் கொண்ட சமஷ்டியை ஏற்படுத்தியிருந்தால் அங்கு நடைபெறும் அரசியல் உரையாடல் இரு துருவத்தன்மை உடையதாக அல்லாமல் பல்பக்கப் பிரச்சினைகள் சார்ந்து அமைந்திருக்கும் என்று சுவென்டன் (Swenden) கூறியுள்ளார். கனடாவில் கியுபெக் பிரதேச அடிப்படையில் அமைந்துள்ளது. அத்தோடு அது மொழி அடிப்படை பெல்ஜியத்தில் சமஷ் முறை ஆட்சியிலான பிரிவாகவும் உள்ளது. இருப்பினும் கனடாவின் ஏனைய மாநில அலகுகள் இனக்குழும – மொழி அடிப்படையில் அமையாதவை. இது கனடாவிற்குள்ள சாதகமான அம்சமாகும். கனடாவில் நடைபெறும் விவாதங்கள் பல பிரச்சினைகள் சார்ந்து பன்முகத் தன்மையுடையனவாய் அமைகின்றன. அங்கு பொருந்தாத விடயங்களை இனக்குழு மொழி விவாதத்திற்குள் இழுக்கும் போக்கு இல்லை.

5. சிறுபான்மையினர் உரிமைகளை மீறுதல்

பெல்ஜியத்தின் சமஷ்டி முறை சிறுபான்மையினர் உரிமைகளையும் பாதுகாப்பதில் அரைகுறை வெற்றியே அடைந்துள்ளது எனச் சில விமர்சகர்கள் கூறுகின்றனர். பெல்ஜியத்தின் சமஷ்டி முறை தேசிய உணர்வுகளைத் தட்டியெழுப்புவதற்கு உதவுகின்றது என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது. நடுத்தீர்ப்புக்கான நீதிமன்றம் 54/1906 வழக்கு ஒன்றில் பின்வருமாறு கூறியது, ‘தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாழும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது ஒவ்வொரு சட்டசபை உறுப்பினரின் கடமையாகும்’. பெல்ஜியத்தில் அரசியல் யாப்பு வழங்கும் சிறுபான்மையினர் காப்பீடுகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் போன்று உள்ளன. அங்கு இருமொழிக் கூறுகளாகப் பிரிந்து நின்று நோக்கும் மனப்பான்மை வளர்ந்துள்ளதால் எந்தவொரு பிரச்சினையும் எழும்போது ‘நாம் அவர்களுடைய தேவைகள் எவையோ அவை யாவற்றையும் ஏற்கனவே கொடுத்து விட்டோமே’ என்று கூறும் மனப்பாங்கு வளர்ந்துள்ளது.

பெல்ஜியத்தில் அண்மையில் ஏற்பட்ட மொழிப் பிரச்சினை ஒன்றை உதாரணமாக இங்கு காட்டலாம். பிரஸ்ஸல்ஸ் நகரம் இருமொழிப் பிரதேசம் ஆகும். அங்கு உத்தியோக மொழிகளாக டச்சு, பிரஞ்சு என்ற இரண்டும் உள்ளன. பிரஞ்சு மக்கள் பெரும்பான்மையினராக உள்ள பிரஸ்ஸல்ஸ் நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் டச்சு மொழியினரே பெரும்பான்மையினராய் உள்ளனர். இதனால் டச்சு மொழி பேசும் பிளமிஷ் மக்கள் தாம் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளின் டச்சு அடையாளத்தைப் பேணவேண்டும், டச்சு மொழியில் சகல அலுவல்களும் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். தமது கோரிக்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கின்றனர். பிரஸ்ஸல்ஸின் புறநகர்ப் பகுதிகளில் 120,000 பிரஞ்சுக்காரர்கள் வாழ்கிறார்கள். இருந்தபோதும் அப்பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் நடவடிக்கைகள் யாவும் டச்சு மொழியில் நடத்தப்படுகின்றன. குறித்த ஒரு சபையில் மேயரும் ஏனைய உறுப்பினர்கள் பலரும் பிரஞ்சு மொழிக்காரர்களாக இருந்தாலும் உத்தியோகமுறைக் கடிதங்கள் டச்சு மொழியில் அனுப்பப்படுகின்றன. உள்ளூர்ச் சபை நூலகங்களில் தேவைக்கு அதிகமான பிரஞ்சு நூல்கள் இருப்புச் செய்யப்பட்டால் நூலகங்களிற்கான உதவி மானியம் நிறுத்தப்படுகிறது. வலூன் அரசியல்வாதிகள் தமது குறைகளுக்கு நிவாரணம் தேடி எதிர்ப்பு இயக்கம் ஒன்றை நடத்தியதோடு இறுதியில் ஐரோப்பிய யூனியன் சபைக்கு மனுச்செய்தனர். இது பற்றிய விசாரணை செய்த சபை பிரஸ்ஸல்ஸ் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் வாழும் சிறுபான்மையினர் உரிமைகளை பெல்ஜியம் மீறுகிறது என்று தீர்ப்பளித்தது. பிரஞ்சுக்காரர்களைச் சிறுபான்மையினர் என்று வகைப்படுத்தமுடியாது அவர்கள் நாட்டின் சமஷ்டி அமைப்பின்படி டச்சுமொழி பேசுவோருக்கு சமமானவர்கள் என்று பிளமிஷ் மக்கள் எதிர்வாதம் செய்கின்றனர். ஆதலால் இனக்குழும மொழி அடிப்படையிலான பாதுகாப்புச் சுவர்களைக் கட்டுவதில் சமஷ்டிமுறை கவனம் செலுத்துகிறதே அல்லாமல் உண்மையான சகிப்புத்தன்மை, சிறுபான்மையினர் உரிமைகளை மதித்தல் ஆகிய உணர்வுகளை வளர்ப்பதற்கு தவறிவிட்டது என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

6. செலவுகளின் ஏற்றத் தாழ்வுகள்

பெல்ஜியம் சமஷ்டியின் இன்னொரு பிரச்சினை அங்கு சமஷ்டி செலவுகள் பிரதேசங்களுக்கிடையேயும், சமுதாயங்களுக்கிடையேயும் சமத்துவமாகப் பிரிக்கப்படுவதில்லை என்பதாகும். பிரதேச அரசாங்கங்கள் சர்வதேச உடன்படிக்கைகளையும் செய்யும் அதிகாரம் உடையன. அவற்றின் நோக்க எல்லைக்குள் பிற பகுதிகளின் பிரச்சினைகள் கவனத்திற்குரியனவாக வருவதில்லை. அவை பொதுவான பிரச்சினைகள் பற்றி அக்கறைப்படுவதில்லை. சமஷ்டி அரசாங்கம் வன ஒதுக்கீடு பற்றிய கோரிக்கைகளை ஏற்கவேண்டி ஏற்படுகிறது.

ஐரோப்பிய யூனியனின் அழுத்தம் காரணமாக சமஷ்டி அரசாங்கம் வரவு செலவுத்திட்டச் சமநிலையைப் பேணவேண்டியும் உள்ளது. சமஷ்டி அரசாங்கத்திற்கு உள்நாட்டுப் பாதுகாப்பு, நீதித்துறை, சமூக சேவைகள் ஆகியவற்றுக்கான செலவுச் சுமையை ஏற்கும் பொறுப்பு உள்ளது.

செலவுகள் மாநிலங்களிற்கு இடையில் சமனற்ற முறையில் பங்கிடப்படுவது கனடாவிலும் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. அண்மையில் சமஷ்டி அரசாங்கம் ‘கயோட்டோ’ உடன்படிக்கையை (Kyots Accord) ஏற்று அங்கீகரித்தது. இவ்விதம் அங்கீகரித்த போது சமஷ்டி அரசாங்கம் தேசிய நலன்கள், சர்வதேசமட்டத்தில் சூழலியல் பிரச்சினைகளில் ஒத்துழைப்பு வழங்கவேண்டிய தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயற்பட்டது. ஆனால் அல்பர்ட்டா மாநில அரசாங்கம் தனது பிரதேசத்தின் பொருளாதார நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு கயிட்டோ உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. சமஷ்டி முறையின் சுமைகளைச் சமஷ்டி அரசாங்கமே தாங்கிக் கொள்ள வேண்டி ஏற்படுவதை இவ்வுதாரணம் எடுத்துக் காட்டுகிறது.

7. சிக்கல்

புலமை நோக்கில் மிகவும் சிக்கல் வாய்ந்த பெல்ஜியம் சமஷ்டி முறை பற்றிய முழுநிறைவான விபரிப்பை தருதல் இக்கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட விடயம். பெல்ஜியம் சமஷ்டி முறையில் காணப்படும் சிக்கல் அதன் குறைபாடுகளிற்குக் காரணமாக உள்ளது. சமஷ்டி முறையினால் பெல்ஜியத்தில் செலவுகள் அதிகரித்துள்ளன. ஒரே விடயத்தை இருவேறு இடங்களில் செயற்படுத்தல் போன்ற பிரச்சினைகள் உள்ளன. இருப்பினும் நவீன உலகில் சிக்கல் மிகுந்த அமைப்புக்களால் பல நன்மைகள் விளைகின்றன எனலாம். தனி நபர்கள் சிக்கல் வாய்ந்த அமைப்புக்கள் ஊடாகத் தம் கருமங்களை இலகுவில் செய்விக்கமுடியும். ஆகவே சிக்கல் மிகுந்த அரசியல் யாப்புக்கள் சிக்கல் மிகுந்த சமுதாயங்களின் பிரச்சினைகளைத் தீர்வுகாணும் வல்லமை உடையவை என்று கூறலாம்.

முடிவுரை

உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்குதல், பிரதேச சுயாட்சி, இணக்க முறையிலானதும் பிரதிநிதித்துவ முறையிலானதுமான முடிவு எடுத்தலுக்கு உதவுதல் ஆகிய இயல்புகளைக் கொண்ட சமஷ்டி முறையொன்றை ஏற்படுத்துதல் இலங்கை எதிர்நோக்கும் சவால் ஆகும். இலங்கையின் எல்லாச் சமுதாயங்களையும் ஒன்றிணைக்கக்கூடியதும், சமாதானம், ஜனநாயகம் என்பனவற்றின் அடிப்படையில் இயங்கும் பல சுயாட்சி அலகுகளைக் கொண்டதுமான அரசியல் யாப்பொன்றை உருவாக்குதல் அதன் இன்றைய தேவையாகும். அரசியல் யாப்பு எல்லாச் சிறுபான்மையினரையும் அங்கீகரித்து ஏற்பதாக இருக்க வேண்டும். மரபு வழியில் சிறுபான்மையினர் என்று கருதப்படாத சிறுபான்மையினர், இனக்குழும – மொழி அடிப்படையைக் கொண்டிராத சிறுபான்மையினர் என்போரையும் ஏற்றுக் கொள்வதாக அரசியல் யாப்பு இருத்தல் வேண்டும்.

இலங்கையர்கள் தமக்குரிய அரசியல் யாப்பை வரைந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடும்போது பெல்ஜியம் சமஷ்டிமுறை பரிசீலனைக்குரிய சுவாரஸ்யமான மாதிரியாக விளங்குகிறது. இக் கட்டுரையில் பெல்ஜியம் சமஷ்டி முறையின் குறைபாடுகள்பல சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எல்லாச் சமஷ்டி நாடுகளிலும் ஒரே விதமான தீவிரத்துடன் அல்லது செறிவுடன் பிரச்சினைகள் எதிர்கொள்ளப்படுகின்றன என்று கூறமுடியாது. எங்கெங்கே பிராந்திய தேசியக் குழுக்கள் மோதலும் எதிர்ப்பும் என்ற வகையிலான தந்திரோபாயங்களைக் கையாள்கின்றனவோ அங்கெல்லாம் பிரச்சினைகள் தீவிரம் பெற்றுள்ளன. இதற்கு மாறாக பிரதேச அலகுகள் மத்திய அரசாங்கத்துடன் கூட்டுறவாகச் செயற்படும்போது பிரச்சினைகள் சமஷ்டி முறையில் குறைவாக உள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் கூட்டுறவுச் சமஷ்டியைவிட போட்டித்தன்மையுள்ள பிரதேசவாதம் சமஷ்டியின் உறுதியின்மையை அதிகரிக்கச் செய்யும். இலங்கையில் தேசியவாத சக்திகள் வன்முறைப் போக்கைக் கொண்டுள்ளன. ஆகையால் தவறான சமஷ்டி ஒழுங்குகள் இலங்கையின் தேசியவாத விவாதத்தை நீண்டகாலம் நீடிக்கச் செய்வதாகவே அமையும்.

இவ்வெச்சரிக்கைக் குறிப்பைக் கூறும் வேளையில் நாம் இன்னொன்றையும் சுட்டிக்காட்டுதல் வேண்டும். பெல்ஜியம் சமஷ்டி இளமையானது, அது இப்பொழுதும் வளர்ந்துகொண்டு இருக்கின்றது. பெல்ஜியம் சமஷ்டி அமைப்பு முன்னேறி நகர்ந்து செல்லும் ஒரு அமைப்பு. அது பற்றிய எந்த விவரணையும் அதன் முழுமையான தோற்றத்தைத் தரமாட்டாது. தற்காலிகமான ஒரு தோற்றத்தைத் தரக்கூடியது என்று ஜெராட் (Genad) அதன் இயல்பை விளக்கியுள்ளார். பெல்ஜியம் சமஷ்டி முறை பலவழிகளிலும் வெற்றி பெற்ற ஒரு முறையாகும். சிக்கலான பிரச்சினைகள் பலவற்றிற்கு அது ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்கியுள்ளது. எதிர்காலத்தில் பெல்ஜியம் சமஷ்டியின் போக்குகளை மிகக் கவனமாக அவதானிப்பதால் இலங்கை நற்பயன்களைப் பெற முடியும்.

பெல்ஜியத்தின் வெற்றியில் இருந்து இலங்கை கற்றுக்கொள்ளக் கூடிய பாடம் முக்கியமானது. படிப்படியான சீர்திருத்தங்கள், சம்மந்தப்பட்ட எல்லாத்தரப்பினருக்கும் சம பிரதிநித்துவத்தை வழங்குதல் என்ற இரண்டுவிடயங்களும் கொண்ட ஒரு செயல்முறையை அது படிப்பினையாக வழங்குகிறது என்று இலங்கை எழுத்தாளர் ஒருவர் எழுதினார். இதில் உண்மை உள்ளது. நன்னோக்குடன் நடத்தப்படும் உரையாடல் செயல்முறை மூலம் இலங்கையர் தமக்குரிய சமஷ்டி அரசியல் முறையை உருவாக்கிக் கொள்வதற்கு பெல்ஜியம் போன்ற பிறநாடுகளின் சமஷ்டி உதாரணங்களில் இருந்து பல பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

தொடரும்.

Rohan Edirisinhe & Asanga Welikala ஆகியோரின் “Essays on Federalism in Sri Lanka” கட்டுரைத் தொகுப்பு நூலில் இருந்து, Kelley Bryan எழுதிய “Federalism in Belgium: Its Elements Advantages and drawbacks” என்ற கட்டுரையின் மொழிப்பெயர்ப்பே இக்கட்டுரையாகும்.


ஒலிவடிவில் கேட்க

9893 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)