Arts
15 நிமிட வாசிப்பு

இந்தியக் குடியரசின் அரசியல் யாப்பு – பகுதி 1

January 30, 2024 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம்: ஜோர்ஜ் மத்தியு

சமஷ்டி முறையின் வரலாறும் வளர்ச்சியும்

இந்தியா 3.287 மில்லியன் சதுர கிலோ மீற்றர் பரப்பளவை உடைய நாடு. இங்கு 1.098 பில்லியன் மக்கள் (2002) வாழ்கிறார்கள். இனத்துவ பன்மைத்துவமுடைய இப் பரந்த தேசத்தில் பல்வேறு இனத்துவக் குழுமங்களும், மொழிகளும், பண்பாடுகளும் காணப்படுகின்றன. இந்தியாவில் 28 மாநில அரசுகளும் 7 ஒன்றியப் பிரதேசங்களும் (Union Territories) உள்ளன (2002). ஒன்றியப் பிரதேசம் என்பதில் தேசியத் தலைநகரான டெல்லியும் அடங்குகிறது. இந்தியச் சமஷ்டியின் இவ் அலகுகள் இயற்கை வளம், நிர்வாகத் தலைமை, பொருளாதார அடைவு என்பனவற்றில் வேற்றுமை கொண்டனவாய் உள்ளன. இந்தியாவில் வறுமை பரவலாகவும் செறிந்தும் காணப்பட்டு வருகிறது. 1999 – 2000 ஆண்டுகளின் மதிப்பீட்டின்படி 260 மில்லியன் மக்கள் (சனத்தொகையின் 26% மக்கள்) வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோராவார். இருந்தபோதும் 2000 – 2001 காலத்தில் இந்தியாவின் மொத்தத் தேசிய உற்பத்தியின் (GDP) வளர்ச்சி 6% வீதமாக இருந்தது.

பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியிடமிருந்து 1858 இல் பிரித்தானிய அரசாங்கம் இந்தியாவைப் பொறுப்பேற்றுக்கொண்டது. அக்காலம் முதல் இந்தியா முடிக்குரிய காலனியாக (Crown colony) இருந்துவந்தது. பிரித்தானிய அரசின் பிரதிநிதியாகிய ஆளுநர் நாயகத்தின் தலைமையிலான மத்தியப்படுத்தப்பட்ட (Centralised) ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்தது. ஆளுநர் நாயகத்திடம் சட்டவாக்கம், நிர்வாகம், நிதி அதிகாரம் என்பன குவிந்திருந்தன. மத்தியப்படுத்தப்பட்ட ஆட்சி முறையைக் கொண்டியங்குவதில் ஏற்பட்ட தடங்கலைக் குறைப்பதற்காக 1861 ஆம் ஆண்டின் கவுன்சில் சட்டம் (Councils act of 1861), பின்னர் 1909 ஆம் ஆண்டின் மின்டோமோர்லி சட்டம் ஆகிய சட்டங்களால் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. 1919 இன் மொன்டேக் – செம்ஸ்போர்ட் சட்டம் மாநில சுயாட்சி (Provincial Autonomy) என்ற கருத்தையும் புகுத்தியது. இவ்வாறான அதிகாரப் பரவலாக்கம் (Devolution) மாகாணங்களின் நிர்வாகத்தில் பொறுப்பாட்சி அரசாங்கம் (Responsible Government) என்ற தத்துவத்தைப் புகுத்துவதற்கு உதவியது. ஆயினும் ஒரு சில விடயங்கள் மட்டுமே மாகாணங்களின் பொறுப்பில் கையளிக்கப்பட்டன.

1858 – 1919 வரையான காலப்பகுதியில் பிரித்தானியா இந்தியத் தேசியவாதத்தைக் கட்டுப்படுத்துவதிலும், இந்தியா மீதான தனது பிடியை வலுப்படுத்துவதிலுமே கவனம் செலுத்தியது. 1930 இல் சைமன் ஆணைக்குழு (Simon Commission) விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் பின்னர் வட்டமேசை மாநாடு (Round Table Conference) நடைபெற்றது. இறுதியில் இந்திய அரசாங்கச் சட்டம் 1935 (Government of India act 1935) என்னும் அரசியல் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவை யாவும் இந்தியத் தேசியவாத எழுச்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், பிரித்தானியாவின் ஆட்சியதிகாரத்தைப் பலப்படுத்துதல் என்ற மேற்கூறிய இரு நோக்கங்களினைக் கருத்தில்கொண்டே மேற்கொள்ளப்பட்டன. 1935 இன் இந்திய அரசாங்கச் சட்டம் ஒரு திருப்புமுனையாகும். இச் சட்டம் இந்தியாவிற்கு ஒரு சமஷ்டிக் கட்டமைப்பை (Federal Structure) வழங்கியது. பிரித்தானிய இந்தியாவின் (நேரடி ஆட்சியின் கீழ் இருந்த) மாகாணங்களையும் சமஸ்தான அரசுகளையும் (Princely States என இவை அழைக்கப்பட்டன) ஒன்றிணைத்த கூட்டாட்சி அல்லது சமஷ்டி (Federation) என்ற வகையான அரசியல் யாப்பு முறையை இது இந்தியாவிற்கு அறிமுகம் செய்தது. ஆயினும் சமஸ்தான அரசுகள், சமஷ்டியில் இணைவதற்கான சம்மதத்தை வழங்க மறுத்தமையால் திட்டமிட்டபடி ‘Federation’ என்ற அமைப்பு நடைமுறைக்கு வரவில்லை.

1935 சட்டம், சட்டவாக்க அதிகாரங்களை மத்திய சட்டசபை, மாநில சட்டசபைகள் என்ற இரு சட்டசபைகளுக்குப் பகிர்ந்தளித்தது. மாநில சட்டசபைகள் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டிருந்தன. 1935 சட்டம், இந்திய அரசுக்கு (Government of India) மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் என்ற கட்டமைப்பை உருவாக்கியது. இவ்வமைப்பில் சமஸ்தான அரசுகள் சேராமல் விலகியிருந்தன. இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்ததும் இந்த ஒழுங்கமைப்பு முடிவுக்கு வந்தது.

1947 ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்தியா சுதந்திரம் பெற்றது. 1949 நவம்பர் 26 ஆம் திகதி இந்திய அரசியலமைப்புச் சட்ட அவையால் வரையப்பட்ட அரசியல் யாப்பு ஏற்கப்பட்டது. அது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. இவ் அரசியல் யாப்பு பலம்பொருந்திய மத்திய அரசு அமைய வழிவகுத்தது. 14 மாநில அரசுகளும் 6 யூனியன் பிரதேசங்களும் இந்திய ஒன்றியத்தின் பகுதிகளாக அமைந்தன.

1955 இல் மாநில அரசுகளின் மறுசீரமைப்புக்கான ஆணைக்குழு (States Reorganization Commission) நியமிக்கப்பட்டது. பின்வரும் தத்துவங்களின் அடிப்படையில் பிராந்திய அலகுகளை மறுசீரமைக்க வேண்டும் எனச் சிபாரிசு செய்யப்பட்டது.

  • இந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுதலும் பலப்படுத்தலும்
  • மொழிப் பண்பாட்டு ஒருமைத்தன்மையைப் பேணுதல்
  • நிதி, பொருளாதாரம், நிர்வாகம் ஆகிய தேவைகளைக் கருத்தில் கொள்ளுதல்

மாநில அரசுகளை மறுசீரமைக்கும் போது மொழி என்ற காரணிக்கு முதன்மையளிக்கப்பட்டது. சமூக – கலாசார அடையாளமும் மொழியும் ஒன்றோடொன்று பிணைப்புடையனவாய் இருந்ததால் மொழிக்கு முதன்மை அளிக்கப்பட்டது. 1956 இல் இயற்றப்பட்ட மாநில அரசுகளின் மறுசீரமைப்புச் சட்டம் இந்தக் கருத்துக்குச் செயல்வடிவம் கொடுத்தது. குறிப்பிட்ட பிரதேசத்தின் மொழியை அடிப்படையாக வைத்து மாநில எல்லைகள் வரையறுக்கப்பட்டன. இவ்வாறு வரையறுத்தல் பொருளாதாரச் சமத்துவமின்மை, சமச்சீரற்ற அபிவிருத்தி, குறிப்பிட்ட சாதிகள் அல்லது வர்க்கங்களின் மேலாதிக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகளிற்கு மொழி அடிப்படையிலான மறுசீரமைப்பு தீர்வாக அமையும் எனக் கருதப்பட்டது. 1956 தொடக்கம் மாநில எல்லைகள் மீள்வரையறை செய்யப்படுவதும் புதிய மாநிலங்கள் உருவாக்கம் பெறுவதும் தொடர்ந்தது. அண்மைக்காலத்தில் வடகிழக்கு இந்தியாவில் 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சத்தீஷ்கார், ஜார்க்கண்ட், உத்தராஞ்சல் என்னும் மூன்று மாநில அரசுகள் உருவாக்கப்பட்டன. 

அரசியல் யாப்பை வரைந்தபோது அதன் வரைவில் தொடர்புபட்ட தலைவர்கள் இந்தியாவின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் பேணுவதையே முதன்மையான அக்கறையாகக் கொண்டிருந்தனர். இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய மாநிலங்களைவிட 600 வரையான சமஸ்தான அரசுகளும் இருந்தன. இவை யாவற்றையும் ஒன்றிணைத்த ஐக்கியப்பட்ட அரசை அமைக்கும் தேவை இருந்தது. அரசியல் யாப்பு இந்தியாவை ‘அரசுகளின் ஒன்றியம்’ (Union of States) என்று குறிப்பிட்டது. அரசியல் யாப்பில் வரும் ‘பெடரல்’ (Federal) என்ற சொல் பலமுள்ள மத்தியைக் (Strong Centre) குறிப்பதாக அமைகிறது. ‘ஒன்றியம்’ என்ற சொல் திட்டமிட்ட நோக்கத்துடனேயே உபயோகிக்கப்பட்டது என அரசியல் யாப்பின் சிற்பியான பி.ஆர். அம்பேத்கர் குறிப்பிட்டார். இந்தியா ஒரு சமஷ்டியாக (Federation) உருவாகுதல் வேண்டும் என அரசியல் யாப்பை வரைந்த குழு கருதியபோதும், அச் சமஷ்டியின் உறுப்பு அலகுகளின் முன்மொழிவின் பயனான உடன்படிக்கையின்படி அரசியல்யாப்பு வரையப்பட்டதல்ல என்ற கருத்தை அக்குழு தெளிவுபடுத்த விரும்பியது.

சாதாரண நிலைமைகளின் கீழ் இந்தியா ஒரு சமஷ்டி முறைமையாகவே இயங்கி வருகின்றது. ஆனால் அசாதாரணமான சூழ்நிலைகளின்போது அது ஒற்றையாட்சி முறையாக மாறிவிடுகிறது (Transformed into a unitary state during extraordinary circumstances).

இந்திய அரசியல் யாப்பின் சமஷ்டி இயல்புகள்

இந்தியா பாராளுமன்ற முறைமையைக் கொண்ட சமஷ்டி அமைப்புடைய நாடாகும். இந்தியாவில் (2004 இல் இக் கட்டுரை எழுதப்பட்டபோது, மொ-ர்) 28 மாநில அரசுகள் உள்ளன. அவற்றுள் மூன்று மாநில அரசுகள் நாம் குறிப்பிட்டது போல் அண்மையில், 2000 ஆண்டில் உருவாக்கப்பட்டவை. மத்திய அரசு லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளைக் கொண்டது. ராஜ்யசபா மேற்சபையாகும்; இது மாநில அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்டமைவது. கீழ்ச்சபையான லோக்சபா மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டமைவது. இந்திய அரசியல் யாப்பினை ஆராய்ந்த புலமையாளர்கள் இந்திய அரசியல் முறையை முழுமையான சமஷ்டியாகக் கருதமுடியாது எனக்குறிப்பிட்டதோடு அதற்குப் பலவித அடைமொழிகளைச் சேர்த்து அழைக்கலாயினர். அவ்வடைமொழிகள் Co-operative Executive, Emergent, Responsible, Parliamentary, Populist, legislative, Competitive, Fiscal, Restructured, Reluctant, Quasi எனப் பலவாகும். இவற்றுள் இறுதியாகக் குறிப்பிட்ட ‘Quasi’ என்ற அடைமொழியுடன் இணைத்து Quasi – Federalism எனக்கூறும்போது ‘அரைகுறைச் சமஷ்டி’ என்ற கருத்தாக அது பொருள்படும். இந்திய சமஷ்டியின் அடிப்படைக் கூறாக சமஷ்டி என்னும் தத்துவம் (Federal Principle) அமைந்துள்ள போதும், மாநில அரசுகளின் அதிகாரங்களையும் அவற்றின் நியாயாதிக்கத்தையும் (Jurisdiction) மீறும் வகையில் மத்திய அரசு சட்டங்களால் செயற்படுத்தப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

அரசியல் யாப்பில் உள்ள பல ஏற்பாடுகள் மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை மீறிச் செயற்படுவதற்கு உதவுவதாய் உள்ளன. இவ் ஏற்பாடுகள் சிலவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

உறுப்புரை 249

இவ் உறுப்புரையின்படி, பாராளுமன்றத்தின் மேற்சபையான ராஜ்யசபாவின் தீர்மானத்தின் மூலம் மாநிலப் பட்டியலில் (State List) மாநிலங்களுக்கென ஒதுக்கப்பட்ட எந்த விடயம் பற்றியும் மத்தியப் பாராளுமன்றம் சட்டங்களை ஆக்கலாம். ராஜ்ய சபையின் இத்தீர்மானம் அச் சபையில் சமூகமாயிருந்து வாக்களிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக இருத்தல் வேண்டும். சூழ்நிலையின் தேவையும் தேசிய நலனும் (Sake of expediency and national interest) அவ்வாறு மாநில அரசுப் பட்டியல் விடயங்களில் சட்டமியற்றுவதற்கான நிபந்தனையாக அமைவதையும் காணலாம். இவ்வாறு நிறைவேற்றப்படும் தீர்மானம் ஒரு ஆண்டுகாலத்திற்கு வலிதுடையதாக இருக்கும். அத் தீர்மானத்தை இன்னொரு தீர்மானம் மூலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கும் அதிகாரம் ராஜ்ய சபாவிற்கு உள்ளது.

அரசியல் யாப்பின் ஏழாவது அட்டவணை (The seventh schedule) யூனியன் அரசாங்கத்திற்கும் மாநில அரசுகளுக்குமுரிய கடமைகளையும் அதிகாரங்களையும் வகுத்துரைப்பதாக உள்ளது. 97 விடயங்கள் மத்திய அரசிற்குரியதாக (யூனியன் அரசு) குறிப்பிடப்படுகின்றன. மாநில அரசுக்குரியவை 66 எனவும், ஒருங்கிணை விடயங்கள் 47 எனவும் அட்டவனையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்திய அரசுப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கியமான விடயங்களாக பாதுகாப்பு, அணுசக்தி, இராஜதந்திர சேவை, குடியுரிமை, நாடுகடத்தல், மாநிலங்களிற்கிடையிலான வர்த்தகம், கணக்காய்வு, நாணயப் பரிவர்த்தனை, சட்டப்பணம் என்பன உள்ளன. மாநில அரசுப் பட்டியலில் பொது அமைதி (Public order), உள்ளூராட்சி, பொதுச் சுகாதாரமும் ஆரோக்கியமும், தொடர்புச் சாதனங்கள், விவசாயம், மீன்பிடி, மாநிலத்திற்கு உட்பட்ட வர்த்தகம், வரிவிதிப்பு, பொலிஸ் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

குற்றவியல் சட்டம், வனங்கள், பொருளாதாரமும் திட்டமிடலும், தொழிற் சங்கங்கள், கல்வி, தடுப்புக்காவலில் வைத்தல் ஆகியன ஒருங்கிணை விடயங்களாக குறிப்பிடப்பட்டவற்றுள் முக்கியமானவையாகும். இந்தப் பட்டியல்களில் உள்ள விடயங்கள் பற்றி அரசியல் யாப்புத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இத் திருத்தங்கள் மத்திய அரசின் (யூனியன் அரசின்) அதிகாரங்களைக் அதிகரிக்கும் நோக்குடன் செய்யப்பட்டனவாகும்.

உறுப்புரை 250

மத்திய அரசு மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடுவதற்கு உதவும் இன்னொரு அரசியல் உறுப்புரையாக 250 விளங்குகிறது. மாநில அரசு அட்டவணையில் குறிப்பிட்ட எந்தவொரு விடயம் பற்றியும் மத்திய அரசு அவசரகால நிலையின்போது சட்டம் இயற்றலாம் என உறுப்புரை 250 கூறுகிறது. பாராளுமன்றம் மாநில அரசுகளின் அட்டவணையில் உள்ள 5 விடயங்களை ஒருங்கிணை அட்டவணையிலும் 3 விடயங்களை மத்திய அரசு அட்டவணையிலும் சேர்த்துக்கொண்டது. 1954 இன் மூன்றாவது திருத்தச் சட்டம், 1956 இன் ஆறாவது திருத்தச் சட்டம், 1982 இன் நாற்பத்தி ஆறாவது திருத்தச்சட்டம் என்பன மூன்று அட்டவணைகளிலுமுள்ள விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்திய அரசியல் யாப்புச் சட்டத் திருத்தங்களிற்கு உதாரணங்களாகும். 1976 ஆம் ஆண்டின் 42 ஆம் திருத்தம் 7 ஆவது அட்டவணையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. இத் திருத்தம் மூலம் கல்வி, வனங்கள், வனவிலங்குகள் பாதுகாப்பு, நிறைகளும் அளவுகளும் தரக்கட்டுப்பாடும் என்பன மாநிலப் பட்டியலில் இருந்து ஒருங்கிணை பட்டியலிற்கு மாற்றப்பட்டன. 1976 ஆம் ஆண்டின் 42 ஆம் திருத்தம் மத்திய அரசு இராணுவத்தை எந்தவேளையிலும் எந்த மாநிலத்திற்குள்ளும் இராணுவ நடவடிக்கைக்காக அனுப்பும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியது. இவ்வாறு அனுப்பப்படும் இராணுவத்தின் மீது மாநில அரசுக்கு எவ்வித கட்டுப்பாட்டு அதிகாரமும் இருக்கமாட்டாது.

உறுப்புரை 356

மத்திய அரசு மாநிலங்களின் நியாயாதிக்கத்தில் தலையீடு செய்வதற்கு வழிவகுத்துள்ள இன்னொரு உறுப்புரை 356 ஆகும். இது ‘ஜனாதிபதி ஆட்சி’ (President’s rule) பற்றியது. இதன் மூலம் மாநில அரசாங்கத்தின் அதிகாரங்களை மத்திய அரசு நேரடியாக கைப்பற்றலாம். இந்த உறுப்புரையை உபயோகித்து 100 இற்கு மேற்பட்ட தடவைகள் மாநில அரசாங்கங்களின் பதவி கவிழ்க்கப்பட்டன. 1994 இல் இந்திய உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியது. ‘உறுப்புரை 356 இன்படி மாநில அரசாங்கம் ஒன்றைப் பதவியிலிருந்து நீக்குதல் முழுமையானதும் தடையற்றதுமான அதிகாரம் அன்று; அது நிபந்தனைக்குட்பட்டது (Not an absolute But a conditional power)’ என்று தீர்ப்பளித்தது.

இந்திய அரசியல் யாப்பிற்கான திருத்தங்கள் மூன்று வகையில் நிறைவேற்றப்படலாம். ஒருவகைத் திருத்தம், வெறும் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் செய்யப்படுவதாகும். அரசியல் யாப்பின் சில ஏற்பாடுகள் இவ்வாறு வெறும் பெரும்பான்மையுடன் (Simple Majority) திருத்தக் கூடியவை. இரண்டாவது வகைத் திருத்தம், லோக் சபாவில் அல்லது ராஜ்ய சபாவில் முன்மொழியப்பட்ட மசோதா அவையில் சமூகமாயிருக்கும் உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதாக இருத்தல் வேண்டும். இதற்கு ஜனாதிபதியின் சம்மதம் வழங்கப்பட்டது. அது அரசியல் யாப்பின் திருத்தமாக அமையும். மூன்றாவதாக அமையும் திருத்தம், அரசியல் யாப்பின் சமஷ்டிக் கட்டமைப்பை (Federal Structure) மாற்றுவதாக அமையும் திருத்தமாகும். இத்தகைய திருத்தம் மேலே இரண்டாவது வகை திருத்தத்திற்கு உரிய நிபந்தனைகளுடன் மேலதிகமாக இன்னொரு நிபந்தனையையும் கொண்டுள்ளது. இந்திய யூனியனின் மாநிலங்களின் அரைப்பங்கிற்குக் குறையாத மன்றங்களினால் ஏற்கப்பட்டதாகவும் இருத்தல் வேண்டும் என்பதே அந் நிபந்தனை. திருத்த மசோதா ஜனாதிபதியின் சம்மதத்திற்காகச் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் மேற்குறித்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுதல் வேண்டும்.

மத்திய மாநில உறவுகளுக்கான சபை (Inter State Council)

மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவுகள் பிரச்சனைகளைத் தோற்றுவிப்பனவாய் இருந்துள்ளன. இக் காரணத்தால் உறுப்புரை 263 இன்படி ‘ISC’ என்று அழைக்கப்படும் மத்திய மாநில உறவுகளுக்கான சபை என்ற சட்டப்படியான அமைப்பை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சபையின் பணிகளாவன;

அ. மாநில அரசுகளுக்கிடையே எழும் பிரச்சினைகள் குறித்து விசாரணை செய்து ஆலோசனை வழங்குதல். 

ஆ. சில மாநிலங்களுக்கு அல்லது எல்லா மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு மாநிலத்திற்கும் அல்லது மத்திய அரசுக்கும் ஒரு மாநிலத்திற்கும், அல்லது மத்திய அரசுக்கும் எல்லா மாநிலங்களுக்கும் அல்லது மத்திய அரசுக்கும் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானதான பிரச்சனைகள் பற்றி விசாரணை செய்து விளக்கமளித்தல். 

இ. பிணக்குக்குரிய ஒரு விடயம் பற்றிய கொள்கை அல்லது நடவடிக்கை குறித்து சிறந்த ஒழுங்கமைப்பை உருவாக்கும் வகையில் சிபாரிசுகளை வழங்குதல்.

உச்சநீதிமன்றம் (Supreme Court)

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இந்திய அரசியல் யாப்பின் காவலர் (Guardian) என்ற தகுதியுடையதாய் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பிரதம நீதிபதியும் 25 நீதிபதிகளும்  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு பதவி வகிப்பர். மாநிலங்களுக்கிடையே எழும் பிரச்சனைகளுக்கும் இறுதியான நடுத்தீர்ப்பை வழங்கும் அதிகாரம் உடையதாக உச்சநீதிமன்றம் விளங்குகிறது. பிறநாடுகளில் அதி உயர் நீதிமன்றங்களின் அதிகாரங்களினதும் நியாயாதிக்கத்தினதும் இயல்பையும் விரிவையும் விட இந்திய உச்சநீதிமன்றத்தின் அதிகாரமும் நியாயாதிக்கமும் விரிந்ததாக இருப்பதைக் காணலாம்.  

வரிவிதிப்பு – அதிகாரங்கள்

மத்திய அரசினதும், மாநில அரசுகளினதும் வரிவிதிப்பு அதிகாரங்கள் (Taxation Powers) தனித்தனியாக வேறாக்கப்பட்டுள்ளன. மத்திய அரசுப் பட்டியலில் வரி விதிப்புக்குரியனவான 12 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மாநில அரசுப் பட்டியல் 19 விடயங்களைக் குறிப்பிடுகிறது. நகரசபைகளும் உள்ளூராட்சி சபைகளும் வரிவிதிக்கும் அதிகாரங்களை உடையன. நிதி விடயங்களில் மத்தியப்படுத்தப்படுதல் (Centralisation) போக்குக் காணப்படுகிறது. இதில் மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் கூடியதாகக் காணப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளின் நடைமுறைகளை அவதானிக்கும்போது சமஷ்டி எண்ணக்கருக்களுக்கு (Federal Concepts) மாறான நிர்வாக முறைமைகள் பொருளாதார நிறுவனங்களில் புகுத்தப்படுவதும், அவற்றை ஊக்குவிப்பதுமான போக்கு இந்தியாவில் காணப்படுகிறது.

மத்திய நிதி ஆணைக்குழு

அரசியல் யாப்பின் உறுப்புரை 280, மத்திய நிதி ஆணைக் குழுவினை (Central Finance Commission) நியமிப்பதற்கான ஏற்பாடு உள்ளது. இவ் ஆணைக்குழு தவிசாளர் ஒருவரையும் நான்கு உறுப்பினர்களையும் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஜனாதிபதி இவ் ஆணைக் குழுவை நியமனம் செய்வார். ஆணைக்குழு, மத்திய மாநில வருவாய்த்துறை உறவுகள் குறித்துச் சிபாரிசுகளை வழங்கும். இவ்வாறான சிபாரிசுகள் நிதி ஆணைக்குழுவினால் மத்தியினதும் மாநிலங்களினதும் நிதி நிலை பற்றிய விரிவான மதிப்பீடுகள் செய்தபின்னரும், மத்திய மாநில அரசுகளுடனும், நலன்சார்ந்த அக்கறையுடையோர் பலருடனுமான விரிவான கலந்துரையாடல்களின் பின்னரும் வழங்கப்படுகின்றன. எல்லா விதமான மத்திய வரிகளில் இருந்தும் தீர்வைகளில் இருந்தும் கிடைக்கும் வருமானத்தின் குறிப்பிட்டதொரு வீதம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு 12 ஆவது நிதி ஆணைக்குழு நியமனம் செய்யப்பட்டது. இவ் ஆணைக்குழு தனது அறிக்கையை 2004 யூலை மாதம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கை 2005-2006 முதல் 2010-2011 காலம் வரையான 5 ஆண்டு காலத்திற்கான மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கும் வரி ஒதுக்கீடுகளைத் தீர்மானிப்பதற்கான வழிகாட்டியாக இருக்கும்.

மத்திய திட்டமிடல் ஆணைக்குழுவும் மாநிலங்களின் தன்னாட்சிச் சபைகளும் (Autonomous Councils) மத்திய – மாநில உறவுகளில் முக்கியக் கருவிகளாக உள்ளன. இந்தியா சுதந்திரம் பெற்றபொழுது வறுமை, படிப்பறிவின்மை, உணவுப் பற்றாக்குறை, கைத்தொழிலில் பின்தங்கிய நிலை என்பனவற்றைக் கையாள்வதற்குத் திட்டமிடுதல் அவசியத் தேவையாக இருந்தது. திட்டமிடற் செயன்முறையை மேற்கொள்வதற்காக திட்டமிடல் ஆணைக்குழு 1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறுவப்பட்டது. இதன் பின்னர் இவ் ஆணைக்குழு 5 ஆண்டுத் திட்டங்களையும், ஆண்டுத் திட்டங்களையும் வரைந்தளித்தது. இத் திட்டங்களில் அரசுத்துறைக்கு அதிக வகிபாகம் வழங்கப்பட்டது. நிதியிடலுக்கான வரவு – செலவு ஏற்பாடுகள் செய்யப்படுவதற்கு முன்னர் திட்டமிடல் ஆணைக்குழு பெரிய திட்டங்களையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது. திட்ட உதவியை நிர்ணயிப்பதும் ஒதுக்குவதுமே திட்டமிடல் ஆணைக்குழுவின் முக்கியமான பணியாகும். மொத்தத் திட்டமிடல் வளங்கள் வரையறுக்கப்பட்டனவாக இருந்தன. மாநிலங்களுக்கு வளங்களைப் பங்கீடு செய்வதில் சமத்துவமின்மை இருந்தது. இக்காரணத்தால் சமஷ்டி ஆட்சித் தொடர்புகளில் பிணக்குகள் தோன்றின.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4940 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)