Arts
19 நிமிட வாசிப்பு

ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு : ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முறைகள் – பகுதி 2

August 12, 2023 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ன

கல்மன் ஆணைக்குழு

ஸ்கொட்லாந்தின் அதிகாரப் பகிர்வு பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஆணைக்குழு ஒன்றை ஐக்கிய  இராச்சிய அரசு நியமித்தது. இந்த ஆணைக்குழு, கல்மன் ஆணைக்குழு (CALMAN COMMISSION) என அழைக்கப்படுகிறது. 1995 ஆம் ஆண்டின் ஸ்கொட்லாந்து சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னரான அனுபவங்கள் பற்றி ஆராய்ந்து அரசியல் யாப்பு தொடர்பாக செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் எவையென சிபாரிசு செய்தலும், ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றம் ஸ்கொட்லாந்து மக்களுக்கு உயரிய சேவையை வழங்குவதற்கு மேலும் செய்ய வேண்டிய வழி வகைகளையும், ஸ்கொட்லாந்துப் பாராளுமன்றத்தின் நிதிப் பொறுப்புக் கூறலை (FINANCIAL ACCOUNTABILITY) மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும், ஐக்கிய இராச்சியத்தின் ஒரு அங்கமாக ஸ்கொட்லாந்து நீடித்திருக்கும் நிலையை உறுதி செய்வதற்கான வழிகளையும் ஆராய்ந்து அறிக்கையிடுதல் கல்மன் ஆணைக்குழுவின் பணியாக இருந்தது. அதன் அறிக்கை 2009 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது.

Kenneth C. Calman

கல்மன் ஆணைக்குழு அறிக்கை ஸ்கொட்லாந்தின் அதிகார பகிர்வு உண்மையான ஒரு வெற்றி (REAL SUCCESS) என அறிவித்தது. ஐக்கிய இராச்சியத்திற்குள்ளே தனியான பாராளுமன்றம் ஒன்றை இயங்க வைப்பதும், நடைமுறையில் அது சாத்தியமானது என்பதை உறுதி செய்வதும் பத்து ஆண்டுகால அனுபவம் உறுதிப்படுத்தியுள்ளது என இவ்வறிக்கை குறிப்பிட்டது. மேலும் ‘ஸ்கொட்லாந்தில் ஒரு பாராளுமன்றம் செயற்படுவது மட்டுல்லாமல், அது ஸ்கொட்லாந்து மக்களிடம் பேராதரவை பெற்றுள்ளது. ஸ்கொட்லாந்து பிரச்சனைகள் ஸ்கொட்லாந்திற்குள்ளேயே விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் நிலை உருவானதை அவர்கள் வரவேற்கிறார்கள். ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் யாப்பில் நிலையாக வேரூன்றி நிற்பது மட்டுமல்லாமல், ஸ்கொர்ட்லாந்து மக்கள் மனதிலும், அவர்களின் உணர்வு நிலையிலும் ஆழமாக பதிந்தும் உள்ளது.’ 

கல்மன் ஆணைக்குழு, சிவெல் வழக்காறு நடைமுறையில் சிறப்பாகச் செயல்படுவதாகவும் குறிப்பிட்டது. சிவெல் வழக்காறு செயல்படும் விதமானது, ஸ்கொட்லாந்தினதும் ஐக்கிய இராச்சியத்தினதும் நிறுவனங்கள் இணைந்து கூட்டுறவுடன் செயற்படுவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது எனவும் அது குறிப்பிட்டுள்ளது. கல்மன் ஆனைக்குழு முக்கியத்துவம் வாய்ந்த பல சிபாரிசுகளை செய்துள்ளது அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன.

  1. வரிவருமான அளவிடுதல் முறை என்பன பற்றி திருத்தங்கள் மூலம் ஸ்கொட்லாந்தின் நிதிச்சுயாதீனத்தை மேம்படுத்தல்.
  2. ஸ்கொட்லாந்தின் அமைச்சர்களுக்கு கடன் பெறுதல் (BORROWING) தொடர்பாக மேலதிக அதிகாரங்களை வழங்குதல்.
  3. ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய நிறுவனங்களின் முடிவு எடுத்தலிலும் நியனமங்களிலும் ஸ்கொட்லாந்து அமைச்சர்களின் பங்கேற்பை ஏற்படுத்தல். (B B C, THE CROWN ESTATE, AND THE HEALTH IN SAFETY EXECUTIVE)
  4. ஸ்கொட்லாந்து பாராளுமன்றம், ஐக்கிய இராச்சியப் பாராளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் (RESERVED POWERS) தொடர்பான விடயங்களில் அதன் சம்மதத்துடன் சட்டங்களை இயற்றுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தல்.

ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்திற்கான தேர்தல்

ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்திற்கான முதலாவது தேர்தல் 1999 இல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகளின் படி,

  • தொழிற்கட்சி – 56 இடங்கள்
  • ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி (SNP) – 35 இடங்கள்
  • ஸ்கொட்லாந்து லிபரல் ஜனநாயகக் கட்சி (LDP) – 17 இடங்கள்

தேர்தலின் பின்னர் தொழிற்கட்சியும் ஸ்கொட்லாந்து ஜனநாயகக் கட்சியும் இணைந்து ஆட்சியை அமைத்தன. பழமைவாதக் கட்சி (CONSERVATIVE PARTY) எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. பிராந்தியங்களில் மட்டும் அதற்கு 18 ஆசனங்கள் (விகிதாசார முறையில்) கிடைத்தன.

தொழிற்ட்சியைச் சேர்ந்த டெவார் முதலமைச்சரானார். டெவார், 2000 ஆம் ஆண்டு காலமானார். அவரை அடுத்து ஹென்றி மக்லீஷ் (HENRY McLEISH) தெரிவு செய்யப்பட்டார். அவர் 2001 ஆம் ஆண்டில் இராஜினாமா செய்ததும், ஜக் மக்கொனல் (JACK McCONNELL) முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இரண்டாவது தேர்தல் 2003 இல் நடைபெற்றது. அப்போது தொழிற்கட்சியே ஆட்சியில் அமர்ந்தது. அதன் ஆசனங்கள் 50 ஆக குறைந்தன. ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியும் முன்னையை விட குறைந்ததாக 27 ஆசனங்களைப் பெற்றது. பழமைவாதக் கட்சியும், லிபரல் ஜனநாயகக் கட்சியும் 1999 இல் பெற்ற அளவு விகிதாசார வாக்குகளையே பெற்றன. இவை இரண்டும் 1999 இல் பெற்ற அதே அளவு ஆசனங்களைப் பெற்றன. மெக்கொனல் (McCONNELL) முதலமைச்சராக தொடர்ந்து இருந்தார். தொழிற்கட்சி, லிபரல் ஜனநாயகக் கட்சிக் கூட்டணியும் தொடர்ந்தது. ஸ்கொட்டிஸ் பசுமைக் கட்சி, ஸ்கொட்டிஸ் சோசலிசக் கட்சி போன்ற சிறு கட்சிகளும் 1999 தேர்தலையும் விட தம் ஆதரவை அதிகரித்துக் கொண்டதைக் காண முடிந்தது.

2007 தேர்தலில் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி 47 ஆசனங்களை பெற்று முன்னிடத்தில் இருந்தது. தொழிற்கட்சி 46 ஆசனங்களைப் பெற்றது. பழமைவாதக் கட்சி 17 ஆசனங்களைப் பெற்றது. ஜனநாயகக் கட்சி 16 ஆசனங்களையும், ஸ்கொட்டிஷ் பசுமைக் கட்சி 2 ஆசனங்களையும் பெற்றன. தேசியக் கட்சி (SNP) அரசை அமைத்தது. முதலமைச்சராக அலெக்ஸ் சல்மொண்ட் (ALEX SALMOND)  இருந்து வருகிறார் (2011).

ஸ்கொட்லாந்தின் சுதந்திரமும் அதிகார பகிர்வும், மனப்பாங்குகளின் மாற்றமும்

2001 இல் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின்படி ஸ்கொட்லாந்தின் மக்களில் 54 வீதத்தினர் ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக ஸ்கொட்லாந்து  தொடர்ந்து இருப்பதை விரும்பினர். அதற்குத் தனியான பாராளுமன்றமும், வரிவிதிப்பு அதிகாரமும் வேண்டுமென்று அவர்கள் கருதினர். 37 வீத ஸ்கொட்லாந்தியர், ஸ்கொட்லாந்து எதிர்காலத்தில் தனியாகப் பிரிந்து போகும் சாத்தியம் உள்ளது எனக் கருதினர். 2006 இலும் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள், ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் திருப்தியாக செயல்படுவதாகவும் அதற்கு மேலதிக அதிகாரங்கள் தேவையென்றும் மக்கள் கருதுவதை எடுத்துக்காட்டியது. 2009 தேர்தல் முடிவுகள் அங்கு ஏற்பட்டுவரும் மாற்றத்தை உறுதி செய்துள்ளன.

பெரும்பான்மையான ஸ்கொட்லாந்தியர்கள் இப்போது இருக்கும் நிலை தொடர்வதையே விரும்புகிறார்கள். ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் விரிவாக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் விரும்புகிறார்கள். ஸ்கொட்லாந்து தனி நாடாக வேண்டும் என்பது இன்று பிரதான விவாதப் பொருளாக அங்கு இல்லை.

வட அயர்லாந்து

வட அயர்லாந்துப் பிரச்சனை 17 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்தது. ஆங்கிலேயர்கள் அயர்லாந்து மக்களின் பல கிளர்ச்சிகளை அடக்கியபின், அயர்லாந்து தீவின் ஆட்சியைப் பிடித்தனர். அங்கு பெருந்தோட்டங்களை ஆங்கிலேயர் ஆரம்பித்தனர். வட அயர்லாந்து, ஆங்கிலம் பேசும் இடமாகவும் புரட்டஸ்தாந்திய கிறிஸ்துவப் பகுதியாகவும் மாறியது. எஞ்சிய அயர்லாந்து, ஐரிஷ் மொழிப் பிரதேசமாக இருந்தது. அப்பகுதியின் மக்கள் கத்தோலிக்கராவர்.

Northern Ireland and republic of Ireland

காலப்போக்கில் அயர்லாந்தில் வடக்கு – தெற்கு இடைவெளி அதிகரித்தது. வடபகுதியில் கைத்தொழில் விருத்தி ஏற்பட்டதால் அது செல்வச் செழிப்புள்ளதாக மாறியது. தென் அயர்லாந்து விவசாயப் பகுதியாக இருந்தது. தெற்கு விவசாய நிலங்களில் உடைமையாளர்களாக கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர் விளங்கினர். இது அங்கு அமைதியின்மைக்கு காரணமாயிற்று.

இருபதாம் நூற்றாண்டில் அயர்லாந்தில் ஹோம் ரூல் (HOME RULE) இயக்கம் வலுப்பெற்றது. இங்கிலாந்தின் பாராளுமன்றம் அயர்லாந்துக்குச் சுயாட்சி வழங்குவதை வன்மையாக எதிர்த்து வந்தது. அயர்லாந்தின் கத்தோலிக்கர்கள் பூரண சுதந்திரத்தைக் கோரினார்கள். அங்கிருந்த கிறிஸ்தவர்கள், அயர்லாந்துக்குள் சிறுபான்மையினராக இருக்க விரும்பவில்லை.

1920 ஆம் ஆண்டு பிரித்தானியப் பாராளுமன்றம் அயர்லாந்து அரசாங்க சட்டத்தை  (GOVERNMENT OF IRELAND ACT) இயற்றியது. இச்சட்டப்படி அயர்லாந்துத் தீவில் இரு அரசியல் அலகுகள் உருவாக்கப்பட்டன. உல்ஸ்ரர் (ULSTER) என்ற பெயரால் அழைக்கப்படும் வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக தொடர்ந்து இருந்தது. அங்கு ஓரளவு சுயாட்சி முறை (SELF GOVERNMENT) இருந்தது. உல்ஸ்ரர் ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக இருப்பதை கிறிஸ்தவர்கள் ஆதரித்தனர். ஆனால் அங்கு இருந்த கத்தோலிக்கர்கள் வட அயர்லாந்து, அயர்லாந்துடன் ஒன்றிணைய வேண்டும் என்று கோரினர். இறைமையுடைய ஒன்றிணைந்த அயர்லாந்து என்ற கத்தோலிக்கர்களின் கோரிக்கையை முன்வைத்து ஐ ஆர் ஏ (IRA) எனப்படும் ஐரிஷ் குடியரசு இராணுவம் (IRISH REPUBLICAN ARMY) என்னும் இயக்கம், கொரில்லா யுத்தத்தில் இறங்கியது. ஐ ஆர் ஏ பிரித்தானிய இராணுவத்தை எதிர்த்துப் போராடியது.

1921 இல் அயர்லாந்திற்கு சுதந்திரம் கிடைத்தது. புதிய சுதந்திர அயர்லாந்து அரசின் கீழ், தென் அயர்லாந்தின் 23 கவுண்டிகளும் (COUNTIES) உல்ஸ்ரர் பகுதியின் 30 கவுண்டிகளும் கொண்டுவரப்பட்டன. உல்ஸ்ரரின் எஞ்சிய கவுண்டிகள் ஐக்கிய இராச்சியத்தின பகுதியாக, வட அயர்லாந்து என அழைக்கப்பட்டு வந்தது. 1949 இல் ஐரிஷ் சுதந்திர அரசு ஐரிஷ் குடியரசு ஆகியது.

கத்தோலிக்கர்களுக்கும் புரட்டஸ்தாந்தியருக்கும் இடையிலான மோதல்கள் 1921 இன் பின்னர் தணிந்தன. ஆயினும் 1960 களில் வன்முறை மோதல்கள் தொடங்கின. 1968 இல் லண்டன்டெரியிலும் (LONDONDERRY) 1969 இல் லண்டன்டெரி, பெல்பாஸ்ட் (BELFAST) ஆகிய இரு நகரங்களிலும் வன்முறைகள் வெடித்தன. பிரித்தானிய இராணுவம் கலகங்களை அடக்குவதற்காகக் களமிறங்கப்பட்டது. ‘ஐ ஆர் ஏ’ உம் ஆயுதம் தாங்கிய புரட்டஸ்தாந்து குழுக்களும் குண்டுவைத்தல் போன்ற தீவிரவாத செயல்களில் இறங்கின. இந்த மோதல்கள் 1990 கள் வரை தொடர்ந்தன.

சமாதானச் செயல்முறை

3000 மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்ட மோதல்களை அரசியல் தீர்வு மூலம் முடிவுக்கு கொண்டு வருவதற்கு 70 களிலும் 80 களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1985 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியமும் அயர்லாந்துக் குடியரசும் ஆங்கில ஐரிஸ் உடன்படிக்கை (THE ANGLO IRISH AGREEMENT) ஒன்றை செய்து கொண்டன. வட அயர்லாந்தின் சமாதான செயல்பாட்டின் தொடக்கப் புள்ளியாக இவ் உடன்படிக்கை அமைந்தது. அரசியல் யாப்பில் ‘வட அயர்லாந்து பெறும் இடம் பற்றி, வட அயர்லாந்து மக்களில் பெரும்பான்மையினரின் சம்மதம் இன்றி திருத்தம் செய்வதில்லை’ என இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டன. வட அயர்லாந்தை நிர்வாகம் செய்வதில், அயர்லாந்துக் குடியரசுக்கு ஆலோசகர் என்ற அந்தஸ்து வழங்குவதனை இருதரப்பும் ஏற்றுக் கொண்டன. வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்துடனே இணைந்திருக்க வேண்டும் எனக் கூறிய ஐக்கியவாதிகள் (UNIONIST) ஆங்கில ஐரிஸ் உடன்படிக்கையை எதிர்த்தனர். ஆங்கில ஐரிஸ் உடன்படிக்கை என்னும் சட்டப்படியான உடன்படிக்கை சமாதான செயல்முறையை தொடக்கி வைத்தது. இரு அரசுகளும் வட அயர்லாந்து பற்றிய சட்ட நிலை பற்றிய வரையறையைச் செய்து கொண்டன.

வட அயர்லாந்தின் போரிடும் இரு பிரிவுகளதும் ஆதரவுடன் அரசியல் தீர்வு எட்டப்படுமானால், வன்முறைகள் அடங்கிப் போய்விடும் என இரு அரசுகளும் நம்பிக்கை கொண்டன. 1985 இற்கு பிந்திய காலத்தில் வட அயர்லாந்தின் அரசியல் கட்சிகள் இடையே உறவுகளை மேம்படுத்த இரு அரசுகளும் முயற்சித்தன. இரு பிரிவுகளிடையேயும் செயற்பட்ட தீவிரவாதக் குழுக்களை தனிமைப்படுத்த வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் கடும் பிரயத்தனத்துடன் மேற்கொள்ளப்பட்டன.

முதற்கட்டமாக 1990 களில் பேச்சு வார்த்தைகள் பற்றிய பேச்சு ஆரம்பிக்கப்பட்டது. இதன் பயனாக எந்தவித உடன்பாடும் ஏற்படாத போதும் நீண்ட காலத்தில் உடன்பாட்டை அடைவதற்கு இந்தப் பேச்சு உதவியது. உடன்பாடு ஒன்று அடையப் பெறும் போது, அது எல்லா வகை உறவுகளையும் உட்படுத்திய முழுமையான தீர்வாக அமைய வேண்டும் என இரு அரசுகளும் விரும்பின. காலப்போக்கில் மூன்று வகை நோக்கில் உடன்பாடு அணுகப்பப்பட்டது. முதலாவது அயர்லாந்துக்குள்ளே அமைய வேண்டிய உள்ளக உறவுகள் பற்றியது. இரண்டாவது வட அயர்லாந்துக்கும், அயர்லாந்துக் குடியரசுக்கும் இடையிலான உறவுகள் பற்றியது. மூன்றாவதாக ஐக்கிய இராச்சியத்திற்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் இடையிலான உறவுகள் பற்றியது.

IRA

இக்காலத்தில் குடியரசு இராணுவத்தினுள்ளும் (IRA) அதன் ஆதரவாளர்கள் மத்தியிலும் ஏற்பட்ட சிந்தனை மாற்றம் அமைதிச் செயல்முறையின் முன்னேற்றத்திற்கு உதவியது. யுத்தத்தைத் தொடர வேண்டுமா என்ற விசாரணை நடத்தப்பட்டது. யுத்தத்தால் களைப்படைந்த நிலையில் பிரித்தானிய அரசு கடுமையான ராணுவத் தந்திரோபாயங்களைக் கையாள வேண்டியிருந்தது. ஆயினும் புரட்டஸ்தாந்திய தீவிரவாதிகளின் வன்முறை ஓயாமல் தொடர்ந்தது. அயர்லாந்து சமூகத்தின் மத்தியிலும் தேசியவாத உணர்வு தொடர்பாக மாற்றம் ஏற்பட்டது. கெடுபிடி யுத்தம் (COLD WAR) முடிவுக்கு வந்ததால் யுத்தத்தை நீடிப்பதில் பயனில்லை எனும் கருத்து மேலோங்கியது. இவை போன்ற பல்வேறு காரணிகள், மோதல்கள் பற்றிய மறுபரிசீலனைக்கும் விவாதத்திற்கும் உள்ளாகின.

ஐ ஆர் ஏ இயக்கத்தின் அரசியல் பிரிவான சின்பியன் (SINN FEIN) தீவிரவாத புரட்டஸ்தாந்திய பிரிவுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்ற பிடிவாதத்தை கைவிடச் செய்வதில் ஐக்கிய இராச்சிய அரசாங்கமும், அயர்லாந்துக் குடியரசு அரசாங்கமும் வெற்றி கண்டன. இதன் பயனாக தேசியவாதிகளுக்கும் பிரித்தானிய அரசாங்கத்திற்கும் இடையே உரையாடல் ஆரம்பித்தது.

பிரித்தானியாவின் பிரதமர் யோன் மேயரும், அயர்லாந்தின் பிரதமர் அல்போர்ட் ரெயினால்ட்ஸ் அவர்களும் அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்க முயற்சித்தனர். 1993 இல் இரு அரசாங்கங்களும் கூட்டாக டவுணிங் வீதி பிரகடனத்தை (DOWNING STREET DECLARATION) வெளியிட்டன. 1994 ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஐ ஆர் ஏ (IRA) போர் நிறுத்தத்தை அறிவித்தது. 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி புரட்டஸ்தாந்தியக் குழுக்களும் போர் நிறுத்தத்தை அறிவித்தன. இவ்வாறு இரு தரப்பும் போர் நிறுத்தத்தை அறிவித்தமை சமாதான செயல்முறைக்கு பெரும் துணையாக அமைந்தது.

போர் நிறுத்தப்பட்ட போதும் அடிப்படையான பிரச்சனைகள் (CORE ISSUES) பற்றிய பேச்சு வார்த்தைகள் நடைபெறவில்லை. தேசியவாதிகள் பிரித்தானிய அரசாங்கம் சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டும் என எதிர்பார்த்தனர். ஆயினும் பிரித்தானிய அரசாங்கம் ஐ ஆர் ஏ இன் போர் நிறுத்தம் உறுதிப்படும் வரை காலதாமதம் செய்தது. புரட்டஸ்தாந்தியப் பிரிவினர் ஐ ஆர் ஏ இன் போர் நிறுத்தம் தற்காலிகமான ஓய்வா அல்லது நிரந்தர போர் நிறுத்தம் தானா என்பதில் சந்தேகம் கொண்டனர்.

தீவிரவாத குழுக்கள் ஆயுதங்களை களைந்து சமாதான வழிக்குத் திரும்புதல் தொடர்பான பிரச்சனைகள் எழுந்தன. பிரித்தானிய அரசாங்கமும், ஐக்கியவாதிகளும் தீவிரவாதிகள் ஆயுதங்களை கைவிட்டு, அரசியல் யாப்பு பற்றிய பேச்சில் தமக்கு உண்மையான விருப்பம் உள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என வாதிட்டனர். தீவிரவாதிகளின் முன்னணிப் பிரிவினர் அரசியல் உடன்பாடு எட்டப்படும் வரை ஆயுதங்களைக் களைதல் பற்றிப் பேசுவது பகுத்தறிவுக்கு பொருந்தாதது என வாதிட்டனர். ஆயுதக் களைவு தொடர்பான இந்தச் சிக்கலால் பேச்சுவார்த்தை தடைப்பட்டது.

1995 பிப்ரவரி மாதம் பிரித்தானிய அரசும், அயர்லாந்து அரசும் இணைந்து எதிர்காலம் குறித்த திட்டம் (FRAMEWORK FOR FUTURE) என்னும் ஆவணத்தை வெளியிட்டனர். இந்த ஆவணத்தில் முன்னர் குறிப்பிட்ட மூவகை நோக்கு மீளவும் அழுத்திக் கூறப்பட்டது.

தேசியவாதிகள், பிரித்தானிய அரசாங்கம் சர்வ கட்சிக் கூட்டத்தை கூட்டுவதைத் தாமதிப்பதாக குற்றம் சாட்டினர். அரசாங்கம் ஆயுதக் களைவில் உறுதியாக நின்றது. ஐக்கியவாதிகள் ஆயுதங்கள் களையப்படும் வரை சின்பியனுடன் எதிர் எதிரே பேச்சுவார்த்தை மேசையில் இருந்து உரையாடுவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். இதனால் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் தடைப்பட்டது.

1996 ஜனவரி மாதம் பிரித்தானிய அரசாங்கமும், அயர்லாந்து அரசாங்கமும் ஆயுதக் களைவுக்கான சர்வதேச ஆணைக்குழுவை அமைப்பதென உடன்பட்டன. ஆயுதக்களைவும் பேச்சுவார்த்தையும் சமாந்தரமாக செயற்படும் என அறிவிக்கப்பட்டது. பிரதமர் யோன் மேயர் சர்வ கட்சிக் கூட்டத்திற்கு முதற்படியாக வட அயர்லாந்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற ஆலோசனையை முன் வைத்தார்.

பிரித்தானிய அரசாங்கம் அரசியல் தீர்வு காண்பதை விரும்பவில்லை அல்லது அரசியல் தீர்வை காணும் சக்தியற்றது என ஐ ஆர் ஏ கருதியது.  இதனால் ஐ ஆர் ஏ போர் நிறுத்தத்தை 1996 பெப்ரவரியில் வாபஸ் பெற்றது. ஆயினும் ஐக்கியவாதிகள் போர் நிறுத்தத்தை வாபஸ் பெறாது சமாதான செயல்முறையில் பங்கெடுத்தனர்.

1996 யூன் மாதம் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. அயர்லாந்தின் பத்து அரசியல் கட்சிகளும் பிரித்தானியா, அயர்லாந்து அரசுகளும் இதில் பங்கேற்றன. முன்னாள் அமெரிக்க செனேட்டர் ஜான் மிக்செல் பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்தார். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நடைமுறை சார்ந்த விடயங்களில் அதிக நேரம் செலவிட்டப்பட்டது. ஐ ஆர் ஏ போர் நிறுத்தத்தை வாபஸ் பெற்ற காரணத்தால், சின்பியன் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்படவில்லை. ஆண்டுதோறும் வட அயர்லாந்தில் புரட்டஸ்தாந்தியர் நடத்தும் ஊர்வலங்களின் போது 1996 ஆம் ஆண்டில் தாக்குதல்கள் இடம்பெற்றன.

மே 1997 இல் ரொனி பிளயரின் தொழிற்கட்சி அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்தபோது பேச்சுவார்த்தையில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. சின்பியன் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வரப்பட்டது. சின்பியன் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதற்கு மூன்று நிபந்தனைகளை விதித்தது. அவை ஏற்கப்பட்டதும் ஐ ஆர் ஏ 1997 யூலை 20 ஆம் திகதி போர் நிறுத்தத்தை அறிவித்தது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4732 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)