Arts
25 நிமிட வாசிப்பு

கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் – பகுதி 5

January 26, 2023 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம்: அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன்

கனடாவின் வரலாறு

ஆரம்பம் தொடக்கம் கனடாவின் வரலாற்றில் ஒன்டாரியோவும், கியுபெக்கும் பிரதான வகிபாகம் பெற்றன. அத்திலாந்திக் மாநிலங்கள் பிரித்தானியாவின் காலனிகள் என்ற வகையில், தனித்துவமான வரலாற்றை உடையவை. தனித்துவமான அடையாளங்களும் அவற்றுக்கு உண்டு. கொண்பெடரேசன் அமைக்கப்பட்ட பின்னர், மேற்குப் பகுதியில் உள்ள மனிடோபா, சஸ்கற்சுவான், அல்பேர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகியன கொண்பெடரேசனில் இணைந்தன. அந்த மாநிலங்களும் தமக்கே உரியதான தனித்துவ அடையாளங்களையும் அரசியல் மரபுகளையும் வளர்த்துக் கொண்டன. உலகச் சந்தையில் எண்ணெய், எரிவாயு ஆகிய பொருட்களின் விலைகள் அதிகரித்தமையால் அம்மாநிலங்கள் நன்மை பெற்றன. காலப்போக்கில் ஒன்டாரியோ மிகவும் வலிமைமிக்க பொருளாதாரமாக உயர்ச்சி பெற்றது. கைத்தொழில் உற்பத்தி, நிதி, தொடர்பாடல் ஆகிய விடயங்களில் ஒன்டாரியோ மிக முக்கியமான கேந்திர இடத்தைப் பெறலாயிற்று. ஒன்டாரியோவுடன் ஒப்பிடும்பொழுது கியுபெக் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. மேற்கின் மாநிலங்களும் சில விடயங்களில் கியுபெக்கை முந்திக்கொண்டு சென்றன. குறிப்பாக அல்பேட்டா, சஸ்கற்சுவான், பிரிட்டிஷ் கொலம்பியா ஆகியன எண்ணெய் எரிவாயு ஆகிய பொருட்களிற்கு உலக சந்தையில் நல்ல விலைகிடைத்ததால் பெருநன்மை பெற்று முன்னேறின. அத்திலாந்திக் மாகாணங்கள் பொதுவாகப் பின்டைவை எதிர்நோக்கின. எண்ணெய், எரிவாயு வள இருப்பு உள்ள நோவோஸ்கொட்டியா, நியுபவுண்டலாந்து ஆகிய அத்திலாந்திக் மாகாணங்களில் தற்போது துரித வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

Parliament-of-Canada-2

கனடாவின் பிரதேச வேறுபாடுகளை நிர்வகித்து முகாமை செய்யும் பிரதான நிறுவன அமைப்பாக கனடாவின் சமஷ்டி அரசியல் முறை விளங்குகிறது. சமஷ்டி முறையில் மாநிலங்களிற்கு சிலதுறைகளில் கொள்கை வகுத்தலிலும், நிதியிலும் சுயாதீனம் உள்ளது. மாநில அரசாங்கம் சமஷ்டி அரசாங்கம் என்பவற்றிற்கிடையிலான உறவைக் கையாள்வதில் நிர்வாகச் சமஷ்டி (Executive Federalism) வெற்றி கண்டுள்ளது. இருப்பினும் மாநில சமஷ்டி உறவுகளில் நிதிவிடயங்களில் சச்சரவுகள் அதிகரித்துள்ளன. கனடாவின் சமஷ்டி முறை பிரதேச முரண்பாடுகளை நீக்குவதை விட அதிகரிப்பதற்கே உதவுகிறது என்ற கருத்தும் சிலரால் கூறப்பட்டுள்ளது. மாநில அரசுகள் காட்டும் ஊக்கம், முயற்சி என்பன  பிரதேசங்களிற்கிடையான முரண்பாடுகள் எழுவதற்குக் காரணமாக இருக்கலாம். இதேபோன்று சமஷ்டி அரசாங்கம் தனது தலைமைத்துவ அதிகாரத்தை வலியுறுத்த முனைதல், மாநிலங்களிற்கிடையே பொருளாதார அரசியல் வளங்களில் ஏற்றத் தாழ்வுகள் இருத்தல் ஆகியனவும் முரண்பாடுகளுக்கு காரணமாகலாம். இவற்றுள் எது முக்கிய காரணம் என்பது தெளிவில்லாதுள்ளது.

கனடாவின் சமஷ்டி அரசாங்கத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. இது அரசியல் கட்டமைப்பில் உள்ள முக்கிய குறைபாடு. கனடாவின் செனட் சபையில் மாநிலங்களின் பிரநிதித்துவம் போதியதாக இல்லை. செனட்டர்களை நியமனம் செய்வதற்கு பின்பற்றப்படும் விதிமுறைக்கு அமைய 105 செனட்டர் பதவிகளில் 91.4 வீதமான ஆசனங்கள் நான்கு பகுதிகளிற்கு ஒதுக்கப்படுகின்றன. இதன்படி, கரையோர மாநிலங்கள்(24),  கியுபெக்(24) ஒண்டாரியோ(24) மேற்குப் பகுதி(24) என்பன 96 ஆசனங்களைப் பெறுகின்றன. எஞ்சியுள்ள ஆசனங்களில் 6 நியுபவுண்டலாந்திற்கும் (Newfoundland), லப்றடோருக்கும் (Labrador) வழங்கப்படுகின்றன. வடமேற்கு பிரதேசம், யுகொன், நுனாவுட் என்பன ஒவ்வொரு ஆசனத்தையே பெறுகின்றன. செனட்டர்கள் நியமனம் பிரதேசங்களின் குரல் சமஷ்டி அரசாங்கத்தில் பலமாக ஒலிப்பதற்கு வழிசெய்திருக்க வேண்டும். பிரதேசங்களின் ஆதரவுத்தளமாக செனட் சபை அமையவில்லை. இது நியமன முறையில் உள்ள குறைபாட்டின் விளைவு, செனட்டர்கள் தேர்தல் முறை மூலம் தெரிவு செய்யப்படவேண்டுமா, மாநிலங்களிற்கு சமத்துவமான எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமா, ஆகிய பிரச்சினைகள் அரசியல் யாப்புத்திருத்தம் பற்றிய விவாதங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்ட விடயங்களாக உள்ளன.

கனடாவின் வெஸ்ட்மினிஸ்டர்  நாடாளுமன்ற முறையில் அதிகாரம் நிர்வாகத் துறையில் குவிந்துள்ளது. கட்சிக் கட்டுப்பாடு கடுமையாகப் பின்பற்றப்படுவதால்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதியைச் சார்ந்த உள்ளூர் விடயங்களுக்கு அப்பால் பேசுவதற்கு தகைமை அற்றவர்களாய் உள்ளனர். ஆளும் கட்சியில் பிரதிநிதித்துவம் குறைந்த மாநிலங்கள் ஒட்டாவாவில் செல்வாக்குச் செலுத்த முடியாதனவாய் உள்ளன. பிரஜைகள் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு மாநில அரசுகளில் தங்கியிருப்பதற்குரிய பிரதான காரணங்களில் இதுவும் ஒன்று.

first-ministers-conference-1

கனடாவின் கட்சிமுறை மேற்கூறிய இயல்பை மேலும் மோசமடையச் செய்கிறது. லிபரல்கட்சி, முற்போக்குப் பழமை பேணும் கட்சி (progressive conservatives) என்று இருபிரிவினர் கனடாவில் உள்ளன. இவர்கள் நாடு முழுமையையும் தழுவியதாக கூட்டணிகளை அமைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இந்தக்கட்சிகள் தரகர் கட்சிகள் போன்று செயற்படுகின்றன. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இந்த இரு கட்சி முறை சரிவுற்றது. புதிய கட்சிகள் கனடாவில் தோன்றின. மேற்குக்கனடாவில் ‘சீர்திருத்தக்கட்சியும்’ கியுபெக்கில் Bloc Quebecois (B.Q என்பது சுருக்கப்பெயர்) கட்சியும் அரசியலில் பிரவேசித்தன. 2000 ஆண்டு தேர்தலில் பழைய இருகட்சிகளும் மொத்த வாக்குகளில் 53 வீதத்தை மட்டும் பெற்றன. இதன் விளைவாக எந்தக் கட்சியும் கனடா தேசம் முழுமைக்குமான கட்சி என்ற உரிமையைக் கோர முடியவில்லை. சமஷ்டி நிலையில் கட்சிகளுக்கும் மாநில நிலைக் கட்சிகளுக்கும் பிணைப்பும் வலுவற்றதாக இருந்தது. பிராந்திய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து ‘தேசிய’ மட்டத்திலான இரு கட்சி முறையை அமைப்பதில் கனடாவினால் வெற்றிகாண முடியவில்லை. இதனை விட முந்திய காலத்தில் பிராந்தியங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சமஷ்டி அமைச்சரவைக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். (இதை Ministerialism என்று கூறுவர்). இம்முறை நல்ல பயனை அளித்தது. மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளான சிலர் அமைச்சர்களாக நிர்வாக அதிகாரத்தைப் பெற்றதோடு, தமது மாநிலங்களின் முக்கிய அரசியல்வாதிகளாகவும் விளங்கினர். அண்மைக் காலத்தில் இம்முறையும் செயற்படவில்லை. இதன் விளைவாக இப்பொழுது அரசியல் அதிகாரம் சமஷ்டியின் பிரதமர், மாநிலங்களின் பிரதமர்கள் என்ற இரு பதவிகளைச் சார்ந்து செயற்படுகிறது. அமைச்சரவை அரசாங்கம் என்பதை விட முதலமைச்சர் (First minister) அரசாங்கமே இப்பொழுது செயற்படுகிறது. தற்போது கனடா முழுமையையும் தழுவிய நலன்களையும், பிராந்திய நலன்களையும் சமரசம் செய்யும் பெரிய பொறுப்பு அரசாங்கங்களிற்கு இடையிலான பேரம் பேசலாக மாறியுள்ளது. நிர்வாக சமஷ்டியின் (Executive Federalism) போட்டி அரசியல் பேரம் பேசல் இடம்பெறுகிறது. வெவ்வேறு துறைகளில் கூட்டுறவையும் ஒருங்கிணைவையும் ஏற்படுத்தும் நோக்குடன் அமைச்சர்களின் சபைகள் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், சூழல் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களும், பிரதேசங்களும் இணைந்து Council of Federation என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இது ஒட்டாவாவுடனான நடவடிக்கைகளை இணைப்புச் செய்கின்றது. தத்தம் பகுதிகளின் கொள்கைத் திட்ட நிகழ்ச்சி நிரலை வடிவமைக்க இது உதவுகிறது. இருந்தபோதும் இவ்வமைப்பு பலம்மிக்க நிறுவன அமைப்பாக வளரவில்லை.

நவீனமயமாதல் பிரதேசங்களுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 1950களிலும் 1960களிலும் பிரதேசம் என்ற அடிப்படையிலான பிரிவினையின் இடத்தை வர்க்கம் என்ற அடிப்படையிலான பிரிவினை எடுத்துக்கொள்ளும் என்றும் கருதப்பட்டது. இதற்குப் பிற்பட்ட காலத்தில் பால்நிலை (Gender) தனிநபர் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட மனித உரிமைப் பிரச்சினைகள் முதன்மை பெறும் என்றும் கூறப்பட்டது. உரிமைகள், சுதந்திரங்கள் சாசனம், (Charter of Rights and freedoms) ஏற்படுத்தப்பட்டதனால் பிரதேசம், மொழி என்பனவற்றின் இடத்தை மையமாகக் கொண்டு கனடாவின் அரசியல் அமையும் என்றும் கருதப்பட்டது. இருந்தபோதும் கனடாவின் அரசியலில் பிரதேச அடிப்படையிலான பிரிவினைகள் நிலையான இடத்தை பிடித்து வைத்துள்ளன. புதிய பிரச்சினைகள் பல பற்றிய அக்கறை வலுப்பெற்றபோதும் ‘பிரதேசம்’ என்ற விடயம் அரசியலில் தொடர்ந்து இருந்து வருகிறது. கனடாவின் அரசியல் முறைமையுள் பிரதேசவாதம், மாநிலவாதம் (Regionalism and Provincialism) முக்கியமானவையாக இருந்த போதும் கனடாவை ஐக்கியப்படுத்தும் பல அம்சங்களும் தொழிற்படுகின்றன. அவை பின்வருமாறு:

  1. ஐக்கியப்பட்ட நீதிபரிபாலன முறை. இதன் தலைமையிடத்தை கனடாவின் உயர் நீதிமன்றம் பெறுகின்றது.
  2. நாடு முழுமைக்கும் பொதுவான குற்றவியல் சட்டக் கோவை.
  3. உரிமைகள், சுதந்திரங்கள் பற்றிய சாசனம்.
  4. நாடு தழுவிய முதியோர் ஓய்வூதியத்திட்டமும், வேலைவாய்ப்புக் காப்புறுதியும்
  5. நிதியிடலில் சமத்துவம் பேணுதல் (Fiscal equalization) முறை. இம்முறையானது எல்லா மாநிலங்களிலும் ஒப்பீட்டளவில் சமத்துவமுடைய பொதுச் சேவைகளை மக்களுக்கு வழங்குதல், ஒரே அளவிலான வரிவிதிப்பை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை உறுதிசெய்கிறது. 1982இன் அரசியல் யாப்புச் சட்டத்தின் 32ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைவாக சமத்துவத்தைப் பேணவும் இது உதவுகிறது.

பன்மைப் பண்பாட்டுவாதம்

அட்டவணை-1-1

கனடாதேசம் ஆரம்பகாலம் தொட்டு குடியேறிகளால் உருவான சமூகமாக இருந்துவந்துள்ளது. நீண்ட காலமாக கனடா ஐரோப்பியர்களையே குடியேறுவதற்கு அனுமதித்தது. வெளிப்படையான இனவாதத்தை அது பின்பற்றியது. 1960கள் வரை கனடாவிற்குள் குடியேறியவர்களில் 80 வீதம் ஐரோப்பியராவர். பின்னர் குடிவரவுக் கொள்கை மாறியதால் இந்நிலை தலைகீழாகியது. கனடா வேறு சில நாடுகளைப் போன்று 1970களில் ஐரோப்பியர் அல்லாதாவர்களையும் குடியேற அனுமதித்தது. அட்டவணை 1 இல் உள்ள புள்ளிவிபரங்கள் கனடாவின் கொள்கை மாற்றத்தால் குடிவரவில் ஏற்பட்ட அதிகரிப்பை எடுத்துக் காட்டுகின்றது. கனடாவில் இன்று குடியேறுவோர் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களில் இருந்து வருகின்றனர். உலக நாடுகளில் குடிவரவுத் தொகை அதிகமாகவுள்ள நாடாக கனடா உள்ளது. ஏறக்குறைய கனடாவின் மொத்த சனத்தொகையின் ஒரு வீதத்தினர் ஆண்டுதோறும் வந்து சேரும் குடியேறிகளாக உள்ளனர்.

2006 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி கனடாவின் மக்கள் தொகையில் 6,186,950 ஆட்கள் கனடாவிற்கு வெளியே பிறந்தவர்களாக இருந்தனர். ஒவ்வொரு 5 ஆட்களிலும் ஒருவர் கனடாவிற்கு வெளியில் பிறந்தவராவர் (19.8 வீதம்). 75 வருட காலத்தில் இதுவே மிக உயர்ந்த வீதமாகும். 2001-2006 இடைப்பட்ட ஆண்டுகளில் கனடாவிற்கு வெளியே பிறந்தவர்களான கனடா மக்களின் வீதாசாரம் 13.6 வீதத்தால் அதிகரித்து. இக்காலப்பகுதியில் கனடாவில் பிறந்தவர்களான குழந்தைகள் தொகை மக்கள் தொகையின் 3.3 வீதத்தால் அதிகரித்தது. ஆகவே கனடாவிற்கு வெளியே பிறந்தவர்கள் இதன் நான்கு மடங்காவர். அண்மைக்காலத்தில் கனடாவிற்குள் குடியேறுவோரில் 70 வீதத்தினர் டொரண்டொ, மொன்றியல், வான்கூவர் என்ற மூன்று நகரப்பகுதிகளில் குடியேறுகின்றனர். புறநகர்ப் பகுதிகளிலும் குடித்தொகை அதிகரிக்கின்றது. இதன்பயனாக நகரம் – கிராமியமும், சிறுநகரங்களும் என்ற இரட்டைத் தன்மையும் வேற்றுமையும் கனடாவில் உருவாகி வருகிறது.

அட்டவணை 2  சனத்தொகை மிகையாக உள்ள பெருநகரங்களின் வளர்ச்சியைக் காட்டுகின்றது. 2006ஆம் ஆண்டில் ரொறண்டோவின் சனத்தொகையில் 45.7 வீதம் வெளிநாட்டில் பிறந்து கனடாவில் குடியேறியோரைக் கொண்டிருந்தது. ரொறண்டோ உட்பட ஏனைய முக்கிய நகரங்களின் சனத்தொகையில் வெளிநாட்டில் பிறந்து கனடாவில் குடியேறியவர்களான ஆட்களின் வீதாசாரம் வருமாறு :

தனித்தனி மாநிலங்களாக எடுத்து நோக்கும் போதும் மாநிலங்களில் குடியேறியவர்களின் வீதாசாரம் வேறுபடுகிறது. ஒன்டாரியோவிலும், பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் குடியேறிகள் 28 வீதத்தினராய் உள்ளனர். கியுபெக் மாநிலத்தில் குடியேறிகள் 11.5 வீதமாகும். நியுபவுண்டலாந்திலும் லப்றடோரிலும் இது 1.7 வீதமாகும். நோவாஸ் கொட்டியாவிலும், சஸ்கற்சுவானிலும் குடியேறிகள் 5 வீதமாகும்.

நிறுவனங்களும் அவற்றின் நடவடிக்கைளும் பற்றிய அண்மைக்காலச் சர்ச்சைகள்

பன்மைப்பண்பாட்டுவாதம் கனடாவின் அடிப்படையான இயல்பு என்ற வரையறை 1971 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலகர்த்தா அன்று பிரதமராகவிருந்த ரூடே (Trudeau) ஆவர். 1971 ஆம் ஆண்டு ஒக்டோபர் 5ஆம் திகதி பொதுமக்கள் சபையில் உரையாற்றும் போது இக்கொள்கையை பின்வருமாறு அவர் எடுத்துக் கூறினார். ‘கனடாவில் இரு உத்தியோக மொழிகள் உள்ளன. ஆனால் உத்தியோகப் பண்பாடு என இரண்டு கிடையாது. இங்கே உள்ள பல இனக்குழுமங்களுள் ஒரு இனக்குழுமம் தலைமையிடத்தை பெற்றுள்ளதாகவும் கூற முடியாது. யாவரும் கனடாவின் மக்களே. அவர்கள் யாவரும் சமமாக, நீதியாக மதிக்கப்பட வேண்டியவர்கள். கனடாவின் மக்களின் பண்பாட்டு சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு இந்நாட்டில் இரு மொழியியம் (Bi-lingualism) என்ற சட்டகத்தினுள் செயற்படும் பன்மைப்பண்பாட்டுவாதம் என்னும் கொள்கையே உகந்ததெனக் கனடா அரசு தேர்ந்துள்ளது. இந்தக்கொள்கை பாரபட்சம் காட்டுதல் மனப்பாங்கை நீக்குவதற்கும் பண்பாட்டு பொறாமை உணர்வைப் போக்கவும் உதவும்.’

பன்மைப் பண்பாட்டுவாதம் என்ற கொள்கை 1982 ஆம் ஆண்டின் அரசியல் யாப்புச் சட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்தச்சட்டத்தில் உரிமைகளும் சுதந்திரங்களும் பற்றிய சாசனம் ஒரு உறுப்புரையாகச் சேர்க்கப்பட்டுள்ளது . இந்தச்சாசனம் கனடாவின் பன்மைப் பண்பாட்டுவாதம் என்ற இயல்பின் அடிப்படையில் விளக்கப்பட வேண்டியது. கனடாவின் பண்பாட்டுப் பன்மைத்துவத்துவ அடையாளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொள்கைகள், அங்கு சமூக ஒருங்கிணைவை ஏற்படுத்த உதவுகின்றன. ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது போன்று கனடாவின் முக்கியமான எந்த அரசியல் கட்சிகளோ முக்கிய தலைவர்களோ குடியேற்றத்திற்கு எதிரான எதிர்ப்பியக்கம் நடத்தவில்லை. கனடாவின் சமூகப் பன்மைத்துவத்தில் தமது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் கனடாவை ஒரு பலம் மிக்க தேசமாக ஆக்குவதற்கு உதவும்படி கனடாவின் வெவ்வேறு சமூக பிரிவினரும் தம்மக்களை வேண்டிக் கொள்கிறார்கள்.

கியுபெக்கில் பன்மைப் பண்பாட்டுவாதம் கொள்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. கியுபெக் தேசியவாதத்தை முறியடிப்பதற்கு ரூடே கையாளும் கருவிதான் பன்மைப் பண்பாட்டுவாதம் என்று விமர்சிக்கப்பட்டது. கியுபெக் மக்களும் அதன் பிரஞ்சு மொழி பேசும் மக்களும் கனடாவின் இன்னொரு சிறுபான்மை குழுமம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவர். கனடாவை உருவாக்குவதில் பங்கு கொண்ட பங்காளியான பிரஞ்சுபேசும் மக்கள் சிறுபான்மைக் குழு என்ற நிலையை ஏற்க வேண்டியுள்ளது. கனடாவில் கியுபெக்கியர்களுக்கு உள்ள பிரதான வகிபாகத்தை மறுப்பதாகவே ரூடோவின் கொள்கையை கியுபெக் மக்கள் விளக்கினர். இருந்தபோதும், கியுபெக் மாநிலத்திற்குள்ளேயே சமூகப் பன்மைத்துவம் வெளிப்படுகிறது. குடிவரவுக் கொள்கை தொடர்பாக கியுபெக் முக்கியமானதும், தனித்துவமானதுமான பங்களிப்பைச் செய்ய முன்வந்தது. 1970கள் முதல் ஒட்டாவா அரசாங்கத்துடன் குடிவரவு பற்றிய பல உடன்படிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. கியுபெக்கிற்குள் அனுமதிக்கப்படும் குடியேறிகளைத் தெரிவு செய்வதில் கியுபெக் அரசாங்கத்திற்கு முக்கிய பங்கு வழங்கப்பட்டுள்ளது. ஹெய்ட்டி, லெபனான், வட அமெரிக்கா ஆகிய பிரஞ்சு மொழிபேசும் நாடுகளில்  இருந்து வரும் குடியேறிகளை கியுபெக்கிற்குள் அனுமதிப்பதால் கியுபெக்கில் பிரஞ்சு மொழிக்கு பாதுகாப்புக் கிடைக்கின்றது. கியுபெக் தேசியவாதிகள் தமது தேசியவாதத்தை மொழிவழித் தேசியவாதம் என்றே கருதுகிறார்கள். அவர்களின் தேசியவாதம் இனத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது மொழியையும், வாழிடத்தையும் அடிப்படையாகக் கொண்டது. கியுபெக் மாநிலத்திற்குள் வரும் குடியேறிகளை பிரஞ்சுமொழிச் சூழலுக்குள் இணைத்துக் கொள்வதை கியுபெக் விரும்புகிறது. அங்குவரும் குடியேறிகள் ஆங்கிலமொழி – வட அமெரிக்க அடையாளத்தை பெறுவதை தவிர்த்துக் கொள்வதையே கியுபெக் விரும்புகிறது. அங்கு வரும் குடியேறிகளின் பிள்ளைகளைப் பிரஞ்சுமொழிப் பாடசாலைகளில் சேர்க்கும்படி கோருவது இந்தக்கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும். கியுபெக் தனது பகுதியுள் குடியேறும் மக்களை கியுபெக் சமூகத்தில் இணைப்பதற்கு அடிப்படையாக ‘இன்டர் கல்சுரலிசம்’ (Inter Culturalism) என்னும் கொள்கையைப் பின்பற்றுகிறது . ‘ இன்டர்கல்சுரலிசம்’ கொள்கை பன்மைப் பண்பாட்டுவாதத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஒரு கொள்கையாகும். இந்தக்கொள்கையின்படி கனடாவிற்குள் வரும் குடியேறிகளை ஏற்கும் சமூகம் (host society) என்ற வகையில் தனித்துவமான இயல்புடையதாக கியுபெக் இருக்கும்.

அங்கு குடியேறும் பிரஜைகளிடம் சில விசேட வகிபாகம், பொறுப்புக்கள் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன. இவற்றுள் முதன்மையான விடயம் குடியேறிகள் கியுபெக்கை ஏற்கும் சமூகம் (host Society) ஆகக் கருதுதலும், அந்தச்சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதை முழுவிருப்புடன் ஏற்றுலுமாகும். அடுத்ததாக கியுபெக்கில் ஒருங்கிணைவதற்கான மொழியாக பிரஞ்சுமொழியை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். அம்மொழி கியுபெக் மக்கள் யாவருக்கும் பொதுவான பொது மொழியாக (Public Language)  இருப்பதோடு எல்லாவகையான பாரபட்சம் காட்டுதலையும் எதிர்க்கக் கூடிய கருவியாகவும் விளங்கும் .

அட்டவணை-3

கனடாவிற்குள் புதிதாகக் குடியேறுவோர் தொடர்பாக அந்தநாடு கடைப்பிடிக்கும் கொள்கை குறிப்பிடக்கூடிய வெற்றியைப் பெற்றுள்ளதென்றே கூறவேண்டும். 1960களின் பின்னர் ஒரு தலைமுறை இடைவெளிக்குள் கனடாவின் பெருநகரங்களின் இனத்துவக் கட்டமைப்பு முற்றாகவே மாற்றம் பெற்றுள்ளது. இம்மாற்றம் எவ்வித சலசலப்பையோ விவாதத்தையோ சமூக நெருக்கடியையோ ஏற்படுத்தாமல் நிகழ்ந்துள்ளது. மேற்கு ஐரோப்பாவின் பல நாடுகளின் அனுபவங்களுடன் ஒப்பிட்டு நோக்கும் போது கனடாவின் வித்தியாசமானநிலை தெற்றெனப் (தெளிவாக) புலப்படும்.

  1. கனடாவில் குடியேறுவோருக்கு எதிரான வெளிப்படையான இயக்கங்கள் எதுவும் தோன்றவில்லை. எந்த அரசியல் கட்சியும் எதிர்ப்பியக்கம் நடத்தவில்லை.
  2. கனடாவின் அரசு மாதிரி ஐரோப்பிய அரசு மாதிரிபோன்று ஒற்றையாட்சி மாதிரியாக ஓரினத்தன்மையை அழுத்துவதாக இருக்கவில்லை. அது சமஷ்டி நாடு ஆகையால் பன்மைத்துவம் கொண்ட அரசு அமைப்பு உள்ளது. அது குடியேறுவோர் வரவால் ஆபத்தை உணரவில்லை.
  3. கனடாவில் குடியேறுவோரில் கோக்கேசியன் இனத்தவர் (Caucasian) அதிகமாக இருந்த பின்னணியிலேயே அங்கு பன்மைப் பண்பாட்டுவாதம் என்ற கொள்கையின் பிரதான அம்சங்கள் செயற்படுத்தப்பட்டன.
  4. மேற்கு ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றோடு ஒப்பிடும் போது கனடாவின் இட அமைவு வித்தியாசமானது. மூன்றாம் உலக நாடு எதுவும் கனடாவுடன் பொது எல்லையைக் கொண்டதாக இல்லை. இதனால் கனடா தனது குடிவரவுக் கொள்கையை சிறந்த முறையில் செயற்படுத்தவும் நிர்வகிக்கவும் முடிந்தது. சட்டவிரோதக் குடியேறிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் முடிந்தது.
  5. கனடா புதிய குடியேறிகளைத் தெரிவு செய்வதில் புள்ளியிடல் முறை (Point System) ஒன்றைக் கையாள்கிறது. இப்புள்ளியிடல் முறை குடியேறிகளின் இயல்புகளை மதிப்பிட்டு உள்வருவதற்கு அனுமதிப்பதற்கு ஏற்றதாக இருந்தது.

கனடா அண்மைக்காலத்தில் சில நெருக்கடிகளையும் எதிர்கொண்டது. புதிய குடியேறிகள் பொருளாதார நிலையில் முன்னரைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளனர். இதற்கான காரணங்கள் யாவை எனத் தெளிவாகத் தெரியவில்லை. ஒரு விடயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. குடியேறிகள் தமது வேலை அனுபவம், தாம் கொண்டு வரும் சான்றிதழ்கள் ஆகியவற்றில் வேலை கொள்வோரைத் திருப்திப்படுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள். குடியேறிகள் விளிம்பு நிலையான, சேரிகளை ஒத்தபகுதிகளிலேயே அதிகம் செறிவாகக் குடியேறுகிறார்கள் என்றும் சிலர் கூறகின்றனர். ஆனால் அதற்கான ஆதாரம் இல்லை.

கனடாவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய இனக்குழும வித்தியாசங்களின் அளவு என்ன என்பது பற்றிய சர்ச்சைகள் சில அண்மையில் தோன்றின. இந்தச்சர்ச்சைகள் கனடாவின் புகழ்ச்சிக்குரிய பன்மைத்துவம் தொடர்பான சிக்கல்களை எடுத்துக் காட்டுகின்றன. ஒன்டாரியோ மாநிலத்தில் முஸ்லிம்களிடையே குடும்பப் பிணக்குகளில்  ஷரியா (Sharia) சட்டத்தை அனுமதிப்பது பற்றிய ஆலோசனையை அரசாங்கம் முன்வைத்தது. இதற்குக் கடும் எதிர்ப்புத் தோன்றியதால் கைவிடப்பட்டது. சமயப் பாடசாலைகளுக்கு நிதிவழங்குவதற்கான எதிர்க் கட்சியின் பிரேரணையும் தோற்கடிக்கப்பட்டது. (கத்தோலிக்கப் பாடசாலைகள் மட்டும் நீண்ட காலமாக நிதி உதவி பெற்று வருகின்றன.) கியுபெக் மாநிலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நியாயமான அளவுக்கு விட்டுக்கொடுத்தல் (reasonable accommodation) கொள்கை 2005 – 2007 காலத்தில் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்தது. அரசாங்கம் பெரும்பான்மையினர் -சிறுபான்மையினர் ஒருங்கிணைவை சிறந்த முறையில் உருவாக்குவது எப்படி என்பதைக் கண்டறிவதற்கு விசாரணை ஆணைக்குழுவை நியமித்தது. ஆணைக்குழு சிபாரிசு செய்த 37 சிபார்சுகள் விட்டுக்கொடுத்தல், பொதுவிழுமியங்களை வளர்த்தல் என்ற இரண்டையும் வளர்க்க வேண்டும் என்று கூறியது.

இக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான Gerard Bouchard பின்வருமாறு குறிப்பிட்டார்: நாம் மதச்சார்பின்மையையும் இன்டர் கல்சுரலிசத்தையும் (Inter-Culturalism) செயல்படுத்த வேண்டும். அத்தோடு குடியேறிகளை ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்வதோடு அவர்கள் மீது பாரபட்சம் காட்டாதிருப்பதையும் உறுதி செய்தல் வேண்டும்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்

கனடாவில் குடிவருவோரை ஏற்கும் சமூகங்கள் இரண்டு உள்ளன. ஒன்று ஆங்கில மொழிபேசும் சமூகம், மற்றது பிரஞ்சு மொழிபேசும் சமூகம். இரு சமூகங்களும் புதிதாகக் குடியேறுவோரைத் தமது பாடசாலைகள், பொது நிறுவனங்கள், ஆட்பணி, வேலையாளர் தொகுதிகள் என்பனவற்றுள் இணைத்துக் கொள்வதில் முயற்சி செய்கின்றன. இவ்விதம் இரண்டு ஏற்கும் சமூகங்கள் இருப்பது குடியேறிகளுக்குத் தெரிவுக்கான வாய்ப்பை வழங்குகிறது. குடியேறிகள் தாம் வாழப்போகும் சூழலைத் தேர்ந்துகொள்கிறார்கள். ஜனநாயக நடைமுறைகள் என்னும் விடயம் ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய இரு ஏற்கும் சமூகங்களையும் இணைப்பதாய் உள்ளது. பிரஜைகள் அந்தஸ்து பற்றிய விடயத்தில், அணுகுமுறையில் கியுபெக்கிற்கும் கனடாவின் ஏனைய பகுதிகளுக்கும் வித்தியாசம் உள்ளது. கியுபெக்கில், கியுபெக் சமுதாயத்துடன் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குடியேறிகள் கொள்ளல் – கொடுத்தல் உறவுகளை பண்பாட்டு நிலையில் பேணுவதான (Community Exchanges) உறவு முறை வலியுறுத்தப்படுகிறது. பிற பகுதிகளில் இது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இதற்கான காரணம் கனடாவின் பிறபகுதிகளிற்கும் கியுபெக்கிற்கும் இடையிலான நுட்பமான சிலவேறுபாடுகளாகும். கியுபெக் மாநிலத்தவர்கள் கனடாவிற்குள்ளும் முழு வட அமெரிக்காவிற்குள்ளும் ஒரு மொழிச் சிறுபான்மையினராக இருப்பதை உணர்கின்றனர். இதனால் ஆங்கில மொழிபேசும் கனடா மக்களை விட பிரஞ்சு மொழி பேசும் கியுபெக் மாநிலத்தவர்கள் தம்மொழி, பண்பாடு என்பனவற்றைப் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள், ஆங்கிலம் பேசுவோர் தம்மொழியையும் பண்பாட்டையும் பற்றி இவ்விதமாக அச்சம் கொள்வதில்லை அவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். தமது மொழியின் பலம் பற்றி நம்பிக்கையுடையவர்களாக உள்ளனர். இக்காரணத்தினால் இவ்விரு ஏற்கும் சமூகங்களிடையேயும் குடியேறுவோர் பற்றிய கொள்கையில் சில வித்தியாசங்கள் உள்ளன. இவ்விடயம் குறித்து ஜெரமி வெப்பர் (Jeremy Webber) கூறியிருப்பது கவனிப்புக்குரியது. சமஷ்டியில் இணைந்துள்ள அரசுகளிற்கிடையே சட்டங்களில் வேறுபாடு இருக்கும் என்பது அனுமானம், ஒரு மாநில அரசின் பிரஜைகள் யாவருக்கும் ஒரே விதமான சட்டங்கள் தாம் இருக்க வேண்டும் என்றால் சமஷ்டிக் கட்டமைப்பு அர்த்தமற்றதாகிறது. கனடாவில் இரு ஏற்கும் சமூகங்கள் இருப்பதால் அங்கு பன்மைத்துவம் வளப்படுத்தப்படுகிறது. சமூகமட்டத்தில் சமஷ்டியின் இலட்சியங்கள் வேரூன்றுவதற்கு இது உதவுகிறது.

கனடாவின் வெற்றியின் உதாரணங்கள் சிலவற்றை மேலே குறிப்பிட்டோம், எனினும் இவை திருப்தி தருவன அல்ல. குடியேறிகளில் சில குழுமங்கள் பிறவற்றைவிட உயர் தொழில்களிலும் பொருளாதார நிலையிலும் முன்னேறியுள்ளன . பெருநகரங்கள் பல பெருந்தொகையில் குடியேறிகளை உள்வாங்கின. இவற்றில் குடியேறிகளைச் சமூகத்துடன் ஒருங்கிணைப்பதிலும், அவற்றுக்கான சேவைகளை வழங்குவதிலும் பிரச்சினைகள் உள்ளன. பல்மொழிபேசுவோருக்கும் சேவைகளை வழங்குவதோடு பொதுமொழியொன்றை நிலைபெறச் செய்வதிலும் பிரச்சினைகள் உள்ளன. சமநிலையை பேணுதல் கடினமான ஒரு பணியாகும். குடிவரவுக்கொள்கையை ஒட்டாவா அரசாங்கம் வகுத்துக் கொள்கிறது. அன்றாட வாழ்க்கையில் குடியேறிகளை ஒருங்கிணைத்தலும் அவர்களுக்கு பாடசாலை, மருத்துவ வசதி, பொலிஸ்சேவை, வீடமைப்பு வசதி என்பவற்றை வழங்குவது ஆகியன சில நகரங்களில் தொழிற்பட வேண்டும். ஆதலால் நகரங்கள் குடிவரவுக் கொள்கையில் பிரதான பங்களிப்பைச் செய்ய வேண்டும். நகரங்களிற்கு குடியேறிகளை ஒருங்கிணைப்பதில் மாநில அரசாங்கங்களினதும் சமஷ்டி அரசாங்கத்தினதும் ஆதரவு கிடைக்கவேண்டும்.

Gerard-Bouchard-and-Charles-Taylor-co-chairs-of-Quebecs-Consultation-Commission-on-Accommodation-Practices-Related-to-Cultural-Differences-2007-2008.

இனக்குழும வித்தியாசங்களை நிறுவனமயப்படுத்துவதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவை எவை, ஏற்க முடியாதவை எவை என்பதில் கனடா மக்களிடம் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. கனடாவில்  ஷரியா சட்டம் செயற்படுத்தப்படும் தேவை உள்ளதா, சமயப் பாடசாலைகளிற்கு நிதிஉதவி வழங்கவேண்டுமா போன்ற விடயங்கள் விவாதத்திற்குரியனவாக இருந்தன. சர்வப் பொதுவான விழுமியங்களையும் தனிநபர் உரிமைகளையும் கொண்ட சாசனம் கனடாவில் உள்ளது. இச்சாசனத்திற்கும் (Charter) பழங்குடிகளினதும், கியுபெக்கியர்களினதும் தேவைகளுக்கும் இடையில் சமரசம் காண்பது எப்படி? குடியேறிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது எப்படி? போன்ற விடயங்கள் சிந்தனைக்குரியனவாய் உள்ளன. அல்பெர்ட்டா கியுபெக், சஸ்கற்சுவன் ஆகிய மாநில அரசுகள் தத்தம் பகுதிகளின் பிரஜைகளின் தேவைகளுக்கு ஏற்ப தமக்கென உரிமைகளும் சுதந்திரங்களும் சாசனத்தைத் தயாரித்துள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்துகின்றன. இருந்தபோதும் பன்மைப் பண்பாட்டு வாதத்தில் இருந்து கனடா விலகிச் செல்லும் என்பதற்கான சான்றுகள் எவையும் இல்லை. கியுபெக்கின் ‘இன்டர்கல்சுரலிசம்’ என்ற பண்பாட்டு பன்மைத்துவத்துவ மாதிரியில் இருந்தும் விலகிச் செல்வதற்கான சான்றுகள் இல்லை. கியுபெக்கில் Bouchard – Taylor ஆணைக்குழு பண்பாட்டு வேற்றுமைகளை ஏற்று உள்வாங்கிய பிரஜைகளை ஐக்கியப்படுத்தவும், குடியேறிகளிற்கும் கியுபெக் சமூகத்திற்கும் இடையில் எழக்கூடிய பிரச்சனைகளை தணிப்பதற்கும் உதவக்கூடிய நடைமுறைகள் பற்றி ஆலோசிக்கும்படி அரசாங்கத்திற்குச் சிபாரிசு செய்தது. இத்தகைய நடைமுறைகள் எமது இக்கட்டுரையின் பிரதான விடயப்பொருளோடு தொடர்புடையன. வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும், அவை தொடர்ந்த உரையாடலுக்கும் பேரம் பேசலுக்கும் உரியவை. ஏற்கனவே முடிந்த காரியங்கள் அல்ல. Bouchard Taylor அறிக்கையின் படி கியுபெக்கில் பண்பாட்டுத் துறை நெருக்கடி உள்ளது என்று கூறுவதில் உண்மை இல்லை. கனடா முழுமைக்கும் இக்கூற்றுப் பொருத்தமானது.

தொகுத்துநோக்கின், கனடாவின் கதையை மேலே கூறினோம். அக்கதையில் நற்செய்திகள் பலவற்றைத் தெரிவித்தோம், சில குறைகளையும் நாம் குறிப்பிட்டோம். கனடா   பன்மைத்துவ வேறுபாடுகளை சமாதான வழிகளில், ஜனநாயக ரீதியாக முகாமை செய்தல் முடியும் என்பதை முன்னுதாரணமாக எடுத்துக் கூறுகிறது. கனடாவின் அனுபவத்தை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாமா என்பதற்கு தெளிவான விடை கூற முடியாது. வேறுபாடுகளை இலகுவில் முகாமை செய்வதற்குக் கனடாவிடம் அரசியல், சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஜனநாயகப்பண்பாடு, சட்டத்தின் ஆட்சி, பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் பேசித்தீர்க்கும் பண்பாடு, கனடாவின் பொதுப்பட்ட செல்வச் செழிப்பு ஆகியன சாதகமான அம்சங்களாகும். இவற்றை பிற தேசங்களுக்கு கொண்டு செல்ல முடியாது. இருப்பினும் கனடாவின் அனுபவத்தில் இருந்து குறிப்பான சில விடங்களைப் பிறநாட்டினர் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இவற்றுள் 1988 ஆம் ஆண்டின் பன்மைப்பண்பாட்டுச் சட்டம் (Multi-culturalism Act 1988) பிரதானமானது. கியுபெக்கின் இன்டர்கல்சுரலிசம் உட்பட கனடா முழுமைக்குமான பன்மைப் பண்பாட்டுவாதம் கனடாவின் பன்மைத்துவத்தை தழுவி நிற்கிறது. நீண்டகால மரபாக நிலைத்து நிற்கும் சமூகநல அரசு, நடைமுறையில் சமச்சீரற்ற சமஷ்டியை (asymmetrical federalism) ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தல், உயர்நீதிமன்றம் தனிநாடாகப்பிரிந்து போதல் பற்றிக் கூறிய தீர்ப்பில் இருந்து கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் என்பன பன்மைத்துவப் பண்பாட்டை கனடாவில் நிலைபெறச் செய்ய உதவுவன. ஒன்றாகச் சேருதல் (Coming together) அல்லது பிரிந்து வேறாதல் (Coming apart) என்ற இரண்டினையும் உள்ளடக்குவதாக உச்ச நீதிமன்றத்தின் கொள்கை விளக்கம் அமைந்தது. பன்மைத்துவம் பற்றிய பரிசீலனையில் சமஷ்டி அரசு – மாநில அரசு என்ற வகையில் நாம் மதிப்பீடுகளை செய்வதுண்டு. அவ்வாறு செய்வதனால் பெருநகரங்களின் பன்மைத்துவம் பற்றிக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். இதனால் புதிதாக மேற்கிளம்பும் சவால்கள் பலவற்றைக் கவனிக்கத் தவறுகிறோம். குடியேறிகள் பெருநகரங்களில் அளவுக்கு அதிகமாகக் குவிகிறார்கள் என்ற விடயம் கவனிக்கப்படவேண்டும். அத்தோடு பழங்குடி மக்கள் பெருநகரங்களில் செறிந்து வாழ்வது இன்னொரு வகைப் பிரச்சினையாக அமைகிறது. ஐக்கியமும், பன்மைத்துவமும், ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை. கனடா மையத்தை விட்டும் விலகும்போக்கு, மையத்தை நோக்கி நகரும் போக்கு என்ற இரண்டிற்கும் இடையில் சமநிலையை பேணவேண்டும். அதன் மூலம் கனடாவின் நிறுவனங்களிலும் நடைமுறைகளிலும் பன்மைத்துவத்தை ஏற்றக்கொள்ளச் செய்தல் வேண்டும். கனடாவின் நிலைபேற்றுக்கான ஆற்றல்கள் இச் சமநிலையைப் பேணுவதிலேயே தங்கியுள்ளன. பன்மைத்துவத்தின் வெவ்வேறு பரிமாணங்களிற்கு ஏற்ப கொள்கைகளும் வேறுபடும் என்பது எமது ஆய்வில் வெளிப்பட்டது. மொழி, பிரதேசம், பழங்குடிமக்கள், பன்மைப் பண்பாட்டுவாதம் என்ற வெவ்வேறு விடயங்களுக்கு ஏற்ப கொள்கைகளில் வேறுபாடுகள் இருக்கும். மொழி, பிரதேசம் பழங்குடிமக்களிடையான வேறுபாடுகள் என்ற விடயங்களில் சமஷ்டி முறை தான் கனடா வழங்கும் தீர்வு. சமஷ்டி, மாநிலம், உள்ளூர் என்ற மூன்று நிலைகளில் பன்மைப் பண்பாடு பேணப்படவேண்டும். பால்நிலை, வர்க்கம் என்பவனவற்றால் எழும் வேறுபாடுகளுக்கு சமஷ்டி ஒரு தீர்வல்ல, இருப்பினும் இவைகூட கனடா அரசின் சமஷ்டி முறைகள் ஊடாகவே தம்மை வெளிப்படுத்துகின்றன. பன்மைத்துவம் நிலையான ஒன்றல்ல. அதன் தன்மை தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆதலால் எதிர்காலம் பற்றி எதிர்வு கூறுதல் இயலாது, கனடாவின் பன்மைத்துவம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு செய்யப்படுவதாய் இருக்கும். கனடாவிற்கு ஆபத்தானதாகவோ. அச்சுறுத்தலாகவோ இல்லாது அதன் ஐக்கியத்திற்கு ஆதாரமாக பன்மைத்துவம் தொடர்ந்து இருந்து வரும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5954 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (16)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)