Arts
12 நிமிட வாசிப்பு

இந்தியாவின் சமஷ்டி மாதிரி – பகுதி 2

January 22, 2024 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம் : றேக்கா சாக்சன

ஜம்மு காஷ்மீர், நாகலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்கள் தொடர்பான அசமத்துவம், இந்திய சமஷ்டியின் நான்காவது அசமத்துவம் எனலாம் (உறுப்புரை 370, 371 A, 371 G). இவற்றுள் ஜம்மு காஷ்மீர் ஆகக்கூடிய அசமத்துவம் கொண்ட பகுதியாக இருந்து வந்துள்ளது (அண்மையில் ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது – மொ-ர்).

இந்தியாவின் அரசியல் யாப்பின் உறுப்புரை 370 ‘தற்காலிக ஏற்பாடுகள்’ (Temporary Provisions) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பாராளுமன்றத்தில் சட்டவாக்க அதிகாரங்கள் ‘இணக்க சாதனத்தில் குறிப்பிட்ட விடயங்களுடன் பொருந்துவனவாக இருத்தல் வேண்டும்’ (‘Correspond to Matters Specified in the instrument of accession’) என்று குறிப்பிடுகிறது. வேறெந்த விடயமும் ‘மாநில அரசாங்கத்தின் இசைவுடன் கூடியதாக இருத்தல் வேண்டும்’ (With the concurrence of the government of the state) எனவும் குறிப்பிடப்படுகிறது.

இவ்விடத்தில் 1947 ஆம் ஆண்டு பிரித்தானியப் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட இந்திய சுதந்திரச் சட்டத்தின் (Independence of India Act 1947) அரசியல் பின்னணியை நோக்குதல் பொருத்தமானது. இச்சட்டத்தைப் பிரித்தானியப் பாராளுமன்றம் இயற்றியபோது ஜம்மு காஷ்மீர் என்ற முடியாட்சி அரசு பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, சுதந்திர நாடாக இருக்க விரும்பினால் அவ்வாறே செய்யலாம் என்றும், விரும்பினால் இந்தியாவுடனோ பாகிஷ்தானுடனோா இணைந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். முஸ்லீம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட ஜம்மு காஷ்மீரின் அரசராக இந்து சமயத்தவரான ஹரி சிங் (Hindu Maharaja Hari Singh) இருந்தார். மகராஜா ஹரிசிங் தனக்கிருந்த இருதெரிவுகளில், முதலாவது தெரிவான இந்தியாவுடன் இணைவதற்கு விரும்பினார். ஆனால் அவ்வாறு முடிவுசெய்தால் பாகிஷ்தான் இராணுவம் படையெடுத்து ஆக்கிரமிப்புச் செய்யும் என்ற அச்சம் காரணமாக இந்தியாவிடம் இராணுவ உதவி கேட்டார். அப்போது இந்தியாவின் ஆளுநராக மௌன்ட் பேட்டன் பிரபு (Lord Mountbatten) தொடர்ந்து இருந்தார். அவர் இந்தியா அந்நிய நாடு ஒன்றிற்கு தனது படைகளை அனுப்ப முடியாது என அபிப்பிராயம் தெரிவித்தார் (Opined that India could not send its troops to a foreign State). அதன் பின்னர் மகராஜா ஹரிசிங் இந்தியாவின் இராணுவத் தலையீட்டிற்கு வழிதிறக்க வேண்டும் எனக் கருதி இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைக்கும், இணக்கம் எய்தல் சாதனத்தை (Instrument of Accession to India) கையெழுத்திட்டு வழங்கினார். இதன்படி, இந்தியா தனது இராணுவத்தை அனுப்பித் தலையீடு செய்வதற்கு வழி ஏற்படுத்தப்பட்டது. ஆயினும் இந்தியா தனது இராணுவத்தை அனுப்பி ஜம்மு காஷ்மீர் முழுவதையும் கைப்பற்றுவதற்கு முன்பே பாகிஷ்தானின் ஊடுருவல் படைகள் ஒரு பகுதியை ஆக்கிரமித்துவிட்டன. அவ்வேளை ஐக்கிய நாடுகள் தாபனம் (UNO) தலையிட்டு யுத்த நிறுத்தத்தைக் கொண்டுவந்தது.

மேற்குறிப்பிட்ட அரசியல் வரலாற்றுப் பின்புலம், ஜம்மு காஷ்மீர் அரசுக்கு இந்திய ஒன்றியத்தின் அரசியல் யாப்பில் சிறப்பு அந்தஸ்தை (Special Status) வழங்கியமைக்கான காரணத்தை விளக்குவதாக உள்ளது. இணக்கம் எய்தல் சாதனம் கைச்சாத்திடப்பட்ட காலம் முதல் காஷ்மீர் இந்திய ஒன்றியத்துடன் ஒரு மாநிலமாக இணைத்துக்கொள்ளப்பட்டது. 

நாகாலாந்து, மிசோராம்

நாகாலாந்து, மிசோராம் ஆகிய மாநிலங்களிற்கும் மேற்கூறியவை போன்ற விசேட ஏற்பாடுகள் உள்ளன. இந்தியப் பாராளுமன்றத்தால் இயற்றப்படும் நியதிச் சட்டங்கள் சிலவற்றிற்கு நாகாலாந்து, மிசோராம் ஆகிய மாநிலங்களின் இணக்கம் தேவை என உறுப்புரை 371A,E கூறுகிறது. இணக்கம் தேவைப்படும் சட்டங்கள் பின்வருவன.

அ. மிசோ, நாகர் ஆகிய இரு மக்களதும் சமயநடைமுறைகள், சமூக நடைமுறைகள் தொடர்பான சட்டங்கள்.

ஆ. மிசோ, நாகர் மக்களின் வழமைச் சட்டங்கள் அவர்களின் குற்றவியல் நடைமுறை என்பனவற்றோடு தொடர்புடைய சட்டங்கள்.

இ. மிசோ, நாகர் மக்களின் சிவில், குற்றவியல், நீதி, நிர்வாக நடைமுறைகளுடன் தொடர்புடைய சட்டங்கள்.

ஈ. இந்த இரு மாநிலங்களதும் நில வளங்களின் (Land Resources) உடைமை மாற்றம் என்பன தொடர்பான சட்டங்கள்.

Nagaland

நாகலாந்தின் மாநில சட்டசபை 46 இற்குக் குறையாத உறுப்பினர்களையும், மிசோராம் மாநில சட்டசபை 40 இற்குக் குறையாத உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும் என்றும் மேற்குறித்த உறுப்புரையில் குறிப்பிட்டுள்ளது. நாகலாந்து ஆளுநருக்கு உறுப்புரை 371A, விசேட பொறுப்பு ஒன்றையும் குறிப்பிட்டுள்ளது. நாகாலாந்து அமைக்கப்படுவதற்கு முன்னர் நாகமலைகளின் டெங்சாங் பகுதியில் ‘உள்நாட்டுக் குழப்பம்’ நிலவியது. அது தொடர்ந்து கொண்டிருக்கும் வரை சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் விசேட பொறுப்பு அம் மாநிலத்தின் ஆளுநருக்கு உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியாயாதிக்க எல்லைகள்

மத்திய அரசாங்கத்தின் நியாயாதிக்க எல்லைகளையும், மாநில அரசுகளின் நியாயாதிக்க எல்லைகளையும் வகுத்துரைக்கும் மூன்று அட்டவனைகள் அரசியல் யாப்புச் சட்டத்தில் உள்ளன. இவை மூன்றும் முறையே;

அ. ஒன்றியப் பட்டியல் (Union List),

ஆ. மாநிலப் பட்டியல் (State List),

இ. ஒருங்கிணைப்பு பட்டியல் (Concurrent List)

என அழைக்கப்படும். இவ் எல்லை வகுத்தலும் பிரிப்பும்; I. பொருத்தமுடமை (Subsidiarity), II. ஒருங்கிணை தன்மை (Concurrency) என்றும் இரண்டு தத்துவங்களின் படி வகுக்கப்பட்டன. குறிப்பிட்ட ஒரு விடயத்தை எந்த மட்டத்திலுள்ள அரசாங்கம் சிறப்பாகவும், பயனுறுதி வாய்ந்ததாகவும் செய்யக்கூடியதாக உள்ளதோ, அந்த விடயத்தை குறித்த மட்டத்தில் உள்ள அரசாங்கத்திடம் ஒப்படைத்தலை பொருத்தமுடைமை என்ற கருத்து விளக்குவதாக உள்ளது. தெளிவற்றவையாக இருந்த கருகலான விடயங்கள் இருவகை அரசாங்கங்களுக்கும் உரியனவாக ஒதுக்கப்பட்டன. அவை தொடர்பாக முரண்பாடுகள் ஏற்படுமிடத்து மாநிலச் சட்டங்களுக்குப் பதில் மத்திய பாராளுமன்றச் சட்டங்கள் செல்லுபடியாகும். ஒருங்கிணைவு (Concurrence) என்னும் கருத்து இவ்விதமே விளங்கிக்கொள்ளப்படுகிறது.

  • மத்திய அரசாங்கப் பட்டியலில் 97 விடயங்களும் (Items),
  • மாநில அரசாங்கப் பட்டியலில் 66 விடயங்களும்,
  • ஒருங்கிணை பட்டியலில் 47 விடயங்களும்

சேர்த்துக்கொள்ளப்பட்டன. 1950 – 2001 காலப்பகுதியில் 50 ஆண்டுகளில் மாநில அரசாங்கப் பட்டியலில் இருந்து ஒன்றிய அரசாங்கப் பட்டியலுக்கும், ஒருங்கிணை பட்டியலுக்கும் 27 விடயங்கள் மாற்றப்பட்டன. இம் மாற்றங்கள் அரசியல் யாப்பு சட்டத்திருத்தங்கள் மூலம் செய்யப்பட்டன. இத் திருத்தச் சட்டங்களின் விளைவாக மத்திய பட்டியலில் 9, மாநிலப் பட்டியலில் II, ஒருங்கிணை பட்டியலில் 7 என மூன்று பட்டியல்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.

Mizoram

மத்திய பட்டியலில் செய்யப்பட்ட ஒன்பது மாற்றங்களில் 4 மாற்றங்கள் மத்தியின் அதிகாரங்களை விரிவாக்கின. அதன் நிறைவேற்று அதிகாரங்கள் அதிகரித்தன. பண்பாட்டுத்துறை அதிகாரங்களும் விரிவாக்கம் பெற்றன. மாநிலங்களின் அரசுகளைக் கட்டாயப்படுத்தும் பலாத்கார அதிகாரங்களும் (Coercive Powers) அதிகரித்தன. உதாரணமாக 1956 ஆம் ஆண்டின் 6 ஆவது திருத்தம் மத்திய பட்டியலில் ஒரு புதிய வரியைச் சேர்த்தது. இது மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தில் பொருட்களின் கொள்வனவு, விற்பனை தொடர்பான வரி அறவிடுதலை மத்திய அரசு எடுத்துக்கொண்டது தொடர்பானது. 

ஒருங்கிணை பட்டியல் (Concurrent list) ஒரு விடயத்தையேனும் இழக்கவில்லை. அந்தப் பட்டியலின் விடயங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. உதாரணமாக 1976 ஆம் ஆண்டின் 42 ஆவது திருத்தம் நான்கு புதிய விடயங்களை ஒருங்கிணை பட்டியலில் சேர்த்தது.

  1. மாநிலம் ஒன்றின் நீதிநிர்வாகமும் (Administration of Justice) கீழ் நீதிமன்றங்களும்.
  2. வனப் பரிபாலனம்.
  3. கல்வி.
  4. மக்கள் தொகைக் கட்டுப்பாடும் குடும்பத்திட்டமிடலும்.

27 மாற்றங்களில், நேரு ஆட்சிக் காலத்தில் 13 மாற்றங்களும், 14 மாற்றங்கள் இந்திராகாந்தி ஆட்சி, அதற்குப் பிந்திய கூட்டுக்கட்சிகளின் அரசாங்க ஆட்சி என்பனவற்றிலும் நிறைவேற்றப்பட்டன.

அரசியல் யாப்பின் 7 ஆவது அட்டவணை மத்திய பட்டியலிலும் மாநிலப் பட்டியலிலும் வரிவிதிக்கும் அதிகாரங்களைச் சேர்த்துள்ளது. மத்திய அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட வரி மூலங்கள் நெகிழ்திறனுள்ள இறைவரி மூலங்களாகும் (Elastic Sources of Revenue). மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்டவை, இத் தன்மையில்லாதவையாகவும் அபிவிருத்தி விரிவாக்க வேலைகளுடன் தொடர்புடையவையாகவும் இருந்தன. இதனால் வரி வருமானம் அறவிடுதலில் ஒரு சமநிலையின்மை (Imbalance) இருந்துவந்தது. மிகவும் நெகிழ்வுடைய வரி மூலங்களான வருமானவரி (Income Tax), கம்பனி வரி (Corporate Tax), மதுவரி, சுங்கவரி என்பன மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை காணலாம். மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரிமூலங்கள், அவை மேற்கொள்ள வேண்டிய பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான பாரிய செலவுகளை ஈடுசெய்வதற்குப் போதியதாக இல்லை.

மத்திய பட்டியலில் உள்ள சில வரிகளின் வருமானம், பகுதியளவிலோ முழுமையாகவோ மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. மாநிலங்களின் தொழிற்பாடுகளுக்கும், அவற்றிற்கான வளங்களுக்குமிடையே காணப்படும் சமநிலையின்மையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.

உறுப்புரை 375, பொறுப்பாணை சார் மத்திய கொடைகளை (Mandatory Central Grants-In Aids) மாநிலங்களுக்கு வழங்கும் ஏற்பாட்டைக் கொண்டுள்ளது. இக் கொடைகள் நிதி ஆணைக்குழுவின் (Finance Commission) சிபாரிசின்படி மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. இவ் விடயங்கள் தொடர்பாக திட்டமிடல் ஆணைக்குழு (Planning Commission) இயங்கிவருகிறது. இவ் ஆணைக்குழு 1950 ஆண்டு நியதிச்சட்டத்தினால் நிறுவப்பட்டது.

முடிவுரை

இந்தியாவின் விசேட தேவைகளையும் பிரச்சினைகளையும் கருத்திற்கொண்டு இந்திய அரசியல் யாப்புச் சட்டம் வரையப்பட்டது என்பதை மேற்கூறியவற்றால் தெரிந்துகொள்ள முடிகிறது. அது அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக செயற்பட்டுள்ளது. இக் காலத்தில் அது பெரும்பிரச்சினைகளை எதிர்நோக்கவில்லை. இந்தியக் குடியரசின் மாறிவரும் தேவைகளுக்கும் மட்டுப்பாடுகளுக்கும் ஏற்ப அரசியல் யாப்பு நெகிழ்ந்து கொடுத்தது. அது உறுதியுடையதாகவும் இருந்து வந்துள்ளது.

ஒருகட்சி ஆதிக்கம் செலுத்திய (காங்கிரஸ் காலம்) முதற்கட்டத்தில் மத்திய பாராளுமன்றம் அதிகாரம் மிக்கதாக விளங்கியது. அப்போது அது ஒற்றையாட்சியின் தன்மைகள் கூடிய அளவில் காணப்பட்ட சமஷ்டி அமைப்பாக விளங்கியது. 1989 இற்குப் பின்னர் இந்திய அரசியல் முறை கூட்டாட்சித் தன்மை உடையதாக ஆகியுள்ளது. இம் மாற்றத்திற்கு பலகட்சி முறையும் (Multi – Party System) பலகட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்கும் கூட்டரசாங்கங்களும் (Coalition Governments) உதவின. நாட்டின் நீதித்துறையும் கூட்டாட்சிச் சார்பான தீர்ப்புகளை வழங்கியது. 1991 இற்குப் பின்னர் நவதாராளவாதக் கொள்கைகள் (Neo – Liberal Economic Policy) பல சீர்திருத்தங்களைப் புகுத்தியது. இவை அரசாங்கத்தின் பொருளாதார ஆதிக்கத்தை தளர்த்தியதோடு அரச உடமையாக இருந்த தொழிலிலும் வர்த்தகமும் முக்கியத்துவம் இழந்து தனியார் துறை வேகமாக வளரவும் உதவியது. இக் காலத்தில் பொருளாதார முன்னேற்றம் காரணமாக மாநில அரசுகளின் சுயத்துவம் (Autonomy) அதிகரித்தது. மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்கியதால் பிராந்தியங்களின் பன்மைத்துவமும் அடையாளமும் முக்கியத்துவம் பெற்றன. இதன் பயனாக மாநிலங்களின் முக்கியத்துவமும் பலமும் அதிகரித்தன. மாநிலங்களுக்கிடையிலான சமச்சீரின்மை அல்லது அசமத்துவமும் அதிகரித்தது. பன்மைத்துவத்திற்கு இடமளிக்கும் வகையில் அரசியல் யாப்பின் அசமத்துவ ஏற்பாடுகள் (Asymmetrical Provisions) இயைந்து கொடுத்தன. இம் மாற்றங்களின் விளைவாக இந்திய அரசியலின் சமூக உளவியல் அடிப்படைகள் பெரும்மாற்றத்திற்கு உட்பட்டன.

இந்தியச் சமஷ்டி மாதிரி நாட்டின் ஐக்கியத்தையும் அதன் பன்மைத்துவத்தையும் பாதுகாத்துப் பேணுவதாக அமைந்துள்ளது.

றேக்கா சாக்சன 

Rekha Sakshana

டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையின் பேராசிரியராகப் பணிபுரியும் கலாநிதி றேக்கா சாக்சன அவர்கள் சமஷ்டி (Federalism) பற்றிய துறையில் நிபுணத்துவம் பெற்ற புலமையாளர். பல நூல்களின் ஆசிரியர். பருவ இதழ்களில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வருபவர். கனடா நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் அமைந்துள்ள ‘சமஷ்டி ஆட்சி நாடுகள் மன்றம்’ (Forum of Federations) என்ற அமைப்பின் ஆலோசகராகக் கடமையாற்றி வருபவர். 2004 ஆம் ஆண்டில் ‘மாற்றுக் கொள்கைக்கான நிலையம்’ (Centre for Policy Alternatives) மற்றும் ‘சமஷ்டி ஆட்சி நாடுகளின் மன்றம்’ என்பன இணைந்து வழங்கிய ‘The Federal Idea’ என்னும் கட்டுரை தொகுப்பில் இடம் பெற்ற ‘The Indian Model of Federalism’ என்ற தலைப்பிலான இவரது கட்டுரையின் தழுவலாக்கமாக இக் கட்டுரை அமைந்துள்ளது.

varieties of federal governments
றேக்கா சாக்சன அவர்களால் பதிப்பிக்கப்பட்ட நூல்

குறிப்பு

கருத்துச் செறிவுடைய கூட்டுவாக்கியங்களாக அமைந்த ஆங்கில மொழிநடையில் எழுதப்பட்ட இக் கட்டுரை, இலகுபடுத்திய தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. நேரடி மொழிபெயர்ப்பாக அல்லாமல் தழுவலாக்கமாக அமைந்துள்ளது.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4550 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)