Arts
17 நிமிட வாசிப்பு

சுவிற்சர்லாந்தின் சமஷ்டி முறை – பகுதி 1

December 1, 2023 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம் : யொகான் பொய்றியர் (JOHANNE POIRIER)

அறிமுகம்

நாற் புறமும் தரைப் பகுதியாற் சூழப்பட்ட நாடாக விளங்கும் சுவிற்சர்லாந்து, ஐரோப்பாவின் இருதயம் போன்று அமைந்துள்ளது. உலகின் சமஷ்டி முறைகளில் சுவிற்சர்லாந்து சமஷ்டி முறையே அதி பழமை வாய்ந்தது. இற்றைக்கு 170 ஆண்டுகளுக்கு முன் சுவிற்சர்லாந்து சமஷ்டி முறை அரசியல் யாப்பைத் தழுவிக் கொண்டது. இந்த நீண்ட வரலாற்றில் அதன் அரசியல் யாப்பில் பலதடவைகள் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 1999 ஆம் ஆண்டும் அதற்கு முன்பு ஒரு தடவையும், இருந்துவரும் அரசியல் யாப்பை நீக்கிவிட்டுப் புதிதான அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்டது. ஆயினும் சுவிற்சர்லாந்தின் நிறுவனக் கட்டமைப்புகள் சமஷ்டி முறையைப் பலப்படுத்துவனவாக அமைந்தன. அதன் உறுப்புப் பிராந்தியங்களான 26 கன்டன்களும் (CANTONS) சுயாட்சியுடையனவாய் இருந்தன. சுவிற்சர்லாந்தின் சமஷ்டி அமைப்பில் புரட்டஸ்தாந்தியம், கத்தோலிக்கம் எனும் இரு பிரதான சமயப் பிரிவினர்களும் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருவதோடு ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலியன், றொமான்ஸ் எனப்படும் நான்கு மொழிப்பிரிவினரும் இணக்கமாக இருந்து வருகின்றனர்.

swiss map

சுவிற்சர்லாந்து சமயம், பண்பாடு, மொழி ஆகியவற்றால் வேறுபாடுகள் உடைய மக்கள் வாழும் பண்பாட்டுப் பல்வகைமை கொண்ட தேசமாகும். இப் பல்வகைமையை, அத் தேசத்து மக்களும் தலைவர்களும் பெறுமதிமிக்க ஒரு பாரம்பரியச் சொத்தாகவே கருதிவருகின்றனர். பல்வகைமையை ஒரு பிரச்சினையாக, நிர்வகிப்பதற்கு கஷ்டமான விடயமாக அம் மக்களும் தலைவர்களும் கருதியதில்லை. 1999 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் முகப்பு வாசகம் ‘சுவிற்சர்லாந்து மக்களாகிய நாமும் கன்டன்களும் பன்மைத்துவத்தில் ஐக்கியத்தைப் பேணி, ஒருவரை ஒருவர் மதித்து ஒன்றாக வாழும் உறுதியுடையவர்களாக உள்ளோம்’ எனக் கூறியிருப்பதற்கு அமைய அது ஒற்றுமையுடைய நாடாக விளங்குகிறது. சுவிஸ் மக்களுக்கு பன்மைத்துவ அடையாளங்கள் (Multiple Identities) உள்ளன. அவர்கள் தாம் வாழும் நகரம் எதுவோ அதன்மீது பற்றுதல் உடையவர்களாக இருக்கின்றனர். நகரத்துக்கு அடுத்தநிலையில் கன்டன்கள் மீது தம் அடையாள உணர்வை வலுப்படுத்தியவர்களாக இருக்கின்றனர். இவ்வாறான பன்மைத்துவ அடையாளங்கள் யாவற்றையும் மேவிநிற்கும் முழுமையுடைய ‘சுவிற்சர்லாந்து’ என்னும் அடையாளம் அம்மக்களை அரசியல் ரீதியில் ஐக்கியப்பட்டவர்களாக (Politically unified) ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழ வழிசெய்துள்ளது. சுவிற்சர்லாந்து ‘ஒரு நேஷன் ஸ்டேட்’ (Nation State) என்ற வரையறைக்குள் அடங்காத ‘Non-Nation-State’ என்பது கவனிப்புக்குரிய விடயமாகும். அது ‘பல்தேசியக் கூட்டிணைவு’ (Multinational Federation) என்னும் சிறப்பியல்பை கொண்டதொரு நாடாக விளங்குகிறது.

சுவிஸ் நாட்டின் அரசியல் வாழ்க்கையில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் அமைதியும் உறுதிநிலையும் (Peace and Stability) இருந்து வந்துள்ளன. அந் நாட்டின் அரசியல் நிறுவனங்களில் காணப்படும் சமநிலைத் தன்மை, கன்டன்களின் சுயாட்சியை (Autonomy) உறுதி செய்வதாய் உள்ளது. அங்கு இரு வகையான அரசியல் நிறுவனங்கள் உள்ளன. ஒருவகை நிறுவனங்கள் சுய ஆட்சியை (Self Rule) உறுதி செய்வன; இன்னொரு வகை நிறுவனங்கள் கன்டன்களுக்கு பகிரப்பட்ட (Shared rule) ஆட்சியை வழங்குகின்றன. இவை இரண்டினதும் இணக்கமான சமநிலை, கன்டன்களின் சுயாதீனமான செயற்பாட்டிற்கு உதவுவதாய் உள்ளன. கன்டன்களை சமஷ்டியில் ஒன்றிணைக்கவும், சமஷ்டி அரசால் ஆக்கப்படும் சட்டங்கள் சிறந்த முறையில் நிறைவேற்றப்படுவதற்கும் இவை உதவுகின்றன. சுவிற்சர்லாந்து சமஷ்டி முறையின் சிறப்பியல்புகளை விபரிக்கும் இக் கட்டுரையில் பின்வரும் விடயங்கள் ஆராயப்படவுள்ளன.

  1. சமஷ்டியின் சுருக்க வரலாறும் அதன் பண்பாட்டுப் பன்மைத்துவமும், சனத்தொகைக் கட்டமைப்பில் வெளிப்படும் பன்மைத்துவமும் முதலில் விளக்கப்படும்.
  2. சுவிற்சர்லாந்தின் சமஷ்டி முறையின் பிரதான இயல்புகளான பகிரப்பட்ட ஆட்சி (Shared rule), சுய ஆட்சி (Self rule) என்பனவற்றை உறுதிசெய்யும் நிறுவனங்களின் யாப்பியல் ஒழுங்கமைவு (Constitutional Design) அடுத்ததாக எடுத்துக்கூறப்படும்.
  3. மூன்றாவதாக நேரடி ஜனநாயகம் (Direct Democracy) செயற்படும் முறையும் அதன் தாக்கமும் விளக்கப்படும்.
  4. நான்காவதாக சுவிற்சர்லாந்தின் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் எடுத்துரைக்கப்படும்.
  5. இறுதியாக சுவிற்சர்லாந்து சமஷ்டி என்னும் இயந்திரத்தை இலகுவாக ஓடச்செய்வதற்கு உதவும் ‘விட்டுக்கொடுத்தலும் கூட்டுறவும்’ (Compromise and co-operation) என்னும் அரசியல் பண்பாடு பற்றிக் கூறப்படும்.

சுவிஸ் சமஷ்டியின் சுருக்க வரலாறு

இன்று சுவிஸ் நாட்டின் நிலப்பரப்பாக அமைந்திருக்கும் பகுதி பல நூற்றாண்டுக் காலமாக சுதந்திரமான சிறிய அரசுகள் பலவற்றைக் கொண்டிருந்தது. இச் சுதந்திரமான சிறிய அரசுகளில் சில 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல்வேறு வகையான கூட்டாட்சி அமைப்புக்களை ஏற்படுத்திக்கொண்டன. இவ்வாறு ஒன்று சேர்ந்த அமைப்புகளை உருவாக்கியதன் பிரதான நோக்கம் அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து தம்மை பாதுகாப்பதாகும். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சுவிற்சர்லாந்தின் கன்டன்களுக்கிடையே சமயப் பிரிவினையின் அடிப்படையிலான குறுங்காலச் சிவில் யுத்தம் இடம்பெற்றது. கத்தோலிக்க கன்டன்கள் சில இரகசிய கூட்டு ஒன்றை அமைத்து, கிறிஸ்தவக் கன்டன்களுடன் போரைத் தொடங்கின. அக் காலகட்டத்தில் கிறிஸ்தவக் கன்டன்கள் ஜனநாயக வழியைப் பின்பற்றும் விருப்புடையனவாகவும், முற்போக்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் இருந்தன. இதற்கு மாறாகக் கத்தோலிக்க கன்டன்கள் பிற்போக்கு கொள்கைகளை உடையனவாய் இருந்தன. குறுங்காலச் சிவில் யுத்தம் முடிவடைந்து அமைதி ஏற்பட்ட போது, சமஷ்டி அமைப்பை உருவாக்கி, சமஷ்டியில் உறுப்பு அலகுகளாக அமைந்த கன்டன்களுக்கு கூடியளவு சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. ஆயினும் முன்னைய கூட்டாட்சி அமைப்புக்களை விட ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்குரிய கூட்டு நிறுவனங்கள் (Joint institutions) பலப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டது. சுவிற்சர்லாந்தின் சமஷ்டி அமைப்பின் உருவாக்கம் ‘ஒருங்கிணைதல்’ (Integration) என்ற செயல்முறை மூலம் உருவானது. பெல்ஜியம் சமஷ்டி, இதற்கு நேர்எதிரான செயல்முறையான ‘பிரிந்துசெல்லுதல்’ (Dissociation) என்ற செயல்முறை மூலம் உருவானது என்பதை ஒப்பீட்டுமுறையில் புரிந்துகொள்ளலாம்.

cantons of Swiss

சமூக – சனத்தொகைப் பன்மைத்துவம்

சுவிற்சர்லாந்து நாட்டின் சமூக – சனத்தொகைப் பன்மைத்துவம் (Socio – Demographic – Diversity) கவனத்திற்குரிய ஓர் பண்புக்கூறாகும். 7 மில்லியன் சனத்தொகையைக்கொண்ட அந்நாட்டில் 41,300 சதுரகிலோமீற்றர் பரப்பளவில் மக்கள் பரவி வாழ்ந்து வருகின்றனர். 

இம் மக்களில்,

  • 64% மக்கள் ஜேர்மன் மொழிபேசுவோர்
  • 20% மக்கள் பிரஞ்சு மொழிபேசுவோர்
  • 6.5% இத்தாலியன் மொழிபேசுவோர்
  • 0.5% றொமான்ஷ் (Romansch) மொழிபேசுவோர்

அத்தோடு மிகச் சிறுதொகையினரான மக்கள் வேறு பல மொழிகளைப் பேசுவோராக இருக்கின்றனர்.

ஜேர்மன், பிரஞ்சு, இத்தாலியன் ஆகிய மூன்று மொழிகளும் சுவிஷ் சமஷ்டியின் உத்தியோக மொழிகளாகும் (Official Languages) றொமான்ஷ் மொழி தேசியமொழி (National Language) என்னும் அந்தஸ்துடையதாக விளங்குகிறது. ‘தேசியமொழி’ அந்தஸ்துடைய றொமான்ஷ் மொழி ஏனைய மூன்று மொழிகளைப் போன்று உத்தியோக மொழி அந்தஸ்தைப் பெறாதபோதும், அரசியல் யாப்பினால் பாதுகாக்கப்பட்ட மொழியாக விளங்குகிறது.

மேற்குறித்த புள்ளிவிபரங்கள் சுவிற்சர்லாந்தின் பன்மைத்துவத்தை தெளிவுற எடுத்துக்காட்டுவன. இத்தகைய பன்மைத்துவமுடைய மக்கள்தொகை 23 கன்டன்களிலும் 3 ‘அரைக் கன்டன்களிலும்’ (Half Cantons) பிரிபட்டுள்ளது.

இவற்றுள்,

  • 17 கன்டன்கள் ஜேர்மன் மொழிபேசுவோரைப் பெரும்பான்மையினராகக் கொண்டவை (80% மக்கள் ஜேர்மன் மொழிபேசுவோர்).
  • 4 கன்டன்கள் பிரஞ்சு மொழிபேசுவோர் பகுதிகளாக உள்ளன. இவை ஒருமொழி பேசுவோர் (Unilingual) கன்டன்களாகும்.
  • 1 கன்டன் இத்தாலியன் மொழிபேசுவோரைக் கொண்டதாய் ஒருமொழி பேசுவோர் வகையினதாக உள்ளது.
  • 3 கன்டன்கள் இருமொழி பேசுவோர் (Bilingual) கன்டன்களாக உள்ளன. இக் கன்டன்களில் ஜேர்மன், பிரஞ்சு ஆகிய இருமொழிகளைப் பேசுவோர் வாழ்கின்றனர்.
  • 1 கன்டன் மும்மொழி பேசுவோர் (Trilingual) கன்டன் ஆக விளங்குகிறது. ‘Graubunden’ என்ற பெயருடைய இக் கன்டனில் யேர்மன், இத்தாலியன், றொமான்ஷ் ஆகிய மொழிகளைப் பேசுவோர் வாழ்கின்றனர்.

14 கன்டன்களில் கத்தோலிக்கர் பெரும்பான்மையினராக உள்ளனர். மீதி 12 கன்டன்களில் புரட்டஸ்தாந்தியர் பெரும்பான்மையாக உள்ளனர்.

மொழிப் பிரிவுகளுக்கும், சமயப் பிரிவுகளுக்குமிடையில் நேரடியான மேற்கவிகை (Direct overlap) இல்லை. ஜேர்மன் மொழியைப் பேசுவோரைப் பெரும்பான்மையினராகக் கொண்ட கன்டன்களில் பெரும்பான்மையோர் கத்தோலிக்கர்களாக உள்ளனர். இவ்வாறே பிரஞ்சு மொழிபேசுவோர் பெரும்பான்மையினராக வாழும் கன்டன்களில் பெரும்பான்மையினர் புரட்டஸ்தாந்தியராக உள்ளனர். மேலே குறிப்பிட்டவாறு சில கன்டன்கள் இருமொழி பேசுவோரைக் கொண்டவை. ஒரு கன்டன் மும்மொழி பேசுவோரைக் கொண்டதாக உள்ளது. சுவிற்சர்லாந்தில் சமய/மொழிப் பிரிவுகள் ஒன்றையொன்று ஊடுருவிப் பிளவுகளை ஆழப்படுத்துவனவாக இல்லை என்பது கவனிப்புக்குரிய முக்கிய விடயமாகும்.

languages in Swiss

சுவிற்சர்லாந்தின் நிலவரை 26 வரையான கன்டன்கள் என்ற சிறு அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இக் கன்டன்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான இயல்புகளை உடையவை என்பதையும் காணலாம். இப் பண்பு காரணமாக கன்டன்கள் தமக்கிடையே தனித்தனி விடயங்கள் சார்ந்த கூட்டுக்களை ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. இவ்வாறு பல்வேறு கூட்டுகள் செயற்படுவதால் அரசியல் முரண்பாடுகள் தீவிரம் பெறுவது தவிர்க்கப்படுகிறது. நாடு இரு எதிர் எதிர் பிரிவுகளாகப் பிரிந்து நின்று அரசியல் மோதலில் ஈடுபடும் ‘Bi-Polarisation’ (இரு துருவமயமாதல்) நிலை சுவிற்சர்லாந்தில் மிக அண்மைக்காலம் வரை ஏற்படவில்லை. ஆனால் பெல்ஜியம் நாட்டில் ‘Flemish’ எனப்படும் டச்சு மொழிபேசுவோரும் பிரஞ்சு மொழிபேசும் ‘Francophones’ மக்களும் இருவேறு முகாம்களாக பிரிந்து முரண்பட்டுக் கொள்ளும் நிலை இருந்துவருகிறது. ஒரு பகுதியினர் எப்போதும் தோற்றுப் போகிறவர்களாகவும், இன்னொரு பகுதியினர் எப்போதும் வெற்றியாளர்களாகவும் ஆகும்நிலை சுவிற்சர்லாந்தில் இல்லை. சுவிற்சர்லாந்தின் ஒவ்வொரு கன்டனிலும் சிறுபான்மையினர் என்ற வகையினர் வாழ்ந்து வருகின்றனர். இது ஓரிடத்தில் மொழிச் சிறுபான்மையாக இருக்கலாம்; இன்னோர் இடத்தில் சமயச் சிறுபான்மையாக இருக்கலாம் ஆயினும் முழுநாடும் இரு முகாம்களாகப் பிளவுபடும் நிலை அந்நாட்டில் இல்லை. சுவிஸ் நாட்டின் சனத்தொகைப் பரவலில் காணப்படும் இயல்பு ஒன்றினைப் பற்றி இங்கு குறிப்பிடுதல் அவசியமானது. சூரிச் (Zurich) என்ற கன்டனில் நாட்டின் மொத்த சனத்தொகையின் 17% வீதத்தினர் வாழ்கின்றனர். அப்பென்சல் (Appensel) என்ற இன்னொரு கன்டனில் மொத்த சனத்தொகையின் 0.02% மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். கன்டன்களிடையே மக்கள் தொகைப் பரவலில் சமத்துவமின்மை இருந்துவருகிறது. ஆயினும் சமஷ்டி அலகுகள் என்றவகையில் கன்டன்கள் யாவும் சமத்துவமுடையனவாக உள்ளன. சனத்தொகையில் குறைந்த ஒரு பகுதி என்ற காரணத்திற்காக ஒரு கன்டன் பாரபட்சமாக நடத்தப்படுவதில்லை. கன்டன்களிடையே சமத்துவத்தைப் பேணுவதற்குரிய நிறுவன அமைப்புகள் பற்றி நாம் அடுத்து விபரித்துக் கூறவுள்ளோம்.

சுவிற்சர்லாந்துச் சமஷ்டியின் நிறுவன ஒழுங்கமைப்பு

சுவிற்சர்லாந்து என்னும் நாடு ‘Confederation’ என்ற கூட்டிணைவு மூலம் தோற்றம் பெற்றது. இக் காரணத்தால் அந் நாட்டில் வளர்ச்சி பெற்ற சமஷ்டி முறைமை (Federal System) அந் நாட்டின் கூட்டிணைவு வரலாற்றினதும் மரபினதும் செல்வாக்குக்கு உட்பட்டதாக இருந்துவந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கன்டன்கள் ‘கொன்படரேசன்’ என்னும் கூட்டிணைவில் ஒன்றிணையும் போது அவை தமது சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கவில்லை. இவ் வரலாற்றுப் பின்புலமும் மரபும் (History and Tradition) 1999 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பில் வெளிப்படையாகப் பதிவிடப்பட்டிருப்பதை காண்கிறோம். அவ்வாண்டின் அரசியல் யாப்பின் உறுப்புரை 3, ‘கன்டன்கள் இறைமையுடையவை’ (Cantons are Sovereign) என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்படுவதன் மூலம் கன்டன்களின் இறைமை அரசியல் யாப்பினால் மட்டுப்படுத்தப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதனைவிட 1999 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் உறுப்புரை 47 ‘Confederation Respects the cantons independence’ எனவும் குறிப்பிடப்படுகிறது. இவ்வாக்கியத்தின் பொருள் ‘சுவிஷ் நாட்டின் சமஷ்டி அரசாங்கம் (Confederation) கன்டன்களின் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கிறது’ என்பதாகும். கன்டன்களின் சுயாதீனத்தை (Autonomy) மத்தியஅரசு (Federal Government) மதிக்கிறது; கன்டன்களின் சுயாதீனம் சுவிற்சர்லாந்து அரசியல் நடைமுறையின் அடிப்படைக்கூறு என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

சுவிஸ் சமஷ்டியில் 26 அலகுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு சட்டவாக்க சபையும், நிறைவேற்றுச் சபையும் (Executive) உள்ளன. அத்தோடு ஒவ்வொரு அலகிலும் ஜனநாயக நிறுவனங்களும் உள்ளன. இவ்வாறு சுய ஆட்சிக்கும் பகிரப்பட்ட ஆட்சிக்கும் இடையிலான சமநிலை பேணப்படுவதால் நாட்டில் உறுதிப்பாடு நிலவிவருவதைக் காணலாம்.

தகுதிகளின் பங்கீடு

சுவிற்சர்லாந்தின் சமஷ்டி அலகுகள் பல தகுதிகளைக் (Competencies) கொண்டுள்ளன. இத் தகுதிகள் பற்றி அரசியல் யாப்பு குறிப்பிடுகிறது. 1999 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் ‘Subsidiarity’ என்னும் தத்துவம் பொதிந்துள்ளது. (ஒரு கூட்டில் இணைந்திருக்கும் தனித்தனி அலகுகளுக்குத் தம்மைப் பாதிக்கும் விடயங்கள் பற்றித் தாமே முடிவுசெய்யும் சுதந்திரம் உள்ளது. அவற்றுக்கான முடிவுகளை அலகுகள் யாவும் சேர்ந்த முழுமை (The whole), முடிவு செய்யவேண்டியதில்லை என்ற கருத்தை உடையது.) ‘சப்சிடியாரிற்றி’ என்னும் இக் கருத்தை விட, மீதி அதிகாரங்கள் (Residual Powers) என்னும் கருத்து சமஷ்டி அலகுகளின் சுயாதீனத்திற்கு வலுச்சேர்ப்பதாக உள்ளது. நாடு முழுமைக்கும் ஒரே சீரான நடைமுறைகள் (Uniform Action) தேவைப்படும் விடயங்கள் எவையோ அவை மட்டும் மத்திய அரசால் கையாளப்படும். அவை தவிர்ந்த மீதி அதிகாரங்கள் சமஷ்டியின் அலகுகளுக்கு உரியவை என்பதே இதன் பொருள். அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இத் தத்துவங்கள் சுவிஸ் நாட்டின் கன்டன்களுக்கு சுயாதீனமாகச் செயற்படும் தகுதிகளை (Competencies) வழங்கியுள்ளன. இதைவிட கன்டன்கள் தமக்குரிய தகுதிகளை தடையற்ற முறையில் அனுபவிப்பதற்கு இன்னொரு பாதுகாப்பும் உள்ளது. கன்டன்களுக்குரிய ஒரு குறிப்பிட்ட தகுதியை அல்லது தகுதிகளை அவற்றிடமிருந்து மத்திய அரசுக்கு மாற்றுவதாயின், அதற்கு சுவிஷ் நாட்டின் முழு வாக்காளர்களதும் சம்மதத்தை பெறுதல் வேண்டும். பெரும்பான்மையான கன்டன்களின் சம்மதத்தை பொதுசன வாக்கெடுப்பு (Referendum) மூலம் பெறவேண்டும். சுவிஸ் மக்கள் உள்ளூர் மட்டத்தில் (Local Level) அதிகாரம் இருத்தல் வேண்டும் என்பதில் அதீதபற்றுறுதி உடையவர்களாய் இருப்பதனால், மேற்குறித்த பொதுசன வாக்கெடுப்புப் போன்ற நேரடி ஜனநாயகச் செயல்முறைகள் (Process of direct democracy) அதிகாரங்களை மத்தியில் குவித்தல் என்னும் அரசியல் யாப்புச் செயற்பாட்டினை தடுத்து நிறுத்துவனவாய் உள்ளன. இவ்வாறாக மத்திய நிறுவனங்களின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டு கன்டன்களின் சுயாதீனம் பேணப்படுகின்றது.

அரசிறை வருவாய் பற்றிய அதிகாரமும் கூட்டுறவும்

மேற்குறித்தவாறான விரிந்த அதிகாரங்களைக் கன்டன்கள் பிரயோகிப்பதற்கு ஏற்றவிதமாக கன்டன்களுக்கு அரசிறை வருவாய்ச் சுதந்திரம் (Fiscal Autonomy) வழங்கப்பட்டுள்ளது. கன்டன்கள் சுதந்திரமாக வரி அறவிடும் அதிகாரத்தை உடையன; பொதுநிதியை அவை மத்திய அதிகாரக் கட்டுப்பாடுகள் இல்லாது செலவு செய்யும் அதிகாரத்தை கொண்டுள்ளன. இதனால் அந்நாட்டில் மத்திய அரசின் வரி அறவிடும் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு தனியார் வருமானம் மீது 11.5% வரியை அறவிடலாம். சுவிஸ்நாட்டின் மத்திய அரசு, கன்டன்கள், முனிசிப்பல் சபைகள் என்ற மூன்று அமைப்புகளும் நிதிவருவாயின் முழுத்தொகையின் மூன்றில் ஒருபங்கை பெறுகின்றன. இதற்கமைய அவை ஒவ்வொன்றும் பொதுநிதியின் மூன்றில் ஒரு பங்கிற்கு பொறுப்புடையனவாய் உள்ளன.

அரசிறை வருமானத்தை மறுபங்கீடு செய்வதன் மூலம் கன்டன்களிடையே சமத்துவத்தை பேணும் நடைமுறைகளை சுவிஸ் அரசியல் யாப்பு விதித்துள்ளது. மத்திய அரசு வரிவருமானத்தை கன்டன்களுக்கு பங்கிட்டுக்கொடுத்தல் ஒருமுறை. இது செங்குத்து முறைச் சமப்படுத்தல் (Vertical equalisation) ஆகும். இன்னொரு முறை, கன்டன்கள் தமக்கிடையே பங்கீடு செய்துகொள்ளுதல். இது கிடைப்பக்க முறைச் சமப்படுத்தல் (Horizontal Equalisation) ஆகும். அரசியல் யாப்பு, கிடைப்பக்க சமப்படுத்தலை ஊக்குவிக்கும் ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. ஆனால் கிடைப்பக்கச் சமப்படுத்தல் கட்டாயமானது அன்று; கன்டன்களின் விருப்பப்படி செய்யப்படுவது.

சுவிஸ் அரசியல் யாப்பின் முகப்பு வாசகம் (Preamble) கூட்டுறவான செயற்பாடுகளை கடப்பாடுகளாகக் குறிப்பிடுகிறது. வாழ்க்கை வசதிகள் குறைந்தளவில் பெறுபவர்களான பலவீனமான மக்கள் பிரிவினருக்கு உதவும் கடப்பாடு பற்றி முகப்பு வாசகம் பின்வருமாறு கூறுகிறது. ‘ஒரு மக்கள் குழுமத்தின் பலம் அதன் மிகவும் பலமற்ற உறுப்பினர்களின் வாழ்க்கையின் நலன்கள் கொண்டே மதிப்பிடப்படுகிறது என்பதை சுவிஸ் மக்களாகிய நாம் அறிவோம், கன்டன்களும் அறிந்துவைத்திருக்கின்றன’ (We the Swiss people and the cantons know that the strength of a people is measured by the welfare of the weakest of its members). குறித்த வாசகம் சுவிஸ் மக்கள் அனைவரும் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும், சமூகப் பாதுகாப்பு, சமூகநலச் சேவைகள் யாவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துடையதல்ல. இச் சேவைகள் இடத்துக்கிடம் வேறுபடலாம். ஒரு கன்டனுக்கும் இன்னொரு கன்டனுக்கும் பெரிய வேறுபாடு இருக்கலாம். வளங்களை மீள்பங்கீடு செய்ய வேண்டும் என்பதற்கான இந்த அழைப்பு, பிரஜைகள் ஒத்த சேவைகளை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தை உடையது. சமஷ்டிக் கூட்டமைப்புக்கள் நிறுவப்பட்ட பின்னரே சுவிற்சர்லாந்தில் சமூக நல அரசு விருத்தியடைந்தது. நடத்தப்படும் விதத்தில் உள்ள வித்தியாசங்கள் தொடக்கத்திலிருந்தே இருந்துவந்தன. சுவிற்சர்லாந்தின் நிலைக்கு மாறாக, வேறு சில சமஷ்டி நாடுகளில், சமூகநல அரசு தோன்றிய பின்னர் சமஷ்டி நிறுவப்பட்டது. அத்தகைய பின்னணியில் வித்தியாசமாக நடத்தப்படுதல் பிரஜைகளின் சமத்துவம் என்ற தத்துவத்தை மீறுவதாகக் கருதப்படலாம் (பெல்ஜியம் இதற்கு ஓர் உதாரணமாகும்).

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5850 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)