Arts
16 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகம் – 2

March 11, 2024 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

இந்தத் தொடரின் சென்ற கட்டுரையில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்தக் கட்டுரையில் மேற்படி நிலப்படத்தில் வேறு சில அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

கோட்டைகளும் நகரங்களும்

இந்த நிலப்படத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் யாழ்ப்பாணக் கோட்டை, ஆனையிறவுக் கோட்டை, பெஸ்ச்சூட்டர் கோட்டை, பைல் கோட்டை என்பவற்றையும்; தீவுப் பகுதியில் ஊர்காவற்றுறைக் கடற் கோட்டையையும்; தலை நிலத்தில் பூநகரிக் கோட்டையையும்; மன்னார்த்தீவில் மன்னார்க் கோட்டையையும் குறித்துள்ளனர். ஆனால், தூர்சியின் நிலப்படத்தில் காட்டிய அரிப்புக் கோட்டையை இந்நிலப்படம் காட்டவில்லை. இது தவறுதலாக விடப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. 

யாழ்ப்பாணக் கோட்டை, மன்னார்க் கோட்டை ஆகியவற்றுக்கு அருகில் அமைந்திருந்த, ஒழுங்கான வலைப்பின்னல் வடிவிலான பழைய நகரங்களையும் நிலப்படம் குறியீட்டு வடிவில் காட்டுகிறது. யாழ்ப்பாணக் கட்டளையகத்தின் முக்கியமான இவ்விரு நகரங்களும் போர்த்துக்கேயரால் தோற்றுவிக்கப்பட்டு ஒல்லாந்தரால் மேம்படுத்தப்பட்டவை. நிலப்படத்தில் இந்நகரங்களைக் குறியீடுபோலவே காட்டியிருந்தாலும், யாழ்ப்பாண நகருக்கான குறியீட்டை நுணுக்கமாகப் பார்த்தால், பிற்கால நிலப்படங்களிலுள்ள அந்நகரின் அமைப்பும் குறியீடு காட்டும் அமைப்பும் ஒத்திருப்பதை அறியலாம்.  18 ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளிலேயே யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய நகரங்கள் ஒழுங்கான வலையமைப்பு வடிவத்தைப் பெற்றுவிட்டன என்பதை இந்நிலப்படத்திலிருந்து அறியமுடிகிறது. 

தேவாலயங்கள்

ஒல்லாந்தர்காலத் தொடக்கத்தில் யாழ்ப்பாணக் கட்டளையகத்தில் கிறிஸ்தவ மதம் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகப் பணியாற்றியவர் போல்டேயஸ் பாதிரியார். இவர் பிற்காலத்தில் தான் எழுதிய நூலில் யாழ்ப்பாணக் கட்டளையகத்தில் இருந்த தேவாலயங்களைப் பற்றிய விவரங்களைத் தந்துள்ளார்.1 மேற்படி தேவாலயங்களுட் பலவற்றின் தோற்றங்களைக் காட்டும் படங்களும் நூலில் காணப்படுகின்றன. எனினும், இப்படங்கள் அக்காலத்திலிருந்த தேவாலயங்களைப்போல இல்லை என்றும், போல்டேயசின் வாய்மொழிமூல விவரிப்புகளையோ சரியாக வரையப்படாத படங்களையோ அடிப்படையாகக்கொண்டு அவற்றை நேரில் பார்க்காத ஓவியர் ஒருவர் கற்பனையாக வரைந்திருக்கலாம் என்றும் மேற்படி தேவாலயங்களை நேரில் பார்த்த யொகான் வூல்ஃப்காங் ஹைட் என்பார் குறிப்பிட்டுள்ளார்.2 படங்கள் அக்காலத் தேவாலயங்களை இருந்தபடி காட்டாவிட்டாலும் பாதிரியார் தந்த எழுத்துமூல விவரங்கள் பிழையாக இருக்க வாய்ப்பில்லை. 

Image 1

போல்டேயஸ் விவரித்த தேவாலயங்களில் ஒன்றைத் தவிர ஏனையவற்றை நிலப்படம் காட்டுகிறது. நல்லூரில் இருந்ததாக தூர்சியின் நிலப்படமும் போல்டேயஸ் பாதிரியாரின் நூலும் தகவல் தரும் தேவாலயம் (படம்-1) நிலப்படத்தில் இல்லை. இதுபற்றி இத்தொடரின் இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். நல்லூரைத் தவிர, யாழ்ப்பாணக் குடாநாட்டில் 25, தீவுப்பகுதியில் 8, மன்னாரில் 7, வன்னியின் எல்லையை அண்டி ஒல்லாந்தரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய பூநகரி, பல்லவராயன்கட்டு, இலுப்பைக்கடவை, பெருங்கழி, மாதோட்டம், நானாட்டான், முசலிப்பற்று ஆகிய பிரிவுகளில் 7 என மொத்தம் 47 தேவாலயங்களையும் நிலப்படத்தில் காணமுடிகின்றது. மேற்படி தேவாலயங்கள் அனைத்தும் போர்த்துக்கேயர் காலத்தில் கத்தோலிக்கத் தேவாலயங்களாக இருந்தவை. இவற்றைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் தமது புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ மதத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து பயன்படுத்தினர். ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் நேரடி ஆளுகைக்குள் வராத வன்னிப் பிரிவுகளில் தேவாலயம் எதையும் நிலப்படம் காட்டவில்லை.

Image 2

தேவாலயங்களுடன் அவற்றுக்கு அருகில் இருந்த குருமனைகளையும் படத்தில் குறித்துள்ளனர். (படம் -2) போல்டேயசின் நூலில் உள்ளபடி யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த நல்லூர், வண்ணார்பண்ணை (படம் -3), சுண்டிக்குழி ஆகிய இடங்களில் அமைந்த தேவாலயங்களுக்கு அருகில் குருமனைகள் இருக்கவில்லை. அந்நூலிலுள்ள படங்களும் குருமனைகளைக் காட்டவில்லை. நிலப்படமும் வண்ணார்பண்ணையிலும் சுண்டிக்குழியிலும் குருமனைகளைக் காட்டவில்லை. நல்லூரில் தேவாலயத்தையே காட்டவில்லை என மேலே குறிப்பிட்டோம். தீவுப்பகுதியிலும் வேலணை, நெடுந்தீவு ஆகியவை தவிர்ந்த ஏனைய இடங்களில் தேவாலயங்களுக்கு அருகில் குருமனைகளைக் காணமுடிகிறது. மன்னார்த் தீவிலும் தலைநிலப்பகுதியிலும் அமைந்திருந்த தேவாலயங்களுக்கு அருகில் குருமனைகளை நிலப்படம் காட்டவில்லை. போல்டேயஸ் பாதிரியாரும் இவ்விடங்களில் குருமனைகள் இருந்ததுபற்றிய குறிப்புகள் எதையும் தரவில்லை. எனவே, இவ்விடயத்தில் லெயுசிக்காமின் நிலப்படம் போல்டேயஸ் பாதிரியாரின் நூலிலுள்ள தகவல்களை உறுதிப்படுத்துகிறது எனலாம். 

Image 3

மடங்கள்

தூர்சியின் நிலப்படத்தில் உள்ளதுபோலவே இங்கும் ‘மடம்’ என்னும் பின்னொட்டுகளுடன் கூடிய பெயர்கள் பல காணப்படுகின்றன. முன்னர் குறிப்பிட்டது போலவே இப்பெயர்கள் மடங்களைக் குறிப்பதாகவோ மடங்களின் பெயர்களைத் தழுவிய ஊர்ப் பெயர்களாகவோ இருக்கக்கூடும். தூர்சியின் நிலப்படத்தில் 14 மடங்களும், இந்த நிலப்படத்தில் 20 மடங்களும் உள்ளன. இவற்றுள் 10 மடங்கள் இரண்டிலும் பொதுவாகக் காணப்படுகின்றன. தூர்சி சுண்டிக்குளத்தில் மடம் எனக் குறித்துள்ள மடம் லெயுசிக்காம் நிலப்படத்தில் தில்லைமடம் என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை முன்னைய நிலப்படத்தில், சுண்டிக்குளம் கடல்நீரேரியின் தென்கரையில் காட்டியுள்ள குளவியாதன்குழி மடமும் கார்த்தியன் மடமும் பிந்திய நிலப்படத்தில் இல்லை. பதிலாக, கரையா மடம், வைரவப்பணிக்கன் மடம் என்ற இரண்டு மடங்கள் உள்ளன. இவையும் முன்னைய மடங்களுக்கான வேறு பெயர்களாக இருக்கக்கூடும். 

பூநகரிப் பிரிவில் வௌவால்தூங்கி மடம், பல்லவராயன்கட்டில் கல்லடி மடம், நானாட்டானில் துவெட்டி மடம் ஆகியவற்றையும் மேல்பற்றுப் பிரிவில் அன்னதேவன் மடம், பாலிமடம் ஆகிய இரண்டு மடங்களையும் லெயுசிக்காம் நிலப்படம் புதிதாகக் காட்டுகிறது. இங்கே அன்னதேவன்மடம் என்று குறிப்பிட்டுள்ள இடத்தை வேறு ஒரு நிலப்படம் அன்னதேவன் மடு எனக் குறிப்பிடுகிறது. 1895 ஆம் ஆண்டில் வெளியான எல்.பி. லூயிசின் வன்னிக் கையேட்டிலும்3 1926 ஆம் ஆண்டின் ஊர்களின் பட்டியலிலும்4 அன்னதேவன் மடு என்ற பெயரே காணப்படுகிறது. ஆனாலும், இவ்வூர் பற்றிக் குறிப்பிட்ட லூயிஸ், ஒல்லாந்தர் காலத்தில் அங்கே ஒரு தங்குமடம் (Rest House) இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.5 இம்மடத்தை அன்னதேவன் மடம் என்று அழைத்திருக்க வாய்ப்பு உண்டு.

யானை அடைப்பு

இத்தொடரின் சென்ற கட்டுரையில் ஒல்லாந்தரின் யானை வணிகம் பற்றியும் இதற்காக வன்னிப் பகுதியில் யானைகள் பிடிக்கப்பட்டது பற்றியும் குறிப்பிட்டோம். வன்னியின் மேற்கு எல்லைப் பகுதியில் ஒல்லாந்தரின் நேரடிக் கட்டுப்பாடிலிருந்த பூநகரி, பல்லவராயன்கட்டு, இலுப்பைக்கடவை, மாதோட்டம் முதலிய பகுதிகளில் யானைகளைப் பிடிப்பதற்காக ஆட்களை நியமித்திருந்தது குறித்தும் அறிந்தோம். இதற்காக யானைகளைப் பிடிப்பதற்கான அடைப்புகளை (Elephant Kraal) ஆங்காங்கே அமைத்திருந்தனர். ஒல்லாந்த ஆளுநர் இளைய ரைக்குளோஃப் வான் கூன்ஸ் 1679 இல் எழுதிய குறிப்பொன்றில் பூனகரி, பல்லவராயன்கட்டு, இலுப்பைக்கடவை ஆகிய பகுதிகளில் இருந்த யானை அடைப்புக்களைத் திருத்துவதற்குக் கட்டளை வழங்கப்பட்டது பற்றி அறியமுடிகிறது.6 மற்ற இடங்களில் யானை அடைப்புகள் எதையும் நிலப்படம் காட்டாவிட்டாலும் இலுப்பைக்கடவைப் பிரிவுக்கு உட்பட்ட வேலங்குளம் பகுதியில் யானை அடைப்பு ஒன்றைக் குறித்துள்ளனர். (படம்-4) யாழ்ப்பாணத்துக்கான ஒல்லாந்தக் கட்டளைத் தளபதி சுவார்டெக்குரூனும் 1697 இல் தான் எழுதிய குறிப்பு ஒன்றில் இவ்வாறான இரண்டு அடைப்புகள் பூநகரியில் அமைத்திருந்ததைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.7 

Image 4

யானைப்பந்திகள்

இந்நிலப்படத்தில் பல இடங்களில் யானைப்பந்திகளைக் குறித்துள்ளனர். இப்பந்திகள் வன்னியர்களிடமிருந்து திறையாகப் பெறும் யானைகளையும், ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி தமது பணியாட்கள் மூலம் அல்லது குத்தகைக்காரர் மூலம் பிடிக்கும் யானைகளையும் ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் வைத்துப் பராமரிப்பதற்கான இடங்களாக இருக்கக்கூடும். அத்துடன், பாரந்தூக்குதல் பாரமான பொருட்களை இடத்துக்கிடம் எடுத்துச் செல்லுதல் முதலிய பல்வேறு வேலைகளுக்காக ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியும் சொந்தமாகப் பழக்கிய யானைகளை வைத்திருந்திருப்பர். அவற்றைப் பராமரிப்பதற்கும் பந்திகள் இருந்திருக்கும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் பரவலாகப் பல இடங்களில், குறிப்பாக வண்ணார்பண்ணை, மானிப்பாய், மல்லாகம், புத்தூர், சாவகச்சேரி, கச்சாய், எழுதுமட்டுவாள், முகமாலை, தம்பகமை, புலோப்பளை, வரணி, கட்டைவேலி ஆகிய பிரிவுகளிலும் மன்னார்த் தீவில் நகரத்திலும் கரிசலிலும் யானைப்பந்திகளைக் காணமுடிகின்றது. ஒல்லாந்தர் காலத்தில் யானை வணிகம் பெற்றிருந்த முக்கியத்துவத்தை மேற்படி யானைப்பந்திகள் காட்டுகின்றன. தீவுப் பகுதியிலும் வன்னியிலும் யானைப்பந்திகள் எவற்றையும் நிலப்படம் காட்டவில்லை. 

உண்மையில் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான யானைப்பந்திகளை மட்டுமே இங்கே காட்டியுள்ளனர் எனத் தோன்றுகிறது. யானைகளைப் பிடித்து அவற்றை அதிகாரிகளிடம் கையளிப்பதற்கு முன்னர் அவை நல்ல நிலையில் உள்ளன என்பதை உறுதிப்படுத்துவதற்குக் குறிப்பிட்ட காலம் யானை பிடிப்பவர்களே அவற்றைப் பராமரிக்கவேண்டும். இத்தேவைக்காக வன்னிப்பகுதியில் யானைப்பந்திகள் இருந்திருக்கும். அவை கம்பனிக்குச் சொந்தமானவை அல்ல என்பதால் அவற்றை நிலப்படத்தில் காட்டவில்லை எனலாம். நல்ல நிலையில் கையளிக்கப்பட்ட யானைகளைக் கம்பனிக்குச் சொந்தமான பந்திகளில் வைத்துப் பராமரித்தனர். அக்காலத்தில் வளர்ந்த ஆண்கள் அனைவரும் ஆண்டுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையான நாட்கள் கம்பனிக்குப் பல்வேறு வகையான வேலைகளைக் கூலியின்றிச் செய்யவேண்டியிருந்தது. இது ஊழியம் எனப்பட்டது. இதன் ஒரு பகுதியாகக் கம்பனியின் பந்திகளில் வைத்துப் பராமரிக்கப்படும் யானைகளுக்கு உணவளிப்பதற்குப் பனையோலைகளை வழங்குவது குறிப்பிட்ட சில சாதிகளைச் சேர்ந்தவர்களின் கடமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.8 

இடப்பெயர்கள்

ஊர்கள், ஆறுகள், குளங்கள், மடங்கள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் பெயர்கள் இந்த நிலப்படத்திலும் காணப்படுகின்றன. முன்னர் விவரித்த தூர்சியின் நிலப்படத்தில் உள்ளதைவிட அதிகமான பெயர்கள் இதில் உள்ளன. வன்னியில் மட்டும் 500 இற்கும் மேற்பட்ட பெயர்களைக் குறித்துள்ளனர். தூர்சியின் நிலப்படத்தை விவரிக்கும்போது குறிப்பிட்டது போலவே இதிலும் பெருமளவு பெயர்கள் ஐயத்துக்கு இடமின்றித் தமிழ்ப் பெயர்களே. 

ஊர்கள்

தூர்சியின் நிலப்படத்தை விளக்கியபோது குறிப்பிட்டதுபோல் இந்த நிலப்படத்திலுள்ள நூற்றுக்கணக்கான ஊர்ப் பெயர்களில் பல இன்றும் பயன்பாட்டில் உள்ளன. சில பெயர்கள் இன்றைய ஊர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. முன்னர் முக்கியத்துவம் பெற்றிருந்த ஊர்கள் அந்த முக்கியத்துவத்தை இழந்தமை, அல்லது பழைய பெயர்கள் வழக்கொழிந்து புதிய பெயர்களைப் பெற்றமை இதற்கான காரணங்களாக இருக்கக்கூடும் எனவும் முன்னர் குறிப்பிட்டோம். அத்துடன், பல்வேறு காரணங்களால் ஊர்கள் கைவிடப்பட்ட அல்லது அழிந்துபோன நிகழ்வுகள் பற்றியும் அறியமுடிகிறது. 

வன்னிப் பகுதியில் இருந்த பெரும்பாலான ஊர்கள் மிகக்குறைந்த மக்கள்தொகையைக் கொண்டனவாகவே காணப்பட்டன. ஜே.பி. லூயிஸ் எழுதி 1895 இல் வெளியான “இலங்கையின் வன்னி மாவட்டங்கள் தொடர்பான கையேடு” என்னும் நூலில் 19 ஆம் நூற்றாண்டில் வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்த 555 ஊர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.9 இவற்றுள், 1891 ஆம் ஆண்டில் இருந்த 326 ஊர்களில் 65 ஊர்கள் மட்டுமே 50 இற்கு மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டிருந்தன. 56 ஊர்கள் 10 அல்லது அதற்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்டவை. இவ்வாறு மிகக் குறைந்த மக்கள்தொகையுடன் கூடிய பெருமளவு ஊர்கள் இருந்ததால், தொற்று நோய்கள் முழு ஊரையும் காவுகொள்ளுதல், குளங்கள் தூர்வதாலும் வேறு காரணங்களாலும் முழு ஊருமே கைவிடப்படல் போன்ற நிகழ்வுகள் 19 ஆம் நூற்றாண்டில் அடிக்கடி நிகழ்ந்ததாகத் தெரிகிறது. இதனால், 1817 இல் 417 ஆக இருந்த ஊர்களின் எண்ணிக்கை 1891 இல் 326 ஆகக் குறைந்திருந்தது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது ஒல்லாந்தர் காலத்தில் இந்த நிலப்படம் வரையப்பட்ட 1719 இலிருந்து 1817 வரையிலான காலப்பகுதியிலும் பழைய ஊர்கள் கைவிடப்பட்டும் புதிய குடியேற்றங்கள் உருவாகியிருக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே, 1719 இல் நிலப்படத்தில் குறித்துள்ள பல ஊர்கள் தற்காலப் பட்டியல்களில் இல்லாதது வியப்புக்குரியது அல்ல. 

தொடக்ககால வன்னிக் குடியேற்றங்களைப் பற்றிக் கூறும் வையாபாடல் என்னும் குடியேற்றவாதக் காலத்துக்கு முந்திய நூல் வாவெட்டி, வாவெட்டி மலை ஆகியவை பற்றிப் பல இடங்களிற் குறிப்பிடுகிறது. யாழ்ப்பாண இராச்சியத்துக்கு முற்பட்ட காலத்திலேயே உக்கிரசிங்க சேனன் என்பவன் வாவெட்டி மலையில் இருந்து அரசாண்டதாக இந்நூல் கூறுகிறது. ‘மாநகர் வாவெட்டி மலை’ என்றும் ‘செப்பரிய வாவெட்டி மலை’ என்றும் வையாபாடல் குறிப்பிடுவதுடன், பிற்காலத்தில், யாழ்ப்பாண அரசன், இளவரசன் சங்கிலியை இங்கே குடியமர்த்தியது பற்றியும் கூறுகிறது.10 இதிலிருந்து, குடியேற்றவாதக் காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக இருந்ததாகக் கொள்ளலாம். 

வாவெட்டி (Bawitty) இந்த நிலப்படத்திலும் உள்ளது. இன்று ஒரு குடியிருப்பாக முக்கியத்துவம் பெறாத இந்த ஊருக்கு நிலப்படத்தில் முக்கியத்துவம் கொடுத்துக் குறிப்பிட்டிருப்பதுடன், இது அமைவிட முக்கியத்துவம் கொண்ட ஒரு இடமாகவும் தெரிகிறது. ஐந்து முக்கிய வீதிகள் சந்திக்கும் இடத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. (படம்-5) எனவே, இந்நிலப்படம் வரையப்பட்ட காலத்திலும் வாவெட்டி முக்கியமான குடியிருப்பாக இருந்தது எனக் கொள்ளமுடியும். ஜே.பி. லூயிசின் வன்னிக் கையேட்டில் உள்ள ஊர்களின் பட்டியலில் இந்த ஊர் இல்லாததால், 19 ஆம் நூற்றாண்டிலேயே வாவெட்டி தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்டது எனலாம். ஆனாலும், வாவெட்டி மலை என்னும் பெயர் இன்றும் புழக்கத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வாவெட்டி மலையில் கல் அகழ்வதன் மூலம் நமது மரபுரிமைகள் அழிக்கப்படுவது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

Image 5

அண்மைக் காலத்தில் முத்தையன்கட்டு எனவும் தற்போது முத்து ஐயன் கட்டு எனவும் அறியப்படும் இடமும் இந்த நிலப்படத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தின் பழைய பெயர் முத்தரையன்கட்டு எனவும் முத்து ராயன் கட்டு11 எனவும் பல்வேறு கருத்துகள் உள்ளன. மேற்படி நிலப்படத்தில் இப்பெயர் டச்சு மொழியில் Moetreancattoe என உள்ளது. இதை ‘முத்ரியன்கட்டு’ என வாசிக்கலாம். இது ‘முத்தரையன்கட்டு’ என்பதற்கு நெருக்கமாக உள்ளதாகவே தெரிகின்றது. லெயுசிகாம் தொகுப்பிலுள்ள இன்னொரு நிலப்படத்தில் இதை Moeteren Cattoe (முத்தெரென் கட்டு) என எழுதியுள்ளனர். இதுவும் முத்தரையன் கட்டு என்பதன் வேறுபாடாகவே தெரிகிறது. கிபி 600-900 காலப்பகுதியில் தமிழ்நாட்டின் சில பகுதிகளை முத்தரையர் வம்சத்தைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்டுள்ளனர். இவர்களுக்கும் முத்தரையன்கட்டு என்னும் பெயருக்கும் தொடர்பு உண்டா என்பது ஆய்வுக்கு உரியது.

இந்த நிலப்படம் தொடர்பாக இன்னும் சில விவரங்களை அடுத்த கட்டுரையிலும் பார்க்கலாம்.

குறிப்புகள்

  1. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 287-288, 294, 318-340.
  2. Johann Wolffgang Heydt, Heydt’s Ceylon, Being the Relevant Sections of the Allerneuester Geographisch- und Topographischer Schau-Plats,trans. Reven-Hart (Ceylon Government Information Department, 1952), 85-86.
  3. J. P. Lewis, A Manual of the Vanni Districts, Ceylon (New Delhi: NAVRANG, 1895), 74.
  4. Department of Census and Statistics, Alphabetical and Numerical Lists of the Villages in the Northern Province (Colombo: Government Printer, 1926), 44.
  5. J. P. Lewis, A Manual of the Vanni Districts, 54
  6. Instructions from the Governor-General and Council of India to the Governor of Ceylon 1656-1665, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1908), 20.
  7. Memoir of Hendrick Zwaardecroon, Commandeur of Jaffnapatam 1697, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1911), 10.
  8. க. வேலுப்பிள்ளை, யாழ்ப்பாண வைபவ கௌமுதி (புது டில்லி: ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ், 2004), 111.
  9. J. P. Lewis, A Manual of the Vanni Districts, 64-79.
  10. க. செ, நடராசா, (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம் செகராசசேகர மகாராசாவின் சமஸ்தான வித்துவான் வையாபுரி ஐயர் செய்த வையா பாடல்  (கொழும்பு: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 1980), 36, 51, 57.
  11. S. Arumugam, Water Resources of Ceylon, Its Utilisation and Development (Colombo: Water Resources Board, 1969), 279.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

5083 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)