Arts
10 நிமிட வாசிப்பு

தொலமியின் “தப்ரபானா” நிலப்படம்

March 28, 2023 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தின் விவரங்களைக் காட்டுவதற்கெனச் சிறப்பாக வரைந்த நிலப்படங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், இலங்கையைக் காட்டும் சில பழைய நிலப்படங்களில், பொதுவாக வடபகுதியைக் குறித்தும், சிறப்பாக யாழ்ப்பாணப் பகுதியைக் குறித்தும் எவ்வாறான தகவல்கள் உள்ளன எனப் பார்க்கலாம்.

இலங்கைத் தீவைக் காட்டும் நிலப்படங்களில் காலத்தால் முந்தியது, குளோடியஸ் தொலமியின் நிலப்படமாகும். இந்தக் கட்டுரைத் தொடர் குடியேற்றவாதக் காலத்துக்குரிய நிலப்படங்களையே குறிப்பாகக் கையாளுகின்றது. எனினும், குடியேற்றவாதக் காலத்துக்கு முந்திய இலங்கையைக் காட்டும் ஒரே நிலப்படம் என்பதாலும், வேறு நிலப்படங்களில் இல்லாத மிகப் பழைய தகவல்களை உள்ளடக்கியது என்பதாலும், தொலமியின் நிலப்படத்துக்கு  இருக்கக்கூடிய முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, இந்த நிலப்படத்தில், பொதுவாக இலங்கையின் வட பகுதி தொடர்பிலும், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாடு தொடர்பிலும் என்னென்ன தகவல்கள் உள்ளன எனப் பார்ப்பது பயனுள்ளது.

கி.பி. 1300 இல் வரையப்பட்ட தொலமியின் உலகப்படம். இலங்கை குறித்துக் காட்டப்பட்டுள்ளது (1)

தொலமி கி.பி. 100 – 170 காலப்பகுதியில் உரோமப் பேரரசின் கீழிருந்த எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியா நகரத்தில் வாழ்ந்தவர். தொலமி வரைந்த நிலப்படங்கள் எதுவும் இப்போது கிடைப்பதில்லை. உண்மையில், அவர் நிலப்படங்கள் எதையும் வரையவில்லை என்பதே பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்து.  இன்று தொலமியின் நிலப்படங்களாக நமக்குக் கிடைப்பவை, தொலமி கிரேக்க மொழியில் எழுதிய நூலான ஜியோகிரபிக் ஹீபியீசிஸ் (Geographical Guidance) என்னும் நூலில் அவர் தந்த தரவுகளை அடிப்படையாகக்கொண்டு பின்னாளில் வரையப்பட்டவை. இந்நூலில் உலகிலுள்ள பல ஆயிரக்கணக்கான இடங்களினதும் பிற புவியியல் அம்சங்களினதும் அமைவிடங்கள் தொடர்பான தகவல்கள் உள்ளன.1 அத்துடன், அக்காலத்தில் அறிந்திருந்த முழு உலகத்தினதும், அதன் பல்வேறு தனித்தனிப் பகுதிகளினதும் நிலப்படங்களை வரைவதற்கான தகவல்களும் வரையும் முறைகளும் அந்நிலப்படங்களின் தலைப்புகளுடன் நூலில் காணப்படுகின்றன. இவற்றுள், அக்காலத்தில், கிரேக்க மொழியில் “தப்ரபானா” எனப் பெயர் பெற்றிருந்த இலங்கையின் நிலப்படமும் ஒன்று.

தொலமி தானே நேரில் எல்லா இடங்களுக்கும் சென்று தரவுகளைச் சேகரிக்கவில்லை. அவருக்கு முன்னர் இது தொடர்பாக எழுந்த நூல்களிலிருந்து பெற்ற தகவல்களையும், கடற் பயணங்களை மேற்கொள்ளும் வணிகர்கள், மாலுமிகள் ஆகியோரிடமிருந்து சேகரித்த தகவல்களையுமே தொலமி தனது நூலில் பயன்படுத்தியுள்ளார். தொலமி கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதால், அவரது நூலில் காணும் தரவுகள் அக்காலத்துக்கு உரியவை. எனினும், அவற்றைப் பயன்படுத்தி வரைந்த நிலப்படங்கள் 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை. தொலமியின் நூலும் அதன் வழியாக வந்த நிலப்படங்களும் நீண்ட காலம் பயன்பாட்டிலிருந்ததால், காலத்துக்குக் காலம் கடல்வழி வணிகத்தில் முன்னிலை பெற்றிருந்த பல்வேறு இனத்தவர், அவற்றைத் தத்தமது மொழிகளில் மொழிபெயர்த்துப் பயன்படுத்தினர். இதனால், தொலமியின் நூலை, கிரேக்க மொழியைத் தவிர, அரபு, இலத்தீன் உள்ளிட்ட பல மொழிகளிலும் காணமுடிகின்றது. நிலப்படங்களையும் காலத்துக்குக் காலம் புதிது புதிதாக வரைந்து வெளியிட்டதால், சில வேறுபாடுகளுடன் கூடிய பல பதிப்புகள் கிடைக்கின்றன.

தொலமியின் தரவுகளிலிருந்து வரையப்பட்ட உலகப் படத்தில் தப்ரபானா என்னும் பெயரில் இலங்கையைக் குறித்துள்ளதுடன், (படம்-1) அதன் விவரங்களைக் காட்டும் தனியான நிலப்படமும் உள்ளது. (படம்-2)

கிரேக்க-மொழியிலுள்ள-தொலமியின்-தப்ரபானாவின்-நிலப்படம்-ஒன்று-1

தொலமியின் நிலப்படமும் இலங்கை பற்றிய விவரங்களும்

தொலமியின் இலங்கை நிலப்படத்திலுள்ள தகவல்கள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முந்தியவையெனினும், இலங்கையைப் பற்றிய பல தகவல்கள் இந்த நிலப்படத்தில் உள்ளன. குறிப்பாக இத்தீவிலிருந்த பிரதேசங்கள், அங்கே வாழ்ந்த மக்கள், துறைமுகங்கள், நகரங்கள், மலைகள், முனைகள், ஆறுகள் போன்ற பல அம்சங்களை நிலப்படத்தில் காணமுடிகின்றது. இவ்விவரங்கள் குறிப்பிடத்தக்க அளவு நம்பத் தகுந்தவை என்பது பல ஆய்வாளர்களுடைய கருத்து. இது, அக்காலத்திலேயே இலங்கையைச் சுற்றிக் கப்பற் போக்குவரத்து இருந்ததையும்,2 பன்னாட்டு வணிகர்கள் இலங்கையின் துறைமுகங்களுக்கு வந்ததையும், இலங்கையுடன் வணிகத் தொடர்புகளைப் பேணியதையும் காட்டுகின்றது.

தொலமியின் நிலப்படத்தின்படி, இலங்கைத் தீவு 13 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், வடக்கிலங்கையில் மூன்று பிரிவுகள் உள்ளன. பிரிவுகளின் பெயர்களைத் தராவிட்டாலும், இப்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் வாழும் மக்கட்பிரிவினரின் பெயர்களை நிலப்படம் தருகிறது. இவை, 1) கலிபி, 2) மொடுத்தி, 3) நாகதிபி என்பன. வட இலங்கையின் மேற்குப் பகுதியில் கலிபி மக்களும் கிழக்குப் பகுதியில் மொடுத்தி, நாகதிபி ஆகியோரும் வாழ்ந்தனர். (படம்-3) சில ஆய்வாளர்கள், இவை அப்பகுதியில் வாழ்ந்த மக்களினங்களைக் குறிப்பதாகக் கருதுகின்றனர். கலிபி மலை வேடர்களையும்,3 நாகதிபி நாகர்களையும் குறிக்கும் என்ற கருத்து உண்டு. உண்மையில் இம்மூன்று குழுக்களும் அவ்வப்பகுதிகளில் இருக்கும் ஒரு அம்சத்தின் பெயரால் அழைக்கப்பட்டதாகவே தெரிகின்றது. குறிப்பாக, கலிபா முனை இருந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் “கலிபி” எனவும், மொடுத்து பேரங்காடி இருந்த பகுதி மக்கள் “மொடுத்தி” எனவும், நாகதிப நகரம் இருந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் “நாகதிபி” எனவும் பெயர் பெற்றனர். இது யாழ்ப்பாணத்தார், மட்டக்களப்பார், மலையகத்தார் என அழைப்பது போன்றதே. எனவே, இப்பெயர்கள் இடம்சார்ந்த பெயர்களேயன்றி இனக்குழுப் பெயர்கள் அல்ல என்றே கொள்ளமுடிகின்றது.

இலத்தீன்-மொழியிலுள்ள-நிலப்படமொன்றில்-இலங்கையின்-வடக்குப்-பகுதியைக்-காட்டும்-படம்-1

அக்காலத்து வணிகர்களும் மாலுமிகளும் அறிந்திருந்தபடி, முன்னர் குறிப்பிட்ட பல்வேறு அம்சங்களின் பெயர்களும் நிலப்படத்தில் உள்ளன. இப்பெயர்கள் நீண்ட காலத்துக்கு முன் வழக்கிலிருந்த பெயர்களிலிருந்து பெறப்பட்டதாலும்,  வேற்று மொழி பேசுபவர்களின் ஒலிப்புத் திரிபுகளுடனேயே நிலப்படத்தில் உள்ளதாலும், மிகச் சிலவற்றைத் தவிர ஏனையவற்றை அடையாளங் காண்பது இலகுவானது அல்ல. இதனால், இப்பெயர்களை இனங் காண்பது தொடர்பில் ஆய்வாளரிடையே முரண்பாடுகள் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணக் குடாநாடு எங்கே?

புவியியல் நோக்கில், இலங்கையின் வடிவம் ஓரளவுக்கு இன்றைய நிலப்படங்களோடு ஒத்திருந்தாலும், தீவின் தலைபோல் அமைந்த யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தனியான ஒரு அம்சமாக நிலப்படம் காட்டவில்லை. இதனால், இந்நிலப்படத்தை ஆய்வு செய்தவர்கள், முரண்பாடான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். கிரெகோர் ரைஷ் (Gregor Reisch) என்பார், இப்படம் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் காட்டவில்லை என்றும், அக்காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு, கடலோடிகள் செல்ல விரும்பாத பகுதியாகவோ, வணிகம் தொடர்பில் கவர்ச்சி இல்லாத இடமாகவோ இருந்திருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்.4 நிலப்படத்தில் குறித்துள்ள இடங்களை அடையாளம் காண முயன்ற பி. எஃப். ஜே. கோசெலின் (P. F. J. Gosselin) என்பவரும், தொலமியின் பட்டியலிலுள்ள இடம் எதையும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அடையாளம் காணவில்லை.5 இதனால் இவரும் யாழ்ப்பாணக் குடாநாடு தொலமியின் நிலப்படத்தில் இல்லையென்றே கருதுவதாகத் தெரிகிறது.

இலத்தீன்-மொழியிலுள்ள-நிலப்படமொன்றில்-இலங்கையின்-வடக்குப்-பகுதியைக்-காட்டும்-படம்-1

ஆனால், தொலமியின் காலத்துக்கு முன்னும் பின்னும் பல நூற்றாண்டுகள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் இருந்ததைக் காட்டும் ஏராளமான சான்றுகள் கந்தரோடை, பண்ணைத்துறை, தீவுப் பகுதிகள், கிழக்குக் கரையோரத்தில் வல்லிபுரம் போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. அதுமட்டுமன்றி, வரலாற்றுக் காலத்துக்கு முன்னரே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை அண்மைக்கால ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. மேற்படி சான்றுகள், ரைஷின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்பதையே காட்டுகின்றன.

சேர். இமேர்சன் டெனென்ட் (Sir Emerson Tennent), சி. டபிள்யூ. நிக்கோலஸ், ஜே. ஆர். சின்னத்தம்பி போன்ற பலர், யாழ்ப்பாணக் குடாநாடு நிலப்படம் காட்டும் பகுதிக்குள் அடங்குவதாகவே கருதியுள்ளனர்.

தொலமியின் காலத்தில், யாழ்ப்பாணக் குடாநாட்டையும் வன்னியையும் இணைக்கும் சுண்டிக்குள நிலப்பகுதி இல்லையென்றும், அதனால், யாழ்ப்பாணக் குடாநாடு ஒரு தீவாக இருந்ததாகவும், அதற்கும் வன்னிக்கும் இடையிலிருந்த குடாக்கடலூடாக மன்னார்க் குடாப் பகுதியிலிருந்து வங்காள விரிகுடாவுக்குக் கப்பற் போக்குவரத்து இடம்பெற்றதாகவும் குறிப்பிடும் இராசநாயக முதலியார், அதனால், அக்காலத்தில் சில கடலோடிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த இடங்கள் சிலவற்றைத் தென்னிந்தியக் கரையோரத்தில் இருந்ததாக எண்ணியிருக்கலாம் என்றும் கூறுகிறார். இதனால், தொலமியின் நிலப்படத்தில், யாழ்ப்பாணத்திலிருந்த சில இடங்களைத் தென்னிந்தியக் கரையோரங்களில் குறித்திருப்பதாக அவர் கருதுகிறார். ஆனால், இதை அவர் ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை. மேற்படி கருதுகோளின் அடிப்படையில், தென்னிந்தியக் கரையில் உள்ளதாகத் தொலமி குறிப்பிட்டுள்ள கூரூலா (Kouroula) என்பதை யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த கதிரமலை (கந்தரோடை) என்னும் நகரத்துடன் அவர் அடையாளம் காண்கிறார்.6 (படம்-4)

இலங்கையின் கரையோர இடங்களின் பெயர்களைத் தரும் தொலமி, வட முனையிலிருந்து தொடங்கி மணிக்கூட்டுத் திசையில் அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளார். இப்பட்டியல், “போரியன் ஆக்ரோன்” (வடமுனை) என்னும் இடத்தில் தொடங்கி, வடக்கிலிருந்து தெற்காகத் தீவின் மேற்குக் கரையிலுள்ள இடங்களையும், தொடர்ந்து மேற்கிலிருந்து கிழக்காக தெற்குக் கரையிலுள்ள இடங்களையும், பின்னர் தெற்கிலிருந்து வடக்காகக் கிழக்குக் கரையோரத்திலுள்ள இடங்களையும் தருகிறது.7 பட்டியலில் இறுதியாக இருக்கும் “தலகோரி” என்னும் இடம் வடமுனைக்குக் கிழக்கே அதற்கு அருகில் அமைகின்றது. இந்த வரிசை ஒழுங்கைப் பின்பற்றியே பல ஆய்வாளர்கள் நிலப்படத்திலுள்ள இடங்களை அடையாளம் காண்கின்றனர்.

தொலமியின்-இலங்கைப்-படத்திலுள்ள-வட-பகுதி-இடப்-பெயர்களுக்கான-கோசெலினி-1

கோசெலின், ரைஷ் ஆகியோர், யாழ்ப்பாணக் குடாநாடு நிலப்படத்தில் இல்லை என்ற தமது கருதுகோளின் அடிப்படையில், வடமுனையையும், தலக்கோரியையும் வன்னிப் பெருநிலப்பரப்பின் வடகரையில், ஆனையிறவுக் கடல்நீரேரியின் தெற்குக்கரையில் அடையாளம் கண்டுள்ளனர். குடாநாடு இல்லாவிட்டால் எஞ்சிய இலங்கையின் வடகோடியில் இருக்கும் கல்முனையைத் தொலமியின் வடமுனையாக கோசெலின் அடையாளம் கண்டுள்ளார். பூநகரிக்கு அண்மையில் வடக்குக் கரையோரத்தில் தலக்கோரி இருந்தது என்பது அவரது கருத்து.8 (படம்-5) ரைஷும், கல்முனையையே வடமுனையாகவும், ஆனையிறவுக்கு தெற்கிலுள்ள தட்டுவான்கொட்டி என்னுமிடத்தைத் தலக்கோரியாகவும் கருதுகிறார்.9

யாழ்ப்பாணக் குடாநாடு தொலமியின் நிலப்படத்தில் அடங்கியிருப்பதாகக் கருதும் ஆய்வாளர்கள், தொலமியின் நிலப்படத்தில் வடகோடியில் குறித்துள்ள இடங்களை, யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடக்குக் கரையில் அடையாளம் காண்கின்றனர். டெனென்ட், தனது நிலப்படமொன்றில், காங்கேசன்துறைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தை வடமுனையாகவும், அதற்குக் கிழக்கிலுள்ள தொண்டைமானாற்றைத் தலக்கோரியாகவும் குறித்துள்ளார்.10 சின்னத்தம்பி, பருத்தித்துறையை வடமுனையாகக் கொண்டபோதும், தொலமியின் பட்டியலில் காணும் வரிசை ஒழுங்குக்குப் புறம்பாகத் தலைமன்னாரைத் தலக்கோரியாக அடையாளம் காண்கிறார்.11

தொலமியின் இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதி

தொலமியின் நிலப்படத்தில் வடபகுதியின் கிழக்குப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பல அம்சங்கள் தொடர்பில் பல குழப்பங்கள் உள்ளன. இந்த நிலப்பகுதியின் எல்லைகளில் “பாசிஸ்”, “கங்கெஸ்” என்னும் இரண்டு ஆறுகள் உள்ளன. ஏற்கனவே குறிப்பிட்டபடி அப்பகுதியில் மொடுத்தி, நாகதிபி என அழைக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த இரண்டு நிலப் பிரிவுகள் காணப்பட்டன. கிழக்குக் கரையோரத்தில் ஒக்சியா முனை, ஸ்பாத்தானா துறைமுகம், நாகதிபா நகரம், பட்டிக் குடா, அனுபிங்காரா நகரம், மொடுத்து பேரங்காடி என்பவற்றைக் காண முடிகின்றது. (படம்-3)

சில ஆய்வாளர்கள் தொலமியின் இந்த நிலப்பகுதி தற்கால நிலப்படத்திலும் அதே இடத்தில் பொருந்துவதாகக் கருதுகின்றனர். பாசிஸ் ஆற்றைக் கனகராயன் ஆறு எனவும், கங்கேஸ் ஆற்றை மகாவலி கங்கையாகவும் அடையாளம் காணும் இவர்கள், மேலே குறிப்பிட்ட இடங்களை திருகோணமலையிலிருந்து சுண்டிக்குளம் வரையான கரைப்பகுதியில் இருக்கும் இடங்களுடன் அடையாளம் கண்டுள்ளனர்.

கோசெலின், ஒக்சியா முனையைத் திருகோணமலை என்றும், ஸ்பத்தனாவை — என்றும், நாகதிபாவைக் கொக்கிளாய் என்றும், அனுபிங்காராவை முல்லைத்தீவு என்றும், மொடுத்துவை — என்றும் கருதுகிறார்.12 (படம்-5) டெனென்ட், ஒக்சியா முனையைக் கவுலியா முனை (Foul Point) எனவும், பட்டிக் குடாவைத் திருகோணமலைக் குடா எனவும், ஸ்பத்தனாவைத் தம்பலகாமம் எனவும், நாகதிபாவைக் திருகோணமலைக் குடாவை அண்டியுள்ள ஒரு இடமாகவும், அனுபிங்காராவைக் குச்சவெளி என்றும், மொடுத்துவைக் கொக்கிளாய் என்றும் அடையாளம் காண்கிறார்.13

சின்னத்தம்பி ஒக்சியா முனையைக் கவுலியா முனை எனவும், ஸ்பத்தனாவைத் திருகோணமலை எனவும், நாகதிபாவைக் கொக்கிளாய்க்கும் முல்லைத்தீவுக்கும் இடையில் அமைந்த ஓரிடமாகவும் கொள்கிறார். அனுபிங்காரா, மொடுத்து ஆகியவை தொலமியின் மிகப்பழைய பட்டியலில் இல்லை எனச் சுட்டிக்காட்டும் சின்னத்தம்பி, அவை 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய இடைச் செருகல்கள் என்கிறார். 15 ஆம் நூற்றாண்டில், தொலமியின் தப்ரபானா இலங்கையைக் குறிக்கவில்லை என்றும் அது சுமாத்திராத் தீவைக் குறித்தது என்றும் சில ஆய்வாளர்கள் கருதியதால், சுமாத்திராவில் இருந்த மேற்படி இடப் பெயர்களைத் தொலமியின் நிலப்படத்தில் சேர்த்துவிட்டார்கள் என்றும் அவர் கூறுகிறார்.14

யாழ்ப்பாணக் குடாநாடு வடகிழக்குப் பகுதியில்?

யாழ்ப்பாணக் குடாநாடு தொலமியின் நிலப்படத்தில் இருப்பதாகக் கொள்ளும் நிக்கொலஸ், இவ்விடயத்தை வேறுபட்ட முறையில் அணுகுகிறார். இலங்கையின் வடகிழக்குக் கரையோரம் அமைந்தவையாக நிலப்படம் காட்டும், ஒக்சியா முனை தொடக்கம் மொடுத்து பேரங்காடி வரையான இடங்கள், உண்மையில் வடமேற்கு, வடக்குக் கரைகளில் இருக்கவேண்டியவை என்பது அவரது கருத்து. இதற்கிணங்க, தொலமியின் பாசிஸ் ஆற்றை, மன்னார் மாவட்டத்தில் வங்காலைக்கு அருகே மன்னார்க் குடாவில் கலக்கும் அருவி ஆறு என அவர் அடையாளம் காண்கிறார். அத்துடன், “மொடுத்து” என்பது மாதொட்ட (சிங்களம்), மாதோட்டம் (தமிழ்) ஆகிய பெயர்களுடன் நெருக்கமான ஒலிப்பு ஒற்றுமை கொண்டிருப்பதால் அது, அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய மாதோட்ட நகரையே குறிக்கும் என்பது நிக்கோலசின் வாதம். அவர், “பட்டிக் குடா” யாழ்ப்பாணக் குடாக்கடலைக் குறிக்கும் என்கிறார்.15

நாகதீப என மகாவம்சம் குறிப்பிடும் இடம் யாழ்ப்பணக் குடாநாடே என்பதை இன்று ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய பொற்சாசனமும் இதை உறுதிப்படுத்துகிறது.

எனவே, “நாகதிப” என நிலப்படம் குறிக்கும் பகுதி யாழ்ப்பாணக் குடாநாட்டையே குறிக்கும் எனவும், நாகதிப நகரம் அங்கிருந்த ஊர்காவற்றுறையை அல்லது காங்கேசன்துறைக்கு அண்மையிலுள்ள சம்பில்துறையைக் குறிக்கக்கூடும் என்றும் அவர் கருதுகிறார். “அனுபிங்காரா” (Anubingara) என்ற பெயரின் இறுதிப்பகுதி (ngara) நகர (நகரம்) என்பதன் திரிபு எனக்கருதும் நிக்கோலஸ், அது, அனுபிங்காரா நகரம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த ஒரு நகரம் என்பதைக் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார்.16

செ. இராசநாயக முதலியாரும் மொடுத்துவை மாதோட்டத்துடன் அடையாளம் காண்பதுடன், அனுபிங்காராவை யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த சிங்கை நகராக அடையாளம் கண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. வல்லிபுரமே சிங்கைநகர் என்னும் தனது கருத்துக்கு இணங்க அனுபிங்காராவை இராசநாயகம் குடாநாட்டில் கிழக்குக் கரையில் குறித்துள்ளார்,17 இதை ஏற்றுக்கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளன. சிங்கைநகர் என்னும் பெயர் 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்பதே பொதுக் கருத்து. எனவே, இந்த நகரத்தைப் பற்றி கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொலமியின் நூலில் தகவல்கள் இருந்ததாகக் கருத இடமில்லை.

ஆனாலும், அனுபிங்காரா, மொடுத்தி ஆகிய பெயர்கள் 15 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற இடைச் செருகல்கள் எனச் சின்னத்தம்பி குறிப்பிட்டிருப்பதைக் கவனத்திற் கொண்டால், அக்காலத்தில், புகழ்பெற்றிருந்த சிங்கைநகர் புதிதாக நிலப்படத்தில் சேர்க்கப்பட்டது எனக் கருத இடமுண்டு. இது உண்மையானால், புதிய சான்றுகளின் அடிப்படையில், இன்றைய யாழ்ப்பாண நகரம் இருக்கும் இடத்திலேயே சிங்கைநகர் இருந்தது என்னும் கருதுகோளுக்கு இசைவாக அனுபிங்காராவை இன்றைய யாழ்.நகரப் பகுதியில் பொருத்திப் பார்க்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

தொலமியின் நிலப்படத்தில், 19 சிறிய தீவுகள் காணப்படுகின்றன. இவை இலங்கையைச் சுற்றி அதன் எல்லாப் பக்கங்களிலும் மாலைபோல் அமைந்திருப்பதாக நிலப்படம் காட்டுகிறது. (படம்-2) இத்தீவுகளை அடையாளங்காண முற்பட்ட சிலர் அவற்றுட் சிலவற்றைத் தற்கால நிலப்படங்களில் காணவே முடியாத அளவுக்கு மிகச் சிறிய தீவுகளுடன் அடையாளம் காண்கின்றனர்.18 அதேவேளை, யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு மேற்கிலுள்ள, நீண்ட காலமாகவே மக்கள் வாழுகின்ற பெரிய தீவுகள் நிலப்படத்தில் இல்லை என்பது பொருத்தமாக இல்லை. தொலமியின் நிலப்படத்தில் வடமேற்கிலும், வடகிழக்கிலும் உள்ள சில தீவுகளை யாழ்.மாவட்டத் தீவுகளுடன் அடையாளம் காணமுடியுமா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, வடகிழக்குக் கரைக்கு அப்பால் “நாகதிப” என்னும் தீவு ஒன்று உள்ளது. இதற்கும், நாகத்தீவு என அறியப்படும் இன்றைய நயினா தீவுக்கும் தொடர்புண்டா என்பது குறித்து ஆராயவேண்டும்.

தொலமி தகவல் சேகரித்த காலத்தில் கந்தரோடை ஒரு செழிப்பான நகரமாக இருந்துள்ளது. ரோமர் கால நாணயங்கள் இங்கே பெருமளவில் கிடைத்துள்ளதால் உரோமரின் இந்துப் பெருங்கடல் வணிக வலையமைப்பில் கந்தரோடைக்கும் ஒரு இடம் இருந்திருக்கும் என்பது வெளிப்படை. எனினும், இராசநாயகத்தைத் தவிர வேறெவரும் தொலமியின் நிலப்படத்தில் கந்தரோடையை அடையாளம் காணவில்லை.

அதேபோல, யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியை அண்டியிருந்த பண்டைய நகரமும் மேற்படி வலையமைப்பின் முக்கிய கணுவாக விளங்கியதாக, அப்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட பேராசிரியர் கொன்னிங்ஹாம் கருத்து வெளியிட்டிருந்தார்.19 இவ்விடத்தில் குறிப்பிடத்தக்க அகழ்வாய்வுகள் 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னரே இடம்பெற்று முக்கியமான சான்றுகள் கிடைத்தன. இதனால், மேலே குறிப்பிட்ட ஆய்வாளர்கள் இந்த நகரத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை. புதிதாகக் கிடைத்த சான்றுகளின் அடிப்படையிலும், நிக்கொலசின் கருத்துகளின் அடிப்படையிலும் தொலமியின் நிலப்படத்தில் யாழ்ப்பாணப் பகுதி தொடர்பில் ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.

மேற்கோள்கள்

  1. Alexander Jones, “The Ancient Ptolemy,” In Ptolemy’s Science of the Stars in the Middle Ages, eds. D. Juste, B. van Dalen, D. N. Hasse and C. Burnett (Turnhout, Brepols Publishers,–). 25.
  2. Tennent, Ceylon: An Account of the Island, vol. I (London: Longman, Green, Longman and Roberts, 1859), 536.
  3. J. R. Sinnathamby, Ceylon in Ptolemy’s Geography (Colombo: J. R. Sinnathamby, 1968). 46.
  4. Gregor Reisch, The Accuracy of some medieval maps of the Taprobane Island, 2018, https://www.academia.edu/36084066/The_Accuracy_of_some_Mediaeval_Maps_of_the_Taprobane_Island.
  5. P. F. J. Gosselin, Recherches sur la Geographie Systematique et Positive des Anciens (Paris: De l’imprimerie Imperiale,1813), Attached Maps, plate no. XIV
  6. C. Rasanayagam, Ancient Jaffna (New Delhi: Asian Educational Services,1984), 115, plate facing 119.
  7. Carolus Fridericus Augustus Nobbe (Editor), Claudii Ptolemaei Geographia, Tom II (Lipsiae: Sumptibus et Typis Caroli Tauchnitii, 1845), 172-176.
  8. Gosselin, Recherches sur la Geographie, Plate XIV
  9. Riesch, Accuracy of some medieval maps, 4.
  10. Tennent, Ceylon- An Account of the Island, Plate facing 536.
  11. Sinnathamby, Ceylon in Ptolemy’s Geography, 25, 29, 46.
  12. Gosselin,  Recherches sur la Geographie, Plate XIV
  13. Tennent, Ceylon- An Account of the Island, Plate facing 536.
  14. Sinnathanby. Ceylon in Ptolemy’s Geography, 8-11.
  15. C. W. Nocholas, “Historical Topography of Ancient and Medieval Ceylon,” The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society of Great Britain & Ireland, New Series, Vol. 6 (1959), 1-197, 199-223, 10
  16. Nocholas, “Historical Topography of Ancient and Medieval Ceylon,” 10.
  17. Rasanayagam, Ancient Jaffna, 118-119, plate facing 119.
  18. Reisch, Accuracy of some medieval maps. 15-16, 34-35, 43-44
  19. Davis Conninham, “Archaeologists on Excavation at Jaffna Fort,” (Lecture, University of Jaffna, Jaffna, July 29, 2018).

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

14482 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)